காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்

புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா ?

“புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கவே புடிக்காது” என பல பெண்கள் அங்காலய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒன்று தான் புத்திசாலி என அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது உண்மையிலேயே ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்கள் கொஞ்சம் அலர்ஜியாய் இருக்கலாம்.

பெரும்பாலான புத்திசாலி ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். ஒருவேளை ஒரு பையன் புத்திசாலிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறானென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.

“சும்மா கடல் பக்கத்துல உக்காந்து கடலை போடக் கூப்பிட்டா அங்கே வந்து கூட மால்கம் கிளேட்வெல் எழுதின பிளிங்க் புக் படிச்சியாடா ? வாவ் சூப்பர். த பவர் ஆஃப் திங்கிங், வித்தவுட் திங்கிங் தான் அதோட கான்சப்ட்” என கடுப்படிக்கிறா என ஒரு காதலர் சலித்துக் கொண்டார். ரொம்ப அறிவான பொண்ணுன்னா இந்த மாதிரி உலக விஷயங்களையெல்லாம் பேசுவாங்க. நம்ம ஹீரோவுக்கு அந்த ஏரியா வீக்குன்னா “இந்த புத்தி சாலிப் பொண்ணுகளே இப்படித் தான்” என்று புலம்ப வாய்ப்பு உண்டு.

இன்னும் சிலருக்கு பொண்ணுன்னா நாம வரைஞ்ச கோட்டைத் தாண்டக் கூடாதுங்கற ஒரு ஆணாதிக்க சிந்தனை இருக்கும். புத்தியில்லாத பொண்ணுன்னா நாம சொல்றதைக் கேப்பா. நாம போய் “கிளையண்ட் கான்ஃபரன்ஸ் ல புராஜக்ட் பிளான் டெமோன்ஸ்ட்ரேட் பண்ணினேன்” ன்னு பீட்டர் உட்டா நம்பபிடுவா ன்னு நினைக்கிறாங்க. எப்பவுமே நம்மை விட ஒரு ஸ்டெப் கீழே பொண்ணு இருக்கணுன்னு நினைக்கறவங்களோட மனநிலை இது.

இன்னும் சிலர் என்னன்னா புத்திசாலிப் பொண்ணுன்னாலே “சுயமான பொண்ணு” ன்னு நினைக்கிறாங்க. அதாவது தனியா வாழறதுக்கு அவளுக்கு பயம் கிடையாதுங்கற நினைப்பு இருக்கும். அதாவது தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிலை அவளுக்கு இல்லை எனும் சிந்தனை. ஒருவேளை நாம பண்ற டகால்டி வேலையெல்லாம் தெரிஞ்சுபோச்சுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு போனாலும் போயிடுவாளோங்கற பயம் இருக்கும். அந்த பயத்துல “எதுக்கு புத்திசாலிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு” என பின் வாங்க வாய்ப்பு உண்டு.

பசங்கதான் இப்படின்னா, பசங்களோட அம்மா, அப்பாக்கள் இன்னும் ஒரு படி மேலே. கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கும்போ  “பொண்ணு பையனை விட அதிகம் படிச்சிருக்கா. பையனுக்கு அடங்கி இருக்க மாட்டா” என பில்டப் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். “தான் கம்மியா படிச்சதனால தான் கணவனுக்கு அடங்கி இருக்கிறோம்” என நினைக்கிறார்களோ என்னவோ ? அது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

இந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு இணையா படிச்சிருக்கிற பெண்களை விரும்புகிறார்கள். அதாவது கம்ப்யூட்டர் படிச்ச பையன் அதே லைன்ல படிச்ச பொண்ணை விரும்புகிறான். இதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி, இந்த வேலையில உள்ள கஷ்டம் இதே வேலையில இருக்கிற இன்னொருத்தருக்குத் தான் தெரியும்ங்கற மனநிலை. இன்னொன்னு தெரிஞ்ச ஏரியாங்கறதனால வேலை வாங்கிக் கொடுக்கலாம்ங்கற எண்ணம்.

பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்குன்னு வெச்சுக்கோங்க, புத்திசாலிப் பொண்ணை முடிஞ்ச மட்டும் அவாய்ட் பண்ணுவாங்க. கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவங்க வாழ்க்கைல சிக்கல் வர வாய்ப்பு அதிகம். “ஏங்க, இப்படி பண்ணியிருக்கலாமே” ன்னு ஒரு சின்ன கருத்து சொன்னா கூட “ரொம்ப படிச்ச திமிரு. அதனால நான் செய்றதெல்லாம் தப்பா தெரியுது”. என எகிற ஆரம்பித்து விடுவார்கள். உண்மையிலேயே மனைவி சொல்வது சரியா தப்பா என்றெல்லாம் ஆராய அவர்கள் முயல்வதில்லை.

“ஆண்கள் தங்களை விடப் புத்திசாலித் தனமான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயங்குவார்கள்” என்கின்றனர் சில உளவியலார்கள். ஆனால் அதற்கெல்லாம் குறிப்பாக எந்த ஆராய்ச்சி முடிவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. பல வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்னால் அறிவார்ந்த பெண்கள் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. பல ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். உரையாடல்களில் நல்ல அர்த்தத்துடன் பேச அவர்களால் முடியும் என்பது அவர்கள் சொல்லும் ஒரு காரணம்.

முக்கியமான ஒரு விஷயம், தினமும் நியூஸ் பேப்பர் படிச்சுட்டு புள்ளி விவரங்கள் பேசறதெல்லாம் புத்திசாலித் தனத்துல வராது. ஒரு பிரச்சினை வருதுன்னா அதுல இருந்து எப்படி எத்தரப்புக்கும் இழப்பின்றி மீளலாம்ன்னு யோசிப்பதில் தெரியலாம் புத்திசாலித்தனம். குடும்பத்தை ஆனந்தமாகவும், வளமாகவும் கொண்டு போக திட்டமிடுவதில் மிளிரலாம் புத்திசாலித்தனம். குழந்தை வளர்ப்பைக் கையாள்வதில் வெளிப்படலாம் புத்திசாலித்தனம். பெண் புத்திசாலியாய் இருப்பது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஆனால் என்ன, “தான் புத்திசாலி” எனும் தற்பெருமையை உச்சந்தலையில் ஒட்டி வைக்காமல் இருக்க வேண்டும்.

பெண் வீட்டை ஆளணும், ஆண் நாட்டை ஆளணுங்கற கதையெல்லாம் கற்காலமாயிடுச்சு. இந்த கால மாற்றத்தில் தம்பதியர் தங்களோட ஈகோவை மூட்டை கட்டி வெச்சுட்டு, அன்பா பழக ஆரம்பிச்சா இப்படிப்பட்ட  பிரச்சினைகளே வராது என்பது தான் நிஜம். நீயா நானா போட்டி போட குடும்பம் ஒண்ணும் பிளே கிரவுண்ட் இல்லையே ! என்ன சொல்றீங்க ?

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

ஆண்களே “பெல் பஜாவோ”

 சாய்வு நாற்காலியில் ஓய்வாக அமர்ந்து ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் ஒருவர். திடீரென காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணின் அழுகுரல் காதில் வந்து விழுகிறது.

“ஐயோ… பிளீஸ்…. நான் வேணும்னே உடைக்கல. தெரியாம உடஞ்சுடுச்சு”

“ஓ… என்னை எதிர்த்துப் பேசறியா நீ… பளார்ர்…”

“ஆ….”

பக்கத்து வீட்டு சண்டையில் கோபமடையும் அந்த நபர். சட்டையை மாட்டிக் கொண்டு இறுக்கமான முகத்துடன் விறுவென நடந்து அந்த வீட்டை அடைகிறார். கதவுக்கு முன்னால் போய் நின்று அழைப்பு மணியை அடிக்கிறார்.

உள்ளே சண்டை நின்று போக, சட்டென நிசப்தம்.

குழப்ப முகத்துடன் கதவைத் திறக்கிறார் அந்த கொடுமைக்கார கணவன். என்ன வேண்டும் எனும் கேள்வி அவருடைய முகத்தில்.

“பால்… கொஞ்சம் பால் கிடைக்குமா ?” வந்தவர் இறுக்கம் தவிர்க்காமல், இமைக்காமல் அவரைப் பார்த்துக் கேட்கிறர்.

