ஹர்பஜனும், குரங்கு சர்ச்சையும்.

harbhajansingh1.jpg

(குரங்கு இப்படிச் சொறியாதே ! )

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கணக்கா, ஹர்பஜன் என்ன செய்தாலும் அதை ஒரு பெரிய பிரச்சனையாகவே ஆக்கிக் கொண்டிருக்கின்றன ஆஸ்திரேலிய பத்திரிகைகள்.

நேற்று ஹர்பஜன் சொறிந்ததைக் கூட குரங்கு பாஷை காட்டினான் என்று புலம்பித் தள்ளியிருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய மீடியாவுக்கு தங்கள் அணியைப் பற்றிப் பேச இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது போல, எனவே அடுத்த அணியினரின் நடவடிக்கைகளை துரத்தித் துரத்தி கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.

ஹர்பஜன் குழப்பத்தில் இருக்கிறார். இனிமேல் சொறிவது, இருமுவது, தும்முவது, தின்பது, தூங்குவது, அதுக்கு இதுக்கு போவது எல்லாவற்றுக்கும் ஆஸ்திரேலிய மீடியாவிடமும், ஐ.சி.சி யிடமும் அனுமதி பெற வேண்டும் போலிருக்கிறது.

ஒவ்வொன்றாய் செய்து காட்டி, இது குரங்கு மாதிரி இல்லையே ? இது சைமண்ட்ஸ் மாதிரி இல்லையே என்று உறுதி படுத்திக் கொண்டு தான் செய்ய வேண்டும் போலிருக்கிறது.

ஹர்பஜன், எங்கெங்கே கேமரா இருக்குன்னு தெரியல.. அதனால, எதுக்கும் வீட்டுக் கதவு சன்னலையெல்லாம் நல்லா சாத்தி வெச்சுக்கோங்க. குறிப்பா வீட்டு பாத் ரூம் கதவு !!

அன்புமணி vs ஷாரூக்

shahrukh21.jpg

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் என்று ஷாரூக்கான், அமிதாப் போன்றவர்களிடம் அன்புமணி வைத்த கோரிக்கைக்கு ஷாருக்கான் அளித்திருக்கும் பதில் அவருடைய சமூக அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வைப்பது படைப்புச் சுதந்திரம் என தத்துவம் உதிர்த்து, அவருடைய படைப்புச் சுதந்திரத்திற்கு கோடரி வைத்ததாய் கலங்கியிருக்கிறார் ஷாருக்.

திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து புதிதாகப் பேசுவதற்கு எதுவுமில்லை. தற்போது வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சி என்பது கூட மாறி அறைக்கு ஒரு தொலைக்காட்சி எனுமளவுக்கு தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

போதாக்குறைக்கு கைப்பேசிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருகின்றன. சந்தைகளில் கிடைக்கும் நான்காயிரம் ரூபாய் கொரியன் கைபேசிகளிலேயே தொலைக்காட்சி பார்க்கும் வசதி இருக்கிறது. எங்கே தான் இருந்தாலும், என்ன தான் செய்து கொண்டிருந்தாலும் அந்த இடத்துக்கே வந்து தாக்கத்தைத் தருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது சினிமா.

இந்த சூழலில் திரைப்படங்களில் வரும் தவறான முன்னுதாரணங்கள் சமூகத்தை பலவீனப்படுத்தும் என்னும் நியாயமான கருத்தும் வலுப்பெற்று வருகிறது. திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வேண்டாம் என்று வலியுறுத்தும் அரசியல்வாதிகள் இருப்பதே ஒருவகையில் மனதுக்கு ஆறுதல் தருகிறது.

ரஜினிகாந்த், விஜய், சிம்பு என தென்னக பிரபலங்கள் அனைவருமே புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றனர். புகை பிடிக்கவில்லை என்பதற்காக யாரும் “சிவாஜி” படத்தைப் புறக்கணித்ததாகச் செய்திகளும் இல்லை.

ஆனால் வட நடிகர்களுக்கு அன்புமணியின் கோரிக்கை அவர்களுடைய ஈகோவை இடித்திருக்க வேண்டும். இதே கோரிக்கையை பால்தாக்கரே வோ, அல்லது அத்வானியோ வைத்திருந்தால் சலாம் போட்டு ஒத்துக் கொண்டிருப்பார் ஷாருக். ஆனால் கேட்டது தமிழராச்சே. எப்படி ஒத்துக் கொள்வது ?

சினிமாத் துறையினரின் படைப்புச் சுதந்திரமாம் அது. அந்த ‘பிடிப்புச்’ சுதந்திரத்தினால் எத்தனை அடிமைகளை உருவாக்குவதாய் உத்தேசமோ ஷாருக்கிற்கு ?

அன்புமணி ஒன்றும் ஷாருக் புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. திரைப்படங்களில் பிடிக்க வேண்டாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.

“மால்பரோ” சிகரெட் நிறுவனம் தன்னுடைய பொருட்களை திரைப்படங்களில் காட்ட வேண்டாம் என கடந்த 2006ல் அறிவித்திருந்தது. வர்த்தக நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டது அப்போது பரபரப்புச் செய்தியாய் அலசப்பட்டு வந்தது.

பிரிட்டிஷ் மெடிக்கல் பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவு ஒன்று திரைப்படங்களில் வரும் புகை பிடித்தல் பதின் வயதினரை புகைபிடிக்கும் பழக்கத்திற்குள் இட்டுச் செல்வதாக தெரிவித்திருந்தது.

