- லூசிபர்
முதல் பாவம் ஏவாள் விலக்கப்பட்ட கனியைத் தின்பதில் துவங்கியது என்பதே பலருடைய எண்ணம். உண்மையில் அதற்கு வெகு காலத்துக்கு முன்பே முதல் பாவம் தோன்றிவிட்டது. அதற்குக் காரணமாய் இருந்தவன் லூசிபர்.
லூசிபர் விண்ணுலகில் கடவுளோடு இருந்த ஒரு தேவ தூதன். மிகவும் அழகானவன். வானதூதர்களிலேயே மிகவும் உயர்ந்தவன். அவனுடைய அந்தஸ்தினாலும், அழகினாலும், அறிவினாலும் அவனுக்கு கர்வம் உண்டாயிற்று. அந்த கர்வம் தான் முதல் பாவம்.
தன்னைப் போல யாரும் இல்லை என நினைத்த அவன் அடுத்த இடத்துக்கு ஆசைப்பட்டான். அது தான் கடவுளின் இடம். கடவுளின் இடத்துக்கு தான் உயரவேண்டும் என ஆசைப்பட்டதால் கடவுள் அவனை மேல் உலகிலிருந்து பாதாள உலகிற்குத் தள்ளி விட்டார். அவனுடைய செயல்கள் கடவுளுக்கு நேர் எதிரான செயல்களாக மாறிப் போயின. கடவுள் கர்வத்தையும், செருக்கையும் அடியோடு வெறுப்பவர். பணிவையும், தாழ்மையையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்.
சாத்தான் பாதாளத்தில் விழுந்ததால் அவனுடைய தெய்வத் தன்மையை இழந்து விட்டான் ஆனால் தேவ தூதர்களுக்குரிய வரங்களை அவன் இழந்து விடவில்லை. அதனால் தான் அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் சாத்தானிடம் இன்றும் இருக்கிறது.
விண்ணுலகின் அரசராக கடவுளும், மண்ணுலகின் அரசனாக சாத்தானும் இருக்கின்றனர். அதனால் தான் உலக செல்வங்களுக்குப் பின்னால் அலையும் போது நாம் உலகின் தலைவனாகிய சாத்தானின் அணியில் நம்மையறியாமலேயே சேர்ந்து விடுகிறோம்.
உதாரணமாக, புகழ் வேண்டும், பணம் வேண்டும், பதவி வேண்டும் என்பதே நமது முதன்மைத் தேடலாகும் போது நமது வாழ்க்கை சாத்தானின் தலைமையின் கீழான வாழ்க்கையாய் மாறுகிறது. அதே நேரம், பாவமற்ற இதயம், எல்லோரையும் அன்பு செய்யும் மனம் , தாழ்மை, மன்னிக்கும் மனம் இவையெல்லாம் நமது தேடலாகும் போது இறைவனின் தலைமையின் கீழ் இணைபவர்களாகிறோம்.
இதைத் தான் இயேசு, “விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள், மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம்” என்று கூறினார்.
அலகை அதாவது சாத்தான் மனிதர்களை இவ்வுலகு சார்ந்த செயல்களில் கவனம் செலுத்தத் தூண்டுகிறது. இறைவனின் ஆவியானவரோ விண்ணுலக வாழ்க்கைக்கான செயல்களைச் செய்ய தூண்டுகிறார். இதுவே தீய ஆவிக்கும், தூய ஆவிக்கும் இடையேயான வேறுபாடு.
சாத்தானை இயேசு சிலுவை மரணத்தின் மூலம் வெற்றி கொண்டார் என்கிறது பைபிள். சாத்தான் உலகின் தீர்ப்பு நாளில் அக்கினிக் கடலில் எறியப்படுவான். சாத்தானின் வழியில் செல்பவர்களுக்கும் அதுவே முடிவு என்கிறது பைபிள்.
மக்கள் தனது வழியில் நடக்கும் போது கடவுள் மகிழ்ச்சியடைகிறார். அதே நேரம் சாத்தான் கடும் கோபமடைகிறான். கடவுளின் வழியில் செல்பவர்களை சோதிக்கிறான். ஆனால் கடவுளின் அனுமதியில்லாமல் அவன் யாரையும் சோதிக்க முடிவதில்லை. கடவுளிடம் முழுமையாய் சரணடையும் மக்கள் சாத்தானின் சோதனைகளை வெல்கிறார்கள்.
சாத்தான் என்பது அவனுடைய பெயர் அல்ல. சாத்தான் என்பதற்கு எதிரி, பகைவன் , குற்றம் சுமத்துபவன் என்பது பொருள். கடவுளுக்கு எதிராகவும், பகைவனாகவும், மனிதர்களைக் குற்றம் சுமத்துபவனாகவும் இருப்பதால் அவனுக்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.
பொய்களின் பிதா அவனே. ஏவாளிடம் முதல் பொய்யைச் சொல்லி தனது வேலையைத் துவங்கி வைத்தான். நாம் பொய் சொல்லும் ஒவ்வொரு கணமும் சாத்தானின் குழுவில் இருக்கிறோம் என்பதே உண்மை.
“இவ்வுலகின் தலைவன்” என இயேசுவே சாத்தானை அழைக்கிறார். உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை சாத்தானிடமிருந்து வருகின்றன என்கிறது பைபிள். பெயல்செபூல், சாத்தான், பேய், சர்ப்பம், வலுசர்ப்பம் என்றெல்லாம் சாத்தானுக்கு பல பெயர்கள் உண்டு.
- சாத்தான் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றிய ஆசைகளை மட்டுமே ஊட்டுபவன்.
- போலித்தனமான போதனைகளை விதைப்பவன். நல்ல விதைகளினிடையே களைகளை விதைப்பவன்.
- கர்வம், பெருமை, சுயநலம் எனும் குணாதிசயங்கள் கொண்டவன்.
- மீட்புக்கு இறைவனின் கருணை தேவையில்லை என்று போதிப்பவன்
- உண்மைக்கு எதிரானவன், பொய்களின் தலைவன். பாதி உண்மையுடன் பொய் எனும் விஷத்தைக் கலக்கி நம்ப வைப்பதில் கில்லாடி.
- நம்மை பாவத்தை நோக்கி இழுப்பவன். சலனங்களின் தலைவன்.
- பயத்தை ஊட்டி கடவுள் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்பவன்.
- அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்ற தூய ஆவியின் கனிகளுக்கு எதிரானவன்.
- மனிதர்கள் ஆன்மீக வளர்ச்சி அடையக் கூடாது என்பதற்காய் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுபவன்.
- சிலுவையில் தோற்றுப் போனவன், ஆனால் அதை யாரும் அறியக்கூடாது என விரும்புபவன்.
சாத்தானின் குணாதிசயங்களை அறிந்து கொள்வோம், நாம் சாத்தானை விட்டு விலகி இறைவனின் வழியில் நடக்க அது துணைபுரியும்.