தொடர்ச்சியான வளர்ச்சியும் முன்னேற்றமும் நம்மிடம் இல்லையென்றால், வளர்ச்சி, சாதனை, வெற்றி போன்ற வார்த்தைகளால் எந்த பயனும் இல்லை –
பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.
ஒரு குழந்தை பிறக்கும் போது அழுகையுடன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. பிறகு குப்புறப் படுக்கிறது, தவழ்கிறது, எழும்புகிறது, தத்தக்க பித்தக்க என நடக்கிறது, ஓடுகிறது என அதன் வளர்ச்சி படிப்படியாய் இருக்கிறது. எல்கேஜியில் ஆரம்பித்து கல்வியும் படிப்படியாய் அடுத்தடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியான வளர்ச்சி இல்லாத குழந்தை ஊனமுற்ற குழந்தையாக, பரிதாபத்துக்குரிய பார்வைகளை சம்பாதிக்கும். தொடர்ச்சியான முன்னேற்றம் இல்லாத கல்வி, தோல்விகளையும், அறிவுக் குறைவையும் கற்றுக் கொள்ளும்.
தொடர்ந்த வளர்ச்சி என்பது ஒவ்வொரு விஷயத்திலும் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தக்க இடத்தில் அதைப் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். சிலர் நிர்வாகத்தில் தங்களுடைய முன்னேற்றத்தை கணக்கிடுகிறார்கள். சிலர் பிஸினஸில் முன்னேற்றம் நாடுகிறார்கள். சிலர் அன்பிலும், உறவு வளர்ச்சியிலும் அடுத்தடுத்த நிலைகளுக்குத் தாவுகின்றனர். இன்னும் சிலர் ஆன்மீகத்தில் வளர்ந்து கடவுளை நெருங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
எது எப்படியோ, சீரான வளர்ச்சி என்பது மனிதனுடைய அடிப்படைத் தேவை. அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அந்த வளர்ச்சியை எப்படி அடைகிறோம், என்னென்ன முயற்சிகள் எடுக்கிறோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவோம் !
இரண்டும் இரண்டும் நான்கு என்பதை ஒரு எல்கேஜி குழந்தை சொல்லும்போது ரசிப்போம். பாராட்டுவோம். அதையே ஒரு பத்து வயதுப் பையன் மழலை மாறாமல் “ரெண்டும் ரெண்டும் நாலு” என்று சொன்னால் ரசிப்போமா ? அடடா வளர்ச்சி இல்லையே என்ன பரிதாபப்படத் தானே செய்வோம்.
முன்னேற்றம் என்பது சீரானதாக இருக்க வேண்டும். அலுவலகங்களில், குடும்ப உறவுகளில் இவை நிச்சயம் படிப்படியாய் முன்னோக்கிச் செல்ல வேண்டும். வெறுமனே இயக்கம் மட்டும் இருப்பது வெற்றிக்கான அறிகுறி அல்ல. பின்னோக்கிச் செல்லும் வாகனம் கூட “இயக்கத்தில்” தான் இருக்கும். ஆனால் முன்னேற்றத்தில் அல்ல.
முன்னேற வேண்டுமெனில் முதலில் இருக்க வேண்டிய விஷயம் ஆர்வம். “முன்னேற வேண்டும்” எனும் ஆர்வம். முக்கியமாக, நியாயமான வழியில் முன்னேற வேண்டும் எனும் ஆர்வமே முக்கியம். நேர்மையற்ற வழியில் வருவதாகத் தோன்றும் முன்னேற்றங்கள் உண்மையில் முன்னேற்றங்கள் அல்ல.
கூர் தீட்டப்பட்டுக் கொண்டே இருந்தால் தான் முன்னேற்றம் கிடைக்கும். நம்மிடம் இருக்கும் திறமைகள் என்ன ? அடுத்த நிலைக்குச் செல்ல என்னென்ன திறமைகள் தேவை என்பதை உணர்ந்து அதைக் கூர்தீட்டும் முயற்சியில் படிப்படியாய் இறங்க வேண்டும்.
