பைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்

85

திருமுழுக்கு யோவான்

Related image

செக்கரியா எலிசபெத் தம்பதியருக்கு முதிர் வயதில் கடவுளின் அருளால் பிறந்த குழந்தை தான் யோவான். கடவுளின் அற்புதத்தைக் கண்டு வியந்த செக்கரியா

“குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்” என்று வாழ்த்தினார்.

யோவான் இயேசுவை விட ஆறு மாதங்கள் மூத்தவர். இருவரும் சொந்தக்காரர்கள். யோவானின் பிறப்பு இயேசுவின் பிறப்பை முன்னறிவிப்பதற்காக நிகழ்ந்தது.

இவரது வரவை இறைவாக்கினர் எசாயா ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே “குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்று முன்னறிவித்தார்.

அதன் பின்னர் கி.மு 5ம் நூற்றாண்டில் “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்” என கடவுள் மலாக்கி இறைவாக்கினர் மூலமாக முன்னறிவித்தார்.

யோவான் வளர்ந்தார். வலிமையடைந்தார். அவர் பாலைவனத்தில் வாழ்ந்து வந்தார். ஒட்டக மயிராடை அணிந்து, இடையில் வார்க்கச்சை கட்டியிருந்தார். காட்டுத்தேனும் வெட்டுக்கிளியுமே அவரது உணவு. திபேரியு சீசரின் ஆட்சி காலத்தின் பதினைந்தாம் ஆண்டில், போந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராய் இருந்தார். பாலைவனத்தில் வாழ்ந்து வந்த யோவானுக்கு இறைவனின் அழைப்பு வந்தது. மக்களின் மனமாற்றத்துக்காகப் போதிக்க ஆரம்பித்தார்.

“பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” . மனம் மாறியவர்களுக்கு அதன் அடையாளமாக ஞானஸ்நானம் அதாவது திருமுழுக்கு கொடுத்தார். அதனால் அவரது பெயர் திருமுழுக்கு யோவான் என்றானது.

அவருடைய வலிமையான போதனையில் தாக்கப்பட்ட பலர் அவரிடம் வந்து மன மாற்றம் அடைந்து திருமுழுக்கு பெற்றனர்.

வந்தவர்கள் , “நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்டார்கள்.

“உன்னிடம் இரண்டு அங்கி இருந்தால், ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு. இருக்கும் உணவையும் பகிர்ந்து உண்” என்றார்.

வரி வசூலிப்பவர்கள் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்” ? என்று கேட்டார்கள்.

“எவ்வளவு வசூலிக்க வேண்டுமோ அதை மட்டும் வசூலியுங்கள். நேர்மையாய் இருங்கள்” என்றார்.

படைவீரர்கள் அவரிடம், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்றார்கள்.

“யாரையும் அச்சுறுத்தி பணம் பறிக்க வேண்டாம். பொய் குற்றம் சுமத்த வேண்டாம். சம்பளமே போதுமென இருங்கள்” என்றார்.

இவருடைய போதனைகளைக் கேட்ட மக்கள், ஒருவேளை இவர் தான் மீட்பராய் இருப்பாரோ என பேசத் தொடங்கினர். ஆனால் அவர் மீட்பர் அல்ல, அவர் மீட்பர் இயேசுவின் முன்னோடி. எனவே அவர் மக்களைப் பார்த்து,

“நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுப்பவன். இன்னொருவர் வருவார். அவர் தூய ஆவியாலும் நெருப்பாலும் திருமுழுக்கு கொடுப்பார். அவருடைய செருப்பின் வாரை அவிழ்க்கக் கூட எனக்கு தகுதியில்லை” என தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.

இயேசுவும் தம் பணி வாழ்வின் தொடக்கமாக யோவானிடம் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். அப்போது வானம் திறந்தது, “இவரே என் அன்பார்ந்த மகன்” என விண்ணகத் தந்தையின் குரல் வானிலிருந்து ஒலித்தது. தூய ஆவியானவர் ஒரு புறாவின் வடிவில் இயேசுவிடம் வந்திறங்கினார்.

யோவானைப் பற்றிய பேச்சு ஊரெங்கும் பரவியது. அவர் எந்த இடத்திலும் சமரசம் காட்டாமல் பேசி வந்தார். அங்கே குறுநில மன்னன் ஏரோது ஆட்சி செய்து கொண்டிருந்தான். தனது சகோதரனின் மனைவி ஏரோதியாளை அபகரித்து அவளோடு வாழ்ந்து வந்தான்.

“ஏரோதே.. நீ செய்வது பாவம்! மனம் திரும்பு” யோவானின் குரல் அச்சமில்லாமல் ஏரோதின் முன்னால் ஒலித்தது. ஏரோது கோபமடைந்தான். யோவானைக் கைது செய்து சிறையில் அடைத்தான்.

யோவான் சிறைப்பட்டதும் இயேசு தனது பணி வாழ்வை தீவிரப்படுத்தினார். “பெண்களில் பிறந்தவர்களில் யோவானை விடப் பெரியவன் யாரும் இல்லை” என யோவானைப் பற்றி வெளிப்படையாய் அறிக்கையிட்டார்.

ஏரோது எப்படியாவது யோவானைக் கொல்ல வேண்டும் என நினைத்தான், ஆனால் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என அமைதி காத்தான். அப்போது ஏரோதின் பிறந்த நாள் வந்தது.

ஏரோதியாளின் மகள் சலோமி ஒரு அற்புதமான நாட்டியத்தை ஏரோதின் முன்னால் நடத்தினார்.

“நீ என்ன வேண்டுமானாலும் கேள், உனக்குத் தருகிறேன்” ஏரோது அறிவித்தான்.

“எனக்கு யோவானின் தலை ஒரு தட்டில் வைத்துத் தரவேண்டும்” என்றாள் சலோமி. அவளுடைய தாயின் அறிவுரை அதுவாக இருந்தது. ஏரோது வருந்தினாலும், வாக்குறுதியை மீற விரும்பவில்லை.

