கடாவர் : திரை விமர்சனம்

*

இயக்குனர் அனுப் பணிக்கரின் முதல் திரைப் படைப்பாக வந்திருக்கிறது கடாவர். அமலா பால் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து, தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு மருத்துவ கிரைம் திரில்லர் வரிசையில் வந்தமர்கிறது. 

ஒரு கொலை நடக்கிறது, கொலையாளி யார் என்பது புரியாத புதிராய் இருக்கிறது. காவல் துறை அந்தப் புதிரை படிப்படியாக விலக்கி கடைசியில் ‘வாவ்’ எனும் ஒரு புள்ளியில் பார்வையாளர்களைக் கொண்டு நிறுத்துகிறது ! இது தான் வழக்கமான கிரைம் திரில்லர் திரைப்படங்களின் அக்மார்க் கட்டமைப்பு. அந்தக் கட்டமைப்பிலிருந்து இந்தத் திரைப்படமும் எங்கும் விலகவில்லை. 

இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் அருமை. அந்தக் கதையைப் படமாக்கிய விதத்தில் அறிமுக இயக்குனர் அனுப் பணிக்கர் வசீகரிக்கிறார். அவருடன் பணியாற்றியிருக்கின்ற கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்றோர அற்புதமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். ஒரு கிரைம் திரில்லருக்கே உரிய கேமரா ஆங்கிள், எடிட்டிங், லைட்டிங் என இந்தத் திரைப்படமும் நம்மை வசீகரிக்கிறது. 

இயக்குநர் பாக்கியராஜ் ஒரு முறை சொன்னார், ‘திரைப்படம் பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு நிறைய கேள்விகள், சந்தேகங்கள் வரவேண்டும். அந்த சந்தேகத்தை அடுத்தடுத்த காட்சிகள் விளக்க வேண்டும், அதுவே சிறப்பான திரைக்கதை’ என்று. இந்தத் திரைப்படத்திலும் பல சந்தேகங்கள் எழுகின்றன. அதில் பல சந்தேகங்களை வரலாற்று அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் திரைக்கதை நிரப்பிக் கொண்டே செல்வது ஒரு மிகப்பெரிய பலம். 

திரைப்படத்தின் சில இடங்கள் வியப்பூட்டுகின்றன. குறிப்பாக அந்த விபத்துக் காட்சியைப் படமாக்கிய விதமும், அதன் எடிட்டிங் வேலையும் நம்மைச் ஸ்தம்பிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளரின் ஏரியல் ஷாட்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளரின் மழைக் காட்சிகள் போன்றவை சிறப்பாக இருக்கின்றன.  

ஒரு கொலை, அதைச் செய்தேன் என வாக்குமொழி கொடுப்பவர் சிறையில் இருக்கிறார் என துவக்கத்திலேயே பார்வையாளரை நிமிர்ந்து அமரச் செய்கிறர் இயக்குனர். அடுத்தடுத்த பரபரப்புகளையும் அழகாகவே பதிவு செய்கிறார். கதைக்களமாக பிண அறையைக் காட்டி, அதிலிருந்தே படத்தை நகர்த்தும் யுத்தியும் புதுமையாக இருக்கிறது. அமலாபால் தான் தயாரிப்பாளர், அவரை படம் முழுக்கக் காட்டவேண்டும் எனும் மெனக்கெடலும் படத்தில் தெரிகிறது. 

‘என்னய்யா ஒரு பேத்தாலஜிஸ்ட் போலீஸ் கூடவே சுத்தறாங்க ?’  எனும் கேள்விக்கு விடையாக, அவருக்கு சிறு வயதிலிருந்தே போலீஸ் வேலையில் ஆர்வம் என்றும், அவர் கிரிமினாலஜி படித்தவர் என்றும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே கவர்ச்சி ஏரியாவில் கால் வைக்கும் அவர், இந்தத் திரைப்படத்தில் மிக வித்தியாசமான கெட்டப்பில் கதைக்காக தன்னை சமர்ப்பித்திருக்கிறார். காஸ்ட்யூம்ஸ் ஏரியா தன் பனியை செவ்வனே செய்திருக்கிறது !

முதல் பாதியில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாவது பாகம் நிவர்த்தி செய்ய முடியாதது ஒரு குறை. எதிர்பார்த்த காட்சிகளும், எதிர்பார்த்த காரணங்களுமாக படம் ஒரே அலைவரிசையில் நகர்கிறது. அதே போல திரைப்படத்தில் வருகின்ற ‘இண்டெலிஜெண்ட் ஃபைண்டிங்க்ஸ்’ எல்லாமே முன்பு எதோ ஒரு திரைப்படத்தில் ஏதோ ஒரு வகையில் பார்த்ததாகவே இருப்பது கதையில் இருக்கின்ற ஒரு பலவீனம். உதாரணமாக சீட் பெல்ட் கழட்டல, வெளியே வர போராடல, பைபிளில் கிடைக்கின்ற ரெஃப்ரன்ஸ் என பல இடங்கள் ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை. தனித்துவமாக, அந்த நிழல்கள் ரவி என்கவுண்டர் நச் ! 

படத்தில் அமலாபாலுக்கு ஒரு பில்டப் கொடுத்து இன்வெஸ்டிகேஷன் டீமில் சேர்த்ததற்காக, எல்லா விஷயங்களையுமே அவர் கண்டுபிடிப்பதாக இருப்பதும், கூடவே இருக்கின்ற போலீஸ்காரர்களெல்லாம் எதுவுமே தெரியாதவர்கள் போலக் காட்டுவதும் படத்திலுள்ள இன்னொரு பலவீனம். அதிலும் மைக்கேல் எனும் பெயர் கொண்ட காவல் துறை அதிகாரிக்கே, காயின் ஆபேல் – கனெக்ட் பண்ண முடியாது என்பது ஒரு ஓட்டை. ஆபேலை ஏன் காயின் கொன்றார் என்பதற்கு அமலா பால் சொல்லும் காரணம், பைபிளில் சொல்லப்படும் காரணத்திற்கு முரணானது ! 

