88 சீமோன் பேதுரு
இயேசுவின் சீடர்களில் மிக முக்கியமானரான பேதுரு பெத்சாயிதா நகர யூதர். இவர் திருமணம் செய்திருந்தார் என்றும், மனைவியின் பெயர் கன்கார்டியா என்றும் மரபுவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மீன்பிடி தொழிலைச் செய்து வந்த இவர், அழைக்கப்பட்டதும், வீட்டையும் தொழிலையும் விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்.
பேதுரு உணர்ச்சிகளால் ஆளப்பட்ட மனிதர். காரண காரியங்களை ஆராய்ந்து பார்ப்பதை விட உணர்ச்சிகளின் வேகத்தில் செயல்படக் கூடியவராகவும், ஒரு குழந்தையைப் போன்ற மனநிலை உடையவராகவும் இவர் சித்தரிக்கப்படுகிறார்.
ஒரு முறை இயேசுவின் சீடர்கள் படகில் வெகுதூரம் சென்று விட்டனர். நள்ளிரவு. இயேசு கடல் மீது நடந்து படகை நோக்கிச் சென்றார். அப்போது அதைக் கண்ட பேதுரு உணர்ச்சி வசப்பட்டவராக தானும் கடலில் குதித்து இயேசுவை நோக்கி நடந்தார்.
இயேசு தான் சிலுவையில் அறையப்படப் போகும் நிகழ்ச்சியை சீடர்களுக்கு முன்னமே அறிவித்தார். அப்போது உணர்ச்சிவசப் பட்ட பேதுரு “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என படபடத்தார்.
ஒரு முறை இயேசு சீடர்களிடம், “நான் யார் என நினைக்கிறீர்கள் ?” என்று கேட்டார். சீமோன் பேதுரு சட்டென, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று பதில் சொன்னார்.
இயேசு அவரிடம், “எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்” என்று சொல்லி சீமோன் எனும் அவரது பெயரை பேதுரு என்று மாற்றினார்.
இயேசு தனது கடைசி இரவு உணவின் போது சீடர்களின் பாதங்களைக் கழுவினார். பேதுருவின் பாதங்களைக் கழுவ வந்த போது, ‘நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்’ என்று தடுத்தார். இயேசுவோ,” பின்னர் ‘அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்’. என்றார்.
கெத்சமெனே தோட்டத்தில் இயேசு கைது செய்யப்பட்ட போது தன்னுடைய வாளை உருவி சேவகன் ஒருவனுடைய காதை வெட்டித் துண்டாக்கினார். இயேசு அதை மீண்டும் ஒட்ட வைத்து பேதுருவிடம், “வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?” என்றார்.
இயேசு தனது மரணத்தைப் பற்றி முன்னறிவித்தபோது, “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்” என வீரவசனம் பேசினார். இயேசுவோ, “பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது” என்றார்.
இயேசு கைது செய்யப்பட்டார். விசாரணை நடக்கிறது. கூடத்தின் வெளியே பேதுருவை காவலாளியும், பணிப்பெண்ணும் பார்க்கிறார்கள். நீ இயேசுவின் சீடர் தானே எனும் கேள்விக்கு, “அவரை எனக்குத் தெரியவே தெரியாது” என்று மூன்று முறை மறுதலித்தார். அப்போது கோழி கூவியது. தனது தவறை சட்டென உணர்ந்த பேதுரு மனம் கசந்து கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த நிகழ்ச்சி பேதுருவை வெகுவாகப் பாதித்தது. அதன் பின் ஒவ்வொரு நாள் சேவல் கூவும் போதும் அவர் மனமுடைந்து அழுதார் என்கிறார் அவரோடு பணிபுரிந்த ரோமாபுரி கிளமன்ட்ஸ். பேதுரு தன் மீதான நம்பிக்கையை முழுவதுமாய் உடைத்து விட்டு இறைவனில் சரணடைந்தது அப்போது தான். எனவே தான் அவரால் மிகப்பெரிய பணி ஆற்ற முடிந்தது.
தூய ஆவியினால் நிரப்பப்பட்டு அவர் எருசலேமின் வீதிகளில் தனது ஆரம்ப நற்செய்தி அறிவித்தலை நிகழ்த்தியபோது திருமுழுக்கு பெற்று அவரோடு இணைந்தவர்கள் மூவாயிரத்துக்கும் மேல். அத்தனை ஆற்றலுள்ளவராக அவர் மாறினார். பிறவி முடவனை நடக்கச் செய்து இயேசுவுக்குப் பின் முதல் புதுமையை ஆரம்பித்து வைத்தவரும் பேதுருவே.
ஒரு வேலைக்காரப் பெண்ணிடம் ‘இயேசுவைத் தெரியாது’ என்று ஒரு காலத்தில் மறுதலித்தவர். பின்னர் தலைமைக்குருக்கள், மூப்பர்கள், அரசு அதிகாரிகள் இவர்கள் முன்னிலையிலெல்லாம் இயேசுவைப் பற்றி தைரியமாய்ப் பேசுபவராக மாறினார்
சிரியாவிலுள்ள அந்தியோக்கியா, பின்னர் ரோமில் பேராயராக பணியாற்றியதாகவும், அவரது மனைவி நற்செய்தி அறிவித்தலில் அவரோடு இருந்ததாகவும் மரபுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தில் அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். சிலுவையில் அடிக்கப்படும் போது, “கடைசியாக எனக்கு ஒரே ஒரு விண்ணப்பம். இயேசுவைப் போல மரிக்க எனக்கு அருகதையில்லை. எனவே சிலுவையில் என்னைத் தலைகீழாய் அடித்துத் தொங்கவிட்டுக் கொல்லுங்கள்” என விண்ணப்பம் வைத்து,அப்படியே இறந்தார் என்கிறது வரலாறு.
வாடிகன் நகரில் இருக்கும் ஆலயம் இவரது கல்லறையின் மேல் கட்டப்பட்டதே.
தவறுகளுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு, தூய ஆவியால் நிரப்பப்பட்டு, இறை விசுவாசத்தில் நிலைத்திருந்து, இயேசுவுக்காகவே வாழும் மனநிலையைக் கொள்ள வேண்டும். என்பதே பேதுருவின் வாழ்க்கை சொல்லும் செய்தியாகும்.