மர்மங்களின் நாயகன் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் பிரித்துப் பார்க்க முடியாது. அஹிம்சையே வெல்லும் என ஒரு சாரார் முடிவெடுக்க வீரமே வெற்றி தரும் என இந்தியாவுக்கு வெளியே சென்று, இந்திய தேசிய ராணுவத்தை’ அமைத்து, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரை மிரள வைத்தவர் அவர். 1897ம் ஆண்டு சனவரி 23ம் நாள் பிறந்த சுபாஷ் சந்திரபோஸின் மரண நாள் என்ன என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தியதி தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் சிக்கி பலியானார் என்பது தான் அறிவிக்கப்பட்ட செய்தி. ஆனால் அப்படி ஒரு விமான விபத்து ஏற்படவே இல்லை என தைவான் அரசே சொல்லி விட்டது. இந்திய மக்கள் மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் நேதாஜியின் இறப்பு குறிந்த தகவலை நம்பவில்லை. ஜப்பான் நாடு தான் நேதாஜி மறைந்துவிட்டார் என‌ வானொலியில் அறிவித்தது. உலக நாடுகளிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக நேதாஜிக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

1945ல் அவர் இறக்கவில்லை 1970ம் ஆண்டு தான் இறந்தார். அதுவும் ரஷ்யாவில் வைத்து இறந்தார் என்கிறது இன்னொரு செய்தி. “ரஷ்யாவின் உதவியை நாடுவதற்காக சீனாவின் மஞ்சூரியா பகுதிக்கு நேதாஜி சென்றார். ஆனால் அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஸ்டாலின், நேதாஜியை சிறையில் தள்ளினார். சில ஆண்டுகளுக்குப் பின் அங்கேயே தூக்கிலிடப்பட்டார்” என்கிற‌து அந்த‌ச் செய்தி.

இல்லையில்லை, நேதாஜி கடைசி காலத்தில் இந்தியாவில் தான் இருந்தார். இந்தியாவிலேயே அவருக்கு எதிரிகள் உருவாகிவிட்டனர். எனவே அவர் வட இந்தியாவுக்குச் சென்று துறவியாய் மாறி தனது கடைசி காலத்தை அமைதியாய்ச் செலவிட்டார். 1985 களில் முதுமையடைந்து மரணமடைந்தார் என்கிறது இன்னொரு கதை.

அனுஜ் தர் எனும் எழுத்தாளர், நேதாஜியின் மறைவின் மர்மங்கள் குறித்து “Back from Dead”, “India’s biggest cover up” என இரண்டு நூல்கள் எழுதினார். நேதாஜியின் மரணம் சரிவர விசாரிக்கப்படவில்லை. அரசுகள் அதில் அக்கறை காட்டவில்லை. வெறுமனே கண்துடைப்புக்காகவே கமிஷன்கள் போடப்பட்டன என்கிறார் அவர்.

முந்தைய‌ அர‌சுக‌ள் எதுவுமே நேதாஜியின் ம‌ர்ம‌ம் குறித்த‌ முழுமையான‌ ஒரு ப‌திலை த‌ர‌வில்லை. எழுப‌து ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ இந்த‌க் கேள்வி இந்திய‌ர்க‌ளின் ம‌ன‌தில் ஓடிக்கொண்டே இருக்கிற‌து. அதை கால‌த்துக்கேற்றப‌டி அர‌சிய‌லாக்குவ‌தைத் த‌விர‌ வேறெதையும் யாரும் செய்ய‌வில்லை.

இத்த‌னை ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌ன‌, இனிமேலாவ‌து நேதாஜி ம‌ர‌ண‌ம் குறித்த‌ முழுமையான‌ செய்தியை வெளியிடவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். த‌மிழ‌க‌த் த‌லைவ‌ர்க‌ள் ப‌ல‌ரும் கூட‌ நேதாஜியின் ம‌ர்ம‌ம் குறித்த‌ த‌க‌வ‌ல்க‌ளை வெளியிட‌ வேண்டும் என‌ ம‌த்திய‌ அர‌சுக்கு நெருக்க‌டி கொடுத்த‌ன‌ர். மத்திய அரசுக்கு அது ஒரு பெரிய தர்மசங்கடமாய் மாறிப்போனது. நேருவின் அரசு, நேதாஜியின் குடும்பத்தை உளவு பார்த்தது என சொல்லப்படும் தகவல் தான் இந்தப் பிரச்சினை மீண்டும் முளை விடக் காரணம்.

நேதாஜி குறித்து மொத்தம் 130க்கும் மேற்பட்ட‌ ரகசிய ஆவணங்கள் அரசிடம் உள்ளன‌. அதில் சில ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை. அவை வெளியே வந்தால் வெளிநாடுகளுடனான உறவுகள் பாதிக்கப்படும் என தற்போதைய அரசு அதை வெளியிட மறுத்து வருகிறது.

இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நேதாஜி ப‌ற்றிய ஆவணங்களை வெளியிடுவேன்” என அறிவித்தார். மத்திய அரசு திடுக்கிட்டது. ஒரே அறிவிப்பின் மூலம் மம்தா பானர்ஜி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்தார். சொன்னபடியே நேதாஜி குறித்த ஆவணங்களில் 64 ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கென வெளியிட்டார்.

இந்தச் செயல் ‘எழுபது ஆண்டுகாலம் யாரும் செய்யாத ஒரு செயலை செய்த தலைவர்’ எனும் மிகப்பெரிய இமேஜை மம்தாவுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. டெல்லி முத‌ல்வ‌ர் கெஜ்ரிவாலும் உட‌ன‌டியாக‌ ஒரு பாராட்டு டுவிட்ட‌ரை அனுப்பி ம‌க்க‌ளின் ஆத‌ர‌வில் க‌ல‌ந்து கொண்டிருக்கிறார்

மேற்கு வ‌ங்க‌ ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌ல் நெருங்கும் சூழ‌லில் ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ செய‌லின் மூல‌மாக‌ த‌ன்னை ஒரு ஆளுமையுடைய‌ த‌லைவ‌ராக‌க் காட்டிக்கொண்டிருக்கிறார் ம‌ம்தா. இத‌ன் மூல‌ம் நேதாஜி ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் ஆத‌ர‌வை ச‌ட்டென‌ ஈர்த்திருக்கிறார் என்று சொல்ல‌லாம். இத‌ன் ப‌தில‌டியாக‌ மிச்ச‌முள்ள‌ ஆவ‌ண‌ங்களில் சிலவற்றை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வெளியிடலாம் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் 12,744 பக்கங்கள் கொண்டவை. 1937ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டுவரையிலான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. நேதாஜி குறித்த பொதுவான தகவல்களுடன், 1941ம் ஆண்டுக்குப் பிறகு நேதாஜி குறித்து உளவாளிகள் சொன்ன ரகசியத் தகவல்கள் பலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த முதல்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களில் நேதாஜி குறித்து மேலும் ப‌ல தகவல்கள் கிடைத்திருக்கின்ற‌ன‌.

அதில் முக்கிய‌மான‌து, “நேதாஜி 1945ல் இற‌க்க‌வில்லை” எனும் த‌க‌வ‌ல். 1945க்குப் பிற‌கும் நேதாஜிக்கும், அவ‌ருடைய‌ குடும்ப‌த்தின‌ருக்கும், சில‌ உல‌க‌ நாடுக‌ளுக்கும் இடையே உள்ள‌ சில‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ங்க‌ள் அதை ஊர்ஜித‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌. இன்னொன்று நேதாஜி தொட‌ர்ந்து க‌ண்காணிக்க‌ப்ப‌ட்டார் எனும் த‌க‌வ‌ல்.

