உடலை நேசிப்போம்

நமது உடல் ஆன்மாவை விட ஆழமான ரகசியங்களை உள்ளடக்கியது ! அதை முழுமையாய் புரிந்து கொள்வது இயலாத காரியம் –

இ.எம்.ஃபாஸ்டர்.

உடல் ஒரு அதிசயங்களின் சுரங்கம். அறிவு தேடும் வேட்டையில் பெரும்பாலும் நாம் கவனிக்க மறந்து போகும் விஷயமும் நமது உடல் தான். உடலுக்கும் மனசுக்கும் நேரடித் தொடர்பு உண்டு !

“ஐயோ நான் ரொம்ப கறுப்பா இருக்கேன்” என நினைத்து கவலைப்பட்டுக் கவலைப்பட்டு மன அழுத்தத்தில் மாண்டு போனவர்களும் உண்டு. தனது உடலைப் பற்றி அவமானப்பட்டுப் பட்டு ஒதுங்கியே இருந்து உருப்படாமல் போனவர்களும் உண்டு. என் கண்ணு சரியில்லை, மூக்கு சரியில்லை, நாடி சரியில்லை என அறுவை சிகிச்சை செய்து ஆபத்தை விலைகொடுத்து வாங்குபவர்களும் உண்டு.

ஆனால், வெற்றியாளர்கள் தங்கள் உடலை நேசிப்பவர்கள். தங்கள் உடல் எப்படியிருந்தாலும் தரப்பட்ட உடலை நேசிப்பவர்களே வெற்றியின் கனியையும், மகிழ்ச்சியின் இனிமையையும் ரசிக்க முடியும். உடலுக்கும் மனதுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தங்களுடைய உடலை நேசிப்பவர்களே தன்னம்பிக்கையாய் நடை போட முடியும்.

நீங்கள் கண்ணாடியில் உங்களையே பார்க்கும் போது என்ன தெரிகிறது ? இறைவன் கொடுத்த அழகான உடல். கைகள், முகம், தலை, புன்னகை இவை தெரிகிறதா ? இல்லை கன்னத்தில் இருக்கும் ஒரு பரு, வரிசை பிசகியிருக்கும் ஒரு பல், உதிர்ந்து போயிருக்கும் கொஞ்சம் தலைமுடி இப்படி இருக்கும் சின்னச் சின்ன குறைகள் கண்ணுக்குத் தெரிகிறதா ? இந்தக் கேள்விக்கான விடையில் இருக்கிறது நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா ? இல்லையா என்பதன் பதில் !

ஒரு பெண் இருந்தார். அவருக்கு நடிகை ஆக வேண்டும் எனும் அதீத ஆர்வம். அதற்குரிய தகுதியும், அழகும் தன்னிடம் இருப்பதாக நம்பினாள். ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் போய் நடிக்க  வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மா” என்று கூறி திருப்பி அனுப்பினார்.

அந்தப் பெண் கவலைப்படவில்லை. தன் மீதான நம்பிக்கை அவளுக்கு அதிகமாகவே இருந்தது. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார். ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் தான் மர்லின் மன்றோ.

உங்களைக் குறித்தும், உங்களுடைய உடல் அமைப்பைக் குறித்தும் முழுமையான ஏற்றுக் கொள்தல் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் உடலை நீங்களே நிராகரித்தால் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிறருடைய விமர்சனங்களை வைத்து உங்களை நீங்களே எடைபோட்டீர்கள் எனில் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது !

தன் மீதும், தன் உடல் மீதும் மரியாதை வைப்பவர்கள் தான் கெட்ட பழக்கங்களான மது , மாது, புகை, போதை எனும் தீய பழக்கங்களை விட்டு தள்ளியிருப்பார்கள். அவர்கள் ஆன்மீகவாதிகளாய் இருந்தால், “இறைவன் வாழும் கோயில் எனது உடல்” என அதற்கு அதிக பட்ச மரியாதையையும் தருவார்கள்.

உடல் ஒரு அதிசயம். நமது உடலிலுள்ள இரத்தக் குழாய்களை அப்படியே நீட்டினால் எவ்வளவு தூரம் வரும் தெரியுமா ? 75,000 மைல்கள். சென்னையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் வரை செல்லும் தூரம் எவ்வளவு தெரியுமா ? 8500 மைல்கள் தான். இரண்டு இடங்களுக்கும் இடையே ஒன்பது தடவை பயணம் செய்யுமளவுக்கு தூரம் நமது இரத்தக் குழாய்களின் நீளம் என்பது வியப்பாய் இல்லையா !

இதயத்தோட எடை சுமார் 300 கிராம் தான். அது தினமும் பம்ப் பண்ணும் இரத்தத்தைக் கொண்டு பல டேங்க்கர் லாரிகளை நிரப்பலாம் !

நமது உடலிலுள்ள எலும்புகள் வியப்பின் குறியீடு. எலும்பு அதன் தன்மையின் அடிப்படையிலும் எடையின் அடிப்படையிலும் பார்த்தால், காங்கிரீட்டை விட, இரும்பை விட வலிமையானது. விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றும் நமது கட்டை விரலைப் போல ஒரு ரோபோ விரலை உருவாக்க முடியவில்லை. அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா ? “கட்டை விரலுக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் ஆயிரக்கணக்கான தகவல் பரிமாற்றம் தான் அதன் மிக நளினமான, இலகுவான அசைவுக்கு வழிசெய்கிறது. அதை அறிவியல் இன்னும் அறிந்து கொள்ளவில்லை ! “ வியப்பாக இருக்கிறது இல்லையா ?

இப்போது டச் ஸ்கிரீன் பற்றியும், டேல்லெட் பற்றியும் பேசுகிறோம். நமது தோலுக்கு அடியில் இருக்கும் ஒரு சின்னப் புள்ளியில் நூற்றுக் கணக்கான நரம்புகளின் முனைகள் தொடுதலை உணரவும், அந்தத் தகவலை மூளைக்கு அனுப்பவும் செய்கின்றன.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் நமது மொத்த உடலுக்குமான ஜெனடிக் தகவல்கள் உண்டு. இதன் ஒவ்வொரு புள்ளியிலும் கோடான கோடித் தகவல்கள் உண்டு. அதை விரித்துப் படித்தால் ஒரு போர்வை போல நீளும். ஆனால் அந்த தகவல்கள் எல்லாம் ஒரு புள்ளிக்குள் சைலன்டாக ஒளிந்திருக்கின்றன.

வெறும் மூன்று பவுண்ட் எடையுள்ள மூளை நூறு பில்லியன் நரம்பு செல்களைக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து உடலை கவனித்துக் கொண்டே இருக்கிறது. உடம்பின் ஒவ்வோர் செயலையும், கட்டளையையும் அது வகைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. உடலின் தன்மைக்குத் தக்கவாறும், சுற்றியிருக்கும் குளிர், சூடு போன்ற கால்லநிலைக்குத் தக்கதாகவும் அது உடலின் வெப்பத்தையும், உறுப்புகளின் செயலையும் மாற்றியமைக்கிறது. கடந்த பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் அது பதிவு செய்து கொண்டே இருக்கிறது !

உடலின் இருக்கும் இத்தனை அற்புதமான விஷயங்களைத் தாண்டி இனிமேல் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு உங்களைக் கவலைக்குள்ளாக்கும் எனில் நீங்கள் உங்களை நேசிக்கவில்லை என்பது தான் பொருள்.

நாம் ஒரு வானுயர்ந்த மலையையோ, ஒரு அழகிய கட்டிடத்தையோ, ஆடையையோ, ஒரு படைப்பையோ ரசிக்கவோ பாராட்டவோ தயங்குவதில்லை. ஆனால் நமது உடலை நேசிக்கவும் பாராட்டவும் மட்டும் தயங்குவது ஏன் ? என கேள்வி விடுக்கிறார் டாக்டர் கிளென் ஷிரால்டி.

ஒருவகையில் நமது மீடியாக்கள் உருவாக்கும் பிம்பத்தையே நமது மனம் உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கிறது. கருப்பு நிறம் மோசம், முகப்பரு மோசம், முடி உதிர்ந்தால் மோசம், கை கால்கள் வழவழவென இல்லாதிருந்தால் மோசம், என நம்மை தேவையற்ற மன அழுத்தத்துக்குள் தள்ளி விடுவதில் முக்கியப் பங்கு ஆற்றுபவை நமது மீடியாக்களே ! அந்த வலைகளை நிராகரியுங்கள். நீங்கள் எப்படித் தோற்றமளிக்க வேண்டுமென்று எப்படி அவர்கள் நிர்ணயம் செய்ய முடியும் என கேள்வி எழுப்புங்கள். !

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் அடுத்தவர்கள் நிர்ணயம் செய்ய வேண்டிய விஷயங்களல்ல !

உங்களை நீங்கள் நேசியுங்கள். உடல் எப்படி இருந்தாலும், உங்கள் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் அது நிச்சயம் போதுமானது !

மன்னிப்பு மகத்துவமானது.

இருட்டு இருட்டைத் துரத்த முடியாது ! வெளிச்சமே இருட்டை விரட்ட முடியும். அதே போல வெறுப்பு வெறுப்பை விரட்ட முடியாது, அன்பினால் மட்டுமே அது முடியும் –

மார்டின் லூதர் கிங். ஜூனியர்.

மன்னிப்பு எனும் ஒற்றை வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் மனிதனாகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு. இந்த மன்னிப்பு எனும் விஷயம் மட்டும் இருந்து விட்டால் உலகில் நிலவும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் காணாமல் போய்விடும் என்பது சர்வ நிச்சயம் ! எனவே எனக்கு தமிழ்லயே புடிக்காத வார்த்தை “மன்னிப்பு” என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள். அது மனுக்குலத்தின் அடித்தளத்தில் விஷம் ஊற்றும் போதனை.

