பைபிள் மாந்தர்கள் 59 (தினத்தந்தி) எஸ்தர்

  1. எஸ்தர்

மன்னர் அகஸ்வேர் சூசான் தலைநகரில் இருந்தார். தன் குறுநில மன்னர்கள், உயர் அதிகாரிகள்,பாரசீகத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து நூற்று எண்பது நாட்கள் விருந்து வைத்தார். பின்னர் ஒருவாரம் பொதுமக்களுக்கும் விருந்து வைத்தார்.

“அரசி வஸ்தியை அலங்காரம் செய்து அழைத்து வாருங்கள். மக்கள் அவள் எழிலைக் காணட்டும்” மன்னன் ஆணையிட்டான்.

வஸ்தி மறுத்தாள். அரசன் திகைத்தான்.

‘அரசே.. உமது கட்டளையை உமது மனைவி நிறைவேற்றாவிட்டால் நாட்டில் வாழும் எந்தப் பெண்ணுமே தங்கள் கணவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். வஸ்தியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணமுடியுங்கள். நாட்டில் பெண்கள் எல்லாம் கணவனின் சொல்படி வாழவேண்டும் என கட்டளையிடுங்கள்” தலைவர்கள் சொல்ல, மன்னன் அப்படியே செய்தான்.

நாட்டில் உள்ள அனைத்து கன்னிப் பெண்களும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருத்தி எஸ்தர். எஸ்தர் ஒரு யூதப் பெண். அரண்மனையில் வேலை செய்யும் அவருடைய பெரியப்பா மகன் மொர்தக்காய் என்பவரிடம் வளர்ந்து வந்தாள்.

கன்னிப் பெண்கள் எல்லாரும் ஆறுமாதகாலம் வெள்ளைப் போளத்தாலும், ஆறு மாதகாலம் நறுமணப் பொருட்களாலும் என ஒரு வருடம் அழகுபடுத்தப் பட்டனர்.

அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக மன்னரின் அந்தப்புரத்திற்குச் செல்வார்கள். மன்னருக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவர் அரசியாவார் என்பதே வழிமுறை. எஸ்தரின் முறை வந்தது. எஸ்தரை மன்னனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. எனவே அவரை மனைவியாக்கிக் கொண்டார்.

ஒருமுறை மன்னரைக் கொல்ல இரண்டு பேர் முயன்றனர். அதைக் கண்டுபிடித்த மொர்தக்காய் அந்த செய்தியை எஸ்தரிடம் சொன்னார். எஸ்தர் மன்னரிடம் சொன்னார். கொலைசெய்ய முயன்றவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். “மன்னரின் உயிரைப் பாதுகாத்தார் மொர்தக்காய்” என அரண்மனைக் குறிப்பேட்டில் எழுதப்பட்டது.

அகஸ்வேர் மன்னன் தனது பணியாளர் ஆகாகியனான ஆமானை அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் வைத்தார். அவனுக்கு எல்லாரும் வணக்கம் செலுத்துவார்கள், மொர்தக்காயைத் தவிர !

மொர்தக்காய் யூதன் என்பது ஆமானுக்குத் தெரிய வந்தது. இப்போது அவனது எதிரி மொர்தக்காய் என்பது மட்டுமல்லாமல், யூதர்கள் என்றானது.

எனவே நாட்டிலுள்ள யூதர்களையெல்லாம் கொல்ல ஒரு நாள் குறித்து அதை அனைத்து மாநிலங்களின் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தான். செய்தி மொர்தக்காய்க்குத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கடவுளிடம் வேண்டினார்.

எஸ்தர் அரசியிடம் மொர்தக்காய் விஷயத்தைச் சொன்னார். எஸ்தர் கலங்கினார். ஆனாலும் மன்னர் அழைக்காமல் மன்னரின் முன்னால் செல்ல முடியாது என்பதால், யூத மக்கள் அனைவரையும் மூன்று நாள் நோன்பு இருந்து கடவுளிடம் மன்றாடச் சொன்னாள்.

