கட்டுரை : பதறாயோ நெஞ்சமே…

Del641732002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல புள்ளி விவரக் கணக்குகள். இவர்களில் அறுபது விழுக்காட்டினர் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ளவர் கள் என்பது சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் செய்தி.

குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு எனும் பெயரிலிருந்து ஆப்பிரிக்கா கீழே இறங்க முதலிடத்தில் இந்தியா அவமானகரமாக அமர்ந்திருப்பதாகச் சொல்கிறது யூனிசெஃப் அறிக்கை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரம் பட்டை தீட்டுதல், சிவகாசி சாத்தூர் அதைச்சுற்றிய பகுதிகளில் தீப்பெட்டி செய்தல் மற்றும் பட்டாசு செய்தல், பீடி சுற்றுதல்,  தென் மாவட்டங்களில் செங்கல் சூளைகள், முந்திரி ஆலைகள், காஷ்மீரில் கம்பளம் செய்யும் தொழில், உத்திரப்பிரதேச பானை செய்யுமிடங்கள், பிரோசாபாத்தில் கண்ணாடி தொழிற்சாலை இவை தவிர உணவகங்கள், சாலைகள், வீடுகள் எங்கும் இன்னும் இருக்கிறார்கள் பல இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள். பதினைந்து வருடத்துக்கு முந்திய கணக்கெடுப்பே இந்தியாவில் 8 கோடி குழந்தைகள் கல்வி கற்கவில்லை என்கிறது. இப்போது அந்த எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 5 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக சில கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

குமரி மாவட்டத்தின் செங்கல் சூளைகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் ஏராளமான அளவில் பணி செய்கிறார்கள். மண்ணைச் சேறாக்குவது, அதை மிதிப்பது, செங்கல் அறுப்பது, அதை அடுக்குவது, சுமப்பது என அனைத்து விதமான பணிகளையும் சிறுவர்கள் செய்கிறார்கள், மிகவும் குறைந்த ஊதியத்தில்.

இதைத் தவிர குமரிமாவட்டத்தில் சிறுவர்கள் முந்திரி ஆலைகளில் அதிகமாக வேலை செய்கிறார்கள். முந்திரி ஆலைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளே வேலைக்குச் செல்கிறார்கள். வறுக்கப்பட்ட முந்திரியை உடைப்பது, அதன் மெல்லிய தோலை நீக்குவது என பல வேலைகளை சிறுமிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த புகையினால் பல நோய்களும், முந்திரியின் திரவத்தினால் தோல் தீய்ந்து போதல் போன்ற பல அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.

பதிமூன்று, பதினான்கு வயதுக் குழந்தைகள் பலர் வீடுகளில் வேலைக்காக சேர்க்கப்படுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என எல்லா வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டிய சூழல். இரவில் தாமதமாய் தூங்கி பகலில் விடியும் முன்பே எழும்பும் இந்த சிறுமிகளின் மன உளைச்சல் அளவிட முடியாதது. படிக்கும் ஆர்வம் இருக்கும் பல சிறுமிகள் ஒரு அடிமை நிலையில் தங்கள் வாழ்க்கையை சமையல் கட்டில் இழந்து விடும் சூழல் இன்று பல இடங்களில்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசு வீட்டு வேலை மற்றும் உணவகங்களில் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. எனினும் நிலமை சீரடைந்தபாடில்லை. இது மட்டுமன்றி குழந்தைத் தொழிலாளர்கள் தடை செய்யப்படவேண்டிய இடங்கள் பல உள்ளன. அரசு சார் நிறுவனங்கள் பலவற்றில் குழந்தைகள் இன்னும் இருக்கிறார்கள்!

நெசவுத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் பல ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள். நெசவுத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்குக் காரணம் அவர்களுடைய சிறு கைகள் நூல் இழைகளை பக்குவமாய் சரிசெய்யும் என்பது தான். சிறுவர்களை வைத்து சிறு சிறு பொருட்களை விற்கச் செய்வது, அவர்களை ஷூ பாலிஸ் போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதும் இன்று பரவலாக நடந்து வருகிறது.

சிறுவர் சிறுமியரை போரிலும் பல இயக்கங்கள் பயன் படுத்துகின்றன. அவர்களால் பிறருடைய கவனத்தைக் கவராமல் தப்பிக்க முடியும் என்பதும், அவர்களை எளிதில் கட்டளைகளால் கட்டுப்படுத்தலாம் என்பதும், அவர்களுக்கு மூளைச் சலவை செய்வது எளிது என்பதும் முக்கிய காரணங்களாகும்.

எண்பதுகளில் ஈராக் ஈரான் போரின் போது சிறுவர்கள் பெருமளவில் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் நிலங்கள் வழியாக சிறுவர்களை அனுப்பி சோதிப்பதும், அவர்களை போரில் வலுக்கட்டாயமாக நுழைப்பதும் என அரசுகள் சிறுவர்களை கொடுமைப்படுத்தின. சுமார் மூன்று இலட்சம் குழந்தைப் போர் வீரர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் இறந்து, பலர் காயமுற்றும் தங்கள் வாழ்வின் மகத்துவமான பகுதியை இழந்துவிட்டனர் என்பது வேதனையான செய்தி. பல இயக்கங்கள் சிறுவர் சிறுமியரை போதைக்கு அடிமையாக்கி போரில் ஈடுபடச் செய்வதுண்டு. உள்ளூரிலேயே தேர்தல் காலங்களில் சிறுவர்கள் பல்வேறு விதமான அரசியல் வேலைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள், அதை அரசும் கண்டு கொள்வதில்லை.

