பைபிள் மாந்தர்கள் 67 (தினத்தந்தி) யோவேல்

கிறிஸ்துவுக்கு முந்தையை காலத்தில் பல இறைவாக்கினர்கள் இறைவாக்குகளை உரைத்திருக்கிறார்கள். அந்த இறைவாக்கினர்களை அவர்களுடைய பணிகள், தாக்கம், வல்லமை போன்ற பலவற்றின் மூலம் இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, ‘பெரிய இறைவாக்கினர்கள்’, இரண்டாவது ‘சின்ன இறைவாக்கினர்கள்’.

சின்ன இறைவாக்கினர்களின் பட்டியலில் வருபவர் யோவேல் தீர்க்கத்தரிசி. சில கிறிஸ்தவக் குழுக்கள் இவரது விழாவை அக்டோபர் 19ம் தியதி கொண்டாடுகின்றனர். விவிலியத்தின் மிகச் சிறிய நூல்களில் ஒன்று தான் யோவேல். ஆனால் மிக‌வும் வ‌லிமையான‌ வாளைப் போல‌ கூர்மையாய் பாய்கிற‌து.

யோவேல் என்ப‌த‌ற்கு ‘க‌ர்த்த‌ரே க‌ட‌வுள்’ என்ப‌து பொருள். பெத்துவேலின் ம‌க‌ன் எனும் அறிமுக‌ம் ம‌ட்டுமே ‘யோவேல்’ எனும் ம‌னித‌ரைப் ப‌ற்றி ந‌ம‌க்குத் தெரிவிக்க‌ப்ப‌ட்டிருக்கும் த‌க‌வ‌ல். சுமார் கி.மு 820ம் ஆண்டுக‌ளில் இவ‌ர‌து இறைவாக்கு உரைத்த‌ல் ப‌ணி நிக‌ழ்ந்த‌து.

க‌ட‌வுளின் வார்த்தைக‌ளை விட்டு வில‌கி பாவ‌த்தின் வ‌ழியில் ம‌க்க‌ள் செல்லும் போது அவ‌ர்க‌ளை ந‌ல்வ‌ழிப்ப‌டுத்த‌வும், எச்ச‌ரிக்கை விடுக்க‌வும், அவ‌ர்க‌ள் ம‌ன‌ம் மாற ஊக்க‌ம் ஊட்ட‌வும் அனுப்ப‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் தான் இறைவாக்கின‌ர்க‌ள். அப்படி வழிவிலகிய இஸ்ரயேல் மக்களுக்கு யோவேல் இறைவாக்கு உரைத்தார்.

“வெட்டுப் புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது: இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக் கிளி தின்றது: துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை வளர்த்த வெட்டுக்கிளி தின்றழித்தது” என‌ வெட்டுக்கிளிக‌ள் தின்று அழிக்கும் தானிய வ‌ய‌லைப் போல‌, இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் அழிவுக்குள்ளாவ‌ர்கள்” என‌ யோவேல் எச்ச‌ரிக்கை விடுத்தார்.

“கணவனாக வரவிருந்தவனை இழந்ததால் சாக்கு உடை உடுத்திக் கொள்ளும் கன்னிப் பெண்ணைப்போல் கதறி அழுங்கள்” என‌ ம‌க்க‌ளை நோக்கி அவ‌ர் உரைக்கும் வார்த்தைக‌ளில் நில‌மையின் வீரிய‌மும், வார்த்தைக‌ளின் வ‌சீக‌ர‌மும் ஒருசேர‌ வெளிப்ப‌டுகிற‌து.

“விடியற்காலை ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது” என்று க‌ட‌வுளின் நியாய‌த்தீர்ப்பு வ‌ருவ‌தைச் சுட்டிக்காட்டும் யோவேல், வெட்டுக்கிளிக‌ளின் வ‌ர‌வை மிக‌ அழ‌கான‌ இல‌க்கிய‌ ந‌ய‌த்துட‌ன் ப‌டைக்கிறார்.

