அறை எண் 305 ல் பிரகாஷ்ராஜ் !!!

ரொம்ப தாமதமாகப் பார்க்க நேர்ந்தது அறை எண் 305 ல் கடவுள் திரைப்படத்தை. தாமதமாய் பார்த்ததால் எதுவும் நஷ்டமில்லை என்பதை சிம்பு தேவன் திரைப்படம் மூலம் விளக்கியிருந்தார்.

கதாநாயகி என்ன தொழில் செய்கிறார் என்பதைச் சொல்லும் இடம் தமிழ் சினிமாவின் மரபுகளை மீறியதாய் வலியும், அழகும் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

ஆபாசம் வன்முறை மீறிய திரைப்படம் எனுமளவில் சிம்பு தேவனின் திரைப்படத்தை மனதாரப் பாராட்டலாம். எனினும் சிம்பு –“தேவனாக” மாறி போதனைகள் செய்வது தான் நெளிய வைக்கிறது.

காரணம் போதனைகளில் எதிர்பார்த்த வலு இல்லை. அட ! போட வைக்கும் வசனங்களோ, அசர வைக்கும் சிறு சிறு அறிவுரைகளோ இல்லை. எங்கேயோ, கேட்ட, படித்த, பார்த்தவற்றின் தொகுப்பாகவே இருக்கிறது.

“யாருமே ஏறிப் போகாத மலையில ஏறிப் போயிருக்கீங்களா ?”  அப்புறம் எப்படி நீங்க நல்லா வாழ்ந்ததா அர்த்தம் என கடவுள் கேட்பதிலுள்ள லாஜிக் புரியவில்லை.

கடவுள் எதிர்பார்ப்பது மலையில் ஏறிப் போவதும், ஆற்றுக்குள் படகு ஓட்டுவதும் என தனி மனித ரசனைகளையா அல்லது சக மனிதன் மீதான மனித நேயத்தையா என்பதிலேயே குழப்பம் இயக்குனருக்கு.

கடவுள் என்பவர் வெகு சாதாரண மனிதர் போலவும் ஆத்தா மகமாயி திரைப்பட மந்திர தாயத்து கணக்காக கேலக்ஸி சமாச்சாரம் கையிலிருந்தால் மட்டுமே கடவுளுக்குப் பவர் என்று சொல்வதெல்லாம் ஆத்திகர்களை கிச்சு கிச்சு மூட்டப் பார்க்கும் சிம்பு தேவனின் சித்து விளையாட்டு எனலாம்.

சென்னையில் வசிக்கும் இரண்டு வருட முன்னனுபவமுள்ள ஜாவா டெவலப்பர் 85கே – டேக் ஹோம் என்கிறார் 🙂 அது ஒன்று தான் இந்த படத்தில் நன்றாகச் சிரிக்க வைத்த சமாச்சாரம்.

சந்தானம் லொள்ளு சபாவுக்கே திரும்பிப் போகலாம், விட்ட இடத்தைப் பிடிக்க அவருக்குக் கிடைத்த கடைசி எச்சரிக்கை மணி அறை எண் 305.

கடவுளாய் அழுத்தமான ஷேவ் , பளீர் வெள்ளை சட்டை, முழு நேர சிரிப்பு என வந்தாலும் கடவுளாகப் பார்க்க ஒத்துக் கொள்ளாத முகம் பிரகாஷ் ராஜுக்கு.  அதனால் தானோ என்னவோ கடவுளோடு இருக்கும் சந்தானம், க.க இருவரும் கூட ஒத்துக் கொண்டது போல தெரியவில்லை படத்தில், பல இடங்களில் !

8 என்பது ஷங்கருக்கு ராசி என்பதை மாற்றி எழுதியிருக்கிறது இந்த 305.

இந்த படம் பார்த்தபின் மீண்டும் ஒரு முறை “புரூஸ் ஆல்மைட்டி” பட டிவிடியை பார்த்தேன். நாம போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு !