A Love Song ! Rayil

காத்திருக்கும்
என் மனம் துடிக்கும்
அவன் எங்கே
இன்னும் காணலையே
தடதடக்கும்
ரயில் பரபரக்கும்
என் உயிரும்
வந்து சேரலையே

ரயிலும் போகும்
இதயம் நோகும்
காதலன் நினைப்பில் கலங்குறேனே

இரு
இரும்பில் ஓடும்
ரயிலில் வாடும்
வருகை பார்த்து ஏங்குறேனே
*

அட‌
தாமதிப்பேனோ
கண்ணே
உன் முன்பே வருவேனே ?
அட‌
ரயிலும் போயிடும் முன்னே
நான் உன்னைச் சேர்வேனே
*
நான்
சின்னஞ் சிட்டு
நீ காதல் பட்டு
பின்
சொட்டுச் சொட்டாய் வரைந்தாய்
கன்னம் தொட்டு

நான்
தோளை தொட்டு
நீ வேலை விட்டு
பின்
கட்டிக் கிட்டுக் கிடந்தோம்
வானம் தொட்டு

*

ஆனந்தம் த‌ருமா
சோகமே வருமா ?
மயிலும் அழு திடுமா ?

ஏக்கமும் மிகுமா
தாமதம் தகுமா
ரயிலும் போய் விடுமா ?

நான் குழலாய் கிடந்தேனே
எனை இசையாய் ப‌டித்தாயே
நான் கல்லாய்க் கிடந்தேனே
எனை சிலையாய் வடித்தாயே
*

நொடிகள் மணியென‌
நிமிடமும் தினமென‌
உனக்காய் காத்திருப்பேன்

பயமும் மெலிதென‌
விரல்களும் குளிரென‌
தவிப்பில் காத்திருப்பேன்

நான் தவமாய்க் கிடந்தேனே
எனை வரமாய் அடைந்தாயே
நான் தனியாய் நடந்தேனே
என் உயிராய் இணைந்தாயே

தாயே !

 

இசை : சஞ்சே

வரிகள் : சேவியர்

——————————–

நானாக நானும் இல்லையே

எங்கு சென்ற போதும்

ஏதேதோ எண்ணம் கொல்லும்

 

தாயான தாயும் இல்லையே

இங்கு இந்த நேரம்

நியாயமா….

 

ஆயிரம் ஆயிரம் ஞாபகம் நெஞ்சினில்

நாளுமே நீங்காதே

என் அன்னையே

 

ஆரிரோ பாடிய ஞாபகம் நெஞ்சில்

என்றுமே நீங்காதே

என் அன்னையே

 

*

 

பாசமா நேசமா

உன் பாதம் கட்டிக் கொண்டேன் நான்

வாழவா நான் ஆள‌வா

பசி அள்ளித் தின்றாய் நீ

 

தந்தையா அன்னையா

என் சொந்த பந்தம் எல்லாமே நீ

கந்தையா கண்ணீரா

அந் நாட்கள் சொர்க்கம் தானா ?

 

 

எங்கே

நெற்றி தனைத் தொடும் அந்த விரல்

காண

நெஞ்சம் தவிக்கிறதோ

 

எங்கே

என்னைக் கொஞ்சு கின்ற செல்லக் குரல்

மீண்டும் அது ஒலித்திடுமோ

 

*

 

பஞ்சணை மெத்தையும் வந்திடலாம்

அன்னையின் சேலையைப் போல் வருமா

 

அறுசுவை உணவுகள் வந்திடலாம்

அன்னையின் கைப்பிடி போல் வருமா ?

 

பேர் புகழ் தேசமும் தந்திடலாம்

அன்னையின் வார்த்தையைப் போல் வருமா ?

 

ஆயிரம் நேசங்கள் பூத்திடலாம்

அன்னையின் புன்னகை போல் வருமா ?

 

தாயே

வெற்றி பெற்றேன் நானே

 

என் தாயே

என்னைக் காண வாயேன்.

 

நீயே

எந்தன் ஜீவன் தாயே..

இன்று

நீயும் இல்லா வாழ்க்கை கொல்லுதே

 

Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) Tips – In Tamil

நேர்முகத் தேர்வில் மிக முக்கியமான கட்டம் டெலிபோனிக் இன்டர்வியூ எனப்படும் தொலைபேசி உரையாடல். அதில் கலந்து கொள்ள சில சூட்சுமங்கள் இருக்கின்றன. அவற்றை எளிமையாய் விளக்குகிறது இந்த வீடியோ !

 

ஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து !

லண்டனிலிருந்து இயங்கி வரும் டி.பி.பி என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவரும் வெற்றிமணி பத்திரிகை இணைந்து “ஜல்லிக்கட்டு”க்கு ஆதரவாக ஒரு பாடலை வெளியிட்டிருக்கின்றனர்.

இசை : சஞ்சே சிவா
பாடல் : சேவியர்

வா

கைகள் ஒன்றாய் சேர்ந்திடலாம்
சீறி வரும் போதும்
சூழ்ச்சியை அழிப்போம்

வா
வீரம் கூடிடலாம்
மெல்ல மெல்ல கொல்லும்
வஞ்சனை அறுத்திடலாம்

வா
மண்ணோடு சேர்ந்திடவா
தமிழ் மண்ணை அள்ளித் தான்
நெற்றியிலே பூசிலாம் வா

வா
ஏறினை தழுவிட வா
மீறி மீறி நாளும்
சீறிட வா

ஜல்லிக்கட்டு
எங்கள் இன உரிமை என சொல்லு

ஜல்லிக்கட்டு
எங்கள் பிறப்புரிமை என நில்லு

ஜல்லிக்கட்டு
அது ஆயிரம் காலப் பழசென சொல்லு
*

பாலைக் குடித்த
தமிழ்ப் பாசத்தினைக் காட்டு

காளை அவிழ்த்து
தான் வீரத்தினைக் கூட்டு

சீறும் புயலென
துள்ளி வரும் திமிலினை பாத்து

சின்ன சிங்கமென
திமிறினைக் காட்டு

ஜல்லிக்கட்டுதான்
வீர விளையாட்டு
வெல்லும் உந்தன் மன வீரத்தினைக் காட்டு

தோள் தாழுமோ
வான் வீழுமோ
நாலாயிரம் ஆண்டைய‌
பண்பாடும் சாயுமோ ?

சங்கத்துத் தமிழனின்
அங்கத்தில் திரியுற‌
தில்லெனும் சொல்லே
ஜல்லிக்கட்டுதான்

வில்லென நிமிந்திடும்
அம்பென சீறிடும்
தமிழனின் திமிரது
ஜல்லிக்கட்டு தான்

ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
தள்ளிக்கிட்டு
ஜல்லிக்கட்ட‌ வா

மாட்டுகொம்பில்
சல்லி கட்டி
மல்லுக்கட்ட வா

வீரம் ஈரம்
நெஞ்சில் கொண்ட‌
செந்தமிழா வா

தூக்கம் விட்டு வா
காளை தோளை தட்ட வா !

அறத்தினை காத்தது
தமிழினம் தான்

திறத்தினை காட்டிய‌
தமிழினம் தான்

வெறுப்பினை நீக்கிய‌
தமிழினம் தான்

கண்டம் விட்டுத் தாண்டினாலும்
ஜல்லிக் கட்ட வா !

அலை கடலினை
குடிச்சிட நினைச்சா

பெரும் புயலினை
பிடிச்சிட நினைச்சா

அடை மழையினை
துடைச்சிட நினைச்சா
முடியுமா முடியுமா
உன்னால முடியுமா !!

எமதணுவிலும் கலந்திட்ட கலைடா
எவர் தடுப்பினும் மீறிடும் நிலைடா

ஜல்லிக்கட்டு தான்
களமாடிடும் கலைதான்
விழுப்புண்களும் விலை தான்
இது எங்களின் நிலை தான்

Awesome Chennai Flood Song by SPB, Chitra , Bombay Jaysree & many others.

