பைபிள் மனிதர்கள் 41 (தினத்தந்தி) அதோனியா

கடவுளின் ஆசி பெற்றவராக விளங்கிய தாவீது மன்னன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இப்போது அவர் முதுமையின் கடைசிப் படிக்கட்டில்.

அதோனியா, தாவீது மன்னரின் நான்காவது மகன். தாவீதுக்கு அகித்து எனும் பெண் மூலமாகப் பிறந்தவன். அவருடைய மூத்த சகோதரர்களான அம்னோன் மற்றும் அப்சலோம் இருவரும் இறந்து போய்விட்டார்கள். இருப்பவர்களில் மூத்தவன் அதோனியா தான். தாவீதுக்குப் பின்னால் மன்னனாவதற்குச் சட்டப்படி அத்தனை உரிமையும் அதோனியாவுக்கே உண்டு ! அடுத்து இருப்பவன் இளையவன் சாலமோன், அவன் தாவீதுக்கும் பத்சேபா எனும் பெண்ணுக்கும் பிறந்தவன். கடவுளின் திட்டமோ சாலமோன் அரசராக வேண்டும் என்பது !

மரணப் படுக்கையில் தாவீது கிடக்க, அதோனியா தனக்குத் தானே அரசனாய் முடிசூட்டிக் கொள்ள தீர்மானித்தான். தாவீதுடன் கூடவே பயணித்த தலைமைப் படைத் தலைவன் “யோவாபு” இப்போது அதோனியாவின் பக்கம். கூடவே பதவிப் பிரமாணம் செய்து வைக்க குரு அபியத்தால். இறைவாக்கினர் நாத்தானும், தாவீதின் மெய்க் காப்பாளர்களும் இன்னொரு பக்கம். அவர்களுக்கு சாலமோன் தான் மன்னனாக வேண்டும் என்பதே விருப்பம்.

அதோனியா எதிர்ப்பாளர்களைப் பொருட்படுத்தவில்லை. அரச அலுவலர்கள், அரசரின் மற்ற மக்கள் எல்லோரையும் அழைத்து விருந்து வைத்தான். ஆடுகளையும், எருதுகளையும், கொழுத்த காளைகளையும் பலியிட்டான். தானே மன்னன் என கொக்கரித்தான். விருந்து தடபுடலாய் நடந்தது.

இறைவாக்கினர் நாத்தான் சாலமோனின் தாய் பத்சேபாவிடம் சென்றார்.

“நீர் போய் தாவீது மன்னனைப் பார்த்து, நீர் எனக்கு வாக்களித்தபடி சாலமோனை மன்னனாக முடிசூட்டுங்கள் என்று சொல்லுங்கள். நானும் வந்து உங்களுக்கு ஆதரவாகப் பேசுவேன்” என்றார்.

அதன்படி, பத்சேபா  மன்னனின் அறைக்குள் நுழைந்தாள். அங்கே தாவீது மன்னனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் அழகும் இளமையும் நிறைந்த மன்னனின் கடைசி மனைவி அபிசாகு.

“மன்னரே வணக்கம்” பத்சேபா பணிந்தாள்.

“சொல் என்ன வேண்டும் ?”

“தலைவரே.. உமக்குப் பின் சாலமோன் மன்னனாவான் என்று வாக்களித்தீர்கள்.  இப்போது அதோனியா மன்னனாய் தனக்குத் தானே முடிசூட்டியிருக்கிறான். உமக்குப் பின் யார் மன்னனாவான் என்பதை நீரே அறிவிக்க வேண்டும்.” என்றாள்.

அப்போது நாத்தான் இறைவாக்கினர் வந்தார்.

“மன்னரே, அதோனியா மன்னராவான் என்று நீர் சொன்னதே இல்லை. இன்று அவன் ஆதரவாளர்களைத் திரட்டி மன்னன் என்று சொல்லிக் கொள்கிறான். கடவுளுக்குப் பலிகளையும் இட்டிருக்கிறான்” என்றார்.

இதைக் கேட்ட தாவீது கோபமடைந்தார்.

“சாலமோன் தான் எனக்குப் பின் அரசர். அதை இன்றே செய்து முடிப்பேன். எனது கோவேறுக் கழுதையைக் கொண்டு வாருங்கள். நாத்தானும், குரு சாதோக்கும் சாலமோனை கீகோனுக்கு அழைத்துச் சென்று அரசனாய் திருப்பொழிவு செய்யட்டும்” என்றார்.

தாவீது மன்னனின் கட்டளைப்படியே எல்லாம் நடந்தன. சாலமோன் மன்னனானார். எக்காள ஒலி முழங்கியது. மக்கள் மிகுந்த ஆரவாரம் செய்து மன்னனை வாழ்த்தினார்கள். அந்த ஒலி விருந்துண்டு மயக்கத்தில் இருந்த அதோனியாவுக்கும் அவன் ஆதரவாளர்களுக்கும் கேட்டது.

திடீரென நாட்டில் எழுந்த பேரொலி அவர்களைத் திடுக்கிட வைத்தது. “என்ன செய்தி ? “ என பதட்டத்துடன் வினவியவர்களுக்கு சாலமோன் மன்னனான செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரை தாவீது மன்னனே அரசனாய் அறிமுகப் படுத்தினார் என்பதையும், சாலமோன் இப்போது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதையும் அறிந்தவுடன் அவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். எல்லோரும் சிதறி ஓடினார்கள்.

அதோனியாவின் கண்களில் மரண பயம் தெரிந்தது. ஓடிப்போய் கடவுளின் பலிபீடத்தின் கொம்புகளை இறுகப் பிடித்துக் கொண்டு “நான் கொல்லப்பட மாட்டேன் என்று உறுதி தந்தால் மட்டுமே வெளியே வருவேன்” என்றான்.

“ஒழுங்காக இருந்தால் நீ கொல்லப்பட மாட்டாய்.” என்றார் புதிய மன்னர் சாலமோன்.

அதோனியா உயிர்தப்பினான். ஆனாலும் தனக்கு அரச கிரீடம் கிடைக்கவில்லையே எனும் ஆதங்கமும், கோபமும் அவனுக்குள் உயிரோட்டமாய் இருந்தது. நாட்கள் கடந்தன. அவன் சாலமோனின் தாயான பத்சேபாவிடம் வந்தான்.

“நான் அரசனாக வேண்டிய இடத்தில் சாலமோன் இருக்கிறான். எனக்கு ஒரு வேண்டுதல் உண்டு. தாவீது மன்னனின் கடைசி மனைவியாகிய அபிசாகை எனக்கு மணமுடித்துத் தர சாலமோனிடம் சொல்லுங்கள்” என்றான்.

தாவீது மன்னனின் மனைவியை தன் மனைவியாக்கி, அதன் மூலம் குறுக்கு வழியில் கிரீடம் சூட்டலாமா எனும் அதோனியாவின் குறுக்கு புத்தி பத்சேபாவுக்குப் புரியவில்லை. அவள் சாலமோனிடம் சென்று அதோனிக்கு அபிசாகை மணமுடித்துக் கொடுக்க வேண்டினாள்.

சாலமோன் மன்னனுக்கு விஷயம் சட்டென புரிந்தது. “அதோனியாவின் இந்த வார்த்தைக்காகவே அவன் கொல்லப்படுவான்” என்றார் . உடனே அதோனியாவைக் கொல்ல ஆணையும் இட்டார். அதோனியா கொல்லப்பட்டார்.

நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் கடைசியில் இறைசித்தமே நிறைவேறும் என்பது மீண்டும் அழுத்தமாய் நிரூபிக்கப்பட்டது.