காளான் அல்லது மஷ்ரூம்…

காளான் !

 

 

 

mushroom

முன்பெல்லாம் கிராமத்து வீதிகளில் கிடைத்து வந்த இலவச உணவு காளான்கள். இந்த காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள் இருப்பதாக இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்று நோயை சுமார் 64 விழுக்காடு வரை தடுக்கும் வல்லமை இந்த காளானுக்கு உண்டாம். காளானுடன் பச்சைத் தேனீரும் (கிரீன் டீ ) அருந்துவோருக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு 90 விழுக்காடு குறைகிறதாம்.

சீனாவில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வின் நீட்சி பல்வேறு வடிவங்களில் தொடரும் என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

காளானில் புற்றுநோயை எதிர்க்கும் குணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் விளைவாகவே இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கான்சருக்கு அளிக்கப்படும் மருந்துகளைப் போலவே காளானும் செயல்படுகிறதாம். அதாவது கான்சரை உருவாக்கும் ஆஸ்டிரோஜென் ஹார்மோனை தடுக்கும் அல்லது மட்டுப்படுத்தும் திறன் காளான்களுக்கு உண்டாம்.

கான்சர் எதிர்ப்புக்கும், காளானுக்கும் இடையேயான தொடர்பு சமீபகாலமாகவே பல்வேறு ஆராய்ச்சிகளை தூண்டி விட்டிருக்கிறது. அதில் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது.

அதாவது, காளான் சூப் தயாரித்துக் குடிப்பதனால் மார்பகப் புற்று நோயை குணப்படுத்த முடியுமா என்பதே அந்த ஆராய்ச்சி.

ஆஸ்திரேலியாவிலும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரம் பெண்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சி, கான்சருக்கான பிற காரணிகளையும் கருத்தில் கொண்டே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

காளான்களை உட்கொள்வதும், கூடவே கிரீன் டீ உட்கொள்வதும் கான்சரிலிருந்து விலகி இருக்க உதவும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துச் சொல்கின்றன.

 

இது, மீன் சமாச்சாரம் !

 fish_cartoon08

மீன் அசைவம் என சிலர் ஒதுக்க, அசைவப் பிரியர்களிலும் பலர் மீன் ‘கடல் உணவு’ என கைகழுவ, மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின் வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம். கவனிக்கவும், ஒருமுறைக்கு மேல் உண்பதே பலனளிக்கிறது.

பதின் வயது பகுதியின் இரண்டாவது பகுதி, மூளையில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிளாஸ்டிசிடி என அழைக்கிறார்கள்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை எப்படி இருக்கும், அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.

இந்தக் காலகட்டத்தில், அதாவது 15 வயதுக்கு மேல் மீன் உணவை வாரம் ஒரு முறையை விட அதிகமாய் உண்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறதாம்.

ஸ்வீடனின் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வு சுமார் 5000 பேரை வைத்து நிகழ்த்தப்பட்டது. இதில் மீன் உணவு உண்டவர்களின் திறன் வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பதின் வயதினருடைய அறிவு, புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இவையெல்லாம் மீன் உணவினால் மெருகேறுகிறதாம்.

அதிலும் குறிப்பாக ஒமேகா – 3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

 

இந்த நக்கல் தானே வேணாங்கிறது !

imag0067

 

இது அரசியல் காலம்.

இனிமேல் புகைப்பது, சினிமா காரர்களைப் பகைப்பது போன்ற சமாச்சாரங்களெல்லாம் சில நாட்களுக்கு நடக்காது என்பதைத் தெரிந்து தானோ என்னவோ இவ்வளவு ஹாயாக, போர்ட் மேலேயே கையைப் போட்டு புகைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்.

“என்னங்க… நோ பார்க்கிங்னா, அங்கே வண்டியை நிப்பாட்டுவீங்க ! நோ ஸ்மோக்கிங்னா அங்கே புகை பிடிப்பீங்களா என சிரித்துக் கொண்டே கேட்டேன்” (கொஞ்சம் பயந்து கொண்டு கூட )

அவர் நக்கல் பேர்வழி போல,

“தமிழ் நாடு கெட்டுப் போச்சுங்க. வண்டியை நிப்பாட்டற இடமா பாத்து நோ பார்க்கிங் போர்ட் மாட்டுவாய்ங்க. அதே போல நான் தம் அடிக்கிற இடமா பாத்து இந்த போர்டையும் மாட்டியிருக்காய்ங்க” என்றார் கூலாக !

