மகிழ்ச்சியாய் இருங்கள்.

மகிழ்ச்சி ரெடிமேடாய்க் கிடைப்பதில்லை. அது நமது செயல்களின் மூலமாக விளைவதே ! –

தலாய் லாமா

ஆனந்தமாய் இருக்க வேண்டுமா என நீங்கள் யாரிடம் கேட்டாலும் “ஆம்” எனும் பதிலை சட்டென சொல்வார்கள். அப்படிச் சொல்லவில்லையேல் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு இருக்கலாம் என்பதை மனதில் எழுதிக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எல்லோருமே அடைய நினைக்கும் ஒரு விஷயம் இந்த சந்தோசம். ஆனால் அதைப் பலரும் அடைவதில்லை ! கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால் கூட அதைக் கண்டும் காணாததும் போலக் கடந்து செல்கிறார்கள்.

காரணம் மகிழ்ச்சியைக் குறித்தும், அதை அடையும் நிலைகளைக் குறித்தும் மக்களுக்கு இருக்கின்ற தவறான புரிதல்களும், தேடல்களும் தான். நீங்கள் கோபமாய் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி ஆனந்தத்தை இழந்து விடுகிறீர்கள் எனும் ரால்ஃப் வால்டோவின் சொலவடை உலகப் பிரசித்தம். அந்த ஆனந்தத்தை அடைவது எப்படி ?

பணம் தான் ஆனந்தத்தைத் தரும் எனும் நினைப்பு உலக மக்களின் பெரும்பான்மையானவர்களிடம் இருக்கிறது. அப்படியானால் எவ்வளவு பணம் ? நூறு நூபாயா ? நூறு கோடியா ? ஒரு இலட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடியா ? கணக்கு வழக்கே இல்லை இல்லையா ? இவ்வளவு பணம் கிடைத்தால் தான் மகிழ்ச்சி என்று ஒரு எல்லை வரைவது இயலாத காரியம். பணம் எப்போதுமே மகிழ்ச்சியைத் தருவதில்லை. பணம் தேவைகளை நிறைவேற்றலாம், ஆனால் அது மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதில்லை.

ஒரு வகையில் பணம் மகிழ்ச்சியை இழக்கச் செய்யும். ஒரு டிவி இருந்தா ரொம்ப மகிழ்ச்சியா இருப்போம் என நினைப்போம். ஒரு வீட்டில் எல்லோருமாய் சேர்ந்து கதைகள் பேசிச் சிரிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. அதை விட்டு விட்டு ஒரு தொலைக்காட்சியை வாங்கி வைத்தால், நமது மகிழ்ச்சியின் அளவு சட்டெனக் குறையும் ! உறவுகளின் இறுக்கம் குறைக்கும்.

“நமக்கு யாராச்சும் ஒரு கிஃப்ட் தந்தா சந்தோசமா இருக்குமே” என நினைப்போம். ஏதாவது கிடைச்சா சந்தோசம் வரும் என்பது தற்காலிக உணர்வே. சேர்ப்பதை விடக் கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் ! கையேந்தும் ஒரு ஏழைக்குக் கொடுக்கும் உதவி தரும் ஆனந்தம், நமக்கு யாரேனும் தரும் பணத்தை விட நீண்ட நேரம் நிலைக்கும் ! தேவைப்படும் ஒரு ஏழைக்கு செய்யும் உதவி மனதை மெல்லிய ஆனந்தத்துக்குள் இட்டுச் செல்லும்.

விளையாடுங்கள் ! விளையாடுங்கள் என்று சொன்னதும் ஏதோ கிரிக்கெட் பேட் எடுத்துக் கொண்டு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுவதை மட்டும் நான் சொல்லவில்லை. வீட்டில் குழந்தைகளோடு உருண்டு புரண்டு விளையாடுவதையும் சேர்த்தே சொல்கிறேன். விளையாடுவதற்கு உங்களுக்கு விளையாட்டு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விளையாடவேண்டும் எனும் மனம் இருந்தாலே போதும் !

“மகிழ்ச்சியாய் இருக்கத் துவங்கினால் வேலையில் தொய்வு ஏற்பட்டுவிடும்.வேலையில் கவனமாய் இருப்பது தான் முக்கியம் “ என்பது சிலருடைய வாதம். உண்மையில் மகிழ்ச்சியை நாடுபவர்களே வேலையில் வெற்றியாளர்களாய்ப் பரிமளிக்க முடியும். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு “பொழுதுபோக்கு” நிகழ்ச்சிகளை சுயமாகவே நடக்குகின்றன. அதன் மூலம் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தி, அதிக பவர்புல் வேலையாட்களாக மாற்றுவதே அவர்களுடைய சிந்தனை. மகிழ்ச்சியாய் இருக்கும் ஊழியர்களே சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்கிறது உளவியல். எனவே அந்தனையையும் தூக்கி ஓரமாய் வையுங்கள்.

“செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் முடிச்ச பிறகு தான் விளையாட்டோ, ஜாலி சமாச்சாரங்களோ “ என்று நினைப்பவர்களின் வாழ்க்கையில் சந்தோசம் எப்போதாவது தான் எட்டிப் பார்க்கும். தூரத்துச் சொந்தக்காரன் எதிர்பாராத நேரத்தில் வருவது போல ! காரணம் நமது வேலைகள் எப்போதுமே முடியப் போவதில்லை. அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் ! எனவே மகிழ்ச்சிக்கும் வேலைகளை முடிப்பதற்கும் முடிச்சு போடாதீர்கள்.

சிலரோ, “நானெல்லாம் சந்தோசமா இருக்க அருகதையே இல்லாதவன். அந்த அளவுக்கு மோசமானவன்” எனும் தாழ்வு மனப்பான்மையில் உழல்வதுண்டு. இவர்கள் நிச்சயம் சிகிச்சையளிக்கப்பட வேண்டியவர்கள். வாழ்வின் அத்தனை மகிழ்வுகளையும் இழந்து விடக் கூடிய அபாயம் இவர்களுக்கு உண்டு. இது அவர்களுடைய செயல்களால் விளைந்த தவறாகவும் இருக்கலாம். அல்லது அவர்கள் தங்களுடைய தோற்றத்தின் மீது கொள்ளும் தாழ்வு மனப்பான்மையாய் கூட இருக்கலாம் ! எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு என்பதை உணர்தல் அவசியம்.

“மகிழ்ச்சி என்பது கடைசியில் கிடைக்கக் கூடிய சமாச்சாரம்” என்பது சிலருடைய சிந்தனை. உண்மையில் மகிழ்ச்சி என்பது பயணம். அது இலக்கைச் சென்று அடைவதில் மட்டுமல்ல. ஒவ்வொரு பாதச் சுவட்டிலும் கிடைக்கும். ஒரு பூந்தோட்டத்தில் நடக்கிறீர்கள். மகிழ்ச்சி என்பது தோட்டத்தில் நடந்து முடித்த பிறகு தான் கிடைக்குமா ? அல்லது பயணத்தில் கிடைக்குமா ? ஒவ்வொரு மலரைச் சந்திக்கும் போதும், ஒவ்வொரு செடியைத் தாண்டும் போதும் மகிழ்வு நம்மை முத்தமுடுவது தானே முறை ?  வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ச்சியின் இழைகள் உண்டு. அதை நின்று நிதானித்து அனுமதிப்பதே வாழ்வில் முக்கியமானது !

மகிழ்ச்சி என்பது மனதின் நிலைப்பாடு. நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நீங்கள் நினைத்தால் மகிழ்ச்சி உங்களை வந்தடையும். ஆன்மீக வாதிகள் இறைவனில் மகிழ்ந்திருப்பதன் அடிப்படை இது தான். “மகிழ்ச்சி என்பது நம்மைப் பொறுத்தது” என்கிறார் தத்துவமேதை அரிஸ்டாட்டில்.

தேவையற்ற கவலைகளைத் தூக்கிச் சுமக்கும் கழுதையாய் மாறாதீர்கள். நீங்கள் தூக்கிச் சுமப்பவற்றை வழியில் இறக்கி வைத்து விட்டு நிதானமாய் நடை பழகுங்கள். “அது நடக்குமோ, இப்படி நடக்குமோ, ஏதேனும் நேருமோ’ எனும் பதட்டங்கள், பயங்கள் தவிருங்கள். பெரும்பாலான இத்தகைய பயங்கள் “நிழலோடு கொள்கின்ற நீள்யுத்தம்” போன்றவையே !

அடிக்கடி நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய சின்னச் சின்ன வெற்றிகள், சுவடுகள், முன்னேற்றங்கள், முயற்சிகள், அணுகுமுறைகள், அனைத்தையும் பாராட்டுங்கள். மனம் உற்சாகமடையும். முக்கியமாக உற்சாகத்தை உடைக்கும் சிந்தனைகளை ஒடித்து வெளியே போடுங்கள்.

