இது தாண்டா டூ வீலர் !

 

twoகொஞ்ச தூரத்துல இருக்கிற கடைத் தெருவுக்குப் போகவேண்டும். ஆனால் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை. சின்னதா ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் சிந்தனை ஓடும்.

நகர் முழுதும் வாகன நிறுத்தம் ஒரு மிகப்பெரிய சவால். வண்டி சின்னதா இருந்தா நிறுத்தியிருக்கலாம் என புலம்பல் தெறிக்கும்.

எரிபொருள் பர்சை எரித்து விடுகிறது, கொஞ்சம் செலவு குறைவான வண்டி இருந்தால் நன்றாக இருக்குமே என பெருமூச்சு வழியும்.

இந்த அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்குரிய ஒரு புது வகையான இருசக்கரக் கார் ஒன்று வரப்போகிறது.

பக்கத்து தெருக்களில் சுற்றவும், அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வரவும் , அதிக தூரமற்ற இடங்களுக்கு பயணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படும் இந்த வாகனம் மின் சக்தியில் இயங்கப்போகிறது என்பதும், சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதும் சிறப்பு அம்சங்களாகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். உயர் ரக சமநிலைத் தொழில் நுட்பம் _mg_6017இருசக்கரத்தில் இந்த வாகனம் நிலைகொள்ளவும் வேகமாய் இயங்கவும் துணை செய்கிறது.

உயர் கணினி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ள இந்த வாகனம், விபத்துகள் ஏற்படும் சூழலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்குமாம்.

அளவில் சிறிய வியக்க வைக்கக்கூடிய வடிவத்தில் குறைந்த செலவில் ஓடும் இந்த வாகனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் ஒரு கார்வாங்கும் விலையில் இந்த வாகனம் மூன்று நான்கு வாங்கலாம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

oneசெக்வே மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் !

ஐயா vs அய்யா : இது அரசியல் பதிவல்ல !

 

tamilஇன்று தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வழி நெடுகிலும் பார்க்க முடிந்தது எங்கும் எதிலும் “அய்யா” மற்றும் “சின்ன அய்யா” வாசகங்கள்.

ஐயா என்று அழைப்பது பிழை என்று கருதி “அய்யா” என அழைக்கிறார்களா என்பது புரியாமல் குழம்பியதால்,
கூடவே பயணித்த நண்பனிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

“ஒருவேளை நேமாலஜியாய் இருக்குமோ” என எனக்கு ஒரு கேள்வியையே பதிலாய் சொல்லி மேலும் குழப்பத்திலாழ்த்தினான்.  ( ஐயா படம் எடுத்த ஹரியிடம் கேட்டிருக்க வேண்டுமோ ? )

சின்ன வயதில் “ஐ” என்னும் வார்த்தை சுத்த உயிரெழுத்து, மெய்யாலுமே மெய் கலக்காதது என்றெல்லாம் பெருமையாய் படித்திருக்கிறேன். அந்த ஐ –க்கு இப்படி ஒரு நிராகரிப்பு நிகழ்ந்து விட்டதே என எனது ஐ கலங்கி கண்ணீர் வந்து விட்டது. அய்!!!!

அப்புறம் எனக்குள் ஒரு “ஐ”(அய்?)யம் எழுந்தது.

ஒருவேளை “ஐ” என்பது “ஜ” போல தோன்றுவதால் இதுவும் வடமொழிச் சொல் என நினைத்தார்களோ தமிழ் ஆர்வலர்கள் ? 

போன் கிடைத்தால் மக்கள் தொலைக்காட்சி தமிழ் அறிஞரிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

காலையிலிருந்து ஐ(அய்?)ந்து மணி வரை யோசித்தும் ஒன்றும் பிடிபடாததால் வலையுலக தமிழ் தலைகளிடம் கேட்கலாம் எனும் யோசனையில் இங்கே பதிவிடுகிறேன்.

ஐயிரண்டு என்பது பத்து என்பது மாறி இப்போது ஐ-இரண்டு மீன்ஸ் கண் இரண்டு தானே என பதின் வயதுகள் கேட்கும் காலம் இது. ஐயய்யோ …. இருக்கிற ஒரு ஐயும் போகுமோ எனும் கவலையும் எழாமல் இல்லை 🙂

எனினும், போஸ்டர் அடிக்கும் நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கவனமாக எழுத்தை அடியுங்கள். குறில் நெடிலை கவனத்தில் கொள்ளுங்கள். !

