ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா ?

“கிரடிட் கார்ட் பார்த்திருக்கீங்களா ?” ங்கற மாதிரி அபத்தமான கேள்வியெல்லாம் நான் கேட்க மாட்டேன். உணவு, உடை, உறைவிடம் மாதிரி தேவையான ஒரு விஷயமாக கிரடிட் கார்ட் உருமாறிப் போன விஷயம் நான் அறிந்ததே ! ஆனால் அது சம்பந்தமாக வேறு ஒரு சின்ன கேள்வி !

“உங்களிடம் இருக்கும் கிரடிட் கார்ட், ஸ்மார்ட் கார்டா ? இல்லையா ?” என்பது தான் அந்தக் கேள்வி ! விசா கார்ட் தெரியும், மாஸ்டர் கார்ட் தெரியும். அதென்னப்பா ஸ்மார்ட் கார்ட் என சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. கவலைப் படாதீர்கள், அதைச் சொல்லத் தானே இந்த வாரம் வந்திருக்கிறேன் !

தமிழில் இந்த ஸ்மார்ட் கார்டை, நுண்ணறி அட்டை என்று அழைக்கிறார்கள். சில்லு அட்டை, ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று அட்டை என்றெல்லாம் இதற்குச் செல்லப் பெயர்கள் உண்டு. நீங்கள் எந்தப் பெயரை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு பிரச்சினை இல்லை.

ஒரு சாதாரண கிரடிட் கார்ட் அளவிலும், அசப்பிலும் தான் ஸ்மார்ட் கார்ட் இருக்கும். ஆனால் அந்த கார்டில் ஒரு சின்ன சிம்கார்ட் போன்ற வடிவத்தில் ஒரு தங்க நிற சில்லு இருக்கும். இதில் பொதுவாக ஒரு மைக்ரோபிராசசர் இணைக்கப்பட்டிருக்கும். இப்போ உங்க கிரடிட் கார்டை எடுத்துப் பாருங்கள். அதில் இந்த தங்க நிற சிம் சாதனம் போன்றது இருந்தால் உங்களிடம் இருப்பது ஸ்மார்ட் கார்ட் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அந்த தங்கக் கலர் சின்ன கருவி தான் உங்களோட சாதாரண கார்டை ஸ்மார்ட் கார்ட் ஆக மாற்றித் தருகிறது. இதில் தகவல்களைச் சேமித்தும் வைக்கலாம், சேமிக்கப்பட்டிருப்பதை வாசித்தும் பார்க்கலாம். இந்த குட்டியூண்டு அமைப்புக்குள் 8 கிலோபைட் ரேம் (RAM), 346 கிலோபைட் ரோம்(ROM), 16 பிட் மைக்ரோபிராசசர்(Microprocessor), 256 கிலோபைட் புரோக்ராம் பண்ணக்கூடிய ரோம்(Programmable ROM) என பல விஷயங்கள் உண்டு. இவையெல்லாம் தான் உங்கள் கார்டின் செயல்பாடுகளை கவனிக்கின்றன.

இது தரக்கூடிய முதல் வசதி பாதுகாப்பு. ஒரு சின்ன சிலிம்மர் கருவியை வைத்து உங்கள் கிரடிட் கார்ட் தகவல்களையெல்லாம் திருடிச் செல்லும் தில்லாலங்கடி வேலை இதில் அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. உங்கள் கார்டையே அலேக்காகத் தூக்கிக் கொண்டு போனால் தான் உண்டு ! அதனால் தான் நிறுவனங்கள் ஸ்மார்ட் கார்டை நோக்கி நடைபயில்கின்றன.

ஸ்மார்ட் கார்டைப் பொறுத்தவரை ராஜா இங்கிலாந்து தேசம் தான். கிரடிட் கார்ட் நம்ம ஊருக்கு வருவதற்கு முன்பே அவர்கள் ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்தத் துவங்கியவர்கள். சாதாரண கார்ட்கள் பெரும்பாலும் அங்கே இல்லை என்றே சொல்லலாம். நீங்கள் இங்கிலாந்துக்குச் செல்லும் போது உங்களுடைய சாதாரண கார்ட்கள் பயன்படாமல் போயிருந்தால் அதன் காரணமும் இது தான் !