An Excellent Song By S. P. Balasubramanyam, K.S. Chitra , Bombay Jayashri , Tippu , Harini , Sunitha Sarathy , N.S.K. Ramya , Timmy Madhukar , Pooja , Aalap Raju , Stephen J Renswick & Beryl Natasha

 

Lead Music By : Augustin Ponseelan.

Chennai Flood

 

மழையே இன்னும் ஈரம் போதலையோ
கண்ணீரை வாங்கிப் போனாயோ

மழையே உந்தன் கோபம் தீரலையோ
தண்ணீரால் யுத்தம் செய்தாயோ

தீவிரவாதக் கூட்டம் போல்
ஊரை சுற்றி வளைத்தாயே

ஆதரவில்லா எம்மவரை
நீருக்குள்ளே புதைத்தாயே

அழவோ தொழவோ விழியில் நீரில்லையே

*

கனவே நீயும் கலைந்தே போனாயோ
தண்ணீரில் கரைந்தே போனாயோ

கூரை கூட நீரைத் தீண்டியதோ
பசியோடு ஜீவன் வாடியதோ

இருளான நேரமிது
ஆயிரம் நேசம் நீள்கிறது

தவியாய் தவிக்கிற இதயத்தில்
வேற்றுமை இன்றி வாழ்கிறது

நிஜமோ கனவோ மனமே கேட்கின்றதே

*
மனதில் இரக்கம் பிறந்து விட்டால்
உதவும் கரங்கள் முளைத்து விடும்
கரங்கள் ஒன்றாய் இணைந்து விட்டால்
இரவில் கூட விடியல் வரும்
மழையும் ஓர் நாள் ஓய்ந்து விடும்
வெள்ளம் விரைவாய் வடிந்து விடும்
கண்ணீர் துடைக்கும் கரமிருந்தால்
தண்ணீர்த் துயரம் முடிந்து விடும்
மறைந்தே கிடந்த மனிதத்தை
மீண்டும் திறந்தது மழை தானோ
தொலைந்தே கிடந்த நேசத்தை
தேடித் தந்ததும் மழை தானோ

*

எங்கள் உயிரே சென்னை
எங்கள் உறவே சென்னை
எங்கள் உணர்வே சென்னை
நீ எழுந்திடு

எங்கள் உயிரே சென்னை
எங்கள் உறவே சென்னை
எங்கள் உணர்வே சென்னை
தடை தாண்டிடு

Lyric : Xavier

 

 

ஆண்பாவம் பொசொல்லாதது ! (ஆண்கள் ஸ்பெஷல்)

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது. பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை.

பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக் குலுங்குகையில் மகிழ்கின்றனர்.

ஆண்களை வேர்கள் என்று சொல்ல வேண்டும். அவை பூமிக்குள் மறைந்திருக்கும். எப்போதும் வெளியே வந்து, ‘நான் தான் வேர்’ என அது விளம்பரப் படுத்துவதில்லை. ஆனால் அந்த குடும்பம் எனும் மரம் சாய்ந்து விடாதபடி எப்போதும் பூமியை இறுகப் பற்றிக் கொண்டே இருக்கும். பூக்களின் வசீகரம் குறைந்தால் உடனடியாக நீரை உறிஞ்சி கிளைகளுக்கு அனுப்பி வைக்கும்.

கிளைகள் பூக்கிரீடம் சூட்டிக்கொள்ளும் போது வேர்களில் விழா நடக்கும். ஆனால் அந்த விழாவை யாரும் காண்பதில்லை. அது ஆழ்கடலில் குதித்து விளையாடும் ஒரு மீனைப் போல வெளிப்பார்வைக்கு மறைவாகவே இருக்கிறது.

கிளைகளின் வசீகரமும், இலைகளின் வசீகரமும் வேர்களைப் பற்றிய நினைவுகளையே மறக்கடிக்கச் செய்து விடுகின்றன. அதற்காக வேர்கள் கவலைப்படுவதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என அமைதியாய் இருக்கின்றன.

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

ஒரு சுவாரஸ்யமான‌ கதை உண்டு. ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.

கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.

“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”

“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”

“அப்போ பெரிய விஷயங்கள் ?”

“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ?  இந்த மாதிரி ! ”

அதாவது குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். காரணம் வேறொன்றுமில்லை குடும்பம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பது தான்.

அதனால் தான் சீரியல் பார்த்து ரொம்பவே துயரத்தில் இருக்கும் பெண்களிடம் தங்களுடைய பிரச்சினைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அதற்காக, “எதுவும் பேசமாட்டாரு” எனும் பட்டத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.

ஆண்கள் பேசாமலிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், “பேசப் போய் வீணா எதுக்கு பிரச்சினை” என்பது தான். பெண்களால் பேசாமலிருக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் பேசுவதற்காகப் படைக்கப் பட்டவர்கள்.அவர்களால் பேசாமல் இருக்க முடிவதில்லை. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் ஏவாளைப் படைக்கும் முன் ஆதாமைப் படைத்து வைத்தாரோ கடவுள் எனும் சந்தேகம் எனக்கு உண்டு.

பெண்கள் உணர்ச்சிகளை கொட்டோ கொட்டெனக் கொட்டுவார்கள். அதைக் காயப்படுத்தாமலும், ஈரப்படுத்தாமலும் காதில் போட்டுக்கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கு உண்டு. திடீரென “நீங்க என்ன சொல்றீங்க ?” என மனைவி கேட்டால் கணவனுக்கு இரண்டு பதட்டங்கள் வரும். ஒன்று, “நான் என்ன சொன்னா பிரச்சினை இல்லாமல் இருக்கும்”. இரண்டாவது, “இதுவரை மனைவி என்ன தான் பேசிட்டிருந்தா ?”. மனைவியர் அந்த கேள்வியைக் கேட்காமல் இருப்பது என்பது என்ன ஒரு பாக்கியம் என்பது கணவர்களுக்கு மட்டுமே தெரியும் !!!.

மனைவியின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். உடன்பாடு இருந்தால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். மறுபடி வாசிக்க வேண்டாம். சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். “வாயை மூடிட்டு பேசறதைக் கேளு” எனும் ஒரு வரி தான் பெரும்பாலும் ஆண்களுக்கான உரையாடலின் பங்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் மறதி ! . மறதி என்பது ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம். பெண்களின் அதீத ஞாபகசக்தி ஆண்களுக்கு இறைவன் கொடுத்த சாபம். எல்லாவற்றுக்கும் ஒரு சமநிலை வைப்பவர் இறைவன் என்பதன் இன்னொரு வெளிப்பாடு இது. கல்யாணம் ஆன புதுசுல நீங்கள் சொன்னது முதல், நேற்று நீங்கள் வாங்க மறந்த விஷயங்கள் வரை மனைவியின் நினைவுப் பேழையில் இருக்கும். மறதிக்கு மனைவி தரும் பெயர், “உங்களுக்கு அக்கறையில்லை !!!”. அப்படி மனைவி திட்டியதையே அரைமணி நேரத்தில் ஆண்கள் மறந்துவிடுவது தான் வரத்தின் அழகு.

வாரம் ஆறு நாட்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஏழாவது நாள் மாலையில் அரைமணி நேரம் வெளியே கிளம்பும் போது பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்கும், “எப்பவும் பிரண்ட்ஸ் கூட சுத்தினா போதும்… நாளைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு.. வீட்ல அவ்ளோ வேலை இருக்கு…!!!”. அந்த நேரத்தில் உள்ளுக்குள் எழுகின்ற எரிமலைக் குழம்பை, ஆலகால விஷத்தைப் போல தொண்டைக்குழியில் தேக்கி, “ஒன் அவர்ல வந்திடுவேன்” என சிரித்துக் கொண்டே சொல்லும் கலை அவ்ளோ ஈசியா என்ன ?

தான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ஒரு நன்றி, ஒரு பாராட்டு வேண்டுமென எதிர்பார்ப்பவர் மனைவி என்பது கணவர்களுக்குத் தெரியும். மறக்காமல் அதைச் செய்து விடுவார்கள். ஆனால் கணவன் செய்யும் செயல்களெல்லாம் ‘அது அவரோட கடமை’ ரேஞ்சுக்குத் தான் பெரும்பாலும் மனைவியரால் எடுத்துக் கொள்ளப்படும். “மனைவி திட்டாம இருந்தா, பாராட்டினதுக்கு சமம்பா” என்பதே ஆண்களின் ஆழ்மன சிந்தனை.

“இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் குரல் கேட்காத வீடுகள் உண்டா ? மனைவியை திருப்திப்படுத்த அடுத்த முறை ஏதாவது தாமாகவே செய்தால், “ஏன் இதையெல்லாம் செஞ்சிட்டு திரியறீங்க?” எனும் பதில் வரும். அமைதியாய் ,”அப்போ என்ன செய்யணும்” என்று கேட்டால் “இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் பதில் வரும். உலகம் மட்டுமல்ல உருண்டை எனும் அறிவியல் உண்மை உணர்ந்த களைப்பில் ஆண்கள் சிரிக்கும் சிரிப்பு அவர்களுக்கே புரியாதது.

“மன்னிச்சிடும்மா” எனும் ஆண்களின் வார்த்தையில் “ஆள விடு சாமி… ” எனும் பொருள் உண்டு. அந்தப் பொருள் வெளியே தெரியாத அளவுக்கு பேசும் வலிமையில்லாத கணவர்கள் வாட்ஸ்ஸப் பயன்படுத்துவதே நல்லது. நடிப்பை விட ஐகான் ஈசி !! “ஆமா செய்றதையெல்லாம் செஞ்சுட்டு.. மன்னிப்பு வேற” என இரட்டையாய் எகிறும் மனைவியரை சமாளிப்பது கலிங்கப்போரை விடக் கடினமானது.

என்ன பரிசு கிடைத்தாலும், “வாவ்.. சூப்பர்” என்பது கணவர்களின் வழக்கம். மனைவியோ “சேலை..நல்லா ‘தான்’ இருக்கு, பட் பார்டர் கொஞ்சம் சரியில்லை.. எவ்ளோ ஆச்சு… மாத்த முடியுமா ?” என பல கேள்விகளுக்கு நடுவே ஏண்டா கிஃப்ட் வாங்கினோம் என கலங்கும் கணவர்கள் அப்பாவிகளா இல்லையா ?

வெளியே போக தயாராகி ஒருமணி நேரம் காத்திருப்பார் கணவன். மேக்கப் முடித்த மனைவி சொல்வார், “சீக்கிரம் வாங்க, காரை வெளியே எடுத்திருக்கலாம்ல, ஷூ போடுங்க, கார் சாவி எங்கே? எல்லா இடத்துக்கும் லேட்டாவே போக வேண்டியது”. “இதப்பார்ரா…” என கவுண்டமணி கணக்காய் மனசுக்குள் ஒலிக்கும் குரலை வெளிக்காட்ட முடியுமா என்ன ?

“இதெல்லாம் என்கிட்டே சொல்லவேயில்லை” எனும் மிரட்டல் கேள்வி தவறாமல் வரும் ஆண்கள் எதையாவது தெரியாத்தனமா மறந்து தொலைத்தால். அதே விஷயத்தை மனைவி சொல்லாமல் இருந்தால், “ஆமா.. நீங்க எப்போ வீட்டுக்கு வரீங்க, எங்கே பேசறீங்க… இதையெல்லாம் சொல்ல ?”எனும் பதில் தானே வழக்கம் !

இப்படியெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தாலும், இணைந்தே வாழ்வதில் தான் குடும்ப வாழ்க்கை அர்த்தமடைகிறது. ஆண் எனும் பாத்திரத்தில் ஊற்றி நிரப்பும் பானமாக பெண் இருப்பதும், பெண் எனும் பாத்திரத்தில் நிரம்பித் தளும்பும் பானமாக ஆண் இருப்பதுமே வாழ்வின் அழகு.

ஒருவருடைய தவறை அடுத்தவர் எளிதாக எடுத்துக் கொள்வதும், வெற்றிகளை இணைந்தே ரசிப்பதும், ரசனைகளை மதிப்பதும், தனிப்பட்ட நேரங்களை ஒதுக்குவதும், விவாதங்களில் தோற்பதை வெற்றியாய் நினைப்பதும் குடும்ப வாழ்க்கையின் தேவைகள்.

ஒரு குழந்தை சமூகத்தில் சரியான இடத்தை அடைய ஒரு தந்தையின் அருகாமையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள். தாயின் அன்பை விட தந்தையின் அன்பு இதில் அதிக முக்கியம் என்கின்றன சில ஆய்வுகள். கணவன் மனைவி உறவு இறுக்கமாய் இருந்தால் தான்,  தாய் தந்தை பொறுப்புகளும் செவ்வனே நடக்கும்.

ஆண்கள் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்று உளவியல் சொல்வதுண்டு. உண்மையில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் எதிர்பார்ப்பதும் அன்பு மட்டுமே. அன்பு அடுத்தவரை மரியாதை குறைவாய் நடத்தாது என்பது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் அன்பும் பகிர்தலும் தொடர்ந்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அங்கே ஏதேனும் இடைவெளி விழும்போது தான் வேறு ஏதேனும் ஒரு உறவு வந்து நுழைந்து விடுகிறது. அது குடும்ப வாழ்க்கைக்கு கண்ணிவெடியாய் மாறிவிடுகிறது.

பெண்பாவம் பொல்லாததாய் இருக்கலாம்

ஆண்பாவம் சொல்லாததாய் இருக்கலாம் ‍

ஆனால் இதயத்தில்

அன்பு இல்லாததாய் மட்டும் இருக்க வேண்டாம்.

 

வாழ்த்துகள்.

நினைவில் நிற்கும் கலாம் : A Christian Article

2003ம் ஆண்டு, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்னுடைய முழு கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆண்டைய “உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை ஆண்டு மலரில்” எனது “வழியோரம் நதியூறும்” எனும் கவிதையையும் பிரசுரித்திருந்தது. அப்போது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த காலம்.

அறக்கட்டளையின் தலைவர் ராம்மோகன் ஆண்டுவிழா மலர் ஒன்றை அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பினார். சிறிது நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் அப்துல் கலாம் அவரிடமிருந்து வந்தது.

“வழியோரம் நதியூறும்” கவிதையைப் படித்தேன். சேவியர் சிறப்பாக எழுதியிருந்தார். கவிஞருக்குப் பாராட்டுகள். என அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். நமது கவிதை ஒன்றை ஜனாதிபதி பாராட்டினார் எனும் மகிழ்ச்சியை விட, ஒரு ஜனாதிபதி ஒரு சாதாரண ஆண்டு விழா மலரைக் கூட படிக்கிறார். அதற்குக் கூட பதில் அளிக்கிறார் என்பது என்னை மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடையச் செய்தது.

ஏழை சொல் அம்ப‌ல‌ம் ஏறாது என்று சொல்வார்க‌ள். ஏழையாய்ப் பிற‌ந்த‌ அப்துல் க‌லாமின் சொல் விண்வெளியையே எட்டிப் பார்த்த‌து. இது இளைய‌ ச‌மூக‌த்தின‌ருக்கு ஒரு பாட‌ம். அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள் ம‌றைந்த‌ போது ஒரு விஷ‌ய‌ம் மிக‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து. அவ‌ர் விண்வெளியில் சாதித்த‌தோ, அணுவிய‌லில் சாதித்த‌தோ, ப‌த‌வியில் சாதித்த‌தோ எதுவுமே முன்னிலைப் ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. மூன்றே மூன்று விஷ‌ய‌ங்க‌ள் தான் முன்னால் நின்ற‌ன‌.

ஒன்று. அவ‌ருடைய எளிமை,

இரண்டு அவருடைய நேர்மை,

மூன்று மாண‌வ‌ ச‌மூக‌த்தின் மேல் அவ‌ர் கொண்டிருந்த‌ அக்க‌றை.

சாதார‌ வார்ட் க‌வுன்சில‌ர்க‌ள் வீதி வீதியாக‌ வாங்கிக் குவித்து, ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ளில் அராஜ‌க‌ம் செய்யும் கால‌ம் இது. நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வே இருந்த‌ அப்துல் காலாம் க‌டைசி வ‌ரை த‌ன‌து எளிய‌ வீட்டின் ஏழ்மையைக் கூட‌ மாற்ற‌ நினைக்க‌வில்லை என்ப‌து ந‌ம்ப‌ முடியாத‌ விய‌ப்பு.

ஒரு எம்.எல்.ஏ ப‌த‌விக்கு வ‌ந்தால் அவ‌ருடைய‌ அத்த‌னை சொந்த‌க்கார‌ர்க‌ளும் மாளிகை க‌ட்டி, தொழில் தொட‌ங்கி, வ‌ங்கியில் க‌ணிச‌மான‌ ப‌ண‌த்தையும் சேர்ப்பார்க‌ள். ஆனால் அப்துல் க‌லாமின் சொந்த‌க் கார‌ர்க‌ள் எல்லோருமே இன்னும் அதே ஏழ்மை ம‌ற்றும் எளிமை நிலையிலேயே இருக்கின்ற‌னர். இது நில‌வுக்கு ராக்கெட் விட்ட‌தை விட‌ப் புதுமையாய் இருக்கிற‌து.

அவ‌ரைப் ப‌ற்றி வ‌ருகின்ற‌ க‌தைக‌ளெல்லாம் சிலிர்ப்பூட்டுகின்ற‌ன‌. ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ள் அவ‌ரை அர‌வ‌ணைப்ப‌த‌ற்கு அவ‌ருடைய‌ எளிமையும், நேர்மையும், இனிமையான‌ குண‌மும், ச‌மூக‌ அக்க‌றையும் தான் கார‌ண‌ம். சமீப காலத்தில் இந்திய‌ தேசம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்டவர்கள் இர‌ண்டு பேர். ஒருவர் அன்னைத் தெரசா இன்னொருவர் அப்துல் கலாம்.

அன்னை தெர‌சா, இயேசுவே என‌து ம‌ண‌வாள‌ன் என‌ அறிக்கையிட்டு இயேசுவின் மீதான‌ அன்பிலும், விசுவாச‌த்திலும் நிலைத்திருந்த‌வ‌ர். அப்துல் க‌லாம் இஸ்லாமிய‌ர். இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கையில் நிலைத்திருந்த‌வ‌ர். ஆனால் இருவ‌ரையும் உல‌க‌ம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்ட‌து. கார‌ண‌ம் இருவ‌ரிட‌மும் இருந்த‌ இர‌ண்டு குண‌ங்க‌ள். ஒன்று எளிமை, இன்னொன்று இர‌க்க‌ம்.

விழாவுக்கு ஒரு ஆடை வாங்கி, நாளுக்கு ஒரு வேஷ‌ம் க‌ட்டும் ப‌ழ‌க்க‌ம் க‌லாமிட‌ம் இருக்க‌வில்லை. த‌ன‌து ஆடையைத் தைக்க தானே ஒரு சின்ன‌க் க‌டையில் கொண்டு போய் கொடுப்பாராம். தைக்க‌க் கொடுத்து விட்டு, “இர‌ண்டு தைய‌ல் போடுப்பா. அப்போ தான் சீக்கிர‌ம் பிரியாது” என்பாராம். இப்ப‌டி எளிமையாய் ஒரு த‌லைவ‌ர் இருக்க‌ முடியுமா ?

உல‌கின் அத்த‌னை மேடைக‌ளிலும் பேசிய‌வ‌ர், அத்த‌னை த‌லைவ‌ர்க‌ளுட‌னும் உரையாடிய‌வ‌ர், விஞ்ஞான‌த்தில் உச்ச‌த்தில் உலாவிய‌வ‌ர். ஆனால் க‌டைசிவ‌ரை அவ‌ர் எளிமையின் தெருக்களில் தான் உலவினார். அது தான் அவ‌ரை ஒரு ரோல் மாட‌லாக‌ உருமாற்றிய‌து.

அவ‌ருடைய‌ குணாதிச‌ய‌த்தைக் க‌ட்டியெழுப்பிய‌தில் பெரும்ப‌ங்கு அவ‌ருடைய‌ பெற்றோரைச் சாரும். யாரிட‌மும் அன்ப‌ளிப்புக‌ள் வாங்க‌க் கூடாது, எல்லோரையும் ம‌திக்க‌ வேண்டும், ச‌க‌ம‌னித‌னை நேசிக்க‌ வேண்டும், எளிமையாக‌ இருக்க‌ வேண்டும் எனும் அத்த‌னை உய‌ரிய‌ குண‌ங்க‌ளும் அவ‌ருக்கு அவ‌ருடைய‌ பெற்றோரிட‌மிருந்தே கிடைத்த‌ன‌.

“அவனவன் தன் தன் தாய்க்கும், த‌க‌ப்ப‌னுக்கும் ப‌ய‌ந்திருக்க‌வும்..” என‌ க‌ட‌வுள் லேவிய‌ராக‌ம‌த்தில் கூறுகிறார். தாய் த‌க‌ப்ப‌னின் ஆலோச‌னைக‌ளை அச‌ட்டை ப‌ண்ணாதிருக்க‌ வேண்டும் என‌ விவிலிய‌ம் வ‌லியுறுத்துகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் கெட்ட‌ க‌னியைத் த‌ருவ‌தில்லை. குழந்தைகளின் குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு அதிகம்.

“இயேசு த‌ன‌து சீட‌ர்க‌ளின் பாத‌ங்க‌ளைக் க‌ழுவி அடிமையின் ரூப‌னானார்”. அவ‌ர் ப‌ணிவைச் செய‌லில் காட்டினார். ஒரு ம‌னித‌ர் வாழ்க்கையில் உய‌ர‌ உய‌ர‌ ப‌ணிவில் மேலும் மேலும் செழிக்க‌ வேண்டும். ம‌னித‌ர்க‌ளில் உச்ச‌மாய் இருந்தார் மனித வடிவமாய் வந்த இயேசு. என‌வே அடிமையின் கோல‌மாய் த‌ன்னை தாழ்த்தினார்.

க‌லாம் கிறிஸ்த‌வ‌ர‌ல்ல‌. ஆனால் இயேசுவின் ப‌ணிவை அப்ப‌டியே செய‌ல்ப‌டுத்தினார். சிற‌ப்பு வ‌ர‌வேற்பு வேண்டவே வேண்டாம் என்பார், சிற‌ப்புக் க‌வ‌ன‌த்தைத் த‌விர்ப்பார். பாராட்டுக்குக் கூச்ச‌ப்ப‌டுவார். காவ‌லாளி ஆனாலும் ச‌ரி  ஒபாமா ஆனாலும் ச‌ரி ப‌ணிவில் வேறுபாடு காட்டுவ‌தில்லை. கார‌ண‌ம் அவ‌ர‌து ப‌ணிவு ஆளுக்கும், சூழ‌லுக்கும் த‌க்க‌ப‌டி மாறுவ‌தில்லை. அவருடைய இயல்பில் கலந்திருந்தது. நில‌த்தை மாற்றி ந‌ட்டாலும் மாம‌ர‌த்தில் ப‌லாப்ப‌ழ‌ம் காய்க்குமா என்ன‌ ?