நண்பர்களோடு இணைந்திருங்கள். உறவு வட்டாரத்தோடு இணைந்திருங்கள். சின்னச் சின்ன சண்டைகளையோ, கோபவார்த்தைகளையோ மறக்கும் வலிமை கொண்டிருங்கள். வாழ்க்கை அழகானது. உங்களுடைய ஈகோவும், வறட்டு கௌரவமும் அதை அழுக்காக்காமல் கவனமாய் இருங்கள்.

அடுத்தவர்களுடைய விமர்சனங்களையோ, கிண்டலையோ மனதில் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை அமைக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்களுடையது. இதில் மகிழ்ச்சியாய் இருக்க முடிவெடுப்பதும் நீங்களே. நீங்கள் நீங்களாய் இருங்கள். அது போதும் !

தோல்விகளைக் குறித்த பயங்களை ஒதுக்குங்கள். வழுக்கி விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாது. தோல்விகளையும் மகிழ்ச்சியை நோக்கிய பயணமாகவே கருதுங்கள். மகிழ்ச்சி என்பது நீங்கள் யார், எப்படி இருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வருவதல்ல. நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள், எப்படிச் செயல்படுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் வருவதே !

புன்னகையுங்கள். மகிழ்ச்சி என்பது நாம் தேடி அடையும் பொருள் அல்ல. மகிழ்ச்சி என்பது உணர்ந்து கொள்ளும் விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றி மகிழ்ச்சியைக் கொண்டு வருவதை விட அதிகமாய் மகிழ்ச்சி வெற்றியைக் கொண்டு வரும்.

மகிழுங்கள் ! சோகத்தின் தள்ளுவண்டியை தள்ளியே வையுங்கள் !

ஹெல்த்சானா : மருத்துவ இரண்டாவது அபிப்ராயம்

untitled

அந்த ஹாஸ்பிடல் போனா பணத்தையெல்லாம் புடுங்குவாங்க, இந்த ஹாஸ்பிட்டல்ல போனா வேணும்னே டெஸ்ட் எடுக்க சொல்லுவாங்க தேவையில்லாத சர்ஜரியெல்லாம் சஜஸ்ட் பண்ணுவாங்க. இப்படிப்பட்ட புலம்பல்களைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

பல மருத்துவமனைகள் நோயாளிகளின் மருத்துவக் காப்பீட்டுக்குத் தக்கபடி பணம் வசூலிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. பணத்தைக் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கின்றன என்பதால் நோயாளிகள் அதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த பணத்துக்காகவே அரை நோயாளியை ஆபரேஷன் பெயரில் முழு நோயாளியாக்கி விடுவது கொடுமையில்லையா ?

பெரும்பாலான மக்கள் ஒரு மருத்துவர் சொன்ன விஷயம் சரிதானா என்பதை இன்னொரு மருத்துவரிடம் கேட்டு சரிபார்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெரிய அளவிலான சர்ஜரிகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ இந்த சரிபார்த்தலை தவறாமல் செய்கிறார்கள்.

இந்த செகன்ட் ஒப்பீனியன் என்பது மிகவும் சிரமமான விஷயம். ஒரு தெரிந்த டாக்டர் இருந்தால், அவர் நல்லவராக இருந்தால், திறமை சாலியாக இருந்தால் மட்டுமே பெரும்பாலும் இந்த செகன்ட் ஒப்பீனியன் பயனளிக்கும். இல்லையேல் சிக்கல் மேலும் பெரிதாகி விட வாய்ப்பு உண்டு. காலவிரயம், பண விரயம், உழைப்பு விரயம் என பல விரயங்களும் இதில் உண்டு.

மருத்துவமனைகளில் பெரிய நோய்களுக்காக அட்மிட் ஆகும் மக்களில் 90 சதவீதம் பேருக்கும் தங்களுக்குத் தரப்படும் சிகிச்சை சரியானது தானா எனும் சந்தேகம் உண்டு என்கிறது ஒரு புள்ளி விவரம். தங்கள் டாக்டரை கடவுளாக நம்பியோ, தங்கள் கடவுளை டாக்டராக நம்பியோ அவர்கள் மருத்துவ சிகிச்சைக்குள் செல்கின்றன. இப்படி அரைகுறை நம்பிக்கையோடு மருத்துவமனையில் செல்பவர்கள் விரைவில் குணமாவதில்லை என்பது உளவியல் பாடம்.