“ம்…”

கதவை மூடிக் கொண்டு உள்ளே சென்ற நபர் கொஞ்ச நேரத்தில் ஒரு சின்ன டம்ப்ளரில் பால் கொண்டு வருகிறார். வெளியே அந்த நபர் இல்லை ! குழப்ப முகத்துடன் திரும்பும் அவருக்கு ஒரு விஷயம் புரிகிறது. “வந்த நபருக்கு நம்ம வீட்டுச் சண்டை தெரிஞ்சிருக்கு”

ஒரு நிமிடம் ஓடும் சின்ன குறும்படம் இது. இதே போல பல சின்னச் சின்ன படங்கள். சண்டை நடக்கும் வீட்டில் சென்று பெல்லை அடித்து “உன்னோட தண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும் என சொல்லாமல் சொல்வது தான் இந்தப் படங்களின் கான்சப்ட் !”

பக்கத்து வீட்டில் ஒரு சண்டை நடத்தால் “அவங்க குடும்ப விஷயத்துல எதுக்கு நாம தலையிடறது” என்று ஒதுங்கக் கூடாது. அந்தச் சண்டையை நிறுத்த பக்கத்தில் இருக்கும் ஆண்கள் ஒரு சின்ன துரும்பையாவது எடுத்துப் போடவேண்டும் என்கிறது இந்த இயக்கம்.

“பெல் பஜாவோ” என்பது இந்த இயக்கத்தின் பெயர்.”ரிங் த பெல்” என ஆங்கிலத்திலும் “மணியை அடியுங்கள்” என தமிழிலும் சொல்லலாம். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க ஆண்கள்  முன் வரவேண்டும். இந்த சிந்தனையுடன் குட்டிக் குட்டிக் கிரியேட்டிவ் படங்களுடன் களமிறங்கியிருக்கிறது இந்த இயக்கம்.

அடுத்த வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் நாளை நமது சந்ததியினருக்கு நடக்கலாம். அல்லது நமது சகோதரிகளுக்கு நடக்கலாம். இது எப்போதும் அடுத்தவர் பிரச்சினையாய் இருக்கப் போவதில்லை. இந்த சிக்கலுக்கு ஒட்டு மொத்த முற்றுப் புள்ளி வைப்பதற்கு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் களமிறங்க வேண்டும் என்கிறது இந்த அமைப்பு.

பக்கத்து வீட்டு பெல்லை அடிப்பதற்கு ஆயிரம் நொண்டிச் சாக்குகள் சொல்லலாம். “ஒரு போன் பண்ணிக்கலாமா ?”, “டைம் என்ன ஆச்சுங்க ?”, கிரிக்கெட் பால் உள்ளே விழுந்துதா ?” இப்படி ஏகப்பட்ட ஐடியாக்களைச் சுமந்து வருகின்றன இந்த கனமான விளம்பரப் படங்கள். இந்த ஒரு நிமிடப் படங்களில் வருபவை ஓரிரு வார்த்தைகள் தான். ஆனால் படம் உருவாக்கும் தாக்கமோ அதி பயங்கரமாக இருக்கிறது.

பெண்களில் மூன்றில் ஒருபாகத்தினர் அடைக்கப்பட்ட கதவுகளுக்குள் வன்முறைகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அத்தகைய விழிப்புணர்வையும், சமூக பங்களிப்பையும் அளிக்கும் இந்தக் குறுப்படங்களை இயக்கியிருப்பது புத்தாயன் முகர்ஜியின் லிட்டில் லேம்ப் பிலிம்ஸ் எனும் நிறுவனம்.

மனித உரிமைகளை மீண்டெடுக்கத் துடிக்கும் “பிரேக்துரூ” எனும் அமைப்பு தான் இந்த பெல் பஜாவோ திட்டத்தின் மூளை. 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பை ஆரம்பித்தவர் மல்லிகா தத் எனும் பெண்மணி. கொல்கொத்தாவில் 1962ம் ஆண்டு மார்ச் 29ம் தியதி பிறந்தவர் இவர். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தலைமையகங்களைக் கொண்டு இந்த அமைப்பு இன்று  வலுவாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

பெல் பஜாவோ, சமூகத்தின் விழிப்புணர்வையும், பொறுப்புணர்வையும் அதிகரித்திருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் அள்ளிய இந்த படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு உலக அளவிலான கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத் தக்கது.

பெல் பஜாவோ இப்போது “மினிஸ்ட்ரி ஆஃப் விமன்” மற்றும் “சைல்ட் டெவலப்மெண்ட்” போன்ற அரசு அமைப்புகளோடு இணைந்து தனது பணியை விரிவுபடுத்தியிருக்கிறது.