இப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் இரண்டு மடங்காகியிருக்கிறது. மீதமுள்ள ஆவணங்களில் ஜப்பான், ஜெர்மனி, மலேஷியா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நேதாஜி கொண்டிருந்த தொடர்புகளும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அந்த நாடுகளுக்கு இருந்த ஈடுபாடும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது வெளியானால் நாடுகளுக்கிடையேயான நல்லுறவு பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்பதே மத்திய அரசு சொல்லும் காரணமாகும்.

ம‌ம்தா அர‌சு வெளியிட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் இணைய‌த‌ள‌த்தில் ப‌திவேற்ற‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌. அத‌ன் பின் ஆவ‌ண‌ங்க‌ள் குறித்த‌ நுணுக்க‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகும். இப்போது வெளியிடப்ப‌ட்ட‌ த‌க‌வல்க‌ளுக்காக‌ நேதாஜியின் குடும்ப‌ம் அர‌சுக்கு ந‌ன்றி தெரிவித்திருக்கிற‌து.

ஒரு மாபெரும் தலைவரின் கடைசி காலம் குறித்த உண்மையை அறியும் உரிமை சுதந்திர நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதுவும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தோடு தம்மைத் தொடர்பு படுத்திக் கொண்டுள்ள தமிழினத்துக்கு நிச்சயம் உண்டு.

அதே நேரத்தில், சர்வதேச உறவுகள் பாதிக்கப்படாமல், ஒரு உணர்வு நிலையிலான எழுச்சி நாட்டில் எழாமல் நிலமையைக் கையாளவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இரண்டையும் கருத்தில் கொண்டு இந்திய அரசு சரியான தகவல்களில், தேவையான தகவல்களை உடனே வெளியிடவேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி : நம்ம அடையாளம்

ஊனமாக்கும் ஊடகங்கள் ( Vettimani Magazine : London )

Media

 

 

சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம்.

சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வைக்கிறதா ?

பெண்கள் சமூகத்தின் கண்கள். பெண்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்கள் குடியிருக்கும் வீடுகள் தான் அன்பினால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் கலந்திருக்கும் சமூகம் தான் நிறைவை அடைகிறது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. மனித அன்பின் உச்ச நிலையான தாயும் சரி, மனித வாழ்க்கையின் மகத்துவமான மகளும் சரி, மனித பயணத்தின் மகிழ்வான மனைவியும் சரி பெண்மையின் வைர வடிவங்களே. ஆனால் அந்தப் பெண்கள் இன்று ஆண்களின் கரங்களில் சிக்கி அழிவதைக் காணும்போது ச‌மூக‌ம் அவ‌மான‌ப்ப‌டுகிற‌து.

டெல்லியில் கூட்டுப் பாலிய‌ல் வ‌ன்முறை ஒரு பெண்ணின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ போது இந்திய‌ தேச‌ம் கொந்த‌ளித்த‌து. வெளிச்ச‌த்துக்கு வ‌ராத‌ எத்த‌னையோ ஆயிர‌ம் இத்த‌கைய வ‌ன்கொடுமைக‌ள் இந்தியாவின் ஒவ்வோர் மாநில‌த்திலும் ந‌ட‌ந்து கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. ச‌மீப‌த்தில் இல‌ங்கையில் ஒரு ப‌தின் வ‌ய‌துச் சிறுமியின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கூட்டு பாலிய‌ல் வெறியாட்ட‌ம் ஆன்மாக்க‌ளை அதிர‌ வைத்திருக்கிற‌து. ம‌ல‌ரினும் மெல்லிய‌ள் என‌ க‌விதையில் பெண்ணைப் பாராட்டி விட்டு, மோக‌த்தின் பூட்ஸ் கால்க‌ளால் அவர்களை ந‌சுக்குவ‌தைக் காண்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்றே இத‌ய‌ம் க‌த‌றுகிற‌து.

த‌ன் ச‌கோத‌ரிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ கொடுமை க‌ண்டு ப‌த‌றித் த‌விக்க‌ வேண்டிய‌ ச‌மூக‌ம் அதை ப‌ட‌மெடுத்து ஃபேஸ் புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளாக‌வோ, வாட்ஸப் த‌க‌வ‌ல்க‌ளாக‌வோ அனுப்பிக் கொண்டிருக்கிற‌து. வ‌ன்கொடுமை ந‌ட‌ப்ப‌தைக் க‌ண்ட‌தும் ப‌த‌றிப் போய் த‌டுக்க‌ வேண்டிய‌ கைக‌ள் இன்று ஸ்மார்ட் போன்க‌ளில் ப‌ட‌ம் பிடிப்ப‌தையே முத‌ல் வேலையாய்ச் செய்கின்ற‌ன‌. புலிக் கூட்டில் விழுந்து விட்ட‌ வாலிப‌னை மீட்காம‌ல் அவ‌னை புலி என்ன‌ செய்கிற‌து என‌ ப‌ட‌ம் எடுத்துக் கொண்டிருந்த‌ அவ‌மான‌ச் ச‌மூக‌ம‌ல்லவா இது !

அதைத் தான் ஊட‌க‌ங்க‌ளும் செய்கின்ற‌ன‌. வ‌ன்கொடுமைக்கு ஆளான‌ ச‌கோத‌ரியை அவ‌ளுடைய‌ வ‌ர‌லாறை முழுக்க‌ முழுக்க‌ ப‌திவு செய்தும், திரும்ப‌த் திரும்ப‌ அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளைக் காட்டியும், குறுப்படங்களில் தலைகுனிய வைத்தும், மேலும் மேலும் அவ‌ளை அழித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌. துபாய் போன்ற‌ நாடுக‌ளில் ஒரு விப‌த்துப் ப‌ட‌த்தைக் கூட‌ ப‌த்திரிகையில் போட‌ அனும‌தி இல்லை. ஆனால் சுத‌ந்திர‌த்தில் திளைக்கும் ந‌ம‌து தேச‌ங்க‌ள் தான் “பிரேக்கிங் நியூஸ்” போட்டுப் போட்டு ம‌ன‌சாட்சியே இல்லாம‌ல் குடும்ப‌த்தின‌ரை மீளாத் துய‌ர‌த்தில் இற‌க்கி விடுகின்ற‌ன‌.

அத்துட‌ன் ஊட‌க‌ங்க‌ள் நிற்ப‌தில்லை. “இந்த‌ வ‌ன்கொடுமைக்கு அந்த‌ப் பெண் அணிந்திருந்த‌ மிடி தான் கார‌ண‌மா ?” என‌ நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு விவாத‌ம் எனும் பெய‌ரில் ச‌மூக‌ம் இழைத்த‌ கொடுமைக்கு அந்த‌ப் பெண்ணையே குற்ற‌வாளியாக்கியும் விடுகின்ற‌ன‌ர். வெட்க‌ம் கெட்ட சில த‌லைவ‌ர்க‌ள் “பெண்கள் த‌வ‌றிழைக்க‌த் தூண்டினால் ஆண்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்” என‌ குரூர‌ப் பேட்டிக‌ளையும் த‌வ‌றாம‌ல் கொடுக்கின்ற‌ன‌ர்.

