ஒவ்வொரு மனிதனும் அன்பு செய்யவும், அன்பு செய்யப் படவுமே உருவாக்கப்பட்டுள்ளான். – அன்னை தெரேசா
சில குழந்தைகளைப் பார்த்தால் ரொம்பவே உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலரோ ரொம்பவே அமைதியாக, தனிமையாக இருப்பார்கள்.
சில இளைஞர்கள் மிகவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் வாழ்க்கையின் அடுத்தடுத்த படிகளுக்குத் தாவி ஓடிக் கொண்டே இருப்பார்கள். வேறு சில இளைஞர்கள் வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிக்க முடியாமல் பின் தங்கி விடுவார்கள். பெரும்பாலும் கிடைக்கும் இடத்தில் தங்களை நுழைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முயல்வார்கள். இந்த வித்தியாசங்கள் பல வேளைகளில் நம்மை வியப்படைய வைக்கிறது.
இதன் காரணம் என்ன என்பதை பல்வேறு உளவியலார்கள் ஆராய்ந்தார்கள். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் சொன்னது என்ன தெரியுமா ? “அன்பு தான் இந்த மாற்றங்களுக்கான காரணம் !”
கொஞ்சம் ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு தான். ஒருவனுடைய தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் அடி நாதமாக இயங்குவது அவன் தன்னுடைய குடும்பத்தில் எத்தகைய சூழலில் வளக்கப்பட்டான் என்பதே ! சின்ன வயதிலேயே பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைத்து வளரும் பிள்ளைகள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்கிறார்கள் என்பதே அந்த ஆய்வு முடிவு.
இன்றைய பெற்றோர் தங்களுடைய பொருளாதார ஓட்டங்களுக்காக குடும்ப உறவுகளை பின் தங்க வைத்து விடுவது வேதனையான உண்மை. அவர்களுக்கு குடும்ப உறவு என்பது நள்ளிரவு தாண்டியோ, வார இறுதி நாட்களிலோ மட்டுமே பூக்கின்ற பூ தான்.
அப்படிப்பட்ட தந்தை ஒருவரிடம் மகன் ஒரு நாள் கேட்டான். “அப்பா, நீங்க ஒரு மணி நேரத்துக்கு எவ்ளோ ரூபா சம்பாதிப்பீங்க ?”
“நான் எவ்ளோ சம்பாதிச்சா உனக்கென்னடா ? ஏழு வயசுல இதெல்லாம் என்ன கேள்வி ?”
“சொல்லுங்கப்பா பிளீஸ்”
“ஒரு மணி நேரத்துக்கு நான் நூறு ரூபா சம்பாதிப்பேன்.”
“சரி எனக்கு ஒரு நாப்பது ரூபா குடுங்க “
தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம் எனக் கேட்டு, நாசூக்காய் நாற்பது ரூபாய் கேட்கும் மகனிடம் தந்தைக்கு எரிச்சல் வந்தது. பளாரென ஒரு அறை கொடுத்து விட்டு போய்விட்டார். ஆனால் இரவில் அவருக்கு மனம் வலித்தது. நேராகப் பையனிடம் சென்றார். “இந்தாப்பா 40 ரூபா. ஏன் ஸ்கூல்ல ஏதாச்சும் வாங்கணுமா ?”
பையனோ பதில் பேசாமல் ஓடிச் சென்று தன் புத்தகப் பையைத் திறந்தான். அதில் சில்லறைகளாகவும் நோட்டுகளாகவும் இருந்த பணத்தை அள்ளினான். கையில் இருந்த நாற்பது ரூபாயையும் அதிலே வைத்தான்.
‘டாடி.. இப்போ 100 ரூபா இதுல இருக்கு, நாளைக்கு ஒரு மணி நேரம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னைக் கொஞ்சுவீங்களா ?”
தந்தையின் மனம் நெகிழ்ந்தது. அலுவல் தேடல்களுக்காக ஓடி ஓடி தனது மகனை ஏக்கத்தில் தவிக்க விட்டிருப்பதை அவர் உணர்ந்தார். மகனை அள்ளி அணைத்துக் கொண்டார். அவரது கண்கள் வழிந்தன.
உங்கள் பிள்ளைகள் நாளை தன்னம்பிக்கையும் வெற்றியும் உடையவர்களாக விளங்க வேண்டுமா ? நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அவர்களுக்கு பாடம் கற்பிப்பதல்ல, அன்பைப் பகிர்வது. அவர்களை மரியாதையுடன் நடத்தி அவர்களை மட்டந்தட்டாமல் இருப்பது. அவர்களுக்கு தேவையான உதவிகளைக் கொடுத்து அவர்களை ஊக்குவிப்பது !
அன்பு, மரியாதை, ஊக்குவித்தல் எனும் மூன்று விஷயங்களையும் பெற்றோர் குழந்தைகளுக்கு போதுமான அளவுக்குக் கொடுத்தாலே போதும், தங்கள் எதிர்கால வாழ்க்கையைக் குழந்தைகள் தாங்களாகவே அமைத்துக் கொள்வார்கள்.
பெற்றோர் பிள்ளைகள் உறவு நாட்கள் செல்லச் செல்ல இன்னும் நெருக்கமாகி வழிகாட்டும் ஒரு துணையாக மாறிப் போகும் குடும்பங்கள் பாக்கியம் செய்தவை. வாழ்வின் இனிமையும் வெற்றியும் அவர்களிடம் நிச்சயம் தங்கும்.
ஒரு தந்தையும் மகளும் ஆற்றைக் கடப்பதற்காகப் பாலத்தில் நடந்தார்கள். ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். தந்தை சொன்னார், “என்னோட கையைக் கெட்டியாப் புடிச்சுக்கோ”. மகளோ, ‘இல்லையில்லை, நீங்க என் கையைப் புடிச்சுக்கோங்க” என்றாள். தந்தைக்குப் புரியவில்லை. “இதுல என்ன வித்தியாசம் ?” என்றார் கேள்வியுடன்.
“நிறைய இருக்கு டாடி. நான் உங்க கையைப் புடிச்சா, ஒருவேளை பயந்து போய் விட்டுடுவேன். நீங்க என் கையைப் புடிச்சா ஸ்ட்ராங்கா புடிப்பீங்க. என்ன வந்தாலும் விட மாட்டீங்க. அதான் உங்க கிட்டே புடிக்க சொன்னேன்” என்றாள் மகள். தந்தை நெகிழ்ந்தார். மகளைத் தூக்கிக் கொண்டார்.
இத்தகைய நம்பிக்கையும், அன்பும் கலந்த இறுக்கமான கைப்பற்றுதலை உங்கள் பிள்ளைகளிடம் கொடுங்கள். அவர்கள் நிம்மதியின் நிழலிலும், அன்பின் கதகதப்பிலும் வாழ்க்கையைத் தொடரட்டும். அது அவர்களுடைய மனதுக்குள் தன்னம்பிக்கையின் விதையை நடும்.
அந்த விதை அவர்களுடைய வாலிப வயதில் அவர்களை மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றும். அது அவர்களை நிச்சயம் வெற்றியாளர்களாய் உருவாக்கும் ! அன்பே தன்னம்பிக்கையின் அடிப்படை !