தனக்கு விதிக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்பவர்கள் தான் இறைவனின் சித்தப்படி வாழ்பவர்கள். இயேசு முப்பது ஆண்டுகள் மரங்களோடு வாழ்ந்தார். தச்சுத் தொழிலை அவர் முழு ஈடுபாட்டுடன் செய்தார். கலாம், ஏழ்மையான சிறு வயதில் நியூஸ் பேப்பர் விற்றும், சின்னச் சின்ன வேலைகள் செய்தும் தான் வாழ்க்கையை ஓட்டினார். எந்தக் கணத்திலும் அவர் தனக்கு இறைவன் அளித்த எல்லை போதவில்லை என முணுமுணுத்ததேயில்லை.

எந்தக் காலகட்டத்திலும் நேர்மையாய் இருப்பதே இறைவன் நமக்கிட்ட கட்டளை. எந்த ஒரு செயலிலும் நேர்மையைப் பார்த்துப் பார்த்துச் செய்பவர்களே கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்பவர்கள். “சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பவர்கள் தான் பெரியவற்றுக்கு அதிபதி ஆக முடியும்” என இயேசுவே சொல்கிறார். கலாம் தனது வாழ்க்கையில் அதைச் செய்து காட்டினார்.

அவ‌ருடைய‌ கையெழுத்துப் போட்ட செக்கை பிரேம் ப‌ண்ணி வைக்க‌ ஆசைப்ப‌ட்ட‌ க‌டைக்கார‌ர்க‌ளிட‌ம் ‘செக்கை போட்டு ப‌ண‌த்தை எடுங்க‌ள். உங்க‌ள் பொருள் இல‌வ‌ச‌மாய் என்னிட‌ம் இருக்க‌வேண்டாம். ப‌ண‌த்தைப் போடாவிட்டால் பொருளைத் திருப்பி அனுப்புவேன். பிளீஸ்” என‌ அடுத்த‌வ‌ர்க‌ளின் எந்த‌ வித‌ பொருளுக்கும், ச‌லுகைக்கும் ஆசைப்ப‌டாத‌ ம‌னித‌ர்க‌ளை நாம் க‌டைசியாய் எப்போது ச‌ந்தித்தோம் ?

சுய‌ந‌ல‌ம் இல்லாத‌ ஒரு வாழ்க்கையை க‌லாம் வாழ்ந்தார். அவ‌ருடைய‌ வாழ்க்கை த‌ன‌க்காக‌வோ, த‌ன‌து உற‌வின‌ர்க‌ளுக்காக‌வோ, ந‌ண்ப‌ர்க‌ளுக்காக‌வோ சொத்தை சேமிக்க‌ வேண்டும் என்று இருக்க‌வில்லை. த‌ன‌து வ‌ருமான‌த்தின் பெரும்ப‌குதியை பிற‌ருக்கு வ‌ழ‌ங்குவ‌தை அவ‌ர் வ‌ழக்கமாக வைத்திருந்தார்.

ந‌ம‌க்கென‌ வாழ்ந்து ந‌ம‌க்கென‌ ம‌ரிக்கும் வாழ்க்கை கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைய‌ல்ல‌. க‌லாம் த‌ன‌க்கென‌ ம‌ட்டுமே வாழ‌வில்லை. அவர் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ளை நேசித்தார். அதுதான் க‌லாமை அடையாள‌ப்ப‌டுத்திய‌து.

க‌லாமின் வாழ்க்கை ந‌ம‌க்கு எளிமையான‌ வாழ்க்கையையும், ப‌ணிவான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், நேர்மையையும், பிற‌ர் பொருளுக்கு ஆசைப்ப‌டாத‌ த‌ன்மையையும், சுய‌ந‌ல‌ம‌ற்ற‌ ம‌ன‌தையும் க‌ற்றுத் த‌ர‌ட்டும். க‌லாமைப் போன்ற‌ த‌லைவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு ஊக்க‌மூட்டும் முன்னுதார‌ண‌ங்க‌ள்.

அதே நேர‌த்தில், இறைம‌க‌ன் இயேசு ம‌ட்டுமே ந‌ம‌க்கு இருக்க‌ வேண்டிய‌ ஒரே வ‌ழிகாட்டி. அவ‌ருடைய‌ வார்த்தைக‌ளும், வாழ்க்கையும் ம‌ட்டுமே நாம் பின்ப‌ற்ற‌ வேண்டிய‌ அடிச்சுவ‌டுக‌ள். க‌லாமின் வாழ்க்கையிலிருந்து ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை எடுத்துக் கொள்வோம். எப்போதும் இறைம‌க‌ன் இயேசுவோடு ம‌ட்டுமே ந‌ம‌து செய‌ல்க‌ளை ஒப்பீடு செய்வோம்.

அனைவ‌ருக்கும் வாழ்த்துக‌ள்

 

அன்புட‌ன்

சேவிய‌ர்

வயிறை வணங்காதீர் : Christian Article

“எல்லாம் நாலு சாண் வயிறுக்காகத் தான்” என்பதையோ. “வயித்துப் பொழப்பைப் பாக்கணும்ல” எனும் வார்த்தையையோ கேட்காமல் நம்மால் கடந்து போக முடியாது. உணவு நாம் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று.

அதே போல, நமக்கு வருகின்ற நோய்களில் பெரும்பாலானவை நமது உணவுப் பழக்கத்திலிருந்தே வருகிறது என்கிறது மருத்துவம். சத்தில்லாத உணவைச் சாப்பிடுவது, அதிக கொழுப்புள்ள உணவுகளைத் திணிப்பது, அளவுக்கு அதிகமான‌ உணவுகளைத் திணிப்பது என நமது உணவுப் பழக்கம் திசை மாறிவிட்டது. அது நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது.

தேவை எனும் ஓட்டம், ஆசை எனும் திசையில் பயணிக்கும் போது தான் பிரச்சினைகள் துவங்குகின்றன. “சர்ச்ல ஆண்டு விழாவுக்கு மட்டன் பிரியாணி போடணுமா, மீன் குழம்புச் சாப்பாடு போடணுமா ?” எனும் விவாதங்கள் சண்டைகளாகிப் போன அவலங்களும் உண்டு. முதன்மையான தேடல் எது என்பதில் தெளிவின்மையே இத்தகைய சண்டைகளின் காரணம்.

உணவுப் பிரச்சினை சின்ன விஷயம் அல்ல. அது பல சாம்ராஜ்யங்களைச் சரிய வைத்திருக்கிறது. பல ஆட்சிகளை மலர வைத்திருக்கிறது. ஒருபக்கம் ஒபிசிடி எனப்படும் அதீத எடை நோய்க்கு குழந்தைகள் பலியாகிறார்கள். இன்னொரு பக்கம் ஆண்டுக்கு சுமார் முப்பத்தோரு இலட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.

இத்தனையும் ஏன் ? உலகில் பாவம் நுழையக் காரணமானதே ஏவாளுக்கு ஒரு பழத்தைச் சாப்பிடவேண்டும் என தோன்றிய ஆசை தானே ! சுவைக்கும் ஆசையைத் தடுக்க முடியாத ஏவாள் பாவத்தின் முதல் சுவடை எடுத்து வைத்தாள் !

இயேசு உணவை வெறுக்கவில்லை. உண்மையில் உணவில் இருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் முழுமையாக விலக்கியது அவர் தான். “மனிதனின் உடலுக்குள் செல்வது அவனைத் தீட்டுப்படுத்தாது” எனும் வ‌ச‌ன‌த்தின் வ‌ழியாக‌ விரும்புவ‌தைச் சாப்பிட‌லாம் எனும் அங்கீகார‌த்தை அவ‌ர் ந‌ம‌க்குக் கொடுத்திருக்கிறார்.

நன்றாக உண்டு குடித்த அவரை மக்கள் போஜனப் பிரியன் என்றார்கள். “மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” ( லூக்கா 7 :34 ) என்றார் இயேசு.