ஜெர்மனியிலுள்ள எலக்ட்ரிக்கல் எஞ்சினியரான ஹெல்மெட் குரோடெப்புக்கும், அவரோடு வேலை செய்த நண்பரான ஜர்கென் டெத்லாப்க்கும் இந்த நேரத்தில் ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்வோம். காரணம், இந்த விஷயத்துக்கான விதையை 1968ம் ஆண்டிலேயே போட்டது இவர்கள் தான். அதற்கான காப்புரிமை அவர்களுக்கு 1982ல் கிடைத்தது ! சுடச்சுட அடுத்த ஆண்டே பிரான்ஸ் நாட்டில் கட்டணத் தொலைபேசிகளில் ஸ்மார்ட் கார்ட் பணம் செலுத்தப் பயன்பட்டது !

அந்தக் காலகட்டத்தில் பிரான்சிலுள்ள  ஆராய்ச்சியாளர் ரோலன்ட் மொரினோவுக்கு ‘மெமரி கார்ட்’ சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கார்ட் வடிவமைக்கும் சிந்தனை இருந்தது. அதற்குரிய காப்புரிமையையும் அவர் 1974ல் வாங்கி வைத்திருந்தார். அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் உலக வரலாற்றிலேயே முதன் முறையாக என அழைக்கப்படும் “மைக்ரோ பிராசசர்” சார்ந்த ஸ்மார்ட் கார்ட் உருவானது. அந்த பெருமையை அள்ளிக் கொண்டு போனவர் மைக்கேல் யூகன்.

அது படிப்படியாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. இப்படி ஆளாளுக்கு குளத்தில் இறங்கி மீன் பிடிப்பது சரிவராது என மூன்று முன்னணி நிறுவனங்கள் ஒன்று கூடின. ஒரு பொதுப்படையான விதி வேண்டும் என்பதே அவர்களுடைய சிந்தனையாய் இருந்தது. அந்த நிறுவனங்கள், விசா, மாஸ்டர்கார்ட் மற்றும் யூரோபே. இ.எம்.வி (EMV) என இந்த நிறுவனங்களின் சங்கமத்தை அழைக்கிறார்கள். இதன் முதல் வடிவம் 1994ல் வெளியானது ! ஸ்மார்ட் கார்ட்களின் பொதுவான வரையறை உருவான வரலாறு இது!

இன்றைய ஸ்மார்ட் கார்ட்களை இரண்டு பெரிய பிரிவுகளுக்குள் அடக்கிறார்கள். தொடர்பு உடைய நுண்ணறி அட்டை ( contact smart cards ) மற்றும் தொடற்பற்ற நுண்ணறி அட்டை ( Contactless Smart Card) என்பதே அந்த இரண்டு பிரிவுகள். பெயரைப் பார்த்தாலே புரியும். தொடர்பு உடைய ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்த அதை இன்னொரு ரீடர் கருவியில் தேய்த்தோ, சொருகியோ தான் செயல்பட வைக்க முடியும். தொடர்பற்ற ஸ்மார்ட் கார்ட் அப்படியல்ல. போகிற போக்கில் சும்மா கார்டை எடுத்துக் காட்டினாலே வேலை செய்யும். பெரிய நிறுவனங்களில் கதவுகளைத் திறக்க “கார்டைக் காட்டினால் போதும்” எனும் வகையில் ஒரு அட்டை கொடுப்பார்கள். அவை இந்த தொடர்பற்ற ஸ்மார்ட் கார்டின் ஒரு உதாரணம் !

காண்டாக்ட் ஸ்மார்ட் கார்ட்களில் அந்த ‘தொடர்பை’ உருவாக்குவது சிம் கார்ட் வடிவத்தில் இருக்கும் அந்த சுமார் ஒரு சென்டீ மீட்டர் சதுர அளவு தான். இது தான் நம்முடைய கார்ட்க்கும், மற்ற கருவிகளுக்கும் இடையேயான தொடர்பை ஆரம்பித்து வைக்கும். அந்த தொடர்பை உருவாக்கத் தேவையான சக்தியை இது கார்ட் ரீடர் கருவியில் இருந்தே பெறுகிறது !