ஒரு பெண்ணை ச‌கோத‌ரியாக‌வோ, ம‌க‌ளாக‌வோ, தாயாக‌வோ பார்க்க‌த் தெரியாத‌ ம‌னித‌ன் இந்த‌ பூமியின் சாப‌க்கேடு. அத்த‌கைய‌ பிழைக‌ளுக்கு ஒத்து ஊதும் த‌லைவ‌ர்க‌ள் ம‌னுக்குல‌த்தின் வெட்க‌க்கேடு.

ஒரு அதிர‌டியான‌த் த‌க‌வ‌ல் த‌ங்க‌ள் ஊட‌க‌த்தின் வீச்சை அதிக‌ரிக்கும், ரேட்டிங்கை எகிற‌ச் செய்யும் என்ப‌த‌ற்காக‌ ம‌னிதாபிமான‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்து விட்டு நாள் முழுதும் நீட்டி முழ‌க்கும் ஊட‌க‌ங்க‌ள் ச‌ற்றே நிதானித்துச் சிந்திக்க‌ வேண்டும்.

த‌ங்க‌ளுடைய‌ நோக்க‌ம் கொடுமை இழைக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நீதி வ‌ழ‌ங்க‌ வேண்டும் எனும் நோக்கில் இருக்கிற‌தா ? இல்லை ஊட‌க‌த்திற்குத் தீனி போட‌வேண்டும் எனும் நிலையில் இருக்கிற‌தா ?. ஒருவேளை இத்த‌கைய‌ கொடுமை ந‌ம‌து இல்ல‌த்தில் நிக‌ழ்ந்தால் இதே நிக‌ழ்ச்சியை இப்ப‌டித் தான் கையாள்வோமா ? இல்லை க‌ண்ணீரோடு ப‌திவு செய்வோமா ? போன்ற‌ சில‌ அடிப்ப‌டை கேள்விக‌ளை எழுப்ப‌ வேண்டும். சரியானதை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்யும் சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

கான்பூர் இர‌யில் நிலைய‌த்தில் மின்சார‌ம் தாக்கி ஒரு குர‌ங்கு செய‌லிழ‌ந்து விழுந்த‌து. ப‌த‌றிப் போன‌ இன்னொரு குர‌ங்கு அதை உலுக்கி, அடித்து, த‌ண்ணீர் தெளித்து, க‌த‌றி நீண்ட‌ நெடிய‌ இருப‌து நிமிட‌ போராட்ட‌த்துக்குப் பின் அதை உயிருட‌ன் மீட்ட‌து. ஒரு குர‌ங்கு த‌ன‌து ச‌க‌ குர‌ங்கின் மீது காட்டிய ப‌ரிவும், அக்க‌றையும், அன்பும் ம‌னித‌ குல‌த்துக்கான‌ பாட‌ம‌ல்ல‌வா ? ஆறாவ‌து அறிவு ஆப‌த்தான‌தா ? ஐந்த‌றிவே அற்புத‌மா ?

நிறுத்தி நிதானிப்போம். வாழ்க்கை என்ப‌து ந‌ம‌து ஸ்மார்ட்போன்க‌ளில் இல்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளில் இல்லை. ந‌ம‌து உற‌வு என்ப‌து வாட்ஸ‌ப் த‌க‌வ‌ல்க‌ளில் இல்லை. ஐம்புல‌ன்க‌ளின் உரையாட‌லில் இருக்கிற‌து. கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி உற‌வுக‌ளை வ‌ள‌ர்ப்போம். வ‌லையில் சிக்கிய‌ ப‌ற‌வை சிற‌கை இழ‌க்கிற‌து. இணைய‌ வலையில் சிக்கிய மனிதர்கள் உற‌வை இழ‌க்கிறார்க‌ள். உண‌ர்வோடு இணைந்து வாழ்பவ‌ர்க‌ளுக்கு அடுத்த‌வ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை வெறும் வேடிக்கைத் த‌க‌வ‌லாய் இருப்ப‌தில்லை. வேத‌னைத் த‌க‌வ‌லாய் தான் இருக்கும்.

தொழில் நுட்ப‌த்தை நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ரை அது ந‌ம‌க்குப் ப‌ய‌ன‌ளிக்கும். தொழில்நுட்ப‌ம் ந‌ம்மை ப‌ய‌ன்ப‌டுத்த‌த் துவ‌ங்குகையில் வாழ்க்கை ப‌ய‌ம‌ளிக்கும். தொழில் நுட்ப‌ம் ந‌ம‌து ப‌ணியாள‌னாய் இருக்க‌ட்டும், அன்பு ம‌ட்டுமே ந‌ம‌து எஜ‌மானாய் இருக்க‌ட்டும்.

அன்பின்றி அமையாது உல‌கு.

என்ன நடக்கிறது கிரீஸில் ?

greek

 

தாங்கள் சேமித்த பணம் பத்திரமாக இருக்க வேண்டும், தேவையான நேரத்தில் தமக்கு உதவ வேண்டும் என்பது தான் சாமானியர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற எதிர்பார்ப்பு. அதனால் தான் பைனான்ஸ் நிறுவனங்களை நம்பாமல், தேசிய வங்கிகளில் பணத்தைச் சேமியுங்கள் என பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.

அப்படி வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தினால் கூட எந்த ஒரு பயனும் இல்லாமல் போகலாம் எனும் நிலமை ஒரு தேசமே திவாலானால் நடக்கும் ! அப்போது வங்கிகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் எல்லாம் வெறும் எண்களாக மாறிவிடும். இலட்சக்கணக்கான பணம் வங்கியில் இருந்தால் கூட அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் எடுக்க முடியாத கொடுமை நேரிடும்.

அந்த நிலமையில் தான் கிரீஸ் இப்போது சிக்கித் தவிக்கிறது. தத்துவஞானி சாக்ரடீஸ் பிறந்த மண் இன்று கடனில் சிக்கித் தவிக்கிறது. அதி பலசாலி ஹெர்குலிஸின் தேசம் இன்று வலுவிழந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு 60 யூரோவுக்கு மேல் ஏடிஎம்மில் எடுக்க முடியாது, வேறு நாடுகளுக்கு ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது உட்பட பல்வேறு நிபந்தனைகள் கிரீஸ் நாட்டு மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர்.

2008களில் உலகமே பொருளாதார வீழ்ச்சியில் உடைந்து பதறியபோதும் கிரீஸ் சமாளித்து நின்றது. ஆனால் அதன் பின் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி வேகமாக வலுவிழக்க ஆரம்பித்தது. நெகடிவ் 1.2 சதவீதம் எனுமளவுக்கு அடுத்த ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி இருந்தது.

2010ல் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்), ஐரோப்பிய வங்கி (ஈ.சி.பி) மற்றும் ஐரோப்பிய கமிஷன் இணைந்து நூற்று பத்து பில்லியன் யூரோவை கடனாக வழங்கின. மூன்று வருடங்களுக்குள் பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும் எனும் கந்து வட்டிக் கண்டிப்புடன்.

கிரீஸ் தன்னால் இயன்ற பல நடவடிக்கைகளை எடுத்தது. தொழிலாளர்களின் போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றை நிறுத்தியும், சேவை வரியை உயர்த்தியும், சில திட்டங்களை தாமதப்படுத்தியும் சமாளிக்கப் பார்த்தது. ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. யானைப் பசிக்குப் போட்ட சோளப்பொரி போல அது காணாமல் போய்விட்டது.