நாராயணா… இப்படிப் பண்ணிட்டியே நாராயணா

kid

கொஞ்சம் கவலையாய் இருந்தான் நண்பன். பொதுவாகவே கலகலப்புக்குப் பஞ்சம் வைக்காதவன் அவன். அப்படி என்ன தான் பிரச்சினை என்று கொஞ்சம் நெருங்கிக் கேட்டேன்.

“இல்லடா… இன்னொரு குழந்தைக்கு பிளான் பண்றேன், ஆனா முதல் குழந்தை பிறந்தப்போ பண்ணின ஒரு தப்பினால அடுத்ததா ஒண்ணும் செட் ஆக மாட்டேங்குது” துண்டு துண்டாக ஏதோ அவார்ட் டாக்குமெண்டரி போல உளறிக் கொண்டிருந்தான்.

அப்படி என்னதாண்டா பிரச்சனை முதல் குழந்தை பிறந்தப்போ ? எதுவா இருந்தாலும் இப்போ சென்னையில இல்லாத மருத்துவமனைகளா ? பத்து வருஷம் குழந்தை இல்லேன்னாலே சக்ஸஸ் பண்ணி தர டாக்டர்ஸ் இருக்காங்க. உனக்கென்னடா ? ஒரு குழந்தை ராஜா மாதிரி இருக்கான் பதட்டப்படாம மருத்துவ ஆலோசனை பண்ணலாமே என்றேன்.

“நோ..நோ.. அப்படியெல்லாம் ஆஸ்பிட்டல் போற சிக்கல் ஒண்ணும் இல்லை…” அவன் படபடத்தான்.

“மனைவி முரண்டு பிடிக்கிறாங்களா ?….”

“சே..சே.. இரண்டு பேரும் தான் வேணும்ன்னு முடிவு பண்ணினோம்”

“அப்போ என்னடா வீட்ல பிரச்சனையா ? இல்லை வேலை நிரந்தரமா இருக்குமாங்கற பயமா ? என்னண்ணு சொல்லித் தொலையேண்டா வெளக்கெண்ணை” குரலின் சற்று போலியான கோபத்தைக் காட்டியபோது தான் என் முகத்தைப் பார்த்தான்.

“இல்ல..இல்ல… அதெல்லாம் உங்கிட்டே சொன்னா வெளங்காது… நீ உன்னோட உருப்படாத பிளாக்ல போட்டாலும் போட்டுடுவே…” அவன் கொஞ்சம் நக்கலாய் சொன்னான்.

“உனக்கு அறிவிருக்கா… என்னோட பிளாக் என்ன உன்னோட குடும்பப் பிரச்சினையை எழுதற பிளாகா ? தேவையில்லாதது எதையும் எழுதமாட்டேன் மச்சி.. நீ பயப்படாம சொல்லு…” என்றேன்.

“இல்ல.. என் பையனை உனக்குத் தெரியும் இல்லையா ?”

“ஆமா அவனை தான் அடிக்கடி பாக்கறேனே. படு சுட்டி வயசு நாலு, பயங்கர வாலு…” என்றேன்

“அவன் பேரு என்ன தெரியுமா ?”

“உனக்கு ஏதோ பிரச்சனை தாண்டா மச்சி.. ஷங்கர நாராயணன் தான் அவன் பேருன்னு தூக்கத்துல தட்டி எழுப்பி கேட்டா கூட சொல்லுவேனே”

“அந்த பேரு தாண்டா பிரச்சனை “ அவன் சொன்னதும் இப்போ எனக்கு ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறை !

“அந்த பேருக்கு என்னடா ? யாராச்சும் ஏற்கனவே காப்பி ரைட் வாங்கி வெச்சிருக்காங்களா ? “ என்றேன்.

