பைபிள் மாந்தர்கள் 75 (தினத்தந்தி) ஆகாய்

கி.மு 520ல் இறைவாக்கு உரைத்த ஒரு இறைவாக்கினர் தான் ஆகாய். ஆகாய் என்னும் பெயருக்கு “விழாக் கொண்டாட்டம்” அல்லது ” புனிதப் பயணம் செய்பவர்” என்பது பொருள்.

இந்த இறைவாக்கினரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் பைபிளில் இல்லை. இவர் சொன்ன இறை வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன. இறைவாக்கினர்களை முதன்மைப் படுத்தாமல் அவர்கள் சொன்ன இறை வார்த்தைகளை மட்டும் முதன்மைப்படுத்தும் முறை விவிலியத்தில் வெகு சகஜமாகக் காணப்படுகிறது.

இஸ்ரயேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மோசே வழியாக‌ மீட்டுக் கொண்டு வரப்பட்டபின் பல இறைவாக்கினர்கள் அவர்களுக்குத் தோன்றி கடவுளின் செய்திகளை அளித்து வந்தனர். ஒவ்வோர் காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் அந்த செய்திகள் இருந்தது.

மக்கள் அடிமைகளாக்கப் பட்டது அவர்கள் செய்த பாவத்துக்குக் கடவுள் அளித்த தண்டனை என்பதை சில இறைவாக்கினர்கள் பறை சாற்றினார்கள். அடிமைத்தனத்தில் சிக்கி உழன்ற போது சில இறைவாக்கினர்கள் வந்து ஆறுதலின் செய்தியை அளித்தார்கள். அந்த அடிமைத்தனம் மாறிய பிறகு வந்த இறைவாக்கினர்கள் “மறுவாழ்வின்” செய்தியை அளித்தார்கள். அதற்குப் பிறகு தோன்றிய ஆகாய் இறைவாக்கினர் புதிய ஒரு செய்தியை அளித்தார்.

இஸ்ரேல் மக்கள் பாபிலோனியர்களின் அடிமைத்தனத்தில் கிமு 587 முதல் கிமு 538 வரை சிக்கிக் கிடந்தனர். அதன் பிந்தைய காலம் தான் ஆகாய் இறைவாக்கினரின் இறைவாக்குக் காலம்.

நெபுகத்நேசரின் படைகள் கிமு 587ல் எருசலேமின் மீது போர்தொடுத்து எருசலேம் கோயிலைத் தரைமட்டமாக்கின. யூதர்கள் அடிமைகளாயினர். அரசர் சைரசின் கட்டளைப்படி கிமு 538ம் ஆண்டில் அவர்கள்  விடுவிக்கப்பட்டனர். கூடவே நெபுகத்நேசர் அபகரித்து வைத்திருந்த அவர்களின் செல்வங்களையும் மன்னர் அவர்களிடமே அளித்தார்.

அடிமைத்தன மக்கள் மகிழ்ச்சியோடு யூதா, இஸ்ரேல் தேசங்களுக்குத் திரும்பினர். உடனே கடவுளுக்கு ஒரு ஆலயம் கட்டவேண்டுமென வேலை ஆரம்பித்தார்கள். ஆனால் அது தொடரவில்லை. சுமார் 18 ஆண்டு காலம் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது. அப்போது தான் ஆகாய் வந்தார்.

“கடவுளுக்குக் கோயில் கட்டுங்கள்” என்பது தான் ஆகாய் இறைவாக்கினர் உரைத்த இறைவாக்கின் மையம்.

கோயில் இறைவ‌னின் வீடு. அது ம‌க்க‌ளை ஒன்றிணைக்கும் ஒரு த‌ள‌மாக‌வும் விள‌ங்குகிற‌து. என‌வே தான் ஆகாய் இறைவாக்கின‌ர், சோர்வுற்றுக் கிட‌ந்த‌ ம‌க்க‌ளை உசுப்பி க‌ட‌வுளுக்குக் கோயில் க‌ட்டும் ப‌ணியை துரித‌ப்ப‌டுத்த‌ முய‌ல்கிறார்.

நாட்டில் நிக‌ழும் வ‌றுமைக்குக் கார‌ண‌ம் ஆல‌ய‌ம் இல்லாத‌து தான்

“நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள். ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்” என‌ அவ‌ர்க‌ளுடைய‌ தோல்விக‌ளுக்குக் கார‌ண‌ம் கோயில் இல்லாத‌து தான் என‌ ஆகாய் குறிப்பிட்டார்.

அந்த‌ க‌ஷ்ட‌ங்க‌ள் நீங்க வேண்டுமானால் செய்ய வேண்டியது ஒன்றே. “எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள். கடவுளின் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்.”

ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஆகாய் இறைவாக்கின‌ரின் வார்த்தைக்குக் கீழ்ப்ப‌டிந்த‌ன‌ர். க‌ட‌வுளுக்கான‌ ஆல‌ய‌த்தைக் க‌ட்டுவ‌தென‌ முடிவெடுத்த‌ன‌ர்.

ஆகாய் ம‌கிழ்ந்தார். கடவுள் பேசினார். “இதுவ‌ரை உங்க‌ளுடைய‌ நில‌மை எப்ப‌டி இருந்த‌து தெரியுமா ? நீங்கள் இருபது மரக்காலுக்கு மதிப்புப் போட்டு வந்து பார்க்கையில் பத்து தான் இருந்தது. பழம் பிழியும் ஆலைக்குள் வரும் போது ஐம்பது குடம் இரசத்துக்கு மதிப்புப் போட்ட போது, இருபது தான் இருந்தது. உங்களையும், உங்கள் உழைப்பின் பலன்களையும் வெப்பக் காற்றாலும் நச்சுப் பனியாலும் கல் மழையாலும் நாம் அழித்தோம்”

ஆனால் இனிமேல் அப்ப‌டியிருக்காது.

“விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன்” என்றார் க‌ட‌வுள்.

ப‌ழைய‌ ஏற்பாட்டில் க‌ட‌வுள் வாழ்வ‌த‌ற்காக‌ ஆல‌ய‌ங்க‌ள் க‌ட்டுவ‌து வ‌ழ‌க்க‌மாய் இருந்த‌து. புதிய‌ ஏற்பாட்டில் நாமே க‌ட‌வுள் வாழும் ஆல‌ய‌மாக‌ மாறிவிட்டோம். “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில்” என்கிற‌து பைபிள்.

அந்த‌ ஆல‌ய‌த்தை தூய‌ ஆவியினால் க‌ட்டியெழுப்பும் ப‌ணியை நாம் செய்ய‌ வேண்டும். ஆகாயின் காலத்தில் அடித்த‌ள‌ம் போட்ட‌பின்பு 18 ஆண்டுக‌ள் க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ப்ப‌டாம‌லேயே இருந்த‌து. அதே போல, கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைக்குள் நுழைந்தும் ப‌ல‌ நீண்ட‌ நெடிய‌ ஆண்டுக‌ள் க‌ட‌வுளின் ஆல‌ய‌மாக‌ ந‌ம்மை மாற்றாம‌ல் இருக்கிறோம். ந‌ம‌து பாவ‌த்தை வெளியேற்றி, இறைவ‌னை உள்ளே இருத்தி ந‌ம‌து உட‌லை இறைவ‌னின் ஆல‌ய‌மாய் மாற்றும் ப‌ணியை செய்ய‌ வேண்டும் என்ப‌தே நாம் க‌ற்றுக் கொள்ளும் பாட‌மாகும்.