மரம் வெட்டும் போட்டி ஒன்று நடந்தது. இரண்டு பலவான்களுக்கு இடையேயான போட்டி. இருவருமே சம பலம் படைத்தவர்கள். ஒரு நாள் காலை முதல் மாலை வரை மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும். யார் அதிக மரங்களை வெட்டுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப் படுவார்கள்.
போட்டி ஆரம்பமானது. ஒருவர் கடின உழைப்பாளி. ஓய்வே இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டே இருந்தார். மற்றவரோ பதட்டமடையவில்லை. மரங்களை வெட்டினார். ஓய்வெடுத்தார். மதிய உணவு சாப்பிட்டார். மீண்டும் மரங்களை வெட்டினார். கடைசியில் இவரே வெற்றியும் பெற்றார்.
கடின உழைப்பாளிக்கு ஒரே ஆச்சரியம். “நான் இடைவேளையே இல்லாமல் கடுமையாக உழைத்தான். என்னோடு ஒப்பிட்டால் நீ கொஞ்சம் குறைவாகத் தான் உழைத்தாய். எப்படி முதல் பரிசு பெற்றாய் ?” வியப்பாகக் கேட்டார் அவர்.
வென்றவர் சொன்னார். “நீ ஓய்வெடுக்காமல் உழைத்தாய். உன்னுடைய கோடரியின் முனை மழுங்கிக் கொண்டே வந்தது. நான் ஓய்வெடுத்தேன். மதிய உணவு சாப்பிட்டேன், அப்போதெல்லாம் எனது கோடரியை கூர் தீட்டினேன். அதனால் தான் வென்றேன்”
கூர் தீட்டப்படும் புத்தி மாற்றத்துக்கான முக்கியமான தேவை. அதுவே அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நம்மை நடத்தும்.
உறவுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாக முன்னேறுவதே ஆனந்தமான வாழ்க்கையின் அடிப்படை. நாம் தவறுகின்ற முக்கியமான இடமும் அது தான். திருமண காலத்தில் தம்பதியர் செம்புலப் பெயல் நீராய் இருப்பார்கள். தேனிலாக் காலங்கள் முடிந்து வாழ்வின் யதார்த்தங்களுக்குள் வரும்போது அவர்களுக்கு இடையே அன்பானது வறண்டு போன வைகையைப் போல துயரமாய் வடியும். தினம் தோறும் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் குடும்ப வாழ்க்கையின் அடிப்படை. ஆனால் இங்கே குறைகிறது.
சில குடும்பங்கள் அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அன்பில் வளர்ச்சியடைகிறார்கள். புரிதலில் முதிர்ச்சியடைகிறார்கள். ஈகோ இறக்கும் இடத்தில் குடும்ப வாழ்க்கையின் ஆனந்த முளை நிச்சயம் முளைக்கும் ! தைரியம் என்பது வீரம் அல்ல ! மன உறுதி ! அதை உண்மை சொல்வதன் மூலமாகவும் வெளிப்படுத்தி விட முடியும் ! அத்தகைய தம்பதியர் தான் முதுமையில் கூட ஆதரவுக் கரம் கொடுத்து ஆனந்த நடை பயில்கிறார்கள். இந்த வளர்ச்சி தான் தொடர்ச்சியான வளர்ச்சி. இது தான் ஆனந்தத்தை குடும்பங்களில் இறக்குமதி செய்யும்.
தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு நான்கு படிகளை வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முதலாவது, முன்னேற்றத்துக்கான விஷயங்களைக் கண்டுபிடிப்பது.
இரண்டாவது, அதை அடைவதற்காக சின்னச் சின்ன இலக்குகளை நிர்ணயிப்பது.
மூன்றாவது, அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க ஒரு திட்டம் வகுத்துச் செயல்படுவது
நான்காவது, அது சரியான பாதையில் செல்கிறதா என்பதைப் பரிசீலிப்பது !
இந்த நான்கு விஷயங்களையும் மிக கவனமாகக் கைக்கொண்டால் தொடர்ச்சியான வளர்ச்சி என்பது நிச்சயம் சாத்தியமாகும்.
நினைவில் கொள்ளுங்கள். அலுவலில் மட்டும் வளர்வது வளர்ச்சியல்ல, அன்பிலும் சேர்ந்தே வளர்வதே வளர்ச்சி.
You must be logged in to post a comment.