“அப்படி இல்லடா.. நான் அவனுக்கு அவினாஷ் ன்னு பேரு வைக்கணும்னு தான் சொன்னேன். தாத்தா தான் ஷங்கர நாராயணன் பேரு வைக்கணுன்னு ஆசைப்பட்டாரு. அதான் அந்த பேரை வெச்சேன். “

“சரி.. அதுக்கென்ன இப்போ ? இன்போசிஸ் தல கூட நாராயணன் தானே மச்சி. உன் பையனும் அப்படி பெரிய ஆளா வருவான்னு நினைச்சுக்கோ…”

“டேய் வெறுப்பேத்தாதே. நாராயணன்னு பேரு இருந்தா அவனுக்கு தம்பியோ, தங்கச்சியோ பொறக்காதுடா “ அவன் கடைசியில் கொட்டி விட்டான். எனக்கோ தாங்க முடியாத சிரிப்பு….
“வாட்…. என்னடா சொல்றே ? அப்போ நாராயண மூர்த்திக்கு தம்பி தங்கச்சியே இல்லையா ? அந்த மேட்டரே எனக்குத் தெரியாதே..” என்றேன்

“பாத்தியா.. நக்கலடிக்கிறே..” அவன் கொஞ்சம் சீரியசானான்.

“மச்சி… நாராயணன்னு பேரு வெச்சா அதுக்கப்புறம் உனக்கு குழந்தை பொறக்காதுங்கறதையெல்லாம் ஆபீஸ்ல சொல்லிடாதே.. உன்னை லே ஆஃப் பண்ணினாலும் பண்ணிடுவாங்கடா” என்றேன்.
“டேய்… கொஞ்சம் சீரியஸா இரேண்டா….யோசிச்சுப் பாரு…  எனக்குத் தெரிந்து நிறைய நாராயண ன்களுக்கு தம்பி தங்கச்சிங்களே கிடையாது” அவன் முரண்டு பிடித்தான்.

“உனக்குத் தெரியாத பல நாராயணன்களுக்கு பல தம்பிகள் இருப்பாங்க. இல்லேன்னா அரசு கு.க க்கு ஏன் இவ்ளோ செலவு பண்றாங்க. எல்லோரும் குழந்தைக்கு நாராயணன்னு பேரு வையுங்க ன்னு ஒரு சட்டம் இயற்றினா போதுமே… இந்திய மக்கள் தொகையும் அதிகரிக்காது.” என்றேன் சிரிப்பு மாறாமல்
அந்த நேரம் பார்த்தா யாதவ நாராயணன் அங்கே வரவேண்டும், அதுவும் அவனது இரண்டு தம்பிகளுடன்.

“டேய் யாதவா.. இது உன் தம்பி தானாடா.. நல்லா தெரியுமா” என்றேன்.

“எனக்கு டைம் ஆச்சுடா கிளம்பறேன் என்று விருட்டென கிளம்பினவன் தான். இன்னிக்கு வரைக்கும் இருபது தடவை கால் பண்ணிட்டேன்… போணை எடுக்கவே மாட்டேங்கறான்.”

நாராயணா… இப்படி பண்ணிட்டியே நாராயணா !

வேளச்சேரி குறித்த ஓர் புலம்பல்

tree-aheadசென்னைக்கு “அவுட்டர்” என அழைக்கப்பட்ட வேளச்சேரி இப்போது சென்னையின் மையமாக உருமாறி விட்டதால் கூடவே ஆரம்பித்து விட்டது இடியாப்பச் சிக்கல்.

முன்பெல்லாம் சரக் சரக்கென சைக்கிளில் சுற்றி வந்த சாலையை இப்போது நடந்து கடக்க வேண்டுமென்றாலே கால்மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவஸ்தை.

குருநானக் கல்லூரியிலிருந்து அலெக்ஸாண்டர் சதுக்கம் நோக்கி வரவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர்கள் கடந்த பிறவியில் சாவான பாவம் செய்தவர்கள். நின்றும், ஊர்ந்தும் நகர்ந்தும் அந்த ஒரு கால் கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் கடிகாரம் ஒரு சுற்று ஓடி முடித்துவிடும், கால்வலியும் பிடிவாதமாய் வந்து அமர்ந்து கொள்ளும்.

அந்த சாலையில் இத்தனை “தெருக் கோயில்கள்” இருப்பது  முன்பெல்லாம் கவனத்துக்கு வந்ததேயில்லை. இப்போது வண்டியை வளைத்தும் நெளித்தும் ஓட்டும் போது தான் தெரிகிறது சட்டென முன்னால் நிற்கும் வித்தியாசமான பெயர்களுடன் பல கோயில்கள்.

பாவம் இந்த சாலைக் கடவுள்கள் யாரிடம் சாபம் பெற்றார்களோ ? நாளெல்லாம் புழுதியில் புழுங்க வேண்டிய அவஸ்தை. யாரும் இந்த கோயில்களில் வந்து நின்று தொழுததைப் பார்த்ததில்லை. அல்லது குறைந்த பட்சம் அந்த கோயில்களை சுத்தம் செய்கிறார்களா என்பதே கூட மர்மமே.

அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் நிகழ்வதற்கு மிக முக்கிய பங்காற்றும் இந்த கோயில்களை சற்றே காற்றோட்டமான இடத்துக்கு இடம் மாற்றி வைத்தால் கடவுளுக்கும் காற்று கிடைக்கும், கூடவே பயணிப்பவர்களுக்கும் சாலை கிடைக்கும்.

ஆனால் என்ன, அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் சட்டென மக்களுக்கு பக்திப் பெருக்கெடுத்து ஒரு பெரிய கலவரமே உருவாகும் வாய்ப்பும் உண்டு என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை போல.

ஒருகாலத்தில் இந்த ஏரியாவே கொலைகாரர்களின் சுவர்க்க புரியாகவும், பாம்புகளின் கூடாரமாக இருந்தது என்றார் ஒருநாள் நான் பயணம் செய்த கால் டாக்சி ஓட்டுநர். அது உண்மை என்பது போல வரிசையாய் புற்றுக் கோயில்கள் !

அது ஒரு புறம் இருக்கட்டும்,

அந்த நெரிசல் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கிறது. “ Tree Ahead” Go Slow என சிங்காரச் சென்னை போக்குவரத்து காவல் துறை அமைத்திருக்கும் அறிவிப்புப் பலகை அது.

அதில் விஷேசம் என்னவென்றால், மரம் இருக்கிறது என்பதை மரத்தின் மேலேயே ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

“நல்ல வேளை சொன்னாய்ங்க.. இல்லேன்னா மோதியிருப்பேன்லே…” என சிரித்துக் கொண்டே மக்கள் வண்டி ஓட்டுவது சகஜமாகி விட்டது. என்னதான் ராத்திரி வர்றவங்களுக்காக ஹி…ஹி … என சால்ஜாப்பு சொன்னாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்.

இங்கே பள்ளம் இருக்கிறது என பள்ளத்துக்கு உள்ளேயே சென்று போஸ்டர் ஒட்டுவீங்களா ஆப்பீசர் ? 

நடு ரோட்டில் ஆஜானுபாகுவாய் நிற்கும் இந்த மரத்தை கொஞ்சம் வெட்டி எடுத்தாலாவது பரவாயில்லை மக்களுக்கு கொஞ்சம் இடம் கிடைக்கும். அதுக்கெல்லாம் வழியைக் காணோம். ஒருவேளை அசோகர் காலத்துல நட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மரமோ என்னவோ ?

விஜயநகர் பஸ்டாண்டின் மையப்பகுதியில் இருக்கிறது ஒரு டாஸ்மார்க் கடை. எந்தப் பருவகாலத்திலும் பொய்க்காத வியாபாரம் அதற்குண்டு. ஸ்டெடியாக வரும் குடிமகன்களின் இருசக்கர வாகனங்களே பெரும்பாலான சாலையை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

என்னப்பா இது.. கோயிலை இடம்  மாத்தினா தான் பிரச்சினை. டாஸ்மார்க்கைக் கூடவா இடம் மாத்தக் கூடாது ? அதை கொஞ்சம் நாலு தெரு தள்ளி வெச்சா யாரும் வரமாட்டாங்களா என்ன ? ஒதுக்கமா இருந்தா தான் “ஒழுக்கமான” குடிகாரங்களும் தெகிரியமா வருவாங்கப்பு…

ஒரு பகுதியில் மக்கள் அதிகமாகக் குடியேற ஆரம்பிக்கிறார்கள் எனில் அந்தப் பகுதியை அதற்கேற்றார் போல் கொஞ்சம் வசதியாக ஆக்கினார்கள் என்றால் எல்லோருக்கும் வசதியாகும். 

இல்லையேல், TREE AHEAD போல ROAD AHEAD என ஒரு போர்டை காவல் துறை மாட்டினால் தான் சாலை இருப்பதே நாளை கண்ணுக்குத் தெரியும் !

தமிழருக்கு ஆதரவாய் மத அமைப்புகள்…

img_6862ஈழத் தமிழர்களின் மீதான கரிசனை பல்வேறு வடிவங்களில் தமிழகம் முழுவதும் வெளிப்பட்டுக்கொண்டிருப்பது கண்கூடு.

