திரு.விக்டர் கேய்ஸ் க்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு இந்தக் கட்டுரையைத் துவங்குவது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா, 1941ம் ஆண்டு ஜூலை 31ம் ஆண்டு பிறந்த இவர் தான் “வை-ஃபை’ யின் தந்தை என்று செல்லமாய் அழைக்கப்படுகிறார்.
வை-ஃபை பற்றிய முன்னுரை எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளை வயர் இல்லாமல் இணைத்து தகவல்களைப் பரிமாறும் முறை தான் இந்த வை-ஃபை ! இதைச் சாத்தியமாக்கித் தருவது ரேடியோ அலைகள் ! “ கண்ணம்மாபேட்டை ஏழாவது தெருவில ஒரு ஆக்சிடன்ட் ஓவர்” என ஒரு காலத்தில் ஓவர்-ஓவராய் பேசிக் கொண்டிருந்த வாக்கி டாக்கி தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம் !
IEEE802.11 என்பது இதன் தரக் கட்டுப்பாட்டு அடையாளம். ஆனால் வை-ஃபைக்கு மட்டுமேயான ஸ்பெஷல் அடையாளமல்ல. இந்த வை-ஃபை காப்பீட்டைக் கைவசம் வைத்திருக்கும் கர்வத்துக்குரியவர்கள் வை-ஃபை அலையன்ஸ் நிறுவனத்தினர் என்பதை எதற்கும் மனதில் குறித்துக் கொள்ளுங்கள். வை-ஃபையை வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வர்க் WLAN ( Wireless Local Area Network) எனவும் அழைக்கிறார்கள். துவக்க காலத்தில் இந்த வை-ஃபை வேவ்லேன் (WaveLan) என்று தான் அழைக்கப்பட்டது.
கணினிகள், மொபைல்கள், இன்னபிற எலக்ட்ரானிக் கருவிகள் இன்டர்நெட்டில் இணைந்து கொள்வதற்கு தான் இன்றைக்கு வை-ஃபை பெருமளவில் பயன்படுகிறது. ஆனால் இந்த வயர்லெஸ் எல்லை பெரிய அளவில் இருப்பதில்லை. சாதாரணமாக இவை 20 மீட்டர் எல்லைக்குள்ளே தான் இயங்கும். வயர்லெஸ் வசதியை உருவாக்கும் ஒவ்வொரு அனுமதிப் புள்ளியின் (அக்ஸஸ் பாயின்ட்) எல்லையும் இவ்வளவு தான்.
வை-ஃபை பயன்படுத்தும் கருவிகளையெல்லாம் இணைத்துக் கட்டும் புள்ளியை வயர்லெஸ் அக்ஸஸ் பாயின்ட் என்பார்கள். (WAP – Wireless Access Point). வயர்லெஸ் இணைப்பு வசதி கருவியில் இல்லாத பட்சத்தில் அது யூஎஸ்பி, கார்ட் போன்றவற்றால் இணைப்பை உருவாக்குவதுண்டு. இவற்றை வயர்லெஸ் அடாப்டர்கள் (Wireless Adaptor) என்கிறோம். வயர்லெஸ் இணைப்பை பிரித்து கருவிகளுக்கு அனுப்பும் முக்கியமான பணியைச் செய்பவற்றை வயர்லெஸ் ரவுட்டர்கள் என்கிறோம். ஒரு வயர்லெஸ் இனைப்புடன், இன்னொரு வயர் இணைப்பும் தொடர்பு கொள்ள முடியும். இதை “நெட்வர்க் பிரிட்ஸ் கணெக்ஷன்” என்பார்கள்.
பொதுவாக ஒரு அக்ஸஸ் பாயின்ட் எல்லையில் முப்பது கருவிகளை வயர்லெஸ் மூலம் இணைக்கலாம் என்பது கணக்கு. அப்புறம் எப்படி பெரிய பெரிய விமான நிலையங்களிலெல்லாம் முழுக்க முழுக்க வயர்லெஸ் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் சிம்பிள் ! அதற்கு அவர்கள் நிறைய அக்ஸஸ் புள்ளிகளைப் பயன்படுத்துவார்கள்.
