நத்தானியேல்
நத்தானியேல் (நாத்தான் வேல்) இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர். இவருக்கு பார்த்தலமேயு என்றொரு பெயரும் உண்டு. இவரை இயேசுவின் சீடராகும்படி முதலில் அழைப்பு விடுத்தவர் பிலிப்பு. “இறைவாக்கினர்களும், மோசேவும் குறிப்பிட்டுள்ளவரைக் கண்டோம்” என பிலிப்பு நத்தானியேலை அழைத்தார்.
நத்தனியேலோ, “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார்.
பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்
நத்தானியேல் இயேசுவைத் தேடி வந்தார்.
நத்தானியேலைப் பார்த்த இயேசு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்றார். நத்தானியேல் ஆச்சரியப்பட்டார். “என்னை உமக்கு எப்படித் தெரியும் ?” என்று கேட்டார்.
“பிலிப்பு உம்மை அழைக்கும் முன், நீர் அத்திமரத்தின் அடியில் இருந்தபோதே உம்மைக் கண்டேன்” என்றார். நத்தானியேல் வியந்து போய், “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
“உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார் இயேசு. அதன்படியே இயேசுவின் பல்வேறு அதிசயங்களைக் கண்டார்.
இயேசு இறந்து உயிர்த்தபின் இவரும் தூய ஆவியினால் நிரப்பப்பட்டு வலிமையடைந்தார். உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கவும், மனம் திரும்புவோரை இயேசுவின் சீடர்களாக்கவும் புறப்பட்டார்.
இவர் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதன்பின்னர் சின்ன ஆசியாவில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில் பிலிப்பு என்னும் சீடருடன் சிலகாலம் பணியாற்றி வந்தார்.
அதன்பின்னர் நத்தானியேல் ஆர்மேனியாவில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். ஆர்மேனியாவில் இறைப்பணி ஆற்றச் சென்றது கி.பி 60ல். அங்கு ததேயு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை நிறுவியிருந்தார். நத்தானியேலும் அவரோடு இணைந்து சில காலம் பணியாற்றினார்.
ஐந்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து நற்செய்தி அறிவித்தலைச் செய்தார்கள். கிறிஸ்தவம் மிகவும் விரைவாகப் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பிற மத நம்பிக்கையாளர்களும், அரசும் இவர்களுக்கு எதிரானார்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களும், வன்முறைகளும் ஏவி விடப்பட்டன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். “கிறிஸ்தவர்கள்” எனும் பெயர் இருப்பவர்கள் எல்லோருமே துன்பத்துக்கு ஆளானார்கள்.
நத்தானியேல் தொடர்ந்து பணிசெய்தார்.
அப்போது அங்கு ஆண்டு வந்த அரசனுடைய மகளுக்கு மூளைக் கோளாறு இருந்தது. நத்தானியேல் அரண்மனைக்குச் சென்றார்.
” நீங்கள் இயேசுவை நம்பினால், இதோ இந்தப் பெண்ணை நான் இயேசுவின் பெயரால் சுகமாக்குவேன்” என்றார். அரண்மனை வாசிகள் சிரித்தனர்.
“அப்படி இயேசு இவருக்குச் சுகம் கொடுத்தால் கண்டிப்பாக நம்புவோம்” என்றார்கள்.
நத்தானியேல் மண்டியிட்டு செபித்தார். பின் அந்தப் பெண்ணைத் தொட்டார். அவளுடைய மூளை நோய் உடனடியாக விலக சுகமடைந்து எழுந்தாள். அனைவரும் அதிசயித்தனர்.
அரண்மனை சட்டென தலைகீழானது. பலர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்கள். அரசனும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான்.
அரசனும் அரண்மனை மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததைக் கண்டு ஆனந்தமடைந்த நத்தானியேல் அரசன் வணங்கிய சிலையைப் பார்த்தார். அதில் அசுத்த ஆவிகள் நிறைந்திருப்பதாய் தெரிந்தது அவருக்கு. கையிலுள்ள சிலுவையை எடுத்து சிலையை நோக்கி நீட்டினார். அசுத்த ஆவிகள் மக்களின் கண் முன்னால் சிலையை விட்டு வெளியேறி ஓடின.
சிலைக்கு வழிபாடு செய்து வந்த பூசாரிகள் கடும் கோபமடைந்தனர். நத்தானியேல் இருந்தால் நமது பொழைப்பு ஓடாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். அரசனை நம்பி பயனில்லை, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் வந்தார், அரசருடைய சகோதரன்!. அவர் மூலமாக நத்தானியேலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள். அரசனின் சகோதரன் பூசாரிகளின் பக்கம் சாய்ந்தான்.
நத்தானியேல் பிடிக்கப்பட்டார்.
அவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. அதுவும் உயிருடனே நாத்தான் வேலுடைய தோலை உரித்து, பின் அவரை சிலுவையில் தலை கீழாய் அறைய வேண்டும் என்று தீர்ப்பானது.
நத்தானியேல் கலங்கவில்லை. மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே சாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். “இயேசுவை நான் விரைவில் சந்திக்கப் போகிறேன். இயேசுவே இவர்களை மன்னியும்” என்றார்.
மிகவும் கொடூரமான, வேதனையான, நினைத்தாலே உயிரை உலுக்கும் முறையில் நத்தானியேலின் தோலை உரித்து, சிலுவையில் அவரைத் தலைகீழாய் அறைந்து கொன்றார்கள். அது கிபி. 68.
டைபர் நதியோரமாய் அமையப்பெற்றிருக்கும் பார்த்தலமேயு ஆலயத்தில் இவருடைய எலும்புகள் இன்னும் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன.
இயேசுவின் போதனைகளையும், இயேசு இறைமகன் எனும் உண்மையையும் சுமந்து செல்ல ஆதிக் கிறிஸ்தவர்கள் பட்ட வலிகளை நத்தானியேலின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.