இன்றைக்கு எல்லாமே ஆன்லைன் மூலமாக சாத்தியப்பட்டிருக்கிறது. காலையில் குடிக்கும் காபி முதல் இரவில் போர்த்தும் போர்வை வரை எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே வாங்கி விடுகிறோம். வங்கி எங்கே இருக்கிறது என்பதையே மறக்குமளவுக்கு பணப் பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் இடம் மாறிவிட்டன. இப்போது புதிதாக மருத்துவத்துறையும் அதில் இணைந்திருப்பது மருத்துவ நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

“ஆன்லைன் செகன்ட் ஒப்பீனியன்” மருத்துவத் துறைக்குள் நுழைந்திருக்கும் ஒரு புதிய வரவு. மருத்துவ அறிக்கைகள், பரிசோதனைகள் சார்ந்த சந்தேகங்களை ஆன்லைன் மூலமாகவே தெளிவுபடுத்திக் கொள்ளும் முறை தான் இது.

ஒரு டாக்டர் தருகின்ற மருத்துவ அறிக்கைகளை ஆன்லைனில் அப்லோட் செய்து, அதன் இரண்டாவது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவதுடன் நின்று விடாமல் மீண்டும் பல நிலை ஆலோசனைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். ஸ்மார்ட் போனில் அந்த அப்ளிகேஷனை நிறுவி நமது சந்தேகங்களை தேவையான நேரத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஹெல்த்சானா நிறுவனம் அத்தகைய மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் பணியில் தெளிவான கட்டமைப்பும், விரிவான தொடர்புகளும், தொலைநோக்குப் பார்வையும் என தனது வேர்களை ஆழமாய் மருத்துவத் துறைக்குள் நுழைத்திருக்கிறது.

மருத்துவமனைக்கு ஓடி, டாக்டரின் அப்பாயின்ட்மென்டைப் பெற்று, சாயங்காலம் வரை காத்திருந்து மன உளைச்சலடையும் சூழல் இனி இல்லை.
நேரடியாக இந்த வலைத்தளத்தில் நுழையுங்கள். ரிப்போர்ட்களை ஸ்கேன் செய்தோ, அல்லது ஸ்மார்ட் போனில் போட்டோ எடுத்தோ அப்லோட் செய்யுங்கள். டாக்டர்களின் லிஸ்டைப் பாருங்கள். உங்களுக்குத் திருப்தியான ஒருவரை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். டாக்டர் உங்களுடைய ரிப்போர்ட்களைப் பார்த்து விட்டு “செகன்ட் ஒப்பீனியன்” சொல்வார்.

இந்த டாக்டருக்கு உங்கள் இன்சூரன்ஸ் பணத்தின் மீது கண் இல்லை, உங்களை கட்டாய அறுவை சிகிச்சைக்குள் அழைத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. எனவே ‘உள்ளது உள்ளபடி’ ஒரு முடிவைச் சொல்வார். இவரும் அறுவை சிகிச்சை அவசியம் என்றால் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அல்லது அங்கேயே மூன்றாவதாக வேறொரு டாக்டரிடமும் நீங்கள் அபிப்பிராயம் பெற்றுக் கொள்ளலாம்.

முக்கியமான ‘உயிர்போகும்’ பிரச்சினைகளில் மூன்று நான்கு மருத்துவர்களிடம் உங்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்பது கூட வெகு எளிதில் இங்கே சாத்தியமாகிறது.

ஒருவேளை எல்லோரும் ஒரே பதிலைச் சொன்னால், “சரி, டாக்டர் சரியாத் தான் சொல்லியிருக்கார். ஆபரேஷன் பண்ணுவோம் ” என உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை முரண்பட்ட பதில் இருந்தால் என்ன செய்வது ?
அதற்காக அவர்கள் செய்திருக்கும் யுத்தி வியக்க வைக்கிறது.

ஹெல்த்சானாவின் ‘உயர்மட்ட மருத்துவர் குழு” இந்த ரிப்போர்ட்களையெல்லாம் பரிசோதிக்கும். அதில் நான்கைந்து பிரபல மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து ஒரு பொதுவான முடிவெடுத்து பதில் கொடுப்பார்கள்.

ஹெல்த்சானாவின் பணிகளை கூட்டிக் கழித்து ஒரு நாலு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அமெரிக்காவிலோ, லண்டனிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஒரு நோயாளி சென்னையிலோ, நெல்லையிலோ இருக்கும் தன்னுடைய‌ ஃபேவரிட் மருத்துவரின் அபிர்ப்பிராயத்தை வாங்குவது ஒன்று.