கவன ஈர்ப்பாக தனது உயிரைக்கூட மாய்க்கும் வெறித்தனமான ஆதரவாளர்கள் முதல், மனதளவில் முழுமையாய் ஆதரிக்கும் மௌன ஆதரவாளர்கள் வரை தமிழகம் முழுவதும் நிரம்பியிருக்கின்றனர்.

இந்த சூழலில் மத அமைப்புகளும் போர் எதிர்ப்பையும், தமிழர் ஆதரவையும் வெளிப்படையாகத் தெரிவிக்கத் துவங்கியிருக்கின்றன.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் கறுப்புக் கொடி பேரணிகள், வாயிலும், கண்களிலும் கறுப்புத் துணி கட்டியும், போராட்டங்களில் ஈடுபட,

புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவ அமைப்பினரும் வெளிப்படையான பிரார்த்தனைக் கூட்டங்களையும், ஆதரவு மறையுரைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

தமிழர் நலன் எனும் வலுவான அடித்தளத்தின் மேல் தமிழகம் முழுவதும் எழுந்திருக்கும் இந்த அலை, தமிழர்களைக் கரை சேர்க்க வேண்டும் என்பதே இப்போதைய ஈழத் தமிழர் குறித்த ஈரவிழிகளின் கனவுகள்.

இதை அடக்குங்க பாக்கலாம் !

என்ன அதை அடக்கினேன், இதை அடக்கினேன்னு ஜம்பம் விட்டுட்டு திரியும் ஜல்லிக்கட்டு கில்லாடிகள் யாராச்சும் இருந்தா இந்த காளையை அடக்கச் சொல்லுங்களேன்.

cow1.jpg

ஆப்பிரிக்காவில் உள்ள இந்த காளை, உலகிலுள்ள விலங்கினங்களிலேயே பெரிய கொம்பு உடையது எனும் பெருமையைப்( ? ) பெற்றுள்ளது.

cow4.jpg

பாவம் இதைத் தூக்கிட்டு நடக்க அது என்ன பாடுபடுதோ ?…ம்…அதுக்கு தலைக்கனம் ரொம்பவே அதிகம் தான்.

cow41.jpg

பின் குறிப்பு : இது ஒரு உண்மைச் சமாச்சாரம், கிராபிக்ஸ் விளையாட்டு அல்ல !

“வெங்காய” விஷயம்.

onion.jpg

இந்த வெங்காயம் நறுக்கற வேலை இருக்கே.. அப்பப்பா… கண்ணெல்லாம் எரிய, கண்ணீர் வழிய ஒரு பெரும் பாடு. அதையே நம்ம வீட்டுப் பெண்கள் சர்வ சாதாரணமாகச் செய்து விடுகிறார்கள்.

அல்லது அவர்களுடைய கஷ்டத்தை சர்வ சாதாரணம் என்று சொல்ல நாம் சொல்லி விடுகிறோம்.

ஆனால், இந்த கலியுகத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே ( அதை விட அதிகமாகவே ) சமையலறையில் வெங்காயம் நறுக்க வேண்டியிருப்பதால் இந்த செய்தி ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியே.

செய்தி என்னவென்றால், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை வெங்காயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை நறுக்கினால் கண்ணீர் வராது !

என்னடா வெங்காயம் இது என்று துழாவிப் பார்த்தால் ஏதோ பயோ டெக்னாலஜி முறையில் இதை தயாரித்திருக்கிறார்களாம்.

இந்த ஆராய்ச்சி குறித்து கோலின் ஏடி எனும் அறிவியலார் குறிப்பிடுகையில், இந்த ஆராய்ச்சி 2002ம் ஆண்டு துவங்கியதாகக் குறிப்பிடுகிறார். ஜப்பான் ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்ணீரை வரவைக்கும் மூலக்கூறை வெங்காயத்திலிருந்து இனம் கண்டு கொண்டபின் இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டதாம். (ஜப்பான் இளைஞர்களுக்கு என்ன பிரச்சனையோ ? )

இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக வெங்காயத்தின் தரத்தை அதிகரிக்கவும், அதன் குணங்களை வீரியப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்த வெங்காயம் மேலும் பல சோதனைகள் கடந்து, பயிரிடப்பட்டு சந்தைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் பிடிக்குமாம். அடடா.. சரி சரி நம்ம பசங்களாவது அழாமல் இருக்கட்டும்.