சர்க்கஸ் போன்ற இடங்களில் சிறுவர் சிறுமியர் சாகசங்கள் செய்தும், கழைக்கூத்தாடிகளாகியும் வேலை செய்கின்றனர்.

இவை தவிர குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் சர்வதேச அளவில் கவலைக்குரிய ஒன்றாகவே மாறிவருகிறது. பாலியல் தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தான் சமுதாயத்தின் மிகப்பெரும் அவமானம் எனக் கருத வேண்டும். குறைந்த பட்ச பணத்திற்காக மழலைகளின் எதிர்காலத்தை பாலியல் பயங்கரத்துக்குப் பலியிடுவதில் பல பெற்றோரே உடந்தையாய் இருக்கிறார்கள் என்பது உறைய வைக்கும் உண்மை.

சமீபத்தில் இந்தியாவில் ராஜமுந்திரி என்னுமிடத்தில் பெற்றோர்களே பிள்ளைகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய செயலை cnn-ibn வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து இலட்சம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். யூனிசெஃப் கணக்கெடுப்பு, சுமார் ஒரு இலட்சம் குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள் ஒவ்வோர் இரவும் பத்து முறை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறி பதை பதைக்க வைக்கிறது. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பது கவனிக்கப்படத் தக்க ஒன்று. பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளில் ஐவரில் ஒருவர் ஏதோ ஒருவித பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சித் தகவல்.

நோய்டா கொலையும், இந்தியாவின் பெருநகரங்களில் அடிக்கடி நடக்கும் குழந்தைகள் கடத்தலும், கொலையும் எல்லாமே குழந்தைகள் மீதான பாதுகாப்பு உணர்வு ஒரு சமூக உணர்வாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பறை சாற்றுகின்றன.

பண்டைக்காலங்களில் விவசாயத்தை நம்பியே வாழ்ந்த குடும்பத்தினர் தங்கள் குழந்தைகள் கல்வியறிவு பெறுவதைவிட அனுபவ அறிவு பெறுதல் சிறந்ததென்று விவசாயத்தில் ஈடுபடுத்தினர். அதை அவர்கள் குழந்தைத் தொழிலாகப் பார்க்கவில்லை. குடும்பத்திற்குத் தேவையான பணியாகவே கருதினார்கள். பின் காலம் செல்லச் செல்ல மாறிவரும் சூழலுக்கும், அமைப்புக்கும் ஏற்ப குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளும் மாறின.

நேபாளத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் உள்ளனர். சுமார் அறுபது சதவீதத்துக்கும் மேலான குழந்தைகள் இங்கே விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிற இடங்களில் குடிபெயரும் மக்கள் பெரும்பாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பரிதாப நிலையையே கொண்டுள்ளனர். மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களும் இந்த நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர் நிலை இன்று வளரும் நாடுகளில் மட்டுமே பெருமளவில் இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வறுமையே இதன் முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுவதனால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை குடும்பங்களில் செய்யாமல் குழந்தைத் தொழிலை அறவே ஒழிப்பது சாத்தியமில்லை. சட்டங்களினால் குழந்தைகளை வேலைக்கு வருவதை நிறுத்தும் அதே நேரத்தில் அந்த குழந்தைகளுக்குக் கல்வியை அளிப்பதற்குரிய வசதிகளையும் அரசு செய்தல் அவசியம்.

நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் குழந்தைத் தொழிலாளர்கள் நிறைய பேர் இருந்த யூ.கே போன்ற பல மேலை நாடுகள் இன்று முழுவதும் அதிலிருந்து விடுபட்டு விட்டன. அதற்கு சட்டங்களும் அரசின் தொலைநோக்குப் பார்வையுமே காரணம் எனலாம்.

யூ.கேவில் குழந்தைப் பராமரிப்புக்கு ஏராளம் நலத் திட்டங்கள் உள்ளன. தாய்மை நிலையிலுள்ளவர்களுக்கு, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, தத்து எடுத்துக் கொண்டவர்களுக்கு என பல சலுகைகள் உள்ளன. பெற்றோருக்கு வரிகுறைப்பு , குழந்தை பராமரிப்பு நிதி என பல அமலில் உள்ளன.

தாய்மை நிலையில் உள்ளவர்களுக்கு முப்பத்தொன்பது வாரங்கள் வரை அரசே உதவி செய்கிறது. மருத்துவ செலவுக்காக சுமார் நாற்பதாயிரம் ரூபாயை யூ.கே அரசு குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அளிக்கிறது.

குழந்தையின் பதினாறு வயது முடியும் வரைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை நலத் திட்ட உதவிகளை அரசு செய்கிறது. கல்வி கற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு 20 வயது வரை அரசு உதவி செய்கிறது. குறைந்த வருமானம் உடைய பெற்றோரின் குழந்தைகளுக்கு உணவு, பள்ளிச் சீருடை, கட்டணம் முதலியவற்றை அரசே செலுத்துகிறது. குழந்தைகளைப் பராமரிக்கும் பாதுகாவலர்களுக்கும் அரசு பல சலுகைகள் நல்குகிறது.

பிரான்ஸ் அரசும் பல்வேறு நலத்திட்டங்களை குழந்தை நலனுக்காய் நல்குகிறது. தாய்மார்களின் மருத்துவச் செலவு, பெற்றோருக்கு உதவித் தொகை, கல்வித் தொகை தவிர ரெயில்வே போன்ற இடங்களிலும் 40 விழுக்காடு குறைந்த கட்டணத்தின் இருபது வயது வரை உள்ளவர்கள் பயணிக்க வகை செய்கிறது. வளர்ந்த நாடுகளில் அமலில் உள்ள இதுபோன்ற நலத்திட்டங்கள் அங்கே குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டது.

நெதர்லாந்து நாட்டில் 1900ல் ஆறாம் வயது முதல் பன்னிரண்டாம் வயது வரையுள்ள சிறுவர் சிறுமியருக்குக் கல்வி கட்டாயமாக்கப் பட்டது. முதலில் வெற்றி பெறாமல் இருந்த இந்த திட்டம் அரசின் தீவிர கண்காணிப்பினாலும், அதற்கென நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளினாலும் வெற்றியடைந்தது. முதலில் வெறும் 9 விழுக்காடு சிறுவர் சிறுமியர் மட்டுமே கல்விக்கு அனுப்பப் பட்டனர்.

அதன்பின் 1969ம் ஆண்டு ஆறாம் வயது முதல் பதினைந்தாம் வயது வரை கட்டாயக் கல்வி எனும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது மேலும் திருத்தப்பட்டு 1975ம் ஆண்டு ஆறு முதல் பதினாறுவயது வரை என்று நிர்ணயிக்கப்பட்டது.

பெல்ஜியம் நாட்டிலும் 1914ல் ஆறு வயதுமுதல் பன்னிரண்டு வயது வரை கட்டாயக் கல்விமுறை அமலுக்கு வந்தது. அது வளர்ச்சியடைந்து 1983ம் ஆண்டில் ஆறு வயதுமுதல் பதினெட்டு வயதுவரை என்றானது. பிரிட்டனிலும் 1857க்கு முன் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வியறிவற்றே இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலமையோ வியப்பூட்டுகிறது.

ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டமைவு 1989ம் ஆண்டு ‘குழந்தைகளின் உரிமை’ பற்றிய ஒப்பந்தம் ஒன்றை இட்டன. அதன் படி சிறுவர்களுக்கு 52 உரிமைகள் இருப்பதாக அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. 189 நாடுகளில் இதுவரை அதில் கையொப்பமிட்டுள்ளன.

குழந்தைகள் குழந்தைத் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படாமலும், விளையாட்டு மற்றும்  பொழுதுபோக்குகளில் ஈடுபடவும், வீடுகளில் தங்கி வளரும் உரிமையையும், ஆரோக்கியமான வாழ்வுக்கு உரிமையுடையவர்களாகவும், கல்விக்கு உரிமையுடையவர்களாகவும், கருத்துச் சுதந்திரம் உடையவர்களாகவும், வன்முறைகளிலிருந்து காப்பாற்றப்படவேண்டியவர்களாகவும் குழந்தைகளை அந்த ஒப்பந்தம் சித்தரித்தது.

எளிய வேலையோ, கடினமான வேலையோ குழந்தைகள் தங்களுடைய வாழ்வின் அடிப்படையாகிய கல்வி போன்ற உரிமைகளை விட்டு விட்டு வேலை செய்வதே மனித உரிமைக்கு எதிரானதாகும் என்பதை அவை பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமாக வலியுறுத்தின.

மேலை நாடுகளில் 1851 ல் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை விதிகள் எட்டு வயதுக்குக் குறைந்தவர்களை வேலைக்கு வைப்பதை தடை செய்தது. தங்கச் சுரங்கம் போன்ற இடங்களில் வயது பத்து என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் காலம் செல்லச் செல்ல அந்த வயது வரம்புகள் ஒத்துக் கொள்ள முடியாதவை என்று விலக்கிக் கொள்ளப்பட்டன. குழந்தைகள் வேலைக்குச் செல்வதே தவறு என்பது உணரப்பட்டது.

வீடுகளில் இருக்கும் புகைபோக்கிகளைச் சுத்தம் செய்வதற்காக பயிற்சி பெற்ற சிறுவர்கள் புகை போக்கிகளில் ஏறி சுத்தம் செய்வது மேலை நாடுகளில் முன்பு இருந்த வழக்கம். பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு இந்த சிறுவர்கள் ஆளாவதாகச் சொல்லி 1875ம் ஆண்டு அது தடை செய்யப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் கூடிய ஒருங்கிணைந்த நாடுகளின் ‘மில்லேனியம் டெவலப்மெண்ட் கோல்ஸ்’ எனும் திட்டம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாகக் கையில் எடுத்துள்ளது. குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை ஒரு சமூக, இன, நாட்டுப் பிரச்சனை அல்ல எனவே அதை ஒரு சர்வதேசப் பார்வையில் பார்க்கவும், ஒழிக்கும் முயற்சிகள் எடுக்கவும் இந்த திட்டம் முயல்கிறது.

உலக குழந்தைத் தொழிலாளர்களில் 8 கோடி பேர் கடினமான ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. தெருவில் பிச்சையெடுத்து அலையும் சிறுவர்கள் ஆப்பிரிக்காவில் மட்டும் 10 இலட்சம் பேர் இருக்கின்றனராம்.