மன்னிப்பு என்பது என்ன ? ஒருவருக்கு எதிராக இன்னொருவர் செய்யும் தவறை அந்த நபர் மன்னித்து அந்த நபரை முழுமையாய் ஏற்றுக் கொள்வது ! இது இரண்டு நபர்களுக்கு இடையேயும் இருக்கலாம், அல்லது தனக்குத் தானே கூட இருக்கலாம். அதாவது தன்னைத் தானே மன்னிப்பது ! தான் ஏதோ தப்பு செய்துவிட்டோம் எனும் தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்தால் நமக்கு நாமே ஒரு மன்னிப்பை வழங்குவது சுய மன்னிப்பு எனலாம்.

மன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கும் முயற்சி. ஒருவகையில் மன்னிக்கும் போது நாம் அடுத்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்ல விஷயத்தைச் செய்கிறோம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அதாவது ஒரு நபரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய எரிச்சல், கோபம், பழிவாங்கும் எண்ணம் போன்றவையெல்லாம் சட்டென மறந்து விடுகின்றன. அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனசு சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் துவங்கிவிடுகிறது.

ஆனால் மன்னிப்பு என்பது மனதின் ஆழத்திலிருந்து எழவேண்டும். வெறுமனே வார்த்தைகளில் மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு, வெறுப்பை மனதில் சுமப்பது நம்மை நாமே ஏமாற்றுவதற்குச் சமம். “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காதே” என்று ஒருவர் சொல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது உண்மையில் மன்னிப்பு அல்ல. ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக அந்தச் சிக்கலில் இருந்து விலகியிருக்கும் மனநிலை.

உண்மையான மன்னிப்பெனில் எப்படி இருக்க வேண்டும் ? “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே அந்த விஷயத்தையே மறந்துட்டேன். நாம எப்பவும் போல நட்பா இருப்போம்” என ஓருவர் சொல்கிறார் எனில் அது ஆத்மார்த்தமான நட்பாய் இருக்கும். ஆனால் பலரும் அதற்கு முன்வருவதில்லை. காரணம், மன்னிப்பு என்பது கோழைகளின் வழக்கம் என நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் மன்னிப்பு என்பதைக் கோழைகளால் தரமுடியாது. அதற்கு மிக மிக வலுவான மனம் இருக்க வேண்டும் ! யாரேனும் மன்னிப்பை தயக்கமில்லாமல் வழங்கிறார்களெனில் அவர்கள் தைரியசாலிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மன்னிப்பு வழங்குவது அன்பின் வெளிப்பாடாய் இருக்க வேண்டுமே தவிர, போனாப் போகுது என்றோ, நான் பெரியவன் தியாக மனப்பான்மை உடையவன் போன்ற கர்வ சிந்தனைகளிலோ வரக் கூடாது., அப்படி வரும் மன்னிப்பு உண்மையான மன்னிப்பு அல்ல. உண்மையான மன்னிப்பின் இலக்கணம் அடுத்த நபர் கேட்பதற்கு முன்பாகவே அந்த நபரை உள்ளத்தில் உண்மையாகவே மன்னித்து விடுவது தான்.

மன்னிக்க மறுக்காதது போலவே மன்னிப்புக் கேட்கவும் தயங்காத உறுதியான மனம் இருத்தல் அவசியம். மன்னிப்புக் கேட்பதைப் போல கடினமான விஷயம் இல்லை. காரணம் உங்களுடைய பலவீனத்தையோ, உங்களுடைய குறையையோ , உங்களுடைய தவறையோ நீங்கள் அந்த இடத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள். உங்களுடைய பிம்பம் உடைந்து விடும் வாய்ப்பு அதில் உண்டு. ஆனால் எதைக் குறித்தும் கவலையில்லாமல் நீங்கள் தைரியமாக மன்னிப்புக் கேட்கிறீர்களெனில், நீங்கள் எல்லாவற்றையும் விட அதிகமாய் அன்பைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே பொருள் !
மன்னிக்கத் தயங்காத மனிதர்கள் தான் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. காரணம் அது மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்கிறது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்கிறது, உறவுகளைக் கட்டி எழுப்புகிறது.

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒரு நாள் அவளுக்கு ஒரு போன்கால். உயிரை உலுக்கும் போன்கால். “அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான்”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். கொலைகாரன் மீது சூவுக்கு கடுமையான கோபம். மனதை ஒருமுகப்படுத்தி செபத்தில் நிலைத்திருந்தாள்.

ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள். கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான கரடு முரடு உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு சொன்னாள்.

“நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என சந்தேகித்தார்கள். சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் சொல்ல முடியாத நிம்மதி நிரம்பி வழிந்தது.

மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது ! மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.

வாழ்க்கை கடினமானதா ?

Man-Praying

மிக எளிதான வாழ்க்கை வேண்டுமென செபம் செய்யாதீர்கள். எந்தக் கடினத்தையும் தாங்கும் வலிமை வேண்டும் என்றே செபம் செய்யுங்கள் –

ஜான் எஃப் கென்னடி.

வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. அப்படி இருக்கும் மனிதர்கள் கல்லறைகளில் தான் காணக் கிடைபார்கள். காரணம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் உழைப்பும், அதைக் கடந்து செல்லும் மனநிலையும் தேவைப்படுகிறது ! அது கடினமா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது.

வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு என்பவர்கள் எதனுடன் ஒப்பிட்டு அப்படிச் சொல்கிறார்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அல்லது யாருடன் ஒப்பிட்டு வாழ்க்கை கஷ்டமாய் இருக்கிறது என்பதை முடிவு செய்கிறீர்கள் எனும் தெளிவு இருக்க வேண்டும்.

கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு கஷ்டம். இஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு இஷ்டம் ! வண்ணத்துப் பூச்சியின் கூடுடைக்கும் போராட்டத்தைப் பார்க்கும் போது, “அடடா.. எவ்ளோ கஷ்டப்படுது” என மனசில் சிந்தனை ஓடும் இல்லையா ? அந்தக் கடினமான வேலை இல்லாவிட்டால் வண்ணத்துப்  பூச்சி ஆரோக்கியமாய் வெளிவர இயலாது என்பது தானே உண்மை !

நமது கஷ்டங்கள் நீண்டகாலம் தொடர்ந்தால், அதன் எல்லையில் மகிழ்ச்சியும் அந்த அளவுக்குப் பெரியதாக இருக்கும் என்பது பெரியவர்களின் மொழி. இறுகி இறுகிக் கிடக்கும் கரி தானே வைரமாய் மாற முடியும் ! எரிவதற்குப் பயன்படுவதா ? இல்லை வைரமாய்த் திரிவதற்குப் பயன்படுவதா என்பதை சோதனைகள் தான் முடிவு செய்கின்றன.

ஆகாய விமானத்தின் உடலைப் பாருங்கள். எவ்வளவு உறுதியாய் இருக்கிறது. அதை அடைய அது பல கஷ்டங்களைத் தாண்டி வர வேண்டியிருக்கிறது. அதிக பட்ச வெப்பத்தில் அதைப் போடுவார்கள். பின் அதிகபட்சக் குளிரில் போடுவார்கள். இப்படிப் பல முறை செய்து அந்த உலோகமானது எந்தக் காலநிலையையும் தாக்குப் பிடிக்கும் வகையில் மாற்றுவார்கள். அப்படி கடினப் பாதையில் செல்லும் உலோகம் தான் உயர உயரப் பறக்கும். அப்படிப் பட்ட சிக்கலைச் சந்திக்காத உலோகம் அடுப்படியில் பாத்திரமாக உருமாறிவிடும் !

ஒவ்வொரு கடினப் பாதையும் நமக்கு நன்மைகளைத் தருவது போல, நல்ல படிப்பினைகளையும் தருகிறது. “அனுபவம் ரொம்ப இருக்கு” என ஒருவரைப் பார்த்து எப்போது சொல்வோம் ?. அவர் இத்தகைய சிக்கல்களில் நுழைந்து நுழைந்து வெளியேறி வரும்போது தானே ?

வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்யும் மனிதர்கள் பெரும்பாலான கடின நிமிடங்களை இலகுவாகத் தாண்டி விடுகிறார்கள். “காலைல இருந்து நைட் வரை வேலையைக் கட்டிட்டு அழ வேண்டியிருக்கு” என நினைக்காமல் காலை முதல் மாலையிலான நமது வாழ்க்கை அது, அதை ரசித்துச் செய்வோம் என நினைத்தால் அந்த கடின நிமிடம் உங்களுக்குப் பிடித்தமானதாய் மாறிவிடும்.

வார இறுதிகளில், “ஐயோ நாளைக்கு மறுபடியும் வேலைக்குப் போகணுமா” என நினைக்காமல் அந்த நாளை, அந்த நிமிடத்தை, அந்த ஓய்வை ரசிக்கத் துவங்கினால் வார இறுதிகளும் வரமாய் மாறிப் போகும். ஒரு சமையல் செய்வதானாலும் சரி, அல்லது ஒரு ராக்கெட்டைச் செய்வதானாலும் சரி, நமது பாகத்தை ரசித்துச் செய்வோமென்றால் நம்முடைய பெரும்பாலான பொழுதுகள் இனிமையாகவே கடந்து விடும் என்பதே உண்மை.

இனிமையும் சந்தோசமும் அடுத்த வேலையிலோ, அடுத்த நிமிடத்திலோ தான் கிடைக்கும் என நினைப்பது நமது கண் முன்னால் இருக்கும் இனிய நிமிடங்களை உதாசீனப் படுத்துவதாகும்.