படத்தில் இருக்கின்ற முக்கியமான டுவிஸ்ட் சிறப்பானது. ஆனால் தொடர்ந்து நிறைய இன்வெஸ்டிகேஷன் திரைப்படங்களைப் பார்ப்பவர்களை அது திடுக்கிட வைக்காது என்பது தான் யதார்த்தம். இந்தப் படத்தில் கையாளப்பட்டிருக்கும் மருத்துவத் திருட்டும் எந்த வித புதுமையான அம்சமும் இல்லாமல் சமீபத்தில் பல திரைப்படங்களில் பார்த்த விஷயங்களாகவே இருப்பது சற்றே சலிப்பூட்டுகிறது. 

பரபரப்பான திரைக்கதைக்கு இடையே வரும் நீண்ட பிளாஷ்பேக், எதேச்சையாகச் சந்தித்துக் கொண்டு வளவளாவென பேசும் பஸ் காட்சி போன்றவையெல்லாம் சற்றே வலிந்து திணிக்கப்பட்ட உணர்வைத் தருகிறது. முதல் காட்சியில் வெற்றியைக் கைது செய்வது எதற்காக, ஆயுள் கைதியாக ஏன் மாற்றப்பட்டார் ? என்ன பின்னணி என்பதெல்லாம் தெளிவில்லை. அல்லது எனக்குப் புரியவில்லை. 

கடாவர் எனும் புதுமையான பெயரைத் தேர்வு செய்து ( ஒரு ஆங்கிலப் படம் இந்தப் பெயரில் உண்டு என்பது வேறு விஷயம் ) அதில் பல அறிவு பூர்வமான செய்திகளை இணைத்து திரைக்கதை, இயக்கம் செய்ததில் இயக்குனர் அனுப் வெற்றி பெற்றிருக்கிறார். வசனங்களை இன்னும் கூர்மையாக்கி, திரைக்கதை இன்வெஸ்டிகேஷனில் கொஞ்சம் நவீனத்தைச் செலுத்தியிருந்தால் படம் இன்னும் வசீகரமாகியிருக்கும். 

எனினும், தனது முதல் படத்திலேயே சிறப்பான ஒரு படத்தைத் தந்திருக்கும் இயக்குநரை வாழ்த்துவோம். இளையவர்கள் வரட்டும், புதுமைகள் தொடரட்டும். 

*

A Love Song ! Rayil

காத்திருக்கும்
என் மனம் துடிக்கும்
அவன் எங்கே
இன்னும் காணலையே
தடதடக்கும்
ரயில் பரபரக்கும்
என் உயிரும்
வந்து சேரலையே

ரயிலும் போகும்
இதயம் நோகும்
காதலன் நினைப்பில் கலங்குறேனே

இரு
இரும்பில் ஓடும்
ரயிலில் வாடும்
வருகை பார்த்து ஏங்குறேனே
*

அட‌
தாமதிப்பேனோ
கண்ணே
உன் முன்பே வருவேனே ?
அட‌
ரயிலும் போயிடும் முன்னே
நான் உன்னைச் சேர்வேனே
*
நான்
சின்னஞ் சிட்டு
நீ காதல் பட்டு
பின்
சொட்டுச் சொட்டாய் வரைந்தாய்
கன்னம் தொட்டு

நான்
தோளை தொட்டு
நீ வேலை விட்டு
பின்
கட்டிக் கிட்டுக் கிடந்தோம்
வானம் தொட்டு

*

ஆனந்தம் த‌ருமா
சோகமே வருமா ?
மயிலும் அழு திடுமா ?

ஏக்கமும் மிகுமா
தாமதம் தகுமா
ரயிலும் போய் விடுமா ?

நான் குழலாய் கிடந்தேனே
எனை இசையாய் ப‌டித்தாயே
நான் கல்லாய்க் கிடந்தேனே
எனை சிலையாய் வடித்தாயே
*

நொடிகள் மணியென‌
நிமிடமும் தினமென‌
உனக்காய் காத்திருப்பேன்

பயமும் மெலிதென‌
விரல்களும் குளிரென‌
தவிப்பில் காத்திருப்பேன்

நான் தவமாய்க் கிடந்தேனே
எனை வரமாய் அடைந்தாயே
நான் தனியாய் நடந்தேனே
என் உயிராய் இணைந்தாயே

தாயே !

 

இசை : சஞ்சே

வரிகள் : சேவியர்

——————————–

நானாக நானும் இல்லையே

எங்கு சென்ற போதும்

ஏதேதோ எண்ணம் கொல்லும்

 

தாயான தாயும் இல்லையே

இங்கு இந்த நேரம்

நியாயமா….

 

ஆயிரம் ஆயிரம் ஞாபகம் நெஞ்சினில்

நாளுமே நீங்காதே

என் அன்னையே

 

ஆரிரோ பாடிய ஞாபகம் நெஞ்சில்

என்றுமே நீங்காதே

என் அன்னையே

 

*

 

பாசமா நேசமா

உன் பாதம் கட்டிக் கொண்டேன் நான்

வாழவா நான் ஆள‌வா

பசி அள்ளித் தின்றாய் நீ

 

தந்தையா அன்னையா

என் சொந்த பந்தம் எல்லாமே நீ

கந்தையா கண்ணீரா

அந் நாட்கள் சொர்க்கம் தானா ?

 

 

எங்கே

நெற்றி தனைத் தொடும் அந்த விரல்

காண

நெஞ்சம் தவிக்கிறதோ

 

எங்கே

என்னைக் கொஞ்சு கின்ற செல்லக் குரல்

மீண்டும் அது ஒலித்திடுமோ

 

*

 

பஞ்சணை மெத்தையும் வந்திடலாம்

அன்னையின் சேலையைப் போல் வருமா

 

அறுசுவை உணவுகள் வந்திடலாம்

அன்னையின் கைப்பிடி போல் வருமா ?

