உயர் குருதி அழுத்தமா ? சமையலறைக்கு ஓடுங்கள்

உயர் குருதி அழுத்தம் இருக்கிறதா ? கவலை வேண்டாம் தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும்.

இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று. பழங் காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது தான் நமது பாட்டி வைத்தியம். இப்போது அது மருத்துவ அங்கீகார முலாம் பூசப்பட்டு அறிவியல் அறிக்கையாக வந்திருக்கிறது.

பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனத்துக்குக் குட்டு வைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி என்று கூட சொல்லலாம்.

இன்றைக்கு வினியோகிக்கப்படும் உயர் குருதி அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட அதிக பலனளிக்கக் கூடியது இந்த பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகெங்கும் பல கோடி பேர் மிகச் சாதாரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் நோய் உயர் குருதி அழுத்தம். உயிருக்கே கூட உலை வைக்கும் இந்த நோயை பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகக் கூட எண்ணுவதில்லை என்பது தான் உறைய வைக்கும் உண்மை.

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த விரிவான ஆராய்ச்சி சுமார் ஐந்து மாத காலம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. பல்வேறு உலக ஆய்வுகளின் முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவாகத் தான் பூண்டு, பல உயர் குருதி மாத்திரைகளை விட வலிமை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதுகெலும்பான மருத்துவர் கேரின் ரெய்ட் இதைக் குறித்துக் கூறுகையில், உயர் குருதி அழுத்தத்தை மருந்துகளால் குணப்படுத்த முடியுமோ இல்லையோ, பூண்டின் மூலம் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

உயர் குருதி அழுத்தமா ? இனிமேல் மருத்துவமனைகளை நோக்கி ஓடாமல் சமையலறையை நோக்கி ஓடுங்கள். சமையலறையிலேயே அதற்குரிய மருந்து இருக்கிறது !!

இப்படியும் ஒரு நோய் !


ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ?

அந்தப் பேரதிர்ச்சியில் இருக்கின்றாள் பதின்மூன்றே வயதான சிறுமி டிவிங்கில் திவேதி. கண்கள், தலை, மூக்கு, காது , கை, கால்கள் என உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் திடீர் திடீரென குருதி வழிய, உடலில் குருதியின் அளவு குறைந்து போய் பலவீனமும், வலியுமாய் கடந்த ஒரு வருடமாக கடின வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள் இந்த சிறுமி.

வெளி நாடுகளுக்குச் சென்றெல்லாம் மருத்துவம் பார்க்குமளவுக்கு வசதியற்ற இந்தச் சிறுமி வசிப்பது உத்திரபிரதேசத்தில். ஏதேனும் செய்து தன் மகளைக் காப்பாற்ற வேண்டுமே என தாய் தவியாய் தவித்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்கிறார் இவருடைய சகோதரி.

எல்லா கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் விண்ணப்பங்கள் வைத்தாயிற்று. ஏதேனும் ஒரு கடவுள் மனமிரங்கி இந்த நோயைக் குணமாக்க மாட்டாரா எனும் ஏக்கத்தில் தவிக்கிறாள் சிறுமி. ஒரு நாள் ஐந்து தடவை முதல் இருபது தடவைகள் வரை உடலில் இருந்து குருதி வழிய துயரத்துடன் கழிகின்றன இவளுடைய பொழுதுகள்.

இப்படி ஒரு நோய் இருப்பதனால் பள்ளிக்கூடத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டு தனியே வீட்டில் அமர்ந்து படிக்கும் நிலை இவளுக்கு. நண்பர்கள் யாரும் இல்லை, வந்து நட்புடன் உரையாடுவார் யாருமில்லை என நோயின் வலியை நிராகரிப்பின் வலி மிஞ்சுகிறது.

டைப் 2 வான் வில்பிராண்ட் நோயாய் இருக்கலாம் என லண்டன் மருத்துவர் டிரியோ புரோவன் தெரிவிக்க, டைப் 2 பிளாட்லெட் டிஸார்டராய் இருக்கலாம் என அகில இந்திய மருத்துவக் கழகம் தெரிவிக்க, ஊரிலுள்ளவர்களோ இது கடவுளின் சாபம் என குடும்பத்தினரை நோக்கிக் கூச்சலிடுகின்றனர்.

