தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டரில் இருந்து ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும் ? விஷயம் தெரிந்த சில மணி நேரங்களுக்குள் சைபர் கிரைம் காவலர்கள் வந்து உங்களை அப்படியே அலேக்காக அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
யாருக்குமே தெரியாத ஒரு ரகசிய இடத்திலிருந்து நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியது எப்படி போலீசுக்குத் தெரிந்தது ? என நீங்கள் வியந்து கொண்டே கம்பி எண்ண வேண்டியது தான். உங்களுக்கு இங்கே வில்லனாக மாறியது ஐ.பி அட்ரஸ் (IP address) எனப்படும் இன்டர்நெட் புரோட்டோகால் அட்ரஸ் (Internet Protocol Address ) தான். இன்டர்நெட் புரோட்டோகாலைத் தமிழில் இணைய நெறிமுறை என்கிறார்கள்.
ஊரில் எந்த மூலையில் உங்கள் வீடு இருந்தாலும் தபால்காரர் சைக்கிளை மிதித்துக் கொண்டு உங்கள் வாசலுக்கு வருவதுண்டு இல்லையா ? அவருக்குக் குழப்பமே இருக்காது. காரணம் உங்கள் வீட்டுக்கென தனியே ஒரு விலாசம் இருப்பது தான். அதே போல ஒவ்வொரு கணினிக்கும் இருக்கும் விலாசம் என்று இந்த ஐபி அட்ரஸைச் சொல்லலாம். நமக்கெல்லாம் வார்த்தைகள் புரியும். கணினிகளைப் பொறுத்தவரை எல்லாமே பூச்சியம், மற்றும் ஒன்று எனும் எண்கள் தான். எனவே தான் இந்த ஐபி அட்ரஸ் வெறும் எண்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.
உங்கள் கணினியில் டாஸ் பிராம்ட்டில் போய் ipconfig என டைப் பண்ணி என்டர் பண்ணுங்கள். உடனே உங்கள் கணினியின் ஐ.பி எண் திரையில் தெரியும். இந்த முகவரி உங்கள் கணினிக்கானது ! இதை வைத்துத் தான் உங்கள் கணினியில் இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.
ஒவ்வொரு ஐ.பி எண்ணும் நான்கு பாகங்களைக் கொண்டது. உதாரணமாக 123.123.32.321 என்பதைப் போல ஒரு ஐ.பி எண் இருக்கும். உங்கள் கணினி எந்த நெட்வர்க்கில் இருக்கிறது, அந்த நெட்வர்க்கில் எந்த கணினி உங்கள் கணினி எனும் இரண்டு அடுக்கு அடையாளங்கள் இதில் உண்டு. இந்த ஐ.பி எண் முதலில் வடிவமைக்கப்பட்ட போது 32 பிட் அளவு கொண்ட எண்ணாகத் தான் வடிவமைத்தார்கள். இன்றும் இது பயன்பாட்டில் இருக்கிறது. நான்கு பாகமாக இருக்கும் இந்த எண்களில் ஒவ்வொரு எண்ணும் 0 முதல் 255 வரை இருக்கும். அதாவது 0.0.0.0 முதல் 255.255.255.255 வரை மட்டுமே ஐ.பி எண்கள் இருக்கும் ! இது இன்டர்நெட் புரோட்டோகால் வெர்ஷன் 4 (internet protocol version 4 : IpV4 ). சில ஐபி எண்களை நெட்வர்க்கில் சில குறிப்பிட்ட பணிகளுக்கென வைத்திருப்பார்கள். உதாரணமாக 255.255.255.255 எனும் எண்ணை நெட்வர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் எல்லாக் கணினிகளுக்கும் ‘மெசேஜ்’ அனுப்புவது போன்ற பணிகளுக்காய் ஒதுக்கி வைத்திருப்பார்கள்.