 

பேர் புகழ் தேசமும் தந்திடலாம்

அன்னையின் வார்த்தையைப் போல் வருமா ?

 

ஆயிரம் நேசங்கள் பூத்திடலாம்

அன்னையின் புன்னகை போல் வருமா ?

 

தாயே

வெற்றி பெற்றேன் நானே

 

என் தாயே

என்னைக் காண வாயேன்.

 

நீயே

எந்தன் ஜீவன் தாயே..

இன்று

நீயும் இல்லா வாழ்க்கை கொல்லுதே

 

Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) Tips – In Tamil

நேர்முகத் தேர்வில் மிக முக்கியமான கட்டம் டெலிபோனிக் இன்டர்வியூ எனப்படும் தொலைபேசி உரையாடல். அதில் கலந்து கொள்ள சில சூட்சுமங்கள் இருக்கின்றன. அவற்றை எளிமையாய் விளக்குகிறது இந்த வீடியோ !

 

ஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து !

லண்டனிலிருந்து இயங்கி வரும் டி.பி.பி என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவரும் வெற்றிமணி பத்திரிகை இணைந்து “ஜல்லிக்கட்டு”க்கு ஆதரவாக ஒரு பாடலை வெளியிட்டிருக்கின்றனர்.

இசை : சஞ்சே சிவா
பாடல் : சேவியர்

வா

கைகள் ஒன்றாய் சேர்ந்திடலாம்
சீறி வரும் போதும்
சூழ்ச்சியை அழிப்போம்

வா
வீரம் கூடிடலாம்
மெல்ல மெல்ல கொல்லும்
வஞ்சனை அறுத்திடலாம்

வா
மண்ணோடு சேர்ந்திடவா
தமிழ் மண்ணை அள்ளித் தான்
நெற்றியிலே பூசிலாம் வா

வா
ஏறினை தழுவிட வா
மீறி மீறி நாளும்
சீறிட வா

ஜல்லிக்கட்டு
எங்கள் இன உரிமை என சொல்லு

ஜல்லிக்கட்டு
எங்கள் பிறப்புரிமை என நில்லு

ஜல்லிக்கட்டு
அது ஆயிரம் காலப் பழசென சொல்லு
*

பாலைக் குடித்த
தமிழ்ப் பாசத்தினைக் காட்டு

காளை அவிழ்த்து
தான் வீரத்தினைக் கூட்டு

சீறும் புயலென
துள்ளி வரும் திமிலினை பாத்து

சின்ன சிங்கமென
திமிறினைக் காட்டு

ஜல்லிக்கட்டுதான்
வீர விளையாட்டு
வெல்லும் உந்தன் மன வீரத்தினைக் காட்டு

தோள் தாழுமோ
வான் வீழுமோ
நாலாயிரம் ஆண்டைய‌
பண்பாடும் சாயுமோ ?

சங்கத்துத் தமிழனின்
அங்கத்தில் திரியுற‌
தில்லெனும் சொல்லே
ஜல்லிக்கட்டுதான்

வில்லென நிமிந்திடும்
அம்பென சீறிடும்
தமிழனின் திமிரது
ஜல்லிக்கட்டு தான்

ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
தள்ளிக்கிட்டு
ஜல்லிக்கட்ட‌ வா

மாட்டுகொம்பில்
சல்லி கட்டி
மல்லுக்கட்ட வா

வீரம் ஈரம்
நெஞ்சில் கொண்ட‌
செந்தமிழா வா

தூக்கம் விட்டு வா
காளை தோளை தட்ட வா !

அறத்தினை காத்தது
தமிழினம் தான்

திறத்தினை காட்டிய‌
தமிழினம் தான்

வெறுப்பினை நீக்கிய‌
தமிழினம் தான்

கண்டம் விட்டுத் தாண்டினாலும்
ஜல்லிக் கட்ட வா !

அலை கடலினை
குடிச்சிட நினைச்சா

பெரும் புயலினை
பிடிச்சிட நினைச்சா

அடை மழையினை
துடைச்சிட நினைச்சா
முடியுமா முடியுமா
உன்னால முடியுமா !!

எமதணுவிலும் கலந்திட்ட கலைடா
எவர் தடுப்பினும் மீறிடும் நிலைடா

ஜல்லிக்கட்டு தான்
களமாடிடும் கலைதான்
விழுப்புண்களும் விலை தான்
இது எங்களின் நிலை தான்

பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்

 1. பரிசேயர்

Image result for pharisees

இயேசுவின் காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு குழு இருந்தது, அது பரிசேயர் குழு. கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாங்கள் மிகச்சிறந்த ஆன்மீகவாதிகள் என தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் மத அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். சட்டங்களின் அடிப்படையில் தவறாமல் நடந்து வந்தவர்கள்.

சட்டமா ? மனிதநேயமா எனும் கேள்வி எழும்போதெல்லாம் சட்டமே முக்கியம் என சட்டத்தின் பக்கம் சாய்பவர்கள். மறைநூலை அலசி ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை அறிந்து வைத்திருப்பவர்கள். தங்கள் செயல்கள் எதுவும் நியமங்களை மீறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள்.

கடவுளின் வார்த்தையை நம்புபவர்கள். அதே நேரத்தில் பாரம்பரியமாய் செய்து வரும் செயல்களை விட்டு விட மறுப்பவர்கள். சமூக, அரசியல் குழுக்களில் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. தங்களுடைய சட்ட அறிவினாலும், மறைநூல் அறிவினாலும் மற்றவர்களை அடக்கி ஆள்பவர்கள்.

சமூக அந்தஸ்தைப் பொறுத்தவரை இவர்கள் நடுத்தர வர்க்கத்தினரே. ஆனாலும் மறை நூல் அறிவின் காரணமாக செபக்கூடங்களிலெல்லாம் சிறப்பிடம் பெற்றனர். பொதுமக்களுக்கு இவர்கள் மேல் அச்சம் கலந்த மரியாதை இருந்தது.