ஒரு குடும்பத்தின் வருமானத்தில் எட்டு முதல் பன்னிரண்டு விழுக்காடு வரை குழந்தைகள் சம்பாதிப்பதாகவும், இதனால் குழந்தைத் தொழிலின் முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது குடும்ப சூழல் என்றும் யூனிசெஃப் தெரிவிக்கிறது.

சமூகத்தின் வேர்களில் கரையானாக அரித்துக் கொண்டிருக்கும் இந்த சிறுவர் தொழில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து மனிதநேயமும், தொலை நோக்குப் பார்வையும், சமூக அக்கறையும் கொண்ட எவருக்கும் இருக்கப் போவதில்லை. இதை ஒழிக்க முக்கியத் தேவை என்ன ? கல்வி !

கல்வியைக் கட்டாயமாக்கும் எந்த ஒரு மாநிலமும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது கேரள அரசு. மத்திய அரசு கல்விக்கென ஒதுக்கும் நிதியை விட அதிகமாக சுமார் 12 சதவீதம் அளவுக்கு கேரள அரசு ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கியதால் இன்று கல்வியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாய் திகழ்கிறது. அங்கே குழந்தைத் தொழிலாளர்களே இல்லை எனலாம். அப்படி யாரேனும் தென்பட்டால் அவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.

கல்விக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்பும்போது தற்காலிகமாய் தடைபட்டுப் போகும் குடும்ப வருமானம் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தின் எழுச்சிக்கே அடித்தளமாக அமைகிறது என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்வியறிவு பெறாமல் சிறு சிறு வேலைகளில் ஈடுபடும் சிறார்கள் தாங்கள் சூழ்ந்திருக்கும் மக்களின் பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விரைவிலேயே சமூக விரோத செயல்களைச் செய்யவும், தன்னை வாழவைக்காத சமூகத்தின் மீது வன்முறைக் கோபம் கொள்ளவும் பழகிவிடுகிறார்கள்.

2015ம் ஆண்டிற்குள் ஏழு வயதுமுதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்த சர்வதேசத் திட்டம் செயலாக்கம் பெற்றால் பல பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு அது அடித்தளமாக அமையும்.

கல்வி அளிக்க முடியாத சூழலில் குழந்தைகளை வேலை செய்வதைத் தடுப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் வெறுமனே இருந்துவிட முடியாது வாழ்க்கைக்குரிய சூழல் அவர்களுக்காய் அமைக்கப்பட வேண்டும். இன்று பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு ஆண் பெண் ஏற்றத் தாழ்வும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

எகிப்து, ஜிம்பாவே போன்ற நாடுகளில் அதிக அளவில் துவங்கப்பட்ட ஆரம்பப் பாடசாலைகளினால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1997க்குப் பிறகு பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளிப்பதும், அந்த கல்வியைக் குழந்தை பெறுவதற்குரிய வாகன வசதிகளை செய்வதும் என உலக நாடுகள் பலவும் இப்போது குழந்தைத் தொழிலை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறும் நிலை இன்று உருவாகியுள்ளது.

குழந்தைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதால் குழந்தைகளின் கல்விச் செலவும், அந்த குழந்தையினால் வந்து கொண்டிருந்த வருமான இழப்பு எனும் இரட்டை இழப்பிற்கு குடும்பங்கள் தள்ளப்படுகின்றன. இதற்குரிய மாற்று வழிகளை குடும்பங்களும், அரசும் முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் வேலைக்குச் செல்தல் என்பது ஒன்று முதல் இரண்டு சதவீதம் மட்டுமே. அது வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் இருபதை எட்டுகிறது. காரணம் வளர்ந்த நாடுகளில் காணப்படும் சட்டங்களின் செயலாக்கமும், விழிப்புணர்வும், சமூக அக்கறையுமே.

இந்தியாவில் தேசியக் குழந்தைத் தொழிலாளர் சட்டம் அமலில் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே அந்த விவரங்களைக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மூவாயிரத்து முப்பத்தெட்டு பள்ளிக்கூடங்கள் உள்ளன. தமிழகத்தில் 160 பள்ளிக்கூடங்களும், உத்திரப் பிரதேசத்தில் அதிக பட்சமாக 1075 பள்ளிக்கூடங்களும் உள்ளன.

உத்திரப்பிரதேசத்தில் தொழிலாளர் துறைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தான் சிறுவயதில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டதாகவும் அதை மறுத்து கல்வியே முக்கியம் என கைக்கொண்டதால் இன்று உயர் நிலையில் இருப்பதாகவும் சொல்லியிருப்பது குழந்தைத் தொழிலாளர் முறை எத்தனை உயரதிகாரிகளை முளையிலேயே கொல்கிறது என்பதைச் சொல்கிறது.

இந்தியாவில் குடும்பத்தாரால் நடத்தப்படும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை அரசு தடை செய்யவில்லை. எனவே பெரும்பாலான கிராமப்புறங்களில் சொந்த நிலத்தில் பணிசெய்யும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.

ஏராளம் சட்டங்கள் எழுத்து வடிவில் இருந்தும் இன்னும் நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை ஏன் முற்றிலும் ஒழியவில்லை. ஒரு முக்கியமான காரணமாக தொழிற்சாலை நிறுவனத்தினர் கொடுக்கும் முட்டுக்கட்டை என்கின்றனர் விமர்சகர்கள். கம்பள ஆலை போன்றவற்றில் குழந்தைகளே பெருமளவில் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். அரசு கண்டு கொள்வதில்லை !

குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு வறுமை மட்டுமே ஒரே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகள் பொருளாதாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. வறுமையுடன் சேர்த்து, பெற்றோர் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் வயோதிகமாகவோ, ஊனமுற்ற நிலையிலோ இருத்தல், தாய் விதவையாக இருத்தல், பெற்றோர் குடி போன்ற போதைகளுக்கு அடிமையாய் இருத்தல் போன்றவையும் குழந்தைத் தொழிலாளர் நிலையை வளர்க்கின்றன.

மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும். குறிப்பாக குழந்தைகளால் வரும் வருமானம் தடைபடும் குடும்பங்களுக்கு அரசு ஏதாவது நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்க காவல் துறையில் தனி குழு அமைத்தல், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்களை கடுமையாக தண்டித்தல், கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு இன்னொரு காரணமாக படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் எனும் நம்பகத் தன்மை இன்மையையும் குறிப்பிடலாம். பொறியாளர் தேர்வு முடித்தவர்களில் அறுபது விழுக்காட்டினரும், எம்.பி.எ படித்தவர்களில் எழுபத்தைந்து விழுக்காட்டினரும் இன்று வேலையின்றி அலைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை எந்த வகையிலும் கல்வி கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தை ஏற்படுத்தப் போவதில்லை. நம்பகத் தன்மையை அரசு உருவாக்க வேண்டும்.

கடனுக்காகவும், முன்பணத்துக்காகவும் கொத்தடிமைகள் போல உழைக்கும் சிறுவர்கள் பலர் பட்டாசு ஆலைகளில் உள்ளனர். இவர்களுடைய உளவியல் ரீதியான பாதிப்பு சொல்லக் கூடியதல்ல. கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்படும் சிறார்கள் அடைக்கப்படும் மறுவாழ்வு மையங்களின் நிலமையோ, சீர்திருத்தப் பள்ளிகளின் நிலமையோ கொத்தடிமை நிலையை விடப் பரிதாபம். மாதம் எட்டு ரூபாய் கூட இல்லை என்று அதிர்ச்சிச் செய்தி அளிக்கின்றன ஊடகத் தகவல்கள்.

2002ம் ஆண்டு மத்திய அரசு 2007க்குள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியைச் சாத்தியமாக்குவோம் என்று சூளுரைத்து சர்வ சிக்ஸா அபிமன் என்றொரு திட்டத்தைத் துவங்கியது. இப்போது ஆண்டு 2009 ! நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நாமறிவோம்.

குழந்தைத் தொழிலாளர் நிலை என்பது ஏதோ சில இடங்களில் நிலவி வரும் பிரச்சனையல்ல. இது ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான களங்கமும், உலக அரங்கில் நமது தேசத்தின் மீது சுமத்தப்படும் அவமானமும் என்பதை அனைவரும் உணரவேண்டும். பிரச்சனைகளை களையெடுக்க அரசும், அதிகாரிகளும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு உறுதுணையாய் நாம் இருக்கவேண்டியது நம் தார்மீகக் கடமை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்

தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !

Pablo-Picasso-Mother-And-Child-25656காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என “மார்னிங் சிக்னெஸ்” குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டானிக்காக வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.

தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.

சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர்  இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.

பாலூட்டுதல் நல்லது : அன்னைக்கா ? குழந்தைக்கா ?

 42-20795158

அழகுக்காகவும், இளமைக்காகவும் குழந்தைகளுக்குப் பாலூட்ட மறுக்கும் இன்றைய இளம் அன்னையர்களுக்கு எச்சரிக்கை ஊட்டுகிறது பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆய்வு முடிவு ஒன்று.

பாலூட்டுவதால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவாகிறது எனும் தகவல்களுடன், பாலூட்டுவதால் தாய்க்கு பிற்காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

ஒரு வருட காலம் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டி வரும் தாய்மார்களுக்கு இந்த பயன்கள் அதிக அளவில் இருக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

சுமார் ஒன்றரை இலட்சம் தாய்மார்களை வைத்து மிகவும் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்கள் இளம் அன்னையரை பாலூட்ட உற்சாகப் படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

யூகே வில் சுமார் 35 விழுக்காடு அன்னையர் குழந்தைகளுக்கு ஒரு முறைகூட பாலூட்டியதில்லை என்கிறது திகைக்க வைக்கும் புள்ளி விவரம் ஒன்று.

பாலூட்டும் அன்னையருக்கு உயர் குருதி அழுத்தம் வரும் வாய்ப்பும், அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பும் பெருமளவு குறைகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

 

அன்னையர் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான தேவைகளையும், அவசியத்தையும் உலக அளவில் வலியுறுத்துவது அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்வதற்கும், அன்னையர் வாழ்வின் அடுத்த கட்டம் நலமானதாய் அமைவதற்கும் வழிவகை செய்கிறது. அதை இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்பித்து வைக்கின்றன என்பதில் மிகையில்லை.