நியூ ஹாம்ஷயரிலுள்ள டார்க்மெளத் மருத்துவ கல்லூரி இயக்குனர் “புகை பிடித்துப் பார்ப்போம் எனும் உந்துதல் திரைப்படங்களிலிருந்தே அதிகம் பெறப்படுகின்றன” என்கிறார்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழக விரிவுரையாளர் “ஸ்டாண்டன் கிளேன்ட்ஸ்” திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வருவதற்கும், பதின் வயதினரின் புகைக்கும் மோகத்துக்கும் மிக மிக நெருங்கிய, நிரூபிக்கப்பட்ட தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல ஆராய்ச்சிகள் இதே முடிவை சொல்லியிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

புகை பிடிக்கும் விளம்பரங்களை ஊடகங்களில் தடை செய்தது போல திரைப்படங்களிலும் தடை செய்வதே சரியாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாய் இருக்கிறது.

உலகளாவிய ஆராய்ச்சிகள் திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வருவதற்கும், மக்களின் புகை பிடிக்கும் பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்திருக்கின்றன. பதின் வயதினரையும், சிறு வயதினரையும் இந்த பழக்கத்துக்குள் இட்டுச் செல்லும் வலிமை திரைப்படத்திற்கு இருக்கிறது என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இத்தகைய தேவையற்ற முன்னுதாரணங்களை திரைப்படங்களிலிருந்து ஒழிக்க நடிகர்களைக் கெஞ்சிக் கொண்டிருக்காமல் அரசே ஒரு சட்டம் இயற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.

ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே.

9a.jpg

இந்த படம் பார்க்காதவன் ஜென்ம பாவத்தையும், கர்ம பாவத்தையும் மூட்டை மூட்டையாய்க் கொண்டவன் என்று பத்திரிகைகள் விமர்சன மழை பொழிந்ததாலும்,

என்னுடைய கதையை கொஞ்சம் சுட்டு தான் நிறைய பேர் தவமாய் தவமிருந்து படங்களை எடுக்கிறார்கள் என்று தங்கர் பச்சானே மறைமுகத் தாக்குதல்கள் நடத்தியதாலும்,

ஒன்பது ரூபாய் நோட்டு பார்க்க வேண்டும் என்னும ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த வார இறுதி அந்த குறையைத் தீர்த்து வைத்தது.

இயல்பான மனிதர்களின் இயல்பான வாழ்க்கை இயல்பாய் படமாக்கப்பட்டிருக்கிறது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில். இதற்காக தங்கர் பச்சானுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

ஒட்டுமொத்த திரைப்படத்தை சொல்ல அவர் எடுத்துக் கொண்ட உத்தி நல்ல உத்தி. பேருந்தில் பயணிக்கும் போது கதையும் கூடவே பயணித்து முடிவது நன்றாகத் தான் இருக்கிறது.

ஆனால் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் தங்கர் பச்சான் ரொம்பவே கோட்டை விட்டு விட்டார் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. படம் பார்த்து முக்கால் வாசி ஆன பிறகு கூட மாதவருக்கு யாராரு சொந்தம், யாரு பையன், யாரு பொண்ணு, யாரு பேரன் என்பது போன்ற குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

எனக்கு தான் இப்படி போல என்று அருகில் இருந்தவரின் தோள் தொட்டுக் கேட்ட போது ‘அவரு மருமகன்’ பா என்று சொன்னார். உடனே அவருக்கு அருகில் இருந்தவர். இல்லை இல்லை அது தான் மூத்த பையன் என்று அவரைத் திருத்தினார். சரி எதுக்கும் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் அப்பரேட்டர் கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு விட்டுட்டேன். (அவர் தானே படத்தை அத்தனை தரம் பாக்கறார் )

நல்லவனாய் இருப்பவன் அநியாயத்துக்கு நல்லவனாய் இருக்கிறான் என்னும் வரை முறையை மீறாமல் தங்கர் படம் எடுத்திருக்கிறார். எந்த விவசாயியும் தனக்கு ஒரு சாகுபடியில் கிடைக்கும் பணம் மொத்தத்தையும் யாரிடமும் அப்படியே இனாமாகக் கொடுப்பதில்லை. கதாநாயகர்கள் விதிவிலக்கு.

ஒரு வார்த்தை சொல்லி விட்டதற்காய் ஊரை விட்டே ஓடுவதும், “மனைவி தான் கடவுள்” என்று பாடல் பாடிவிட்டு, அந்த மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தானாகவே எல்லா முடிவுகளையும் எடுப்பதும். மனைவியின் விருப்பத்துக்கு, ஒரு தாயின் உயிர் துடிக்கும் ஏக்கத்துக்கு, அழலில் விழுந்த புழுவான அவளுடைய மன வேதனைக்கு சற்றும் மதிப்புக் கொடுக்காமல் இருப்பதும், என்று தான் தங்கரின் மாதவம் செய்த மாதவர் வாழ்கிறார்.

மகன் கஷ்டப்படுகிறான், அடி படுகிறான், பிச்சை எடுப்பது போன்ற பிழைப்பை நடத்துகிறான் என்பதை கண்ணால் காணும் போதும் கூட ஓடிச் சென்று “மகனே” என்று அழைத்து அரவணைத்து கண்ணீர் சிந்தாமல், வறட்டுப் பிடிவாதத்தில் உழலும் ஒரு மனிதனாய் தான் வாழ்கிறார் மாதவர். எந்தப் பெற்றோரும் மகன் தங்களை வெறுத்தாலும், அடித்தாலும் பிள்ளைகளின் துயரத்தைக் காண்கையில் அனைத்தையும் மறந்து தாவி ஓடுவார்கள் ஆறுதல் தர. ஆனால் தங்கரின் மாதவர் அப்படி இல்லை.