ஆன்மா அழியாது என்றும், இறப்பு முடிவல்ல, உயிர்ப்பு உண்டு என்பதையெல்லாம் இவர்கள் நம்பினார்கள். அதே போல கடவுள் வல்லமையுடையவர், அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர் என்றும் நம்பினார்கள். அதே நேரத்தில் மனித முடிவுகளும் முக்கியமானவை எனும் சிந்தனை அவர்களிடம் இருந்தது.

சதுசேயர்கள் எனும் இன்னொரு குழுவினர் அப்போது இருந்தனர். அவர்களோடு எப்போதுமே இவர்கள் முரண்பட்டே இருந்தனர்.

பரிசேயர்களில் பல வகையினர் உண்டு. ஒருவகையினர் காணிக்கைகள் இடும்போது எல்லோரும் பார்க்கும் படியாக மட்டுமே காணிக்கையிடுவார்கள். தர்மம் போடும்போது பக்கத்தில் போகிறவர்களை அழைத்து நிற்கவைத்து தர்மம் செய்யும் பரிசேயர்கள் இருந்தனர். பாவம் செய்துவிடக் கூடாது எனும் எச்சரிக்கையுடன் கண்களை மூடியும், தரையைப் பார்த்தும் நடந்து சென்ற பரிசேயர்களும் இருந்தார்கள்.

சமய நூல்களுக்கு விளக்கம் கொடுக்கும் இவர்கள் இயேசுவோடு எப்போதும் முரண்பட்டார்கள். காரணம், இவர்கள் சட்டங்களை நேசித்தார்கள், இயேசுவோ மனிதர்களை நேசித்தார்.

பேய்பிடித்திருந்த ஒருவனுடைய பேயை இயேசு ஓட்டியபோது, “இவன் பேய்களின் தலைவனான பெயல்சபூலைக் கொண்டு தான் பேயோட்டுகிறான்” என்றனர்.

இயேசு அவர்களிடம், “சாத்தான் சாத்தானுக்கு எதிராக எழுவானா ? வீடோ நாடோ தனக்கு எதிராக தானே எழுமா ?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

இன்னொரு முறை, “உங்க சீடர்கள் சாப்பிடும் முன் கை கழுவுவதில்லை. இது மரபு மீறுதல்” என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவோ அவர்களிடம், “வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது. வாயினின்று வெளிவரும் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை போன்ற தீய எண்ணங்களே மனிதனை தீட்டுப்படுத்தும்” என்றார்.

இன்னொரு முறை அவர்கள் இயேசுவிடம் வந்து, “ஒருவர் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா ?” என்று கேட்டனர். ஏனெனில் விலக்குச் சீட்டு கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என மோசே சொல்லியிருந்தார். இயேசு அவர்களிடம்,

“ஆதியில் கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்த போது அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்றே ஆசைப்பட்டார். உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே மண விலக்கை அனுமதித்தார். தவறான நடத்தை தவிர எதற்காகவும் மனைவியை விலக்கி விடக் கூடாது. அப்படிச் செய்பவர் விபச்சாரப் பாவம் செய்கிறார்” என்றார்.

இப்படி இயேசுவை நோக்கி பரிசேயர்கள் நீட்டிய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இயேசு மிகவும் தீர்க்கமான பதிலை கொடுத்து வந்தார்.

வெளிவேடமான வாழ்க்கையை இயேசு பரிசேயத்தனம் என்று பெயரிட்டு அழைத்தார். இதயத்தில் தூய்மையையே அவர் விரும்பினார்.

பரிசேயத்தனத்தின் அடையாளங்களில் சில இவை.

 1. வெளிப்படையான நேர்மையான செயல்களில் மட்டுமே கவனம் இருக்கும்.
 2. தாங்கள் செய்கின்ற மத செயல்களான நோன்பு, காணிக்கை போன்றவற்றைப் பெருமையாக பேசித்திரிவர்.
 3. பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை இவர்கள் மனதில் உண்டு.
 4. பிறரைப் பற்றி தாழ்வாகவே எப்போதும் நினைப்பார்கள்.
 5. தங்களது குடும்பக் கடமைகளை உதறிவிட்டு மத செயல்களையும், சட்டங்களையும் தூக்கிப் பிடிப்பார்கள்.
 6. தாங்கள் போதிக்கும் நல்ல விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த மாட்டார்கள்.
 7. பிறரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியமானதாய் தெரியும். புகழ், பெருமை, கௌரவம் எல்லாம் கிடைக்க வேண்டும் என விரும்புவார்கள்.
 8. ஏழைகளை வஞ்சிப்பதற்குத் தயங்க மாட்டார்கள்.
 9. பண ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
 10. உண்மையான இறைவாக்கினர்களையும், இறை மனிதர்களையும் வெறுப்பார்கள்.

இத்தகைய சிந்தனைகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்போம். அத்தகைய சிந்தனைகளை நம் மனதை விட்டு அகற்றுவோம்.

பரிசேயத்தனம் அல்ல, பரிசுத்தமே நமக்குத் தேவை.

பைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்

 1. லூசிபர்

 Image result for lucifer the fallen angel

முதல் பாவம் ஏவாள் விலக்கப்பட்ட கனியைத் தின்பதில் துவங்கியது என்பதே பலருடைய எண்ணம். உண்மையில் அதற்கு வெகு காலத்துக்கு முன்பே முதல் பாவம் தோன்றிவிட்டது. அதற்குக் காரணமாய் இருந்தவன் லூசிபர்.

லூசிபர் விண்ணுலகில் கடவுளோடு இருந்த ஒரு தேவ தூதன். மிகவும் அழகானவன். வானதூதர்களிலேயே மிகவும் உயர்ந்தவன். அவனுடைய அந்தஸ்தினாலும், அழகினாலும், அறிவினாலும் அவனுக்கு கர்வம் உண்டாயிற்று. அந்த கர்வம் தான் முதல் பாவம்.

