82
மரியா
ரோமப் பேரரசுக்கு உட்பட்ட கலிலேயா நகரில் மலைகளின் பின்னால் மறைந்திருந்தது நாசரேத் கிராமம். கி.மு 1009ல் தாவீது மன்னனும், கி.மு 971ல் அவர் மகன் சாலமோன் மன்னனும் அற்புதமாய் ஆட்சி செய்த சுதந்திர தேசம்.
மரியாள் எளிமையான ஒரு யூதப் பெண். தனது பதின் வயதுகளின் ஆரம்ப வருடங்களில் இருந்தாள். அவருக்கு யோசேப்பு என்பவரோடு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது
ஒரு நாள் மரியாவின் முன்னால் திடீரென தோன்றினார் ஒரு வானதூதர். வானதூதரைக் கண்ட மரியா திடுக்கிட்டார். “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ” என்று தூதர் சொல்ல மரியா மேலும் கலங்கினார்.
“பயப்படாதீர்கள், கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர், அவருக்கு இயேசு என்று பெயரிடுங்கள். அவர் பெரியவர். அவரது ஆட்சிக்கு முடிவே இருக்காது” வானதூதர் உற்சாகமாய்ச் சொன்னார். மரியாவோ அச்சத்திலிருந்து விலகவில்லை.
“இது.. இது எப்படி நடக்கும். நான் கன்னியாயிற்றே” என்றாள்.
“இது கடவுளின் அருளால் நடக்கும். தூய ஆவியால் கருத்தாங்குவீர். அந்தக் குழந்தை இறைமகன் எனப்படும்” என்றார் தூதர்.
“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” மரியா ஒற்றை வரியில் தன்னை அர்ப்பணித்தார். அர்ப்பணித்தபின் தூய்மை காத்தார். கடவுளின் அருளால் தாய்மை காத்தார்.
திருமணத்துக்கு முன்பே கர்ப்பம். இது கடவுளின் அருளால் என்று சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை. கன்னியாகவே இருக்கிறேன் என்று சொன்னால் யாரும் சிரிக்காமல் இருக்கப் போவதில்லை. யோசேப்புடனான தனது திருமணம் நின்று போகலாம். அல்லது தான் முறை தவறியவள் என முத்திரை குத்தப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படலாம். சாத்தியங்கள் ஆயிரம் இருந்தாலும் மரியாள் கவலைப்படவில்லை. இறை சித்தமே தன் பணி என துணிந்தார்.
மரியாள் கர்ப்பமான செய்தியைக் கேட்ட யோசேப்பு அதிர்ந்தார். மனைவியை மறைவாய் விலக்கி விட தீர்மானித்தார். ஆனால் கடவுள் அவரிடமும் ஒரு தூதரை அனுப்பி விஷயத்தை விளக்க யோசேப்பு புரிந்து கொண்டார், வியந்து நின்றார்.
மரியா இயேசுவை கருவில் சுமந்து இறையில் நிறைந்தாள். அப்போது அகஸ்து சீசர் ஒரு கட்டளை பிறப்பித்தார். அதன் படி மரியாவும் யோசேப்பும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காய் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊருக்குச் சென்றார்கள்.
பெத்லேகேமில் மக்கள் நிரம்பி வழிந்தார்கள். மரியாவுக்கு நிறைமாதம். சத்திரங்கள் எல்லாம் நிரம்பி வழிந்தன. எங்கும் இடம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள். மரியாயின் நிலமையைப் பார்த்த ஒருவர் அவர்களுக்கு தங்கிக்கொள்ள ஒரு இடம் கொடுத்தார்.
அது ஒரு தொழுவம்.
மரியா ஆடுகளின் இடையே ஆதவனைப் பெற்றெடுத்தாள். தொழுவம் தொழுகை பெற்ற நிகழ்வாக இயேசு பிறந்தார். மரியா இயேசுவின் வாழ்க்கையைத் துவங்கி வைத்தாள்.
தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாளின் போது மழலை இயேசுவைத் தூக்கிக் கொண்டு எருசலேம் தேவாலயம் சென்றார் மரியா. ஆலயத்தில் சிமியோன் எனும் இறை மனிதர் இருந்தார். அவர் மழலை இயேசுவைக் கண்டதும் அவர் தான் மீட்பர் என்பதைக் கண்டு கொண்டார்.
மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார். இப்படி இயேசு மீட்பர் என அடையாளப்படுத்தப் பட்டபோது மரியா கூடவே இருந்தார்.
பன்னிரண்டு வயது. எருசலேம் தேவாலயத்துக்கு பெற்றோரோடும் உறவினரோடும் சென்ற இயேசு ஆலயத்திலேயே தங்கி விட்டார். அது தெரியாத பெற்றோர் வீடு திரும்பினர். மறு நாள் தான் விஷயம் தெரிந்து. பதறியடித்துக் கொண்டு எருசலேம் ஓடினார் அன்னை. இயேசு ஆலயத்தில் அமர்ந்து பெரியவர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார்.
“மகனே தவிக்க விட்டு விட்டாயே” என பாசத்தோடு கேட்ட தாயிடம், “என் தந்தையின் இல்லத்தில் நான் இருப்பேன் என்பது தெரியாதா ?” எனக் கேட்டார். இப்படி இயேசு தனது பணிவாழ்வை முன்னுரையாய்ச் சொன்னபோதும் அன்னை கூடவே இருந்தார்.
முப்பதாவது வயதில் பணிவாழ்வில் நுழைந்தார் இயேசு. கானாவூர் எனுமிடத்தில் நடந்த கல்யாண வீட்டில் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. மரியா இயேசுவிடம், “ரசம் தீர்ந்து விட்டது” என்றார். பின் வேலைக்காரர்களிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். இயேசு தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றி முதல் புதுமையைச் செய்தார். இப்படி இயேசுவின் புதுமை வாழ்வின் முதல் படியிலும் மரியா இருந்தார்.
இறுதியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடும் கடைசிக் கணத்திலும் சிலுவை அடியில் மரியா நின்றார்.
மனுவுருவான வார்த்தையைச் சுமக்க கடவுள் உலகெங்கும் பார்த்தபோது தென்பட்ட ஒரே பெண் மரியா. இன்று வார்த்தையான இயேசுவைச் சுமக்க நமது இதயத்தைப் பரிசுத்தப்படுத்துவோம்.