ஆனால் புற்றீசல் போல சடசடவென அதிகரித்துக் கொண்டிருக்கும் கணினிகளின் எண்ணிக்கை ஐ.பி எண்களின் தட்டுப்பாட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. சுமார் 430 கோடி தனித்துவமான எண்களை மட்டுமே 32 பிட் வகையில் உருவாக்க முடியும். இதனால் தான் 1995ம் ஆண்டு IPv6 எனப்படும் ஒரு புதிய ஐ.பி அட்ரஸ் முறையை உருவாக்கினார்கள். இது 128 பிட்களால் அமைந்த எண் ! 2000லிருந்து இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஐ,பி எண்கள் உள்ளுக்குள் பைனரி எண்களாக அதாவது வெறும் 0 மற்றும் 1 எனும் எண்களால் அமையும். நமக்கு அது வாசிக்கும் வசதியாக 112.18.78.120 என்பது போல சாதாரண எண்களாக அமையும். இப்படி வரும் எண்கள் ஐ.பி 4 வகையைச் சேர்ந்தவை. ஐபி 6 வகைகள் 2008:db8:0:1111:0:656:9:1 என்பது போல அமையும் !
ஐபி எண்கள் தனித்துவமானவை என்பதை எப்படி உறுதி செய்வது ? ஒரே எண் இரன்டு இடங்களில் வரும் வாய்ப்பு உண்டா ? எனும் பல கேள்விகளுக்கான விடையாக நிற்கிறது ஐ.ஏ.என்.ஏ (IANA) அமைப்பு. இன்டர்நெட் அசைன்ட் நம்பர்ஸ் அதாரிடி ( Internet Assigned Numbers Authority) என்பதன் சுருக்கம் இது. 1988ம் ஆண்டு அமைக்கப்பட்ட இது அமெரிக்க அரசின் கீழ் இயங்குகிறது. உலகிலுள்ள கணினிகளுக்கெல்லாம் தனித்தெனி பெயர் விலாசம் எல்லாம் இருப்பதை உறுதி செய்வது இந்த அமைப்பு தான் !
TCP/IP எனும் நெட்வர்க் முறைதான் இன்றைக்கு பெரும்பாலும் கணினிகளை வலையுடன் இணைக்கின்றன. எல்லா கணினிகளும் இணையத்தோடு இணைந்தே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நாம் அறிந்ததே. சில நிறுவனங்கள் தங்களுக்குள்ளே ஒரு சின்ன வலையமைப்பை உருவாக்கி தனியே இயங்கி வருகின்றன.
ஐபி அட்ரஸ் இரண்டு வகை உண்டு. ஒன்று நிரந்தர ஐபி விலாசம். இதில் உங்கள் கணினிக்கென ஒரு நிரந்தரமான எண் இருக்கும். இன்னொன்று டைனமிக் விலாசம். உங்கள் கணினியின் விலாசம் மாறிக் கொண்டே இருக்கும். நிறுவனங்கள் தங்களுடைய கணினிகளை டைனமிக் விலாசம் மூலம் தான் இணைக்கின்றன. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் இது தான். டி.ஹைச்.சி.பி Dynamic Host Configuration Protocol (DHCP) தான் இந்த டைனமிக் ஐ.பி அட்ரஸ் உருவாக்கி கணினிகளை இணைக்கும் வேலையைச் செய்கின்றன. எந்த முறையிலான விலாசம் ஆனாலும் அது தனித்துவமான எண்ணாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த ஐபி விலாசத்தில் உள்ள “பப்ளிக் ஐபி” பகுதியை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சி மையத்தில் அம்மைந்துள்ள என்.ஐ.சி ( Network Information Center) அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பப்ளிக் ஐபி தான் தான் சர்வதேச அளவில் இணையங்களை இணைக்கும் பணியைச் செய்கிறது.
மொத்தம் ஐந்து பெரிய நெட்வர்க் பிரிவுகள் ஐபி பயன்பாட்டில் உள்ளன. A,B,C,D மற்றும் E என்பவை தான் அந்த ஐந்து பிரிவுகள். இதில் A மிகப்பெரிய நெட்வர்களுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. சுமார் 17 மில்லியன் இணைப்புகளை இந்த நெட்வர்க்கில் இணைக்கலாம். B அதற்கு அடுத்த பிரிவு. இதில் 16 ஆயிரம் நெட்வர்க்கள் இணைக்கலாம், ஒவ்வொரு நெட்வர்க் இணைப்பிலும் 64 ஆயிரம் கணினிகள் இணைக்கலாம். C தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் அலுவல் நெட்வர்க்களில் பயன்படுத்தப்படும். 21 மில்லியன் நெட்வர்களை இதில் இணைக்கலாம். ஒவ்வொரு நெட்வர்க்கிலும் 254 கணினிகளை இணைக்கலாம். D பிரிவு ஆடியோ, வீடியோ கான்ஃபரன்சிங்கிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. E பிரிவு ஆராய்ச்சிகளுக்கானது.
பெரிய நிறுவனங்களில் ஒரு நெட்வர்க்கை சின்னச் சின்ன உள் வலையமைப்பாய்ப் பிரிப்பார்கள். ஒவ்வொரு சின்னச் சின்னக் குழுவையும் “சப்நெட்” (குட்டி வலை) என்று அழைப்பார்கள். இதனால் அந்த சின்னச் சின்னக் குழுக்கள் நெருக்கமாகவும், வேகமாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஏதேனும் நெட்வர்க் பிரச்சினை வந்தால் கூட அந்த ஒரு ஏரியாவை மட்டும் சரி பண்ணினால் போதும் என்பது போன்ற பல வசதிகள் இதில் உண்டு.
உங்களுடைய வீட்டில் இருக்கும் கணினியை நீங்கள் இணையத்தில் சேர்ந்தால், உங்களுடைய இன்டர்நெட் சேவை வழங்குநர் (ISP – Internet Service Provider) தான் உங்களுக்கு ஐபி விலாசம் தருவார். ஒருவேளை நீங்கள் ஒரு ரவுட்டர் வைத்து வயர்லெஸ் மூலம் நான்கைந்து கணினிகளை இணைத்தால் ரவுட்டர் ஒரு ஐபியைப் பெறும். உங்கள் வீட்டிலுள்ள கணினிகள் எல்லாம் சப்நெட் எனும் குட்டி வலையாக மாறி ஐபிகளைப் பெறும். அது சப்நெட் ஆக மாறி சப்நெட்மாஸ்க் எனும் இன்னொரு அடுக்கு அடையாள எண்களையும் பெறும் என்பது தான் இதிலுள்ள விஷயம். இந்த ஐபி விலாசங்களில் இரண்டு பாகம் உண்டு. ஒன்று எந்த வலையமைப்பில் அதாவது நெட்வர்க்கில் இருக்கிறது என்பதை அடையாளம் காண்பது. இன்னொன்று அந்த வலையமைப்பில் எந்த கணினி அந்த குறிப்பிட்ட கணினி என இனம் காண்பது. நிறைய குட்டிக் குட்டி வீடுகள் இருக்கும் அப்பார்ட்மென்டில் கதவு எண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா ? முதலில் வீட்டு விலாசத்தை வந்தடைவார்கள், பிறகு கதவு எண்ணை நோக்கிப் போவார்கள். அந்தமாதிரியான விஷயம் தான் இது.
சப்நெட் மாஸ்க் எண்கள் 255.0.0.0 , 255.255.0.0, 255.255.255.0 என மூன்று வகைகளாக அமைப்பார்கள். 255 என்பது 1111111 எனவும் 0 என்பது 00000000 எனவும் (எட்டு ஒன்று, எட்டு பூச்சியம்) உள்ளே பதிவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காரணம் முதலிலேயே சொன்னது போல, நாம் புத்திசாலி என நினைக்கும் கணினிக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு என்கள் தான் 0 மற்றும் 1 ! இத்தகைய ஒவ்வொரு குட்டி சப்நெட்களிலும் முதல் ஐபி எண் அந்த குட்டி நெட்வர்க்கை அடையாளம் காட்டவே எப்போதும் பயன்படும் என்பது சுவாரஸ்யத் தகவல்.
இந்த ஐபி அட்ரஸ் இல்லாமல் போனால் இணையம் எனும் ஒரு விஷயமே சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல், தகவல் தேடல், சேட்டிங், விளையாட்டு என எல்லா விஷயங்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த ஐபி அட்ரஸ் தான் !
ரகசியமாய் நீங்கள் இணையத்தில் எங்கேயெல்லாம் உலவுகிறீர்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் இந்த ஐபி அட்ரஸைக் கொண்டு மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உங்களை வெலவெலக்க வைக்கலாம் என்பது உங்களுக்கு நான் தரும் கிளைமேக்ஸ் ஷாக் !
ஃ