ஒரு சிக்கலைத் தீர்க்க அதன் முழு வடிவத்தையும், எப்படி தோன்றியது எனும் வரலாற்றையும் அறிய வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. உதாரணமாக ஏதோ ஒரு காரணத்துக்காக உங்கள் தம்பி உங்களிடம் கோபமாய் இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே நடந்த நிகழ்ச்சிகளின் போஸ்ட்மார்ட்டம் தேவையே இல்லை. ஓடிப் போய், “தம்பி.. நீ என்னைக்குன்னாலும் என் தம்பி தாண்டா… என் மேல ஏதாச்சும் கோபமிருந்தா மன்னிச்சுக்கடா… ” என அணைத்துக் கொள்ளுங்கள். தம்பியின் கோபத்துக்கான காரணம் தேவையில்லை. அது என்னவாய் இருந்தாலும் உங்கள் அணைப்பில் அணைந்தே போய்விடும்.

வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு என புலம்பும் மனிதர்கள் பெரும்பாலும் முன் வைப்பது பொருளாதாரச் சிக்கல்களை. இரண்டாவது உறவு சார்ந்த சிக்கல்களை. மூன்றாவது உடல் பலவீனம் சார்ந்த சிக்கல்களை.  இவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நமது தன்னம்பிக்கையையும், வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதையும் பொறுத்தது.

ஒரு சூழல் வரும்போது, அதை சமாளித்து வெற்றிகரமாய்ப் பயணிக்க முடியும் எனும் உள்ள உறுதி முதல் தேவை. அமைதியாக அந்தச் சிக்கலான சூழலை எப்படிக் கடப்பது, அதில் என்னென்ன நல்ல விஷயங்கள் இருக்கின்றன, என்னென்ன சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கின்றன போன்ற விஷயங்களையெல்லாம் கவனியுங்கள். பாசிடிவ் மனநிலையோடு அந்த சூழலை அணுகுங்கள்.

கசப்பு கூட அறுசுவையில் ஒன்று தான். சின்னச் சின்ன சவால்களும், சிக்கல்களும் கூட ஆனந்தம் தர முடியும்.

வாழ்க்கை ரொம்பவே கஷ்டமானது, சுமை என்று நினைக்காமல் அதை சிம்பிளாக்க முயலுங்கள். வாழ்க்கை கஷ்டமானதா, சுவாரஸ்யமானதா என்பது நாம் அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது ! நம்மிக்கையுடன் எதிர்கொள்வோம் !

உங்களால் முடியும் அசாதாரண வெற்றி !

 girl-755857_960_720

அசாதாரண வெற்றிக்கான சூழல்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால் அந்த வெற்றி கிடைக்காது. கிடைக்கும் சூழல்களை சரிவரப் பயன்படுத்தினால் அசாதாரண வெற்றி சாத்தியமாகும் –

ஜீன் பால்

உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ரொம்பவே சாதாரண மனிதர்கள் பலர் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.

“அவனுக்குப் பேசவே தெரியாதுடா.. அவனைப் பாரு டிவில புரோக்ராம் பண்றானாம்” என்று வியப்போம் ! “ஒழுங்கா தமிழே எழுதத் தெரியாது, சினிமால பாட்டு எழுதுறான் பாரு. நல்ல திறமை இருக்கிற நாம இங்கே கெடக்கிறோம்” என புலம்புவோம். ஒன்றும் இல்லாவிட்டால் ‘அட அங்கே பாருடா.. அந்த நோஞ்சான் பயலுக்கு சூப்பரா ஒரு லவ்டா..” என பெருமூச்சாவது விடுவோம் !

அந்த சலிப்புக்கோ, எரிச்சலுக்கோ, புகைக்கோ காரணம் நம்மைச் சுற்றியிருக்கும் சாதாரண மனிதர்கள். சொல்லப் போனால் நம்மை விடத் திறமைகள் குறைவாகவே இருக்கும் வெகு சாதாரண மனிதர்கள் நம்மை விட உயர்ந்த இடத்தில் இருப்பது தான்.

அவர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அவர்களிடம் சில குணாதிசயங்கள் இருக்கும். ஒன்று மற்றவர்கள் செய்யத் தயங்குகிற, அல்லது செய்ய முடியாது என நினைக்கின்ற சில விஷயங்களைத் துணிந்து செய்திருப்பார்கள். உதாரணமாக ஒரு அழகான பெண்ணிடம் போய் காதலைச் சொல்ல பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். ஆனால் ஒருவன் போய் சட்டென சொல்லுவான். அவன் அவள் பார்வையை இழுக்க என்னென்ன வலை விரிக்க வேண்டுமோ எல்லாவற்றையும் செய்வான்.

அதன் காரணம் என்ன ? அதில் இருக்கிறது இரண்டாவது பாயின்ட். தோற்றுவிடுவோமோ எனும் பயத்தைக் களைதல். காதலைச் சொல்லி நிராகரிக்கப்படுவோமோ எனும் பயத்தினால் காதலைச் சொல்லாதவர்கள் எக்கச்சக்கம். தோல்வி அடைந்தால் பரவாயில்லை என தைரியமாக ஒரு செயலை முன் வைப்பவர்களே வெற்றிக்கான அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள்.

அலுவலை எடுத்துக் கொண்டால் ஒரு சின்ன மாற்றம் வருகிறது என்றாலே நடுங்கி, பயந்து போய் விடுபவர்கள் உண்டு. அந்த மாற்றத்தை இயல்பாய் எடுத்துக் கொண்டு தங்களுடைய வேலையைச் சரிவர செய்து பெயரை நிலைநாட்டுபவர்களும் உண்டு. அப்படி தங்கள் பணியைச் செய்பவர்கள் கவனிக்கப்படுவார்கள். வெற்றியடைவார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கு கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தபோது பல்பின் உள்ளே பயன்படுத்த வேண்டிய இழையை உருவாக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்தார். முடியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை வைத்து அந்த இழையை முயன்றார். தோல்வியே மிஞ்சியது. அருகில் இருந்த உதவியாளர் நிக்கோலா டெஸ்லா சொன்னார், “சே… எல்லாமே வேஸ்டாகிப் போச்சு. ஒண்ணுமே உருப்படியா அமையவில்லை”.

எடிசன் அவனை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னார், ”பத்தாயிரம் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு தோல்வியடைந்த முயற்சியும், சரியான பாதையில் ஒரு அடி முன்னே வைக்க நமக்கு உதவுகிறது”

இது தான் வெற்றியாளர்களுடைய பார்வை. எந்தத் தோல்வியும் தன்னம்பிக்கையுடைய மனிதனுக்கு எதிரே அணை கட்ட முடியாது. ஆறாம் வகுப்பில் படுதோல்வி அடைந்தவர் தானே உலகப் புகழ்பெற்ற சர் வின்ஸ்டன் சர்ச்சில் ! தோல்வி அவரை தன்னம்பிக்கையின் தேசத்திலிருந்து கடத்திச் சென்று விடவில்லை. அவருடைய தன்னம்பிக்கை அவரை வெற்றிகளின் சாம்ராஜ்யத்தில் உச்சத்தில் வைத்தது !

வெற்றியடைந்தபின் பிரமிப்பூட்டும் வகையில் நம் முன்னால் தெரிபவர்களெல்லாம் வெறும் சாமான்யர்களே ! ஆனால் நம்மிடம் இல்லாத சில குணாதிசயங்கள் அவர்களிடம் இருக்கின்றன என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அந்த எக்ஸ்ட்ரா விஷயங்கள் நம்மிடம் இருந்தால் நாமும் அதே போன்ற சாதனையாளர்களாய் மாற முடியும்.

“இதுக்கு மேல என்னால முடியாதுப்பா…” என பின்வாங்குபவர்கள் சாதனை வெற்றிகளைச் செய்ய முடியாது. பல வேளைகளில் அவர்கள் சாதாரண வெற்றிகளைக் கூட பெற முடியாது !

“வாய்ப்பு கிடையாது” என நூறு முறை விரட்டப்பட்டவர்கள் தான் பிற்காலத்தில் நடிகர்களாக உலகை உலுக்கியிருக்கிறார்கள். “உன் மூஞ்சி சதுரமா இருக்கு… நீயெல்லாம் ஏன்பா நடிக்கணும்ன்னு கிளம்பறே’ என கிண்டலடிக்கப் பட்டவர் தான் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ஜான் ட்ரவால்டோ. பிற்காலத்தில் அவருடைய கால்ஷீட்டுக்காகக் காத்திருந்த கூட்டம் கணக்கில்லாதது ! பின் வாங்காத மனசு அவரிடம் இருந்தது தான் அவரை வெற்றியாளராய் மாற்றியிருக்கிறது.

தொடர்ந்த முயற்சியே வெற்றியைத் தரும். எப்போது முயற்சி செய்வதை நிறுத்தி விடுகிறோமோ அப்போது தோல்வி நம்மை அமுக்கிப் பிடிக்கிறது. நான் அதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் வெற்றியை அடையாமல் போனதேயில்லை” என்கிறார் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஹாரிசன் ஃபோர்ட்.

துவக்க காலத்தில் யாரும் இவரை சிவப்புக் கம்பளம் வைத்து வரவேற்கவில்லை. உதாசீனம், நிராகரிப்பு, அவமானம் இவையெல்லாம் இவருடைய வாசலில் குவிந்து கிடந்தன. இவரிடம் இருந்ததோ முயற்சியும், அதை முன்னெடுத்துச் சென்லும் தன்னம்பிக்கையும் தான். முயன்று கொண்டே இருந்தார். காற்றுக்கு முன்னேறிச் செல்லும் பட்டம் போல ஹாலிவுட் வானில் உயரப் பறக்கிறார்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி தான் உண்டு. அதே போல வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் இடையே இருப்பதும் ஒரு குட்டி இடைவெளிதான். அந்த இடைவெளியை நிரப்பினால் உங்களால் சாதிக்க முடியும்.