ஆயிரம் தான் இருந்தாலும் “நேரடியா டாக்டர் கிட்டே பேசறது மாதிரி வருமா ?” என்பவர்களுக்காக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் டாக்டர்களுடன் நேரடியாகப் பேசும் வசதி இன்னொன்று.

என்னோட மருத்துவ ரிப்போர்ட்ஸ் எல்லாம் குப்பை மாதிரி கெடக்கு என புலம்பும் மக்களுக்கு, டிஜிடலைஸ் செய்து முழு மருத்துவ வரலாற்றையும் கையில் கொடுத்து விடுவது மூன்றாவது.

பயணம் செய்பவர்களுக்கான மருத்துவ ஆலோசனை, அதற்கான மருத்துவ அறிக்கைகள், இத்யாதிகள் எல்லாம் சேர்த்து “எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட்” உருவாக்கித் தருவது நான்காவது. தெரியாத நாட்டில், புரியாத சூழலில் ஏதேனும் நோய் வந்தால் சட்டென நமது வரலாற்றை வினாடிகளில் புரட்டிப் பார்த்து சிகிச்சை அளிக்க இவை உதவும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்றைக்கு இத்தகைய மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் நிறுவனங்கள் மீது தங்கள் பார்வையைச் செலுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஐ.டி துறையில் ஊழியர்களுக்கு மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் தேவைகள் அதிகரித்திருக்கின்றன. சின்ன வயதிலேயே மன அழுத்தத்தில் பல உயிரிழப்புகள் நேர்வதால் இத்தகைய மருத்துவ சேவைகள் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாகின்றன.

இதைக்குறித்து சென்னையிலுள்ள மருத்துவர் செங்குட்டுவன், கார்டியாலஜிஸ்ட் கூறுகையில்

“ஹெல்த்சானா போன்ற நிறுவனங்களின் பயன்பாடுகளை இனிமே தவிர்க்க முடியாது. மருத்துவம் உயிர் சம்பந்தப்பட்டது, அலட்சியமா இருக்க முடியாது. ஒண்ணு போனா இன்னொண்ணு வராது. சோ, ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் ரொம்ப நல்ல விஷயம். நாலு இடம் விசாரிச்சு தான் நாம எதையுமே பண்றோம். மருத்துவத்துலயும் அது இருக்கிறதுல தான் ரொம்ப நல்லது. ” என்றார்.

கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் டாக்டர்: முத்துக்குமரன் ரங்கராஜன், கேஸ்ட்ரோஎன்ட்ரோலாஜிஸ்ட் கூறுகையில்

“எல்லாரோட மெடிகல் ஹிஸ்டரியும் கைல இருக்கணும். திடீர்னு பேஷன்ட் மயக்கமாயிட்டாருன்னா டாக்டருக்கு நோயாளியோட கண்டிஷனைக் கண்டுபிடிக்க டைம் ஆகும். அதுவே கையோட மெடிகல் ரிப்போர்ட் டிஜிடல் வடிவில இருந்தா வெரி சிம்பிள். உயிரைக் காப்பாத்தற வாய்ப்பு அதிகரிக்கும். ஹெல்த்சானா(Healthsana.com) ஒரு அற்புதமான முயற்சிங்கறதுல சந்தேகமில்லை” என்றார்.

தொழில்நுட்பங்களால் நோய்கள் அதிகரிக்கின்றன. நோய்களை தொழில்நுட்பம் நீக்குகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இது தானோ !!!

நவீன ஆஞ்சனேயர் !!!

 Coral_Castle_3எட்வர்ட் லீட்ஸ்கால்னின் ஐந்து அடி உயரமும், வெறும் நாற்பத்து ஐந்து கிலோ எடையுமுள்ள மெல்லிய மனிதர். ஆனால் அவருக்குள் டன் டன்னாய் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

தனது 25வது வயதில் பட்டாம் பூச்சிக் கனவுகளுடன் பதினாறு வயதான ஆக்னஸ் எனும் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் பாவம், திருமணத்துக்கு முந்தின நாள் ராத்திரி “மாப்பிள்ளை புடிக்கலை” என்று சொல்லி பெண் எஸ்கேப்.

எட்வர்ட் மனசில் அந்த தேவதை சிறகடித்துக் கொண்டே இருந்தது. அதன் பின் வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் அமெரிக்காவிலுள்ள புளோரிடா பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினார். அங்கே அதி பயங்கர எடையுள்ள பவளப் பாறைகள் இருந்தன.