யோவானின் தலை வெட்டப்பட்டது. தட்டில் வைத்து பரிசாக அளிக்கப்பட்டது. அதை அவள் கொண்டு போய் தன் தாயிடம் கொடுத்தார்.

யோவானின் பணி நிறைவுற்றது. இயேசுவைப் பற்றி அறிக்கையிட தயங்காத மனமும், தனியே பணிசெய்யத் தயங்காத திடமும், மனித நேய சிந்தனைகளும், அசைக்க முடியாத விசுவாசமும் திருமுழுக்கு யோவனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாகும்.

*

 

பைபிள் மாந்தர்கள் 83 (தினத்தந்தி) யோசேப்பு

83 யோசேப்பு

Image result for Joseph father of jesus painting

இயேசுவின் வளர்ப்புத் தந்தை. உலகில் எத்தனையோ மக்கள் இருந்த போதும் இயேசுவை வளர்க்கும் பாக்கியம் யோசேப்புக்குக் கிடைத்தது.

மரியாவுடன் மண ஒப்பந்தமாகியிருந்தார் யோசேப்பு. ஆனாள் மரியா தூய ஆவியினால் கருத்தாங்குகிறார். குழம்பிய யோசேப்பிடம் தேவதூதன் உண்மையைச் சொல்ல யோசேப்பு தெளிவடைகிறார், இறை சித்தத்துக்கு உடன்படுகிறார்.

மரியா தாய்மை நிலையில் இருக்கும் போது பெத்லேகேம் செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. யோசேப்பு உடனிருந்தார். பெத்லேகேமில் இயேசு பிறந்த போது கூட இருந்து கவனித்துக் கொண்டார். இயேசுவை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டிய காலம் வந்தபோது யோசேப்பு அதை நிறைவேற்றினார். ஏரோது மன்னன் இயேசுவைக் கொல்ல கட்டளையிட்டபோது சிரமங்களைத் தாங்கி நாடுகடந்து ஓடி நாயகனைக் காப்பாற்றினார்.

இயேசு பன்னிரண்டு வயதாக இருந்தபோது ஒரு முறை எருசலேம் ஆலயத்தில் தங்கி விட்டார். பிள்ளையைக் காணோமே எனும் பரிதவிப்புடன் ஓடி அலைந்து ஆலயத்தில் அவரைக் கண்டு பிடித்தார் யோசேப்பு.

அதன் பிறகு யோசேப்புவைப் பற்றிய குறிப்புகள் பைபிளில் இல்லை. அவர் இயேசுவின் பணி வாழ்வுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்பதே பொதுவான நம்பிக்கை.

யோசேப்பு தாவீதின் வழிமரபில் வந்தவர். அவருடைய தந்தை ஏலி என்கிற யாக்கோபு. யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்த  எளிமையான மனிதர்.

அவர் நேர்மையாளராகவும், நீதிமானாகவும் இருந்தார். அந்த குணாதிசயம் தான் அவருக்கு இயேசுவை வளர்க்கும் பாக்கியத்தைத் தந்தது. திருமணத்துக்கு முன்பே தனது மனைவி மரியா கர்ப்பமாய் இருந்த செய்தி யோசேப்புக்குத் தெரிந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு பெண் கர்ப்பமாய் இருக்கிறாள் என்பது எவ்வளவு பெரிய மன உளைச்சல். நேரடியாகப் போய் சண்டையிடவோ, பெயரைக் களங்கப்படுத்தவோ தான் சாதாரண மக்கள் முயல்வார்கள்.

ஆனால் யோசேப்பு அப்படிச் செய்யவில்லை. “மறைவாக” மரியாவை விலக்கி விட நினைத்தார். அதாவது காதும் காதும் வைத்தது போல பிரச்சினையை முடிக்க நினைத்தார். ஒருவேளை அப்படி அவர் செய்யாமல் ஊருக்குள் மரியாவின் பெயரை அவமானப் படுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் ? தூதன் வந்து உண்மையைச் சொன்ன‌ போது பதறிப் போயிருப்பார். அதற்குள் அவர் விதைத்த அவமானக் கதை ஊருக்குள் நிரம்பியிருக்கும்.

யோசேப்பு மிகவும் கனிவான மனம் உடையவராய் இருந்தார். மரியா மனம் வருந்தக் கூடாது என்று நினைத்தார். அடுத்தவர்கள் தப்பு செய்திருந்தால் கூட அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி வேதனைப் படுத்தாத மனம் கடவுளுக்குப் பிரியமான மனம். அது யோசேப்புக்கு இருந்தது.

அன்றைய வழக்கப்படி மரியாவைக் கல்லால் எறிந்து கொல்லவும் யோசேப்புக்கு சட்டம் இடமளித்தது. யோசேப்பு கல்லெறியும் கல்நெஞ்சக்காரர் அல்ல. ஒரு சொல்லால் கூட மரியாவைக் காயப்படுத்த விரும்பவில்லை.

கடவுள் அதனால் தான் யோசேப்பை மரியாவின் மண்ணகத் தந்தையாய் மாற்றினார். ஒரு நீதிமானாய் இருந்த யோசேப்பு, ஒரு மண்ணகத் தந்தைக்குரிய அனைத்து குணாதிசங்களோடும் இருந்தார்.

  1. யோசேப்பு நல்ல உழைப்பாளியாக இருந்தார். தச்சுத் தொழிலை நேர்மையாகச் செய்து வந்தார். அதிக லாபம் சம்பாதிக்க விரும்பாதவராக இருந்ததால் அவர் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆலயத்தில் ஏழைகள் பலியிடும் புறாக்களை பலியிடவே அவரால் முடிந்தது,
  2. இயேசு யோசேப்பின் சொந்த ரத்தமல்ல. ஆனாலும் அந்த சிந்தனையை அவர் மனதில் கொள்ளாமல், தனது சொந்த மகனைப் போல வளர்த்தார். ஏரோது மன்னனிடமிருந்து குழந்தைக்கு ஆபத்து வந்த போது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எகிப்துக்கு ஓடினார்.
  3. ஒரு குழந்தையின் குணாதிசயங்களைக் கட்டமைப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. நீதிமானான யோசேப்பு அந்தக் குணாதிசயங்களைக் கொண்டிருந்தார். தூய்மையான வாழ்க்கை, எளிமையான வாழ்க்கை, நேர்மையான வாழ்க்கை இவற்றையெல்லாம் யோசேப்பின் வாழ்க்கை இயேசுவுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அன்பு, மன்னிப்பு, நேசம், மறை அறிவு போன்ற பலவற்றைக் கற்கவும் இயேசுவுக்கு யோசேப்பின் வழிகாட்டுதல் இருந்திருக்க வேண்டும்.
  4. யோசேப்பு பாவமில்லாதவர் அல்ல. ஆனால் கடவுளின் நேர்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தார். அதனால் தான் மரியா கர்ப்பமாய் இருக்கும் செய்தி கேட்டும் கூட பொறுமையும், இரக்கமும், கண்ணியமும் கொண்டிருந்தார். “பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று இயேசு பின்னாளில் போதித்தார்.
  5. கீழ்ப்படிதலின் உதாரணமாய் யோசேப்பு இருந்தார். “மேரியை ஏற்றுக் கொள்”, “இயேசு என பெயரிடு”, “எகிப்துக்குப் போ”,”திரும்பி இஸ்ரேலுக்கு வா” என வந்த கடவுளின் கட்டளைகள் அனைத்தையும் அப்படியே, அப்போதே செயல்படுத்தினார்.

ஒரு நீதிமானாக, பணிவானவராக, அன்பும் இரக்கமும் கொண்டவராக, உழைப்பாளியாக, கடவுள் பக்தி உள்ளவராக வாழ்ந்த யோசேப்பின் வாழ்க்கை நமக்கு ஊக்கமளிக்கட்டும். எனினும், இறைவனே என்றும் நாம் வழிபடும் தந்தையாகட்டும்.

*

பைபிள் மாந்தர்கள் 82 (தினத்தந்தி) மரியா

82

மரியா

Image result for mary mother of jesus painting

 

ரோமப் பேரரசுக்கு உட்பட்ட கலிலேயா நகரில் மலைகளின் பின்னால் மறைந்திருந்தது நாசரேத் கிராமம். கி.மு 1009ல் தாவீது மன்னனும், கி.மு 971ல் அவர் மகன் சாலமோன் மன்னனும் அற்புதமாய் ஆட்சி செய்த சுதந்திர தேசம்.

மரியாள் எளிமையான ஒரு யூதப் பெண். தனது பதின் வயதுகளின் ஆரம்ப வருடங்களில் இருந்தாள். அவருக்கு யோசேப்பு என்பவரோடு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது

ஒரு நாள் மரியாவின் முன்னால் திடீரென தோன்றினார் ஒரு வானதூதர். வானதூதரைக் கண்ட மரியா திடுக்கிட்டார்.  “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ” என்று தூதர் சொல்ல மரியா மேலும் கலங்கினார்.

“பயப்படாதீர்கள், கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர், அவருக்கு இயேசு என்று பெயரிடுங்கள். அவர் பெரியவர். அவரது ஆட்சிக்கு முடிவே இருக்காது” வானதூதர் உற்சாகமாய்ச் சொன்னார். மரியாவோ அச்சத்திலிருந்து விலகவில்லை.

“இது.. இது எப்ப‌டி ந‌ட‌க்கும். நான் க‌ன்னியாயிற்றே” என்றாள்.

“இது க‌ட‌வுளின் அருளால் ந‌ட‌க்கும். தூய‌ ஆவியால் க‌ருத்தாங்குவீர். அந்த‌க் குழ‌ந்தை இறைம‌க‌ன் என‌ப்ப‌டும்” என்றார் தூத‌ர்.

“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” ம‌ரியா ஒற்றை வ‌ரியில் த‌ன்னை அர்ப்ப‌ணித்தார். அர்ப்ப‌ணித்த‌பின் தூய்மை காத்தார். க‌ட‌வுளின் அருளால் தாய்மை காத்தார்.

திரும‌ண‌த்துக்கு முன்பே க‌ர்ப்ப‌ம். இது க‌ட‌வுளின் அருளால் என்று சொன்னால் யாரும் ந‌ம்ப‌ப் போவ‌தில்லை. க‌ன்னியாக‌வே இருக்கிறேன் என்று சொன்னால் யாரும் சிரிக்காம‌ல் இருக்க‌ப் போவ‌தில்லை. யோசேப்புட‌னான‌ த‌ன‌து திரும‌ண‌ம் நின்று போக‌லாம். அல்ல‌து தான் முறை த‌வ‌றிய‌வ‌ள் என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்டு க‌ல்லெறிந்து கொல்ல‌ப்ப‌ட‌லாம். சாத்திய‌ங்க‌ள் ஆயிர‌ம் இருந்தாலும் ம‌ரியாள் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை. இறை சித்த‌மே த‌ன் ப‌ணி என‌ துணிந்தார்.

ம‌ரியாள் க‌ர்ப்ப‌மான‌ செய்தியைக் கேட்ட‌ யோசேப்பு அதிர்ந்தார். ம‌னைவியை ம‌றைவாய் வில‌க்கி விட‌ தீர்மானித்தார். ஆனால் க‌ட‌வுள் அவ‌ரிட‌மும் ஒரு தூத‌ரை அனுப்பி விஷ‌ய‌த்தை விள‌க்க‌ யோசேப்பு புரிந்து கொண்டார், விய‌ந்து நின்றார்.

ம‌ரியா இயேசுவை க‌ருவில் சும‌ந்து இறையில் நிறைந்தாள். அப்போது அக‌ஸ்து சீச‌ர் ஒரு க‌ட்ட‌ளை பிற‌ப்பித்தார். அத‌ன் ப‌டி மரியாவும் யோசேப்பும் மக்கள் தொகை க‌ண‌க்கெடுப்புக்காய் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊருக்குச் சென்றார்கள்.

பெத்லேகேமில் மக்கள் நிரம்பி வழிந்தார்கள். மரியாவுக்கு நிறைமாதம். சத்திரங்கள் எல்லாம் நிரம்பி வழிந்தன. எங்கும் இடம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள். மரியாயின் நிலமையைப் பார்த்த ஒருவர் அவர்களுக்கு த‌ங்கிக்கொள்ள‌ ஒரு இட‌ம் கொடுத்தார்.

அது ஒரு தொழுவ‌ம்.

ம‌ரியா ஆடுக‌ளின் இடையே ஆத‌வ‌னைப் பெற்றெடுத்தாள். தொழுவ‌ம் தொழுகை பெற்ற‌ நிக‌ழ்வாக‌ இயேசு பிற‌ந்தார். ம‌ரியா இயேசுவின் வாழ்க்கையைத் துவ‌ங்கி வைத்தாள்.

தூய்மைச் ச‌ட‌ங்கை நிறைவேற்ற‌ வேண்டிய‌ நாளின் போது ம‌ழ‌லை இயேசுவைத் தூக்கிக் கொண்டு எருச‌லேம் தேவால‌ய‌ம் சென்றார் ம‌ரியா. ஆல‌ய‌த்தில் சிமியோன் எனும் இறை மனிதர் இருந்தார். அவ‌ர் ம‌ழ‌லை இயேசுவைக் க‌ண்ட‌தும் அவ‌ர் தான் மீட்ப‌ர் என்ப‌தைக் க‌ண்டு கொண்டார்.

ம‌ரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார். இப்படி இயேசு மீட்ப‌ர் என அடையாள‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌போது ம‌ரியா கூட‌வே இருந்தார்.

ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌து. எருச‌லேம் தேவால‌ய‌த்துக்கு பெற்றோரோடும் உற‌வின‌ரோடும் சென்ற‌ இயேசு ஆல‌ய‌த்திலேயே த‌ங்கி விட்டார். அது தெரியாத‌ பெற்றோர் வீடு திரும்பின‌ர். மறு நாள் தான் விஷ‌ய‌ம் தெரிந்து. ப‌த‌றிய‌டித்துக் கொண்டு எருச‌லேம் ஓடினார் அன்னை. இயேசு ஆல‌ய‌த்தில் அம‌ர்ந்து பெரிய‌வ‌ர்களுட‌ன் விவாதித்துக் கொண்டிருந்தார்.

“ம‌க‌னே த‌விக்க‌ விட்டு விட்டாயே” என‌ பாச‌த்தோடு கேட்ட‌ தாயிட‌ம், “என் த‌ந்தையின் இல்ல‌த்தில் நான் இருப்பேன் என்ப‌து தெரியாதா ?” என‌க் கேட்டார். இப்படி இயேசு த‌ன‌து ப‌ணிவாழ்வை முன்னுரையாய்ச் சொன்ன‌போதும் அன்னை கூட‌வே இருந்தார்.

முப்ப‌தாவ‌து வ‌ய‌தில் ப‌ணிவாழ்வில் நுழைந்தார் இயேசு. கானாவூர் எனுமிட‌த்தில் ந‌ட‌ந்த‌ க‌ல்யாண‌ வீட்டில் திராட்சை ர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து. ம‌ரியா இயேசுவிட‌ம், “ர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து” என்றார். பின் வேலைக்கார‌ர்க‌ளிட‌ம், “அவ‌ர் உங்க‌ளுக்குச் சொல்வ‌தெல்லாம் செய்யுங்க‌ள்” என்றார். இயேசு த‌ண்ணீரை திராட்சை ர‌ச‌மாய் மாற்றி முத‌ல் புதுமையைச் செய்தார். இப்ப‌டி இயேசுவின் புதுமை வாழ்வின் முத‌ல் ப‌டியிலும் ம‌ரியா இருந்தார்.

இறுதியில் இயேசு சிலுவையில் அறைய‌ப்ப‌ட்டு உயிர்விடும் க‌டைசிக் க‌ண‌த்திலும் சிலுவை அடியில் ம‌ரியா நின்றார்.

ம‌னுவுருவான‌ வார்த்தையைச் சும‌க்க‌ க‌ட‌வுள் உல‌கெங்கும் பார்த்த‌போது தென்ப‌ட்ட‌ ஒரே பெண் ம‌ரியா. இன்று வார்த்தையான‌ இயேசுவைச் சும‌க்க‌ ந‌ம‌து இத‌ய‌த்தைப் ப‌ரிசுத்த‌ப்ப‌டுத்துவோம்.

பைபிள் மாந்தர்கள் 81 (தினத்தந்தி) இயேசு

81

இயேசு கிறிஸ்து

Related image

ஆதாம் முதல் இயேசுவின் பிறப்பு வரையிலான காலம் கி.மு என அழைக்கப்படுகிறது. ஆதியிலேயே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி எனும் திரித்துவ நிலையில்  இருந்தார். ஆதாமை கடவுள் படைத்தது முதல், இயேசுவின் பிறப்பு வரையிலான நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன.

முதல் மனிதர்கள் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து கடவுளின் வழியை விட்டு விலகினர். இறைவன் மனம் வருந்தினார், தனது மக்களை நல் வழிப்படுத்த இறைவாக்கினர்களை ஏற்படுத்தினார். அவர்கள் கடவுளின் குரலாக இருந்தார்கள். இருந்தாலும் மனுக்குலம் பாவத்தில் ஆழமாய் பயணித்துக் கொண்டே இருந்தது.

கடைசியாகக் கடவுள் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். அவர் குரலாக மட்டும் இல்லாமல் செயலாகவும் இருந்தார். க‌ட‌வுளுக்கு ஏற்புடைய‌ வாழ்க்கை என்ப‌து எது ? எந்த‌ வாழ்க்கை க‌ட‌வுளுக்குப் பிரிய‌மான‌து என்ப‌தை அவ‌ர் ஒவ்வொரு நாளும் த‌ன‌து செய‌லால் ந‌ட‌த்திக் காட்டினார். இப்படி அவ‌ர் ந‌ம‌க்கு முன் செல்லும் ஒரு முன் மாதிரியானார்.

