97 யூதா ததேயு
இயேசு கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு உணவின் போது இயேசு தான் மரணமடையப் போவதையும், பின்னர் உயிர்த்தெழப் போவதையும் பற்றி சீடர்களிடம் பேசினார். அப்போது ஒரு சீடர் அவரிடம்,
“ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?” என்று கேட்டார். அந்தக் கேள்வியைக் கேட்டவர் யூதா ததேயு.
அதற்கு இயேசு “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்” என்றார்.
இயேசுவைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு யூதா உண்டு, அது யூதாஸ் ஸ்காரியோத்து. இன்னொரு யூதா இவர். யூதா ததேயு.
இவர் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர். இயேசுவோடு அவருடைய மரணம் வரைக்கும் தொடர்ந்து நடந்தவர். இயேசுவின் வாழ்க்கையும், போதனைகளும் இவரை இறை பணிக்காக தயாராக்கின. இயேசுவின் மரணத்துக்குப் பின் மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தார். இயேசு உயிர்த்த பின்பும் இவரிடம் துணிச்சல் வரவில்லை. ஆனால் தூய ஆவியானவரின் நிரப்புதலுக்குப் பின்பே துணிச்சலுடன் நற்செய்தி அறிவிக்கத் துவங்கினார்.
இயேசுவின் சீடர்களில் பலரும் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர்கள். யூதா சற்று வித்தியாசமானவர். அவர் உழவுத் தொழிலைச் செய்து வந்தார். அராமிக் மொழியுடன் கூடவே கிரேக்க மொழியும் இவருக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய நற்செய்தி அறிவித்தலுக்கு மிகவும் கைகொடுத்தது.
யூதேயா, சமாரியா, மெசபடோமியா, சிரியா மற்றும் லெபனானில் இவருடைய பணி இருந்தது. பைபிளில் யூதா என்றொரு நூல் உண்டு. அந்த நூலை இவர் தான் எழுதினார் எனும் நம்பிக்கை பரவலாக உண்டு. ஆனால் அந்த நூல் காலத்தால் இவருக்குப் பிந்தையது, எனவே இவர் அதை எழுதியிருக்க முடியாது என்பது பல விவிலிய ஆய்வாளர்களின் கருத்தாகும். அந்த நூல் செறிவான ஆன்மீக சிந்தனைகள் அடங்கிய நூல்.
ததேயுவின் பணிகள் மெசபடோமியாவில் மிகவும் வலுவாக இருந்தன. இயேசுவோடு நேரடியாகப் பயணித்த அனுபவத்திலும், தூய ஆவியானவரின் துணையுடனும் அவர் தனது பணியை தீவிரமாய் மேற்கொண்டார். இயேசுவே உண்மையான கடவுள், அவருடைய போதனைகளைப் பின்பற்றுங்கள் என்பதே அவருடைய போதனையின் மையமாய் இருந்தது.
நோய் தீர்க்கும் ஆற்றலும் இவரிடம் மிகுதியாய்க் காணப்பட்டது. ஒருமுறை அங்குள்ள மன்னருக்கு தீரா வியாதி ஒன்று வந்தது. ததேயு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். மன்னனை இயேசுவின் பெயரால் சுகமாக்கினார். இதனால் நாடெங்கும் யூதாவின் பெயரும், அவர் கொண்டு வந்த நற்செய்தியும் பரவியது.
நோயாளிகள் பலர் ததேயுவை நாடி வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் ததேயு நற்செய்தியையும், சுகத்தையும் அளித்தார். “இயேசுவின் பெயரால் நலம்பெறு” என்று சொல்வதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
ஆர்மீனியா பகுதியிலும் ததேயுவின் பணி வீரியத்துடன் இருந்தது. ஆர்மீனியாவில் இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் ஆர்மீனியத் திருச்சபையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்மீனியாவே உலகின் முதல் கிறிஸ்தவ நாடு.
ததேயு கி.பி 43ம் ஆண்டிலிருந்து துவங்கி சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள அவருடைய போதனைகள் காரணமாயின. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஐந்து பேர் ஆர்மீனியா பகுதியில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ததேயு, பாரசீகத்தில் பணியாற்றுவதற்காக வந்தார். பாரசீகத்தில் சிலை வழிபாடு அப்போது மிகுதியாய் இருந்தது. ததேயு அந்த இடத்துக்குச் சென்றார். துணிச்சலுடன் அவர்களிடம் இயேசுவைப் பற்றிப் போதித்தார். அங்கே ஒரு இடத்தில் சிலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ததேயு சிலைகளை வழிபடுவதால் பயனில்லை என்று மக்களிடையே உரையாற்றினார்.
மக்களின் கோபம் கரைகடந்தது. அவர்கள் யூதாவுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவருக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றின. நாட்டில் அது ஒரு மாபெரும் கலவரமாக மாறியது. வெகுண்டெழுந்த சிலை வழிபாட்டு மக்கள் கிறிஸ்தவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். இயேசுவைப் பின்பற்றத் துவங்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கி.பி 67. தற்போதைய ஈரானில் கொலை வெறி கொண்ட மதவாதிகளால் பிடிக்கப்பட்டு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அக்டோபர் 24ம் தியதியை அவர்கள் புனித யூதா ததேயு தினமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
இயேசுவின் மீது ஆழமான விசுவாசம் வேண்டும் என்பதையும், தூய ஆவியானவரால் நிரப்பப் பட வேண்டியது அவசியம் என்பதையும் ததேயுவின் வாழ்க்கை நமக்குப் போதிக்கிறது.