“யாராச்சும் போன் பண்ணி கம்ப்ளயிண்ட் பண்ணினா என்ன பண்ணுவீங்க ?” என்றேன்

“தம்மு அதுக்குள்ள முடிஞ்சுடும். நான் கிளம்பிடுவேன். நீ இப்போ கிளம்பு காத்துவரட்டும்” என்றார், முறைத்துக் கொண்டே.

திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

இன்னுமா தூங்கல ?

sleeping_princess

“நானெல்லாம் வெறும் மூணு அல்லது நாலு மணி நேரம் தான் தூங்குவேன். மற்றபடி முழுக்க முழுக்க வேலை தான்” 

“இப்படி தூங்கி வழியும் நேரத்தில் எத்தனையோ உருப்படியான வேலை பார்க்கலாம்”

இப்படியெல்லாம் உங்களைச் சுற்றி, தூக்கத்தைப் பற்றி உளறிக் கொண்டிருப்பவர்களை அருகில் அழைத்து “ஏன் தூங்க வேண்டும் தெரியுமா?” என கேளுங்கள். அவர்களிடம் தூக்கத்தின் மகத்துவத்தை விளக்குங்கள்.

ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதே சரியான அளவு எனத் தெரிவிக்கும் அமெரிக்காவின் மருத்துவர் சாரா பல்டாஃப், ஏன் சரியான தூக்கம் வேண்டும் என்பதற்கும் தெளிவான பத்து காரணங்கள் தருகிறார். 
1. சரியா தூங்காவிட்டால் உடல் பருமனாகி, குண்டாகி விடும். பலருக்கும் இது தெரிவதில்லை. உண்மையில் சரியான தூக்கமில்லாவிடில் உடலிலுள்ள பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் இயல்பு நிலையை விட்டு விலகி விடுகின்றன. இது உடலை எடை அதிகரிக்கச் செய்து விடுகிறது.

2. சரியான அளவு தூக்கம் இல்லாவிட்டால் நமது உணவுப் பழக்க வழக்கம் கூட மாறிவிடுகிறது. உடல் அதிக கொழுப்புச் சத்துள்ள பொருட்களை தேட ஆரம்பிக்கும்.அது உடலுக்கு பெரும் பாதகமாய் அமையும் என்பதைச் சொல்லத் தேவையில்லை

3. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது உடலில் சருக்கரை (நீரிழிவு) நோய் வரும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

4. இதய நோய் !  சரியான அளவு தூக்கமில்லையேல் உங்களுக்கு இதய தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு 45 விழுக்காடு அதிகரிக்கிறது.

5. குருதி அழுத்தம் அதிகரிக்கிறது. தூக்கமற்ற இரவு, உடலை பலவீனப்படுத்துவதுடன், மறு நாள் அதிகப்படியான உடல் மற்றும் மன அழுத்தத்தைத் தந்து கூடவே குருதி அழுத்தத்தையும் தந்து விடுகிறது.

6. கவனச் சிதைவுக்கு தூக்கமின்மை காரணமாகி விடுகிறது. மூன்று மணி நேரம் தூங்கி வேலை செய்வதை விட சரியான அளவு தூங்கி வேலை செய்வதே தெளிவான வேலைக்கு உத்தரவாதம் தரும்.

7. சரியான தூக்கமின்மை உடலை தடுமாற வைக்கும். குறிப்பாக  வயதானவர்கள் சரியான தூக்கம் பெறவில்லையேல் தடுமாறி விழுந்து உடலை காயப்படுத்திவிடக் கூடும்.

8. மன அழுத்தத்துக்கு தூக்கமின்மை ஒரு காரணியாகிவிடுகிறது. மூளைக்குக் கிடைக்க வேண்டிய சரியான ஓய்வு கிடைக்காததே இதன் காரணம்.

9. குழந்தைகளுக்கு பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். ஒழுக்கம் சார்ந்த சிக்கல்களும் குழந்தைகளுக்கு வர சரியான தூக்கமின்மை காரணமாகக் கூடும்.

10. மரணம் விரைவில் வந்து கதவைத் தட்ட சரியான தூக்கமின்மை காரணமாகிவிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே தூக்கம் என்பது நேரத்தை வீணடிக்கும் ஒரு செயலல்ல, நாளைய தினத்தை பயனுள்ளதாக்க உடல் கொள்ளும் ஓய்வு என்பதை உணர்ந்து செயல்படுதலே சிறப்பு.

பெண்கள் கவனத்துக்கு….

vidisha-_2_பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.

ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

இப்பவே கத்துக்கோங்க….

seat2

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஐந்தில் திருந்து இல்லையேல் ஐம்பதில் வருந்து என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

குழந்தையாய் இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி.

குழந்தை ஆசையாய் கேட்கிறதே, அடம்பிடிக்கிறதே என்பதற்காக தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்றவற்றையும் வாங்கித் தரும் பெற்றோர் குழந்தைகளுக்குள் கான்சர் நுழைவதற்கான கதவையும் கூடவே திறக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இங்கிலாந்தில் மட்டும் சுமார் 17 விழுக்காடு குழந்தைகள் அளவுக்கு மிஞ்சிய எடையுடன் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று கவலையுடன் தெரிவிக்கிறது.

இப்படி அதிக எடையுடன் இருப்பது பிற்காலத்தில் சிறு நீரகம், கல்லீரல், மார்பு, புரோஸ்டேட், உணவுக்குழாய் என பல்வேறு இடங்களில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர நீரிழிவு, இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக அதிகரித்து விடுகிறது.

குழந்தைகளாய் இருக்கும் போது சரியான உணவுப் பழக்கத்துக்குள் வராவிடில் இளைஞர்களானபின் அவர்களால் ஆரோக்கிய நிலைக்கு வர முடியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரிட்சார்ட் ஜோன்ஸ்.

உடல் எடை அதிகரிப்பதால் வரும் கான்சர் வருடம் தோறும் தனது விழுக்காட்டை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

வயிற்றுப் பகுதிகளில் அதிகமாய் சேரும் கொழுப்பு மார்பகப் புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றுக்குக் காரணமாகி விடுகிறது. நினைவில் கொள்ளுங்கள், மார்பகப் புற்று நோய் ஆண்களுக்கும் வரலாம் !

லிவர், சிறுநீரகம், கல்லீரல் போன்ற இடங்களில் கான்சர் வரவும் இந்த அதிகப்படியான கொழுப்பு காரணமாவதுண்டு.

சைட்டோகின்ஸ் எனும் நமது உடலிலுள்ள பொருள்  கான்சரை எதிர்த்துப் போராடுகிறது, அதன் அளவை அதிகப்படியான கொழுப்பு குறைத்து விடுகிறது. எனவே புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வலுவிழந்து உடல் நோயில் விழுகிறது.

எனவே, பெற்றோர் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். குழந்தை இன்றைக்கு சிரிப்பதல்ல, என்றைக்கும் ஆரோக்கியமாய் வாழ்வதே முக்கியம்.

காபியும், கருவுறுதலும்…

41

தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.

காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.

தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.
காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக, காஃபைன் உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதியாகக் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், காபி குடித்தால் தூக்கம் குறைகிறது.

காபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.

ஒரு சாதாரண நபருடைய லிவர் நூறு மில்லி காஃபைனை வெளியேற்ற இருபத்து நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. நூறு மில்லி காஃபைன் என்பது எவ்வளவு ? ஒரு கப் காபியில் சுமார் 75 முதல் 200 மில்லி காஃபைன் இருக்கும் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காஃபைன் விஷம் பெண்களுக்கு மட்டும் தானா பிரச்சனையைக் கொடுக்கிறது ? காஃபைனுக்கு ஏனிந்த ஓரவஞ்சனை என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது

காபி குடிக்காமல் என்னால் இருக்கவே முடியாதே ! கொஞ்சம் கூட குடிக்க முடியாதா என அலறும் காபி பிரியர்களை அமைதிப்படுத்த, தினமும் முன்னூறு மில்லிகிராம் காபி என்பது ஆரோக்கியத்துக்கு அதிக ஊறு விளைவிக்காது என்று அறிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

நாலு இலை விடட்டும் முதல்ல…

080114_docomo_kids

அங்கிங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம் கைப்பேசியில் பேசியபடியே நடக்கும் சிறுவர்கள், மற்றும் பால்ய வயதினரை.

கைப்பேசியில் அதிக நேரம் பேசுவது மூளைக்கு ஆபத்து, கைப்பேசியில் பேசிக்கொண்டே காரோட்டுவது கவனத்தைச் சிதைக்கும் என வரிசையாய் வந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் பட்டியலில் புதிதாய் சேர்ந்திருக்கிறது இன்னுமொரு ஆராய்ச்சி.

குழந்தைகள் கைப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கும்போது அவர்களுடைய கவனம் 20 விழுக்காடு குறைந்து போகிறது. இதன் மூலம் அவர்கள் பெரும் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதே அந்த ஆராய்ச்சி.

இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற டேவிட் ஸ்வேபெல் எனும் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், ‘ பேசிக்கொண்டே குழந்தைகள் சாலை கடக்கும் போது அவர்களை அறியாமலேயே கவனத்தைச் சிதற விட்டு விடுகின்றனர். பெரியவர்களைப் போல எச்சரிக்கை உணர்வைக் காத்துக் கொள்ள முடியவில்லை” என தெரிவிக்கிறார்.

சுமார் பத்து, பதினோரு வயதுடைய எழுபத்து ஏழு சிறுவர் சிறுமியரை வைத்து நிகழ்ந்தப்பட்ட இந்த ஆராய்ச்சி கைப்பேசியினால் விளையக்கூடிய இன்னொரு ஆபத்தை விளக்குகிறது.

எப்போதும் கைகளில் கைப்பேசியைப் பிடித்துக் கொண்டு தனக்குத் தானே சிரித்தபடி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும், வாசித்துக் கொண்டும் திரியும் பால்ய வயதினருக்கும் இந்த ஆபத்து நிரம்பவே இருக்கிறது என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சுற்றி இருப்பவர்களோடுள்ள உறவை துண்டித்துக் கொண்டு தூர இருப்பவர்களுடன் அளவளாவ இந்த கைப்பேசிகள் துணை புரிகின்றன என்பதை பயணங்களிலும், உணவகங்களிலும் நாம் காண முடியும்.

கைப்பேசியின் பயன் பேசுவதில் மட்டுமல்ல, பேசாமல் இருப்பதிலும் தான் என்பதே நிஜமாகியிருக்கிறது இப்போது !

நான் குறைய மாட்டேன்னா சொல்றேன்….

fat

அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பது எப்போதுமே ஆபத்தானதே. இப்படி அதிக எடையுடன் இருக்கும் பெண்களுக்கு கருக்குழாய்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதிலும் மாதவிலக்கு நின்று போன, நடுவயதைத் தாண்டிய பெண்கள் அதிக எடையுடன் இருந்தால் அவர்களுக்கு இந்த புற்று நோய் வரும் வாய்ப்பு 80 விழுக்காடு அதிகம் என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி.

அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகம் சுமார் ஒரு இலட்சம் பெண்களை கடந்த பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதன் விளைவாக இந்த முடிவை எட்டியிருக்கிறது.

அதிக எடையுடன் இருக்கும் போது இடுப்பைச் சிற்றிய பகுதிகளில் அதிக கொழுப்பு சேர்ந்து இந்த புற்று நோயை உருவாக்கி விடுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உடல் எடைக்கும் புற்று நோய்க்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை. எனவே தான் அவர்கள் தங்கள் உடலைக் குறித்த கவலையற்று இருக்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

எடை அதிகரித்தபின் அதைக் குறைப்பது என்பது மிக மிக கடினம். எனவே அடுத்த தலைமுறையினரையேனும் சரியான எடையுடையவர்களாக வளர்த்த வேண்டியது அவசியம். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

தேவையற்ற சிப்ஸ், கோக், பீட்ஸா, பர்கர் போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை அறவே ஒதுக்குவதும், ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவுப் பழக்கத்துக்கு மாறுவதும், ஓரளவுக்கேனும் உடற்பயிற்சியைச் செய்வதும், மனதை உற்சாகமாய் வைத்திருப்பதுமே உடல் எடையை கட்டுக் கோப்பாய் வைத்திருக்க உதவும்.

உடல் எடை அதிகரிப்பு என்பது நகைப்புக்குரியதல்ல, அது கவலைக்குரியது என்பதை அறிந்து செயல்படுவதே ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும்.

அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ?

123ரோட்டோரங்கள் முதல் மிகப்பெரிய ஷோரூம்கள் வரை எங்கே சென்றாலும் பார்க்கலாம் விதவிதமாய் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் சிடிக்கள், டி.வி.டிக்கள்.

ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே இருப்பான், நமக்கு வீட்டு வேலை செய்யவோ, அலுவலக வேலை செய்யவோ தொந்தரவு இருக்காது என நினைக்கும் பெற்றோரும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதனாலேயே புதிது புதிதாய் டிவிடிக்கள் வாங்கிக் குவிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.