தன்னைப் போல யாரும் இல்லை என நினைத்த அவன் அடுத்த இடத்துக்கு ஆசைப்பட்டான். அது தான் கடவுளின் இடம். கடவுளின் இடத்துக்கு தான் உயரவேண்டும் என ஆசைப்பட்டதால் கடவுள் அவனை மேல் உலகிலிருந்து பாதாள உலகிற்குத் தள்ளி விட்டார். அவனுடைய செயல்கள் கடவுளுக்கு நேர் எதிரான செயல்களாக மாறிப் போயின. கடவுள் கர்வத்தையும், செருக்கையும் அடியோடு வெறுப்பவர். பணிவையும், தாழ்மையையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்.

சாத்தான் பாதாளத்தில் விழுந்ததால் அவனுடைய தெய்வத் தன்மையை இழந்து விட்டான் ஆனால் தேவ தூதர்களுக்குரிய வரங்களை அவன் இழந்து விடவில்லை. அதனால் தான் அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் சாத்தானிடம் இன்றும் இருக்கிறது.

விண்ணுலகின் அரசராக கடவுளும், மண்ணுலகின் அரசனாக சாத்தானும் இருக்கின்றனர். அதனால் தான் உலக‌ செல்வங்களுக்குப் பின்னால் அலையும் போது நாம் உலகின் தலைவனாகிய சாத்தானின் அணியில் நம்மையறியாமலேயே சேர்ந்து விடுகிறோம்.

உதாரணமாக, புகழ் வேண்டும், பணம் வேண்டும், பதவி வேண்டும் என்பதே நமது முதன்மைத் தேடலாகும் போது நமது வாழ்க்கை சாத்தானின் தலைமையின் கீழான வாழ்க்கையாய் மாறுகிறது. அதே நேரம், பாவமற்ற இதயம், எல்லோரையும் அன்பு செய்யும் மனம் , தாழ்மை, மன்னிக்கும் மனம் இவையெல்லாம் நமது தேடலாகும் போது இறைவனின் தலைமையின் கீழ் இணைபவர்களாகிறோம்.

இதைத் தான் இயேசு, “விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள், மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம்” என்று கூறினார்.

அலகை அதாவது சாத்தான் மனிதர்களை இவ்வுலகு சார்ந்த செயல்களில் கவனம் செலுத்தத் தூண்டுகிறது. இறைவனின் ஆவியானவரோ விண்ணுலக வாழ்க்கைக்கான செயல்களைச் செய்ய தூண்டுகிறார். இதுவே தீய ஆவிக்கும், தூய ஆவிக்கும் இடையேயான வேறுபாடு.

சாத்தானை இயேசு சிலுவை மரணத்தின் மூலம் வெற்றி கொண்டார் என்கிறது பைபிள். சாத்தான் உலகின் தீர்ப்பு நாளில் அக்கினிக் கடலில் எறியப்படுவான். சாத்தானின் வழியில் செல்பவர்களுக்கும் அதுவே முடிவு என்கிறது பைபிள்.

மக்கள் தனது வழியில் நடக்கும் போது கடவுள் மகிழ்ச்சியடைகிறார். அதே நேரம் சாத்தான் கடும் கோபமடைகிறான். கடவுளின் வழியில் செல்பவர்களை சோதிக்கிறான். ஆனால் கடவுளின் அனுமதியில்லாமல் அவன் யாரையும் சோதிக்க முடிவதில்லை. கடவுளிடம் முழுமையாய் சரணடையும் மக்கள் சாத்தானின் சோதனைகளை வெல்கிறார்கள்.

சாத்தான் என்பது அவனுடைய பெயர் அல்ல. சாத்தான் என்பதற்கு எதிரி, பகைவன் , குற்றம் சுமத்துபவன் என்பது பொருள். கடவுளுக்கு எதிராகவும், பகைவனாகவும், மனிதர்களைக் குற்றம் சுமத்துபவனாகவும் இருப்பதால் அவனுக்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.

பொய்களின் பிதா அவனே. ஏவாளிடம் முதல் பொய்யைச் சொல்லி தனது வேலையைத் துவங்கி வைத்தான். நாம் பொய் சொல்லும் ஒவ்வொரு கணமும் சாத்தானின் குழுவில் இருக்கிறோம் என்பதே உண்மை.

“இவ்வுலகின் தலைவன்” என இயேசுவே சாத்தானை அழைக்கிறார். உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை சாத்தானிடமிருந்து வருகின்றன என்கிறது பைபிள். பெயல்செபூல், சாத்தான், பேய், சர்ப்பம், வலுசர்ப்பம் என்றெல்லாம் சாத்தானுக்கு பல பெயர்கள் உண்டு.

 

 1. சாத்தான் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றிய ஆசைகளை மட்டுமே ஊட்டுபவன்.
 2. போலித்தனமான போதனைகளை விதைப்பவன். நல்ல விதைகளினிடையே களைகளை விதைப்பவன்.
 3. கர்வம், பெருமை, சுயநலம் எனும் குணாதிசயங்கள் கொண்டவன்.
 4. மீட்புக்கு இறைவனின் கருணை தேவையில்லை என்று போதிப்பவன்
 5. உண்மைக்கு எதிரானவன், பொய்களின் தலைவன். பாதி உண்மையுடன் பொய் எனும் விஷத்தைக் கலக்கி நம்ப வைப்பதில் கில்லாடி.
 6. நம்மை பாவத்தை நோக்கி இழுப்பவன். சலனங்களின் தலைவன்.
 7. பயத்தை ஊட்டி கடவுள் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்பவன்.
 8. அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்ற தூய ஆவியின் கனிகளுக்கு எதிரானவன்.
 9. மனிதர்கள் ஆன்மீக வளர்ச்சி அடையக் கூடாது என்பதற்காய் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுபவன்.
 10. சிலுவையில் தோற்றுப் போனவன், ஆனால் அதை யாரும் அறியக்கூடாது என விரும்புபவன்.

சாத்தானின் குணாதிசயங்களை அறிந்து கொள்வோம், நாம் சாத்தானை விட்டு விலகி இறைவனின் வழியில் நடக்க அது துணைபுரியும்.