எதை இயேசுவுக்காக உங்களால் வெறுக்க முடியுமோ, அதை நேசியுங்கள் என்பது கடவுளின் போதனைகளின் உள்ளார்ந்த அர்த்தம். ஆபிரகாம் ஈசாக்கை நேசித்தார். எல்லாவற்றையும் விட அதிகமாய் மகனை நேசித்தார். ஒரு கட்டத்தில் ஈசாக் ஆபிரகாமின் கடவுள் போல மாறிப் போனான். கடவுள் ஆபிரகாமை அழைத்து, ‘மகனைப் பலியிடு’ என்றார். அந்தக் கணத்தில் ஆபிரகாம் விழித்தெழுந்தார். கடவுளுக்காக தன் மகனை இழக்கத் தீர்மானித்தார். அது தான் அவரை விசுவாசத்தின் தந்தையாய் மாற்றியது.

இயேசு உண்டார் குடித்தார். ஆனால் உணவை முழுமையாய் வெறுத்து நாற்பது நாட்கள் விரதமும் இருந்தார். அவருக்கு உணவு என்பது தேவையைச் சந்திக்கும் விஷயமாக இருந்ததே தவிர, ஆசையை பூர்த்தி செய்யும் ரசனையாக இருக்கவில்லை. நாவின் ருசிக்காக ஓடி ஓடி சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றி நீதிமொழிகள் 23:21 இப்படிச் சொல்கிறது.

“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்”. உணவு இல்லாதவனை ஏழை என்போம். உண‌வு ஒருவ‌னை ஏழையாக்கும் என்ப‌தை பைபிள் தான் ந‌ம‌க்குச் சொல்கிற‌து.

உண‌வின் மீது அதீத‌ நாட்ட‌ம் ஏற்ப‌டும் போது அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கிற‌து. அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கும் போது சிந்த‌னை முழுதும் அதுவே நிர‌ம்புகிற‌து. சிந்த‌னை முழுதும் அது நிர‌ம்பும் போது அவ‌னுக்கு அது க‌ட‌வுளாகிப் போகிற‌து.

“அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே” ( பிலிப்பியர் 3 : 19 ) என ப‌வுல் அவ‌ர்க‌ளைத் தான் சொல்கிறார். உபவாசம் என்பது பலருக்கு வனவாசம் போல கசப்பதற்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததே !

க‌ட‌வுளைத் த‌விர‌ எதை முத‌ன்மைப் ப‌டுத்தினாலும் அது ‘சிலை வ‌ழிபாடாகிற‌து’. சில‌ருக்கு ப‌ண‌ம். சில‌ருக்கு புக‌ழ். சில‌ருக்கு உண‌வு ! என‌ சிலை வ‌ழிபாடு வேறுப‌டுகிற‌து. க‌ற்சிலையை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ள் நாம். ஆனால் வேறு எந்தெந்த‌ சிலைக‌ளை வ‌ழிப‌டுகிறோம் என்ப‌தை உண‌ர வேண்டும்.

“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால் எதற்கும் நான் அடிமையாகி விட மாட்டேன்” என்ப‌தே உண‌வைக் குறித்த‌ ந‌ம‌து பார்வையாய் இருக்க‌ வேண்டும் என‌ ப‌வுல் அறிவுறுத்துகிறார்.

ம‌னித‌ன் அப்ப‌த்தினால் ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌வுளின் வாயினின்று வ‌ரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான். என்கிறார் இயேசு. இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு உண‌வாக‌ வேண்டும். அதுவே மிக‌வும் முக்கிய‌மான‌து ! “ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும்” என்பதே இயேசுவின் வருகையின் நோக்கம் ( உரோ 8:4 ) என்கிறார் பவுல்.

உணவு என்பது பாவத்துக்குள் இட்டுச் செல்லாது என பலரும் தவறாக நினைத்து விடுகிறோம். லோத்தின் காலத்தில் இருந்த தீமையானது பெருந்தீனி என்கிறது பைபிள் ! ஈசா தனது தலைமகன் உரிமையை இழந்து வாழ்க்கையில் வீழ்ச்சியடையக் காரணம் உணவு ஆசை என்கிறது பைபிள். ஏலியின் மகன்களும், இஸ்ரயேல் மக்களும் உணவு ஆசையினால் வீழ்ச்சியடைவதை பைபிள் பதிவு செய்திருக்கிறது.

அர‌ச‌ன் உண்கின்ற‌ அட்ட‌காச‌மான‌ உண‌வை வேண்டாம் என‌ ம‌றுத்து எளிமையான‌ உண‌வை தேர்ந்தெடுத்த‌ தானியேலை க‌ட‌வுள் ஆசீர்வ‌தித்தார். க‌டைசிவ‌ரை அவ‌ரோடு இருந்தார்.

“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்கிறார் பவுல் ( 1 கொரிந்தியர் 6 : 19). எனவே இறைவனுக்கு மகிமையானதை  மட்டுமே உண்ணவும் வேண்டும்.

சுய கட்டுப்பாடு இதற்கு மிகவும் முக்கியம். சுய கட்டுப்பாடு என்பது நாம் முயற்சி செய்வதால் வருவதல்ல. தூய ஆவியானவர் நமது உள்ளத்துக்குள் வருவதே. “ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது” ( கலாத்தியர் 5 : 17 ). இதைப் புரிந்து கொள்வதில் தான் உணவின் மீதான வேட்கை குறைய முதல் தேவை !

இதைப் புரிந்து கொண்டதால் தான் பவுல், “பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” ( 1 கொரி 9 :27) என்கிறார். நற்செய்தி அறிவித்தலின் முக்கியத் தேவைகளில் ஒன்று உடலில் இச்சையான உணவு வேட்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

உணவை விட மேலாய் நாம் எதை ரசிக்க வேண்டும் ?

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (ச‌ங் 34 : 8) என்கிறது சங்கீதம். ந‌ம‌து சுவை ந‌ர‌ம்புக‌ள் நாவில் அல்ல‌, வாழ்க்கையில் இருக்க‌ வேண்டும். அத‌ற்கு நாம் இறைம‌க‌னைச் சுவைக்க‌ வேண்டும்.”

“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.” ( யோவான் 6 :35). என்றார் இயேசு. தினமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரை உண்பவர்களாக இருக்க வேண்டும்.

இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு பாலைப் போல‌ இருக்க‌ வேண்டும். “புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்” ( 1 பேதுரு 2: 2) எனும் வ‌ச‌ன‌த்துக்கு ஏற்ப‌ நாம் இறைவார்த்தையைப் ப‌ருகுப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும்.

ஆன்மீக‌ உண‌வையும், பான‌த்தையும் ப‌ருகும் போது உட‌லின் தேவைக‌ள் இர‌ண்டாம் ப‌ட்சாமாகிவிடும் என்ப‌தையே இயேசு வ‌லியுறுத்துகிறார். “எதை உண்போம், எதைக் குடிப்போம் எனும் க‌வ‌லை வேண்டாம்” என‌ இயேசு சொன்ன‌த‌ன் பொருள் இது தான்.

உணவின் மீதான வேட்கையைக் கூட குறைக்க முடியாவிடில், பாலியல் இச்சை, கோபம், பண ஆசை போன்ற வேட்கைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி ?

எனவே இந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் கொள்வோம்.

  1. சுவையான‌ உண‌வுக்காக‌த் தேடி ஓடும் ம‌ன‌நிலையை விட்டு வெளியே வ‌ருவோம். அது நோயையும், சோர்வையும் தான் த‌ரும். வார்த்தையாகிய‌ இறைவ‌னைத் தேடி ஓடும் ம‌ன‌நிலையை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.
  1. “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” என்றார் இயேசு (யோவான் 4:34). அதே திருவுள‌த்தை நிறைவேற்றுவ‌தே நம‌து உண‌வு எனும் சிந்த‌னையை ம‌ன‌தில் கொள்வோம்.
  1. உண‌வு என்ப‌து க‌ள‌ஞ்சிய‌த்தை இடித்துப் பெரிதாக்கி சேமிப்ப‌த‌ற்கான‌த‌ல்ல‌. வ‌றிய‌வ‌ர்க‌ளோடும், ஏழைக‌ளோடும் ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌து. ஏழை இலாச‌ரை உதாசீன‌ம் செய்யாம‌ல் ச‌மூக‌த்தின் ப‌சிக்கு உண‌வ‌ளிக்கும் ம‌னித‌ர்க‌ளாக வாழவேண்டும் எனும் ம‌னித‌ நேய‌த்தை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.