ஒலிம்பிக்கில் முதலில் வருபவருக்கும் கடைசியில் வருகிறவருக்கும் இடையே இருப்பது சில வினாடிகள் தான். ஆனால் முதலில் வருபவரே சாதனையாளராகிறார் இல்லையா ?

உங்கள் மீதான நம்பிக்கை. தொடர்ந்த முயற்சி. தோல்வியடைதல் குறித்த பயமின்மை. புதியவற்றை பாசிடிவ் மனநிலையில் ஏற்றும் கொள்தல் போன்ற சில விஷயங்களை மனதில் கொண்டாலே போதும். சாதாரண மனிதர்கள் சாதனை மாமனிதர்களாய் மாற முடியும் !

இன்றே கடைசி நாள் !

 6592617

இதுவே உங்கள் வாழ்வின் கடைசி நாள் போல வாழுங்கள். கடந்த நாட்கள் கடந்து போய்விட்டன. எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை. –

வேய்ன் டையர்

காலை முதல் மாலை வரை அரக்கப் பரக்க ஓடிக் கொண்டே இருக்கிறோம் இல்லையா ? வழக்கமான உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால் பேட்டரி போட்ட கடிகாரம் போல என்று சொல்லலாம். பரபரப்பாய் எழுந்து, குளித்து, சட்டென விழுங்கி, அவசரமாய் பேப்பரைப் புரட்டி, அல்லது சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி செய்தியைக் கேட்டு, பாலிஷ் போட மறந்த ஷூவைச் சபித்துக் கொண்டே, கையாட்டும் குழந்தைக்கு ஒன்றரை வினாடி செலவு செய்து டாட்டா காட்டியபடி காரைக் கிளப்பி அலுவலகம் போனால் வேலை வேலை வேலை ! அப்புறம் ‘அடடா இருட்டிடுச்சே’ என்றோ ‘ மிட்நைட் ஆயிடுச்சா’ என்றோ பரபரத்து ஒரு ரிட்டன் டிரைவ் !

கேட்டால், ‘ரொம்ப பிஸி’. ‘இல்லேன்னா முடியாதுங்க’. ‘எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியம்’. என்று ஏகப்பட்ட பதில்கள் ரெடிமேடாய் இருக்கும்.

எது முக்கியம் ? எது முக்கியமில்லை ? வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு வேலையில் முழுமையாய் ஈடுபடுவதே வாழ்க்கை. சிலருக்கு வாழ்க்கையை அனுபவிப்பதே வேலை. சிலருக்கு பணம் சம்பாதிப்பது ! இன்னும் சிலருக்கு மனங்களைச் சம்பாதிப்பது. சிலருக்கு வெளிநாடுகள் போய் கிளையன்ட் மீட்டிங் கலந்து கொள்வது, வேறு சிலருக்கு சேரிகளுக்குப் போய் ஏழைக் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது. சிலருக்கு நண்பர்களோடு அரட்டை அடிப்பது. சிலருக்கு நெஞ்சுருக பிரார்த்திப்பது. ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவன். எனவே தான் அவனுடைய செயல்களும் வித்தியாசமானவையாய் இருக்கின்றன.

ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்று, “இன்னிக்கு தான்பா உன்னோட கடைசி நாள். என்ன வேணும்ன்னாலும் பண்ணிக்கோ, நாளைக்கு நீ காலி” என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள். நீங்கள் நாத்திகர் என்றால் கடவுள் என்பதை டாக்டர் என்று நினைத்துக் கொள்ளுங்கள் !

உங்களுக்கு எழும் அச்சமும், மிரட்சியும், இன்ன பிற உணர்ச்சிகளைத் தவிர்த்து விட்டு பாருங்கள். உங்களுடைய அன்றைய தினமும் இதே பரபரப்பாய் தான் இயங்குமா ? காலையில் எழுந்து மாலை வரை ஓடிக் கொண்டே இருப்பீர்களா ? அல்லது கடைசியாய்ப் பார்க்கும் அலாதிப் பிரியத்துடன் சூரிய ஒளியைத் தொட்டுப் பார்ப்பீர்களா ? மனைவியைப் பிரியமாய் பார்த்துக் கொண்டே காபியை சுவைப்பீர்களா ? சாப்பிடும் போதும் மழலையை அணைத்துக் கொண்டே ஊட்டி விடுவீர்களா ? அலுவலகம் கிளம்பும் போது குழந்தையைக் கட்டியணைத்து, மனைவிக்கு டாட்டா காட்டி கிளம்புவீர்களா ? வேலையை விட முக்கியமான விஷயம் உறவு என்பதை உணர்ந்து நேரத்தோடு வீடு திரும்புவீர்களா ?

அதெப்படி நேற்றுவரை முதல் இடம் பிடித்தவையெல்லாம் இன்று சட்டென கடைசி இடத்துக்கு ஓடிவிட்டன ? நேற்று வரை உதாசீனப்படுத்தப்பட்டவையெல்லாம் இன்று முதல் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டன ? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் !

உண்மையில் இந்தக் கடைசி நாளில் நீங்கள் எவற்றையெல்லாம் முக்கியம் என கருதுகிறீர்களோ அவையே மிக முக்கியமானவை. எனவே தான் தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள், “இன்றே கடைசி தினம்” என்பது போல வாழுங்கள் என்று !

இது உங்களுடைய கடைசி தினமாக இருந்தால் நீங்கள் யார் மீதும் கோபமோ, விரோதமோ எதிர்ப்போ கொண்டிருக்க வாய்ப்பில்லை. வழியே போகும் பூனைக் குட்டியைக் கூட நேசத்தோடு தான் பார்ப்பீர்கள். யாரையாவது ஏமாற்றி, பணம் பிடுங்கி, வாழ்க்கையைக் கெடுக்கும் சிந்தனைகள் ஏதும் வராது.

சாகக் கிடக்கும் மனிதர்கள் சொல்வதைக் கவனித்திருக்கிறீர்களா ? “சாகப் போற நேரத்துல எதுக்கு அவன் கூட சண்டை போட்டுகிட்டு… அதை விட்டுடு” என்பார்கள். சமாதானத்தோடு சாவதா, சமாதானத்தோடு வாழ்வதா ? எது நல்லது ? எது தேவையானது ? வாழ்க்கையை விட மரணம் முக்கியமானதா ? சாகும் போது அன்பு செலுத்த மனம் சொல்கிறதெனில், ஏன் வாழும் போது அதைச் சொல்ல மனம் தயங்குகிறது. மன்னிப்பும், அரவணைப்பும் சாவுக்கு முன் எழுதப்பட வேண்டிய முடிவுரைகளா ? இல்லை வாழ்க்கையில் எழுதவேண்டிய முன்னுரைகளா என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் இல்லையா ?

வாழ்க்கை வாழ்வதற்கானது. அதில் நின்று நிதானித்து நமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? நாம் சரியான பாதையில் செல்கிறோமா ? என்பதை அடிக்கடி பரிசீலனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் !

நிதானிப்போம், வாழ்வோம்

தொடர்ச்சியான வளர்ச்சி

 mainimg_grow

தொடர்ச்சியான வளர்ச்சியும் முன்னேற்றமும் நம்மிடம் இல்லையென்றால், வளர்ச்சி, சாதனை, வெற்றி போன்ற வார்த்தைகளால் எந்த பயனும் இல்லை –

பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.

ஒரு குழந்தை பிறக்கும் போது அழுகையுடன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. பிறகு குப்புறப் படுக்கிறது, தவழ்கிறது, எழும்புகிறது, தத்தக்க பித்தக்க என நடக்கிறது, ஓடுகிறது என அதன் வளர்ச்சி படிப்படியாய் இருக்கிறது. எல்கேஜியில் ஆரம்பித்து கல்வியும் படிப்படியாய் அடுத்தடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியான வளர்ச்சி இல்லாத குழந்தை ஊனமுற்ற குழந்தையாக, பரிதாபத்துக்குரிய பார்வைகளை சம்பாதிக்கும். தொடர்ச்சியான முன்னேற்றம் இல்லாத கல்வி, தோல்விகளையும், அறிவுக் குறைவையும் கற்றுக் கொள்ளும்.

தொடர்ந்த வளர்ச்சி என்பது ஒவ்வொரு விஷயத்திலும் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தக்க இடத்தில் அதைப் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். சிலர் நிர்வாகத்தில் தங்களுடைய முன்னேற்றத்தை கணக்கிடுகிறார்கள். சிலர் பிஸினஸில் முன்னேற்றம் நாடுகிறார்கள். சிலர் அன்பிலும், உறவு வளர்ச்சியிலும் அடுத்தடுத்த நிலைகளுக்குத் தாவுகின்றனர். இன்னும் சிலர் ஆன்மீகத்தில் வளர்ந்து கடவுளை நெருங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

எது எப்படியோ, சீரான வளர்ச்சி என்பது மனிதனுடைய அடிப்படைத் தேவை. அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அந்த வளர்ச்சியை எப்படி அடைகிறோம், என்னென்ன முயற்சிகள் எடுக்கிறோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவோம் !

இரண்டும் இரண்டும் நான்கு என்பதை ஒரு எல்கேஜி குழந்தை சொல்லும்போது ரசிப்போம். பாராட்டுவோம். அதையே ஒரு பத்து வயதுப் பையன் மழலை மாறாமல் “ரெண்டும் ரெண்டும் நாலு” என்று சொன்னால் ரசிப்போமா ? அடடா வளர்ச்சி இல்லையே என்ன பரிதாபப்படத் தானே செய்வோம்.

முன்னேற்றம் என்பது சீரானதாக இருக்க வேண்டும். அலுவலகங்களில், குடும்ப உறவுகளில் இவை நிச்சயம் படிப்படியாய் முன்னோக்கிச் செல்ல வேண்டும். வெறுமனே இயக்கம் மட்டும் இருப்பது வெற்றிக்கான அறிகுறி அல்ல. பின்னோக்கிச் செல்லும் வாகனம் கூட “இயக்கத்தில்” தான் இருக்கும். ஆனால் முன்னேற்றத்தில் அல்ல.

