குறை சொல்தல் பெருங் குறை !

நான் கடவுளின் முன்னால் நிற்கும் போது எனது வாழ்க்கைக்கான பதிலைத் தான் சொல்வேனே தவிர பிறருடைய வாழ்க்கைக்கான விளக்கம் அல்ல. எனவே, என்னுடைய குறைகளுக்காக மற்றவர்களைக் குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.  – ஜாய்ஸ் மேயர்.

குறை சொல்தல் இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறிவிட்டது.ஒரு வகையில் மிகவும் எளிதான ஒரு வேலை குறை சொல்லுதல். எந்த விதமான தார்மீகப் பொறுப்பும் ஏற்க மறுப்பவர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு விஷயம் குறை சொல்லுதல்.

சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ? பசங்க சொன்ன பேச்சைக் கேட்கலேன்னா இப்போகூட தொலைக்காட்சியைத் தானே திட்டுகிறோம் !

ஒரு நிறுவனத்துக்கு ஒரு புது மேலதிகாரி வந்தார். அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போது பழைய அதிகாரி மூன்று மூடப்பட்ட கவர்களைக் கொடுத்துச் சென்றார். “எப்போதாவது பெரிய பிரச்சினை வந்தால் மட்டும் பிரியுங்கள்” எனும் விண்ணப்பத்தோடு.

புதிய அதிகாரி பதவியேற்றார். ஒரு வருடம் சிக்கல் ஏதும் இல்லாமல் போனது ! போதாத காலம் முதல் சிக்கல் வந்தது. பணத் தட்டுப்பாடு. என்ன செய்யலாம் என யோசித்தபோது அவருக்கு மூடப்பட்ட கவர்களின் ஞாபகம் வந்தது. முதலாவது கவரைப் பிரித்தார். “பழைய மேலதிகாரி மேல் பழியைப் போடு” என்றிருந்தது ! அப்படியே செய்தார். தப்பித்தார். அடுத்த ஆண்டும் அதே போல ஒரு பிரச்சினை. இப்போதும் கவரைப் பிரித்தார். “கமிட்டி மீது பழியைப் போடு” என்றிருந்தது ! அப்படியே செய்தார். அப்போதும் தப்பித்தார். மூன்றாவது ஆண்டும் பிரச்சினை வந்தது. பூதாகரமானது. மூன்றாவது கவரை எடுத்தார். பிரித்து வாசித்தார். “மூன்று கவர்களை நீ உருவாக்கும் நேரம் வந்து விட்டது” என்று எழுதப்பட்டிருந்தது !

நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இதில் இருக்கும் உண்மை நிதர்சனமானது. பழியைப் போடும் வழக்கம் ஆதியிலேயே ஆரம்பமாகிவிட்டது ! விலக்கப்பட்ட கனியைத் தின்ற ஆதாம் செய்த முதல் காரியம் பழியைத் தூக்கி ஏவாள் மீது போட்டது தான். எனவே இந்த பழிபோடலுக்கான விதை ஆதிமனிதனிடமிருந்து உருவாகியிருக்கிறது !

குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு !  அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.

பிடிக்காதவர்கள் மீது தான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது.  “உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்” என்று யாரும் சொல்வதில்லை. அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும். தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.

குறை சொல்தல் பயத்தின் வேர்களிலிருந்தும் முளைப்பதுண்டு. குறிப்பாக அலுவலக சூழல்களில் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் , தங்களுடைய புரமோஷன், வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் அடுத்தவர்களை அழிக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு.

ஈகோ எனும் ஆலமரத்தின் கிளைகள் இந்தக் குறை எனும் விழுதுகள். ஈகோ இருக்கும் மனிதர்கள் மனிதர்கள் பிறரிடமுள்ள குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துத் திரிவார்கள். இல்லாததை இருப்பது போலச் சோடித்து மகிழ்வார்கள். ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டுப் போய்விடும்.

குறை சொல்பவர்கள் தொடர்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அட குறையைப் போக்கும் வழியைத் தேடணுமே என்பதை மறந்து விடுவார்கள். இருப்பதில் திருப்தியடையாதவர்கள் குறை சொல்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். தன்னை புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளவோ, அல்லது கவனத்தை இழுக்கவோ கூட பிறர் மீது சிலர் குறைகளை அள்ளித் தெளித்துக் கொண்டே இருப்பதும் உண்டு.

“தாங்கள் இருக்கும் நிலைக்கு சூழலை மக்கள் விடாமல் குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் சூழ்நிலையை குற்றம் சொல்வதில்லை. சூழலைப் பிடிக்காத மனிதர்கள், தங்களுக்குப் பிடித்தமான சூழலை உருவாக்கக் கற்றுக் கொள்ளவேண்டுமே தவிர குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது” என்கிறார் ஜார்ஜ் பெர்னாட்ஷா ! அவருடைய வார்த்தைகளில் இருக்கும் வீரியம் கவனிக்கத் தக்கது !

குறை சொல்தல் வெறுமனே உங்கள் அலுவலக வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. உங்களுடைய ஆழமான குடும்ப வாழ்க்கைக்கே அது கொள்ளி வைத்து விடும். குறை சொல்வது ஒரு மிகப்பெரிய உறவு எதிரி !

கவனமாய் இருங்கள். குறை சொல்வதற்கான தருணங்களில் கவனமாய் இருங்கள். அந்தக் கவனம் உங்களில் எப்போதும் இருந்தால் படிப்படியாய் நீங்கள் குறை சொல்லும் குறையை விட்டு வெளியே வர முடியும். வாழ்க்கையும் ரொம்ப அழகானதாய்த் தெரிய ஆரம்பிக்கும்.

குறைகளைவோம்,நிறைவடைவோம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s