“எல்லாம் நாலு சாண் வயிறுக்காகத் தான்” என்பதையோ. “வயித்துப் பொழப்பைப் பாக்கணும்ல” எனும் வார்த்தையையோ கேட்காமல் நம்மால் கடந்து போக முடியாது. உணவு நாம் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று.
அதே போல, நமக்கு வருகின்ற நோய்களில் பெரும்பாலானவை நமது உணவுப் பழக்கத்திலிருந்தே வருகிறது என்கிறது மருத்துவம். சத்தில்லாத உணவைச் சாப்பிடுவது, அதிக கொழுப்புள்ள உணவுகளைத் திணிப்பது, அளவுக்கு அதிகமான உணவுகளைத் திணிப்பது என நமது உணவுப் பழக்கம் திசை மாறிவிட்டது. அது நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது.
தேவை எனும் ஓட்டம், ஆசை எனும் திசையில் பயணிக்கும் போது தான் பிரச்சினைகள் துவங்குகின்றன. “சர்ச்ல ஆண்டு விழாவுக்கு மட்டன் பிரியாணி போடணுமா, மீன் குழம்புச் சாப்பாடு போடணுமா ?” எனும் விவாதங்கள் சண்டைகளாகிப் போன அவலங்களும் உண்டு. முதன்மையான தேடல் எது என்பதில் தெளிவின்மையே இத்தகைய சண்டைகளின் காரணம்.
உணவுப் பிரச்சினை சின்ன விஷயம் அல்ல. அது பல சாம்ராஜ்யங்களைச் சரிய வைத்திருக்கிறது. பல ஆட்சிகளை மலர வைத்திருக்கிறது. ஒருபக்கம் ஒபிசிடி எனப்படும் அதீத எடை நோய்க்கு குழந்தைகள் பலியாகிறார்கள். இன்னொரு பக்கம் ஆண்டுக்கு சுமார் முப்பத்தோரு இலட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.
இத்தனையும் ஏன் ? உலகில் பாவம் நுழையக் காரணமானதே ஏவாளுக்கு ஒரு பழத்தைச் சாப்பிடவேண்டும் என தோன்றிய ஆசை தானே ! சுவைக்கும் ஆசையைத் தடுக்க முடியாத ஏவாள் பாவத்தின் முதல் சுவடை எடுத்து வைத்தாள் !
இயேசு உணவை வெறுக்கவில்லை. உண்மையில் உணவில் இருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் முழுமையாக விலக்கியது அவர் தான். “மனிதனின் உடலுக்குள் செல்வது அவனைத் தீட்டுப்படுத்தாது” எனும் வசனத்தின் வழியாக விரும்புவதைச் சாப்பிடலாம் எனும் அங்கீகாரத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
நன்றாக உண்டு குடித்த அவரை மக்கள் போஜனப் பிரியன் என்றார்கள். “மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” ( லூக்கா 7 :34 ) என்றார் இயேசு.
எதை இயேசுவுக்காக உங்களால் வெறுக்க முடியுமோ, அதை நேசியுங்கள் என்பது கடவுளின் போதனைகளின் உள்ளார்ந்த அர்த்தம். ஆபிரகாம் ஈசாக்கை நேசித்தார். எல்லாவற்றையும் விட அதிகமாய் மகனை நேசித்தார். ஒரு கட்டத்தில் ஈசாக் ஆபிரகாமின் கடவுள் போல மாறிப் போனான். கடவுள் ஆபிரகாமை அழைத்து, ‘மகனைப் பலியிடு’ என்றார். அந்தக் கணத்தில் ஆபிரகாம் விழித்தெழுந்தார். கடவுளுக்காக தன் மகனை இழக்கத் தீர்மானித்தார். அது தான் அவரை விசுவாசத்தின் தந்தையாய் மாற்றியது.
இயேசு உண்டார் குடித்தார். ஆனால் உணவை முழுமையாய் வெறுத்து நாற்பது நாட்கள் விரதமும் இருந்தார். அவருக்கு உணவு என்பது தேவையைச் சந்திக்கும் விஷயமாக இருந்ததே தவிர, ஆசையை பூர்த்தி செய்யும் ரசனையாக இருக்கவில்லை. நாவின் ருசிக்காக ஓடி ஓடி சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றி நீதிமொழிகள் 23:21 இப்படிச் சொல்கிறது.
“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்”. உணவு இல்லாதவனை ஏழை என்போம். உணவு ஒருவனை ஏழையாக்கும் என்பதை பைபிள் தான் நமக்குச் சொல்கிறது.
உணவின் மீது அதீத நாட்டம் ஏற்படும் போது அதன் தேடல் அதிகரிக்கிறது. அதன் தேடல் அதிகரிக்கும் போது சிந்தனை முழுதும் அதுவே நிரம்புகிறது. சிந்தனை முழுதும் அது நிரம்பும் போது அவனுக்கு அது கடவுளாகிப் போகிறது.
“அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே” ( பிலிப்பியர் 3 : 19 ) என பவுல் அவர்களைத் தான் சொல்கிறார். உபவாசம் என்பது பலருக்கு வனவாசம் போல கசப்பதற்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததே !
கடவுளைத் தவிர எதை முதன்மைப் படுத்தினாலும் அது ‘சிலை வழிபாடாகிறது’. சிலருக்கு பணம். சிலருக்கு புகழ். சிலருக்கு உணவு ! என சிலை வழிபாடு வேறுபடுகிறது. கற்சிலையை வழிபடாதவர்கள் நாம். ஆனால் வேறு எந்தெந்த சிலைகளை வழிபடுகிறோம் என்பதை உணர வேண்டும்.
“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால் எதற்கும் நான் அடிமையாகி விட மாட்டேன்” என்பதே உணவைக் குறித்த நமது பார்வையாய் இருக்க வேண்டும் என பவுல் அறிவுறுத்துகிறார்.
மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான். என்கிறார் இயேசு. இயேசுவின் வார்த்தைகள் நமக்கு உணவாக வேண்டும். அதுவே மிகவும் முக்கியமானது ! “ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும்” என்பதே இயேசுவின் வருகையின் நோக்கம் ( உரோ 8:4 ) என்கிறார் பவுல்.
உணவு என்பது பாவத்துக்குள் இட்டுச் செல்லாது என பலரும் தவறாக நினைத்து விடுகிறோம். லோத்தின் காலத்தில் இருந்த தீமையானது பெருந்தீனி என்கிறது பைபிள் ! ஈசா தனது தலைமகன் உரிமையை இழந்து வாழ்க்கையில் வீழ்ச்சியடையக் காரணம் உணவு ஆசை என்கிறது பைபிள். ஏலியின் மகன்களும், இஸ்ரயேல் மக்களும் உணவு ஆசையினால் வீழ்ச்சியடைவதை பைபிள் பதிவு செய்திருக்கிறது.
அரசன் உண்கின்ற அட்டகாசமான உணவை வேண்டாம் என மறுத்து எளிமையான உணவை தேர்ந்தெடுத்த தானியேலை கடவுள் ஆசீர்வதித்தார். கடைசிவரை அவரோடு இருந்தார்.
“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்கிறார் பவுல் ( 1 கொரிந்தியர் 6 : 19). எனவே இறைவனுக்கு மகிமையானதை மட்டுமே உண்ணவும் வேண்டும்.
சுய கட்டுப்பாடு இதற்கு மிகவும் முக்கியம். சுய கட்டுப்பாடு என்பது நாம் முயற்சி செய்வதால் வருவதல்ல. தூய ஆவியானவர் நமது உள்ளத்துக்குள் வருவதே. “ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது” ( கலாத்தியர் 5 : 17 ). இதைப் புரிந்து கொள்வதில் தான் உணவின் மீதான வேட்கை குறைய முதல் தேவை !
இதைப் புரிந்து கொண்டதால் தான் பவுல், “பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” ( 1 கொரி 9 :27) என்கிறார். நற்செய்தி அறிவித்தலின் முக்கியத் தேவைகளில் ஒன்று உடலில் இச்சையான உணவு வேட்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
உணவை விட மேலாய் நாம் எதை ரசிக்க வேண்டும் ?
“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங் 34 : 8) என்கிறது சங்கீதம். நமது சுவை நரம்புகள் நாவில் அல்ல, வாழ்க்கையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் இறைமகனைச் சுவைக்க வேண்டும்.”
“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.” ( யோவான் 6 :35). என்றார் இயேசு. தினமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரை உண்பவர்களாக இருக்க வேண்டும்.
இயேசுவின் வார்த்தைகள் நமக்கு பாலைப் போல இருக்க வேண்டும். “புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்” ( 1 பேதுரு 2: 2) எனும் வசனத்துக்கு ஏற்ப நாம் இறைவார்த்தையைப் பருகுபவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்மீக உணவையும், பானத்தையும் பருகும் போது உடலின் தேவைகள் இரண்டாம் பட்சாமாகிவிடும் என்பதையே இயேசு வலியுறுத்துகிறார். “எதை உண்போம், எதைக் குடிப்போம் எனும் கவலை வேண்டாம்” என இயேசு சொன்னதன் பொருள் இது தான்.
உணவின் மீதான வேட்கையைக் கூட குறைக்க முடியாவிடில், பாலியல் இச்சை, கோபம், பண ஆசை போன்ற வேட்கைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி ?
எனவே இந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் கொள்வோம்.
- சுவையான உணவுக்காகத் தேடி ஓடும் மனநிலையை விட்டு வெளியே வருவோம். அது நோயையும், சோர்வையும் தான் தரும். வார்த்தையாகிய இறைவனைத் தேடி ஓடும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம்.
- “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” என்றார் இயேசு (யோவான் 4:34). அதே திருவுளத்தை நிறைவேற்றுவதே நமது உணவு எனும் சிந்தனையை மனதில் கொள்வோம்.
- உணவு என்பது களஞ்சியத்தை இடித்துப் பெரிதாக்கி சேமிப்பதற்கானதல்ல. வறியவர்களோடும், ஏழைகளோடும் பகிர்ந்து கொள்வதற்கானது. ஏழை இலாசரை உதாசீனம் செய்யாமல் சமூகத்தின் பசிக்கு உணவளிக்கும் மனிதர்களாக வாழவேண்டும் எனும் மனித நேயத்தை வளர்த்துக் கொள்வோம்.
படைத்தவர் கொடுத்ததே உணவு, அதை படைத்தவருக்கு மேலாக உயர்த்தாதிருப்போம் !
சேவியர்
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/
LikeLiked by 1 person