“அவற்றின் பற்கள் சிங்கத்தின் பற்கள் போலிருக்கின்றன. பார்வைக்கு அவை குதிரைகள் போலிருக்கின்றன, போர்க் குதிரைகள்போல் அவை விரைந்தோடுகின்றன.தேர்ப்படைகளின் கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு, சருகுகளைச் சுட்டெரிக்கும் நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி, போருக்கு அணிவகுத்த ஆற்றல் மிக்க படைகள்போல் மலையுச்சிகளின்மேல் குதித்துச் செல்லும்” என‌ யோவேல் இறைவாக்கின‌ர் சொன்ன‌போது ம‌க்க‌ளின் இத‌ய‌த்தை அவை தொட்ட‌ன‌.

ம‌க்க‌ளுக்கு எச்ச‌ரிக்கை விடுத்த‌ யோவேல், உட‌னே ம‌க்க‌ளின் ச‌ஞ்ச‌ல‌ ம‌ன‌துக்கு உற்சாக‌ம் ஊட்டும் வார்த்தைக‌ளையும் பேசுகிறார். ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ர் என்ப‌வ‌ர் நோய் இருக்கிற‌து என்று ம‌ட்டும் சொல்வ‌தில்லை, அதைத் தீர்க்கும் வ‌ழியையும் கூட‌வே சொல்வார்.

“இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர். நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள். ஆண்டவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர். செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்” என‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் தீய‌ வ‌ழியை விட்டு வில‌க‌ உற்சாக‌ம் ஊட்டுகிறார்.

ம‌க்க‌ள் ம‌ன‌ம் திரும்பினார்க‌ள். த‌ங்க‌ள் பாவ‌ வ‌ழிக‌ளை விட்டு வில‌கி க‌ட‌வுளிட‌ம் வ‌ந்தார்க‌ள். அப்போது க‌ட‌வுள் ம‌ன‌மிர‌ங்கி அவ‌ர்க‌ளை ஆசீர்வ‌தித்தார்.

“நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்” என‌ இறைவ‌ன் த‌ன‌து பார‌ப‌ட்ச‌ம‌ற்ற‌ அன்பை உல‌க‌ மாந்த‌ர் அனைவ‌ருக்கும் வ‌ழ‌ங்குவ‌தாக‌ வாக்க‌ளித்தார். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்குப் பிந்தைய‌ பெந்தேகோஸ்தே நாளில் இந்த‌ வாக்குறுதி நிறைவேறியது.

பெந்தேகோஸ்தே நாளில், தூய ஆவியானவர் மக்கள் மேல் இறங்கினார். மக்கள் அவரவர் மொழியில் பேசுவதை மற்றவர்கள் தத்தம் மொழிகளில் கேட்டு பிரமித்தனர். இந்த புது அனுபவத்தில் மக்களை அச்சமும், வியப்பும் ஒரு சேர பற்றிக் கொண்டது.

அப்போது இயேசுவின் சீடரான பேதுரு ” நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே. இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர்” என அவர் சொல்லியிருக்கிறார் என்றார்.

யோவேல் உரைத்த‌ இறைவாக்குக‌ள் எல்லாமே ப‌ல்வேறு கால‌க‌ட்ட‌ங்க‌ளில் அப்ப‌டியே நிறைவேறின‌. தீரு ந‌க‌ர் நெபுக‌த்நேச்ச‌ரால் முற்றுகையிட‌ப்ப‌ட்ட‌து. அலெக்சாண்டரால் முழுமையாய் அழிக்க‌ப்ப‌ட்ட‌து. பெலிஸ்தியா அழிந்த‌து. ஏதோமும் பாலை நிலமானது.

வ‌ழிவில‌கும் ம‌க்க‌ளை இறைவ‌ன் நேச‌த்தோடு அழைப்பார் என்ப‌தும், அவ‌ர‌து குர‌லுக்குச் செவிகொடுப்போருக்கு நிலை வாழ்வு உண்டு என்ப‌தும் க‌ட‌வுள் யோவேல் மூல‌மாக‌ச் சொல்லும் வார்த்தைக‌ளாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s