81
இயேசு கிறிஸ்து
ஆதாம் முதல் இயேசுவின் பிறப்பு வரையிலான காலம் கி.மு என அழைக்கப்படுகிறது. ஆதியிலேயே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி எனும் திரித்துவ நிலையில் இருந்தார். ஆதாமை கடவுள் படைத்தது முதல், இயேசுவின் பிறப்பு வரையிலான நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன.
முதல் மனிதர்கள் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து கடவுளின் வழியை விட்டு விலகினர். இறைவன் மனம் வருந்தினார், தனது மக்களை நல் வழிப்படுத்த இறைவாக்கினர்களை ஏற்படுத்தினார். அவர்கள் கடவுளின் குரலாக இருந்தார்கள். இருந்தாலும் மனுக்குலம் பாவத்தில் ஆழமாய் பயணித்துக் கொண்டே இருந்தது.
கடைசியாகக் கடவுள் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். அவர் குரலாக மட்டும் இல்லாமல் செயலாகவும் இருந்தார். கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பது எது ? எந்த வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானது என்பதை அவர் ஒவ்வொரு நாளும் தனது செயலால் நடத்திக் காட்டினார். இப்படி அவர் நமக்கு முன் செல்லும் ஒரு முன் மாதிரியானார்.
மோசேயின் வழியாகக் கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன. பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உள்ளன. காலப்போக்கில் அந்தக் கட்டளைகளில் பெரும்பாலானவை வெறும் சடங்குகளாகவும், ஏழைகளை ஏய்ப்பதற்கு வலியவர்கள் பயன்படுத்தும் ஆயுதமாகவும் மாறிப் போயின.
இயேசுவின் வருகையானது, ‘தூய்மை என்பது என்ன ?” என்பதை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இருந்தது. அதுவரை இருந்த சட்டங்கள் கட்டளைகள் எல்லாமே செயல்களின் அடிப்படையிலேயே இருந்தன. தவறான செயல்களைச் செய்யக் கூடாது, தீமை செய்யக் கூடாது, நன்மை செய்ய வேண்டும் என்பவையே கட்டளைகளாக இருந்தன.
இயேசு போதனைகளை உள்நோக்கித் திருப்பினார். “சிந்தனைகளைச் சீர்செய்ய வேண்டும். அகத்தை அழகுபடுத்தாமல் வெளியே அழகுபடுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றார். அகத்தூய்மை இல்லாதவர்களை , “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்” என்றழைத்தார்.
கொலை செய்வது பாவம் என்று சட்டங்கள் போதித்த காலத்தில், கோபம் கொள்வது பாவம் என்றார். கொலை எனும் செயலைத் தடுப்பது கிளைகளை வெட்டுவது போல, கோபத்தை அழிப்பது அதன் வேர்களை அழிப்பது போல. அவர் வேர்களை விசாரித்தார். விபச்சாரம் பாவம் என்று சட்டங்கள் சொன்ன போது, “கண்களினால் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பது பாவம்” என்றார் இயேசு.
ஒட்டு மொத்த சட்டங்களையும் இரண்டு கட்டளைகளில் அடக்கினார்.
‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னார்.
இயேசு தனது முதல் முப்பது ஆண்டுகளில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பவராக இருந்தார். அதன் பின் மூன்றரை ஆண்டுகள் அவருடைய பணி விண்ணக வாழ்வையும், பாவத்தை விட்டு மனம் திரும்புவதையும் போதிப்பதாய் இருந்தது.
ஏழைகளையும், பாவிகளையும் நேசித்த அவர், மதத்தின் பெயரால் ஏழைகளை ஏய்ப்பவர்களை சாடினார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்த இயேசு, தலைமைக் குருக்களையோ கடிந்து பேசினார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பலவீனர்களின் பக்கம் நின்றார் இயேசு.
இயேசுவின் போதனைகள் மதத் தலைவர்களுக்கு பெரும் தலைவலியாகிப் போனது. அவர்களுடைய வருமானம் குறைந்தது. அவர்கள் மீது மக்களுக்கு இருந்த பயம் விலகியது. இயேசுவின் பின்னால் மக்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. அவருடைய நிழல் பட்டாலே நோய்கள் நீங்கின. அவருடைய குரல் கேட்டால் பேய்கள் பதறி ஓடின. அவருடைய வார்த்தைகள் எளிமையின் உச்சமாகவும், கூர்மையின் உச்சமாகவும் இருந்தன.
எனவே மதத் தலைவர்கள் இயேசுவை அழிக்க முடிவு செய்தனர். அதற்காக பொய் சாட்சிகளை தயாரித்தனர். நள்ளிரவில் கைது செய்து விடியும் முன் அவரை குற்றவாளியாக்கி, என்ன நடக்கிறது என மக்கள் குழம்பி தீர்வதற்குள் அவரை சிலுவையில் அறைந்தனர்.
இயேசுவின் வருகையின் நோக்கம் அது தான். புனிதமான வாழ்க்கை வாழ்வது எப்படி என வாழ்ந்து காட்டுவது. பாவமான வாழ்க்கை வாழ்ந்த மக்களுடைய பாவத்தை ஏற்று மரிப்பது.
பழைய ஏற்பாட்டில் ஆடுகளைப் பலி செலுத்தி பாவங்களை தீர்ப்பார்கள். ஒட்டு மொத்த மனுக்குலப் பாவத்தைத் தீர்க்க ஒரே வழி கடவுளே அதை ஏற்பது தான். அதைத் தான் இயேசு செய்தார்.
பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் மன்னிப்பு வேண்டும் போது அவருடைய மீட்பில் எத்தகைய கொடிய பாவியாக இருந்தாலும் இணையலாம்.
நாம் செய்யவேண்டிய இரண்டு காரியங்கள்.
- இயேசுவின் வாழ்க்கையை, போதனையை முழுமையாய் அறிவது.
- “இந்த சூழலில் இயேசு இப்படித் தான் செய்வாரா ?” என கேள்வி எழுப்பி அதன் படி நமது செயல்களை செய்வது.