நாம் நமது சிந்தனைகளைக் கொண்டே உருவாக்கப் படுகிறோம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிப் போகிறோம் நாம். மனம் தூய்மையாய் இருக்கும் போது ஆனந்தம் ஒரு நிழலைப் போல தொடரும். எப்போதும் நம்மை விட்டு விலகாது ! – – புத்தர்
நமது சிந்தனைகள் நல்லவையாக இருந்தால் நமது வாழ்க்கையும் செயல்களும் நிச்சயம் நம்மை வெற்றியாளராக்கும். சாதனை என்பது வேலையில் சாதனைகள் செய்வது மட்டுமல்ல, குடும்பத்தில் ஆனந்தம் விளைவிப்பது அதை விடப் பெரிய சாதனை !
சிலர் தங்களுடைய சிந்தனைகளை சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களுடைய வார்த்தைகள் மோசமானவையாகவோ, நல்லவையாகவோ சூழலுக்குத் தக்கபடி வந்து விழுகின்றன. அமைதியாய் இருக்கும் மனிதனை வேண்டுமென்றே உசுப்பும் போது அவனிடமிருந்து தீய சொற்களோ செயல்களோ தெறிக்கின்றன.
ரோட்டில் வண்டி ஓட்டிக் கொண்டு போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வண்டியை யாராவது வந்து இடித்து விட்டால் சட்டென கோபம் வருகிறது. இடித்த நபர் அந்தப் பழியை உங்கள் மீதே போட்டால் கோபம் இரண்டு மடங்காகிறது. அதே நபர் நடுத்தெருவில் வைத்து உங்கள் குடும்பத்தையெல்லாம் இழுத்து அசிங்கமாய்ப் பேசினால் உங்கள் கோபம் பல மடங்கு உயர்ந்து சட்டென இயல்பு தவறி நீங்களும் கத்த ஆரம்பிக்கிறீர்கள் இல்லையா ? நமது அடிப்படை இயல்பில் பிழை இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது !
“ஒரு பாத்திரம் நிறைய இனிப்புத் தண்ணீரைச் சேர்த்து வையுங்கள். அதை எப்படி உலுக்கினாலும் அதிலிருந்து இனிப்புத் தண்ணீர் தான் வெளியே வரும். எவ்வளவு தான் அதை உலுக்கினாலும் அதிலிருந்துத் தளும்புவது கசப்புத் தண்ணீராய் இருக்காது” என்கிறார் ஏமி கார்மைக்கேல். நமது உள்ளம் அன்பினாலும், அமைதியினாலும் நிரம்பியிருந்தால் சூழல்களின் உந்துதல்களும் நிர்ப்பந்தங்களும் நம்மை தீயவராக்குவதில்லை !
பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் இளம் வயதினர் வளரும்போது அவர்களுடைய சிந்தனைகள் வலிவிழந்து காணப்படும் என்கின்றனர் உளவியலார். “ என்னை ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. நான் ஒரு தூசு மாதிரி ஆகிப் போனேன்” என சிந்தனைகள் அவர்களுடைய தன்னம்பிக்கையை தானே குழிதோண்டிப் புதைத்து விடும். அத்தகையவர்களை மீட்க தொடர்ந்த ஊக்கமும், வழிகாட்டலும் அவசியப்படுகிறது ! பழிவாங்குவது என்பது வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றியின் மூலமாக என்பதையே காட்டவேண்டும் ! சிந்தனைகளின் திசை மாற வேண்டும்.
“எல்லாவற்றையும் ரொம்பவே பெர்பக்ட் ஆகச் செய்ய வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் அதனால் அர்த்தமே இல்லை” எனும் சிந்தனை மிகவும் தவறானது. பல வேளைகளில் நம்மை அறியாமலேயே அந்தச் சிந்தனையைக் குழந்தைகளிடமும் நாம் திணிப்பதுண்டு. முதல் இடத்தில் வருவது தான் இலட்சியம். அதில் ஒரு மார்க் குறைந்தாலும் செல்லாக்காசு என்பது போன்ற நிர்ப்பந்தங்கள் குழந்தைகளை பாழாக்கும்.