2012ல் மீண்டும் ஒரு 130 பில்லியன் யூரோவை கடனாய் வாங்கியது கிரீஸ். அதை வைத்துக் கொண்டும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் காட்ட முடியவில்லை. தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கே அது தேவைப்பட்டது. கடன் வாங்கிக் கடன் வாங்கி வாழும் குடும்பம் நடுத்தெருவிற்கு விரைவிலேயே வந்து விடுவது போல கிரீஸ் நான்கு பேர் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

ஜெர்மனிக்கு 68.2 பில்லியன், பிரான்ஸ் க்கு 43.8 பில்லியன், இத்தாலிக்கு 38.4 பில்லியன், ஸ்பெயினுக்கு 25 பில்லியன்,அமெரிக்காவுக்கு 11.3 பில்லியன், இங்கிலாந்துக்கு 10.8 பில்லியன் உட்பட சுமார் 270 பில்லியன் யூரோ கடன் இப்போது கிரேக்கத்தின் தலையில்.

சரி, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம், காட்சி மாறுகிறதா பார்க்கலாம் என இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த தேர்தலில் மாற்று ஆட்சி யான இடதுசாரியின் அலெக்சிஸ் சிப்ரஸ் பதவிக்கு வந்தார். அவரிடமும் வறுமையையும் கடனையும் சட்டென அடைக்கும் மந்திரக் கோல் இல்லை.

ஒரு நாலு மாசம் கழிச்சு பணத்தைக் கொடுத்துடறேன் என கேட்டு வாங்கிய தவணையும் ஜூன் 30ம் தியதியோடு நின்று போக, கடன் கொடுத்தவர்கள் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்தார்கள். கடன் கொடுக்க முடியாவிட்டால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளைக் கேள் என நிர்ப்பந்தம் கொடுத்தனர்.

அவர்களுடைய நிபந்தனை ரொம்ப சிம்பிள். “மக்களுடைய வயிற்றில் அடித்து எங்கள் கடனை அடை !” என்பது தான் அவர்களுடைய நிர்ப்பந்தம்.

முதலாளித்துவம் வரியைக் கூட்டு, பென்ஷனை குறை, ரிட்டயர்ட்மென்ட் வயதை அதிகரி என ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நிற்க, எளியவர்களோ வங்கியில் கிடக்கும் கொஞ்சம் பணத்தைக் கூட பயன்படுத்த முடியாமல் திகைத்தனர்.

கடன்கொடுத்தவர்களின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வதா வேண்டாமா என்பதை அறிய அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நேரிடும். இப்போதைய கரன்சியை மாற்ற வேண்டியிருக்கும். பணவீக்கம் சுனாமியாய் தாக்கும். வெளிநாட்டு உதவிகளெல்லாம் நின்று போகும் என ஏகப்பட்ட சிக்கல்கள்.

ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் 25 சதவீதம் எனவும், குழந்தை வறுமை நிலமை 40 சதவீதம் எனவும் திணறிக் கொண்டிருக்கையில் உலகத்தின் கோபத்தையும் சம்பாதிக்க வேண்டுமா எனும் குழப்பம் ஒரு பக்கம். மக்களோ அரசின் பக்கம் நின்றார்கள். 61 சதவீதத்துக்கும் ஆதிகமானோர் அரசின் சார்பாய் வாக்களித்தார்கள்.

மக்களின் வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் பறித்து வட்டியாக கட்டிய பணம் பல்லாயிரம் கோடி. ஏற்கனவே கிரீஸ் நாடு சுகாதாரத்துக்காக செலவிடும் பணத்தையும், மருத்துவத்துக்காகச் செலவிடும் பணத்தையும் பாதிக்கு மேல் குறைத்திருந்தது. இதனால் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்தும், குழந்தைகள் இறந்தே பிறக்கும் விகிதம் அதிகரித்தும் இருக்கிறது.

இருந்தாலும் உலக நாடுகள் கிரீஸிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. இத்தகைய சூழலில், கிரீஸ் மக்களின் உறுதியான நிலைப்பாடு உலக நாடுகள் எதிர்பாராத ஒன்று. ஐரோப்பிய யூனியன் பெருந்தலைகள் இந்த முடிவினால் சற்று நிலைகுலைந்து போயிருக்கின்றன. யூரோவின் மதிப்பு சட்டென ஒரு சிறு சறுக்கலையும் சந்தித்திருக்கிறது.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கிரீஸுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றன. இந்த நாடுகளும் தங்கள் தலையில் கடனை வைத்திருக்கின்றன. இங்கும் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இல்லை. ஒரு வேளை நாமும் நாளை நடுத்தெருவில் நிற்கலாம் எனும் அச்ச உணர்வே இதன் காரணம். இப்படி ஐயோப்பிய யூனியன் இரண்டாக உடைந்தால் அதனால் பயனடையப் போவது அமெரிக்காவின் டாலர் என்பதும், வலுவிழக்கப் போவது யூரோ என்பதும் தான் ஐரோப்பிய யூனியனை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாடுகள் கைவிட்டால் கிரீஸின் நிலமை இன்னும் மோசமாகி விடும் அபாயம் உண்டு. கிரீஸுக்கென தனி கரன்சி இல்லை. யூரோவே அங்கு பணமாக பயன்படுத்தப்படுகிறது. கிரீஸை ஆதரிப்பதில்லை என நாடுகள் முடிவெடுத்தால் அதன் வங்கிகளில் பணம் இருக்காது. மக்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாய் முடங்கும். அரசு அவசர அவசரமாக புதுப் பணத்தை அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டியிருக்கும். அது அவ்வளவு எளிதானதல்ல. இப்படி அடுக்கடுக்காய் இமாலயப் பிரச்சினைகள் அவர்கள் தலையில்.

இத்தகைய சூழலில் கிரீஸ் நாட்டில் மக்களிடையே உருவாகியுள்ள எழுச்சி உலக வரலாற்றில் முக்கியமானது. உள்நாட்டு வளங்களைச் சார்ந்த வாழ்க்கை முறையை நாடுகள் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை கிரீஸ் நாட்டின் இன்றைய நிலமை நெற்றிப் பொட்டில் அறைந்து உணர்த்தியிருக்கிறது.

மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கிரீஸுக்கு மனரீதியான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால் பண உதவி கிடைக்காவிட்டால் அவர்களால் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர முடியாது. எனவே கிரீஸ் நாடாளுமன்றம் மீண்டும் கூடி கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைகளை ஏறக்குறைய ஏற்றுக் கொண்டும், சிலவற்றை மாற்றியும் புதிய ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தப் பட்டியலை அளித்திருக்கிறது.

இந்த புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால் நாடுகள் மீண்டும் ஒரு முறை தங்களுக்கு 53.3 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை கிரீஸ் வைத்திருக்கிறது. ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீண்டும் கடனுதவி கிடைத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சியிலிருந்து கிரீஸ் ஓரளவு மீண்டு வரும் என்பது வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.

இதற்கிடையே வங்கியில் கிடக்கும் பணம் தங்களுக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் பதட்டம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. எனவே அவர்கள் தங்களுடைய கிரடிட், டெபிட் கார்ட்களைப் பயன்படுத்தி தங்கமாகவோ, வைரமாகவோ, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாகவோ வாங்கிக் குவித்து வருகின்றனர். அதே நேரம் பணமாகக் கொடுக்க வேண்டிய இடங்களில் செலவுகளைக் குறைத்து வருகின்றனர். குறிப்பாக பார்கள், திரையரங்கங்கள், நாடக இடங்களெல்லாம் ஈயோட்டுகின்றன.