மனைவியின் துயரம், மகனின் துயரம் எல்லாம் புரிந்தும் புரியாதவராக, கிடைக்கும் பணத்தை நாசருக்குத் தவறாமல் ஒப்புவிப்பதில் மட்டும் மாதவர் சிறந்திருந்தால் போதுமா ?

தன்னுடைய மகன் ஒரு சலவைக்காரரின் மகளை விரும்புகிறார் என்று மாதவருக்குத் தெரிய வரும் போது அவர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்து மலையளவு உயர்வார் என நினைத்தால்.. ம்ஹூம்… மாதவர் சாதாரணர். கடைசி காட்சியில் கூட மகனை, அவனுடைய இழி நிலையை துயரத்துடன் பார்த்து கடந்து போவதுடன் சரி.

மகனை எழுப்பி வாழ்க்கை என்பது உணர்வுகளில் தான் என அவனை அரவணைத்து அவனுடைய வாழ்க்கையில் சற்று ஆனந்தத்தையாவது அளிக்கவில்லை மாதவர்.

இவையெல்லாம் இல்லாமல் வெறுமனே பலா மரத்தையும், கிராமத்தின் இயல்பான சூழலையும் மட்டுமே காட்டிச் செல்லும் ஒரு திரைப்படமாகத் தான் இருக்கிறது ஒன்பது ரூபாய் நோட்டு.

வெறும் மாதவரின் நடிப்பை வைத்து படத்தை அற்புதம் என்று சொல்லிச் செல்ல முடியவில்லை. இந்தப் படத்துடன் ஒப்பிடுகையில் எனக்கு தவமாய் தவமிருந்து படம் பல மடங்கு உயர்வாய் தெரிகிறது.

தங்கர் பச்சான் ! நீங்கள் மண்ணிலிருந்து முளைத்திருக்கிறீர்கள். மண்ணின் மணத்தை கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் படம் எடுக்க விரும்புகிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஆனால் அந்த திரையாக்கம் சுமந்து வரும் செய்தி என்ன என்பதிலும் சற்று கவனம் செலுத்தலாமே ?

மாதவர் படையாட்சி சொல்லும் சேதி என்னவோ ? மனைவியின் உயிர் மூச்சான விருப்பங்களுக்காய் உன்னுடைய வறட்டுப் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதே என்பதா ? பிள்ளைகள் ஒரு வார்த்தை சொல்லி விட்டார்கள் என்பதற்காக ஒரேயடியாய் தலை முழுகி ஓடி விடு என்பதா ?

கடைசியாய் ஒரே ஒரு விண்ணப்பம். அடுத்த படத்திலாவது பள்ளிக் குழந்தைகளை விட்டு விடுங்கள் பிளீஸ்.

ரஜினியின் குசேலர் vs கத பறயும் போள்

katha.jpg

‘கத பறயும் போள்’ படத்தை வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது முதல் ‘கத பறயும் போள்’ டி.வி.டி கிடைக்குமா என்று மக்கள் கடைகளில் குவிவதாகச் சொன்னார் சென்னையில் டி.வி.டி வாடகை கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர்.

கண்டிப்பாக இணையத்திலும் தேடல்கள் அதிகரித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஸ்ரீனிவாசன் எனக்கு மிகவும் பிடித்த மலையாள திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். குறிப்பாக ‘சிந்தாவிஷயமாய ஷியாமளா’ போன்ற படங்களில் அவருடைய திரைக்கதை வெகு அழகாக வெளிப்பட்டிருக்கும். இதைத்தான் தங்கர் பச்சான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்று எடுத்தார்.

அழகிய ராவணம் படம் கூட அவருடைய திரைக்கதை என்பது போல ஒரு ஞாபகம்.

மணிச்சித்திரத் தாழ் படத்தை படம் வெளியான காலத்திலேயே பல முறை பார்த்திருக்கிறேன். சந்திரமுகியில் வாசுசெய்த செரித்துக் கொள்ள முடியாத மாற்றங்களையும். அதை விட கொடுமை ‘தேன் மாவின் கொம்பத்து’ படத்தை முத்துவாக எடுத்த போது நேர்ந்தது.

என்னுடைய நண்பர்கள் சிலர் இது தேன்மாவின் கொம்பத்து திரைப்படம் என்று சத்தியம் செய்த போது கூட நம்பவில்லை என்பது வேறு விஷயம்.

கதை சொல்லும் போது (கத பறயும் போள் ) கதை என்ன ?

முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் – ஸ்ரீனிவாசன் ஏழ்மை நிலையிலும் தன்னுடைய தேவைக்காக யாரையும் எதிர்பார்க்காதவன். நேர்மையானவன். தாழ்வு மனப்பான்மை கொண்ட அவன் தன்னுடைய மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் இவர்களுடைய தேவைகளுக்கான பணத்தையே சம்பாதிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது போதாக்குறைக்கு ஒரு மாடர்ன் முடி திருத்தகமும் அங்கே வருகிறது.