ஒவ்வொரு 20 மீட்டர் சுற்றளவுக்கும் ஒவ்வொரு பாயின்ட் வைத்து பல மைல்கள் தூரத்துக்கு இந்த எல்லையை விரிவாக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம். அக்ஸஸ் பாயின்ட் என்பதை ஹாட் ஸ்பாட் என்றும் அழைப்பதுண்டு. ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்குத் தாவும் போது இந்த இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை. அப்படி துண்டிக்கப்படாமல் இருக்க கொஞ்சம் ஒன்றன் மேல் ஒன்றாக இதை நிறுவுவார்கள்.
ஒட்டுமொத்தமான வயர்லெஸ் அமைப்பை மூன்று விதமாக அமைக்கிறார்கள். ஒன்று அக்ஸஸ் பாயின்ட் மூலம் கருவிகளை இணைப்பது. இதை ஏ.பி (AP – Based ) வகை என்கிறார்கள். ஒரு ரவுட்டரில் இருந்து சுவிட்ச் மூலமாக பல்வேறு அக்ஸஸ் பாயின்ட்கள், அதற்கேற்ப கருவிகள் என இதன் அமைப்பு இருக்கும்.
இரண்டாவது வகை பீர் – டு- பீர் (Peer – to – Peer ) எனப்படும். இந்த வகையைச் செயல்படுத்த அக்ஸஸ் பாயின்ட்கள் தேவையில்லை. ஒரு எல்லைக்குள் இருக்கும் கருவிகள் எல்லாம் அந்த எல்லையில் இருக்கும் வயர்லெஸ் அமைப்பில் தானாகவே இணைந்து கொள்ள முடியும் என்பது இதன் வசதி. கொஞ்சம் எளிதானது, செலவும் கம்மி.
பாயின்ட் – டு – மல்டி பாயின்ட் (point to multi point) என்பது மூன்றாவது முறை. ஒரு கட்டிடத்திலுள்ள லோக்கல் ஏரியா நெட்வர்க் (LAN) இன்னொரு கட்டிடத்திலுள்ள லோக்கல் ஏரியா நெட்வர்க்குடன் கம்பி இல்லாமலேயே இணையும் நுட்பம் இது. இரண்டு கட்டிடங்களிலும் வயர் இணைக்கப்பட்ட வலையமைப்பு இருக்கும். ஆனால் இரண்டுக்கும் இடையேயான இணைப்பு வயர்லெஸ் ஆக இருக்கும் என்பது தான் இந்த அமைப்பு.
வயர்லெஸ் நெட்வர்க் களின் தலைவலி அதன் பாதுகாப்புப் பிரச்சினையில் தான் இருக்கிறது. பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்நுழைய விரும்பும் ஏகப்பட்ட டெக்னாலகி வில்லன்கள் உண்டு. அவர்கள் எதை எப்படி உடைக்கலாம் என கண்ணில் தொழிழ்நுட்பம் ஊற்றிக் காத்திருப்பார்கள். அவர்களிடமிருந்து தப்ப பல்வேறு தொழில் நுட்ப மாற்றங்களை வை-ஃபை சந்தித்து வந்திருக்கிறது !. முதலில் WEP (Wired Equivalent privacy) எனும் தொழில் நுட்பத்தை வை-ஃபை பயன்படுத்தியது. அது ரொம்ப சிம்பிளாக உடைக்கக் கூடிய பாதுகாப்பாய் மாறிப் போனது.
இப்போது WPA மற்றும் அதன் அட்வான்ஸ் வடிவங்கள் வந்து விட்டன. WiFi Protected access என்பதன் சுருக்கம் தான் இந்த WPA. பல அடுக்குப் பாதுகாப்புகள் இப்போது வந்து விட்டன. தகவலை சங்கேத மொழியில் மாற்றுவது, கடவுச் சொல் பயன்படுத்துவது இப்படி. தொழில்நுட்பங்கள் வளர வளர அது தொடர்பான நவீனங்களும் புதுப் புது அவதாரங்களை எடுத்துக் கொள்வது ஆச்சரியமில்லை தானே !