வயது 17 ! குழந்தைகள் 7 !!

 pamela

பதின் வயதுகளில் தாய்மை நிலையை அடைவது பல்வேறு நாடுகளை வருத்தும் ஒரு சிக்கலாய் எழுந்திருக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளிலும் இந்த பதின் வயதுத் தாய்மை எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

உலகிலேயே பிரிட்டன் தான் அதிக பதின் வயதுத் தாய்மார்களால் நிறைந்த நாடு என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

ரஷ்யாவின் மாஸ்கோவில் ஆண்டு தோறும் 10000 பதின் வயதுப் பெண்கள் தாய்மை நிலையை அடைகிறார்களாம். இவர்களில் பெரும்பாலான பெண்கள் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். மிச்சமிருப்போர், பதின் வயதுகளிலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கவனிக்கும் பொறுப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாய்மை நிலைக்காக பள்ளிக்கூட படிப்பை விட்டு விட்டு, வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்தகைய நாடுகளின் அநேகம்.

அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பமீலா என்பவருடைய கதை அதிர்ச்சியூட்டுகிறது. பதினேழே வயதான இந்தப் பெண் இப்போது ஏழு குழந்தைகளுக்குத் தாய் !

வறுமையின் உச்சகட்டத்தில் இருக்கும் குடும்பம் அவர்களுடையது. அரசு தரும் மானியத்தை வைத்து மட்டுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழல்.

pamela21

குழந்தைக்குத் தந்தையும் பமீலாவை விட்டுவிட்டு ஓடி விட தனியாளாய் அத்தனை குழந்தைகளையும் பராமரித்து வருகிறார் இவர்.

பதினான்காவது வயதில் ஒரு பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்ற உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பிய பமீலாவை, இந்த வயதில் அப்படிச் செய்வது சட்ட விரோதம் எனக் கூறி அனுப்பி விட்டனர் மருத்துவர். விளைவு இப்போது அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ! இதில் இரண்டு முறை மூன்று மூன்று குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

பள்ளிக்கூட படிப்பையெல்லாம் மூட்டை கட்டி விட்டு, கிடைத்த வேலை செய்து பிழைப்பை ஓட்டும் பமீலாவை பதின் வயதுத் தாய் படும் அவஸ்தைகளுக்கான ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

கல்வியறிவற்ற நாடுகள், படிப்பறிவுள்ள நாடுகள், வறுமை நாடுகள், வளமான நாடுகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த தவறான குடும்ப உறவுகள் குறித்த கவலை சமூக நலம் விரும்பிகளுக்கு எப்போதுமே இருக்கத் தான் செய்கிறது !

அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ?

123ரோட்டோரங்கள் முதல் மிகப்பெரிய ஷோரூம்கள் வரை எங்கே சென்றாலும் பார்க்கலாம் விதவிதமாய் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் சிடிக்கள், டி.வி.டிக்கள்.

ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே இருப்பான், நமக்கு வீட்டு வேலை செய்யவோ, அலுவலக வேலை செய்யவோ தொந்தரவு இருக்காது என நினைக்கும் பெற்றோரும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதனாலேயே புதிது புதிதாய் டிவிடிக்கள் வாங்கிக் குவிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.

போட்டி போட்டு வாங்கிக் குவிக்க கலியுகப் பெற்றோர் தயாராக இருப்பதால், வித விதமான வடிவங்களில், விதவிதமான வகைகளில் குழந்தைகளுக்கான டிவிடிக்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. எண்கள் கற்க வேண்டுமா, எழுத்துக்கள் கற்க வேண்டுமா, பாடல்கள் கற்க வேண்டுமா ? எதற்கெடுத்தாலும் ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் போதும் எனும் நிலையே இன்றைக்கு ஏராளம் வீடுகளில்.

போதாக்குறைக்கு அம்புலிமாமா, அக்பர், பரமார்த்த குரு, பஞ்சதந்திரக் கதைகள் என முன்பு பாட்டி மடியில் அமர்த்தி சொல்லித் தந்த சுவாரஸ்யமான கதைகளையெல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் அசையும் கார்ட்டூன் பாத்திரங்களே கற்றுத் தருகின்றன.

இப்படி ஏராளம் அறிவு வளர்ச்சிக்கான நிகழ்சிகளைப் பார்த்து வரும் குழந்தைகள் அறிவில் சூரப் புலிகளாகவும், திறமையில் படு சுட்டியாகவும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அந்த நினைப்பை மூட்டை கட்டி வெளியே போட்டு விடுங்கள் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள் பல.

இப்போதெல்லாம் இரண்டு வயது கூட நிரம்புவதற்கு முன்பாகவே குழந்தைகளெல்லாம் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து மணிக்கணக்கில் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் துவங்கிவிடுகின்றனர். தொலைக்காட்சி பயன்படுத்தும் வீடுகளில் 90 விழுக்காடு குழந்தைகள் இரண்டு வயதுக்கு முன்பே தொலைக்காட்சிப் பிரியர்களாகி விடுகின்றனர் என்கிறார் ஆராய்ச்சியாளர் டிமிட்ரி கிரிஸ்டாகிஸ்.

சுமார் எண்பது விதமான ஆராய்சிகள் இது தொடர்பாக வந்திருக்கின்றன என்பதே இதை சர்வதேச சமூகம் உன்னிப்பாய் கவனிக்கிறது என்பதற்கான முதன்மைச் சாட்சி எனக் கொள்ளலாம்.