ப‌டைத்த‌வ‌ர் கொடுத்த‌தே உண‌வு, அதை ப‌டைத்த‌வ‌ருக்கு மேலாக‌ உய‌ர்த்தாதிருப்போம் !

 

 

சேவிய‌ர்

ஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special

ஒளி தோன்றுக (ஆதி 1 :3 ) என்பது தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் முதல் பேச்சு. ஆழத்தின் மீது பரவியிருந்த இருளை கடவுள் ஒளியின் துணையினால் விரட்டுகிறார். வெறுமையாய் கிடத்த பூமி இப்போது வெளிச்சத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது.

வரலாற்றில் இருள் என்பது தோல்வியின் அடையாளம். “வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்” என்றால், அந்த காலகட்டம் தோல்வியின் காலம் என்று பொருள். அந்தக் காலத்தில் வாழ்க்கை இனிமையாக இல்லை என்று பொருள். அந்தக் காலகட்டத்தில் பஞ்சமோ, பட்டினியோ தலைவிரித்து ஆடியிருக்கலாம் என்று பொருள்.

உலகத்தின் துவக்கம் முதல் இன்று வரை இருளுக்கும், வெளிச்சத்துக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.  சதுரங்க விளையாட்டின் இரு காய்கள் போல அவை எதிரும் புதிருமாய் மாறி மாறி வெட்டிக்கொண்டிருக்கின்றன.

நோய்களின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். வலிகளின் காலத்தை இருட்டின் காலம் என்கிறோம். சோதனைகளின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். சிலருடைய வாழ்க்கை முழுவதுமே இத்தகைய இருள் சூழ்ந்து நிற்பதாகச் சொல்வார்கள்.

தொட்டதெல்லாம் தோல்வி, எங்கும் வெற்றியில்லை. பட்ட காலிலே படும் என்பது போல, இருளைத் தாண்டினால் காரிருள் எனும் நிலமை பலருடைய வாழ்க்கையை ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் இருளோடு போராடிக்கொண்டே இருக்கிறார். இருளை விரட்ட பல்வேறு வழிகளை நாடுகிறார்கள்.

இருளை விலக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. ஒரு வெளிச்சத்தை ஏற்றுதல் ! ஒரு வெளிச்சப்புள்ளி இருளை விலக்கி வைக்கும் வலிமை கொண்டது. இருளை இறுக்கி அடைத்திருக்கும் ஒரு அறையில் ஒரு மின்விளக்கு எரியும் போது அந்த இருளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடுகிறது.

“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசாயா 9 : 2 )” எனும் இறைவாக்கு ஒளியின் நாயகனாம் இறைமகன் இயேசுவின் வெளிச்ச வரவை வார்த்தைகளால் குறிப்பிடுகிறது.

இயேசு எனும் ஒளி இருளை விலக்குவதற்காக வந்த ஒளி. பாவம் எனும் இருளையும், அதன் ஆட்சியையும் இயேசுவின் வருகை வெளிச்சம்போட்டுக் காட்டியது. அந்த இருளை சிலுவையில் வெற்றி கொண்டது இயேசு எனும் ஒளி.

இயேசுவின் வருகை இரண்டு நோக்கங்கள் கொண்டது. அந்த இரண்டையும் சரியாகப் புரிவதில் தான் கிறிஸ்மஸ் அர்த்தப்படும்.

ஒன்று, இயேசு ஒளியாக வந்து நமது பாவங்களுக்காக மரித்தார். அதன் மூலம் இருளில் இருக்கும் நமக்கு மீட்பின் ஒளியைக் காட்டினார்.

இரண்டாவது, இருளின் பாதையில் நடக்கும் நமக்காக பூமியில் வந்து முன்னுதாரணம் ஆனார். ஒளியின் வாழ்க்கையை எப்படி ஒரு மனிதன் வாழமுடியும் என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். இந்த இரண்டும் ஒன்றாய் பின்னிப் பிணைகையில் கிறிஸ்துவின் வரவின் முழுமை நமக்குப் புரிகிறது.

ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றை மட்டும் பற்றிக் கொள்ளும் போது , ஒருபக்கம் மட்டும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டைப் போல முழுமையடையாமல், முழு மதிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் போய்விடுகிறோம்.

ஒளிக்கு ஒரு வலிமை உண்டு. அது எத்தனை மென்மையாய் இருந்தாலும், கும்மிருட்டையும் விரட்டி விடும். இருளுக்கு ஒரு பலவீனம் உண்டு அது எவ்வளவு தான் அடத்தியாய் இருந்தாலும் ஒரு ஒளியை அணைத்து விடும் வலிமை இருளுக்கு எக்காலத்திலும் இருப்பதே இல்லை. இருள், தோல்வியின் அடையாளம். ஒளி, தோல்வியை மேற்கொள்வதன் அடையாளம்.

“அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;

இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவான் 1 :5 ) எனும் வார்த்தைகள் நமக்கு தெம்பூட்டுகின்றன. இருளை விலக்கத் தேவை நமக்கு ஒரு ஒளி மட்டுமே எனும் உண்மையே நமக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தரவல்லது.

மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகிறோம். துணிகர பாவங்களைச் செய்கிறோம். கோபத்தை , இச்சைகளை , எரிச்சலை , பொறமையை விட்டு  வெளியே வர முடியவில்லை. நோய், வறுமை எனும் உலகக் கவலைகளும் வாட்டுகின்றன. இருளிலேயே இருக்கிறோம்? என்ன வழி ? ஒவ்வொரு இருளுக்கும் ஒவ்வொரு ஒளியா ?

கோபத்துக்கு யோகா, இச்சைகளுக்கு மன கட்டுப்பாடு, எரிச்சல் பொறாமைக்கு பாசிடிவ் திங்கிங், பேய்களுக்கு பள்ளிவாசல் என வெளிச்சம் பல இடங்களில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் ஏராளம் உண்டு.

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8 :12 ) என்கிறார் இயேசு. ஒளி என்பது ஒன்றே ஒன்று தான். அது இறைமகன் இயேசு என்பதை இயேசு தனது வாயால் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறார்.

“என்னோட கஷ்டம் என்னன்னு எனக்கு தான் தெரியும்” என நாம் சொல்வதுண்டு. அதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் இயேசுவின் வருகை இருந்தது. “அந்த கஷ்டமான வாழ்க்கையை நானும் வாழ்கிறேன். ஆயினும் பாவத்தை மேற்கொள்ளும் வாழ்க்கையை வாழ்கிறேன்” என்று வாழ்ந்து காட்டினார்.

“சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்” ( எபிரேயர் 2 ; 14 ). இயேசுவின் வருகை மரணத்துக்கான முயற்சி மட்டுமல்ல, வாழ்வுக்கான பயிற்சியும் கூட. அவருடைய வாழ்க்கை நமக்கு அகராதியாய் மாறிவிட்டது. கடவுள் மனிதர் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டவே அவர் மனித உரு எடுத்தார் எனலாம்.

அலகையை அதாவது சாத்தானை இயேசு சிலுவையில் அழித்துவிட்டது தான், இயேசு எனும் ஒளியோடு இருக்கும் போது நம்மை விட்டு சாத்தான் விலகி ஓடக் காரணம்.

“கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்” (யாக்கோபு 14 :7 ) எனும் இறைவார்த்தை அதையே வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்மஸ் விழா ஒளியின் விழா. கிறிஸ்மஸ் விழாவை அதன் அர்த்தத்தோடு கொண்டாடுவோம்.