முன்னேற வேண்டுமெனில் முதலில் இருக்க வேண்டிய விஷயம் ஆர்வம். “முன்னேற வேண்டும்” எனும் ஆர்வம். முக்கியமாக, நியாயமான வழியில் முன்னேற வேண்டும் எனும் ஆர்வமே முக்கியம். நேர்மையற்ற வழியில் வருவதாகத் தோன்றும் முன்னேற்றங்கள் உண்மையில் முன்னேற்றங்கள் அல்ல.

கூர் தீட்டப்பட்டுக் கொண்டே இருந்தால் தான் முன்னேற்றம் கிடைக்கும். நம்மிடம் இருக்கும் திறமைகள் என்ன ? அடுத்த நிலைக்குச் செல்ல என்னென்ன திறமைகள் தேவை என்பதை உணர்ந்து அதைக் கூர்தீட்டும் முயற்சியில் படிப்படியாய் இறங்க வேண்டும்.

மரம் வெட்டும் போட்டி ஒன்று நடந்தது. இரண்டு பலவான்களுக்கு இடையேயான போட்டி. இருவருமே சம பலம் படைத்தவர்கள். ஒரு நாள் காலை முதல் மாலை வரை  மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும். யார் அதிக மரங்களை வெட்டுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப் படுவார்கள்.

போட்டி ஆரம்பமானது. ஒருவர் கடின உழைப்பாளி. ஓய்வே இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டே இருந்தார். மற்றவரோ பதட்டமடையவில்லை. மரங்களை வெட்டினார். ஓய்வெடுத்தார். மதிய உணவு சாப்பிட்டார். மீண்டும் மரங்களை வெட்டினார். கடைசியில் இவரே வெற்றியும் பெற்றார்.

கடின உழைப்பாளிக்கு ஒரே ஆச்சரியம். “நான் இடைவேளையே இல்லாமல் கடுமையாக உழைத்தான். என்னோடு ஒப்பிட்டால் நீ கொஞ்சம் குறைவாகத் தான் உழைத்தாய். எப்படி முதல் பரிசு பெற்றாய் ?” வியப்பாகக் கேட்டார் அவர்.

வென்றவர் சொன்னார். “நீ ஓய்வெடுக்காமல் உழைத்தாய். உன்னுடைய கோடரியின் முனை மழுங்கிக் கொண்டே வந்தது. நான் ஓய்வெடுத்தேன். மதிய உணவு சாப்பிட்டேன், அப்போதெல்லாம் எனது கோடரியை கூர் தீட்டினேன். அதனால் தான் வென்றேன்”

கூர் தீட்டப்படும் புத்தி மாற்றத்துக்கான முக்கியமான தேவை. அதுவே அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நம்மை நடத்தும்.

உறவுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாக முன்னேறுவதே ஆனந்தமான வாழ்க்கையின் அடிப்படை. நாம் தவறுகின்ற முக்கியமான இடமும் அது தான். திருமண காலத்தில் தம்பதியர் செம்புலப் பெயல் நீராய் இருப்பார்கள். தேனிலாக் காலங்கள் முடிந்து வாழ்வின் யதார்த்தங்களுக்குள் வரும்போது அவர்களுக்கு இடையே அன்பானது வறண்டு போன வைகையைப் போல துயரமாய் வடியும். தினம் தோறும் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் குடும்ப வாழ்க்கையின் அடிப்படை. ஆனால் இங்கே குறைகிறது.

சில குடும்பங்கள் அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அன்பில் வளர்ச்சியடைகிறார்கள். புரிதலில் முதிர்ச்சியடைகிறார்கள். ஈகோ இறக்கும் இடத்தில் குடும்ப வாழ்க்கையின் ஆனந்த முளை நிச்சயம் முளைக்கும் ! தைரியம் என்பது வீரம் அல்ல ! மன உறுதி ! அதை உண்மை சொல்வதன் மூலமாகவும் வெளிப்படுத்தி விட முடியும் ! அத்தகைய தம்பதியர் தான் முதுமையில் கூட ஆதரவுக் கரம் கொடுத்து ஆனந்த நடை பயில்கிறார்கள். இந்த வளர்ச்சி தான் தொடர்ச்சியான வளர்ச்சி. இது தான் ஆனந்தத்தை குடும்பங்களில் இறக்குமதி செய்யும்.

தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு நான்கு படிகளை வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முதலாவது, முன்னேற்றத்துக்கான விஷயங்களைக் கண்டுபிடிப்பது.

இரண்டாவது, அதை அடைவதற்காக சின்னச் சின்ன இலக்குகளை நிர்ணயிப்பது.

மூன்றாவது, அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க ஒரு திட்டம் வகுத்துச் செயல்படுவது

நான்காவது, அது சரியான பாதையில் செல்கிறதா என்பதைப் பரிசீலிப்பது !

இந்த நான்கு விஷயங்களையும் மிக கவனமாகக் கைக்கொண்டால் தொடர்ச்சியான வளர்ச்சி என்பது நிச்சயம் சாத்தியமாகும்.

நினைவில் கொள்ளுங்கள். அலுவலில் மட்டும் வளர்வது வளர்ச்சியல்ல, அன்பிலும் சேர்ந்தே வளர்வதே வளர்ச்சி.

நன்றி

 images

நமது நன்றியை நாம் நிச்சயம் வெளிப்படுத்தவேண்டும். அதே நேரத்தில் அதிகபட்ச நன்றியை நாம் வார்த்தைகளிலல்ல, வாழ்க்கையின் மூலமாகத் தான் காட்ட முடியும்

– ஜான் கென்னடி

அமெரிக்காவில் பணிபுரிந்த காலங்களில் என்னை வியப்புக்குள்ளாக்கிய விஷயம் ஒன்றுண்டு. இன்றும் கூட நம்மைச் சுற்றி அப்படி ஒரு சூழல் ஏற்பட வேண்டும் என அடிக்கடி மனது விரும்பும். அங்கே நீங்கள் காரோட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் காரில் உங்களை முந்திச்செல்ல விரும்புகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒதுங்கி அவருக்கு வழிவிட்டால், தவறாமல் கையை உயர்த்தியோ, பார்த்துச் சிரித்தோ நன்றி என்று சொல்லி விட்டுச் செல்வார்.

சாலையை ஒருவர் கடக்க விரும்புகிறார். நீங்கள் காரை நிறுத்த வேண்டும் என்பது சட்டம். அந்த சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நீங்கள் வண்டியை நிறுத்தினால் கூட, நீங்கள் அவருக்காக வண்டியை நிறுத்துகிறீர்கள் என்பதால் அவர் உங்களுக்கு நன்றி சொல்லாமல் கடந்து செல்வதில்லை !

ஒரு பொருளை வாங்கினாலும், ஒரு உதவி செய்தாலும், ஒரு தகவலைச் சொன்னாலும், ஒரு பாராட்டு கூறினாலும் எப்போதும் அவர்கள் தயக்கமே இல்லாமல் “நன்றி” சொல்வார்கள். அந்த சின்ன வார்த்தை ஒரு மிகப்பெரிய உறவுப் பிணைப்புக்கான அடித்தளமாக பல வேளைகளில் அமைந்து விடுவதுண்டு.

நாம் நன்றி சொல்வதில் ரொம்பவே கஞ்சத் தனம் காட்டுவோம். நமது மேலதிகாரிகளிடமாவது அவ்வப்போது “நன்றி” சொல்வோம். போனாப் போகுதுன்னு நமக்கு கீழே வேலை பார்ப்பவர்களிடமும் அவ்வப்போது நன்றி சொல்வோம். ஆனா வீட்டில் ? நமது வாழ்க்கைத் துணையிடம் ? பிள்ளைகளிடம் ? பெற்றோரிடம் ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

பெரும்பாலும் உதட்டைப் பிதுக்கி, “அட ஆமா !,, சொன்னதில்லையே” என்று தான் சொல்வோம். காலையில் காபி குடிப்பதிலிருந்து இரவு தூங்குவது வரை நமது குடும்பத்தில் இருக்கும் நபர் நமக்குச் செய்யும் உதவிகள், ஆதரவுக் கரம், அன்புச் செயல்கள் எல்லாவற்றையும் “இது அவங்க கடமை” எனும் மனோபாவத்தோடு கடந்து போகிறோம்.

இது தவறு என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் உணரவேண்டுமென்பதில்லை. ஆனால் அந்த உணர்தலின் வெளிப்பாடை குடும்பங்களில் காட்டுங்கள். உங்களை அன்புடன் கவனிப்பவர்களுக்கு நீங்கள் அன்புடன் சொல்லும் ஒரு நன்றி மிகப்பெரிய கிரியா ஊக்கி. அத்தகைய சிறு சிறு நேசத் தழுவல்கள் தான் உறவுகளை வாழ வைக்கும்.

சின்ன வயதிலேயே படித்திருக்கிறோம். தண்ணீரில் தத்தளித்த எறும்பைக் காப்பாற்றிய பறவையையும், பறவையை வேடனிடமிருந்து காப்பாற்றிய எறும்பையும். செய்நன்றியின் செயல்வடிவமாய் மழலை காலத்தில் படித்த கதைகள் அவை. வளர்ந்தபின் செய்நன்றியில் சிறந்தவன் கர்ணனா, கும்பகர்ணனா என நன்றியறிதலை புராணங்களும் போதித்தன. ஆனால் பல வேளைகளில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுவதில்லை !