துயரங்களின் கூட்டுத் தொகையாய் நகரும் இந்தச் சிறுமியின் வாழ்க்கையில் ஒரு புதுமை நடந்தேறவேண்டும், இந்த நோய்கள் விரைந்தோட வேண்டும் என உங்களைப் போலவே விரும்புகிறது எனது மனதும்.

திருவிழாவுக்கு போகிறீர்களா… ஒரு நிமிடம் !..

அதிர அதிர இசை கேட்கும் விருப்பமுடையவர்களா நீங்கள் ? காதில் ஹெட்போன் மாட்டி உச்ச பட்ச இசையைக் கேட்பவர்களா நீங்கள் ? திருவிழாக்களில் கடவுளே பயந்து ஓடுமளவுக்கு சத்தமாய் பக்திப் பாடல்களை மெய்மறந்து கேட்பவரா நீங்கள் ? உங்களுக்காகவே யூ.கே யிலிருந்து வந்திருக்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

திருவிழா அலறல்கள், அதிக சத்தத்தில் கேட்கப்படும் பாடல்கள், இவை காதைச் செவிடாக்கும் அபாயம் உண்டு என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி.

குறிப்பாக இன்றைய இளைஞர்களிடையே பரவி வரும் இரவு விடுதி ஆட்டங்களும், அதில் போதையுடன் கேட்கும் நூறு டெசிபல்களையும் கடந்த உச்சஸ்தாயி இசையும் காதுகளை முடமாக்கி விடுகிறதாம்.

சுமார் 2700 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் இசை கேட்பவர்களில் 80 விழுக்காட்டினருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதிக சத்தத்துடன் இசை கேட்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இசைப் பிரியர்களை இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் எம்மா ஹாரிசன் தெரிவிக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் காதில் ஆறாவது விரல் போல எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் ஹெட்போன்களில் 80 டெசிபலுக்கும் அதிகமான சத்தம் வருகிறது எனவும், 80 விழுக்காடு இளைஞர்கள் அதிக சத்தத்தில் பாட்டு கேட்பதையே விரும்புகிறார்கள் எனவும் ஒரு ஆராய்ச்சி ஏற்கனவே முடிவு வெளியிட்டிருந்தது.

செல்பேசிகளும், எம்.பி.3 கருவிகளும் மலிந்து விட்ட இந்த காலத்தில் காதுகளைச் செவிடாக்கும் ஆபத்தையும் கூடவே சுமந்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதிக சத்தத்தில் பாடல் கேட்பது, தொடர்ச்சியாக நிறைய நேரம் பாடல் கேட்பது, அதிக சத்தம் ஏற்படுத்தும் பொது விழாக்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்ப்பதே (குறைந்த பட்சம் சத்தத்தை விட்டு தூரமாய் நிற்பதே)
காதுகளுக்காய் நாம் செய்யும் ஆரோக்கியமான செயல் ஆகும்.

சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு

இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது.

கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

அத்தகைய மக்களை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்ய வந்திருக்கிறது சுவீடன் நாட்டு புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள் கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தினால் அவர்களுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்பதே அந்த அதிர்ச்சியளிக்கு ஆராய்ச்சி முடிவு. லண்டனில் நடைபெற்ற ஆராய்ச்சி உயர்குழு கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கிளையோமா எனும் ஒருவகை மூளைப் புற்று நோய் இந்த அதீத கைப்பேசிப் பயன்பாட்டின் விளைவாக உருவாகும் என்றும், பதினாறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் இருக்கும் எனவும் இந்த ஆராய்ச்சியை நடத்திய சுவீடன் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பேராசிரியர் லெனார்ட் ஹார்டெல்.

இருபது வயதுக்கு உட்பட்ட அனைவருமே கைப்பேசியின் பயன்பாட்டை அறவே விட்டு விடவேண்டும் எனவும், மிக மிக அவசியமான நேரங்களில் மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.

சிறுவயதினருக்கு மண்டை ஓடு உறுதியற்று இருப்பதாலும், கதிர்களைக் கடத்தும் தன்மை அதிகம் இருப்பதாலும் கைப்பேசி அலைகளால் மூளை நேரடியான தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதே இவர்களுடைய முடிவு.

