மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

kvr5

ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார்.

“ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?”

” அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்” சீடர்கள் சொன்னார்கள்.

“ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே ” குரு கேட்டார்.

சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார்.

” இருவர் கோபம் கொள்ளும் போது அவர்களுடைய இதயம் தூரமாய்ச் சென்று விடுகிறது. தூரத்தில் இருப்பவர்களுடன் கத்தி தானே பேசவேண்டும், அதனால் தான் கத்துகிறார்கள்.  அதே போல இரண்டு பேர் நேசத்தில் இருக்கும் போது ரொம்பவே நெருங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் மென்மையாய்ப் பேசினால் போதுமென்றாகி விடுகிறது. இன்னும் நெருங்கி உறவில் இறுக்கமாய் இருக்கும் போது இடைவெளியே இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் பேசவே தேவையில்லை. மௌனமே பாஷையாகி அவர்களுக்குள் உலவும்”  குரு சொல்லச் சொல்ல சீடர்கள் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குரு கடைசியாகச் சொன்னார்,

“எனவே… விவாதிக்கும் போதோ, சண்டையிடும் போதோ உங்கள் இதயம் தூரமாய்ப் போய்விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.இதயங்களைத் தூரமாய் அனுப்பி வைக்கும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். இல்லாவிட்டால் இந்த தூரம் மிக அதிகமாகி திரும்பி இணையும் பாதையையே மறந்து விடும்”

குரு தன் சீடர்களிடம் சொன்னதை சண்டையிட்ட தம்பதியர் கேட்டனர். அவர்களுடைய மனதுக்குள் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. அமைதியானார்கள்.

குரு அவர்களை நெருங்கிச் சொன்னார். ‘நெருப்பு நல்லது தான். நீங்கள் பற்ற வைப்பதை, நீங்களே அணைக்க முடிந்தால் நெருப்பு நல்லது தான். அணைக்க முடியாதபடி எரிய விட்டாலோ அது பேரழிவைத் தராமல் அழியாது”.

தம்பதியர் தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தினர், இணைந்து நடந்தனர்.

அன்பின்றி அமையாது உலகு. அன்பின்றி அமையாது குடும்பம். ஒரு க‌ண‌வ‌னின் க‌ன‌வு அன்பு என்ப‌தைத் த‌விர‌ வேறு என்ன‌வாக‌ இருக்க‌ முடியும் ? வீட்டுக்கு வெளியே வெறுப்புக‌ளைக் கூட‌ அவ‌ன் விருப்போடு பெற்றுக் கொள்வான், வீட்டில் அன்பு க‌ரை புர‌ண்டு ஓடினால் போதும்.

பறவைகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிகின்றன. கிளைகளை விட்டுக் கிளைகளுக்குத் தாவுகின்றன. மரங்களை விட்டு மரங்களுக்குத் தாவுகின்றன. கானகத்தை விட்டுக் கானகத்துக்குத் தாவுகின்றன. மாலையில் அவை தனது கூடுகளில் குஞ்சுகளோடு அமர்ந்து நிம்மதி நித்திரையை அடைகின்றன.

விழிப்போம் எனும் நம்பிக்கை நம்மை நிம்மதியாய் உறங்க வைக்கிறது. கூடடைவோம் எனும் நம்பிக்கை சிறகுகளை நில்லாமல் பறக்க வைக்கிறது. குடும்பமும் அப்படியே. வீடடைதல் என்பது மீட்படைதல் போல. அத்தகைய நிம்மதியே கணவன் காணும் முதல் கனவு. தனது சோர்வுகளை, கவலைகளை, இயலாமைகளை, நிராகரிப்புகளை மறந்து நிம்மதியாய் இருக்க நினைக்கும் இடம் வீடு. அத்தகைய நிம்மதியான குடும்பம் அமையும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆணின் கனவுகள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தையே கண்களில் வைத்திருக்கும். அங்கே மனைவி ஒதுக்கப்படுவதாய் பெண்கள் மனம் வெதும்புவதுண்டு. உண்மையில், திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்குகிறது. ஆணும் பெண்ணும் இரு உடல் ஓரு உயிராய் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி கணவனின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் ம‌னைவி வேண்டும் என்ப‌து ஆண்க‌ளின் க‌ன‌வுக‌ளில் முக்கிய‌மான‌து.

