நான் என்னை இன்னொருவரோடு ஒப்பீடு செய்ய முயன்றதே இல்லை - சச்சின் டென்டுல்கர்.
வெற்றியாளர்களின் பார்முலா இது தான். இன்னொருவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து அந்த நிலையே உயர்ந்தது என்றோ, அந்த நிலை தாழ்ந்தது என்றோ கூறிக்கொள்வதில்லை. மாறாக தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து அதன் அடிபடையில் இயங்குவது.
“அவன் ரொம்ப ரொம்ப திறமைசாலி”, “ அவன் எவ்ளோ அழகா பாடறான். என்னால அவன மாதிரிப் பாட முடியலையே”, “ அவ எவ்ளோ அழகா இருக்கா.. அவளை மாதிரி அழகா இருக்க முடியலையே”, “அவன் சட்டுன்னு பாப்புலர் ஆயிட்டான்.. நான்…” இப்படி எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களோடு ஒப்பீடு செய்து செய்தே பலரும் தங்களுடைய வாய்ப்புகளையும், வெற்றிகளையும் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அது தனித்துவமானது. ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பீடு செய்யவே முடியாது ! நமது வலது கண்ணுக்கும், நமது இடது கண்ணுக்குமே வேறுபாடு உண்டு. நமது வலது கையும் இடது கையும் ஒன்றே போல் இருக்காது ! நமது உறுப்புகளே இப்படி இருக்கும் போது நமக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கும் எவ்வளவு வேறு பாடு இருக்கும். நம் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கும் நமக்குமே வேறுபாடு இருக்குமெனில் நமக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு வேறு பாடு இருக்கும். எனவே ஒப்பீடு என்பதே ஒருவகையில் முட்டாள்தனமான முடிவு !
“ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பிடாதீர்கள்” என்பது மிகப் பிரபலமான ஆங்கில வாக்கியம் ஒன்று. சம்பந்தம் இல்லாத இரண்டு விஷயங்களை ஒப்பிடாதீர்கள் என்பது தான் இதன் பொருள் ! இதனால் தான் வகுப்பில் ஆசிரியர்களானாலும் சரி, வீட்டில் பெற்றோரானாலும் சரி பிள்ளைகளை ஒப்பீடு செய்யவே கூடாது என உளவியலார்கள் படிச்சுப் படிச்சு சொல்கிறார்கள் !
சமூகத்தில் இருவருடைய திறமை இரண்டு விதமாய் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இரண்டு விதமான பணிகளைச் செய்ய வேண்டும் என்பதே. ஒரே விதமான பணி செய்பவர்கள் கூட வித்தியாசமாய் இருப்பதற்குக் காரணம், அவரவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதன் மீதான இயற்கையில் நிபந்தனையே !
உலகம் முழுதும் வெறும் பாடகர்களாகவே இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். குப்பையை அள்ளுவது யார் ? சட்டம் ஒழுங்கைப் பார்ப்பது யார் ? மருத்துவப் பணி செய்வது யார் ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி இருக்கிறது இல்லையா ? இதில் யார் உயர்ந்தவர் ? யார் தாழ்ந்தவர் என்று எண்ணுவதே அடிபடையில் தவறு. எல்லா மனிதர்களும் சமமானவர்களே ! அவர்களுடைய பொருளாதார நிலை, வேலை போன்ற ஆடைகளால் அவர்களுக்கு அதிக மரியாதை செய்வதோ, குறைவான மரியாதை தருவதோ பாவச் செயலாகவே அமையும் !
ஒப்பீடு செய்பவர்கள் பெரும்பாலும் நெகடிவ் சிந்தனைகளுக்குள் மூழ்கிக் கிடப்பவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் 99 நல்ல விஷயங்கள் இருக்கும். ஒரே ஒரு விஷயத்தில் தோல்வி இருக்கலாம், அல்லது எதிர்பார்த்த வெற்றி இல்லாமல் இருக்கலாம். இவர்களுடைய சிந்தனை எப்போதும் அந்த ஒரே ஒரு தோல்வியின் தோளில் அமர்ந்தே இருக்கும். அவர்களால் மற்ற நல்ல விஷயங்களுக்காக ஆனந்தப் படவே முடியாது ! எப்போதும் கிடைக்காத ஒன்றுக்குக் கொட்டாவி விட்டு விட்டு இருப்பதைப் பாழடித்து விடுவார்கள்.
உங்கள் வீட்டில் ஒரு தோட்டம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஒரே ஒரு செடி மட்டும் பூக்கவில்லை. பட்டுப் போய்விட்டது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். “ஐயோ இந்தச் செடி பட்டுப் போய்விட்டதே” என அதன் அடியில் அமர்ந்து சோகத்துடன் உங்கள் பொழுதைக் கழிப்பீர்களா ? இல்லை “ வாவ்.. எவ்வளவு அழகான மலர்கள்” என மற்ற மலர்களின் அழகை ரசிப்பீர்களா ? சிந்தித்துப் பாருங்கள். இந்தச் செடி மட்டும் ஏன் பூக்கவில்லை என உங்கள் நேரத்தை அழிப்பதை விட, பூத்திருக்கும் பூக்களை நேசிப்பதில் தான் அர்த்தம் இருக்கிறது !
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அழகு ! விதவிதமான மலர்கள் இருந்தால் தான் தோட்டத்துக்குச் சிறப்பு. விதவித மரங்கள் இருந்தால் தான் கானகம் அழகு. விதவிதமான மீன்கள் இருந்தால் தான் கடலுக்கு அழகு. விதவிதமான இசைக்கருவிகள் இருந்தால் தான் இசைக்கு மதிப்பு ! வாழ்க்கை என்பது பலவற்றின் கூட்டுத் தொகை. ஒரு மலர் மாலை போல, ஒரு சிம்பொனி இசைக்கோர்வை போல ! உங்கள் பங்களிப்பு இந்த உலகில் என்ன என்பதை மட்டும் பாருங்கள். உங்களுடைய பணியை நன்றாகச் செய்தீர்களா என்பதை மட்டும் பாருங்கள்.
ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது தம்மைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தாம் செய்த செயல்களைப்பற்றி மட்டும் பெருமை பாராட்ட முடியும். என்கிறது விவிலியம்.
வாழ்க்கை அழகானது ! அது ஒப்பீடுகளால் அழுக்காகிவிடக் கூடாது !