அந்தக் கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக வரும் சூப்பர்ஸ்டார் மம்முட்டி இவருடைய நண்பர் என்று எங்கிருந்தோ கசியும் செய்தியால் ஒரே நாளில் வி.ஐ.பி ஆகிவிடுகிறார் ஸ்ரீனிவாசன். எனினும் தன் தேவைக்காக மம்முட்டியை அணுக அவர் மறுக்கிறார்.

ஒட்டு மொத்த ஊரும் மம்முட்டியுடனான ஒரு அறிமுகத்துக்காய் இவரை அணுக, இவர் மறுக்க, அதனால் அவமானமும், நிராகரிப்புக்கும் ஆளாகிறார்.
எனினும் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையால் நத்தை ஓட்டுக்குள் சுருண்டு விடுகிறார்.

கடைசியில் பள்ளி ஆண்டு விழா மேடையில் பேசும் மம்முட்டி, தன்னுடைய உயர்வுக்குக் காரணம் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்காய், எத்தனையோ தியாகங்கள் செய்த ஸ்ரீனிவாசன் தான் என்றும், நட்பை விடப் பெரியது தனக்கு எதுவுமே இல்லை என்றும் சொல்ல, அதைத் தொடர்வது நெகிழ வைக்கும் முடிவு.

இன்னசெண்ட், ஜெகதீஷ், முகேஷ், ஸ்ரீனிவாசன் என பழம் தின்று கொட்டை போட்ட நகைச்சுவை நடிகர்களால் நிறைந்திருக்கும் படம் நகைச்சுவைக்கு அதிக பட்ச உத்தரவாதம். (வடிவேலுவை தமிழில் எதிர்பார்க்கலாம் ? ) இறுதிக்காட்சிகள் நெகிழ்ச்சிக்கும்.

ஆனால் தமிழ்ல் இயக்கப் போவது வாசு அல்லவா ! எனவே கத பறயும் போள் படத்தைப் பார்த்தாலும் ‘குசேலர்’ அதே போல இருக்கப் போவதில்லை என்பது சர்வ நிச்சயம். அதிலும் திரைக்கதையை மாற்றப் போகிறேன் என்று அவர் சொல்லி விட்ட பின் 🙂

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்…

har_sa.jpg
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த ஆங்கில நியூஸ் சானலை திருப்பினாலும் இந்திய இளைஞர்களின் கோபமான பேச்சுகளும், பேட்டிகளும், நேர்காணல்களும் என அல்லோலகல்லோலப் பட்டுப் போனது கிரிக்கெட் விவகாரம்.

ஸ்டீவ் பக்னர் இந்தியர்கள் விளையாடும் போது தவறான தீர்ப்புகளையே வழங்குகிறார், ஹர்பஜன் மீதான தடை நீடிக்கப் பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ் களிலும் இந்தியர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வேகத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

கிரிக்கெட், இந்தியர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை விட முக்கியமாகிப் போய் விட்டது என்பதையே கொடும்பாவி எரிப்புகளும், கோப ஆர்பாட்டங்களும் வெளிப்படுத்தின.

எங்கேயாவது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்களா தெரியவில்லை. தினத்தந்தி படித்தால் தான் அந்த விஷயம் தெரியும்.

நிறவெறிக்கு எதிராக கடுமையாகப் போராடும் இந்தியா இதை அனுமதிக்காது என ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தனர் எல்லா சானல்களிலும், யாரோ ஒருவர்.

இத்தனை ஆவேசப்படக் கூடிய அளவுக்கு இந்த நிகழ்வு விஸ்வரூபமெடுத்ததற்கு இந்தியா இரண்டாவது டெஸ்டில் தோற்று விட்டது என்பதே முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆஸ்திரேலியர்களின் சுப்பீரியாரிடி காம்ப்ளஸ், மற்றும் கிரிக்கெட்டில் காலம் ககலமாய் நிகழ்ந்து வரும் பிரிவினை பேதங்களும் யாரும் அறியாததல்ல.

என்னதான் இருந்தாலும், ஒரு விளையாட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் இவ்வளவு முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டியது தானா ?

நிறவெறிக்கு எதிரானவர்கள் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதற்காக இத்தனை பிரயர்த்தனம் செய்ய நமக்கு உண்மையிலேயே அருகதை இருக்கிறதா ?

பல்லாயிரம் மக்களை மதரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் கொன்று குவித்த நிகழ்வுகள் நம் கண்முன்னே நிகழ்ந்த போதோ, அதற்குக் காரணமானவர்களை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியபோதோ ஊடகங்கள் இத்தனை ஆவேசப்பட்டனவா ?

பழங்குடியினருக்கு எதிராகவோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே நடக்கும் வர்க்கபேத போராட்டங்களை முழுக்க முழுக்க ஓர் சமூக அக்கறையுடன் ஊடகங்கள் முழங்கியிருக்கின்றனவா ?

இன்றும் கூட நிகழும் ஆலய எரிப்புப் போராட்டங்களையும், அதை நியாயப்படுத்தும் அறிக்கைகளையும் இந்த ஊடகங்கள் நடுநிலையோடு விமர்சிக்கின்றனவா ? அல்லது அலசுகின்றனவா ?

ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்கோ, ஷில்பா ஷெட்டிக்கோ அல்லது ஐஸ்வர்யா ராயின் குடும்பத்துக்கோ மட்டுமே முக்கியத்துவம் தருவது தான் ஊடகங்களின் பணியா ?

கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்ததால் பெரிது படுத்தப்படும் இந்த சம்பவம் வேறு விளையாட்டுகளில் நிகழ்ந்திருந்தால் ஒரு சிறு பெட்டிச் செய்தியோடு தானே முடிந்து போயிருக்கும்.

