மர்மங்களின் நாயகன் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் பிரித்துப் பார்க்க முடியாது. அஹிம்சையே வெல்லும் என ஒரு சாரார் முடிவெடுக்க வீரமே வெற்றி தரும் என இந்தியாவுக்கு வெளியே சென்று, இந்திய தேசிய ராணுவத்தை’ அமைத்து, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரை மிரள வைத்தவர் அவர். 1897ம் ஆண்டு சனவரி 23ம் நாள் பிறந்த சுபாஷ் சந்திரபோஸின் மரண நாள் என்ன என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தியதி தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் சிக்கி பலியானார் என்பது தான் அறிவிக்கப்பட்ட செய்தி. ஆனால் அப்படி ஒரு விமான விபத்து ஏற்படவே இல்லை என தைவான் அரசே சொல்லி விட்டது. இந்திய மக்கள் மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் நேதாஜியின் இறப்பு குறிந்த தகவலை நம்பவில்லை. ஜப்பான் நாடு தான் நேதாஜி மறைந்துவிட்டார் என‌ வானொலியில் அறிவித்தது. உலக நாடுகளிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக நேதாஜிக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

1945ல் அவர் இறக்கவில்லை 1970ம் ஆண்டு தான் இறந்தார். அதுவும் ரஷ்யாவில் வைத்து இறந்தார் என்கிறது இன்னொரு செய்தி. “ரஷ்யாவின் உதவியை நாடுவதற்காக சீனாவின் மஞ்சூரியா பகுதிக்கு நேதாஜி சென்றார். ஆனால் அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஸ்டாலின், நேதாஜியை சிறையில் தள்ளினார். சில ஆண்டுகளுக்குப் பின் அங்கேயே தூக்கிலிடப்பட்டார்” என்கிற‌து அந்த‌ச் செய்தி.

இல்லையில்லை, நேதாஜி கடைசி காலத்தில் இந்தியாவில் தான் இருந்தார். இந்தியாவிலேயே அவருக்கு எதிரிகள் உருவாகிவிட்டனர். எனவே அவர் வட இந்தியாவுக்குச் சென்று துறவியாய் மாறி தனது கடைசி காலத்தை அமைதியாய்ச் செலவிட்டார். 1985 களில் முதுமையடைந்து மரணமடைந்தார் என்கிறது இன்னொரு கதை.

அனுஜ் தர் எனும் எழுத்தாளர், நேதாஜியின் மறைவின் மர்மங்கள் குறித்து “Back from Dead”, “India’s biggest cover up” என இரண்டு நூல்கள் எழுதினார். நேதாஜியின் மரணம் சரிவர விசாரிக்கப்படவில்லை. அரசுகள் அதில் அக்கறை காட்டவில்லை. வெறுமனே கண்துடைப்புக்காகவே கமிஷன்கள் போடப்பட்டன என்கிறார் அவர்.

முந்தைய‌ அர‌சுக‌ள் எதுவுமே நேதாஜியின் ம‌ர்ம‌ம் குறித்த‌ முழுமையான‌ ஒரு ப‌திலை த‌ர‌வில்லை. எழுப‌து ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ இந்த‌க் கேள்வி இந்திய‌ர்க‌ளின் ம‌ன‌தில் ஓடிக்கொண்டே இருக்கிற‌து. அதை கால‌த்துக்கேற்றப‌டி அர‌சிய‌லாக்குவ‌தைத் த‌விர‌ வேறெதையும் யாரும் செய்ய‌வில்லை.

இத்த‌னை ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌ன‌, இனிமேலாவ‌து நேதாஜி ம‌ர‌ண‌ம் குறித்த‌ முழுமையான‌ செய்தியை வெளியிடவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். த‌மிழ‌க‌த் த‌லைவ‌ர்க‌ள் ப‌ல‌ரும் கூட‌ நேதாஜியின் ம‌ர்ம‌ம் குறித்த‌ த‌க‌வ‌ல்க‌ளை வெளியிட‌ வேண்டும் என‌ ம‌த்திய‌ அர‌சுக்கு நெருக்க‌டி கொடுத்த‌ன‌ர். மத்திய அரசுக்கு அது ஒரு பெரிய தர்மசங்கடமாய் மாறிப்போனது. நேருவின் அரசு, நேதாஜியின் குடும்பத்தை உளவு பார்த்தது என சொல்லப்படும் தகவல் தான் இந்தப் பிரச்சினை மீண்டும் முளை விடக் காரணம்.

நேதாஜி குறித்து மொத்தம் 130க்கும் மேற்பட்ட‌ ரகசிய ஆவணங்கள் அரசிடம் உள்ளன‌. அதில் சில ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை. அவை வெளியே வந்தால் வெளிநாடுகளுடனான உறவுகள் பாதிக்கப்படும் என தற்போதைய அரசு அதை வெளியிட மறுத்து வருகிறது.

இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நேதாஜி ப‌ற்றிய ஆவணங்களை வெளியிடுவேன்” என அறிவித்தார். மத்திய அரசு திடுக்கிட்டது. ஒரே அறிவிப்பின் மூலம் மம்தா பானர்ஜி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்தார். சொன்னபடியே நேதாஜி குறித்த ஆவணங்களில் 64 ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கென வெளியிட்டார்.

இந்தச் செயல் ‘எழுபது ஆண்டுகாலம் யாரும் செய்யாத ஒரு செயலை செய்த தலைவர்’ எனும் மிகப்பெரிய இமேஜை மம்தாவுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. டெல்லி முத‌ல்வ‌ர் கெஜ்ரிவாலும் உட‌ன‌டியாக‌ ஒரு பாராட்டு டுவிட்ட‌ரை அனுப்பி ம‌க்க‌ளின் ஆத‌ர‌வில் க‌ல‌ந்து கொண்டிருக்கிறார்

மேற்கு வ‌ங்க‌ ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌ல் நெருங்கும் சூழ‌லில் ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ செய‌லின் மூல‌மாக‌ த‌ன்னை ஒரு ஆளுமையுடைய‌ த‌லைவ‌ராக‌க் காட்டிக்கொண்டிருக்கிறார் ம‌ம்தா. இத‌ன் மூல‌ம் நேதாஜி ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் ஆத‌ர‌வை ச‌ட்டென‌ ஈர்த்திருக்கிறார் என்று சொல்ல‌லாம். இத‌ன் ப‌தில‌டியாக‌ மிச்ச‌முள்ள‌ ஆவ‌ண‌ங்களில் சிலவற்றை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வெளியிடலாம் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் 12,744 பக்கங்கள் கொண்டவை. 1937ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டுவரையிலான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. நேதாஜி குறித்த பொதுவான தகவல்களுடன், 1941ம் ஆண்டுக்குப் பிறகு நேதாஜி குறித்து உளவாளிகள் சொன்ன ரகசியத் தகவல்கள் பலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த முதல்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களில் நேதாஜி குறித்து மேலும் ப‌ல தகவல்கள் கிடைத்திருக்கின்ற‌ன‌.

அதில் முக்கிய‌மான‌து, “நேதாஜி 1945ல் இற‌க்க‌வில்லை” எனும் த‌க‌வ‌ல். 1945க்குப் பிற‌கும் நேதாஜிக்கும், அவ‌ருடைய‌ குடும்ப‌த்தின‌ருக்கும், சில‌ உல‌க‌ நாடுக‌ளுக்கும் இடையே உள்ள‌ சில‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ங்க‌ள் அதை ஊர்ஜித‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌. இன்னொன்று நேதாஜி தொட‌ர்ந்து க‌ண்காணிக்க‌ப்ப‌ட்டார் எனும் த‌க‌வ‌ல்.

இப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் இரண்டு மடங்காகியிருக்கிறது. மீதமுள்ள ஆவணங்களில் ஜப்பான், ஜெர்மனி, மலேஷியா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நேதாஜி கொண்டிருந்த தொடர்புகளும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அந்த நாடுகளுக்கு இருந்த ஈடுபாடும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது வெளியானால் நாடுகளுக்கிடையேயான நல்லுறவு பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்பதே மத்திய அரசு சொல்லும் காரணமாகும்.

ம‌ம்தா அர‌சு வெளியிட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் இணைய‌த‌ள‌த்தில் ப‌திவேற்ற‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌. அத‌ன் பின் ஆவ‌ண‌ங்க‌ள் குறித்த‌ நுணுக்க‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகும். இப்போது வெளியிடப்ப‌ட்ட‌ த‌க‌வல்க‌ளுக்காக‌ நேதாஜியின் குடும்ப‌ம் அர‌சுக்கு ந‌ன்றி தெரிவித்திருக்கிற‌து.

ஒரு மாபெரும் தலைவரின் கடைசி காலம் குறித்த உண்மையை அறியும் உரிமை சுதந்திர நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதுவும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தோடு தம்மைத் தொடர்பு படுத்திக் கொண்டுள்ள தமிழினத்துக்கு நிச்சயம் உண்டு.

அதே நேரத்தில், சர்வதேச உறவுகள் பாதிக்கப்படாமல், ஒரு உணர்வு நிலையிலான எழுச்சி நாட்டில் எழாமல் நிலமையைக் கையாளவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இரண்டையும் கருத்தில் கொண்டு இந்திய அரசு சரியான தகவல்களில், தேவையான தகவல்களை உடனே வெளியிடவேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி : நம்ம அடையாளம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s