மூன்று நாளுக்குப் பின் எஸ்தர் தைரியமாய் மன்னரின் முன்னால் சென்று நின்றாள்.

‘என்ன வேண்டும்’ மன்னர் கேட்டார்.

” நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்துக்கு மன்னரும் ஆமானும் வரவேண்டும் அப்போது  விண்ணப்பத்தைச் சொல்வேன்” எஸ்தர் சொல்ல, மன்னர் ஒத்துக்கொண்டார்.

முதல் நாள் விருந்து முடிந்தது. அடுத்த நாளும் விருந்துக்கு வாருங்கள். என்ன வேண்டும் என்பதை நான் அப்போது சொல்வேன் என்றாள் எஸ்தர். விருந்து முடிந்து வெளியே போன ஆமானை மொர்த்தக்காய் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.

கோபத்தில் வீடு சென்ற அவனிடம், மனைவி ஒரு குரூர யோசனையைச்  சொன்னாள். அதன் படி மொர்தக்காயைத் தூக்கிலிட ஐம்பது அடி உயரத்தில் ஒரு தூக்கு மரத்தை ஆமான் தயாராக்கினான்.

அன்று இரவு மன்னர் தூக்கம் வராமல் குறிப்பேடு நூலை வாசிக்கத் துவங்கினார். அப்போது மொர்தக்காயின் பெயர் அவருடைய கண்களில் தட்டுப்பட்டது. தன் உயிரைக் காப்பாற்றிய மொர்தக்காய்க்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். மன்னர் ஆமானை அழைத்தார்.

‘நான் ஒருவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். என்ன செய்யலாம்’

தன்னைத் தான் மரியாதை செலுத்தப் போகிறார் என நினைத்த ஆமான், ” கிரீடம் சூட்டி, மன்னரின் ஆடை உடுத்து, நகர்வலம் கொண்டு வரவேண்டும்” என்றார்.

‘அருமையான யோசனை. அதை மொர்த்தக்காய்க்குச் செய்”‘ என்றார் மன்னர். ஆமான் அதிர்ந்தான். வேறுவழியில்லாமல் அப்படியே செய்தான். மொர்த்தக்காயைப் பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்தனர்.

இரண்டாம் நாள் விருந்தில் களித்திருந்த மன்னர் எஸ்தரிடம், ‘இப்போது கேள் என்ன வேண்டும்’ என்று கேட்டார். எஸ்தர் தழுதழுக்கும் குரலில், ‘என்னையும் என் இனத்தையும் கொல்ல நினைக்கிறான் ஒருவன். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்’ என்றாள்.

யாரது ? மன்னன் கோபத்தில் கத்தினார். “இதோ இந்த ஆமான் தான்” என்றாள் அரசி. ஆமான் திடுக்கிட்டான்.

மன்னனின் கோபம் ஆமான் மேல் திரும்பியது. ஆமானைக் கொல்ல‌ ஆணையிட்டார். மொர்தக்காய்க்காக  தயாராக்கி வைத்த தூக்கிலேயே அவன் தொங்கவிடப்பட்டான்.

எஸ்தரின் மூலம் யூத இனம் அழிவிலிருந்து தப்பியது.

பைபிள் மாந்தர்கள் 52 (தினத்தந்தி) நாமான்

சிரியா நாட்டின் படைத்தளபதி நாமான். வலிமை மிக்க வெற்றி வீரன்.  அரசர் அவரிடம் மிகவும் மரியாதை செலுத்தியிருந்தான். ஆனால் பாவம் ! அவன் ஒரு தொழுநோயாளி.

தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்த காலத்தில்,  அரசவையிலேயே நாமான் இருந்தான் என்றால் அவன் எந்த அளவுக்கு மன்னனின் மரியாதையைப் பெற்றிருந்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை நாமான் இஸ்ரயேல் நாட்டில் தாக்குதல் நடத்தியபோது அங்கிருந்து ஒரு சிறுமியைக் கூட்டி வந்திருந்தார். அந்தச் சிறுமியைத் தனது மனைவிக்கு வேலைக்காரியாக்கி இருந்தார். ஒரு நாள் அந்தச் சிறுமி தலைவியிடம் சொன்னாள்.