ஆணும் பெண்ணும் இர‌ண்டு சிற‌குக‌ளாக‌ மாறி குடும்ப‌ம் உட‌லைச் சும‌ந்து செல்ல‌ வேண்டும். ஆணும் பெண்ணும் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளாக‌ மாறி நாண‌ய‌த்துக்கு ம‌திப்பு கூட்ட‌ வேண்டும். ப‌க‌லின் வெப்ப‌மாய் ஆண் மாறும் போது, இர‌வின் த‌ண்மையாய் பெண் மாற‌ வேண்டும். வெப்ப‌மாய் பெண் மாறினால் நில‌வாய் ஆண் மாற‌ வேண்டும். இப்ப‌டி இணைந்து ப‌ய‌ணிக்கும் த‌ண்ட‌வாள‌ங்க‌ள் போல‌ இணைந்தே திரியும் ஒரு அற்புத‌ வாழ்க்கை க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் சிற‌ப்பிட‌ம் பிடிக்கும்.

பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஒரு பத்து கனவைப் பொறுக்கி எடுத்தால் இவை இடம் பெறலாம்.

1

நேர‌டியாக‌ எதையும் பேசுவ‌து ஆண்க‌ளின் இய‌ல்பு. பாத்திர‌த்தின் ச‌த்த‌த்திலோ, க‌த‌வை சாத்தும் வேக‌த்திலோ, பிள்ளைக‌ளைத் திட்டும் வார்த்தைக‌ளிலோ கோப‌த்தைக் காட்டுவ‌து பெண்க‌ளின் இய‌ல்பு. எதையும் நேர‌டியாக‌ப் பேசும் நிலைக்கு த‌ன‌து ம‌னைவி வ‌ர‌வேண்டும். அதுவும் க‌ண்க‌ளில் அன‌லோடு வ‌ராம‌ல் நிழலோடு வ‌ர‌வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் நிச்ச‌ய‌ம் உண்டு.

2

ப‌க்க‌த்து வீட்டுக் க‌தைக‌ளிலிருந்தோ, சீரிய‌லில் வ‌ரும் குடும்ப‌ங்க‌ளிலிருந்தோ, தூர‌த்துச் சொந்த‌க்கார‌னின் ப‌ஜ்ஜி உரையாட‌ல்க‌ளிலிருந்தோ, அம்மாக்க‌ளின் உர‌ச‌ல்க‌ளில் இருந்தோ அடுத்த‌ ச‌ண்டைக்கான‌ நெருப்பை ம‌னைவி பெற்று விட‌க் கூடாது எனும் எதிர்பார்ப்பு இல்லாத‌ ம‌னித‌ன் இருக்க‌ முடியுமா ?

3

” ப‌திலை ந‌ம்ப‌ப் போவ‌தில்லை” எனும் முடிவுட‌ன், “ஏங்க‌ லேட்டு…” என‌க் கேட்கும் ம‌னைவிக்குப் ப‌தில் சொல்லும் உல‌க‌ ம‌கா ச‌ங்க‌ட‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ வேண்டும் எனும் க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் இருக்க‌ முடியுமா ?

4

ந‌ம‌க்கு ம‌ட்டும் ஏன் ம‌ற‌தியை ஆண்ட‌வ‌ன் கொடுத்தான். பெண்க‌ளுக்கு ம‌ட்டும் ஏன் ஞாப‌க‌ ச‌க்தியை அள‌வுக்கு அதிக‌மாக‌ கொடுத்தார். “கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை உட‌னே ம‌ற‌ந்து ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் ம‌ன‌சுல‌ வெச்சுக்க‌ மாட்டாளா” என் ம‌னைவி ? எனும் க‌ன‌வில்லாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

5

வீட்டுக்காக‌, ம‌னைவிக்காக‌ என்ன‌ செய்தாலும் ஒரு சின்ன‌ பாராட்டு கூட‌ கிடைக்க‌ மாட்டேங்குது. ஆனா ஒரு சின்ன‌ த‌ப்பு ப‌ண்ணினா கூட‌ போஸ்ட‌ர் அடிச்சு ஒட்டாத‌ குறையா ச‌ண்டை ந‌ட‌க்குது. எப்போ ந‌ம்ம‌ ம‌னைவி நாம‌ ப‌ண்ற‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பாராட்ட‌ப் போறாங்க‌ ? எனும் க‌ன‌வு வ‌ராம‌ல் போகுமா என்ன ?