லண்டனின் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை பிரிட்டன் முழுவதும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் அங்கு பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவயதினரில் 90 விழுக்காடு பேர் கைப்பேசி வைத்திருக்கிறார்கள். ஆரம்பப் பள்ளி செல்லும் பச்சிளம் குழந்தைகளில் 40 விழுக்காடு பேர் கைப்பேசி வைத்திருக்கிறார்கள்!

கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவதால் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து மிக மிக விரிவாக ஆராய்ச்சி நடத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு தொலைதொடர்பும் ஆரோக்கியமும் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 90000 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் இதன் முடிவு வெளியாகும் போது குழந்தைகளின் கையில் இருப்பது தொடர்பு சாதனமா ? இல்லை புற்று நோய் பரிசளிக்கும் சாதனமா என்பது இன்னும் தெளிவாகும்.

இந்த ஆராய்ச்சி ஒரு எச்சரிக்கை மணி. குழந்தைகளையும், பதின்வயதினரையும் தீய பழக்கங்களிலிருந்து பாதுகாப்பது போல கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என முத்தாய்ப்பு வைக்கிறார் பேராசிரியர் ஹார்டெல்.

கருவைப் பாதிக்கும் தாயின் அழகுசாதனப் பொருட்கள் !!!

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றீசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் கிரீம்களும், ஃபெர்பியூம்களும் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஊடகங்களும் தேவையற்ற பல பொருட்களை “தாயின் அத்தியாவசியத் தேவை “ எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதை இந்த ஆய்வு வருத்தத்துடன் சொல்கிறது.

அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால் அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாம்.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.

தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சீனா & சென்னை !

 மன அழுத்தமோ, வேலைப்பளுவோ, நிராகரிப்போ நிகழ்ந்து விட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்வது என்பது பலவீனமான மனதின் வெளிப்பாடு.
இது இன்றைக்கு சீனாவின் மிகப்பெரிய தேசப் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.

சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே ! இதை  இணைய தளங்கள் ஊக்குவிக்கின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி !

வாழவேண்டிய வயதில், வாழ்க்கையின் முதல் பக்கத்திலேயே இவர்களுடைய வாழ்க்கை இப்படி வீணாக விரையமாவது சீன அரசின் மிகப்பெரிய கவலையாக மாறியிருக்கிறது.

ஒவ்வொரு இரண்டு நிமிடமும் ஒரு தற்கொலையும், எட்டு தற்கொலை முயற்சிகளும் சீனாவின் மெயின்லாண்டில் பதிவாவதாக சீனாவின் மனநல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தற்கொலைகளின் காரணங்களை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருப்பது திருமண வாழ்வின் தோல்வி. சுமார் 30 விழுக்காடு தற்கொலைகள் திருமண வாழ்க்கையின் அமைதியின்மையினால் நிகழ்கின்றனவாம்.

இரண்டாவது இடத்தில் இருப்பது கடுமையான வேலையினால் உருவாகும் மன அழுத்தம். இது இருபது விழுக்காடு. மிச்சமுள்ள ஐம்பது விழுக்காடுகளை வறுமை, சரியான வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் அங்கீகாரமின்மை உட்பட பல்வேறு காரணங்கள் நிரப்புகின்றன.

சீனாவிலும் நகர்ப்புறங்களை விட வசதிகள் குறைவான ஊர்ப்பகுதிகளில் இந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அரசு தெரிவிக்கிறது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததால் கிராமங்கள் முதியோர் இல்லங்களாய் காட்சியளிக்கின்றனவாம்.

பள்ளிக்கூடத்தில் பயிலும் பல பதின் வயதினரும் தற்கொலை செய்து கொள்வது உண்மையிலேயே கலவரமூட்டுகிறது. இந்த விழுக்காடு 17 என அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. படிப்பின் பயமும், தனிமை உணர்வும் இவர்களை வாட்டுகிறதாம்.

தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின்மையின் வெளிப்பாடு. சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன.

பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில் பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம். வாழ்க்கை நாகரீகத்தின் அடித்தளத்தில் கட்டப்படாமல், உண்மை உறவுகளின் மேல் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.

தாய்மையின் சிக்கல்கள்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.

ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

உப்பு, ரொம்பத் தப்பு

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் அதிக அளவில் உப்பைச் சாப்பிட்டால் உடலே குப்பையாகி விடும் என எச்சரிக்கிறது புதிய மருத்துவ அறிக்கை ஒன்று.

