பிலிப்பு
பிலிப்பு, இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர். பைபிளில் அதிகம் பேசப்படாத நபர்.
ஒரு முறை இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது,
“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.
அப்போது பிலிப்பு, “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.
இயேசுவோ, “பிலிப்பே, என்னைக் காண்பதும் தந்தையைக் காண்பதும் ஒன்று தான். என் மீது அன்பு கொள்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவன் மீது என் தந்தையும், நானும் அன்பு கூர்வோம்” என்றார்.
இயேசு இறந்து உயிர்த்தபின் பிலிப்பு தனது பணியில் விஸ்வரூபம் எடுத்தார். தூய ஆவியானவரின் வழிகாட்டுதல் அவரோடு முழுமையாக இருந்தது. தூய ஆவியின் அறிவுறுத்தலின் படியே அனைத்தையும் சென்றார்.
“நீ, காசாவுக்குச் செல்லும் வழியே போ…” தூதர் ஒருமுறை பிலிப்புவிடம் சொன்னார். பிலிப்பு அப்படியே செய்தார்.
அங்கே எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் ஏசாயாவின் நூலை வாசித்துக் கொண்டிருந்தார்.
“அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!”
பிலிப்பு அவரருகே சென்று கேட்டார்
” நீர் வாசிப்பதன் பொருள் தெரியுமா ?”
“இல்லை… யாராவது விளக்கமாய்ச் சொன்னால் மகிழ்வேன். இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? “
“நான் சொல்கிறேன்” பிலிப்பு சொன்னார். இயேசுவைக் குறித்தே அந்த தீர்க்கத்தரிசனம் என்பதை மிக தெளிவாக விளக்கினார். அந்த கணமே அந்த அதிகாரி இயேசுவை ஏற்றுக் கொண்டார்.
“நான் திருமுழுக்கு பெற வேண்டும்” என்றார் அவர். பிலிப்பு மகிழ்ந்தார். போகும் வழியிலேயே ஒரு நீர்நிலையில் அவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். அடுத்த கணமே அங்கிருந்து பிலிப்பு மறைந்து போனார்.
சென்ற இடமெல்லாம் பிலிப்பின் பணி மிகவும் வல்லமையாய் இருந்தது. சமாரியாவில் அவர் பல்வேறு நோயாளிகளை சுகமாக்கியும், பேய்களைத் துரத்தியும், மாபெரும் சாட்சியான வாழ்க்கை வாழ்ந்தார்.
அங்கே சீமோன் என்றொருவர் இருந்தார். அவர் மந்திர தந்திரங்கள் செய்து மக்களை மயக்கி வைத்திருந்தார். அவருடைய சித்து வேலையில் மக்கள் சிக்கிக் கிடந்தனர். அவர்களிடம் பிலிப்பு இயேசுவைப் பற்றிய உண்மையை போதித்தபோது மக்கள் மனம் மாறினர். கடைசியில் சீமோனே மனம் திரும்பினார். மக்கள் வியந்தனர்.
பிலிப்பின் பணி ரஷ்யாவிலுள்ள சைத்தியாவில் நடந்தது என்கிறது வரலாறு. இருபது நீண்ட ஆண்டுகள் இயேசுவைப் பற்றி சைத்தியா நகரில் போதித்து நடந்தார். பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாக நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த அவர், அதன் பின்னர் அங்கிருந்து தற்போதைய துருக்கியிலுள்ள எராப்போலி என்னும் நகரில் வந்து பணியைத் தொடர்ந்தார்.
எராப்போலி நகர் மக்கள் தங்களுடைய கடவுளாக ஒரு பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் சுற்றி நின்று பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பிலிப்பு அவர்கள் முன்னால் வந்து நின்று கையில் சிலுவையை ஏந்தி அந்தப் பாம்பு செத்துப் போகட்டும் என்று சபித்தார். உடனே பலிபீடத்தின் அடியிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு தனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் மீது விஷத்தை உமிழ்ந்து விட்டு இறந்து விட்டது.
மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த விஷம் பட்ட மக்கள் அங்கேயே இறந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த நாட்டு மன்னனின் மகன் !
கூடியிருந்த மக்கள் பிலிப்பு மீது கொலை வெறி கொண்டார்கள். பிலிப்பு அசரவில்லை. மன்னனின் மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் உயிர் பெற்றான். மக்கள் நடு நடுங்கினார்கள்.
பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பிலிப்புவின் செய்கைகள் பயத்தையும் கோபத்தையும் கொடுத்தன. எப்படியும் பிலிப்புவை உயிருடன் விட்டால் இதே போல இன்னும் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். இவனுடைய கடவுளைக் கொன்றது போல சிலுவையில் அறைந்து தான் இவரையும் கொல்லவேண்டும் என்று கூறி, 87 வயதான பிலிப்புவை வளைத்துப் பிடித்தார்கள்.
சிலுவை கொண்டு வரப்பட்டது. பிலிப்பு சிலுவையோடு பிணைத்துக் கட்டப்பட்டார். “இயேசுவே இவர்களை மன்னியும்” என்று பிலிப்பு உரக்கக் கூறினார். அதைக் கேட்ட மக்களின் ஆத்திரம் இரண்டு மடங்கானது. அவரை நோக்கி, கற்களை எறிந்தனர். இரத்தம் சொட்டச் சொட்ட பிலிப்பு மரித்தார்.
பிலிப்புவைப் போல, இயேசுவின் மீது கொண்ட அசைக்க முடியாத விசுவாசம் கொண்டவர்களாகவும், தூய ஆவியின் துணையோடு வாழ்பவர்களாகவும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.