நன்றி சொல்வதும், நன்றி செய்வதும் மனிதனின் உயரிய பண்புகள். அதெப்படி நன்றி செய்வது ? ஒருவருக்குச் சொல்ல வேண்டிய நன்றியை செயலின் மூலமாய்க் காட்டுவது தான் நன்றி செய்தல் ! மனைவிக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுப்பதிலாகலாம், அப்பாவுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுப்பதில் ஆகலாம், ஒரு ஆறுதல் கரமாய் நோயாளியின் அருகே அமர்வதாகலாம். நன்றி என்பதை வெளிக்காட்டும் எந்த ஒரு செயலும் ஒரு வார்த்தையை விட வலிமையானது !

எப்போதும் நன்றி செய்தல் சாத்தியப்படுவதில்லை. ஆனால் இந்த காலத்தில் நன்றி சொல்வது வெகு சுலபம். ஒரு இமெயில், எஸ்.எம்.எஸ்,, போன்கால் என எது வேண்டுமானாலும் நன்றியைப் பகிரலாம்.

இனிய ஆச்சரியங்களும், எதிர்பாரா நன்றிகளும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். ஒரு வினாடி அமைதியாய் உங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை நினைத்துப் பாருங்கள். அவர்களில் ஒருவருடைய வீட்டுக்கு திடீரென விசிட் அடித்து, “டீச்சர், நீங்க எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவங்க. உங்களுக்கு நன்றி சொல்லிட்டு, பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்’ என சொல்லிப் பாருங்கள். அந்த ஆசிரியக் கண்களில் மிளிரும் ஆனந்தமும், பெருமிதமும் உங்கள் நன்றியைக் கவுரவப் படுத்தும். உங்கள் நன்றிக்கும் வாழ்த்துக்கும் அன்புக்கும் என்றும் அருகதையுடையவர்கள் தான் ஆசிரியப் பெருமக்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹம்பேக் திமிங்கலம் வலையில் சிக்கிக் கொண்டது. உடல் முழுதும் கயிறுகள் சிக்கிக் கொள்ள திமிங்கலத்தால் நீந்த முடியவில்லை. அந்த 50 அடி நீள திமிங்கலத்தின் கட்டுகளை அறுக்க பாதுகாப்பாளர்கள் திட்டமிட்டார்கள்.

திமிங்கலம் மெல்ல வாலை அசைத்தாலே ஆள் காலியாகிவிடலாம். கட்டறுத்தபின் கோபத்தில் அது குதித்தாலும் காலி ! எனும் திகில் நிமிடங்களுடன் ஆட்கள் போராடினார்கள். கயிறுகளை அறுத்தார்கள். திமிங்கலம் கண்களை உருட்டி எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்தது. கட்டுகள் அவிழ்த்து முடித்ததும் ஆனந்தத்தில் கடலுக்குள் நீச்சலடித்தது !

பின் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் நடந்தது. அந்த ஆஜானுபாகுவான திமிங்கலம் திரும்ப வந்தது. வந்து கட்டுகளை அவிழ்த்த ஒவ்வொரு நபர் முன்னாலும் சென்று தன் முகத்தினால் அவர்களை மெல்ல முட்டித் தள்ளி தன் நன்றியைச் சொன்னது ! எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள் !

நன்றி என்பது நாயிடம் உண்டு என்று நமக்குத் தெரியும். அது திமிங்கலத்திடம் கூட உண்டு என்பது ஆச்சரியமாய் அப்போது பேசப்பட்டது !

கடைசியாக ஒன்று. நன்றியுடையவர்களாக இருப்பது உங்களுடைய உடலுக்கும் ரொம்ப நல்லது ! ஆச்சரியப்படாதீர்கள். இதை நான் சொல்லவில்லை சில ஆய்வுகள் சொல்கின்றன. அவை சொல்வது இது தான். “நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள், மன அழுத்தமற்றவர்களாக இருக்கிறார்கள். நிம்மதியாய் தூங்குகிறார்கள். அவர்களுடைய குடும்ப வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்”

அப்புறமென்ன ? நன்றியுடன் விடைபெறுகிறேன்…

எனது மழை அனுபவம்

sasasas

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.

நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது.

நதிகளிடம் அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர், மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின் பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர். எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.

மழை பல பாடங்களையும் கற்றுத் தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும், முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள் கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.

போர்ட்டிகோவில் முழங்காலளவு நீரில் தெரு நதியை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒருவர் வந்து இரண்டு பால் பாக்கெட்களை நீட்டினார். “உடனே காய்ச்சிடுங்க… இல்லேன்னா கெட்டுடும்” என்றார். யாரது.. நம்மைத் தேடி வந்து பால் பாக்கெட் தருவது ? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும் இந்த நேரத்தில் என மனதில் குழப்ப ரேகைகள்.

‘… நீங்க ?…’  என இழுத்தேன்.

பக்கத்து வீடு தான். மாடில குடியிருக்கேன். என்றார். என் வீட்டை ஒட்டியபடி இருந்தது அந்த வீடு. நாலடி இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.

‘நன்றி.. என்ன பண்றீங்க.. ‘ என முதன் முறையாக விசாரித்தேன். கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம் இதயங்களிடையே பரவியது.

மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.

சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.

வெளிச்சம் வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும் இணைக்கும் எனும் உண்மையை நான் உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.

தொலைக்காட்சி அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும் செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம் பூச்சியைப் போல பறந்து மறைந்தது.

மீண்டும் ஒரு முறை தகவல் தொடர்புகள் இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள் வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே. பாசமிகு மனங்கள் மட்டுமே.

புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.

அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, “அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்…”.

நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள் உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த நிகழ்வாய் அது இருந்தது.

ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,

“கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு…”.

பிள்ளைகள் சொன்னார்கள், “என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா… போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க…”

அது மழையல்ல,

பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !

இந்த ஒரு பதிவை மட்டும் எழுதிவிட்டு லேப்டாப்பை ஒதுக்கி வைப்பதென முடிவு செய்து விட்டேன்.

‍*

சேவியர்

சென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.

சென்சார் என்றதும் ஏதோ புதுப் படத்துக்கான அனுமதி வாங்கும் சமாச்சாரம் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பார்க்கப் போவது தொழில்நுட்பத்தில் இன்று நீக்கமற நிறைந்திருக்கும் சென்சார் கருவிகள். இதை தமிழில் உணரிகள் என்று அழைக்கலாம்.

பெரிய அலுவலகங்களில் நீங்கள் ஒரு அறைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சட்டென மின் விளக்குகள் எரியும். கொஞ்ச நேரம் ஆட்கள் அறையில் இல்லாவிட்டால் விளக்குகள் அணையும், இவை சென்சார்களின் கைங்கர்யமே. நீங்கள் ஒரு கதவின் முன்னால் செல்லும் போது தானாகவே கதவுகள் திறப்பதும், தொட்டால் கார் ஓடுவதும் எல்லாம் சென்சார் ஜாலங்கள் தான்.

ஒரு பொருளையோ செயலையோ ஒரு கருவி உணர்ந்து அதை சிக்னல்களாக மாற்றி அதற்கு ஏற்ப ஒரு செயலைச் செய்ய வைப்பது தான் இந்த சென்சார்களின் அடிப்படை பார்முலா.

மனிதன் தொடங்கி சர்வ உயிரினங்களிலும் சென்சார்கள் உண்டு ! படைப்பின் மகத்துவம் அது. வெளிச்சம், மின் காந்த அலை, ஈரப்பதம், சத்தம் போன்ற வெளிப்புற காரணிகளாலும், உடலில் உள்ள குளுகோஸ், ஆக்சிஜன் போன்ற உட்புறக் காரணிகளாலும் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இவற்றை அறிவியல் “பயாலஜிகல் சென்சார்கள்” என்கிறது.

தொழில்நுட்பம் சொல்கின்ற சென்சார்கள் பல்வேறு காரணிகளை வைத்து இயங்குகின்றன. வெப்பத்தைத் தகவலாக மாற்றும் வெப்ப (Temperature) சென்சார்கள் உண்டு. காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்க நாக்குக்கு அடியில் வைக்கும் ‘தெர்மோமீட்டர்கள்” வெப்ப சென்சார்களின் மிக எளிய உதாரணம்.

கதிர்களை வைத்துச் செயல்படும் சென்சார்களில் அகச் சிவப்புக் கதிர் சென்சார்கள், புற ஊதாக்கதிர் சென்சார்கள் இரண்டும் அதிகப் பயன்பாட்டில் இருப்பவை. அதிலும் புற ஊதாக்கதிர்கள் மருத்துவத் துறை, ரோபோட்டிக்ஸ், வாகன சென்சார்கள், வேதியல் துறை என பல இடங்களில் கொடிகட்டிப் பறக்கின்றன. வானிலை, தகவல் தொடர்பு, வெப்பமானி முதலான துறைகளில் அகச்சிவப்புக் கதிர்களின் பயன்பாடு கணிசமானது !

டச் ஸ்கிரீன் சென்சார்களை தொட்ட இடத்திலெல்லாம் காண முடிகிறது. அது உங்களுக்குத் தெரியும் என்பதால் அதைப்பற்றி அதிகம் பேசவில்லை ! ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், ரோபோக்கள் என பரந்து விரிந்திருக்கும் இன்றைய தொழில் நுட்பத்துக்கு சென்சார்கள் முதுகெலும்பு !