மோசேயின் வ‌ழியாக‌க் க‌ட‌வுள் கொடுத்த‌ ப‌த்துக் க‌ட்ட‌ளைக‌ள் ப‌ழைய‌ ஏற்பாட்டு ம‌க்க‌ளுக்கு வ‌ழிகாட்டியாக‌ அமைந்த‌ன‌. ப‌ழைய‌ ஏற்பாட்டில் மொத்த‌ம் 613 க‌ட்ட‌ளைக‌ள் உள்ள‌ன‌. கால‌ப்போக்கில் அந்த‌க் க‌ட்ட‌ளைக‌ளில் பெரும்பாலானவை வெறும் ச‌ட‌ங்குக‌ளாக‌வும், ஏழைக‌ளை ஏய்ப்ப‌த‌ற்கு வ‌லிய‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் ஆயுத‌மாக‌வும் மாறிப் போயின‌.

இயேசுவின் வ‌ருகையானது, ‘தூய்மை என்பது என்ன ?” என்ப‌தை உல‌கிற்குப் ப‌றைசாற்றும் வித‌மாக‌ இருந்த‌து. அதுவ‌ரை இருந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் க‌ட்ட‌ளைக‌ள் எல்லாமே செய‌ல்க‌ளின் அடிப்ப‌டையிலேயே இருந்த‌ன‌. த‌வ‌றான‌ செய‌ல்க‌ளைச் செய்ய‌க் கூடாது, தீமை செய்ய‌க் கூடாது, ந‌ன்மை செய்ய‌ வேண்டும் என்ப‌வையே க‌ட்ட‌ளைக‌ளாக‌ இருந்த‌ன‌.

இயேசு போத‌னைக‌ளை உள்நோக்கித் திருப்பினார். “சிந்த‌னைக‌ளைச் சீர்செய்ய‌ வேண்டும். அக‌த்தை அழ‌குப‌டுத்தாம‌ல் வெளியே அழகுப‌டுத்துவ‌தில் எந்த‌ அர்த்த‌மும் இல்லை” என்றார். அக‌த்தூய்மை இல்லாத‌வ‌ர்களை , “வெள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்ல‌றைக‌ள்” என்ற‌ழைத்தார்.

கொலை செய்வ‌து பாவ‌ம் என்று ச‌ட்ட‌ங்க‌ள் போதித்த‌ கால‌த்தில், கோப‌ம் கொள்வ‌து பாவ‌ம் என்றார். கொலை எனும் செய‌லைத் த‌டுப்ப‌து கிளைக‌ளை வெட்டுவது போல‌, கோப‌த்தை அழிப்ப‌து அத‌ன் வேர்களை அழிப்ப‌து போல‌. அவ‌ர் வேர்க‌ளை விசாரித்தார். விப‌ச்சார‌ம் பாவ‌ம் என்று ச‌ட்ட‌ங்க‌ள் சொன்ன‌ போது, “க‌ண்க‌ளினால் ஒரு பெண்ணை இச்சையுட‌ன் பார்ப்பது பாவம்” என்றார் இயேசு.

ஒட்டு மொத்த‌ ச‌ட்ட‌ங்க‌ளையும் இர‌ண்டு க‌ட்ட‌ளைக‌ளில் அட‌க்கினார்.

‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னார்.

இயேசு த‌ன‌து முத‌ல் முப்ப‌து ஆண்டுக‌ளில் பெற்றோருக்குக் கீழ்ப்ப‌டிந்து ந‌ட‌ப்ப‌வ‌ராக‌ இருந்தார். அத‌ன் பின் மூன்ற‌ரை ஆண்டுக‌ள் அவ‌ருடைய‌ ப‌ணி விண்ணக வாழ்வையும், பாவத்தை விட்டு  மனம் திரும்புவதையும் போதிப்பதாய் இருந்த‌து.

ஏழைக‌ளையும், பாவிக‌ளையும் நேசித்த‌ அவ‌ர், ம‌த‌த்தின் பெய‌ரால் ஏழைக‌ளை ஏய்ப்ப‌வ‌ர்க‌ளை சாடினார். விப‌ச்சார‌த்தில் பிடிப‌ட்ட‌ பெண்ணை ம‌ன்னித்த‌ இயேசு, த‌லைமைக் குருக்க‌ளையோ க‌டிந்து பேசினார். சுருக்க‌மாக‌ச் சொல்ல‌வேண்டுமெனில் ப‌ல‌வீன‌ர்க‌ளின் ப‌க்க‌ம் நின்றார் இயேசு.

இயேசுவின் போத‌னைக‌ள் ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கு பெரும் த‌லைவ‌லியாகிப் போன‌து. அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ருமான‌ம் குறைந்த‌து. அவ‌ர்க‌ள் மீது ம‌க்க‌ளுக்கு இருந்த‌ ப‌ய‌ம் வில‌கிய‌து. இயேசுவின் பின்னால் ம‌க்க‌ள் கூட்ட‌ம் பெருக‌ ஆர‌ம்பித்த‌து. அவ‌ருடைய‌ நிழ‌ல் ப‌ட்டாலே நோய்க‌ள் நீங்கின‌. அவ‌ருடைய‌ குர‌ல் கேட்டால் பேய்க‌ள் ப‌த‌றி ஓடின‌. அவ‌ருடைய வார்த்தைக‌ள் எளிமையின் உச்ச‌மாக‌வும், கூர்மையின் உச்ச‌மாக‌வும் இருந்த‌ன‌.