கிரீஸின் வீழ்ச்சி உலக அளவில் பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். கிரீஸைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சீன பொருளாதாரத்தில் நிலவி வரும் சறுக்கல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. டாலருக்கு நிகரான யென் மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி நேர்ந்திருக்கிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கமும் விலை வீழ்ச்சி அடையும் சூழல் உருவாகியிருக்கிறது.

உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்காமல், விவசாயத்தை வளப்படுத்தாமல், சிறு தொழில்களை மேம்படுத்தாமல் முதலாளித்துவத்தின் கைவிசிறிகளாகச் செயல்படும் எந்த நாடும் இத்தகைய சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம் என்பதன் எச்சரிக்கை மணி இது.

*

 

சேவியர்

( Thanks : Namma Adayalam )

 

 

 

 

 

 

ராகுல் காந்தி : என்னுடைய புதிய நூல்

 

ராகுல் காந்தி – மாற்றங்களின் நாயகன் எனும் என்னுடைய புதிய நூல் ஒன்று வெளியாகியிருக்கிறது. பிளாக் ஹோல் மீடியா பதிப்பகத்தின் வழியாக வெளியாகியிருக்கும் இந்த நூல் ராகுல் காந்தியின் தனி வாழ்க்கையையும், அவருடைய அரசியல் வாழ்க்கையையும் அலசுகிறது.

ராகுல் காந்தியைக் குறித்து தமிழில் வெளியாகும் முதல் நூல் இது என்று நினைக்கிறேன்.

வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். வாசித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

 

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

Please Vote

ஜூ.வி : அமெரிக்க அதிர்ச்சி !

k1கல்லறைப் பயணத்துக்கும் காசில்லை

“சொல்லவே மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அண்ணன் தற்கொலை பண்ணிகிட்டார். ஏதோ பணக் கஷ்டத்துல இருந்திருக்கார் போல. தலையில துப்பாக்கியை வெச்சு சுட்டிருக்கார். உயிர் போயிடுச்சு. அவரோட அறையில இருந்து உங்க அட்ரஸ் கிடச்சுது. இப்போ அவரோட உடல் இங்கே மார்ச்சுவரில தாஇருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” மெதுவாய் பேசுகிறது குரல்.

“ஐயோ..என் அண்ணனா ? இறந்துட்டாரா ?” மறுமுனையில் பெண்ணின் குரல் பதறுகிறது.

“ஆமாம்மா. உடம்பு இங்கே தான் இருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” குரல் மறுபடியும் அமைதியாய் ஒலிக்கிறது.

மறுமுனையில் கொஞ்ச நேரம் மௌனம். பின் இறுகிய குரல் விசும்பலுடன் பேசத் துவங்குகிறது

“என் கிட்டே பணமே இல்லை. அவரோட இறுதிச் சடங்கை செய்ய எனக்கு வசதியும் இல்லை. அவரோட இறுதிச் சடங்கை நீங்களே செஞ்சுடுங்க. கொஞ்சம் அன்போட செய்யுங்க பிளீஸ்…” அழுகையுடன் மறுமுனை போன் வைக்கப்படுகிறது.

இது ஏதோ ஒரு அவார்ட் திரைப்படத்தில் வரும் சோகக் காட்சியல்ல. ஆப்பிரிக்கா, சோமாலியா போன்ற நாடுகளின் குடிசைகளிலிருந்து ஒலிக்கும் குரலுமல்ல. இந்த குரல் ஒலிப்பது சாட்சாத் அமெரிக்காவிலிருந்து ! இது ஒரு அபூர்வ நிகழ்வும் அல்ல. இப்படிப் பட்டப் பேச்சைத் தினமும் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது என்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் எவர்கிரீன் கல்லறைத் தோட்ட நிர்வாகி ஆல்பர்ட் காஸ்கின்

உலகின் வல்லரசு. பெரிய அண்ணன். நிலவுக்கே கூட சட்டென போய்வரக் கூடிய வசதி. நினைத்த நேரத்தில் வேண்டாத நாட்டின் தலையில் குண்டு போடக் கூடிய கர்வம். வரிசை வரிசையாய் கண்ணாடி மாளிகைகள். டாலர் கட்டுகள். கோட் சூட்டுகள். இப்படிப் பார்த்துப் பார்த்தே பழகிப் போன அமெரிக்கா இப்போது நொடிந்து கிடக்கிறது.

அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சில ஆண்டுகளுக்கு முன் யாரேனும் சொல்லியிருந்தால் அது முதல் பரிசு பெறக் கூடிய நகைச்சுவையாய் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கோ அது கசப்பான உண்மையாகியிருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்கிக் கொண்டிருந்த வங்கிகளுக்குத் தான் ஆரம்பித்தது முதல் சிக்கல். யாருமே பணம் திருப்பிக் கட்டாமல் வங்கிகள் திவாலாயின. காட்டுத் தீயாய் பரவிய இந்த அழிவு, பிற வங்கிகள், ஆட்டோ மொபைல், கிரெடிட் கார்ட் என எதையும் விட்டு வைக்கவில்லை. இந்த டிராகனின் தீப்பிழம்புகளிலிருந்து தப்பிப் பிழைத்தவை வெகு சொற்பமே. காய்ந்து போன இலைகளைப் போல வேலைகளிலிருந்து மக்கள் உதிர ஆரம்பித்தார்கள். இன்றைய தேதியில் வேலையில்லாமல் பரிதவிக்கும் அமெரிக்கர்கள் சுமார் 10 சதவீதம் பேர் !

ஐந்து நாள் வேலை, இரண்டு நாள் கொண்டாட்டம் என இருந்த அமெரிக்கர்களுக்கு வேலையில்லையேல் என்ன செய்வதென புரியவில்லை. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக் கூட கையில் பணமில்லாமல் புலம்ப வேண்டிய நிலமை. வேலை இருந்த வரைக்கும் கம்பெனி மருத்துவக் காப்பீடு கொடுத்து வந்தது. வேலையில்லையேல் கைக்காசை வைத்துக் கொண்டுதான் அதையும் வாங்க வேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லையேல் எப்படி மருத்துவக் காப்பீட்டுக்கு மாதா மாதம் பிரீமியம் கட்டுவது ?

மருத்துவக் காப்பீடு இல்லாமல் மருத்துவ மனைக்குப் போனால் அவ்வளவு தான். தீட்டித் தள்ளி விடுவார்கள். இன்றைய தேதியில் சுமார் 57 சதவீதம் அமெரிக்கர்கள் தேவையான் மருத்துவக் காப்பீடு வாங்கப் பணமில்லாமல் இருக்கிறார்கள் என்கிறது “காமன்வெல்த் ஃபண்ட்” நடத்திய ஆய்வு.

மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களுக்கு விபத்தோ, பெரிய நோயோ வந்துவிட்டால் சாவு ஒன்று தான் முடிவு. அமெரிக்காவில் சமீப காலமாக நடக்கும் பெரும்பாலான தற்கொலைகளுக்கும் காரணம் இந்த திடீர் ஏழ்மையே. தற்கொலைகளுடனும் எல்லாம் முடிந்து போவதில்லை. அவற்றைத் தொடர்கின்றன அடக்கம் செய்யக் கூட முடியாத துயரக் கதைகள். விபத்திலோ, நோயிலோ பலியான சகோதரர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் என பல உடல்களால் நிரம்பி வழிகின்றன மார்ச்சுவரிகள்.