“பெண்களுக்கான பிரச்சினைகளை பெண்கள் அமைப்புகள் முன்னெடுத்துச் செல்வதும், அவர்களே போராடுவதும் தான் வாடிக்கை. பெண்கள் சமூகத்தின் அங்கம். அவர்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்கவேண்டியது அவசியம். சமூக மாற்றத்திற்கு ஆண்கள் முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். பெண் உரிமையில் தங்கள் பங்களிப்பை அழுத்தமாய்ப் பதிக்கவேண்டும்” என உணர்வு பூர்வமாகப் பேசுகிறார் பிரேக் துரூவின் கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் இயக்குனர் சோனாலி கான். “இது என் வேலையில்லை” எனும் ஆண்களுடைய மனநிலையை அழிக்க வேண்டியது அவசியம் என்கிறார் தயாரிப்பாளர் முகர்ஜி.

அடுத்த முறை பக்கத்து வீட்டிலோ, அப்பார்ட்மெண்ட்லோ பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்தால் அமைதியாய் இருக்காதீர்கள். தைரியமாகப் போய் “பெல் அடியுங்கள்”. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான முடிவின் துவக்கமாய் அது அமையும்.

பிடித்திருந்தால்….. வாக்களிக்க விரும்பினால்…கிளிக்…

என்னதான் இருந்தாலும்…

poor.jpg

இன்று காலையில் சென்னையின் நகரும் முதுகெலும்பான மின் ரயிலில் ஏறி அலுவலகம் வந்து கொண்டிருந்தேன். ரயிலை விட்டிறங்கி கிராசிங் அருகே வந்தபோது கண்ட காட்சி சற்று வித்தியாசமானது.

குடிபோதையில் தள்ளாடித் தள்ளாடி கையில் ஏதோ பொட்டலத்துடன் ஆடிக் கொண்டிருந்த ஒருவருக்கு அவருடைய அன்பான மனைவி பளார் பளார் என்று கன்னத்தில் அறை விட்டுக் கொண்டிருந்தார்.

ஆஹா… முறத்தால் புலியை விரட்டிய பெண்களின் கதையை அடுப்படியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாட்டிகளின் காலம் மாறிவிட்டதே என சற்று மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது, எனக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவர் சத்தமாகவே பேசிக்கொண்டு போனார் “என்னதான் இருந்தாலும் பொது இடத்துல இப்படியா… ?’ (புருஷன் என்பவன் பொது இடமா?)

“என்னதான் இருந்தாலும்…” என்னும் வார்த்தையில் இருக்கும் விஷமம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணாதிக்கத்தின் மிச்சமாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வாக்கியம் தான் இந்த என்னதான் இருந்தாலும்.

“என்னதான் இருந்தாலும் ஆம்பள…” என்பது தான் அந்த வாக்கியத்தின் ஆழ் அர்த்தம். பொது இடம் என்றில்லாமல் வீட்டில் வைத்து சாத்தியிருந்தாலும் இந்த “என்ன தான் இருந்தாலும்..” வந்திருக்கும்.

என்ன தான் இருந்தாலும்…, கல்லானாலும்… என்றெல்லாம் காலம் காலமாய் நீண்ட வாக்கியங்கள் இந்த கணினி யுகத்திலும் முழுமையாக மாறவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டியது.

என் வீட்டில் உதவிக்கு வரும் சமையல்கார அம்மா தன்னுடைய புருஷனின் கதையை சோகத்தை வெளிக்காட்டாமல் அவ்வப்போது சொல்வார். தினமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கணவனின் பொறுப்புணர்ச்சியைப் பற்றியும். பத்துப் பாத்திரம் தேய்த்து கணவனின் சாராய தேவைக்கு அர்ப்பணிக்கும் அவளுடைய இயலாமையைப் பற்றியும்.

வருஷம் முழுக்க விரதம் இருக்கிற மாதிரி ஏதாச்சும் சபரிமலை இருந்தா நல்லா இருக்கும் என்று அவர் சொல்லும்போது பனிக்கும் கண்களுக்குள்ளே புதைந்து கிடக்கிறது வாழ வேண்டும் எனும் அவளுடைய நியாயமான ஆசை.

புத்தாண்டு இவர்களுக்கும் சேர்ந்தே விடியட்டும்.

.