என‌வே ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ள் இயேசுவை அழிக்க முடிவு செய்தனர். அதற்காக பொய் சாட்சிகளை தயாரித்தனர். ந‌ள்ளிர‌வில் கைது செய்து விடியும் முன் அவ‌ரை குற்ற‌வாளியாக்கி, என்ன‌ ந‌ட‌க்கிற‌து என‌ ம‌க்க‌ள் குழ‌ம்பி தீர்வ‌த‌ற்குள் அவ‌ரை சிலுவையில் அறைந்த‌ன‌ர்.

இயேசுவின் வ‌ருகையின் நோக்க‌ம் அது தான். புனித‌மான‌ வாழ்க்கை வாழ்வ‌து எப்ப‌டி என‌ வாழ்ந்து காட்டுவ‌து. பாவ‌மான‌ வாழ்க்கை வாழ்ந்த‌ ம‌க்களுடைய பாவ‌த்தை ஏற்று ம‌ரிப்ப‌து.

 ப‌ழைய‌ ஏற்பாட்டில் ஆடுக‌ளைப் ப‌லி செலுத்தி பாவ‌ங்க‌ளை தீர்ப்பார்க‌ள். ஒட்டு மொத்த‌ ம‌னுக்குல‌ப் பாவ‌த்தைத் தீர்க்க‌ ஒரே வ‌ழி க‌ட‌வுளே அதை ஏற்ப‌து தான். அதைத் தான் இயேசு செய்தார்.

பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் மன்னிப்பு வேண்டும் போது அவருடைய மீட்பில் எத்தகைய கொடிய பாவியாக இருந்தாலும் இணையலாம்.

நாம் செய்யவேண்டிய இரண்டு காரியங்கள்.

  1. இயேசுவின் வாழ்க்கையை, போதனையை முழுமையாய் அறிவது.
  2. “இந்த சூழலில் இயேசு இப்படித் தான் செய்வாரா ?” என கேள்வி எழுப்பி அதன் படி நமது செயல்களை செய்வது.

பைபிள் மாந்தர்கள் 59 (தினத்தந்தி) எஸ்தர்

  1. எஸ்தர்

மன்னர் அகஸ்வேர் சூசான் தலைநகரில் இருந்தார். தன் குறுநில மன்னர்கள், உயர் அதிகாரிகள்,பாரசீகத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து நூற்று எண்பது நாட்கள் விருந்து வைத்தார். பின்னர் ஒருவாரம் பொதுமக்களுக்கும் விருந்து வைத்தார்.

“அரசி வஸ்தியை அலங்காரம் செய்து அழைத்து வாருங்கள். மக்கள் அவள் எழிலைக் காணட்டும்” மன்னன் ஆணையிட்டான்.

வஸ்தி மறுத்தாள். அரசன் திகைத்தான்.

‘அரசே.. உமது கட்டளையை உமது மனைவி நிறைவேற்றாவிட்டால் நாட்டில் வாழும் எந்தப் பெண்ணுமே தங்கள் கணவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். வஸ்தியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணமுடியுங்கள். நாட்டில் பெண்கள் எல்லாம் கணவனின் சொல்படி வாழவேண்டும் என கட்டளையிடுங்கள்” தலைவர்கள் சொல்ல, மன்னன் அப்படியே செய்தான்.

நாட்டில் உள்ள அனைத்து கன்னிப் பெண்களும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருத்தி எஸ்தர். எஸ்தர் ஒரு யூதப் பெண். அரண்மனையில் வேலை செய்யும் அவருடைய பெரியப்பா மகன் மொர்தக்காய் என்பவரிடம் வளர்ந்து வந்தாள்.

கன்னிப் பெண்கள் எல்லாரும் ஆறுமாதகாலம் வெள்ளைப் போளத்தாலும், ஆறு மாதகாலம் நறுமணப் பொருட்களாலும் என ஒரு வருடம் அழகுபடுத்தப் பட்டனர்.

அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக மன்னரின் அந்தப்புரத்திற்குச் செல்வார்கள். மன்னருக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவர் அரசியாவார் என்பதே வழிமுறை. எஸ்தரின் முறை வந்தது. எஸ்தரை மன்னனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. எனவே அவரை மனைவியாக்கிக் கொண்டார்.

ஒருமுறை மன்னரைக் கொல்ல இரண்டு பேர் முயன்றனர். அதைக் கண்டுபிடித்த மொர்தக்காய் அந்த செய்தியை எஸ்தரிடம் சொன்னார். எஸ்தர் மன்னரிடம் சொன்னார். கொலைசெய்ய முயன்றவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். “மன்னரின் உயிரைப் பாதுகாத்தார் மொர்தக்காய்” என அரண்மனைக் குறிப்பேட்டில் எழுதப்பட்டது.

அகஸ்வேர் மன்னன் தனது பணியாளர் ஆகாகியனான ஆமானை அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் வைத்தார். அவனுக்கு எல்லாரும் வணக்கம் செலுத்துவார்கள், மொர்தக்காயைத் தவிர !

மொர்தக்காய் யூதன் என்பது ஆமானுக்குத் தெரிய வந்தது. இப்போது அவனது எதிரி மொர்தக்காய் என்பது மட்டுமல்லாமல், யூதர்கள் என்றானது.

எனவே நாட்டிலுள்ள யூதர்களையெல்லாம் கொல்ல ஒரு நாள் குறித்து அதை அனைத்து மாநிலங்களின் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தான். செய்தி மொர்தக்காய்க்குத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கடவுளிடம் வேண்டினார்.

எஸ்தர் அரசியிடம் மொர்தக்காய் விஷயத்தைச் சொன்னார். எஸ்தர் கலங்கினார். ஆனாலும் மன்னர் அழைக்காமல் மன்னரின் முன்னால் செல்ல முடியாது என்பதால், யூத மக்கள் அனைவரையும் மூன்று நாள் நோன்பு இருந்து கடவுளிடம் மன்றாடச் சொன்னாள்.

மூன்று நாளுக்குப் பின் எஸ்தர் தைரியமாய் மன்னரின் முன்னால் சென்று நின்றாள்.

‘என்ன வேண்டும்’ மன்னர் கேட்டார்.

” நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்துக்கு மன்னரும் ஆமானும் வரவேண்டும் அப்போது  விண்ணப்பத்தைச் சொல்வேன்” எஸ்தர் சொல்ல, மன்னர் ஒத்துக்கொண்டார்.

முதல் நாள் விருந்து முடிந்தது. அடுத்த நாளும் விருந்துக்கு வாருங்கள். என்ன வேண்டும் என்பதை நான் அப்போது சொல்வேன் என்றாள் எஸ்தர். விருந்து முடிந்து வெளியே போன ஆமானை மொர்த்தக்காய் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.

கோபத்தில் வீடு சென்ற அவனிடம், மனைவி ஒரு குரூர யோசனையைச்  சொன்னாள். அதன் படி மொர்தக்காயைத் தூக்கிலிட ஐம்பது அடி உயரத்தில் ஒரு தூக்கு மரத்தை ஆமான் தயாராக்கினான்.

அன்று இரவு மன்னர் தூக்கம் வராமல் குறிப்பேடு நூலை வாசிக்கத் துவங்கினார். அப்போது மொர்தக்காயின் பெயர் அவருடைய கண்களில் தட்டுப்பட்டது. தன் உயிரைக் காப்பாற்றிய மொர்தக்காய்க்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். மன்னர் ஆமானை அழைத்தார்.

‘நான் ஒருவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். என்ன செய்யலாம்’

தன்னைத் தான் மரியாதை செலுத்தப் போகிறார் என நினைத்த ஆமான், ” கிரீடம் சூட்டி, மன்னரின் ஆடை உடுத்து, நகர்வலம் கொண்டு வரவேண்டும்” என்றார்.

‘அருமையான யோசனை. அதை மொர்த்தக்காய்க்குச் செய்”‘ என்றார் மன்னர். ஆமான் அதிர்ந்தான். வேறுவழியில்லாமல் அப்படியே செய்தான். மொர்த்தக்காயைப் பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்தனர்.

இரண்டாம் நாள் விருந்தில் களித்திருந்த மன்னர் எஸ்தரிடம், ‘இப்போது கேள் என்ன வேண்டும்’ என்று கேட்டார். எஸ்தர் தழுதழுக்கும் குரலில், ‘என்னையும் என் இனத்தையும் கொல்ல நினைக்கிறான் ஒருவன். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்’ என்றாள்.

யாரது ? மன்னன் கோபத்தில் கத்தினார். “இதோ இந்த ஆமான் தான்” என்றாள் அரசி. ஆமான் திடுக்கிட்டான்.

மன்னனின் கோபம் ஆமான் மேல் திரும்பியது. ஆமானைக் கொல்ல‌ ஆணையிட்டார். மொர்தக்காய்க்காக  தயாராக்கி வைத்த தூக்கிலேயே அவன் தொங்கவிடப்பட்டான்.

எஸ்தரின் மூலம் யூத இனம் அழிவிலிருந்து தப்பியது.

பைபிள் மாந்தர்கள் 52 (தினத்தந்தி) நாமான்

சிரியா நாட்டின் படைத்தளபதி நாமான். வலிமை மிக்க வெற்றி வீரன்.  அரசர் அவரிடம் மிகவும் மரியாதை செலுத்தியிருந்தான். ஆனால் பாவம் ! அவன் ஒரு தொழுநோயாளி.

தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்த காலத்தில்,  அரசவையிலேயே நாமான் இருந்தான் என்றால் அவன் எந்த அளவுக்கு மன்னனின் மரியாதையைப் பெற்றிருந்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை நாமான் இஸ்ரயேல் நாட்டில் தாக்குதல் நடத்தியபோது அங்கிருந்து ஒரு சிறுமியைக் கூட்டி வந்திருந்தார். அந்தச் சிறுமியைத் தனது மனைவிக்கு வேலைக்காரியாக்கி இருந்தார். ஒரு நாள் அந்தச் சிறுமி தலைவியிடம் சொன்னாள்.

“இஸ்ரயேல் நாட்டில் ஒரு இறைவாக்கினர் இருக்கிறார். அவரிடம் போனால் தலைவருக்கு சுகம் கிடைக்கும்”.

சிறுமியின் குரலில் இருந்த உறுதி தலைவிக்கு உற்சாகத்தைக் கொடுக்க, அவள் நாமானிடம் அதைச் சொன்னாள். நாமான் உடனே ம‌ன்ன‌னிட‌ம் சென்று விஷ‌ய‌த்தைச் சொன்னான். ம‌ன்ன‌னும் ம‌கிழ்ச்சிய‌டைந்தான்.

“போயிட்டு வாங்க‌. நான் இஸ்ர‌யேல் ம‌ன்ன‌னுக்கு ம‌ட‌ல் த‌ருகிறேன்” என்றான். கூட‌வே ப‌ல‌ கோடி ரூபாய் ம‌திப்புள்ள‌ பொன், வெள்ளி, பட்டாடைக‌ள் போன்ற‌வ‌ற்றையும், ப‌ணியாள‌ர்க‌ளையும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

நாமான் இஸ்ர‌யேல் ம‌ன்ன‌னிட‌ம் சென்று ம‌ட‌லைக் கொடுத்தான். இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ன் ம‌ட‌லைப் பிரித்தான்.

“என் ப‌ணியாள‌ன் நாமானை உம்மிட‌ம் அனுப்புகிறேன், அவ‌னுடைய‌ தொழுநோயைச் சுக‌மாக்குங்க‌ள்” என்று எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. ம‌ன்ன‌ன் அதிர்ந்தான். தொழுநோயைக் குண‌ப்ப‌டுத்துவ‌தென்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்ப‌து ம‌ன்ன‌னுக்குத் தெரிந்த‌து. வேண்டுமென்றே சிரியா ம‌ன்ன‌ன் த‌ன்னை வ‌ம்புக்கு இழுப்ப‌தாய் நினைத்தான்.

த‌ன‌து ஆடைக‌ளைக் கிழித்தான்.

