இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்து வரி வசூல் செய்யும் பணியைச் செய்து வந்தார்.
ஒரு நாள் இயேசு அவரைப் பார்த்து,
“என்னைப் பின்பற்றி வா” என்றார்.
சுங்கச்சாவடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு உடனே இயேசுவைப் பின்சென்றார்.
இயேசு தனது திருத் தூதர்களைத் தேர்ந்தெடுத்தபோது, எல்லோரையும் வேலையில் இருந்தபோது தான் தேர்ந்தெடுத்தார். அதே அடிப்படையில் தான் மத்தேயுவையும் தேர்ந்தெடுத்தார்.
வரிவசூலிக்கும் தொழிலைச் செய்து வந்ததால் அவருக்கு பல்வேறு விதமான, பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த மக்களோடு பரிச்சயம் இருந்தது. அதுவே பல மொழிகளில் மத்தேயு அறிவு கொள்ளவும் துணை நின்றது. மொழியறிவு நன்றாக இருந்ததால் மத்தேயுவுக்கு அது இறைப்பணி ஆற்றுவதில் பெரும் பங்காற்றியது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் போன்ற மொழிகளில் அவருக்கு நல்ல புலமை இருந்தது.
இயேசுவோடு தொடர்ந்து நடந்த அவர், இயேசு மரணமடைந்து உயிர்த்தபின் தூய ஆவியால் நிரப்பப்பட்டு நற்செய்தி அறிவித்தலுக்கு ஆயத்தமானார்.
மத்தேயு தன்னுடைய பணியை முதலில் இயேசு பணி செய்த இடங்களிலேயே தொடர்ந்து செய்து வந்தார். அவரிடம் ஆழ்ந்த சட்ட அறிவு இருந்தது. யூதர்களின் முன்னோர்கள் பற்றியும், பழைய தீர்க்கத் தரிசனங்கள் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருந்ததால் அவர் இயேசுவின் வரவை தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறல் என்னும் அடிப்படையிலேயே போதித்து வந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகள் அவர் யூதர்களிடையே பணியாற்றினார்.
பாரசீகத்திலும், எத்தியோப்பியா பகுதிகளிலும் அவர் தன்னுடைய இரண்டாவது கட்ட பணியை ஆரம்பித்தார். அங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பல்வேறு இடர்களுக்கு இடையே நடத்திய மத்தேயு பின் எகிப்துக்குப் பயணமானார். சற்றும் சோர்வு இல்லாமல் தொடர்ந்து பணி செய்து கொண்டிருந்தார் அவர்.
எகிப்து நாட்டில் இறைப்பணி செய்துகொண்டிருந்த போது எகிப்து மன்னனின் மகன் இறந்து போனான். மத்தேயு அந்த சூழலை தனது நற்செய்தி அறிவித்தலுக்கு இறைவன் கொடுத்த வாய்ப்பாகக் கொண்டார்.
அரச மாளிகைக்குச் சென்றார் மத்தேயு, “இயேசு நினைத்தால் உங்கள் மகனை உயிர்ப்பிக்க முடியும். அவர் வாழ்ந்த காலத்தில் லாசரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தவர்” என்றார். அரசர் தனது மகனைக் குணமாக்குமாறு மத்தேயுவிடம் வேண்டினார்.
மத்தேயு எகிப்திய மன்னனுடைய மகனைத் தொட்டு உயிர்ப்பித்தார் ! நாடு முழுவதும் அந்த செய்தி பரவியது. பலர் இயேசுவின் சீடர்களாக ஆரம்பித்தனர். மத்தேயுவின் நற்செய்தி அறிவித்தல் பணி தீவிரமடைந்தது.
அரசவையில் இபிஜெனியா என்ற ஒரு இளவரசி இருந்தாள். அவளுக்கு தொழுநோய். தொழுநோயாளிகள் ஆண்டவனின் சாபம் பெற்றவர்கள் என்று கருதப்பட்ட காலம் அது. அவர்களோடு யாரும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்பது மதச் சட்டம். இளவரசியும் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.
இயேசு பல தொழுநோயாளிகளைக் குணப்படுத்தியதைப் பார்த்திருந்த மத்தேயு இளவரசியின் தொழுநோயையும் குணப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அரசவைக்குச் சென்றார். தொழுநோயையெல்லாம் குணப்படுத்த முடியுமா என மக்கள் சந்தேகப்பட்டார்கள். மத்தேயு கவலைப்படவில்லை நேராக இளவரசியிடம் சென்றார். “இயேசுவின் பெயரால் நலம் பெறு” என்றார். அவள் நலம் பெற்றாள்.
மக்களின் நம்பிக்கை வலுவடைய ஆரம்பித்தது. அங்கே கிறிஸ்தவ மதத்துக்கான விதை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊன்றப்பட்டது. மத்தேயு சுமார் இருபத்து மூன்று ஆண்டுகள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் பணிபுரிந்தார்.
அதன் பின் கி.பி 90 ஆம் ஆண்டு. ஆட்சி செய்து கொண்டிருந்த தொமீதியன் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்தான். மத்தேயுவை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று முடிவெடுத்து அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.
மத்தேயு கலங்கவில்லை. இயேசுவுடன் நேரடியாகப் பணியாற்றிய அனுபவமும், உயிர்ப்பு அனுபவத்தில் பங்குபெற்ற அனுபவமும், தூய ஆவியால் நிரப்பப்பட்ட அனுபவமும் அவருடைய நெஞ்சில் இருந்தது. மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. இயேசுவை உறுதியாக பற்றிக் கொண்டார்.
படைவீரர்கள் மத்தேயுவை நிற்க வைத்தார்கள். ஈட்டிகளைக் குறிபார்த்து மத்தேயுவின் உடலில் வீசினார்கள். மத்தேயுவின் உடலை ஈட்டிகள் துளைத்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார்.
பல சீடர்களோடு ஒப்பிடுகையில் மத்தேயு நீண்ட நாட்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். அந்தக் காலத்தில் இழிவாகக் கருதப்பட்ட வரி வசூலிக்கும் தொழிலைச் செய்த மத்தேயு கிறிஸ்தவத்தின் முக்கியமான நபராக மாறினார்.
புதிய ஏற்பாட்டு நூலின் முதல் நூலாகிய “மத்தேயு நற்செய்தி” இவரால் எழுதப்பட்டது தான். அதனால் கிறிஸ்தவம் உள்ள காலம் வரை இவரது பெயர் உச்சரிக்கப்படும்.
நமது பழைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் இயேசுவால் அழைக்கப்பட்டபின் அவருக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் வாழ வேண்டும் என்பதே மத்தேயுவின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடமாகும்.
Praise the lord ..can i get these articles in Book form..i HV bible mandhargal..pls help me ….like ivargal enna anargal..and any other books related to bible…ramesh kanna..director/actor..8825718589…rameshkannaactor@gmail.com
LikeLike