86
ஏரோது மன்னன்
இயேசு பிறந்த காலத்தில் யூதேயாவை ஆண்டு வந்தவர் ஏரோது மன்னன். தந்திரமும், சூழ்ச்சியும், கல் மனசும் கொண்டவன் என ஏரோதைச் சொல்லலாம்.முதலில் கலிலியா வின் கவர்னராக இருந்தார். ரோமர்களின் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார். அதற்காக பல படுகொலைகள் செய்தார்.
ஆட்சிக்கு வந்த பின்பும் தனது மனைவி மரியம், மாமியார், மச்சான், இரண்டு மகன்கள் உட்பட குடும்ப உறுப்பினர்களையே கொன்று குவித்தவன். மனைவி தனது கிரீடத்தைப் பறித்து விடுவாரோ எனும் பயத்தில் தான் அவளைக் கொன்றான். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோஸபஸ் எனும் வரலாற்று அறிஞர் ஏரோது மன்னனின் வாழ்க்கையை விரிவாக எழுதியிருக்கிறார். “ஏரோதின் வாளாய் இருப்பது அவனுடைய மகனாய் இருப்பதை விடப் பாதுகாப்பானது” என்று அகஸ்டஸ் சீசர் சொன்னது இதனால் தான்.
இயேசு யூதேயாவிலுள்ள பெத்லேகேமில் பிறந்தார். அப்போது வானத்தில் ஒரு ஸ்பெஷல் நட்சத்திரம் தோன்றியது. வானியல் அறிஞர்கள் அந்த விண்மீனைக் கண்டதும் வியந்தார்கள். இந்த விண்மீன் ஒரு மாபெரும் தலைவர் தோன்றியதன் அடையாளம் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.
விண்மீன் இருக்கும் திசை நோக்கி நடந்தார்கள். விண்மீன் அவர்களுக்கு முன்னால் சென்றது. அது எருசலேம் நோக்கி நகர்ந்தது. ஞானிகள் ஏரோது மன்னனின் அரண்மனையில் நுழைந்தார்கள்.
“மன்னரே வணக்கம்”
“வாருங்கள் அறிஞர்களே. உங்கள் வரவு நல்வரவாகுக. என்ன செய்தி ?” ஏரோது மன்னன் கேட்டான்.
“உங்களுக்குத் தெரியாததா ? புதிய மன்னனை, புதிய மெசியாவைக் காண வந்திருக்கிறோம்”
“புதிய மன்னனா ? எனக்கு ஏதும் குழந்தைகள் பிறக்கவில்லையே “
“மன்னரே.. விண்மீன் வானத்தில் தோன்றியது. உமது நாட்டுக்கு எங்களைக் கொண்டு வந்தது. அரசன் பிறந்திருப்பது உண்மை. அரண்மனையில் இல்லையேல் எங்கே பிறந்திருப்பார் ?” ஞானிகள் கேட்க ஏரோது கலங்கினான். அவனுக்குள்ளிருந்த குரூர மனம் எட்டிப் பார்த்தது.
வஞ்சகமாய் தான் ஆட்சியைக் கைப்பற்றியது போல, தனது ஆட்சியையும் யாரேனும் கைப்பற்றி விடுவார்களோ என குழம்பினான். உடனே நாட்டிலுள்ள மறைநூல் அறிஞர்கள், குருக்கள் எல்லோரையும் கூட்டினான்.
“மெசியா பிறந்தால், எங்கே பிறப்பார் என்று தெரியுமா ?”
நமது அரண்மனையில் பிறக்காவிட்டால் பெத்லேகேமில் பிறக்க வாய்ப்பு உண்டு. காரணம், “யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்” என முன்னமே மீகா இறைவாக்கினர் சொல்லியிருக்கிறார் என்றனர்.
ஏரோதின் மனதில் சதுரங்கம் நகர்ந்தது. அவன் ஞானிகளை தனியே அழைத்து விஷயமெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
” நீங்கள் போய் அவரை வணங்குங்கள். பின்பு வந்து எனக்குச் சொல்லுங்கள். நானும் வணங்குவேன்” என்றான்.
ஞானிகள் கிளம்பினர். அவர்களுக்கு முன்னால் நடந்து வந்த விண்மீன் ஒரு தொழுவத்தின் மேல் வந்து நின்றது. உள்ளே மரியா குழந்தை இயேசுவைக் கைகளில் ஏந்தியபடி இருந்தார். அவர்கள் அவரை வணங்கி பரிசுகளை அளித்தனர்.
பயணக் களைப்பும், ஆனந்தக் களிப்புமாக இரவில் தூங்கிய ஞானிகளுக்குக் கனவில் தோன்றினார் தேவதூதன்.
“ஏரோதிடம் போய் குழந்தையைக் குறித்துப் பேசாதீர்கள். வேறு வழியாக நாடு திரும்புங்கள்” என்றார் தூதன்.
அவர்கள் அப்படியே செய்தார்கள். தூதன் இயேசுவின் தந்தை யோசேப்பின் கனவிலும் தோன்றினார்.
“நீர் குழந்தையை எடுத்துக் கொண்டு எகிப்துக்குச் செல்லும். ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுவான்” என்றார். யோசேப்பு இரவோடு இரவாக இடத்தைக் காலி செய்து விட்டு எகிப்துக்குப் போனார்.
அரண்மனையில் ஏரோது ஞானிகளின் வருகைக்காய்க் காத்திருந்தான். நாட்கள் நகர்ந்தன. ஞானிகள் வரவேயில்லை. அவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதை ஏரோது புரிந்து கொண்டான். தனது அரச பதவி போய்விடும் எனும் கவலை இப்போது அவனுக்கு வலுப்பட்டது.
“யாரங்கே.. வீரர்களைத் திரட்டுங்கள். பெத்லேகேம் மற்றும் அதன் சுற்றுப் புறமெங்கும் உள்ள குழந்தைகளில் இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்லுங்கள்” என்று ஆணையிட்டான்.
இயேசு விண்ணக அரசர் என்பதை ஏரோது உணரவில்லை. வயதான ஏரோது இன்னும் அரியணையை இறுகப் பிடித்திருந்தான். மனதைக் கல்லாக்கிக் கொண்டு பச்சிளம் பாலகர்களைக் கொன்று குவித்தான் ஏரோது.
நாட்கள் சென்றன. ஏரோது மன்னனுக்கு நோய் வந்தது. பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற பாவமும், அதனால் எழுந்த சாபமுமா தெரியாது, நோயின் வலியினால் துடித்தான். கடைசியில் தற்கொலை செய்து கொண்டான் என்கிறது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட எட்வைன் குறிப்புகள்.
இறைவனின் திட்டத்தை மனிதர்களால் தடுக்க முடியாது எனும் உண்மையும், வார்த்தையாகிய விண்மீனைத் தொடர்ந்து நடந்தால் இயேசுவை அடையலாம் எனும் உண்மையும் ஏரோதின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடங்களாகும்.