6

பிள்ளைங்க‌ள‌ பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா அம்மாவைப் பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா தோழிக‌ளைப் பாக்க‌ வேண்டிய‌து. ஒண்ணும் இல்லேன்னா சீரிய‌லைப் பாக்க‌ வேண்டிய‌து. எப்போ தான் ந‌ம்ம‌ ம‌னைவி ந‌ம்மைப் பார்ப்பாங்க‌ எனும் எதிர்பார்ப்பு க‌ல‌ந்த‌ க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் யார் ?7

தாம்ப‌த்ய‌ம் என்ப‌து ஆன‌ந்த‌த்தின் ப‌கிர்த‌ல். அது வ‌லுக்க‌ட்டாய‌மாய் எழுதி வாங்கும் உயில்ப்ப‌த்திர‌ம் அல்ல‌. அதில் உட‌ல்க‌ளை விட‌ அதிக‌ம் உண‌ர்வுக‌ள் பேச‌ வேண்டும். அதை ஒரு ஆயுத‌மாக‌வோ, ப‌ழி வாங்கும் யுத்தியாக‌வோ ம‌னைவி ப‌ய‌ன்ப‌டுத்த‌க் கூடாது எனும் க‌ன‌வு க‌ண‌வ‌னுக்கு இல்லாமல் போகுமா.

8

என்னை புரிஞ்சுக்க‌வே மாட்டீங்க‌” என‌ ம‌னைவியின் குர‌ல் ஒலிக்காத‌ வீடுக‌ள் இருக்க‌ முடியாது. புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள‌வில்லை என்றே ம‌னைவிக‌ள் சொல்வார்க‌ள். புரிந்து கொள்வ‌து என்ப‌து அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை, சொல்வ‌த‌ற்கெல்லாம் ஆமாம் போடுவ‌து. இந்த‌ நிலை மாற‌ வேண்டுமென‌ ப‌க‌ல் க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டோ ?

9

ந‌ன்றி என்ப‌து ரொம்ப‌ காஸ்ட்லி விஷ‌ய‌மா என்ன‌ ? ஒரு சின்ன‌ ந‌ன்றி கூட‌ சொல்ல‌ மாட்டாங்க‌ளா ந‌ம்ம‌ மனைவி என‌ புல‌ம்பாத( ம‌ன‌துக்குள் தான் ) க‌ண‌வ‌ன் யார் ? ம‌னைவி ந‌ம் செய‌லுக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டுமென‌ க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

10

நாம் எடுக்கின்ற‌ முய‌ற்சிக‌ளுக்கு ஊக்க‌மும், ஆத‌ர‌வும் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌ன்க‌ளின் க‌ன‌வுக‌ளில் ஒன்று. அப்ப‌டி முழு ஆத‌ர‌வு கிடைக்காவிட்டால் கூட‌ குத‌ர்க்க‌மாய்ப் பேசி எரிச்ச‌ல‌டைய‌ச் செய்யாம‌ல் இருக்க‌ வேண்டும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌க் க‌ன‌வு தானே !

இப்படி எல்லா க‌ண்க‌ளிலும் க‌ன‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌, அந்த‌க் க‌ன‌வுக‌ள் ப‌லிப்ப‌தும் ப‌லிக்காத‌தும் ம‌னைவிய‌ரின் க‌டிவாள‌த்தில் அட‌ங்கியிருக்கின்ற‌ன. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதை விட கணவனே கனவு கண்ட தெய்வம் என்பது தானே பொருத்தம் ?

ச‌ரி, ம‌னைவிய‌ரின் க‌ன‌வுக‌ள் என்ன‌வாய் இருக்கும் ? அதெல்லாம் நான் சொல்லாம‌லேயே உங்க‌ளுக்குத் தெரியும். அப்புற‌மென்ன‌ ? க‌ன‌வுக‌ள் தொட‌ர‌ வாழ்த்துக‌ள்.