நமது கையிலிருக்கும் ஸ்மார்ட் போன்கள் இப்போதெல்லாம் பல விதமான சென்சார்களின் உதவியோடு தான் வருகின்றன. ஸ்மார்ட்போன்கள், மற்றும் டேப்லெட்கள் ஆண்டுக்கு 2பில்லியன் எனும் அளவுக்கு சென்சார்களைப் பயன்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சென்சார்களைப் பயன்படுத்துவது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. சென்சார்கள் நல்ல சென்சார்களாக இருக்க வேண்டும். அது சரியான தகவலை அனுப்ப வேண்டும். அந்தத் தகவலை வாசிக்கும் ரிசீவர்கள் சரியாக இருக்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்தும் அல்காரிதங்கள், சூத்திரங்கள் சரியாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டிய செயல் மிக மிகத் துல்லியமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக ஜிபிஎஸ் பற்றி ஏற்கனவே பார்த்தோம். ஞாபகம் இருக்கிறதா ? புவியிடங்காட்டி ! கையில் ஒரு போன் இருந்தால் போதும் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை போன் சொல்லும். அங்கிருந்து பயணிக்க விரும்பினால் அதற்கான தகவல்கள் வழிகாட்டல்கள் எல்லவற்றையும் இது புட்டுப் புட்டு வைக்கும். தகவல்களையெல்லாம் செயற்கைக் கோளிலிருந்து பெறும்.

ஸ்மார்ட்போன்களிலும், டேப்லெட்களிலும் ஏகப்பட்ட சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் பரவலாக இருக்கக் கூடிய சென்சார்களில் ஒன்று “ஆம்பியன்ட் லைட்” (Ambient Light ) சென்சார்கள். இது வெளிச்சம் சார்ந்த சென்சார். உங்களுடைய ஸ்மார்ட்போனிலோ, டேப்லெட் ஸ்கிரீனிலோ எந்த அளவுக்கு “பிரைட்னஸ்” அதாவது வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இந்த சென்சார்கள் தான்.

சுற்றியிருக்கும் வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு இந்த முடிவை சென்சார்கள் எடுக்கின்றன. நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் மிக மெல்லியதாகவும், அடர் இருட்டில் ரொம்ப பிரைட்டாகவும் திரையின் வெளிச்சத்தை இவை தரும். இது பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதுடன், ரொம்பவே கொஞ்சம் பவர் போதும் என்பதும் இதன் ஸ்பெஷல் வசதி ! இதனால் பேட்டரி நீடித்து உழைக்கவும் செய்யும்.

இப்போது எல்லாமே டச் ஸ்கீர்ன் போன்கள் தான் இல்லையா ? நீங்கள் ஒரு நபருக்கு போன் செய்து விட்டு உங்கள் காதருகே போனைக் கொண்டு போகிறீர்கள். உங்கள் காது அந்த போனின் ஸ்கிரீனைத் தொடும். ஆனால் எந்த செயலும் நடக்காது. அதெப்படி சாத்தியம் ? விரலால் தொட்டால் செயல்படும் ஸ்கீரீன் காதால் தொட்டால் ஏன் செயல்படவில்லை ? இந்த செயலைச் செய்கின்ற சென்சார்கள் “பிராக்ஸிமிடி சென்சார்கள்” (Proximity Sensors) என்று அழைக்கப்படுகின்றன.

நமது காதுக்குப் பக்கத்தில் போன் செல்லும் போது இந்த சென்சார்கள் உஷாராகி “திரையை மூடுங்கப்பா.. காது தொட்டுடப் போவுது” எனும் தகவலை அனுப்புகின்றன. உடனே ஸ்கிரீன் அணைந்து விடுகிறது. அல்லது செயல்பட முடியாதபடி ஒரு கட்டளையை அனுப்புகிறது. இந்த விஷயம் எதுவும் தெரியாமல் நாமும் நல்லபடியாகப் பேசிவிட்டு போனைக் கையில் எடுப்போம். அப்போது இந்த சென்சார்கள் மீண்டும் ஒரு தகவலை அனுப்பும் “இப்போ போன் காதை விட்டு தூரமா போயாச்சு, எல்லாரும் வேலை செய்யத் தயாரா இருங்க” என்பது அந்தத் தகவல். உடனே தொடுதிரை உயிர்பெற்று எழும் ! ஒருவேளை உங்கள் போன் இப்படிச் செயல்படவில்லையேல் ஒன்றுகில் பிராக்ஸிமிடி சென்சார்கள் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். இல்லையேல் அந்த சென்சார்களே போனில் இல்லை என்று அர்த்தம்.

இந்த் பிராக்ஸிமிடி சென்சார்கள் தான் லிஃட்டில் “தொடு திரை” ஸ்கிரீனில் பயன்படுகிறது. விமானத் துறை, மருத்துவம் , அணு கருவிகள், அதிர்வு கண்டறியும் கருவிகள் போன்ற இடங்களிலும் இந்த சென்சார்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.

இப்போதைய ஸ்மார்ட்போன்களின் வசீகரம் நீங்கள் போனை எந்தப் பக்கமாகத் திருப்பினாலும் படமும் அந்தப் பக்கமாகத் திரும்பும் என்பது. பக்கவாட்டிலோ, நீளவாட்டிலோ எப்படி வேண்டுமானாலும் நீங்கள் இந்த போனையோ, ஐபேட் போன்ற டேப்லெட்களையோ பயன்படுத்தலாம். இது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். இந்த சாய்வு சங்கதிகளை செயல்முறைப்படுத்துவது “ஆஸிலரோமீட்டர்” (Accelerometer) எனும் சென்சார். எக்ஸ். ஒய் மற்றும் இசட் எனும் மூன்று அச்சுகளின் அடிப்படையில் கருவியின் அசைவையும், சாய்வு கோணத்தையும் இந்த சென்சார் கணக்கிடுகிறது !

மருத்துவத் துறையில் இந்த சென்சார்களின் பயன்பாடு ரொம்ப அதிகம். மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிகல் சென்சார் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது. இதய நோய் உடயவர்களுக்கு பேஸ்மேக்கர் பொருத்துவது தெரியும் தானே ? அதில் இயங்குவது இந்த ஆஸிலரோமீட்டர் சென்சார் தான் !

மின் வேதியல் அடிப்படையில் இயங்கும் இன்னொரு சென்சார் உண்டு. இது உணவு சோதனை, தண்ணீர் சோதனை, மருத்துவ சாதனங்கள் என பல இடங்களிலும் பயன்படுகின்றன. ஸ்மார்ட் போன்கள் இத்தகைய ஒரு சென்சாரைப் பயன்படுத்தி நாம் உண்ணும் உணவைப் பற்றிய ஜாதகத்தைச் சொல்லும் ஒரு தொழில்நுட்பத்தை முயன்று கொண்டிருக்கிறார்கள். அது சாத்தியமானால், “இதை சாப்டாதே இது போன வாரம்  சுட்ட வடை இதுலே கிருமிகள் இருக்கு” என்று உங்களை எச்சரிக்கும். “ஆஹா.. ரொம்ப நல்ல வாசனை, இதில் வேதியல் அளவு கம்மி தான், இந்த வாசனைப் பொருளை நீ தாராளமா வாங்கலாம்” என உங்களுக்கு அறிவுரையும் கூறும் ! கேட்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறது இல்லையா ?

திசைகாட்டும் சென்சார்கள் (Campus) உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஒரு வட்ட வடிவமான கருவி, அதன் முனைகள் வடக்கு தெற்காகவே இருக்கும் இல்லையா ? அது காந்த சக்தியில் இயங்கக் கூடியது. ஸ்மார்ட்போன்களில் அவற்றை பயன்படுத்த முடியாது. காரணம் காந்த சக்தி மற்ற செயல்பாடுகளையெல்லாம் பாதித்து விடும். எனவே ஸ்மார்ட் போன்களில் குட்டி சென்சார் ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். அது மிகக் குறைந்த அலைவரிசையிலான புறக் கதிர்களை வாசித்து திசையை அறிகிறது. பழைய கால திசைகாட்டும் கருவி சின்ன சென்சார்களின் வடிவெடுத்து ஸ்மார்ட் போனுக்குள் அடக்கமாய் அமர்ந்து விடுகிறது !

இமேஜ் சென்சார்கள் அல்லது பட உணர்விகள் பரவலான பயன்பாட்டில் உள்ள சென்சார்கள். ஒரு படத்தைப் பார்த்து அது செயல்படும். ஆட்டோமெடிக் கார் ஓடிக்கொண்டிருக்கும் போது “நில்” எனும் டிராபிஃக் போர்டைப் பார்த்தால் நிற்பது இதன் அடிப்படையில் தான். இது சி.எம்.ஓ.எஸ்CMOS (Complementary Metal-Oxide Semiconductor)  காம்பிளிமென்டரி மெட்டல் ஆக்ஸைட் செமி கன்டக்டர் எனும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கக் கூடியது எனுமளவுக்கு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

கைரோஸ்கோப்பிக் சென்சார்கள் ( Gyroscope) அசைவை வைத்து செயல்படக்கூடிய சென்சார்கள். வலது, இடது, மேல், கீழ், முன்னால் பின்னால் என ஆறு விதமான அசைவுகளை இது கண்காணிக்கும். இது ரொம்ப பவர்புல் சென்சார். பல மெடிகல் சாதனங்களிலும் இந்த சென்சார் உண்டு. ஐபோன் வைத்திருப்பவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். போனை ஆட்டினாலே பாட்டு மாறும் இல்லையா ? புதிய வகை கைரோஸ்கோப்பிக் சென்சார்களை ஒரு குண்டூசி முனையில் வைத்துவிட முடியுமாம் !

மேலை நாடுகளில் அப்பார்ட்மென்ட்களின் வெளிப்பக்க லைட்களை “மோஷன் டிக்டெக்டார்” சென்சார்களைக் கொண்டு தான் அமைத்திருப்பார்கள். அதாவது அசைவை வைத்து இயங்கக் கூடிய வகையில் இவை இருக்கும். நடு ராத்திரி அந்த வீட்டுக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கும்மிருட்டில் வீடு இருக்கும். ஆனால் நீங்கள் வீட்டின் அருகே போன உடன் சட்டென லைட் எல்லாம் எரியும் ! செக்யூடிரி கேமரா உங்களைப் படம் பிடிக்கத் துவங்கும் ! இவையெல்லாம் இந்த சென்சார்களின் கைங்கர்யம் தான்.