“பணமில்லை, நீங்களே இறுதிச் சடங்கைச் செய்யுங்களேன் பிளீஸ்” என கண்ணீருடன் கெஞ்சுபவர்களின் எண்ணிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 36 சதவீதம் அதிகம். இறுதிச் சடங்கு செய்யவேண்டுமென்றால் செலவு அப்படி இப்படி சுமார் 10,000 டாலர்கள் ஆகிவிடும். அதை அரசாங்கம் செய்துவிட்டால் சாம்பலை மட்டும் ஒரு மாதம் கழிந்து சென்று வாங்கிக் கொள்ளலாம். அதற்கான செலவு சுமார் 350 டாலர்கள் மட்டுமே.

“என்னிடம் அப்பாவை எரிக்கக் கூட பணம் இல்லை என மகன் சொல்கிறான். மகனை எரிக்கப் பணம் இல்லை என்று அம்மா சொல்கிறார். இப்படி ஒரு கொடூரமான துயரத்தை நான் சந்தித்ததேயில்லை என நிலைகுலைந்து போய் பேசுகிறார் டேவிட் ஸ்மித் எனும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர இன்வெஸ்டிகேட்டர்.

“பன்னிரண்டு வருடங்களாக “இறுதிச் சடங்குகளை நடத்தும் குழு”வின் இயக்குனராக இருக்கிறேன். இதுவரை இப்படி அதிக எண்ணிக்கையில் பிணங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததே இல்லை. இறுதிச் சடங்குகளை நடத்த எல்லோருமே விரும்புகிறார்கள், ஆனால் பாவம் வசதியின்றித் தவிக்கிறார்கள்” என பதறுகிறார் பாப் ஆச்சர்மான்

இப்படி அடுக்கடுக்காய், திகில் நிரம்பிய, பரபரப்புத் தகவல்களை வெளியிட்டிருப்பது கலிபோர்னியாவின் முன்னணி நாளிதழான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ். கையில் பணமில்லை. வாழ வழியில்லை. அப்படியே செத்துப் போனால் கூட இறுதிச் சடங்கு செய்யவும் பணமில்லை. இப்படி அடுக்கடுக்கான துயரங்களுடன் தான் நகர்கிறது இன்றைய அமெரிக்கர்களின் வாழ்க்கை.

தமிழிஷில் வாக்களிக்க…

திமுகவுக்கு 30 இடங்கள் ! சி.ஐ.டி ரிப்போர்ட்டால் அதிமுக அதிர்ச்சி !

 karunanidhi3

தமிழகம் முழுவதும் தேர்தல் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொழுத்த வேட்டை அடித்திருப்பது சி.ஐ.டி ரிப்போர்ட் தயாரிப்பவர்களுக்குத் தான் போலிருக்கிறது.

இந்தத் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு ? இந்தத் தொகுதியில் வெல்லப் போவது யார் ? நேற்று எனது நிலை என்ன ? இன்று அவனது நிலை என்ன ? என எல்லா இடங்களிலிருந்தும் வந்து குவியும் “பிசினஸ்” கால்களால் பிஸி யின் உச்சத்தில் இருக்கின்றனர் அவர்கள்.

தேர்தல் துவங்கிய நேரத்தில் திமுக வுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்திருந்த அவர்கள் கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில் அதிமுக கூட்டணியின் கை ஓங்கியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த அறிக்கைக்குப் பின் திமுக சுதாரித்துக் கொண்டு மீண்டும் ஓடியது. கலைஞரும் உற்சாகக் கட்டுரைகளை உடன் பிறப்புக்களுக்காய் அள்ளி வீசினார். சுதாரித்து ஓடிய திமுக கையிலெடுத்த ஆயுதம் அரசு ஊழியர்கள்!

அரசுப் பணியாளர் அமைப்புகள் அனைத்தையும் சந்தித்து, வெளிப்படையான ஆதரவு கேட்டும், அதிமுக காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பட்டியலிட்டும் விவாதங்கள் நிகழ்ந்தன.

அரசு அலுவலர்கள் அமைதியாய் இருந்தால் அவர்கள் அதிமுக ஆதரவாளர்கள் போல ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டு விடும் இதன் மூலம் திமுக வலுவிழந்து போகும் என தகவல்கள் பரிமாறப்பட்டு அவர்களை லாவகமாக திமுகவின் பக்கம் இழுத்திருக்கின்றனர்.

அரசு அலுவலர்களும் தங்கள் தழும்புகளைத் தடவிக்கொண்டே திமுகவுக்கு ஆதரவளிக்க உறுதியளித்தார்களாம்.

கூடவே ஈழத் தமிழர் பிரச்சாரம், தமிழ் செல்வன் மறைவுக் கவிதை, அது இது என எல்லா பிரயோகங்களையும் திமுக நாலா புறங்களிலும் வீசி முடிந்தவரைக்கும் மீன்பிடிக்க முயல்கிறது.

வடமாநிலத் தலைவர்களின் தமிழகப் பிரச்சாரம் போன்றவையும் திமுகவை வலுப்படுத்தியிருக்கிறதாம்.

எதிரணி தரப்பில் பெரும்பாலும் நிகழும் தனிமனிதத் தாக்குதல்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லையாம். அதிலும் கலைஞரின் உடல்நலக் குறைபாடை விமர்சித்த பேச்சுகள் மக்கள் மத்தியில் எதிர் அலையையே உருவாக்கியிருக்கிறதாம்.

இப்படி நடந்த களேபர மாற்றங்களினால் இடைப்பட்ட வாரத்தில் தடுமாறிய திமுக மீண்டும் எழுந்து முப்பது இடங்களைப் பிடிக்கக் கூடிய நிலையில் இன்றைக்கு இருக்கிறதாம்.

இப்படி அக்கு வேறு ஆணி வேறாக தமிழகம் முழுவதும் உள்ளம் தகவல்களுடன் வந்திருக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட் திமுகவினரை மேலும் உற்சாகமாய் களம் காண வாய்ப்பளித்திருக்கிறது. அதிமுகவினரோ திடீர் அதிர்ச்சியில் உள்ளனராம்.

அதிலும் குறிப்பாக பா.ம.க வுக்கு அதிகபட்சம் இரண்டு இடங்கள் மட்டுமே என அறிக்கை கூறியிருப்பதும், பாமக தொகுதி ஒன்றில் தேமுதிக வெல்ல வாய்ப்பு உண்டு என அறிக்கை சொல்லியிருப்பதும் மருத்துவரின் வயிற்றில் பாதரசம் கரைக்கிறதாம்.

என்ன சி.ஐ.டி ரிப்போர்ட்டோ ? மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !. இன்னும் ஓரிரு வாரங்களில் தெரியத் தான் போகிறது.

ஜெயிப்பது நாடகமா, சினிமாவா என்பது !

வேட்பாளர்களை கதிகலங்க வைக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட்கள் !

7karunanidhi1அந்தக் கட்சி இந்தக் கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர் தேர்வுக் குளறுபடி உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் இன்னும் யாரை எங்கே நிறுத்தலாம் எனும் முடிவுக்கே வராமல் குய்யோ முய்யோ என கூச்சல் போட்டு கட்சியின் மானத்தையே வாங்கிக் கொண்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலை விட வேட்பாளர் தேர்வே அவர்களுக்கு பெரும் சவாலாகிக் கொண்டிருக்கிறது !

மதிமுக, பாமக, போன்ற “வேறு வழியில்லா” கட்சிகள் ஏற்கனவே நினைத்து வைத்திருந்தவர்களை நிறுத்தி விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

தனிக் கட்சிகளால் அப்படி ஒதுங்க முடியவில்லை. திருவள்ளூர், பெரம்பலூர் வேட்பாளர்களை அதிமுக அதிரடியாக மாற்றி பரபரப்பை ஏற்படுத்த, தே.மு.தி.க தனது மதுரை வேட்பாளரை மாற்ற அடுத்த மாற்றத்துக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க!