அதாவது, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் நமக்கு வரும் உயர் குருதி அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவு  மருத்துவ உலகிற்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர் உலகெங்குமுள்ள பல்வேறு மருத்துவர்கள்.

உயர் குருதி அழுத்தத்துக்கு நாம் உட்கொள்ளும் உப்பு காரணமாகிவிடக் கூடும் எனும் நம்பிக்கை ஏற்கனவே மருத்துவ உலகில் நிலவி வந்தாலும், இந்த விரிவான ஆய்வு மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை ஆதாரபூர்வமாக வலுப்படுத்தியிருக்கிறது.

உயர் குருதி அழுத்தமானது உடலில் மாரடைப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளைத் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதை இனிமேல் மாற்றி எழுதுதல் நலம்.

உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருக்கிறதா !! : உஷார் !!!

ஒரு பத்து பதினைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து எங்கேயாவது ஒரு இடத்தில் மாதம் ஓரிரண்டு முறையாவது கூடி பழைய கதைகளைப் பேசி வெட்டியாய் அரட்டையடித்துச் சிரிப்பது கடந்த பல ஆண்டு காலப் பழக்கம்.

உலக அரசியல் பற்றியும், நோபல் பரிசு பற்றியும், சர்வதேச இலக்கியங்களைப் பற்றியும் எங்கள் உரையாடல் இருக்கும் என்றால் அது கடைந்தெடுத்த பொய். வெறுமனே யாரையாவது கிண்டலடித்துக் கொண்டோ, அல்லது அலுவலகத்தில் ஏதேனும் ஒரு உயரதிகாரியை வம்பிழுத்துக் கொண்டோ, எதுவும் இல்லையேல் கல்லூரி காலம் தொட்டே தொடரும் அடுத்தவனின் காதல் கதைகளை அசைபோட்டுக் கொண்டோ முழுக்க முழுக்க வெட்டியாய் முடியும் எங்கள் சந்திப்பு. ( குடித்த தண்ணிக்கும், அடித்த தம்முக்கும், கடித்த சிக்கனுக்கும் யாரு பணம் கொடுப்பது எனும் சண்டை மட்டும் வந்ததேயில்லை என்பது ஆச்சரியம் )

கடந்த முறை இப்படி ஒன்று கூடியபோது என் நண்பன் ஒருவனின் கையில் பெருவிரலோடு சேர்த்து ஒரு சின்ன கட்டு. ‘என்னடா மச்சி என்னாச்சு ? பொதுவா பெருவிரலுக்கு கேடு வராதே… நீ என்ன பண்ணினே’ என ஆரம்பித்தார்கள். அவன் சொன்ன செய்தி உலுக்கிப் போட்டது அனைவரையுமே.

ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரு கம்பெனியில் இருப்பது சாவான பாவம் என்பதால், இவன் இப்போது தான் கம்பெனி தாவி, இன்னொரு கம்பெனியில் குடியேறியிருந்தான். அலுவலகம் செல்லும் வழியில் பைக் வழுக்கி விழ கையில் அடி. கை வலிக்கிறதே என அருகில் இருந்த ஒரு மிகப் பிரபலமான மருத்துவ மனையின் கிளை ஒன்றுக்குச் சென்றிருக்கிறான். 

வரவேற்பறையில் இருந்த பெண் முதலில் பார்த்தது இவனுடைய கழுத்தில் கிடந்த ‘அடையாள அட்டையை’. பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்குப் புரிந்து விட்டது.. வடிவேலு பாணியில், “ஒருத்தன் மாட்டியிருக்காண்டா” என்று உள்ளுக்குள் நினைத்திருப்பாள் போல.

கனிவான குரலில் அவனை அருகில் அமரச் செய்து ( ஆட்டுக்கு மஞ்சள் பூசுவது போல ) கவனித்திருக்கிறார்கள். சற்று நேரம் அமர்ந்திருந்த அவனைப் பரிசோதித்திருக்கிறார் ஒரு டாக்டர். அவர் பார்த்து விட்டு, பெருவிரலில் எலும்பு உடைந்திருக்கிறது. ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து ஒரு சிறு மெட்டல் ஸ்குரூ மாட்டவேண்டும். அதற்கு முன் எக்ஸ்ரே, ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், பேக்ஸ் எல்லாம் எடுக்க வேண்டுமென பட்டியலிட்டிருக்கிறார்.