“இஸ்ரயேல் நாட்டில் ஒரு இறைவாக்கினர் இருக்கிறார். அவரிடம் போனால் தலைவருக்கு சுகம் கிடைக்கும்”.

சிறுமியின் குரலில் இருந்த உறுதி தலைவிக்கு உற்சாகத்தைக் கொடுக்க, அவள் நாமானிடம் அதைச் சொன்னாள். நாமான் உடனே ம‌ன்ன‌னிட‌ம் சென்று விஷ‌ய‌த்தைச் சொன்னான். ம‌ன்ன‌னும் ம‌கிழ்ச்சிய‌டைந்தான்.

“போயிட்டு வாங்க‌. நான் இஸ்ர‌யேல் ம‌ன்ன‌னுக்கு ம‌ட‌ல் த‌ருகிறேன்” என்றான். கூட‌வே ப‌ல‌ கோடி ரூபாய் ம‌திப்புள்ள‌ பொன், வெள்ளி, பட்டாடைக‌ள் போன்ற‌வ‌ற்றையும், ப‌ணியாள‌ர்க‌ளையும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

நாமான் இஸ்ர‌யேல் ம‌ன்ன‌னிட‌ம் சென்று ம‌ட‌லைக் கொடுத்தான். இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ன் ம‌ட‌லைப் பிரித்தான்.

“என் ப‌ணியாள‌ன் நாமானை உம்மிட‌ம் அனுப்புகிறேன், அவ‌னுடைய‌ தொழுநோயைச் சுக‌மாக்குங்க‌ள்” என்று எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. ம‌ன்ன‌ன் அதிர்ந்தான். தொழுநோயைக் குண‌ப்ப‌டுத்துவ‌தென்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்ப‌து ம‌ன்ன‌னுக்குத் தெரிந்த‌து. வேண்டுமென்றே சிரியா ம‌ன்ன‌ன் த‌ன்னை வ‌ம்புக்கு இழுப்ப‌தாய் நினைத்தான்.

த‌ன‌து ஆடைக‌ளைக் கிழித்தான்.

“நானென்ன‌ க‌ட‌வுளா ? உயிரைக் கொடுக்க‌வும், எடுக்க‌வும் என்னால‌ முடியுமா ? சிரியா ம‌ன்ன‌ன் என்னோடு போரிட‌ கார‌ண‌ம் தேடுகிறானா ?” என்று கோப‌த்தில் க‌த்தினான்.

இறைவாக்கின‌ர் எலிசா இதைக் கேள்விப்ப‌ட்டார். ம‌ன்ன‌னுக்கு ஆள் அனுப்பினார்.

“ஏன் ஆடைக‌ளைக் கிழிக்கிறீர் ? அவ‌னை என்னிட‌ம் அனுப்புங்க‌ள்” என்றார்.

ம‌ன்ன‌ன் நாமானை எலிசாவிட‌ம் அனுப்பினார். குதிரைக‌ள், தேர், செல்வ‌ங்க‌ள் என‌ சிரியாவின் ப‌டைத் த‌லைவ‌ர் க‌ம்பீர‌மாக‌ இறைவாக்கின‌ர் எலிசாவின் வீட்டு வாச‌லின் முன்னால் நின்றார்.

எலிசா வெளியே வ‌ர‌வில்லை. அவ‌ரை வ‌ர‌வேற்க‌வில்லை. வாழ்த்து சொல்ல‌வில்லை. உள்ளே இருந்துகொண்டு ஒரு ஆளை அனுப்பி

“நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால் உன் உட‌ல் ந‌ல‌ம் பெறும்” என்று சொல்ல‌ச் சொன்னார்.