 

 

பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி

 1. தூய ஆவி

Image result for Holy Spirit apostle

கிறிஸ்தவத்தின் கடவுள் மூவொரு கடவுள் என அழைக்கப்படுகிறார். தந்தை, மகன் மற்றும் தூய ஆவியானவர் என்பதே திருத்துவத்தின் மூன்று நிலைகள்.

இயேசு கிறிஸ்து மனிதனாக அவதாரம் எடுத்து மனிதர்களின் மீட்புக்காய் தன்னைப் பலியாக்கினார். தூய்மையான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். “அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்” ( 1 யோவான் 2 :6) என்கிறது பைபிள். அதாவது கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பது அவர்களுக்கான கட்டளை.

தூய ஆவியானவர் ‘தேற்றுபவர்’ என அழைக்கப்படுகிறார். இயேசு சிலுவையில் பலியாகி, உயிர் துறந்து பின் விண்ணேற்பு அடைந்தபின் தூய ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார். தூய ஆவியானவர் அவரை ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் அமர்ந்து அவர்களுக்கு வழிகாட்டுகிறார்.

இயேசு தனது மரணத்துக்கு முன்பே தூய ஆவியானவரைப் பற்றியும், அவருடைய வருகையைப் பற்றியும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் சீடர்கள் அப்போது அதைப் புரிந்து கொள்ளவில்லை. ‘நான் விடைபெறுவது நல்லது தான். நான் சென்றால் தான் தூய ஆவியானவர் பூமிக்கு வருவார். அவர் வந்தால் நீங்கள் பலம் அடைவீர்கள், பலன் அடைவீர்கள். அவர் உங்கள் உள்ளங்களில் அமர்ந்து செயலாற்றுவார்’ என்றார் இயேசு.

அதன்படியே இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இறந்தார். உயிர்த்தார்.

நாற்பதாவது நாள். பெந்தேகோஸ்தே நாள். அன்று தான் தூய ஆவியானவர் முழு வல்லமையோடு பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வந்து சீடர்களின் இதயங்களில் நிரம்பினார். அதுவரை அச்சத்தோடு அறைகளில் அடைந்து கிடந்தவர்கள், உடனே தங்களது அச்சங்களை உதறிவிட்டு எழுந்தார்கள்.

ஏதோ ஒரு புத்துணர்ச்சி தங்களை நிரப்பியதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தூய ஆவியானவர் என்பதை அறிந்த போது அவர்கள் சிலிர்த்துப் போனார்கள். இயேசுவைப் பற்றிய அறிவித்தலுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க அவர்கள் களமிறங்கினார்கள்.

தூய ஆவியானவர் மக்களின் இதயங்களின் வாழ்ந்து அவர்களை வழிகாட்டுபவராக இருக்கிறார். அவருடைய முதன்மையான பணியே, இயேசுவின் வாழ்க்கையின் படி வாழ மக்களைத் தூண்டுவது தான். உள்ளுக்குள்ளே மனசாட்சியைப் போல ஒலிக்கின்ற குரல் தூயஆவியானவருடையது. அது அவரை அழைக்கும் மக்களுக்கு மட்டுமே வழிகாட்டும்.

யாரையுமே வலுக்கட்டாயமாய் ஆளுமை செய்வதோ, வன்முறையாய் ஒரு சிந்தனையை மனிதரிடம் புகுத்துவதோ கிடையாது. எனவே தான் பைபிள் ‘தூய ஆவியால் நிரப்பப்படுதல்’ என்கிறது. அதையே தீய ஆவியைப் பற்றிப் பேசும்போது, ‘தீய ஆவி பிடித்துக்கொள்ளும்’ என்கிறது. ஒருவரை வலுக்கட்டாயமாய்ப் பற்றிப் பிடித்துக் கொண்டால் தீய ஆவி எனவும், ஒருவருடைய அழைப்புக்கு இணங்கி வந்து அன்புடன் வழிகாட்டினால் தூய ஆவி என்றும் எளிமையாய்ப் புரிந்து கொள்ளலாம்.

“தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்” (எபேசியர் 4 :30).

“தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.( 1 கொரி 2 : 10 ).

“ஒரே ஆவியாரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் ஆற்றல்களைப் பகிர்ந்தளிக்கிறார். ( 1 கொரி 12 :11 ) போன்ற பல்வேறு வசனங்கள் தூய ஆவி என்பது ‘உணர்வும், அறிவும், விருப்பமும்’ எல்லாம் உடைய ஒரு நபர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அவர் பேசுகிறார், செபிக்கிறார், கற்றுக் கொடுக்கிறார், தேற்றுகிறார், கண்டிக்கிறார் என பல்வேறு பணிகள் அவர் வெறும் ஒரு ஆற்றல் அல்ல, ஆற்றல் நிரம்பிய கடவுள் என்பதை விளக்குகின்றன.

அவர் திரித்துவக் கடவுளில் ஒருவராக இருப்பதால் தான், “தந்தை, மகனாகிய இயேசு, தூய ஆவி’ எனும் மூவரின் பெயராலும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது.

தூய ஆவியானவர் எப்போதுமே தன்னை  முன்னிலைப்படுத்துபவராக இல்லாமல், இயேசுவை முன்னிலைப் படுத்துபவராகவே இருக்கிறார். பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய ஆற்றல் மிக்கவராக அவர் இருக்கிறார். எனவே தான் தூய ஆவியானவரால் நிரம்பப் பெறுதல் தூய்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு அத்தியாவசியம் என்கிறது பைபிள். பைபிளில் உள்ள வார்த்தைகள் எல்லாமே தூய ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டவை என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை.