வர்த்தகத்தைத் தாண்டி எதையும் சிந்திக்காத ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறும் என்று சொல்ல முடியாது.

போராட்டங்களின் மூலமாக இந்தியா புனிதமான கைகளைக் கொண்டிருக்கிறது என்று உலகிற்குச் சொல்வதாக ஊடகங்கள் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் இப்படிச் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா?. ஊடகங்கள் மேல் நோக்கியே பார்க்காமல் சற்று கீழ்நோக்கியும் பார்த்தல் நலம்.

கடைசியில் கிரிக்கெட் விளையாட்டிலும் பணம் தான் விளையாடப் போகிறது. இந்தியா விளையாடாது என்று அறிவித்தால் அந்த நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

எனவே இந்தியா விளையாடும், ஐசிசியோ, பிசிசியோ எதுவாய் இருந்தாலும் கடைசியில் எடுக்கும் முடிவு விளையாட்டைத் தொடர்வதாகவே இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் விளையாட்டின் மீது நீங்களோ நானோ கொண்டிருக்கும் ஆர்வமல்ல.

பணம் ! வியாபாரம். அவ்வளவே !!!

இணையத்தில் தகவல் தேடுவோர் கவனத்திற்கு…

lap.jpg
கணினி என்பது ஆராய்சிகளுக்கும், அலுவலகங்களுக்கும் என்ற நிலை மாறி இன்று வீடுதோறும் ஓர் செல்லப் பிராணி போல இடம்பெற்றிருக்கிறது. இணையத்தின் பயன்பாடு வந்தபின் கணினி என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கானவை என்னும் நிலை உருவாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் அரட்டைகள் என தொடர்புகளுக்குப் பயன்படும் கணினி, தகவல் களஞ்சியமாகவும் பயன்பட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்ததே.

எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் இணையம் பல்வேறு தகவல்களை அளித்து வருகிறது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மாறுபட்ட தகவல்களும், முரண்பட்ட விளக்கங்களும் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.

இணையத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் கட்டுரைகளுக்கு இருக்கக் கூடிய நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இதன் முக்கியமான காரணம் யார் வேண்டுமானாலும் இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்னும் நிலையே.

விளம்பரத்துக்காகவும், வியாபாரத்துக்காகவும் தகவல்களை திரித்தும், சாதகப்படுத்தியும் இணையத்தில் வருகின்ற தகவல்களை ஆராய்ந்து சரிபார்க்கும் பணியும் இப்போது தகவல் தேடுவோருக்கு இருக்கிறது. நாம் பார்க்கும் இணைய தளம் நம்பகமானது தானா, இதில் குறிப்பிட்டுள்ளவை நடுநிலையோடு தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆராயாமல் தகவல்களைப் பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம்.

அதிலும் குறிப்பாக மருத்துவம் சார்ந்த தகவல்களைப் படிக்கும் போது அதிக பட்ச கவனம் தேவை.

1. யார் தளத்தை நடத்துவது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உலக நலவாழ்வு நிறுவனம், போன்ற அமைப்புகளெல்லாம்
தன்னுடைய தளத்தின் எல்லா பக்கங்களிலும் அதன் முத்திரை, காப்புரிமை, போன்ற விவரங்களைக் குறிப்பிட்டிருக்கும்.

2. தளத்திற்கு யார் பொருளாதார உதவிகள் செய்கின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். .gov என முடியும் தளங்கள் அரசு நடத்தும்
தளங்கள், .edu தளங்கள் கல்வி தொடர்பானவை. இப்படிப்பட்ட தகவல்களை கவனிக்க வேண்டும். ஏதேனும் பிரபல நிறுவனம் நடத்தும்
தளமெனில் அந்த நிறுவனத்தின் பொருட்களின் தரம் மிகைப்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

3. தளத்தின் நோக்கம் பெரும்பாலும் “எங்களைப் பற்றி” எனும் இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பக்கத்தில் தளத்தின் நோக்கம்
குறித்து தகவல்கள் கிடைக்கலாம். இங்கே கிடைக்கும் தகவல்களை முழுமையாக நம்பிவிட வேண்டுமென்பதில்லை. பெரும்பாலும்
இந்த இடங்களில் நேர்மையான முகம் மாட்டப்பட்டிருப்பதில்லை.

4. தகவல்களின் “மூலம்” தரப்பட்டிருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும். அந்த தகவல் அளித்திருப்பவர் குறித்த தகவல்கள்
தரப்பட்டுள்ளனவா என்பதையும், வேறு தளத்திலிருந்தோ பத்திரிகையிலிருந்தோ எடுக்கப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரங்களோ,
இணைப்புகளோ தரப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும்.

5. தகவல்கள் உண்மையானவை என்பதை நம்புவதற்குத் தேவையான சான்றுகள் இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.
மருத்துவ ஆராய்ச்சிகள், அறிக்கைகள் போன்றவற்றுக்கான சான்று, ஆதாரம் தரப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.

6. இந்த தகவல்களைத் தந்திருப்பவர்கள் அந்தந்த துறையில் திறமையானவர்கள் தானா என்பதைக் குறித்த புரிதல் இருப்பதும் அவசியம்.

7. இணையம் தகவல்களின் குவியலாக இருப்பதால் பல பழைய காலாவதியாகிப் போன தகவல்களும் காணக் கிடைக்கும். எனவே படிக்கும்
தகவல் எப்போதைய தகவல் என்பதைக் கவனிக்க வேண்டியது மிக மிக அவசியம். சமீபத்திய தகவல்களைச் சார்ந்திருப்பதே மாறிவரும்
சூழலுக்கு ஏற்றதாக அமையும்.