மூன்று நான்கு வேட்பாளர்களை தி.மு.க மாற்றலாம் எனும் செய்தி திமுக வட்டாரத்தில் பரபரப்பாக அலசப்படுகிறது.

அதில் முக்கியமானவர், தன் படத்துக்கு, தானே போஸ்டர் ஒட்டி, தானே டிக்கெட் எடுத்துக் கொடுத்து, படம் பார்க்க வருபவர்களுக்கு தன் செலவில் பிரியாணியும் வாங்கிக் கொடுக்கும் “நாயகன்” ரித்தீஷ் !  “அவருக்கெல்லாம் சீட் கொடுத்து தலைமை எங்களை  அவமானப்படுத்தும் என நினைக்கவில்லை” என கொதித்துப் போய் திரிகின்றனர் காலம் காலமாய் திமுகவுக்கு விசுவாசமாய் உழைத்து வந்த ராமநாதபுரம் பகுதி தொண்டர்கள்.

தூத்துக்குடி வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை மீது மக்களிடையே ஆதரவே இல்லை. ஒரு செக்ஸ் டாக்டர்ப்பா அவரு என கிண்டலடிப்பதிலேயே மக்கள் குறியாக இருக்கிறார்களாம். சி.ஐ.டி ரிப்போர்ட் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது திமுக தலைமை.

இன்னொன்று கள்ளக்குறிச்சி, அங்கே ஆதிசங்கரருக்கு மவுசு இல்லையாம்.

நான்காவது குமரி !

குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் நின்றால் நிச்சயம் தோல்வி என்பது தான் இன்றைய நிலமை. அங்குள்ள காங்கிரஸ் மக்கள் அவ்வளவு தூரம் கொதித்துப் போயிருக்கின்றனர். எனவே ஹெலன் டேவிட்சனை மாற்றிவிட்டு வைகோ போட்டியிடப் போகும் விருதுநகருக்கு திமுக தனது இடத்தை மாற்றலாமா எனவும் யோசிக்கிறது.

இந்த மாற்றங்களையெல்லாம் கொளுத்திப் போடுவது சி.ஐ.டி ரிப்போர்ட்கள். மதுரையையே பெரும்பாலும் மையமாக வைத்து இயங்கும் இந்த சிஐடி குழுக்கள் தொகுதிகளில் சென்று கண்டறிந்து வரும் செய்திகள் பலவும் அரசியல் தலைமை இடங்களைக் கதி கலங்க வைக்கிறதாம்.

எப்படித் தான் இவர்களெல்லாம் பல அடுக்கு கண்களில் மண்ணைத் தூவி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்கள் என்பதே தலைமைகளின் தலையை உலுக்கும் பிரச்சனையாகியிருக்கிறது.

ஆங்காங்கே மாறிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றவர்களைக் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் தில்லு முல்லு செய்து போலி ரிப்போர்ட்களைத் தயாரித்து தலைமையின் கண்ணில் மண்ணைத் தூவியவர்கள் அதிர்ந்து தான் போயிருக்கிறார்களாம்.

இந்த மாற்றங்கள் மீது கலைஞருக்கு உடன்பாடில்லையாம். ஆனால் அழகிரியும், ஸ்டாலினும் இந்த மாற்றங்கள் வராவிடில் தேவையில்லாமல் தோல்வியை விரும்பி அழைப்பது போல் ஆகிவிடும் என அழுத்தம் கொடுக்கின்றனராம். விஷயம் ரொம்ப நாள் உள்ளுக்குள்ளேயே இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

எங்க ஊருல ஒரு பழமொழி உண்டு !

மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா – 1

dmdk

அரசியல் சதுரங்க விளையாட்டு பரபரப்புக் கட்டத்தை எட்டியிருப்பதை சென்னையின் மூலை முடுக்கெங்கும் காண முடிகிறது.

தேமுதிக இப்படி ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. வீசோ வீசென்று அவரை நோக்கி எல்லா விதமான வலைகளும் வீசப்படுகின்றன.

விஜயகாந்துக்கு பல கவலைகள் இருக்கின்றன.

ஒன்று, திமுக, அதிமுக – போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன். வைத்தால்…., ,என்றெல்லாம் வீர வசனங்களைப் பேசியதால் தான் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. கூட்டணி வைத்தால் அந்த இமேஜ் பாதிக்கப்படலாம் என்பது ஒரு குவார்டர் கவலை.

ஒருவேளை கூட்டணி வைக்காமல் போனாலும் வாக்குச் சதவீதம் குறைந்து போய் சிக்கல் உருவாகலாம் என்பது ஒன்னொரு ஆஃப் கவலை.

எனினும் இந்தக் கவலைகளையெல்லாம் விட மிகப்பெரிய ஃபுள் கவலை விஜயகாந்துக்கு இருக்கும் கடன்.

சுமார் 750 கோடி வரை ஒரு தனி நபரிடமே கடனாய் வைத்திருக்கிறாராம் விஜயகாந்த். அப்படியானால் அந்தக் கடனை கொஞ்சமேனும் அடைக்க ஏதாவது வழி செய்ய வேண்டுமே !

7 இடங்களும் 600 கோடி ரூபாய்களும்

வேண்டும்.

என்பது தான் தேமுதிக தரப்பிலிருந்து திமுக வுக்கு அனுப்பப்பட்ட செய்தியாம். அதாவது பா.ம.க வுக்கு 6 இடங்கள் திமுக ஒதுக்கினால் தனக்கு அதை விட ஒரு இடம் அதிகமாய் ஒதுக்கி ஏழு இடங்கள் வேண்டும் என கேப்டன் கர்ஜித்தாராம்.

கூடவே அந்த 600 !!! கோடி !!!! தமிழனுக்கு “வாக்கு” தான் முக்கியம் !!!! கொஞ்சம் கொஞ்சமாச்சும் கடனை அடைக்கணும்ல! !

திமுக தரப்போ, காங்கிரசைக் கூப்பிட்டு பெருசுங்களா உங்களுக்கு 15 சீட் !

அதுல நீங்க எப்படி வேணும்னாலும் பேசிக்கோங்க. வேணும்னா தேமுதிக க்கு 7 குடுத்துட்டு நீங்க 8 இடத்துல போட்டியிட்டாலும் எனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என புள்ளி வைத்துவிட்டதாம்.

எனினும், அரசியலில் புள்ளிகள் மாறுவதும், நீள்வதும் அழிவதும் எல்லாம் சகஜமாச்சே. பா.ம.க திமுகவில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் (அன்பு மணி சும்மா விடுவாரா என்ன ? ) தேமுதிகவுக்கு அதைவிட அதிக இடங்கள் தருவது சாத்தியமில்லை என்பது திமுகவின் வாதம். பாவம் காங்கிரஸ் தான் இதில் மாட்டிக் கொண்டு டவலுக்குக் கீழே விரல் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆமா, வை.கோ ன்னு ஒரு தலைவர் இருந்தாரே.. அவர் என்ன ஆனார் என்றேன் அப்பாவியாய் ஒரு அரசியல் பிரமுகரிடம்

“யாரு ? உண்ணாவிரதம் இருக்கிற பெருசுகளுக்கு ஜூஸ் குடுத்துட்டு இருப்பாரே அவரா ?” என்ற அவரது கேள்விக்குப் பின் நான் ஏதும் கேட்கவும் இல்லை.