தனி ஆளாக அந்தப் பவளப் பாறைகளில் சிற்பங்கள் செய்யத் துவங்கினார் எட்வர்ட். பெரிய இயந்திரங்கள் எதுவும் இல்லை. சின்னச் சின்ன கருவிகள் மட்டும் தான். அந்த பவளப் பாறைகளினாலேயே ஒரு வீடையும் கட்டி ராக் கேட் பார்க் என அதற்குப் பெயரிட்டார். எப்போதோ தன்னை உதறிச் சென்ற ஹீரோயினுக்கு அந்த இடத்தையும் டெடிகேட் செய்தார்.

Coral_Castle_2ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள இந்த பாறைகளை எப்படி புரட்டினார், நகர்த்தினார், உடைத்தார், தூக்கினார் என்பதெல்லாம் வியப்பான ரகசியங்கள். அதைவிடப் பெரிய ரகசியம் அத்தனை பாறைகளையும் ஒற்றை அனுமனாக தூக்கிக் கொண்டு போய் இன்னொரு இடத்தில் வைத்தார் என்பது தான்.

“எப்படிங்க இவ்ளோ எடையை தூக்கியிருக்கீங்க ? வெட்டியிருக்கீங்க ? “ என ஆச்சரியத்துடன் கேட்டால், “சீக்ரெட் தெரிஞ்சா இதெல்லாம் ஜுஜூபி மேட்டர் தான்” என்பார்.

தனது 64வது வயதில் 1951ல் எட்வர்ட் மரணமடைந்தார். அவருடைய பாறை ரகசியங்கள் இன்னும் உடைபடாமல் உறுதியுடனே இருக்கின்றன.

பி(கி)ல்லி சூனியம் !

 tipton-portrait

அமெரிக்காவிலுள்ள ஒக்லஹாமாவில் 1914ல் பிறந்தார் இசைக்கலைஞர் பில்லி டிப்டன். சிறு வயதிலேயே அவருக்கு இசையில் ஆர்வம் அதிகம். அவருடைய இளம் வயதிலேயே பெற்றோர் டைவர்ஸ் வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்கள். அதனால் உறவினர் ஒருரிடம் ஐக்கியமாகி வளர்ந்தால் பில்லி. அதற்குப் பின் அவருடைய பெற்றோரைக் குறித்து அவரும் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை.

இசை ஆர்வம் அவருக்குள் கொழுந்து விட்டு எரிய ஜாஸ் பயின்றார். பின்னர் சாக்ஸபோன், அது இது என இசையில் வளர்ந்தார். ஊரிலுள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் முதலில் பாடினார். கொஞ்சம் கொஞ்சமாக இசை அவரை உயர்த்தியது. பின் ஓரளவு பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்து ஊர் சுற்றினார். சென்ற இடங்களிலெல்லாம் நல்ல பெயர் கிடைத்தது. கே.எஃப்.எக்ஸ்.ஆர் எனும் ஒரு இசைக்குழுவையே ஆரம்பித்து நடத்துமளவுக்கு வளர்ந்தார்.

அடுத்த கட்டமாக இசை ஆல்பங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவருடைய ஸ்வீட் ஜோர்ஜியா பிரவுண் மற்றும் பில்லி டிப்டன் பிளேஸ் ஹை ஃபை ஆன் பியானோ இரண்டும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அப்புறமென்ன ஆல்பம் தயாரிப்புகள் தொடர்ந்தன. இவருக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருந்தார்கள். பல பெண்களுடன் “நெருக்கமாக” வாழ ஆரம்பித்தார். அதனால் இவரை ஒரு “பெண் பித்தன்” என்று கூட மக்கள் நினைத்தார்கள். ஒரு வழியாக 1960 கிட்டி கெல்லி எனும் பெண்ணுடன் வாழ்க்கையில் செட்டில் ஆனார். தம்பதியர் ஜான், ஸ்காட் மற்றும் வில்லியம்ஸ் என மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். பிள்ளைகளெல்லாம் “இவரு ரொம்ப நல்ல டாடி” என்று சொல்லுமளவுக்கு ஒரு நல்ல தந்தையாகவும் வாழ்ந்தார்.billybet

1989ல் தனது 74வது வயதில் பில்லி டிப்டன் இறந்தார். அப்போது தான் வெளிவந்தது உலகை அதிர்ச்சியூட்டும் ரகசியம். பில்லி டிப்டன் உண்மையில் ஆண் அல்ல ! ஒரு பெண் ! உலகமே வியந்தது. அவர் சுற்றித் திரிந்த பெண் தோழிகளெல்லாம் வியந்தனர். அவருடைய ரசிகர்கள், பிள்ளைகள், மனைவி எல்லோருமே அதிர்ந்தனர் !!! பத்திரிகைகளெல்லாம் முதல் பக்கத்தில் வியப்பு காட்டின.