“தான் வெற்றி பெறவில்லை” எனும் கருத்து குழந்தையின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அது அவனுடைய தன்னம்பிக்கையையே சிதைத்து விடும் என்கின்றனர் உளவியலார். வாழ்க்கை என்பது முதலில் வருவதல்ல ! அப்படியெனில் ஒருவர் மட்டுமே வாழ முடியும் ! இன்று முதலில் வருபவரையே உலகம் நாளை மறந்து விடும் ! உண்மை அப்படியிருக்க மனதில் அத்தகைய சிந்தனைகள் எழுவதில் என்ன அர்த்தம் ?
இன்னும் சிலருக்கு அவர்களை எல்லோரும் எப்போதுமே உதாசீனப் படுத்துவது போலத் தோன்றும். “பாத்தியா…இப்படித்தான் எல்லாரும் பண்றாங்க”, “ பாரு அவனே மதிக்கல..” என்பன போன்ற வாக்கியங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அந்த சிந்தனைகள் அவர்களை அப்படி ஒரு மனநிலைக்குள் அழுத்தியே வைக்கும். உண்மையில் அது வேறு எங்கோ, எப்போதோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடந்த கோபத்தின் வெளிப்படாய் இருக்கும் !
இன்னும் சிலருக்கு ‘நான் ஒரு உதவாக்கரை” எனும் எண்ணம் ஆழ்மனதில் பதிந்துவிடும். அது பெரும்பாலும் எப்போதோ, யாரோ ஒருவர் சொன்னதாய் இருக்கும். வீட்டில் அப்பாவோ, ஆசிரியரோ, நண்பரோ யாரோ ஒருவர். அந்த காயம் வடுவாய் மாறியிருக்கும். பிறகு அந்த நிகழ்வு முற்றிலுமாக மறந்து போனால் கூட “நான் ஒரு உதவாக்கரை எனும் சிந்தனை” மட்டும் உள்ளுக்குள்ளேயே தங்கிவிடும். அந்த சிந்தனை வந்துவிட்டால் பிறகு வெற்றியை நோக்கிப் பயணிப்பதற்குக் கூட மனம் துணியாது ! நமது எண்ணங்களே நம்மை வழிநடத்து. ஆயிரம் முறை தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, அதையும் தாண்டி இன்னொரு முறை உண்டு ! ஒவ்வொருவரும் மகிழ்வுடன் வாழவும், வெற்றியுடன் வாழவும் வழிகள் உண்டு எனும் சிந்தனையே மனதில் இருக்க வேண்டும் !
இன்னும் சிலர் எல்லாவற்றையும் கொஞ்சம் பொதுப்படையாக்கிப் பேசுவார்கள். “இந்த மாதிரி இடங்கள்ல போனா நான் பொதுவாவே சொதப்பிடுவேன்”. என்பது போன்ற சிந்தனைகள் அவர்களிடம் நிரம்பியிருக்கும். எப்பவுமே, பொதுவாகவே, என் குணமே அப்படித் தான் போன்றவையெல்லாம் மனதின் துருக்கள். ரொம்பவே தவறான சிந்தனை அது. “நான் எப்ப நாணயத்தைச் சுண்டினாலும் தலைதான் விழும்” என எப்படிச் சொல்ல முடியாதோ, அப்படித் தான் “எப்பவுமே” எனும் வாசகத்தையும் நாம் பயன்படுத்தவே முடியாது !
நமது சிந்தனைகள் ரொம்பவே பவர்புல் ஆனவை. ‘நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. எனவே எண்ணங்களில் கவனம் தேவை” என்கிறார் விவேகானந்தர். சிந்தனைகள் உயிரின் அடிவரைப் பாய்ந்து செல்லும் என்பது அவருக்குத் தெரியும். ஒலியை விடவும், ஒளியை விடவும் சிந்தனைகளின் வீச்சு வேகமானது, ஆழமானது !
எனவே நமக்குள் எழும் சிந்தனைகளைக் கவனிப்போம். வயலில் முளைக்கும் களைகளை அவ்வப்போது அகற்றி வந்தால் அறுவடை அமோகமாக இருக்கும். களைகளை அப்படியே விட்டுவிட்டால் களைகளினால் வயல் முழுவதுமாக அழிந்து போய்விடும். சிந்தனைகளும் அப்படியே ! தேவையற்ற சிந்தனைகளை மாற்றி, நல்ல சிந்தனைகளை வளரவிட்டால் காலப் போக்கில் நல்ல சிந்தனைகள் மட்டுமே நம்மை நிரப்பும் !
சிந்தனைகளைக் கவனிக்கத் துவங்குவோம்.