புகைத்தல் கொல்லும். நீங்கள் கொல்லப்பட்டால் வாழ்வின் உன்னதமான பகுதிகளை இழந்து விடுகிறீர்கள் என்று அர்த்தம் – புரூக் ஷீல்ட்ஸ்.
ஒரு மனிதனை மிக மிக எளிதாகப் பிடித்து விடக் கூடிய அடிமைத்தனம் என்று புகையைச் சொல்லலாம். தண்ணி அடிக்கிறவன் கூட ஒரு வாரம் ஒன்றோ இரண்டோ தடவை தான் தண்ணி அடிப்பான். ஆனால் தம் அடிக்கிறவர்களோ அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை கூட அடிக்கிறார்கள். காரணம் மிக எளிதாக ஊதித் தள்ளி விட முடியும் எனும் காரணம் தான். இது கொண்டு வருகின்ற கேடு அளவிட முடியாதது !
புகை பிடிப்பதன் தீமையைக் குறித்து வால்யூம் வால்யூமாக ஆய்வு முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புகை பிடித்தல் உடலை மட்டுமல்லாமல் மனதையும் பாதிக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். அவர்களுடைய திறமைகள் படிபடியாய் மழுங்கிப் போக இவை காரணமாகி விடுகின்றன. புகை பிடிப்பவர்கள் ஞாபக சக்தியில் ரொம்பவே வீக்காக இருப்பார்கள் என்கிறது ஒரு புது ஆராய்ச்சி.
“தினசரி நிகழ்வுகளில் மூன்றில் ஒரு பாகம் விஷயங்களை இவர்கள் மறந்து விடுவார்கள். சின்னச் சின்ன விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியிருக்கும். புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது புகை பிடிப்பவர்களின் ஞாபக சக்தி ரொம்பவே பரிதாபமானது” என அதிரடியாக மிரட்டுகிறது இந்த ஆராய்ச்சி.
ஏற்கனவே புகை பிடிப்பவர்களுடைய வயிற்றில் அமிலம் வார்க்கும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. தம் அடிப்பவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கை தகிடு தத்தோம் போடும் என ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்தது.
பிரிட்டனிலுள்ள நார்த்தம்ரியா பல்கலைக்கழகத்தில் தான் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பதினெட்டு வயதுக்கும், இருபத்து ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட எழுபது பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். இவர்களிடம் ஞாபக சக்திக் கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் புகை பிடிக்கும் பழக்கமுள்ள பார்ட்டிகள் வெறும் 56 சதவீதம் கேள்விகளுக்கான விடையை மட்டும் சொல்லி கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டனர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களோ 81 சதவீதம் சரியான பதில்களைச் சொல்லி முன்னணியில் நின்றார்கள்.
கொஞ்ச காலம் புகை பிடிக்கும் பழக்கத்தில் விழுந்து பின்னர் அதை விட்டு விட்டு வெளியே வந்தவர்கள் 74 சதவீதம் கேள்விகளுக்குச் சரியான விடையளித்து வியப்பூட்டினர். இதனால் புகை பிடிக்கும் பழக்கத்தை உதறி விட்டால் ஞாபக சக்தியை மீண்டெடுக்கலாம் எனும் உண்மை வலுவடைந்திருக்கிறது.
“அப்பா.. நீங்க புகைப்பதை விட்டு விடுவீர்களா ?” கையைப் பற்றிக் கொண்டே தந்தையிடம் அந்த சிறுவன் கேட்டான்.
“ஏன்பா… ?”
“நான் பெரியவனானதுக்கு அப்புறம் கூட நீங்க என் கூடவே இருக்கணும்ன்னு ஆசைப்படறேன்”
பையனின் பதிலில் தந்தையின் கையிலிருந்த சிகரெட் நழுவியது. அதன் பிறகு அது மேலேறி விரல்களில் அமரவேயில்லை.
குடும்ப உறவுகளை ரசிக்கச் செய்ய விடாமல் இந்த புகைத்தல் பழக்கம் மனிதர்களை கட்டிப் போட்டு விடுகிறது. ஆண்கள் பெண்கள் என சமத்துவப் பந்தியில் இந்த பழக்கம் எல்லா இடங்களிலும் விரிவடைந்திருப்பது நவ யுகத்தின் சாபக்கேடு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல ?
புகைப் பழக்கம் தவறு என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன். அப்படியானால் ஏன் இன்னும் அதையே தொற்றிக் கொண்டிருக்க வேண்டும் ?
புகை பிடித்தால் தான் பாட்டு எழுதுவேன், புகை பிடித்தால் டென்ஷன் குறையும், புகை பிடித்தால் ரிலாக்ஸ் ஆவேன் போன்றவையெல்லாம் மனப் பிரமை. புகையை விட்டவர்கள் அதை விட மிகுந்த ஆரோக்கியமாய் இந்த விஷயங்களையெல்லாம் கையாள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அணிவகுத்து நிற்கின்ற நோய்களை நினைத்துப் பாருங்கள். உங்கள் தலைமுறைக்கு நீங்கள் தரப்போவது ஆறுதலும், பாதுகாப்புமாக இருக்க வேண்டுமே தவிர, சிக்கலும் மருத்துவமனை வாசமுமாய் இருக்கக் கூடாது என்று முடிவெடுங்கள்.
உங்கள் அன்பான மனைவியின் முகமோ, உங்கள் அன்பான குழந்தைகளின் முகமோ ஒவ்வொரு முறை புகைக்கும் போதும் உங்கள் முன்னால் வரட்டும். உங்கள் புகைத்தல் அதன் மூலம் குறையும் இல்லையா ?
உங்கள் ஆரோக்கியம், தோல், கண், மூளை, இதயம், நுரையீரல் என சர்வ உறுப்புகளுக்கும் ஊறு விளைவிப்பது புகை எனும் சிந்தனை மனதில் இருக்கட்டும். ஒவ்வொரு முறை புகைத்தலை நடத்தும் போதும் இந்த சிந்தனைகளெல்லாம் வட்டமிட்டால் நீங்கள் புகையை விட்டு வெளியே வர வாய்ப்பு உண்டு.
அதுவும் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் புகை பிடித்தால் தலைமுறையே காலி ! ஆண்களுக்கும் புகை ஆண்மையின் துரோகியாய் மாறிவிடும் ஆபத்து ரொம்பவே உண்டு ! புகை பிடித்தலின் சிக்கலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அதற்கென ஒரு தனி நூலே தேவைப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
புகையை நிறுத்த ஒரே வழி, அப்படியே நிறுத்துவது தான். “இந்த வாரம் மட்டும் இழுத்துட்டு அடுத்த சுப முகூர்த்த தினத்துல நிறுத்திடுவேன்”. “இந்த வாரம் ஒரு நாள் பத்து.. அடுத்த வாரம் அஞ்சு, அப்புறம் மூணு..” இப்படியெல்லாம் திட்டம் போட்டு நிறுத்த நினைத்தால் நிறுத்த முடியாது. அப்புறம் மார்க் தைவன் சொல்வது போல, “தம்-மை நிறுத்தறது தான் ஈசியான சமாச்சாரம், நான் ஆயிரம் தடவை நிறுத்தியிருப்பேன்” என்று சொல்ல வேண்டி வரும் !
ஏகப்பட்ட சிக்கல்கள், பூச்சியம் பயன்கள் ! இப்படி ஒரு பழக்கம் தேவையா ?
அருமை. நன்றி
LikeLiked by 1 person