*

நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி & லண்டன்

ஜூனியர் விகடன் : அதிர வைக்கும் நோய் !

Tanya2

உலகிலேயே இவள் மட்டும் தான் இப்படி என அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர் மருத்துவர்கள். என்ன மருத்துவம் பார்த்தாலும், என்ன ஆபரேஷன் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இவளுடைய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் உலகில் மருந்தே இல்லை என்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி ! எடை சுமார் 215 கிலோ.

பதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் ! இது விபரீத வளர்ச்சி ! உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் !

இவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 !

சிறு வயதில் சாதாரணமாய் தான் இருந்திருக்கிறாள். டீன் ஏஜில் தான் இந்த திடீர் வளர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. செருப்பு Tanya_Beforeவாங்கி வருவாள், அடுத்த மாதமே அது சின்னதாகிவிடும். வாங்கி கொண்டு வரும் ஆடைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதிர்ச்சியும், குழப்பமும், கவலையும் ஒட்டு மொத்தமாக அவளைச் சூழ்ந்து கொண்டது அப்போது தான்.

பதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.

இந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் !

எப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.

கேரன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்கா முழுதும் தேடி ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தார்கள். கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்பாடா, ஒரு வழியாக எனது சிக்கல் தீர்ந்தது என மகிழ்ந்தாள் தான்யா. ஆனால் அந்த மகிழ்ச்சி tranya3நீடிக்கவில்லை. அவள் தொடந்து வளர்ந்தாள்.

சரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.

பல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.

தன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் ? நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.

“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே !

கடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா !

நலம் பெற வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும் நாம் ?

ஃ 

தமிழிஷில் வாக்களிக்க…

பாலியல் : முகம் சொல்லும் யாரை நம்பலாம் என !!!

சதுர முகம், நீளமான மூக்கு, சிறிய கண்கள் கொண்ட ஆணா ? பெண்களே உஷார் இவர்களுடைய கவனம் எல்லாம் மோகம் கமகமக்கும் சிற்றின்பத்தில் தான். ஆழமான காதல் உணர்வில் இல்லை.

அகலமான பெண்கள், பெரிய உதடுகள் கொண்ட பெண்களா ( ஏஞ்சலினா ஜூலி கண்களுக்குள் வருகிறாரா ) !! ஆண்களே உஷார் கொஞ்ச நாளிலேயே கழற்றி விட்டு விட்டு ஓடி விடுவார்கள்.

இதையெல்லாம் நம்ம ஊர் நாடி ஜோசியமோ, முக ஜோசியமோ சொல்லவில்லை. தர்காம், செயிண்ட்ஸ் ஆண்ட்ரூஸ், மற்றும் அபெர்தீன் பல்கலைக் கழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒருவருடைய முகத்தை வைத்தே அவருடைய “காதல்” நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பதே இவர்களுடைய ஆராய்ச்சியின் சாராம்சம்.

திடகாத்திரமான புஜ பராக்கிரம சல்மான் கான்களை விட அமைதியான, மென்மையான குணாதிசயங்கள் கொண்ட ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். அப்பாடா இனிமே ஜிம்மில் எண்ணிக்கை குறையும் !

குறுகிய கால காதல் உறவை வைத்துக் கொள்ள விரும்பும் பெண்கள் அதிக கவர்ச்சியுடன் காணப்படுவார்கள் எனவும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

பெண்கள் நீண்ட கால உறவையே ஆசிக்கிறார்கள் என்றும், குறுகிய நட்பு வளையங்களில் அதிகம் விழுவதில்லை எனவும் இதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இவையெல்லாம் கடந்து நீண்ட நாட்கள் பழகியபின் ஒருவர் ஒருவரிடம் அதிக ஈடுபாடு ஏற்பட, பின்னர் முக நக நட்பது நட்பன்று என்பதை கண்டு கொள்வர் என்பது இயற்கையின் நியதி.

இதற்கு முன்பும் முகத்தை வைத்து ஒருவருடைய உடல்நலம், குணாதிசம் போன்றவற்றை அறியும் ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. எனினும் ஒருவருடைய காதல் வாழ்க்கைக்கும் முகத்துக்கும் இடையேயான தொடர்பு ஆராய்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என காதலுடன் சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு சுய புலம்பல்

family.jpg

இன்று காலையில் கொடூரமான செய்தியைப் படிக்க நேர்ந்தது. நடத்தையில் சந்தேகம் எனும் காரணத்தைக் கூறி தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான் ஒருவன்.