8. அந்த தளத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் சார்புடையவையா என்பதை அறிய வேண்டும். அதற்கு அந்த தளத்தில்
இணைக்கப்பட்டிருக்கும் உரல்கள் ஒருவிதத்தில் உதவும். பெரும்பாலான மருத்துவ பக்கங்களில் இன்னோர் பக்கத்துக்கு இணைப்பு
வழங்குவதில்லை. இணைப்புகள் பெரும்பாலும் விளம்பர உத்திகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

9. பயன்பாட்டாளரிடமிருந்து தளம் எத்தகைய தகவல்களை வாங்குகிறது என்பதிலிருந்தும் தளத்தின் நோக்கம் பல வேளைகளில் புரிய
வரலாம். தனிப்பட்ட தகவல்களை நம்பகமற்ற தகவல்களில் அளிக்க வேண்டாம். அவை விளம்பர நோக்கத்துக்கானவை என்பதில்
சந்தேகமில்லை.

10. தளத்திலுள்ள கேள்வி – பதில் பக்கங்கள், உரையாடல்கள் போன்றவையும் தளத்தைக் குறித்த பல தகவல்களைத் தரக் கூடும். அத்தகைய
வசதி இருந்தால் சில நாட்கள் அந்த தளத்தைத் தொடர்ந்து கவனித்து வந்தாலே தளத்தின் தன்மை புரிந்து விடும்.

இவற்றைக் கவனத்தில் கொண்டால் நாம் ஒரு இணைய அன்னப் பறவையாகி நல்லவற்றைப் பிரித்தெடுக்க முடியும் என்பது நிஜம். எனவே மாறிவரும் வாழ்க்கைச் சூழலை அர்த்தமுள்ளதாக்கவும், அவசரமாய் இறங்கி நிதானமாய் வருந்துவதைத் தவிர்க்கவும், இணையத்தைப் பயன்படுத்தும் போது அதிக கவனத்துடன் இருத்தல் அவசியம்

பின் குறிப்பு :- இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய செயல்கள் தெரிந்திருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.

பள்ளிக்கூடம் : தங்கரும் விதிவிலக்கல்ல !!!

pk.jpg

தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கடந்த வார இறுதியில் தான் எனக்கு வாய்த்தது. பால்ய நினைவுகளைக் கிளறுவது எப்போதுமே சுவாரஸ்யமானது. அதுவும் கவலைகள் ஏதும் இல்லாத பள்ளிக்கூட வாழ்க்கையையும், வறுமையையும் பணக்காரத் தனத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத ஆரம்பப் பள்ளி நட்பு வட்டாரமும் நினைவுகளில் மிதப்பது ஒரு சுக அனுபவம்.

படித்த பள்ளிக்கூடம் சிதிலமடைந்து கிடப்பதும், வருமானம் இல்லாத பள்ளிக்கூடத்தை மூட வேண்டிய சூழல் ஏற்படும்போது பள்ளிக்கூடத்தை பழைய முன்னாள் மாணவர்களின் உதவியுடன் புதுப்பித்து செயல்பட வைப்பதே பள்ளிக்கூடம் சொல்லும் கதை.

‘மழைக்காகத் தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன், ஆனால் அங்கும் மழையைத் தான் பார்த்தேன்” எனும் அறிஞரின் கூற்றுப்படி வெளியேயும் உள்ளேயும் மழை என்னும் காட்சியுடன் ஆரம்பிக்கும் பள்ளிக்கூடம் பால்ய நினைவுகளை கிளறும் காட்சிகளால் கோர்க்கப்பட்டு திரையில் விரிகிறது.

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் வெற்றிவேலும் (நரேன்), திரைப்பட இயக்குனராய் இருக்கும் முத்துவும்(சீமான்) கிராமத்தான் குமார சாமியும்( தங்கர் பச்சான்) கிராமத்து பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியப் பணி ஆற்றும் கோகிலா(ஸ்நேகா)வும் பள்ளிக்கூடத்தின் பாத்திரங்களாகிறார்கள்.

உணர்ச்சிபூர்வமான ஒரு கதையைச் சொன்னதற்காகவும், இந்த கதையம்சம் வாழ்வின் தேவைகளை முன்னிறுத்தியிருப்பதற்காகவும், அதில் தெரியும் கல்வி சமூக அக்கறைக்காகவும் தங்கர் பச்சானை மனமாரப் பாராட்டலாம்.

கிராமத்துக்காரனாக வலம் வரும் தங்கர் பச்சானின் நடிப்பும், நண்பர்களின் பழைய துணிகளைக் கூட ஆசை ஆசையாய் எடுத்து வைத்துக் கொள்ளும் பாங்கும் நெகிழ வைக்கிறது.

எனினும் தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் திரைப்படம் அவருடைய பள்ளிக்கூடத்தைப் போலவே சிதிலமடைந்து தான் கிடக்கிறது.

காட்சிப் படுத்துவதில் சில இடங்களில் பரிமளிக்கும் தங்கர் பல இடங்களில் படுதோல்வியையே சந்தித்திருக்கிறார். திடீர் திடீரென வந்து போகும் காட்சிகளும், நாடகத் தனமான காட்சிகளும் பள்ளிக்கூடம் முழுக்க நிரம்பி வழிகின்றன.