பெண்களிடம் ரகசியம் நிற்காது என யாருப்பா சொன்னது ?

ஜூனியர் விகடன் : அதிர வைக்கும் நோய் !

Tanya2

உலகிலேயே இவள் மட்டும் தான் இப்படி என அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர் மருத்துவர்கள். என்ன மருத்துவம் பார்த்தாலும், என்ன ஆபரேஷன் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இவளுடைய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் உலகில் மருந்தே இல்லை என்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி ! எடை சுமார் 215 கிலோ.

பதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் ! இது விபரீத வளர்ச்சி ! உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் !

இவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 !

சிறு வயதில் சாதாரணமாய் தான் இருந்திருக்கிறாள். டீன் ஏஜில் தான் இந்த திடீர் வளர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. செருப்பு Tanya_Beforeவாங்கி வருவாள், அடுத்த மாதமே அது சின்னதாகிவிடும். வாங்கி கொண்டு வரும் ஆடைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதிர்ச்சியும், குழப்பமும், கவலையும் ஒட்டு மொத்தமாக அவளைச் சூழ்ந்து கொண்டது அப்போது தான்.

பதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.

இந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் !

எப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.

கேரன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்கா முழுதும் தேடி ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தார்கள். கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்பாடா, ஒரு வழியாக எனது சிக்கல் தீர்ந்தது என மகிழ்ந்தாள் தான்யா. ஆனால் அந்த மகிழ்ச்சி tranya3நீடிக்கவில்லை. அவள் தொடந்து வளர்ந்தாள்.

சரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.

பல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.

தன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் ? நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.

“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே !

கடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா !

நலம் பெற வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும் நாம் ?

ஃ 

தமிழிஷில் வாக்களிக்க…

தலைவலியைத் துரத்த எளிய வழி !!!

Cycle 

தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்என்பார்கள். காரணம் அந்த வலியை அனுபவித்தால் தான் அதன் கொடுமை விளங்கும். அதிலும் மைகிரைன் தலைவலி எனும் ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுடைய வலி மிகக் கொடுமையானது.

ஒருபக்கமாக நூலிழையில் ஆரம்பித்து தலையெங்கும் விரிந்து பரவி சுழற்றிச் சுழற்றி அடிக்கும் மைக்ரைன் தலைவலியை எப்படி வராமல் தடுப்பது என குழம்பித் தவிக்கும் மக்களுக்கு ஆறுதலாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதாவது, வீட்டில் இருக்கும் சைக்கிளை எடுத்துக் கொண்டு தினமும் கொஞ்ச நேரம் உற்சாகமாய் ஓட்டுங்கள். சில மாதங்களிலேயே உங்கள் தலைவலி பறந்து போய்விடும் என சொல்லி வியக்க வைக்கின்றனர் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களைக் கொண்டு கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

உடற்பயிற்சி செய்தால் தலைவலி அதிகமாகி விடும் எனும் தவறான எண்ணத்தினால் பலரும் உடற்பயிற்சி செய்ய மறுத்து வருகின்றனர். ஆனால் உண்மையில் சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சியானது தலைவலி வரும் வாய்ப்பை 90 விழுக்காடு வரை குறைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

“அது எப்படிங்க ?” என வினவினால், நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது உங்கள் உடலில் எண்டோர்பின்கள் அதிகமாக சுரக்கின்றன. எண்டோர்பின்கள் வலி நிவாரணியாக செயல்படும் என்பதால் தலைவலி வராமலும் அது தடுத்து விடுகிறது என மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மூளைக்கும் நல்லது என ஏற்கனவே மூட்டை மூட்டையாய் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுடைய மூளையே வலுவானதாக, நினைவாற்றல் அதிகம் கொண்டதாக இருக்கும் என அமெரிக்காவில் முன்பு ஒரு பெரிய ஆய்வு முடிவு வெளியாகியிருந்தது.

மைகிரைன் தலைவலியும் மூளையை மையப்படுத்தியதே என்பதனால் அந்த ஆராய்ச்சி முடிவும் இந்த நேரத்தில் ஒப்புமைக்கு உகந்ததாகிறது.

நிரந்தரத் தீர்வு என்பது கடினமான மைகிரைன் தலைவலிக்கு சைக்கிள் ஓட்டும் இனிமையான உடற்பயிற்சியே நிவாரணமளிக்குமெனில் அது மகிழ்ச்சியான செய்தி தானே !