இப்படியா மறப்பார்கள் ?

jail.jpg

“மன்னிக்கணும். தெரியாம உங்கள ஜெயில்ல வெச்சுட்டோம்” என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும் ?

அதையே ஐம்பது வருடம் ஜெயிலில் இருந்த ஒரு நபரிடம் சொன்னால் ??

நம்பவே முடியாதவைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

ஜேம்ஸ் என்னும் நபர் தனது தந்தையை காயப்படுத்திவிட்டார் என்பதற்காக இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டார். நடந்தது 1958ம் வருடம். அப்போது அவருக்கு 30 வயது.

அதன் பின் அங்கிருந்து மனநிலை மருத்துவமனைக்கும், இன்னொரு ஜெயிலுக்கும் என அலைக்கழிக்கப்பட்டவரைக் குறித்து அரசாங்கமும், அதிகாரிகளும், உறவினர்களும் எல்லாருமே மறந்து போனார்கள்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர் மீது இதுவரை விசாரணையே நடக்கவில்லை என்பது தான்.

சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரைக் குறித்த விவரங்களை சேகரித்தபோது தான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது.

மன்னிப்புக் கேட்டு அவரை வெளியே விட்டு விட்டார்கள்.

இப்போது அவருக்கு வயது 80 !

ரஜினியின் குசேலர் vs கத பறயும் போள்

katha.jpg

‘கத பறயும் போள்’ படத்தை வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது முதல் ‘கத பறயும் போள்’ டி.வி.டி கிடைக்குமா என்று மக்கள் கடைகளில் குவிவதாகச் சொன்னார் சென்னையில் டி.வி.டி வாடகை கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர்.

கண்டிப்பாக இணையத்திலும் தேடல்கள் அதிகரித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஸ்ரீனிவாசன் எனக்கு மிகவும் பிடித்த மலையாள திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். குறிப்பாக ‘சிந்தாவிஷயமாய ஷியாமளா’ போன்ற படங்களில் அவருடைய திரைக்கதை வெகு அழகாக வெளிப்பட்டிருக்கும். இதைத்தான் தங்கர் பச்சான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்று எடுத்தார்.

அழகிய ராவணம் படம் கூட அவருடைய திரைக்கதை என்பது போல ஒரு ஞாபகம்.

மணிச்சித்திரத் தாழ் படத்தை படம் வெளியான காலத்திலேயே பல முறை பார்த்திருக்கிறேன். சந்திரமுகியில் வாசுசெய்த செரித்துக் கொள்ள முடியாத மாற்றங்களையும். அதை விட கொடுமை ‘தேன் மாவின் கொம்பத்து’ படத்தை முத்துவாக எடுத்த போது நேர்ந்தது.

என்னுடைய நண்பர்கள் சிலர் இது தேன்மாவின் கொம்பத்து திரைப்படம் என்று சத்தியம் செய்த போது கூட நம்பவில்லை என்பது வேறு விஷயம்.

கதை சொல்லும் போது (கத பறயும் போள் ) கதை என்ன ?

முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் – ஸ்ரீனிவாசன் ஏழ்மை நிலையிலும் தன்னுடைய தேவைக்காக யாரையும் எதிர்பார்க்காதவன். நேர்மையானவன். தாழ்வு மனப்பான்மை கொண்ட அவன் தன்னுடைய மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் இவர்களுடைய தேவைகளுக்கான பணத்தையே சம்பாதிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது போதாக்குறைக்கு ஒரு மாடர்ன் முடி திருத்தகமும் அங்கே வருகிறது.

அந்தக் கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக வரும் சூப்பர்ஸ்டார் மம்முட்டி இவருடைய நண்பர் என்று எங்கிருந்தோ கசியும் செய்தியால் ஒரே நாளில் வி.ஐ.பி ஆகிவிடுகிறார் ஸ்ரீனிவாசன். எனினும் தன் தேவைக்காக மம்முட்டியை அணுக அவர் மறுக்கிறார்.

ஒட்டு மொத்த ஊரும் மம்முட்டியுடனான ஒரு அறிமுகத்துக்காய் இவரை அணுக, இவர் மறுக்க, அதனால் அவமானமும், நிராகரிப்புக்கும் ஆளாகிறார்.
எனினும் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையால் நத்தை ஓட்டுக்குள் சுருண்டு விடுகிறார்.