வெகுநேரம் தொலைக்காட்சி பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மொழி அறிவு அதிகரிக்கும் என்பது தான் பரவலான நம்பிக்கை. ஆனால் உண்மையில் நிலமை நேர் மாறாக இருக்கிறது. தினமும் இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைக்கு மொழி அறிவு குறைவாக இருக்கும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

எவ்வளவு அதிகமாய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறதோ அந்த அளவுக்கு குறைவான மொழி அறிவே குழந்தைகளுக்கு இருக்குமாம். அதிலும் ஏழு மாதத்துக்கும் பதினாறு மாதங்களுக்கும் இடையே தொலைக்காட்சி பார்க்கும் குழந்தை வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதில் வெகு தாமதம் ஏற்படுமாம். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், ஒவ்வோர் மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தலும் குழந்தை ஆறு வார்த்தைகள் குறைவாகக் கற்க காரணமாகிறதாம்.

இன்னோர் ஆராய்ச்சி குழந்தைகளின் நினைவுத் திறனை இத்தகைய தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் மழுங்கடிக்கிறது என பயமுறுத்துகிறது. அதிக தொலைக்காட்சிக் கல்வி பெறும் குழந்தைகளின் ஞாபகத் தளங்கள் பலவீனப் பட்டுவிடுகின்றன என்கிறது அந்த ஆராய்ச்சி.

அத்துடன் அவர்களுக்கு சமூகத்தோடும், மற்ற நண்பர்களோடும் உள்ள உறவின் இறுக்கமும் மெல்ல மெல்லப் பலவீனமடைகிறது. பெரும்பான்மை நேரம் தனிமையில் தொலைக்காட்சியுடன் செலவிடும் போது உரையாடல், வாசிப்பு, விளையாட்டு என பல விதமான செயல்பாடுகள் முடங்கிவிடுகின்றன.

தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடுவதில் பல்வேறு உடல் சார்ந்த சிக்கல்கள் எழும் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. இப்போது அது அறிவு சார்ந்த முன்னேற்றத்தையும் தடைசெய்யும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

எங்கே சென்றாலும் குழந்தைக்கு ஏதேனும் டிவிடிக்களை வாங்கி வரும் பெற்றோர் அதை சற்றே குறைத்து மற்ற செயல்பாடுகளிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்துவது அவசியம் என்பதே இந்த ஆய்வுகளின் ஒருவரிச் செய்தியாகும்.

தூங்கு தம்பி தூங்கு.

sleep.jpg

சரியான அளவு தூக்கம் கிடைக்காத குழந்தைகள் அதிக எடை சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது என நியூசிலாந்திலுள்ள ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைகளின் தினசரி, வார, மாத, வருட தூக்கத்தின் அளவுகளையும் அவர்களுடைய மருத்துவ அறிக்கை பரிசோதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

591 குழந்தைகளை அவர்களுடைய ஒரு வயது, மூன்றரை வயது, ஏழுவயது என மூன்று நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தி இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சராசரியாக 9 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அதிக எடையுடன் மாறும் வாய்ப்புகள் 4 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.

மூன்றரை வயது வரை குழந்தைகள் 11 முதல் 13 மணி நேரம் இரவில் தூங்க வேண்டுமென்றும், அந்த வயதைத் தாண்டிய பள்ளிக் குழந்தைகள் 10 முதல் 11 மணிநேரம் இரவில் தூங்க வேண்டுமென்றும் அமெரிக்க தூக்கம் தொடர்பான அகாடமி (American Academy of Sleep Medicine )தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், படுக்கையில் அமர்ந்தபடி வீடியோ விளையாட்டுகள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி பார்த்தல் இவற்றை ஊக்கப்படுத்தாமல் இருப்பதும் அவசியம் என அறிவுறுத்துகின்றனர் அவர்கள்.

ஒரு சுய புலம்பல்

family.jpg

இன்று காலையில் கொடூரமான செய்தியைப் படிக்க நேர்ந்தது. நடத்தையில் சந்தேகம் எனும் காரணத்தைக் கூறி தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான் ஒருவன்.

இதில் திடுக்கிடும் செய்தி என்னவெனில், அவன் இரண்டு மனைவிகளுடன் குடித்தனம் நடத்துபவன் என்பது தான்.

அடிக்கடி இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர்களைப் பற்றிய செய்தியைப் படிக்கும் போது பல கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன.

சட்டம் அங்கீகரிக்காத ஒன்றை எப்படி இவர்களால் சமூகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் செயல் படுத்த முடிகிறது.

எப்படி ஒரு மனைவியால், தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. என்னதான் பொருளாதார சார்பு இருந்தாலும்!

ஒருவேளை மனைவியின் நடத்தையில் பிழை இருப்பினும், இரண்டு மனைவியருடன் இருக்கும் ஒரு கணவனுக்கு, தன்னுடைய மனைவிக்கு இரண்டு கணவன் இருப்பதை தடுக்க என்ன உரிமை இருக்கிறது.

கடைசியாக, எப்படி ஐயா மனம் வருகிறது ? கணவன் மனைவி சண்டையில் கள்ளம் கபடமில்லாத பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய ?

கணவன் திட்டியதால் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் தாய்மார்கள், மனைவியையும் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்யும் கொடூரர்கள், இரண்டாவதும் பெண்ணாய் பிறந்து விட்டதே என்பதற்காக குழந்தையை மூன்றாவது மாடியிலிருந்து வீசிக் கொன்ற தாய்…

இப்படி செய்திகளை தினம் தினம் படித்து காலைப் பொழுதை ஒரு விதமான மன அழுத்தத்துடனேயே ஆரம்பிக்க வேண்டிய சூழலில் வாழ்வதை நினைக்கும் போது ஆற்றாமையாய் இருக்கிறது.