 

குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

 

genelia-20தாகத்துக்குத் தண்ணீர் மோர், இளநீர் என்ற வளமான காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இன்றைய இளைஞர்களின் கைகளில் கோக் பாட்டில்களாகவும், பெப்ஸி கேன்களுமாகவும் உருமாறியிருக்கிறது.

போதாக்குறைக்கு ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெரிய பெரிய ஜம்போ பாட்டில்களும் குறைந்த விலைக்கே கிடைப்பதனால் எங்கேனும் குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெரிய பாட்டில்கள் சிலவற்றைத் தூக்கிச் சுமப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

2007ம் ஆண்டைய புள்ளிவிவரத்தின் படி உலக அளவில் 552 பில்லியன் லிட்டர்கள் குளிர்பானங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது தனிநபர் சராசரி 83. இன்னும் சில வருடங்களில் இந்த தனிநபர் சராசரி 100 லிட்டர்கள் எனுமளவுக்கு உயரும் என்கிறது பதட்டப்பட வைக்கும் புள்ளி விவரம்.

இப்படி எதற்கெடுத்தாலும் கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை உள்ளே தள்ளுவதால் நம்முடைய எலும்புகள் பலவீனமடையும் எனவும், மிதமிஞ்சிப் போனால் உடல் உறுப்புகள் செயலிழக்கக் கூட வாய்ப்புகள் உண்டு எனவும் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர் கீரீஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் குளிர்பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றோம். அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன. பல் நோய்கள், எலும்பு நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் குளிர்பானங்களைக் குடிப்பதனால் வருகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் மோஸஸ் எலிசாப்.

குளுகோஸ், புரூட்கோஸ், காஃபைன் போன்றவையே குளிர் பானங்களில் அதிகமாய் காணப்படும் மூலக்கூறுகள். இவையே பல்வேறு சிக்கல்களுக்கு காரணகர்த்தாக்கள்.

அதிக கோக் உட்கொள்வதனால் உடலிலுள்ள பொட்டாசியம் அளவு குறைந்து போய்விடுகிறது. இதை மருத்துவம் ஹைப்போகலேமியா என பெயரிட்டு அழைக்கிறது. இந்த சூழல் வரும்போது உடலின் தசைகள் வலுவிழந்து போய்விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கோக் போன்ற குளிர்பானங்களில் உள்ள சருக்கரையின் அளவு சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, சிறுநீரகம் அதிக பொட்டாசியத்தை  வெளியேற்றி, உடல் பொட்டாசியம் குறைவான சூழலுக்குத் தள்ளப்பட்டு என சங்கிலித் தொடர்ச்சியாய் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் குண்டாதல், பல் நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பரவலான நோய்களுடன் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்து விட்டு நமது வீட்டு பிரிட்ஜ்களில் சாதுவாய் அமர்ந்திருக்கிறது இந்த சர்வதேசச் சாத்தான் !

முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….

Egg3

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.

அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .

கொசுக்களால் ஒரு மலேரியா விளம்பரம் !

Hitlar1

 

உலகெங்கும் மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. உலகெங்கும் பல்லாயிரம் உயிர்களை ஆண்டுதோறும் அழித்துக் கொண்டிருக்கும் இந்த நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு இன்னும் பல்வேறு நாடுகளில் இல்லை.

எப்படியாவது வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் செய்து இந்த நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என நினைத்த ஸ்பானிஷ் விளம்பர நிறுவனம் ஒரு புதுமையான உத்தியைக் கண்டு பிடித்தது !

மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் படங்களைக் கொண்டே ஓவியம் வரைவது எனும் சிந்தனை அடிப்படையிலான அந்த உத்தி பார்வையாளர்களை வியக்க வைக்கிறது !

“ஆப்பிரிக்கா டைரக்டோ” எனும் அமைப்பு மூலம் நடத்தும் மலேரியா நோய்க்கான இந்த விளம்பரப் படங்கள் வியப்புணர்வையும், விழிப்புணர்வையும் ஒரு சேர நிகழ்த்துகின்றன.

உதாரணமாக ஹிட்லரின் உருவப் படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது அதன் கீழே வாசகம் “மலேரியாவைப் போல அதிக உயிர்களைக் கொல்ல யாராலும், எதுவாலும் முடியாது !

தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !

Pablo-Picasso-Mother-And-Child-25656காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என “மார்னிங் சிக்னெஸ்” குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டானிக்காக வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.

தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.

சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர்  இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.