கடைசியில் பள்ளி ஆண்டு விழா மேடையில் பேசும் மம்முட்டி, தன்னுடைய உயர்வுக்குக் காரணம் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்காய், எத்தனையோ தியாகங்கள் செய்த ஸ்ரீனிவாசன் தான் என்றும், நட்பை விடப் பெரியது தனக்கு எதுவுமே இல்லை என்றும் சொல்ல, அதைத் தொடர்வது நெகிழ வைக்கும் முடிவு.

இன்னசெண்ட், ஜெகதீஷ், முகேஷ், ஸ்ரீனிவாசன் என பழம் தின்று கொட்டை போட்ட நகைச்சுவை நடிகர்களால் நிறைந்திருக்கும் படம் நகைச்சுவைக்கு அதிக பட்ச உத்தரவாதம். (வடிவேலுவை தமிழில் எதிர்பார்க்கலாம் ? ) இறுதிக்காட்சிகள் நெகிழ்ச்சிக்கும்.

ஆனால் தமிழ்ல் இயக்கப் போவது வாசு அல்லவா ! எனவே கத பறயும் போள் படத்தைப் பார்த்தாலும் ‘குசேலர்’ அதே போல இருக்கப் போவதில்லை என்பது சர்வ நிச்சயம். அதிலும் திரைக்கதையை மாற்றப் போகிறேன் என்று அவர் சொல்லி விட்ட பின் 🙂

என்னதான் இருந்தாலும்…

poor.jpg

இன்று காலையில் சென்னையின் நகரும் முதுகெலும்பான மின் ரயிலில் ஏறி அலுவலகம் வந்து கொண்டிருந்தேன். ரயிலை விட்டிறங்கி கிராசிங் அருகே வந்தபோது கண்ட காட்சி சற்று வித்தியாசமானது.

குடிபோதையில் தள்ளாடித் தள்ளாடி கையில் ஏதோ பொட்டலத்துடன் ஆடிக் கொண்டிருந்த ஒருவருக்கு அவருடைய அன்பான மனைவி பளார் பளார் என்று கன்னத்தில் அறை விட்டுக் கொண்டிருந்தார்.

ஆஹா… முறத்தால் புலியை விரட்டிய பெண்களின் கதையை அடுப்படியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாட்டிகளின் காலம் மாறிவிட்டதே என சற்று மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது, எனக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவர் சத்தமாகவே பேசிக்கொண்டு போனார் “என்னதான் இருந்தாலும் பொது இடத்துல இப்படியா… ?’ (புருஷன் என்பவன் பொது இடமா?)

“என்னதான் இருந்தாலும்…” என்னும் வார்த்தையில் இருக்கும் விஷமம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணாதிக்கத்தின் மிச்சமாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வாக்கியம் தான் இந்த என்னதான் இருந்தாலும்.

“என்னதான் இருந்தாலும் ஆம்பள…” என்பது தான் அந்த வாக்கியத்தின் ஆழ் அர்த்தம். பொது இடம் என்றில்லாமல் வீட்டில் வைத்து சாத்தியிருந்தாலும் இந்த “என்ன தான் இருந்தாலும்..” வந்திருக்கும்.

என்ன தான் இருந்தாலும்…, கல்லானாலும்… என்றெல்லாம் காலம் காலமாய் நீண்ட வாக்கியங்கள் இந்த கணினி யுகத்திலும் முழுமையாக மாறவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டியது.

என் வீட்டில் உதவிக்கு வரும் சமையல்கார அம்மா தன்னுடைய புருஷனின் கதையை சோகத்தை வெளிக்காட்டாமல் அவ்வப்போது சொல்வார். தினமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கணவனின் பொறுப்புணர்ச்சியைப் பற்றியும். பத்துப் பாத்திரம் தேய்த்து கணவனின் சாராய தேவைக்கு அர்ப்பணிக்கும் அவளுடைய இயலாமையைப் பற்றியும்.

வருஷம் முழுக்க விரதம் இருக்கிற மாதிரி ஏதாச்சும் சபரிமலை இருந்தா நல்லா இருக்கும் என்று அவர் சொல்லும்போது பனிக்கும் கண்களுக்குள்ளே புதைந்து கிடக்கிறது வாழ வேண்டும் எனும் அவளுடைய நியாயமான ஆசை.

புத்தாண்டு இவர்களுக்கும் சேர்ந்தே விடியட்டும்.

.