நமது வாழ்க்கையில் என்னென்ன இருள் இருக்கிறது என்பதை கண்டுகொள்வோம். அந்த இருளின் அறைகளில் ஒளியேற்ற இறைமகன் இயேசுவை இதயத்திற்குள் அழைப்போம். “கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்” (ஆதி 1 : 4 ) காரணம் இருளும் ஒளியும் ஒரே இடத்தில் வசிக்க முடியாது. பாவமும் பரிசுத்தமும் ஒரே இதயத்தில் வசிக்க முடியாது. இருள் நம் வாழ்வில் இருக்கிறது என்பதை அறிவதும், அந்த இருளை அகற்ற விரும்புவதும் முதல் தேவை.

ஒளியான வாழ்க்கை என்பது, “இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதாகும்”. ” நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” எனும் (2 கொரி 6 :14 ) வசனம் ஒளியான வாழ்க்கை என்பது நீதியான வாழ்க்கை என விளக்குகிறது. வாழ்க்கையில் நீதியை செயல்படுத்த முடிவெடுப்பது இரண்டாவது தேவை.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது ( எபே 5 : 8,9 )” எனும் வசனத்தின்படி வாழ்வது மூன்றாவது தேவை.

இந்த கிறிஸ்மஸ் காலம் நமது வாழ்க்கையிலிருக்கும் இருளை அகற்றும் காலமாய் மாறட்டும். அப்போது தான் நமது ஒளி மனிதர் மேல் ஒளிரும். இறைவனை இதயத்தில் ஏற்றி, செயல்களை செப்பனிடுவோம். கரப்பான்பூச்சியானது லைட்டைப் போட்டதும் ஓடி ஒளிகிறது. வெளிச்சம் அதற்கு எரிச்சல். அப்படியே தீயவர்களும் இருக்கிறார்கள். விட்டில் பூச்சியானது வெளிச்சத்தைக் கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்து அதனோடு உறவாடுகிறது. வெளிச்சம் அதன் பிரியம்.

” ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். (யோவான் 3 : 19 ). நமது வாழ்க்கை, வெளிச்சத்தைத் தேடும் விட்டில் பூச்சிகளின் வாழ்க்கையாய் இருக்கட்டும். இருட்டுக்குள் பதுங்கும் கரப்பான் பூச்சிகளாய் இருக்கவேண்டாம்.

ஒளி மீட்பின் அடையாளம்.

ஒளி தீர்ப்பின் அடையாளம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

*

நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம். மனதில் தளும்பும் ஆனந்தம், உதடுகளில் அமர்ந்திருக்கும் புன்னகை இவையே ஒருவன் வாழ்க்கையைக் குறித்த புரிதலோடு இருக்கிறான் என்பதன் அடையாளங்கள். –

ஹக் சிட்னி

முக்கியமற்றது எனும் நினைப்பில் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லக் கூடிய விஷயம் இந்த நகைச்சுவை உணர்வு. சில வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களை கிண்டலடிக்கக் கூட நாம் தயங்குவதில்லை. “எப்பப் பாரு ஏதாவது சொல்றது, சிரிக்கிறதுன்னே இருக்கான். லைஃப்ல உருப்படற வழியே இல்லை” என சகட்டு மேனிக்கு விமர்சனங்களை அள்ளி விடுபவர்களும் ஏராளம்.

ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஒரு விஷயம் கவனிச்சுக்கோங்க. நகைச்சுவை உணர்வு என்பது நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா என்பதை வைத்து கணக்கிடுவதல்ல ! ஒரு செயலில் இருக்கும், அல்லது ஒரு சொல்லில் இருக்கும் நகைச்சுவையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எல்லாரையும் சிரிக்க வைத்து விட்டு உள்ளுக்குள் நகைச்சுவை உணர்வே இல்லாமல் போனால் அது பிழைப்புக்காக குரங்காட்டி வித்தை செய்பவரைப் போலவோ, மேடையில் கோமாளி வேஷம் போடுபவரைப் போலவோ ஆகிப் போகும் !

நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப் படுத்துமளவுக்கு கிண்டல் செய்வது என்பது சிலருடைய பார்முலா ! அது குரூர நகைச்சுவை. அதை விட்டு விடுங்கள். நகைச்சுவையில் அந்த நபரும் இணைந்து சிரிப்பதே முழுமையான நகைச்சுவை !

நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். தலைமைப் பண்பின் மிக முக்கியமான விஷயமாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்.

அலுவலகங்களில் பிறரோடு இணைந்து பணிசெய்வதே வெற்றிபெறுவதன் முதல் தேவை. அத்தகைய மனநிலையைத் தருவதற்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே கை கொடுக்கிறது ! இயல்பாய் எல்லோருடனும் சிரித்து அன்னியோன்யமாய் வேலை பார்ப்பவனை அலுவலகத்துக்குப் பிடித்துப் போவதில் சந்தேகமில்லை.

இன்றைக்கு உலகில் ஆட்டிப் படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அதற்கான காரணம் உலகமயமாதலாகவும் இருக்கலாம், அல்லது குழாயடிச் சண்டையாகவும் இருக்கலாம். காரணம் முக்கியமில்லை. ஆனால் மன அழுத்தம் மட்டும் வந்து விட்டால் வாழ்க்கை அதோ கதி தான். உடலும் பணால் ! உள்ளமும் பணால் ! அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு ரொம்பவே உண்டு.

அதனால் தான் மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார், “ எனக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றைக்கோ தற்கொலை செய்திருப்பேன்”. ரொம்பவே உண்மையான வார்த்தை !! இன்றைக்கு தற்கொலைப் பட்டியல்களை புரட்டிப் பார்த்தால் வாழ்க்கையை கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அணுகாமையும் ஒரு முக்கியமான காரணமாய் நம் கண்ணுக்கு முன்னால் விரிகிறதா இல்லையா ?

மனித மூளையின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் சிரிப்பு ரொம்பவே முக்கியம். லண்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் “நல்ல சிரித்து வாழும் மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாகவும், கற்றுக் கொள்ளும் தன்மையிலும் இருக்கும்.” என்று தெரியவந்தது ! அது நகைச்சுவை கேட்பதோ, படிப்பதோ, பார்ப்பதோ என எந்த ஒரு வகையிலும் இருக்கலாம். அதனால் தான் மேலை நாடுகளில் மருத்துவர்கள் “நல்ல ஜோக் படமா போட்டு அரை மணி நேரம் சிரிங்க” என்றெல்லாம் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுகிறார்கள்.

உங்களுடைய கோபத்தையோ, உங்கள் மீது வேறொரு நபருக்கு இருக்கும் கோபத்தையோ அழிக்க நகைச்சுவை உணர்வைப் போல சிறந்த ஒரு ஆயுதம் இருக்கவே முடியாது ! அது உங்களுடைய நட்பு வட்டாரத்தை இதன் மூலம் ரொம்ப உற்சாகமாய் இயங்கவும் வைக்கும் இல்லையா ?

வாழ்க்கை எப்போதும் வசந்தங்களையே தருவதில்லை. சுண்டிப் போடும் தாயக்கட்டையில் எப்போதும் ஒரே எண் வருவதில்லை. வாழ்க்கை கலவையான உணர்வுகளின் சங்கமம். வாழ்வில் வருகின்ற நிகழ்வுகளையெல்லாம் இயல்பாகவும், இலகுவாகவும் எடுத்துக் கொள்ள நகைச்சுவை உணர்வு அவசியம். அது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்.

உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருங்கள். வாழ்க்கை அழுவதற்கானதல்ல. அழுதாலும், சிரித்தாலும் கடிகாரம் ஓடிக் கொண்டே தான் இருக்கும், நாட்கள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் அழுவதும் சிரிப்பதும் உங்களுடைய தீர்மானத்தில் !