84
செக்கரியா
இயேசு பிறப்பதற்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது. ஆலயத்தில் தூபம் காட்டும் பணி செய்து கொண்டிருந்தார் ஒருவர். அவர் பெயர் செக்கரியா. அவருடைய மனைவி எலிசபெத்து. எலிசபெத்தும், இயேசுவின் தாய் மரியாவும் உறவினர்கள்.
செக்கரியாவும், எலிசபெத்தும் மிகவும் நேர்மையாளர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய குறை இருந்தது. குழந்தையின்மை. கடவுளிடம் தொடர்ந்து மன்றாடி வந்தார்கள். காலம் சென்று கொண்டே இருந்தது. எலிசபெத் தாய்மை நிலையை அடையவே இல்லை. இப்போது இருவருமே முதிர் வயதை அடைந்து விட்டிருந்தனர். எனவே அவர்களுடைய நம்பிக்கை ஏறக்குறைய வற்றிப் போய்விட்டது.
அந்தக் காலத்தில் ஆண்டவரின் திருமுன் சென்று தூபம் காட்டுவது மிகப்பெரிய பணி. யார் தூபம் காட்டலாம் என குருக்கள் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அப்படிச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது செக்கரியாவின் பெயர் வந்தது. அவர் மிகவும் மகிழ்ந்தார்.
பீடத்தின் அருகே சென்று தீபம் காட்டினார். மக்கள் எல்லோரும் வெளியே நின்று வேண்டுதல் செய்து கொண்டிருந்தார்கள். செக்கரியா தூபம் காட்டிக் கொண்டிருந்தபோது ஒரு வானதூதர் பீடத்தின் வலது புறமாகத் தோன்றினார்.
திடீரென தனக்கு முன்னால் வானதூதர் தோன்றியதைக் கண்ட செக்கரியா வெலவெலத்துப் போனார்.
“பயப்படாதீர்கள் செக்கரியா. நல்ல செய்தியைத் தான் சொல்லப் போகிறேன். உமது மனைவி எலிசபெத் ஒரு மகனைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பெயரிடுங்கள்”
வானதூதரின் வார்த்தைகளை குழம்பிய மனதோடு கேட்டுக் கொண்டிருந்தார் செக்கரியா. தூதர் தொடர்ந்தார்.
“யோவான் கடவுள் பார்வையில் மிகவும் பெரியவராக இருப்பார். அவர் திராட்சை ரசம், மது போன்றவற்றையெல்லாம் தொடவே மாட்டார். தாயின் வயிற்றில் இருக்கும் போதே தூய ஆவி அவரை நிறைக்கும்”
செக்கரியா மனதுக்குள் குழப்பம் தொடர்ந்தது. வானதூதரோ நிறுத்தவில்லை.
“எலியாவைப் போல அவர் இருப்பார். வழி விலகிப் போகும் இஸ்ரயேல் மக்களை திரும்ப கடவுளிடம் கொண்டு வரும் பணியை அவர் செய்வார். ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை உருவாக்குவார்”
செக்கரியா வானதூதரின் பேச்சை நிறுத்தினார்.
“சொல்றதெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா இதெல்லாம் நடக்கிற காரியமா ? எனக்கும் வயசாச்சு, எலிசபெத்தும் கிழவியாயிட்டா” என்றார்.
வானதூதர் அவரிடம்
“நான் கடவுளுக்கு முன்னால் நிற்கும் கபிரியேல் தூதன். கடவுளுடைய வார்த்தையை உமக்குச் சொல்ல வந்தேன். நீரோ அதை நம்பவில்லை. எனவே இந்த நற்செய்தி நிறைவேறும் மட்டும் நீர் ஊமையாய் இருப்பீர்” என்றார்.
செக்கரியா வானதூதரிடம் பதில் பேச வாயெடுத்தார். சத்தம் வரவில்லை. சட்டென வானதூதரும் மறைந்தார். செக்கரியா மிரண்டு போய் நின்றார். .
“தூபம் காட்ட உள்ளே போனவருக்கு என்னாச்சு?” என வெளியே காத்திருந்த மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நீண்ட நேரத்துக்குப் பின் வெளியே வந்தார் செக்கரியா. அவருடைய முகம் மாறியிருந்தது. மக்கள் அவரிடம் நடந்தது என்ன என்று கேட்டார்கள். அவரால் எதுவுமே பேச முடியவில்லை. சைகையினால் பதில் சொன்னார்.
மக்கள் வியந்தனர். கடவுளின் வார்த்தை நிறைவேறியது. எலிசபெத் தாய்மை நிலையை அடைந்தார். இருவரும் பரவசமடைந்தார்கள்.
ஆறு மாதங்களுக்குப் பின் மரியாவிடம் தூதர் சென்று இயேசுவின் பிறப்பைப் பற்றியும், எலிசபெத் தாய்மையாய் இருக்கும் விஷயத்தையும் தெரிவித்தார். மரியா எலிசபெத்தைக் காண ஓடினார்.
எலிசபெத்தைக் கண்டு வாழ்த்தினார் மரியா. அப்போது எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை ஆனந்தமாய்த் துள்ளியது. எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார். எலிசபெத் குரலுயர்த்தி சத்தமாக, “பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர். உம் வாழ்த்தைக் கேட்டதும் வயிற்றிலிருந்த குழந்தையும் துள்ளியது. ஆண்டவரின் தாயார் என்னிடம் வர நான் யார் ?” என்றார்.
எலிசபெத்துக்குப் பேறுகாலம் வந்தது. அவர் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். சுற்றிலும் உள்ள மக்கள் எல்லாம் இந்த மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். எட்டாம் நாள் குழந்தைக்குப் பெயரிட வேண்டும்.
“அப்பாவோட பெயரான செக்கரியா பெயரையே பையனுக்குப் போடுவோம்” மக்கள் சொன்னார்கள்.
“வேண்டாம் யோவான் என்று பெயரிடுங்கள்” எலிசபெத் சொன்னார்.
“யோவானா ? அப்படி ஒரு பெயர் சொந்தக்காரர்கள் யாருக்கும் இல்லையே. சரி எதற்கும் செக்கரியாவிடம் கேட்போம்” என மக்கள் செக்கரியாவிடம் சென்றார்கள். அவரிடம் சைகையால் என்ன பெயரிடலாம் என கேட்டார்கள்.
செக்கரியா ஒரு பலகையை எடுத்து, “இவன் பெயர் யோவான்” என எழுதினார். மக்கள் பிரமித்துப் போனார்கள்.
உடனே சக்கரியாவின் நாவின் கட்டவிழ பேச்சு வந்தது. உடனே கடவுளைப் புகழ்ந்து பாடினார்.
இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை. குழந்தைகள் இறைவனால் கிடைக்கும் வரம். ‘இனிமேல் முடியாது’ என மனிதர்கள் சுய பலத்தை இழந்து முழுமையாக இறையில் சரணடையும் இடத்தில் இறைவன் செயலாற்றுகிறார்.