இவன் சற்று உஷாராகி, ‘ஐயோ அதெல்லாம் வேண்டாம்… அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே’ என்றிருக்கிறான்.

அவரோ, பிரச்சனையில்லை. உங்கள் கம்பெனி மெடிகல் இன்சூரன்ஸில் எல்லாம் கவர் ஆகிவிடும் என திருவாய் மலர்ந்திருக்கிறார்.

ஆஹா… இவர்களுடைய திட்டம் இது தானா ? என உள்ளுக்குள் நினைத்த நண்பன்.
‘டாக்டர். நான் நேற்று தான் இந்த கம்பெனில சேர்ந்தேன். எனக்கு இன்னும் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை. இப்போதைக்கு ஏதேனும் முதலுதவி செய்யுங்கள். இன்சூரன்ஸ் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறான்.

ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போல காதைப் பொத்திய அவர், ஒரு அற்பப் பதரைப் பார்ப்பது போல இவனை ஏற இறங்கப் பார்த்திருக்கிறார். பின் நர்சைக் கூப்பிட்டு இவனுக்கு பர்ஸ்ட் எய்ட் குடும்மா என சலிப்புடன் சொல்லியிருக்கிறார்.

நர்சும் அவனைக் கூப்பிட்டு அருகிலுள்ள அறைக்குச் சென்று, விரலைப் பிடித்து ஒரு கட்டு போட்டு விட இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிட்டது !

இவன் சிரித்துக் கொண்டே கதையைச் சொல்ல, சிரித்துக் கொண்டிருந்த தூக்கி வாரிப் போட்டது.

ஒருவேளை அவன் இன்சூரன்ஸ் இருக்கிறது என்று சொல்லியிருந்தால் நல்லா இருக்கும் ஒரு எலும்பை உடைத்து ஒட்டுப் போட்டிருப்பார்களோ ? தேவையற்ற அறுவை சிகிச்சை நடந்திருக்குமோ ? பல பத்தாயிரங்கள் கறக்கப்பட்டிருக்குமோ ? என்றெல்லாம் கலவரமாய் பேசிக்கொண்டிருந்தோம்.

அதைத் தொடர்ந்து, நிறைய பேர் நிறைய கதைகளைப் பரிமாறினார்கள். இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் பேசி எவ்வளவு கவரேஜ் இருக்குமோ அதுக்குத் தக்கபடி சிகிச்சைகளும், பில்லும் மருத்துவமனைகளில் தரப்படும் என்பதே பலருடைய அனுபவக் கதையாக இருந்தது.

எங்கள் குழுவில் இருந்த project director சொன்னார். மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தாலும், மருத்துவ மனைக்குச் செல்லும்போது இல்லை என்று சொல்வதே நல்லது. எவ்வளவு செலவாகிறதோ அதை நீங்கள் பிறகு மெடிக்கல் இன்சூரன்ஸில் சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை என்றால் தேவையற்ற பல விஷயங்கள் நடக்காது. இல்லையேல் நீங்கள் பொன் முட்டையிடும் வாத்து என கண்டுகொண்டு உங்களிடமிருந்து இல்லாத முட்டையை எல்லாம் எடுப்பார்கள். !

எங்கள் எல்லோர் மனதிலும் ஓடிய கேள்வி இது தான்.

மெடிக்கல் இன்சூரன்ஸ் நல்லதா ? கெட்டதா ?

பின் குறிப்பு : இது சற்றும் கலப்படமில்லாத உண்மை நிகழ்வு. நண்பன் சத்யம் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். 

படம் :

மருத்துவக் காப்பீடு எனும் புலியைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அது நம்மைப் பாதுகாக்குமா, பாழாக்குமா என கிலியுடன் திரிவதைச் சித்தரிக்கிறது இந்தப் படம் என யாரேனும் விளக்கம் சொல்லக் கூடும். எனவே நான் அமைதி காக்கிறேன் J

பாலூட்டும் அன்னையர் கவனத்துக்கு

பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும் என எச்சரிக்கை செய்துள்ளனர் கனடா நாட்டு மருத்துவர்கள்.

கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும் . அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.

தாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.