ஒருவகையில் ஸ்மார்ட் கார்ட் பரிமாற்றங்கள் அதிக வேகம் உடையவை. சாதாரண கிரடிட் கார்ட்கள் கார்ட் ரீடரில் பயன்படுத்தும் போது வெறும் கார்ட் எண் போன்ற தகவல்களே கிடைக்கும். அதைக் கொண்டு வங்கியில் உங்களுடைய அடையாளம் உறுதிப் படுத்தல், வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் என சர்வமும் கணினியில் தான் நடக்கும். ஒவ்வொன்றுக்கும் சில மைக்ரோ வினாடிகள் தேவைப்படும். ஆனால் ஸ்மார்ட் கார்டைப் பொறுத்தவரை முதல் கட்ட உறுதிப் படுத்தல்களை ஸ்மார்ட் கார்டிலேயே முடித்துக் கொள்ளலாம் என்பது ஒரு நவீனம் ! நாம் பயன்படுத்தும் அனைத்து கிரடிட் கார்ட் வகைகளும் இந்த கான்டாக்ட் ஸ்மார்ட் கார்ட் வகையைச் சேர்ந்தது தான்.

உங்களுடைய ஸ்மார்ட் கார்டில் இருக்கும் அந்த சின்ன தங்க நிற சதுரப் பாகம் அச்சு அசலாக சிம் கார்டைப் போலவே இருக்கிறது இல்லையா ? உண்மையில் சிம் கார்டுக்கும், இந்த ஸ்மார்ட் கார்ட் க்கும் ஒரே மாதிரியான சிப் தான். ஆனால் ஒன்றைத் தூக்கி இன்னொன்றில் போட்டால் வேலை செய்யாது. காரணம் இரண்டுக்குமான மென்பொருள் கட்டமைப்புகள் முற்றிலும் வித்தியாசமானது !

சரி, இரண்டாவது வகை கார்ட்க்கு வருவோம். இவை தொடர்பற்ற ஸ்மார்ட் கார்ட். இதிலும் சக்தி இருக்காது. ஆனால் கார்ட் ரீடரைத் தொடவேண்டிய அவசியமும் இல்லை. அப்படியானால் அந்த பவர் எப்படி கிடைக்கும் ? அதற்குத் தான் ஆர்.எஃப்.இன்டக்‌ஷன் (RF Induction Technology) டெக்னாலஜி பயன்படுகிறது. இது ரேடியோ ஒலி அலைகளின் மூலமாக மின் தூண்டல் நிகழ்த்தும் தொழில்நுட்பம் என சுருக்கமாகச் சொல்லலாம். ஒலி அலைகள் மூலமாகச் செயல்படுவதால் இதில் “தொடுதல்” தேவைப்படுவதில்லை. சும்மா பர்சுக்குள் கார்டை வைத்துக்கொண்டு பர்ஸைத் தூக்கிக் காட்டினாலே போதும் ! ஸ்மார்ட் கார்ட் செயல்படும் !

கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், பெட்ரோல் கார்ட், டிராவல் கார்ட், மெடிகல் கார்ட், டெலிவிஷன் கார்ட், ஐடி கார்ட், அனுமதி அட்டை, போன் கார்ட்  என பல்வேறு ஏரியாக்களில் இன்றைக்கு ஸ்மார்ட் கார்ட்கள் நுழைந்து விட்டன. வெளிநாடுகளில் இது ஒரு சின்ன பர்ஸாகவும் பயன்படுகிறது. இதில் பணத்தைப் ரீசார்ஜ் செய்து அந்த கார்டைப் பயன்படுத்தி ஆளில்லாத பார்க்கிங் நிலையம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இது ஒரு சிம்பிள் தொழில் நுட்பம். உங்கள் வங்கிக்கெல்லாம் தகவல் அனுப்பி தகராறு செய்ய வேண்டிய தேவையே இதில் இல்லை.