கலெக்டரை முதன் முதலில் சந்திக்கும் காட்சி, டைரக்டரை சந்திக்கும் காட்சி, கடைசியில் நாயகன் நாயகி சந்திக்கும் காட்சி என எல்லா முக்கியமான கட்டங்களும் நாடகத் தனமாகவே இருப்பது வியப்பான சலிப்பு.

கிறிஸ்தவர்கள் என்றால் கவுண் அணிந்திருப்பார்கள், மாலையில் தண்ணியடிப்பார்கள், வீட்டில் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என்னும் தமிழ் சினிமாவின் வரைமுறையிலிருந்து பள்ளிக்கூடமும் விலகியிருக்கவில்லை.

ஜெனிபர் என்னும் கிறிஸ்தவப் பெண் பாலியல் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் இங்கும். அவருடைய கணுக்காலை எட்டிப்பார்க்கவும், தொட்டுப்பார்க்கவும் அலையும் சபலக் காரராகத் தான் அவருடைய மழலைக்காலம் கழிந்திருக்கிறது என்பது வேதனை.

கோகிலா என்னும் ஆசிரியை முழுக்க முழுக்க போர்த்தியபடி கலாச்சாரத்தின் (?) சின்னமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கும், ஜெனிபர் என்னும் பெண் கவர்ச்சிப் பொருளாக ஊராரின் தாபக் கனவுக்குள் நடமாடும் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கும் காரணத்தை அறிய அதிக நேரம் ஆவதில்லை.

ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடலுக்கும், பள்ளிக்கூடத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடலுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொன்னால் நன்றாக இருக்கும். ஆட்டோகிராஃப் ஒரு சமூக சார்பற்ற கதையைக் கொண்டிருந்தாலும் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. அதாவது உணர்வுகளை படமாக்கிய விதத்தில் ஆட்டோகிராஃப் பள்ளிக்கூடமல்ல, பல்கலைக்கழகம். பள்ளிக்கூடம் படமாக்கப் பட்ட விதத்திலும் ஆட்டோகிராஃபின் பாதிப்பு இருப்பதை ஒத்துக் கொண்டேயாக வேண்டும்.

தேவையற்ற கவர்ச்சிப் பாடலையும் தங்கர் வலியத் திணித்திருக்கிறார். வியாபாரத்துக்காக என்று இனியும் அவர் சாக்குப் போக்கு சொன்னால் அவருடைய படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இருப்பாராக.

பள்ளிக்கூடத்திற்கு முன்னாள் மாணவர்கள் வருவதும் பல படங்களில் பார்த்த சமாச்சாரம் தான். மலையாள படங்களின் சாயலும் இதில் வீசுகிறது. சில பல மாதங்களுக்கு முன் கதாநாயகனை குணப்படுத்துவதற்காக முன்னாள் மாணவர்கள் எல்லாம் கல்லூரியில் கூடும் கதையம்சத்துடன் திரைப்படம் ஒன்று வெளியானதும் நினைவில் வருகிறது.

கலெக்டர் ஊருக்கு வருவதும் அது தொடர்ந்த காட்சிகளிலும் நெளியும் செயற்கைத் தனம் தங்கரிடம் யாரும் எதிர்பாராதது. கடைசி காட்சிகளில் நண்பனை வரவேற்க தலையில் பெஞ்ச் சுமந்து வரும் இடம் தவிர்த்த இடங்களில் எல்லாம் செயற்கைத் தனம்.

அதுவும் கோகிலாவை பார்க்காமலேயே முறுக்கித் திரியும் கலெக்டர் விழா முடிந்தபின் பேட்டி நேரத்தில் கோகிலாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது நாடகத் தனத்தின் உச்சம் எனலாம். ஒரு மெல்லிய பார்வையிலோ, ஒரு கரம் தொடுதலிலோ உணர்ச்சிகளை பீறிட்டு ஓட வைத்திருக்க முடியும்.

கலெக்டர் சொன்ன உடனேயே கண்ணீருடன் ஓடி வரும் கோகிலா பெண்களை இழிவு படுத்துகிறார். தன்னை இத்தனை நாள் தவிக்க விட்டு, ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல், ஊருக்கு வந்தபின்பு கூட நேருக்கு நேர் பார்த்து ஒரு காதல் பார்வை கூட வீசாத கலெக்டரிடம் ஒரு அடிமை விடுதலையாகும் உற்சாகத்துடன் கோகிலா ஓடுவதில் ஒட்டு மொத்த பெண்களும் சற்று தலை குனிகிறார்கள்.

மொத்தத்தின் தங்கர் பச்சான் ஒரு கதையை படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் சட்டதிட்டங்களை மீறாமல், ஆனால் மீறியிருப்பது போன்ற பாவனையில்.

சிதிலமடைந்து தான் கிடக்கிறது தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் !

கணினியும் கண்ணும்

eye.jpg

அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது. அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.

பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.

கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.

கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.

பீலி பெய் சாகாடும்.
அதிக நேரம் கணினி பார்த்தால் கண் கெடும்.

ஐ.டி வேலையும், குடும்ப வாழ்க்கையும்

old.jpg

சென்னையில் இந்த ஆண்டு ஐ.டி தம்பதியரிடையே விவாகரத்து 200 மடங்கு அதிகரித்திருப்பதாக திடுக்கிடும் புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே கணினி துறை சார்ந்த மக்கள் தங்களுடைய வாழ்க்கை – வேலை சமநிலையை சரிவரக் கண்காணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வாழ்வில் பலவீனமடைந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மக்களின் தேவை பணம் என்னும் நிலையிலேயே நீள்கிறது.