தூய ஆவியானவர் உலகிற்கு பாவம் தீர்ப்பு நீதி போன்றவற்றை சுட்டிக் காட்டுபவராகவும், உண்மை வழியில் நடத்துபவராகவும், புதுப்பிப்பவராகவும், வழிகாட்டுபவராகவும், இயேசுவை நமக்கு வெளிப்படுத்துபவராகவும், பலப்படுத்துபவராகவும், புனிதப்படுத்துபவராகவும், நிறைப்பவராகவும், கற்பிப்பவராகவும், ஒன்றிணைப்பவராகவும், சுதந்திரம் தருபவராகவும், ஆறுதலளிப்பவராகவும் என பல்வேறு பணிகளில் நம்மோடு இணைந்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி. தூய ஆவியானவரை இதயத்தில் வரவேற்று நமது வாழ்க்கையை தினம் தோறும் புனிதமான வழியில் தொடர்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் உயர்படி.

பைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு

97 யூதா ததேயு

Image result for Judas thaddeus apostle

இயேசு கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு உணவின் போது இயேசு தான் மரணமடையப் போவதையும், பின்னர் உயிர்த்தெழப் போவதையும் பற்றி சீடர்களிடம் பேசினார். அப்போது ஒரு சீடர் அவரிடம்,

“ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?” என்று கேட்டார். அந்தக் கேள்வியைக் கேட்டவர் யூதா ததேயு.

அதற்கு இயேசு  “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்” என்றார்.

இயேசுவைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு யூதா உண்டு, அது யூதாஸ் ஸ்காரியோத்து. இன்னொரு யூதா இவர். யூதா ததேயு.

இவர் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர். இயேசுவோடு அவருடைய மரணம் வரைக்கும் தொடர்ந்து நடந்தவர். இயேசுவின் வாழ்க்கையும், போதனைகளும் இவரை இறை ப‌ணிக்காக தயாராக்கின‌. இயேசுவின் மரணத்துக்குப் பின் மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தார். இயேசு உயிர்த்த பின்பும் இவரிடம் துணிச்சல் வரவில்லை. ஆனால் தூய ஆவியானவரின் நிரப்புதலுக்குப் பின்பே துணிச்சலுடன் நற்செய்தி அறிவிக்கத் துவங்கினார்.

இயேசுவின் சீடர்களில் பலரும் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர்கள். யூதா சற்று வித்தியாசமானவர். அவர் உழவுத் தொழிலைச் செய்து வந்தார். அராமிக் மொழியுடன் கூடவே கிரேக்க மொழியும் இவருக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய நற்செய்தி அறிவித்தலுக்கு மிகவும் கைகொடுத்தது.

யூதேயா, சமாரியா, மெசபடோமியா, சிரியா மற்றும் லெபனானில் இவருடைய பணி இருந்தது. பைபிளில் யூதா என்றொரு நூல் உண்டு. அந்த நூலை இவர் தான் எழுதினார் எனும் நம்பிக்கை பரவலாக உண்டு. ஆனால் அந்த நூல் காலத்தால் இவருக்குப் பிந்தையது, எனவே இவர் அதை எழுதியிருக்க முடியாது என்பது பல‌ விவிலிய ஆய்வாளர்களின் கருத்தாகும். அந்த நூல் செறிவான ஆன்மீக சிந்தனைகள் அடங்கிய நூல்.

ததேயுவின் பணிகள் மெசபடோமியாவில் மிகவும் வலுவாக இருந்தன. இயேசுவோடு நேரடியாகப் பயணித்த அனுபவத்திலும், தூய ஆவியானவரின் துணையுடனும் அவர் தனது பணியை தீவிரமாய் மேற்கொண்டார். இயேசுவே உண்மையான கடவுள், அவருடைய போதனைகளைப் பின்பற்றுங்கள் என்பதே அவருடைய போதனையின் மையமாய் இருந்தது.

நோய் தீர்க்கும் ஆற்றலும் இவரிடம் மிகுதியாய்க் காணப்பட்டது. ஒருமுறை அங்குள்ள மன்னருக்கு தீரா வியாதி ஒன்று வந்தது. ததேயு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். மன்னனை இயேசுவின் பெயரால் சுகமாக்கினார். இதனால் நாடெங்கும் யூதாவின் பெயரும், அவர் கொண்டு வந்த நற்செய்தியும் பரவியது.

நோயாளிகள் பலர் ததேயுவை நாடி வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் ததேயு நற்செய்தியையும், சுகத்தையும் அளித்தார். “இயேசுவின் பெயரால் நலம்பெறு” என்று சொல்வதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

ஆர்மீனியா பகுதியிலும் ததேயுவின் பணி வீரியத்துடன் இருந்தது. ஆர்மீனியாவில் இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் ஆர்மீனியத் திருச்சபையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்மீனியாவே உலகின் முதல் கிறிஸ்தவ நாடு.

ததேயு கி.பி 43ம் ஆண்டிலிருந்து துவங்கி சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள அவருடைய போதனைகள் காரணமாயின. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஐந்து பேர் ஆர்மீனியா பகுதியில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ததேயு, பாரசீகத்தில் பணியாற்றுவதற்காக வந்தார். பாரசீகத்தில் சிலை வழிபாடு அப்போது மிகுதியாய் இருந்தது. ததேயு அந்த இடத்துக்குச் சென்றார். துணிச்சலுடன் அவர்களிடம் இயேசுவைப் பற்றிப் போதித்தார். அங்கே ஒரு இடத்தில் சிலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ததேயு சிலைகளை வழிபடுவதால் பயனில்லை என்று மக்களிடையே உரையாற்றினார்.

மக்களின் கோபம் கரைகடந்தது. அவர்கள் யூதாவுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவருக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றின. நாட்டில் அது ஒரு மாபெரும் கலவரமாக மாறியது. வெகுண்டெழுந்த சிலை வழிபாட்டு மக்கள் கிறிஸ்தவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். இயேசுவைப் பின்பற்றத் துவங்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கி.பி 67. தற்போதைய ஈரானில் கொலை வெறி கொண்ட மதவாதிகளால் பிடிக்கப்பட்டு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அக்டோபர் 24ம் தியதியை அவர்கள் புனித யூதா ததேயு தினமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

இயேசுவின் மீது ஆழமான விசுவாசம் வேண்டும் என்பதையும், தூய ஆவியானவரால் நிரப்பப் பட வேண்டியது அவசியம் என்பதையும் ததேயுவின் வாழ்க்கை நமக்குப் போதிக்கிறது.

பைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு

பிலிப்பு

Image result for Philip jesus apostle

பிலிப்பு, இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர். பைபிளில் அதிகம் பேசப்படாத நபர்.

ஒரு முறை இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது,

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.

அப்போது பிலிப்பு, “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.

இயேசுவோ, “பிலிப்பே, என்னைக் காண்பதும் தந்தையைக் காண்பதும் ஒன்று தான். என் மீது அன்பு கொள்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவன் மீது என் தந்தையும், நானும் அன்பு கூர்வோம்” என்றார்.

இயேசு இறந்து உயிர்த்தபின் பிலிப்பு தனது பணியில் விஸ்வரூபம் எடுத்தார். தூய ஆவியானவரின் வழிகாட்டுதல் அவரோடு முழுமையாக இருந்தது. தூய ஆவியின் அறிவுறுத்தலின் படியே அனைத்தையும் சென்றார்.

“நீ, காசாவுக்குச் செல்லும் வழியே போ…” தூதர் ஒருமுறை பிலிப்புவிடம் சொன்னார். பிலிப்பு அப்படியே செய்தார்.

அங்கே எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் ஏசாயாவின் நூலை வாசித்துக் கொண்டிருந்தார்.

“அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!”

பிலிப்பு அவரருகே சென்று கேட்டார்

” நீர் வாசிப்பதன் பொருள் தெரியுமா ?”

“இல்லை… யாராவது விளக்கமாய்ச் சொன்னால் மகிழ்வேன். இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? “

“நான் சொல்கிறேன்” பிலிப்பு சொன்னார். இயேசுவைக் குறித்தே அந்த தீர்க்கத்தரிசனம் என்பதை மிக தெளிவாக விளக்கினார். அந்த கணமே அந்த அதிகாரி இயேசுவை ஏற்றுக் கொண்டார்.

“நான் திருமுழுக்கு பெற வேண்டும்” என்றார் அவர். பிலிப்பு மகிழ்ந்தார். போகும் வழியிலேயே ஒரு நீர்நிலையில் அவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். அடுத்த கணமே அங்கிருந்து பிலிப்பு மறைந்து போனார்.

சென்ற இடமெல்லாம் பிலிப்பின் பணி மிகவும் வல்லமையாய் இருந்தது. சமாரியாவில் அவர் பல்வேறு நோயாளிகளை சுகமாக்கியும், பேய்களைத் துரத்தியும், மாபெரும் சாட்சியான வாழ்க்கை வாழ்ந்தார்.

அங்கே சீமோன் என்றொருவர் இருந்தார். அவர் மந்திர தந்திரங்கள் செய்து மக்களை மயக்கி வைத்திருந்தார். அவருடைய சித்து வேலையில் மக்கள் சிக்கிக் கிடந்தனர். அவர்களிடம் பிலிப்பு இயேசுவைப் பற்றிய உண்மையை போதித்தபோது மக்கள் மனம் மாறினர். கடைசியில் சீமோனே மனம் திரும்பினார். மக்கள் வியந்தனர்.

பிலிப்பின் பணி ரஷ்யாவிலுள்ள சைத்தியாவில் நடந்தது என்கிறது வரலாறு. இருபது நீண்ட ஆண்டுகள் இயேசுவைப் பற்றி சைத்தியா நகரில் போதித்து நடந்தார். பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாக நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த அவர், அதன் பின்னர் அங்கிருந்து தற்போதைய துருக்கியிலுள்ள‌ எராப்போலி என்னும் நகரில் வந்து பணியைத் தொடர்ந்தார்.

எராப்போலி நகர் மக்கள் தங்களுடைய கடவுளாக ஒரு பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் சுற்றி நின்று பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பிலிப்பு அவர்கள் முன்னால் வந்து நின்று கையில் சிலுவையை ஏந்தி அந்தப் பாம்பு செத்துப் போகட்டும் என்று சபித்தார். உடனே பலிபீடத்தின் அடியிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு தனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் மீது விஷத்தை உமிழ்ந்து விட்டு இறந்து விட்டது.

மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த விஷம் பட்ட மக்கள் அங்கேயே இறந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த நாட்டு மன்னனின் மகன் !

கூடியிருந்த மக்கள் பிலிப்பு மீது கொலை வெறி கொண்டார்கள். பிலிப்பு அசரவில்லை. மன்னனின் மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் உயிர் பெற்றான். மக்கள் நடு நடுங்கினார்கள்.

பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பிலிப்புவின் செய்கைகள் பயத்தையும் கோபத்தையும் கொடுத்தன. எப்படியும் பிலிப்புவை உயிருடன் விட்டால் இதே போல இன்னும் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். இவனுடைய கடவுளைக் கொன்றது போல சிலுவையில் அறைந்து தான் இவரையும்  கொல்லவேண்டும் என்று கூறி, 87 வயதான பிலிப்புவை வளைத்துப் பிடித்தார்கள்.

சிலுவை கொண்டு வரப்பட்டது. பிலிப்பு சிலுவையோடு பிணைத்துக் கட்டப்பட்டார். “இயேசுவே இவர்களை மன்னியும்” என்று பிலிப்பு உரக்கக் கூறினார். அதைக் கேட்ட மக்களின் ஆத்திரம் இரண்டு மடங்கானது. அவரை நோக்கி, கற்களை எறிந்தனர். இரத்தம் சொட்டச் சொட்ட பிலிப்பு மரித்தார்.

பிலிப்புவைப் போல, இயேசுவின் மீது கொண்ட அசைக்க முடியாத விசுவாசம் கொண்டவர்களாகவும், தூய ஆவியின் துணையோடு வாழ்பவர்களாகவும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.