“நானென்ன‌ க‌ட‌வுளா ? உயிரைக் கொடுக்க‌வும், எடுக்க‌வும் என்னால‌ முடியுமா ? சிரியா ம‌ன்ன‌ன் என்னோடு போரிட‌ கார‌ண‌ம் தேடுகிறானா ?” என்று கோப‌த்தில் க‌த்தினான்.

இறைவாக்கின‌ர் எலிசா இதைக் கேள்விப்ப‌ட்டார். ம‌ன்ன‌னுக்கு ஆள் அனுப்பினார்.

“ஏன் ஆடைக‌ளைக் கிழிக்கிறீர் ? அவ‌னை என்னிட‌ம் அனுப்புங்க‌ள்” என்றார்.

ம‌ன்ன‌ன் நாமானை எலிசாவிட‌ம் அனுப்பினார். குதிரைக‌ள், தேர், செல்வ‌ங்க‌ள் என‌ சிரியாவின் ப‌டைத் த‌லைவ‌ர் க‌ம்பீர‌மாக‌ இறைவாக்கின‌ர் எலிசாவின் வீட்டு வாச‌லின் முன்னால் நின்றார்.

எலிசா வெளியே வ‌ர‌வில்லை. அவ‌ரை வ‌ர‌வேற்க‌வில்லை. வாழ்த்து சொல்ல‌வில்லை. உள்ளே இருந்துகொண்டு ஒரு ஆளை அனுப்பி

“நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால் உன் உட‌ல் ந‌ல‌ம் பெறும்” என்று சொல்ல‌ச் சொன்னார்.

நாமான் க‌டும் கோப‌ம‌டைந்தார். “அவ‌ர் வெளியே வ‌ந்து, க‌ட‌வுளைக் கூவிய‌ழைத்து, தொழுநோய் க‌ண்ட‌ இட‌த்துக்கு மேலே கைக‌ளை அசைத்து என‌க்கு சுக‌ம் கொடுப்பார் என‌ நினைத்தேன். நான் ச‌க‌தியாய்க் கிட‌க்கும் யோர்தானில் மூழ்க‌ வேண்டுமாம். எங்க‌ நாட்டில் ஓடும் அபானா, ப‌ர்பார் ந‌திக‌ளெல்லாம் யோர்தானை விட‌ ஆயிர‌ம் ம‌ட‌ங்கு ந‌ல்ல‌து” என்று கோப‌த்துட‌ன் க‌த்திவிட்டு திரும்பிச் செல்ல‌த் தொட‌ங்கினார்.

அப்போது அவ‌ருடைய‌ வேலைக்கார‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் சென்று “எம் த‌ந்தையே” என‌ பாச‌மாய் அழைத்துப் பேசினார்க‌ள்.

“ஒருவேளை இறைவாக்கின‌ர் க‌டுமையான‌ ஒரு வேலையைச் செய்ய‌ச் சொல்லியிருந்தால் நீர் செய்திருப்பீர் அல்ல‌வா. அதே போல‌ இந்த‌ எளிய‌ செய‌லையும் செய்யுங்க‌ள்” என்றார்க‌ள்.

நாமான் அவ‌ர்க‌ள் பேச்சுக்கு ம‌ரியாதை கொடுத்தான். யோர்தான் ந‌திக்குச் சென்றான். ந‌தியில் மூழ்க‌ ஆர‌ம்பித்தான். ஒன்று..இர‌ண்டு.. மூன்று….. ஏழாவ‌து முறை மூழ்கி எழுந்த‌போது அவ‌ன் க‌ண்ணை அவ‌னால் ந‌ம்ப‌வே முடிய‌வில்லை. அவ‌னுடைய‌ நோய் முழுமையாய் நீங்கி விட‌, சின்ன‌ப் பிள்ளையின் தோலைப் போல‌ அவ‌ன் உட‌ல் மாறிய‌து.

உட‌னே எலிசாவிட‌ம் ஓடி வ‌ந்தான். அவ‌னுடைய‌ க‌ர்வ‌ம் எல்லாம் போயிருந்த‌து.

“இஸ்ர‌யேலைத் த‌விர‌ எங்கும் க‌ட‌வுள் இல்லை என்ப‌தை உறுதியாய் அறிந்து கொண்டேன். தயவு செய்து என் அன்பளிப்புகளை வாங்கிக் கொள்ளுங்கள்” என வேண்டிக் கொண்டான்.

எலிசாவோ எதையும் வாங்காம‌ல் அவ‌ரை அனுப்பி வைத்தார். போகும் போது ,இஸ்ரேல் நாட்டின் மண்ணை அள்ளிக் கொண்டு போன நாமான் சொன்னார்,”இனிமேல் இஸ்ரயேலின் கடவுளே என் கடவுள். வேறு கடவுளை வழிபடமாட்டேன் !”

நாமானின் க‌தை சில‌ ப‌டிப்பினைக‌ளை ந‌ம‌க்குத் த‌ருகிற‌து. எதிர்பார்ப்புக‌ளின்றி அந்த‌ அடிமைச் சிறுமியைப் போல பிறருக்கு உத‌வும் ம‌ன‌ம் ந‌ம‌க்கு இருக்க  வேண்டும்.

க‌ர்வ‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்துவிட்டு ஆற்றில் இற‌ங்கிய‌போது தான் நாமான்  ந‌ல‌ம‌டைந்தான். இறைவ‌னின் அருளைப் பெற‌ க‌ர்வ‌த்தைக் க‌ழ‌ற்றுத‌ல் அத்தியாவசியம்.

ந‌ல‌ம‌டைந்த‌பின் நாமான் எந்த‌த் த‌ய‌க்க‌மும் இன்றி க‌ட‌வுளை ம‌கிமைப்ப‌டுத்துகிறான். க‌ட‌வுளின் பெய‌ரை அறிக்கையிட‌ த‌ய‌ங்காத‌ ம‌ன‌நிலை வேண்டும்.

இந்த‌ பாட‌ங்க‌ளை நாமானின் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்.