குடும்பத்தினரை விட்டுவிட்டு வெளிநாடு பயணம் செய்வது, இரவு பகல் பாராமல் அலுவலகத்தில் இருப்பது, அலுவலகத்து சோர்வை வீட்டில் காட்டுவது என பல வகைகளில் இந்த சமநிலையற்ற தன்மை தொடர்கிறது.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும் கல்லூரியிலிருந்து வெளியே வந்து வேலை தேடும் படலத்தைச் சந்திக்காத காம்பஸ் வாலாக்கள் வேலை கிடைப்பதன் கஷ்டம் என்ன என்பதையே அறியாமல் இருப்பதும் ஒரு காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

படித்து முடித்தவுடன் கிடைக்கும் ஐந்திலக்க சம்பளத்தை வைத்துக் கொண்டு N – சீரீஸ் நோக்கியாவை வாங்கியபின் மிச்சபணத்தை என்ன செய்வது என்பதறியாமல் உல்லாசங்களுக்கு ஒதுக்கி விடுகின்றனர்.

மேலைநாட்டின் ஃப்ரைடே ஃபீவர் இந்திய ஐடி மக்களையும் பெருமளவில் பீடித்திருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவுகளில் சோமபானக் கடைகளில் மங்கலான வெளிச்சத்தில் தவம் கிடக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது.

மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடுவதால், அதிக பணம் கிடைத்து விடுவதால், பக்குவம் என்ற ஒன்று அவர்களுக்குப் பிடிபடாமலேயே போய் விடுகிறது.

விட்டுக் கொடுத்தலே வாழ்க்கை என்னும் அடிப்படை அர்த்தம் அவர்களைப் பொறுத்தவரை விதண்டாவாதம். இன்றைய தினத்தை இன்றே அனுபவிப்போம் என்பதே இன்றைய இளசுகளின் தாரக மந்திரம். இதை இன்றைய ஊடகங்களும் முன்னிலைப்படுத்துவது வேதனைக்குரியது.

திருமணப் பயிற்சி என்னும் ஒன்று இன்றைய இளைஞர்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. சில மதப் பிரிவுகள் திருமணப் பயிற்சியை திருமணத்தின் கட்டாயமாக்கியிருக்கின்றன. இதே நிலை எல்லா இடங்களிலும் வரவேண்டும்.

வெறும் பாலியல் சார்ந்த உடல் தேவையே திருமணம் எனும் பதின் வயது ஈர்ப்புகளிலிருந்து இளைய சமூகத்தினர் விடுபட வேண்டும். இன்றைக்கு விரல் நுனியில் கிடைக்கும் பாலியல் சார்ந்த தகவல்களின் மாயையைத் தாண்டி விரியும் உன்னதமான இடம் தான் குடும்பம் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறு சிறு தோல்விகள் வந்தாலோ, சண்டைகள் வந்தாலோ டைவர்ஸ் மட்டுமே ஒரே வழி என்னும் மனப்பான்மை நிச்சயம் விலக வேண்டும். அத்தகைய எண்ணத்தை சார்ந்த சமூகம் எந்த விதத்திலும் ஊக்குவிக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

பணம் இருக்கிறது துணை எதற்கு ? எனும் மனோ நிலையிலிருந்து இளைய சமூகம் விடுபட வேண்டும். அதற்கு ஆழமான குடும்ப உறவுகளும், பெற்றோரும், சமூகமும், மதமும், அலுவலகங்களும் அனைத்துமே தன் பங்கை ஆற்ற வேண்டும்

எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் திருமணமான ஆறு மாதங்களிலேயே விவாகரத்து வாங்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான். இருவரிடமும் தனித்தனியே பேசினேன். உண்மையில் ஈகோவைத் தவிர எந்த பிரச்சனையும் அவர்களிடம் இல்லை.

மன்னிக்கும் மனப்பான்மையை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை மதங்களோ, தியானங்களோ, பெற்றோரோ யாரேனும் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாக வேண்டும்.

வாழ்க்கை என்பதை அமெரிக்க டாலர்களில் அடைத்துவிட முடியாது.

எண்பது வயதில் “நரையன்” என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டே இன்பமான குடும்ப வாழ்க்கை வாழ நமது பாட்டிகளால் முடிந்திருக்கிறது.

எழுபது வருடம் சேர்ந்து வாழ்ந்தபின் ஏற்படும் துணை இழப்பையே தாங்க முடியாமல் கதறும் தாக்தாக்களை நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. அதன் பின்னணியில் வெட்டி விடுதலே விடுதலை என சுற்றும் இளைய சமூகத்தை நினைத்து வேதனைப்படாமல் இருக்க இயலவில்லை.

இளைய சமூகத்தினருக்கு சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான். யாரும் எதிலும் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதில்லை. வெற்றி என்பது அடுத்தவருக்குத் தோல்வியை அளிப்பதில் அல்ல, அடுத்தவருக்கு வெற்றியை அளிப்பதில் என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும்.

மன்னிப்பு என்பதையே தண்டனையாய் அளிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆழமான குடும்ப உறவுகள், எதிர்காலத்தின் வளமான வாழ்வுக்கு ஆதாரம். இல்லையேல் பலவீனமான குடும்பங்களின் பிரதிநிதிகள் பலவீனமான தேசத்தையே பரிசளிக்க முடியும்.