இதில் திடுக்கிடும் செய்தி என்னவெனில், அவன் இரண்டு மனைவிகளுடன் குடித்தனம் நடத்துபவன் என்பது தான்.

அடிக்கடி இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர்களைப் பற்றிய செய்தியைப் படிக்கும் போது பல கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன.

சட்டம் அங்கீகரிக்காத ஒன்றை எப்படி இவர்களால் சமூகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் செயல் படுத்த முடிகிறது.

எப்படி ஒரு மனைவியால், தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. என்னதான் பொருளாதார சார்பு இருந்தாலும்!

ஒருவேளை மனைவியின் நடத்தையில் பிழை இருப்பினும், இரண்டு மனைவியருடன் இருக்கும் ஒரு கணவனுக்கு, தன்னுடைய மனைவிக்கு இரண்டு கணவன் இருப்பதை தடுக்க என்ன உரிமை இருக்கிறது.

கடைசியாக, எப்படி ஐயா மனம் வருகிறது ? கணவன் மனைவி சண்டையில் கள்ளம் கபடமில்லாத பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய ?

கணவன் திட்டியதால் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் தாய்மார்கள், மனைவியையும் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்யும் கொடூரர்கள், இரண்டாவதும் பெண்ணாய் பிறந்து விட்டதே என்பதற்காக குழந்தையை மூன்றாவது மாடியிலிருந்து வீசிக் கொன்ற தாய்…

இப்படி செய்திகளை தினம் தினம் படித்து காலைப் பொழுதை ஒரு விதமான மன அழுத்தத்துடனேயே ஆரம்பிக்க வேண்டிய சூழலில் வாழ்வதை நினைக்கும் போது ஆற்றாமையாய் இருக்கிறது.

காலையில் செய்தித் தாள் படிப்பதையே நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன்.

இது ஆண்களுக்கான சமாச்சாரம் !

tomato.jpg

தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.

லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.

நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கிறதாம்.

அப்புறமென்ன, இனிமேல் வழியில் தக்காளி சூப் விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் பைக்கை கொஞ்சம் நிப்பாட்டி ஒரு சூப் குடிச்சிட்டு போங்க 🙂

ஐ.டி வேலையும், குடும்ப வாழ்க்கையும்

old.jpg

சென்னையில் இந்த ஆண்டு ஐ.டி தம்பதியரிடையே விவாகரத்து 200 மடங்கு அதிகரித்திருப்பதாக திடுக்கிடும் புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே கணினி துறை சார்ந்த மக்கள் தங்களுடைய வாழ்க்கை – வேலை சமநிலையை சரிவரக் கண்காணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வாழ்வில் பலவீனமடைந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மக்களின் தேவை பணம் என்னும் நிலையிலேயே நீள்கிறது.

குடும்பத்தினரை விட்டுவிட்டு வெளிநாடு பயணம் செய்வது, இரவு பகல் பாராமல் அலுவலகத்தில் இருப்பது, அலுவலகத்து சோர்வை வீட்டில் காட்டுவது என பல வகைகளில் இந்த சமநிலையற்ற தன்மை தொடர்கிறது.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும் கல்லூரியிலிருந்து வெளியே வந்து வேலை தேடும் படலத்தைச் சந்திக்காத காம்பஸ் வாலாக்கள் வேலை கிடைப்பதன் கஷ்டம் என்ன என்பதையே அறியாமல் இருப்பதும் ஒரு காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

படித்து முடித்தவுடன் கிடைக்கும் ஐந்திலக்க சம்பளத்தை வைத்துக் கொண்டு N – சீரீஸ் நோக்கியாவை வாங்கியபின் மிச்சபணத்தை என்ன செய்வது என்பதறியாமல் உல்லாசங்களுக்கு ஒதுக்கி விடுகின்றனர்.