சரி, இந்த வை-ஃபை இணைப்பு, அதற்கான வசதிகளை உருவாக்குவதெல்லாம் நிறுவனங்களுக்குச் சரிப்பட்ட விஷயம். ஒருவேளை உங்கள் வீட்டில் ஒரு பிரத்யேக வை-ஃபை இணைப்பு வைக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் ? என்ன செய்வது ? இப்படி ஒரு கேள்வியை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பியிருக்கிறார்கள் நொவாடெல் வயர்லெஸ் நிறுவனத்தினர். அவர்களுடைய அட்டகாசமான தயாரிப்பு தான் மை-ஃபை (MiFi). 2009ம் ஆண்டு இது அறிமுகமானது ! மை வை-ஃபை( My WiFi) அதாவது என்னுடைய சொந்த வயர்லெஸ் இணைப்பு என்பதன் சுருக் மொழி தான் மை-ஃபை என்பது !
இது இயங்கும் விதம் ரொம்ப சிம்பிள். இதை ஒரு மொபைல் போனுடன் இணைக்க வேண்டியது தான் ஒரே வேலை. மொபைலில் டேட்டா பிளான் உட்பட்ட அத்தியாவசிய சங்கதிகள் இருக்க வேண்டியது அவசியம். மொபைலை இந்த சின்னக் கருவியுடன் இணைத்து விட்டால் உங்களுடைய வீட்டில் உங்களுக்கே உங்களுக்கான வயர்லெஸ் தயார் ! ஒரு ஐந்து கருவிகளை அந்த வயர்லெஸ் இணைப்பு மூலம் நீங்கள் இணைக்க முடியும். வீட்டிலுள்ளவர்களுக்கான பிரத்யேக வயர்லெஸ் இணைப்பு உருவாக்கத்துக்கு இந்த வழி ரொம்ப எளிதானது.
அமெரிக்காவில் 2009ம் ஆண்டு மே மாதம் அறிமுகமான மை-ஃபை இன்று நெதர்லாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், எகிப்து ஸ்பெயின், கனடா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் மிகப்பிரசித்தம். இதிலும் ஒவ்வோர் நவீனப் படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சமீபத்திய வரவு 4ஜி வசதியுள்ள மை- ஃபை இணைப்பு.
பிராட்பேண்ட் வசதியைப் பொறுத்தவரை வயர்லெஸ் வசதி ஏற்கனவே நமது நாட்டிலும் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பது நாம் அறிந்ததே. இதன் காரணகர்த்தா, தென்கொரியாவிலுள்ள டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உருவாக்கிய மைப்ரோ எனும் கருவி என்பதையும் அறிந்து வைத்திருப்பது சுவாரஸ்யமானது !