தங்கக் கலரில் கோடு கோடாக இருக்கும் ஸ்மார்ட் கார்டைப் பார்க்கும் போது என்ன நினைப்பீர்கள் ? ஏதோ அவங்களுக்குப் பிடித்த ஒரு டிசைன் போட்டிருக்கிறார்கள் என்று தானே ? இல்லை ! அந்த டிசைனில் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் வேலை உண்டு. சகட்டு மேனிக்கு நம் விருப்பம் போல கட்டம் கட்டி ஸ்மார்ட் கார்ட் தயாராக்கவும் முடியாது. மென்பொருள் கட்டமைப்பு, கார்ட் ஸ்டான்டர்ட் என பல்வேறு வகைகளுக்கு உட்பட்டு தான் இந்த வடிவம் இருக்கும்.

உதாரணமாக, இந்த ஸ்மார்ட் கார்டில் எட்டு பாகங்கள் உண்டு. C1, C2, C3 என C8 வரை வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வேலையைச் செய்யும். C1 என்பது பவர் சப்ளைக்கானது. சக்தியை ரீடரில் இருந்தோ, ரேடியோ அலைகளிலிருந்தோ எடுக்கும் பாகம் இது தான். C2 என்பது ரீசெட் சிக்னல் என்பார்கள். அதாவது சிலேட்டை அழித்து சுத்தம் செய்வது போல, பழைய டிரான்சாக்‌ஷன் மிச்சம் மீதிகளை அழித்து புதிய ஒரு பரிமாற்றத்துக்குத் தயாராக்கும் பகுதி ! மூன்றாவது பாகம் ஒரு கடிகாரப் பணியைச் செய்யும். உங்களுடைய கார்ட் பரிமாற்றம் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது ? தகவல் எப்போது அனுப்பப்பட்டது? எப்போது பெறப்பட்டது? போன்ற எல்லா டைம் சார்ந்த சங்கதிகளும் இந்த C3 ல் அடக்கம் ! மின்சார விஷயங்களில் “எர்த்” பற்றித் தெரியும் தானே. ஏறக்குறைய அதே பணியைச் செய்யும் C5 GND என அழைக்கப்படுகிறது. C6 மென்பொருளுக்கானது. C7 பகுதி பெறுதல், அனுப்புதல் ( Input and Output) வேலைகளுக்கானது. C4 மற்றும் C8 பகுதிகள் பிற இணைப்புகளுக்கானவை.

தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதைப் பற்றித் தெரிந்திருப்பீர்கள். அதை ஆங்கிலத்தில் கிரிப்டோகிராஃபி (cryptography) என்பார்கள். அதாவது ஒரு தகவலை அதே போல அனுப்பாமல் குண்டக்க மண்டக்க என மாற்றி அனுப்புவது. விஷயம் தெரிந்த மென்பொருட்கள் மட்டுமே அதை மீண்டும் தகவலாக மாற்ற முடியும். படங்கள், வீடியோக்கள் போன்றவற்றில் தீவிரவாதத் தகவல்களை மறைத்து வைத்து அனுப்பும் செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன அல்லவா ? அதெல்லாம் கூட இந்த கிரிப்டோகிராஃபி வகையைச் சேர்ந்தது தான் !

ஸ்மார்ட் கார்ட் வகைகளில் பயன்படுத்தப்படும்தைந்த பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை பப்ளிக் கீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Public Key Infrastructure) என்கின்றனர். மென் அடையாளம் காணுதல் தான் இதன் அடிப்படை. டிஜிடல் கையொப்பம், டெஸ் தகவல் பரிமாற்றம் என இதில் பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தனிநபருக்கான தேசிய அடையாள அட்டைகள் போன்றவை ஸ்மார்ட் கார்ட் மயமாகும் நிலை விரைவில் வரும். அப்போது தனிநபர் விவரக் குறிப்புகளெல்லாம் சின்ன எலக்ட்ரானிக் சில்லுக்குள் சைலண்டாக அமர்ந்து நம்மை வியக்க வைக்கும் !

ஸ்மார்ட்டான விஷயம் தான் இல்லையா ?

Thanks : Daily Thanthi, Computer Jaalam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s