அவர் எதுவும் சொல்லவும் இல்லை.

ரஹ்மானைப் பாராட்டாத ஒரே தலைவர்

rahman

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைக் குறித்துப் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருதுக்காக அவருக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று எல்லா அரசியல் தலைவர்களும் கட்சி வித்தியாசம் பாராமல் பாராட்டிக் கொண்டிருக்கையில் ஒரே ஒருவர் மட்டும் மௌனம் சாதிக்கிறார் !

எல்லா பத்திரிகைகளும் ரஹ்மானை முதல் பக்கத்தில் அலங்கரித்து கௌரவிக்கையில், அவருடைய கட்சி சார்பாக வெளிவரும் நாளிதழில் மட்டும் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கிய விஷயம் கடைசி பக்கத்தில் அச்சாகியிருந்தது !

மகன் திரையில் புகை பிடித்தலை எதிர்க்கிறார், தந்தை திரையில் இசை அடித்தலைக் கூட எதிர்க்கிறாரா என்றும் தெரியவில்லை.
அப்படி என்ன வெறுப்போ மருத்துவருக்கு ரஹ்மான் மீது !

அல்லது ஆஸ்கர் மீது

அல்லது ஸ்லம் டாக் மில்லியனர் மீது !

திரைப்படங்களை ஒதுக்கும் மக்கள் தொலைக்காட்சியில் கூட உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன !

இது திரைப்படங்கள் மீதான வெறுப்பா ?
அல்லது ரஹ்மான் மீதான வெறுப்பா ?

சிறுபான்மை இனத் தங்கமே” என சிறு நாசூக்கு அரசியல் அறிக்கை வெளியிட்டிருந்த கலைஞர் இதைக் கவனித்தால் “சிறுபான்மையினரை பாராட்ட மறுக்கும் கட்சி  – பா.ம.க என ஒரு புது அறிக்கை வெளியிட்டாலும் வெளியிடுவார் என யாரேனும் மருத்துவரிடம் சொன்னால் நலம்.

வீரப்பனைக் கூட சாதீய காரணங்களுக்காக பாராட்டும் ஒரு தலைவர், இசைக்காக தமிழர் ஒருவர் உயரிய விருது வாங்குவதை மனமாரப் பாராட்டாவிட்டால்…

தமிழ், தமிழ், தமிழன், தமிழீழம், தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பத்திரிகை என்றெல்லாம் புலம்புவதில் என்ன அர்த்தமிருக்கப் போகிறது.

வரும் வழியில்… : ஒரு ரூபாய் அரிசி எப்படி ?


வாயில் கூட வைக்க முடியாது இப்போதைய ரேஷன் அரிசியை. எதற்குத் தான் இப்படி நாற்றம் வீசும், மட்டமான, மோசமான அரிசியைத் தருகிறார்களோ ? இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை. மனுஷன் சாப்பிட முடியாது. இப்லப்பாம் எவனுமே ரேஷன் அரிசியைச் சாப்பிடறதே இல்லை. பிச்சைக்காரனுக்குக் கொடுத்தா கூட துப்பிடுவான்.

இப்படியெல்லாம் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் ரேஷன் அரிசியைக் குறித்து திகட்டத் திகட்ட, கிண்டல்களும், நக்கல்களும், திட்டுகளும் இணையத்திலும் வெகுஜன இதழ்களிலும் மலிந்து கிடப்பதைப் படித்துப் படித்து ரேஷன் அரிசியைக் குறித்த ஒரு மதிப்பீட்டை உள்ளுக்குள் உண்டாக்கி வைத்திருந்தேன்.

தினமும் அலுவலகம் வரும்போது வேளச்சேரி ரேஷன் கடையைத் தாண்டியே வருவேன். ரேஷன் கடை முன்னால் தினமும் காலையில் புதுப்பட ரிலீஸ் கணக்காய் கூட்டம் அலை மோதும். முரண் உறுத்தும். இவ்ளோ மட்டமான அரிசியை வாங்க இப்படிக் கூட்டம் அலைமோதுகிறதே என நினைத்துக் கொண்டே சென்று விடுவேன்.

கடந்த வாரம் மனதில் தோன்றியது, உண்மையிலேயே இந்த ரேஷன் அரிசி மகா மட்டமானது தானா ? அரிசி தருவது அரசியலா ? இல்லை அரிசியை எதிர்ப்பது அரசியலா ?

உய்த்துனர்தலே சிறந்ததென முடிவெடுத்தேன்.

வீட்டில் விண்ணப்பம் வைத்ததால் ரேஷன் அரிசி வாங்கினார்கள். சுடச்சுட சாதம் வைத்து சாம்பார் ஊற்றி சாப்பிட்ட போது தான் புரிந்தது வெறுமனே நக்கல் அடிப்பவர்கள் ரேஷன் அரிசியை சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்பது !!!

அளவில் பெரியதான அரிசி (சி.ஓ என்று எங்கள் ஊரில் அழைப்பது போன்ற அரிசி). சாப்பிட்டு எனக்கு ரொம்பவே பழக்கம் என்பதால் ரேஷன் மிகவும் ரசிப்புக்குரியதாகி விட்டது. கொஞ்சமும் குறை சொல்ல முடியாத, எந்த நாற்றமும் வீசாத, சுவையான அரிசி !

ஒரு வேளை சென்னையில் மட்டும் நல்ல அரிசி தந்து விட்டு கிராமங்களின் தலையில் மோசமானதைக் கட்டுகிறார்களோ எனும் சந்தேகத்தில் மாலையில் ஊருக்கு போன் போட்டேன். அம்மா போன் எடுத்தார்கள்.

“அம்மா அங்கே ரேஷன் அரிசி நல்லா இருக்கா ? “

“என்னடா.. எப்போவும் அம்மா நல்லா இருக்கீங்களான்னு கேப்பே… இப்போ ரேஷன் அரிசி நல்லா இருக்கா கேக்கறே ?”

“சும்மா தாம்மா.. சொல்லுங்க “

“ரேஷன் அரிசி ரொம்ப நல்லா இருக்கு. நாங்க அதைத் தானே சாப்பிடுகிறோம்”
கிராமத்திலிருந்து அம்மா சொன்னார்கள்.

எங்களூர் ரேஷன் கடைக்காரர் குஞ்சுகிருஷ்ணனிடம் பேசினேன். எப்படி மக்கள் ரேஷன் அரிசியை வாங்குகிறார்களா ? நல்லா இருக்கா அரிசி ?
பெரும்பாலும் நல்ல அரிசியே கிடைக்கிறது. கேரளாவில் இதே அரிசியை கொஞ்சம் மில்லில் போட்டு பாலீஷ் செய்து சந்தையில் விற்றால் இருபது ரூபாய் தாராளமாய் கிடைக்கும் ! (அனுபவம் பேசியதா தெரியவில்லை ) என்றார்.

உண்மையிலேயே நல்லா இருக்குன்னா ஏன் இதை எதிர்க்கிறாங்க ? இதற்குப் பெயர் தான் அர(சி)சியலா ?

ஒரு காலத்தில் மரவள்ளிக் கிழங்கையே உணவாய் தின்று சாதத்தை கூட்டு போல கொஞ்சமாய் தின்று வாழ்ந்த கிராமம் இன்று மரவள்ளிக் கிழங்கை கூட்டு போல் சாப்பிடுகிறது. காரணம் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறது, மரவள்ளிக் கிழங்கின் விலை பத்து ரூபாயாகி விட்டது !