துவக்க காலத்தில் இந்த வை-ஃபையினால் உலகமே முழுமையாய் வயர்லெஸ் இணைப்பு பெற்று விடும் என நினைத்தார்கள். அந்த மாற்றம் அத்தனை விரைவாக நடக்கவில்லை. கலிபோர்னியாவிலுள்ள சன்னிவேல், மினிசோடாவிலுள்ள மினியாபோலிஸ் போன்ற அமெரிக்க நகரங்கள் முதல் பெருமையைப் பெற்றுக் கொண்டன. அமெரிக்காவுக்கு வெளியே ஜெருசலேம் போன்ற இடங்கள் போட்டியில் வெல்ல, நமது இந்தியாவில் மைசூர் 2004ம் ஆண்டில் இந்தியாவின் முதல் வயர்லெஸ் இணைப்பு நகரம் எனும் பெருமையையும் பெற்றுக் கொண்டது ! லண்டன் உட்பட பல நகரங்கள் முழுக்க வயர்லெஸ் இணைப்பு கொடுக்கும் திட்டங்களை இன்னும் செயல்படுத்தும் முனைப்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரு சிக்கல் என்னவென்றால் ரொம்ப அதிகம் பேர் பயன்படுத்தும் இடமாக இருந்தாலோ, ரொம்ப அதிக ரேடியோ அலைகள் அலையும் இடமாக இருந்தாலோ இந்த வயர்லெஸ் அமைப்பு அதிக வேகமுடையதாக இருப்பதில்லை. எனவே பெரிய அப்பார்ட்மென்ட், நெரிசலான நகரங்கள் போன்ற இடங்களில் இதன் செயல்திறன் குறைந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. 2.4 GHz மற்றும் 5 GHz எனும் இரண்டு ரேடியோ அலை பிரீக்வன்ஸியில் இது வேலை செய்தாலும் முந்தையதற்குத் தான் கவரேஜ் அதிகம் !
எந்த விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் விதி. இந்த விஷயத்திலும் அது இல்லாமல் போகவில்லை. வை-ஃபையினால் ஊரு முழுக்க எலக்ட்ரோ மேக்னட்டிக் அதாவது மின்காந்த அலைகளின் ஆதிக்கம் தான். அதனால் உடல்நலனில் ஏகப்பட்ட பாதிப்புகள் நேர்கின்றன என பலரும் கூக்குரல் போட்டார்கள். சுமார் 725 பேர் தங்களுக்கு “எலக்ட்ரோமேக்னட்டிக் ஹைப்பர்சென்சிடிவிடி” இருப்பதாகப் புகார் கூறியிருந்தார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக இவர்களுக்கு வை-ஃபை தான் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நிரூபிக்க முடியவில்லை.
ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த சில ஆய்வுகள் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வை உருவாக்கியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக ரொம்ப நேரம் வை-ஃபை கனெக்ஷனுடன் மடியிலேயே வைத்து வேலை பார்த்தால் ஆண்களின் ஆண்மைக்கே ஆபத்து என ஒரு ஆராய்ச்சி ஏதேன்ஸ் பல்கலைக்கழகத்தில் வெளியாகி வெலவெலக்க வைத்தது. இன்னொரு ஆராய்ச்சி ஆண்களுக்கு ஞாபக சக்தியை இது குறைக்கும் என மிரட்டியது. ஆனால் உலக நலவாழ்வு விஷயத்தில் கருத்துகளை அறுதியிட்டும் கூறும் இரண்டு முக்கியமான அமைப்புகள் இதை மறுத்திருப்பது ஆறுதல் செய்தி.
அமெரிக்காவிலுள்ள உலக நலவாழ்வு நிறுவனம் (WHO – World health organization) குறைந்த அளவிலான மின்காந்த அலைகளையே வை-ஃபை வெளியிடும் எனவே பயப்படத் தேவையில்லை என்றது. யூ.கேவிலுள்ள ஹெல்த் புரட்டக்ஷன் ஏஜென்சியும் அதை ஆதரித்தது. ஒரு வருடம் முழுவதும் வை-ஃபை பயன்படுத்துவதும், 20 நிமிடம் மொபைலில் பேசுவதும் ஒரே அளவிலான மின்காந்த அலைகளின் பாதிப்பையே ஏற்படுத்தும் என அந்த அமைப்பு சொன்னது.
இணையம் இல்லாத வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்க முடியாது எனும் சூழலை நோக்கி உலகம் நடை போடுகிறது. நவீனங்கள் எல்லாமே இன்று வை-ஃபை அல்லது, 3ஜி போன்ற வசதிகளுடன் தான் வருகின்றன. எனவே வயர்லெஸ் நுட்பமும் அசைக்க முடியாத வலுவான இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் வை-ஃபை குறித்து இவ்வளவேனும் நீங்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது தான் இல்லையா ?
ஃ
Thanks : Daily Thanthi, Computer Jaalam