போட்டி போட்டு வாங்கிக் குவிக்க கலியுகப் பெற்றோர் தயாராக இருப்பதால், வித விதமான வடிவங்களில், விதவிதமான வகைகளில் குழந்தைகளுக்கான டிவிடிக்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. எண்கள் கற்க வேண்டுமா, எழுத்துக்கள் கற்க வேண்டுமா, பாடல்கள் கற்க வேண்டுமா ? எதற்கெடுத்தாலும் ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் போதும் எனும் நிலையே இன்றைக்கு ஏராளம் வீடுகளில்.

போதாக்குறைக்கு அம்புலிமாமா, அக்பர், பரமார்த்த குரு, பஞ்சதந்திரக் கதைகள் என முன்பு பாட்டி மடியில் அமர்த்தி சொல்லித் தந்த சுவாரஸ்யமான கதைகளையெல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் அசையும் கார்ட்டூன் பாத்திரங்களே கற்றுத் தருகின்றன.

இப்படி ஏராளம் அறிவு வளர்ச்சிக்கான நிகழ்சிகளைப் பார்த்து வரும் குழந்தைகள் அறிவில் சூரப் புலிகளாகவும், திறமையில் படு சுட்டியாகவும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அந்த நினைப்பை மூட்டை கட்டி வெளியே போட்டு விடுங்கள் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள் பல.

இப்போதெல்லாம் இரண்டு வயது கூட நிரம்புவதற்கு முன்பாகவே குழந்தைகளெல்லாம் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து மணிக்கணக்கில் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் துவங்கிவிடுகின்றனர். தொலைக்காட்சி பயன்படுத்தும் வீடுகளில் 90 விழுக்காடு குழந்தைகள் இரண்டு வயதுக்கு முன்பே தொலைக்காட்சிப் பிரியர்களாகி விடுகின்றனர் என்கிறார் ஆராய்ச்சியாளர் டிமிட்ரி கிரிஸ்டாகிஸ்.

சுமார் எண்பது விதமான ஆராய்சிகள் இது தொடர்பாக வந்திருக்கின்றன என்பதே இதை சர்வதேச சமூகம் உன்னிப்பாய் கவனிக்கிறது என்பதற்கான முதன்மைச் சாட்சி எனக் கொள்ளலாம்.

வெகுநேரம் தொலைக்காட்சி பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மொழி அறிவு அதிகரிக்கும் என்பது தான் பரவலான நம்பிக்கை. ஆனால் உண்மையில் நிலமை நேர் மாறாக இருக்கிறது. தினமும் இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைக்கு மொழி அறிவு குறைவாக இருக்கும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

எவ்வளவு அதிகமாய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறதோ அந்த அளவுக்கு குறைவான மொழி அறிவே குழந்தைகளுக்கு இருக்குமாம். அதிலும் ஏழு மாதத்துக்கும் பதினாறு மாதங்களுக்கும் இடையே தொலைக்காட்சி பார்க்கும் குழந்தை வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதில் வெகு தாமதம் ஏற்படுமாம். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், ஒவ்வோர் மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தலும் குழந்தை ஆறு வார்த்தைகள் குறைவாகக் கற்க காரணமாகிறதாம்.

இன்னோர் ஆராய்ச்சி குழந்தைகளின் நினைவுத் திறனை இத்தகைய தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் மழுங்கடிக்கிறது என பயமுறுத்துகிறது. அதிக தொலைக்காட்சிக் கல்வி பெறும் குழந்தைகளின் ஞாபகத் தளங்கள் பலவீனப் பட்டுவிடுகின்றன என்கிறது அந்த ஆராய்ச்சி.

அத்துடன் அவர்களுக்கு சமூகத்தோடும், மற்ற நண்பர்களோடும் உள்ள உறவின் இறுக்கமும் மெல்ல மெல்லப் பலவீனமடைகிறது. பெரும்பான்மை நேரம் தனிமையில் தொலைக்காட்சியுடன் செலவிடும் போது உரையாடல், வாசிப்பு, விளையாட்டு என பல விதமான செயல்பாடுகள் முடங்கிவிடுகின்றன.

தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடுவதில் பல்வேறு உடல் சார்ந்த சிக்கல்கள் எழும் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. இப்போது அது அறிவு சார்ந்த முன்னேற்றத்தையும் தடைசெய்யும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

எங்கே சென்றாலும் குழந்தைக்கு ஏதேனும் டிவிடிக்களை வாங்கி வரும் பெற்றோர் அதை சற்றே குறைத்து மற்ற செயல்பாடுகளிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்துவது அவசியம் என்பதே இந்த ஆய்வுகளின் ஒருவரிச் செய்தியாகும்.