சாலமோனின் நீதிமொழிகளைப் போல பிரமிப்பூட்டக்கூடிய தத்துவச் சிதறல்களால் நிரம்பியிருக்கிறது சீராக்கின் ஞானம் நூல். செப்துவசிந்தா எனும் புகழ்பெற்ற கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டு பைபிளில் இணை திருமறைகள் எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது.
எருசலேமில் வாழ்ந்த அறிஞர் சீராக். சீராக்கின் ஞானம் எனும் நூலை அவருடைய மகனான ஏசு என்பவர் எழுதியிருக்கிறார். யூதர்கள் மீது கிரேக்க மொழியும், பண்பாடும், வழிபாட்டு முறைகளும் திணிக்கப்பட்ட காலகட்டமான கிமு 180களில் இந்த நூல் எழுதப்பட்டது.
“ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்து வருகின்றது: அது என்றும் அவரோடு இருக்கின்றது” எனும் ஆரம்ப வரியோடு துவங்கும் நூலிம் முதல் பகுதி முழுவதும் தினசரி வாழ்க்கையில் ஞானத்தைக் கடைபிடிக்கும் முறை பற்றிப் பேசுகிறது. இரண்டாவது பகுதி, இஸ்ரவேலின் மீட்வு வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களைப் புகழ்ந்து அவர்களைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறது.
சீராக் நூலில் முக்கியமாக பத்து விஷயங்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. படைப்பு, மரணம், நட்பு, மகிழ்ச்சி, பெருமையும் அவமானமும், செல்வம், பாவம், சமூக நீதி, பேச்சு பெண்கள் என்பவையே அவை.
“கடல் மண்லையோ மழைத்துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்? வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்? எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது”
” ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்: அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே வழங்கப்பெறுகிறது.
ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்.”
“ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு: உறுதியாக இரு: துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே”
“நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது. ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர். உறுதியற்ற உள்ளத்தவருக்கும் ஜயோ, கேடு வரும்! ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை”
என இறைஅச்சம், இறைவனை முழுமையாய் சார்ந்திருக்க வேண்டிய தேவை போன்றவற்றை விவரிக்கும் நூல், பின்னர் மனித வாழ்வின் தேவையைப் பேசுகிறது.
“தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர்.
அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரைக் கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போல்வர்: அன்னையர்க்குச் சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்”
“நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.”
“உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே. உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே. உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே: ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை.”
“ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே: கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே. உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே. காலம் தாழ்த்தாமல் உதவி செய். ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார். ஏழைகளுக்குச் செவிசாய்: அவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல்”
“உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே. மூடருக்கு அடிபணியாதே: வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே. இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு. கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்”
” நன்மை செய்தோர்க்கே நன்மை செய்வோர் தங்களது எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்” எனும் வார்த்தை “உங்களுக்கு நன்மை செய்வோருக்கே நன்மை செய்தால் அதனால் வரும் பயன் என்ன ?” எனும் இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை நினைவூட்டுகின்றன.
” நான் பாவம் செய்தேன். இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? எனக்கூறாதே: ஆண்டவர் பொறுமை உள்ளவர். பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப் பாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே. அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன: அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்”
“தீய நாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாதே: இல்லையேல், காளையிடம் சிக்கியவன்போலக் கீறிக் குதறப்படுவாய். நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே: அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய். கீழான உணர்வுகளின்படி நடவாதே: சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்து.”
” உடல் அழகுக்காக ஒருவரைப் புகழ வேண்டாம்: தோற்றத்துக்காக ஒருவரை இகழவும் வேண்டாம். பறப்பனவற்றுள் சிறியது தேனீ: எனினும், அது கொடுக்கும் தேன் இனியவற்றுள் சிறந்தது”
என வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகளையும், அறிவுரைகளையும் அள்ளி வழங்கும் நூல் பிற்பகுதியில் , இஸ்ரயேலர்களின் தலைவர்களான, ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, ஆரோன், பினகாசு, யோசுவா, காலேபு, சாமுவேல், நாத்தான், சாலமோன், ரகபெயாம், எரொபவாம், எலியா, எலீசா, எசேக்கியா, எசாயா உட்பட அத்தனை தலைவர்களையும் புகழ்கிறது.
“ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதே மனிதருடைய இறுமாப்பின் தொடக்கம்.” அவரை விட்டு விலகாமல் அவரை நெருங்கிச் செல்ல முடிவெடுப்போம். அதற்காய் இறுமாப்பை அவிழ்த்துவிட்டு பணிவை அணிந்து கொள்வோம்.
You must be logged in to post a comment.