நாமான் க‌டும் கோப‌ம‌டைந்தார். “அவ‌ர் வெளியே வ‌ந்து, க‌ட‌வுளைக் கூவிய‌ழைத்து, தொழுநோய் க‌ண்ட‌ இட‌த்துக்கு மேலே கைக‌ளை அசைத்து என‌க்கு சுக‌ம் கொடுப்பார் என‌ நினைத்தேன். நான் ச‌க‌தியாய்க் கிட‌க்கும் யோர்தானில் மூழ்க‌ வேண்டுமாம். எங்க‌ நாட்டில் ஓடும் அபானா, ப‌ர்பார் ந‌திக‌ளெல்லாம் யோர்தானை விட‌ ஆயிர‌ம் ம‌ட‌ங்கு ந‌ல்ல‌து” என்று கோப‌த்துட‌ன் க‌த்திவிட்டு திரும்பிச் செல்ல‌த் தொட‌ங்கினார்.

அப்போது அவ‌ருடைய‌ வேலைக்கார‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் சென்று “எம் த‌ந்தையே” என‌ பாச‌மாய் அழைத்துப் பேசினார்க‌ள்.

“ஒருவேளை இறைவாக்கின‌ர் க‌டுமையான‌ ஒரு வேலையைச் செய்ய‌ச் சொல்லியிருந்தால் நீர் செய்திருப்பீர் அல்ல‌வா. அதே போல‌ இந்த‌ எளிய‌ செய‌லையும் செய்யுங்க‌ள்” என்றார்க‌ள்.

நாமான் அவ‌ர்க‌ள் பேச்சுக்கு ம‌ரியாதை கொடுத்தான். யோர்தான் ந‌திக்குச் சென்றான். ந‌தியில் மூழ்க‌ ஆர‌ம்பித்தான். ஒன்று..இர‌ண்டு.. மூன்று….. ஏழாவ‌து முறை மூழ்கி எழுந்த‌போது அவ‌ன் க‌ண்ணை அவ‌னால் ந‌ம்ப‌வே முடிய‌வில்லை. அவ‌னுடைய‌ நோய் முழுமையாய் நீங்கி விட‌, சின்ன‌ப் பிள்ளையின் தோலைப் போல‌ அவ‌ன் உட‌ல் மாறிய‌து.

உட‌னே எலிசாவிட‌ம் ஓடி வ‌ந்தான். அவ‌னுடைய‌ க‌ர்வ‌ம் எல்லாம் போயிருந்த‌து.

“இஸ்ர‌யேலைத் த‌விர‌ எங்கும் க‌ட‌வுள் இல்லை என்ப‌தை உறுதியாய் அறிந்து கொண்டேன். தயவு செய்து என் அன்பளிப்புகளை வாங்கிக் கொள்ளுங்கள்” என வேண்டிக் கொண்டான்.

எலிசாவோ எதையும் வாங்காம‌ல் அவ‌ரை அனுப்பி வைத்தார். போகும் போது ,இஸ்ரேல் நாட்டின் மண்ணை அள்ளிக் கொண்டு போன நாமான் சொன்னார்,”இனிமேல் இஸ்ரயேலின் கடவுளே என் கடவுள். வேறு கடவுளை வழிபடமாட்டேன் !”

நாமானின் க‌தை சில‌ ப‌டிப்பினைக‌ளை ந‌ம‌க்குத் த‌ருகிற‌து. எதிர்பார்ப்புக‌ளின்றி அந்த‌ அடிமைச் சிறுமியைப் போல பிறருக்கு உத‌வும் ம‌ன‌ம் ந‌ம‌க்கு இருக்க  வேண்டும்.

க‌ர்வ‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்துவிட்டு ஆற்றில் இற‌ங்கிய‌போது தான் நாமான்  ந‌ல‌ம‌டைந்தான். இறைவ‌னின் அருளைப் பெற‌ க‌ர்வ‌த்தைக் க‌ழ‌ற்றுத‌ல் அத்தியாவசியம்.

ந‌ல‌ம‌டைந்த‌பின் நாமான் எந்த‌த் த‌ய‌க்க‌மும் இன்றி க‌ட‌வுளை ம‌கிமைப்ப‌டுத்துகிறான். க‌ட‌வுளின் பெய‌ரை அறிக்கையிட‌ த‌ய‌ங்காத‌ ம‌ன‌நிலை வேண்டும்.

இந்த‌ பாட‌ங்க‌ளை நாமானின் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்.