பொருட்களை வாங்கும்போது பார்கோட் ஸ்கேன் செய்வது சாதாரணமாகிவிட்டது இன்று. யூனிவர்சல் புராடக்ட் கோட் ( Universal Product Code – UPC ) எனப்படும் அந்த கருப்புகலர் வரிகளை வாசிக்கும் வேலையைச் செய்வது சென்சார்கள் தான். கார்களில் இப்போது பாதுகாப்புக்காக டிரான்ஸ்பான்டர்ஸ் சென்சார்களைப் பயன்படுத்துகிறார்கள். சாவிக்குள் அது ஒளிந்திருக்கும். திருட்டுத்தனமான சாவிகளைக் கொண்டு காரை இயக்க முடியாது !

சென்சார்களை இரண்டு பெரிய பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று ஆக்டிவ் சென்சார்கள், இன்னொன்று பேசிவ் சென்சார்கள். ஆக்டிவ் சென்சார்கள் இயங்க சக்தி தேவை. பவர் இல்லாமல் இது இயங்குவதில்லை. இன்னொரு வகை பாசிவ் சென்சார்கள், இவை இயங்க சக்தி தேவையில்லை. தானாகவே இயங்குவதற்குத் தேவையான சக்தியை இவை உருவாக்கிக் கொள்ளும்.

சென்சார்களின் வகைகள் எக்கச்சக்கம். ரொம்ப அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் சென்சார்களே ஐநூறுக்கும் மேல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய தொழில்நுட்பமும், எதிர்கால தொழில்நுட்பக் கனவுகளும் சென்சார்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்தே இருக்கின்றன !

எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் சென்சார்கள் நமது சுற்றுச் சூழலை வாசித்து அதற்கு ஏற்ப நமக்கு உதவும் என்கின்றனர் வல்லுநர்கள். உதாரணமாக வானிலையை வாசித்து, “குடையை எடுத்துக்கோ..மழை பெய்யும்” என்று சொல்லலாம். “கேஸ் ஸ்மெல் வருது, கிச்சனைக் கவனி” என எச்சரிக்கலாம்”. ஏன் “யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ளே வை” என்று கூட சொல்லலாம் ! ஆச்சரியப்பட முடியாது !

Thanks : Daily Thanthi, Computer Jaalam

புகை நமக்குப் பகை !

புகைத்தல் கொல்லும். 
நீங்கள் கொல்லப்பட்டால் வாழ்வின் உன்னதமான பகுதிகளை 
இழந்து விடுகிறீர்கள் என்று அர்த்தம் –  புரூக் ஷீல்ட்ஸ்.

ஒரு மனிதனை மிக மிக எளிதாகப் பிடித்து விடக் கூடிய அடிமைத்தனம் என்று புகையைச் சொல்லலாம். தண்ணி அடிக்கிறவன் கூட ஒரு வாரம் ஒன்றோ இரண்டோ தடவை தான் தண்ணி அடிப்பான். ஆனால் தம் அடிக்கிறவர்களோ அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை கூட அடிக்கிறார்கள். காரணம் மிக எளிதாக ஊதித் தள்ளி விட முடியும் எனும் காரணம் தான். இது கொண்டு வருகின்ற கேடு அளவிட முடியாதது !

புகை பிடிப்பதன் தீமையைக் குறித்து வால்யூம் வால்யூமாக ஆய்வு முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புகை பிடித்தல் உடலை மட்டுமல்லாமல் மனதையும் பாதிக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். அவர்களுடைய திறமைகள் படிபடியாய் மழுங்கிப் போக இவை காரணமாகி விடுகின்றன. புகை பிடிப்பவர்கள் ஞாபக சக்தியில் ரொம்பவே வீக்காக இருப்பார்கள் என்கிறது ஒரு புது ஆராய்ச்சி.

“தினசரி நிகழ்வுகளில் மூன்றில் ஒரு பாகம் விஷயங்களை இவர்கள் மறந்து விடுவார்கள். சின்னச் சின்ன விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியிருக்கும். புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது புகை பிடிப்பவர்களின் ஞாபக சக்தி ரொம்பவே பரிதாபமானது” என அதிரடியாக மிரட்டுகிறது இந்த ஆராய்ச்சி.

ஏற்கனவே புகை பிடிப்பவர்களுடைய வயிற்றில் அமிலம் வார்க்கும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. தம் அடிப்பவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கை தகிடு தத்தோம் போடும் என ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்தது.

பிரிட்டனிலுள்ள நார்த்தம்ரியா பல்கலைக்கழகத்தில் தான் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பதினெட்டு வயதுக்கும், இருபத்து ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட எழுபது பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். இவர்களிடம் ஞாபக சக்திக் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் புகை பிடிக்கும் பழக்கமுள்ள பார்ட்டிகள் வெறும் 56 சதவீதம் கேள்விகளுக்கான விடையை மட்டும் சொல்லி கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டனர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களோ 81 சதவீதம் சரியான பதில்களைச் சொல்லி முன்னணியில் நின்றார்கள்.

கொஞ்ச காலம் புகை பிடிக்கும் பழக்கத்தில் விழுந்து பின்னர் அதை விட்டு விட்டு வெளியே வந்தவர்கள் 74 சதவீதம் கேள்விகளுக்குச் சரியான விடையளித்து வியப்பூட்டினர். இதனால் புகை பிடிக்கும் பழக்கத்தை உதறி விட்டால் ஞாபக சக்தியை மீண்டெடுக்கலாம் எனும் உண்மை வலுவடைந்திருக்கிறது.

“அப்பா.. நீங்க புகைப்பதை விட்டு விடுவீர்களா ?” கையைப் பற்றிக் கொண்டே தந்தையிடம் அந்த சிறுவன் கேட்டான்.

“ஏன்பா… ?”

“நான் பெரியவனானதுக்கு அப்புறம் கூட நீங்க என் கூடவே இருக்கணும்ன்னு ஆசைப்படறேன்”

பையனின் பதிலில் தந்தையின் கையிலிருந்த சிகரெட் நழுவியது. அதன் பிறகு அது மேலேறி விரல்களில் அமரவேயில்லை.

குடும்ப உறவுகளை ரசிக்கச் செய்ய விடாமல் இந்த புகைத்தல் பழக்கம் மனிதர்களை கட்டிப் போட்டு விடுகிறது. ஆண்கள் பெண்கள் என சமத்துவப் பந்தியில் இந்த பழக்கம் எல்லா இடங்களிலும் விரிவடைந்திருப்பது நவ யுகத்தின் சாபக்கேடு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல ?

புகைப் பழக்கம் தவறு என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன். அப்படியானால் ஏன் இன்னும் அதையே தொற்றிக் கொண்டிருக்க வேண்டும் ?

புகை பிடித்தால் தான் பாட்டு எழுதுவேன், புகை பிடித்தால் டென்ஷன் குறையும், புகை பிடித்தால் ரிலாக்ஸ் ஆவேன் போன்றவையெல்லாம் மனப் பிரமை. புகையை விட்டவர்கள் அதை விட மிகுந்த ஆரோக்கியமாய் இந்த விஷயங்களையெல்லாம் கையாள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அணிவகுத்து நிற்கின்ற நோய்களை நினைத்துப் பாருங்கள். உங்கள் தலைமுறைக்கு நீங்கள் தரப்போவது ஆறுதலும், பாதுகாப்புமாக இருக்க வேண்டுமே தவிர, சிக்கலும் மருத்துவமனை வாசமுமாய் இருக்கக் கூடாது என்று முடிவெடுங்கள்.

உங்கள் அன்பான மனைவியின் முகமோ, உங்கள் அன்பான குழந்தைகளின் முகமோ ஒவ்வொரு முறை புகைக்கும் போதும் உங்கள் முன்னால் வரட்டும். உங்கள் புகைத்தல் அதன் மூலம் குறையும் இல்லையா ?

உங்கள் ஆரோக்கியம், தோல், கண், மூளை, இதயம், நுரையீரல் என சர்வ உறுப்புகளுக்கும் ஊறு விளைவிப்பது புகை எனும் சிந்தனை மனதில் இருக்கட்டும். ஒவ்வொரு முறை புகைத்தலை நடத்தும் போதும் இந்த சிந்தனைகளெல்லாம் வட்டமிட்டால் நீங்கள் புகையை விட்டு வெளியே வர வாய்ப்பு உண்டு.

அதுவும் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் புகை பிடித்தால் தலைமுறையே காலி ! ஆண்களுக்கும் புகை ஆண்மையின் துரோகியாய் மாறிவிடும் ஆபத்து ரொம்பவே உண்டு !  புகை பிடித்தலின் சிக்கலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அதற்கென ஒரு தனி நூலே தேவைப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

புகையை நிறுத்த ஒரே வழி, அப்படியே நிறுத்துவது தான். “இந்த வாரம் மட்டும் இழுத்துட்டு அடுத்த சுப முகூர்த்த தினத்துல நிறுத்திடுவேன்”. “இந்த வாரம் ஒரு நாள் பத்து.. அடுத்த வாரம் அஞ்சு, அப்புறம் மூணு..” இப்படியெல்லாம் திட்டம் போட்டு நிறுத்த நினைத்தால் நிறுத்த முடியாது. அப்புறம் மார்க் தைவன் சொல்வது போல, “தம்-மை நிறுத்தறது தான் ஈசியான சமாச்சாரம், நான் ஆயிரம் தடவை நிறுத்தியிருப்பேன்” என்று சொல்ல வேண்டி வரும் !

ஏகப்பட்ட சிக்கல்கள், பூச்சியம் பயன்கள் ! இப்படி ஒரு பழக்கம் தேவையா ?