காலையில் செய்தித் தாள் படிப்பதையே நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன்.

காஃபியும் கருச்சிதைவும்

tea.jpg

தினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

வெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

மருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

காஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

சிசேரியன் : விரும்புதலும் விளைவுகளும்

mom.jpg

இன்றைய உலகம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று சிசேரியன் பிரசவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. தாய்மை நிலையை அடைந்தபின் பிரசவ காலத்தில் இயற்கையான பிரசவம் நிகழும் வாய்ப்பு குறையும் போது இந்த சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு வந்தது தான் பழைய செய்தி.

ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பிரசவ வலியை தவிர்ப்பதற்காக அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் சாஸ்திர சம்பிரதாயம் எனும் மூடக் கட்டுக்குள் மூழ்கிக் கிடப்பவர்கள் எந்த நாள் எந்த நேரத்தில் குழந்தை எடுக்கப்படவேண்டும் என்பதை சோதிடம் மூலம் முடிவு செய்து மருத்துவரிடம் விண்ணப்பிக்கின்றனராம்.

அப்போது தான் குறிப்பிட்ட நட்சத்திரத்தில், யோகத்தில் குழந்தை பிறக்கும் என்று சிரிக்காமல் அவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இப்படி அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்னும் புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகியிருக்கிறது. நுரையீரலில் இயல்பான வளர்ச்சியைக் கூட இது பாதிக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

அதிலும் குறிப்பாக குறைந்தபட்சம் 39 வாரங்களாவது தாய்மை நிலையில் இருக்காத பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தைக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

நுரையீரலில் இருக்கும் திரவம் முழுவதுமாக வெளியேற முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதும் இந்த அறுவை சிகிச்சை முறையில் நிகழக்கூடிய சிக்கல்களில் ஒன்று என்கின்றனர் மருத்துவர்.

மூச்சு தொடர்பான பல சிக்கல்கலுக்கு இந்த அறுவை சிகிச்சை காரணமாகி விடக் கூடும் என்னும் அறிவு அனைவருக்கும் இருப்பது அவசியம் என்றும், தேவையற்ற சூழலில் அறுவை சிகிச்சையை முழுவதுமாக தவிர்க்க வேண்டுமென்றும் யூ.கே மருத்துவர் மேகி பிளோட் அறிவுறுத்துகிறார்.

நாள் நட்சத்திரம் சூரியன் சந்திரன் கோள்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தேவையற்ற அறுவை சிகிச்சை செய்வதை விட்டு விட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வரவேற்பதே தாய்க்கும் சேய்க்கும் நலன் பயப்பதாகும்.

தவிர்க்க முடியா சூழலுக்கென வந்த அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

தாயின் பருமனும், குழந்தையின் புற்றுநோயும் !

kid.jpg

தாய்மார்களின் இடுப்பு அளவிற்கும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பருமனான தாய்மார்களின் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு, ஒல்லியான தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகம் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வரும் தகவலாகும்.

அதிலும் குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர்கள் தடிமனான உடல் வாகைப் பெற்றிருந்தால் இந்த ஆபத்து மிகவும் அதிகமாம். அதிகப்படியாகச் சுரக்கும் பாலியல் ஹார்மோன் ஆஸ்டிரோஜென் தான் இந்த இடுப்பு அளவு அதிகரிப்பதன் காரணம் என்றும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

மார்பகப் புற்று நோய்க்கான விதை குழந்தை கருவாக இருக்கும் முதல் கட்டத்திலேயே வந்துவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தாயின் இரத்தத்தில் உலாவரும் இந்த ஆஸ்டிரோஜென் ஹார்மோன்களே இதன் காரணகர்த்தாக்கள்.

இந்த ஹார்மோன்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்குமான தொடர்பு ஏற்கனவே ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யூ.கே வின் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக இயக்குனர் மருத்துவர் லெஸ்லி வால்கர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மார்பகப் புற்று நோய்க்கு பலவிதமான காரணங்களும், சிகிச்சைகளும் மருத்துவ உலகில் உலவி வருகின்ற நிலையில் இந்த ஆராய்ச்சி இன்னோர் கோணத்தில் மருத்துவ உலகை நகர்த்தியிருக்கிறது.

மார்பகப் புற்று நோய் பாரம்பரியமாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதை கடந்த ஆண்டில் யூ.கே வில் நடந்த இன்னோரு ஆராய்ச்சி நிரூபித்திருந்தது. சாத்தியக் கூறுகள் அதிகம் என்று சொல்லலாமே தவிர நிச்சயம் வரும் என்று சொல்ல முடியாது என்பதையும் ஆய்வுகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.

இத்தகைய நிலையில் தற்போது தாயின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் புற்று நோய் வாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சரியான ஊட்டச்சத்து உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடலை ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் எனினும், ஹார்மோன் சுரப்பு போன்றவற்றை முழுமையாக வரைமுறைப்படுத்தும் சாத்தியமில்லை என்பதால் இந்த சிக்கலுக்கு என்ன வழி என்பதை மருத்துவ உலகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.