மேலைநாட்டின் ஃப்ரைடே ஃபீவர் இந்திய ஐடி மக்களையும் பெருமளவில் பீடித்திருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவுகளில் சோமபானக் கடைகளில் மங்கலான வெளிச்சத்தில் தவம் கிடக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது.

மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடுவதால், அதிக பணம் கிடைத்து விடுவதால், பக்குவம் என்ற ஒன்று அவர்களுக்குப் பிடிபடாமலேயே போய் விடுகிறது.

விட்டுக் கொடுத்தலே வாழ்க்கை என்னும் அடிப்படை அர்த்தம் அவர்களைப் பொறுத்தவரை விதண்டாவாதம். இன்றைய தினத்தை இன்றே அனுபவிப்போம் என்பதே இன்றைய இளசுகளின் தாரக மந்திரம். இதை இன்றைய ஊடகங்களும் முன்னிலைப்படுத்துவது வேதனைக்குரியது.

திருமணப் பயிற்சி என்னும் ஒன்று இன்றைய இளைஞர்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. சில மதப் பிரிவுகள் திருமணப் பயிற்சியை திருமணத்தின் கட்டாயமாக்கியிருக்கின்றன. இதே நிலை எல்லா இடங்களிலும் வரவேண்டும்.

வெறும் பாலியல் சார்ந்த உடல் தேவையே திருமணம் எனும் பதின் வயது ஈர்ப்புகளிலிருந்து இளைய சமூகத்தினர் விடுபட வேண்டும். இன்றைக்கு விரல் நுனியில் கிடைக்கும் பாலியல் சார்ந்த தகவல்களின் மாயையைத் தாண்டி விரியும் உன்னதமான இடம் தான் குடும்பம் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறு சிறு தோல்விகள் வந்தாலோ, சண்டைகள் வந்தாலோ டைவர்ஸ் மட்டுமே ஒரே வழி என்னும் மனப்பான்மை நிச்சயம் விலக வேண்டும். அத்தகைய எண்ணத்தை சார்ந்த சமூகம் எந்த விதத்திலும் ஊக்குவிக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

பணம் இருக்கிறது துணை எதற்கு ? எனும் மனோ நிலையிலிருந்து இளைய சமூகம் விடுபட வேண்டும். அதற்கு ஆழமான குடும்ப உறவுகளும், பெற்றோரும், சமூகமும், மதமும், அலுவலகங்களும் அனைத்துமே தன் பங்கை ஆற்ற வேண்டும்

எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் திருமணமான ஆறு மாதங்களிலேயே விவாகரத்து வாங்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான். இருவரிடமும் தனித்தனியே பேசினேன். உண்மையில் ஈகோவைத் தவிர எந்த பிரச்சனையும் அவர்களிடம் இல்லை.

மன்னிக்கும் மனப்பான்மையை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை மதங்களோ, தியானங்களோ, பெற்றோரோ யாரேனும் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாக வேண்டும்.

வாழ்க்கை என்பதை அமெரிக்க டாலர்களில் அடைத்துவிட முடியாது.

எண்பது வயதில் “நரையன்” என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டே இன்பமான குடும்ப வாழ்க்கை வாழ நமது பாட்டிகளால் முடிந்திருக்கிறது.

எழுபது வருடம் சேர்ந்து வாழ்ந்தபின் ஏற்படும் துணை இழப்பையே தாங்க முடியாமல் கதறும் தாக்தாக்களை நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. அதன் பின்னணியில் வெட்டி விடுதலே விடுதலை என சுற்றும் இளைய சமூகத்தை நினைத்து வேதனைப்படாமல் இருக்க இயலவில்லை.

இளைய சமூகத்தினருக்கு சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான். யாரும் எதிலும் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதில்லை. வெற்றி என்பது அடுத்தவருக்குத் தோல்வியை அளிப்பதில் அல்ல, அடுத்தவருக்கு வெற்றியை அளிப்பதில் என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும்.

மன்னிப்பு என்பதையே தண்டனையாய் அளிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆழமான குடும்ப உறவுகள், எதிர்காலத்தின் வளமான வாழ்வுக்கு ஆதாரம். இல்லையேல் பலவீனமான குடும்பங்களின் பிரதிநிதிகள் பலவீனமான தேசத்தையே பரிசளிக்க முடியும்.