ஆன்மீகம் : சிறுவர்களின் உலகம்

jesus-with-children-0401

முதியவர்களைக் குறித்த சிந்தனையின் தொடர்ச்சியாக சிறுவர்களைக் குறித்து சிந்திப்பது ஆனந்தமாக இருக்கிறது. காரணம் விவிலியத்தில் சிறுவர்கள் சிறப்புக் கதா நாயகர்கள். அவர்களுக்கு இறைமகன் இயேசுவும், விவிலியமும் அளித்திருக்கும் முக்கியத்துவம் வியப்பூட்டுவது.

அதற்கு முன் இன்றைய தேசத்தில் சிறுவர்களின் நிலமை எப்படி இருக்கிறது என்பதை எட்டிப் பார்ப்போமா ?

உலக அளவில் அதிக குழந்தைகள், சிறுவர்களைக் கொண்டிருக்கும் நாடு எது தெரியுமா ? சந்தேகமே வேண்டாம். இந்தியாவே தான். சுமார் 40 கோடி பேர் இருக்கின்றனர். பெருமைப் பட அவசரப் படாதீர்கள். அவர்களில், சுமார் இரண்டு கோடி சிறுவர் சிறுமியர் இந்தியத் தெருக்களில் வாழ்கிறார்கள். அதாவது ஆதரவுக்கோ, அடைக்கலம் கொடுக்கவோ யாரும் இல்லாமல் தெருவே துணை என திரிகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி.

கல்வி குறித்தும், தொழில் நுட்ப வளர்ச்சி குறித்தும், உலக மயமாதல் குறித்தும் நாம் அதிகம் அலசிக் காயப் போடுகிறோம். இன்றைய சூழலில் கல்வி வாசனையே இல்லாமல் வளரும் சிறுவர்கள் இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு கோடி பேர் ! ஆறு வயதுக்கும், பதினான்கு வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களை ஒட்டு மொத்தமாகப் பட்டியலிட்டால் அவர்களில் சரி பாதி பேருக்கு குறைந்த பட்சத் தேவையான ஆரம்பக் கல்வி கூட கிடைப்பதில்லை !

கல்வி இருக்கட்டும், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் ? அந்த விஷயத்தில் இன்னும் மோசம் நமது நாட்டில் போதுமான அளவு இல்லை. இல்லை, இல்லவே இல்லை ! என்பதே அக்மார்க் நிஜம். ஆண்டு தோறும் சுமார் இரண்டே முக்கால் கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களில் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே இறந்து விடுகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை ! தினமும் சுமார் ஏழாயிரம் குழந்தைகள் டயரியா போன்ற சாதாரண நோய்களினால் இறந்து போகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி.

ஊட்டச்சத்து குறைவான நிலை இந்தியாவின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று. உலகிலேயே எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் தான் மிக அதிகம் எனும் துயர சாதனையும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆண்டு தோறும் சுமார் 75 இலட்சம் குழந்தைகள் குறைவான உடல் எடையுடன் தான் பிறக்கின்றனர். உலக அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் சுமார் 14 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் 6 கோடி பேர் இருப்பது இந்தியாவில் !

பெண்குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம். காலம் காலமாகவே நசுக்கப்படும் பெண்களின் நிலமை முழுதும் மாறிவிடவில்லை. சமூகம், குடும்பம் என பல இடங்களில் புறக்கணிப்புகளைப் பெறுவது இன்னும் நின்றபாடில்லை. சுமார் 20 சதவீதம் பெண் குழந்தை மரணங்கள் பாலியல் கொடுமையினால் நேர்வதாய் சொல்கிறது புள்ளி விவரம் ஒன்று. பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் தெரிந்த குடும்ப உறவினர்களால் நேர்கிறது என்பது பகீரடிக்கும் உண்மை.

சமூகப் புறக்கணிப்பைப் பற்றிப் பேசும்போது குழந்தைத் தொழிலாளர் நிலை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சுமார் ஒன்றே முக்கால் கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கின்றனராம். உலக அளவிலேயே இந்த விஷயத்தில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

“பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில் ( சங்கீதம் 127 3 : பொது மொழிபெயர்ப்பு) என்கிறது விவிலியம். ஆண்டவர் அருள்கின்ற செல்வத்தை நாம் இன்று எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மனம் பதை பதைக்கிறது இல்லையா ?

விவிலியத்தில் குழந்தைகளும், சிறுவர்களும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள் ( ஆதி 1 :28 ) என கடவுள் மனிதனுக்கு முதல் கட்டளையைக் கொடுத்து குழந்தைகளின் மண்ணுலக வருகையை ஆசீர்வதிக்கிறார். அதனால் தான், கடவுளின் கொடையாக இருக்கிறார்கள் அவர்கள்.

இறைவனின் வரங்களைப் பாழாக்காமல் இருக்க வேண்டியது நம்மிடம் தரப்பட்டிருக்கும் முதல் கடமை. குழந்தைகளை நல்வழியில் வளர்க்க வேண்டிய கடமையும் பெற்றோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது ஆன்மீகம் தொடங்கி, வாழ்க்கைப் பாடம் வரை நீள்கிறது.

“நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. ( உபா 6 : 7 பொ.மொ) என்கிறது விவிலியம். அது ஒரு வகையில் ஆன்மீக அறிவைச் சுட்டிக் காட்டுகிறது. இன்னொரு வகையில் குழந்தையின் கல்வியின் முதல் கடமை பெற்றோரைச் சார்ந்திருக்கிறது என்பதை விளக்குகிறது.

நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு: முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார் ( நீமொ 22 : 6 ) – எனும் இறை வசனம் அதை நமக்கு இன்னும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது ! அப்படியே பிள்ளைகள் பக்கத்திலும் திரும்பி “பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே என்கிறது நீதிமொழிகள்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் தவறு செய்யும் போது அடிப்பது என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு முன் எது சரியானது என்பதை குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். அது தான் முதல் தேவை. நமக்குத் தோன்றுவது போல நம் குழந்தைகளை நாம் வளர்த்த முடியாது. “என் புள்ளையை நான் அடிப்பேன் அதைக் கேக்க யாருக்கும் உரிமை இல்லை” என சொல்ல முடியாது. காரணம் குழந்தைகள் நம்மிடம் தரப்பட்டிருப்பவர்கள். கடவுளின் கொடைகள். நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. இறைவனுக்கே சொந்தமானவர்கள். நம்மிடம் தரப்பட்டிருக்கும் குழந்தைகளை அவர் விருப்பப்படி வளர்க்க வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய பணி.

தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள் ( எபேசியர் 6 : 4 ) எனும் விவிலிய வாக்கு நமக்கு கல்வியை எப்படிப் போதிக்க வேண்டும் எனும் வழி முறையைக் கூட காட்டுகிறது !குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது நற்செயல் என்கிறது தீமோத்தேயு முதலாம் நூல்.

“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை ( எபேசியர் 6 1 – 3 ) எனும் இறை வார்த்தைகள் குழந்தைகளுக்கும் தந்தையருக்கும் இடையே இருக்க வேண்டிய உறவை விளக்குகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, இயேசு குழந்தைகளை எப்படியெல்லாம் நேசித்தார்,, குழந்தைத் தன்மையை எப்படியெல்லாம் சிலிர்ப்புடன் அணுகினார் என்பது புதிய ஆன்மீகப் புரிதல்களைத் தருகிறது.

விண்ணக வாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமெனில் சிறுவர்களாகவும், குழந்தைகளாகவும் மாற வேண்டியதன் தேவையை எடுத்துரைக்கிறார். “சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ‘ சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார் ( மார்க் 10 : 13 – 15 )

சிறு பிள்ளைகள் இயேசுவின் மிகப்பெரிய பிரியத்துக்குரியவர்களாக இருக்கின்றனர். இயேசு கோபமடையும் சந்தர்ப்பங்கள் மிகவும் அபூர்வம். தந்தையின் இல்லம் சந்தை போல மாறி, அதன் அர்த்தத்தை இழந்தபோது கோபமடைந்தார். இப்போது குழந்தைகளைத் தடுப்பதைக் கண்டு கோபமடைகிறார். காரணம் விண்ணரசு சிறு பிள்ளைகளைப் போல மாறுவோருக்கானது என்கிறார் இயேசு.

“நீ வளரவே மாட்டியா ?” என திட்டுவது தான் நமது இயல்பு. நீ சின்னப் பிள்ளையைப் போல மாற மாட்டாயா ? என்று கேட்பது இறைமகன் இயேசுவின் இயல்பு !

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.” ( மத்தேயு 18 : 3-5 ) எனும் இறை வார்த்தைகளில் இயேசு சிறு பிள்ளைகள் சார்ந்த மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறார்.

முதலாவது, குழந்தையைப் போல மாறுவது. சிறு பிள்ளைகள் எப்போதுமே தந்தையைச் சார்ந்தே இருப்பவர்கள். தந்தையின் கையைப் பிடித்து நடக்கும் போது உலகில் தன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை குழந்தைக்கு இருக்கும். அதே போல இறைவனைச் சார்ந்தே இருக்கும் மனநிலை சிறு பிள்ளையாய் மாறுவதன் முதல் நிலை. சார்ந்து இருத்தல், இயேசுவின் அருளை தினம் தினம் பெற்று, அன்றன்றைக்குரிய செயல்களில் வாழ்வது. ஒவ்வொரு நாளும் புதுக் கிருபை நமக்குக் கடவுள் தருகிறார் என்கிறது விவிலியம். முழுமையாய் இறைவனைச் சார்ந்து இருக்கும் குழந்தை மனநிலை அதைப் பெற்றுக் கொள்கிறது.

இரண்டாவது, குழந்தையைப் போல தன்னைத் தாழ்த்திக் கொள்ளுவது. குழந்தை மனநிலை என்பது பெருமையை விரும்பித் திரிவதில்லை. தோல்விகளையும், அவமானங்களையும் தாமரை இலைமேல் விழும் நீரைப் போலவே பாவிக்கும். தாழ்மை கிறிஸ்தவத்தின் அடிப்படை. தாழ்மையை இழந்தபோது சாத்தான் உருவானான், விண்ணகத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். இயேசுவோ சீடர்களின் பாதங்களைக் கூட பரவசத்தோடு கழுவும் பணிவைக் கொண்டிருந்தார். அத்தகைய தாழ்மையைக் கொள்வது குழந்தை மனநிலை. ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் கொடுத்து ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க இயேசுவின் பணியில் இணைந்தவன் ஒரு சிறுவன். அவனுடைய பெயர் கூட விவிலியத்தில் இல்லை ! நாமானை நலமாக்கத் துணை நின்ற சிறுமியின் பெயரும் விவிலியத்தில் இல்லை. சிறுவர்கள் தாழ்மையின் சின்னங்கள். அவர்கள் பெயருக்காக எதையும் செய்வதில்லை.

மூன்றாவது, சிறுபிள்ளையை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்தல். வெறுமனே ஏற்றுக் கொள்தலல்ல. குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும்போது அதை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்ளும் போது நாம் இறைவனை மகிமைப்படுத்துகிறோம். நாளைகளைக் குறித்த கவலையற்ற சிறுவர்கள் அன்றைய தினத்தை முழுமையாய் இறைவனோடு வாழ்தலின் சின்னங்கள். அவர்கள் தூய்மையானவர்கள். அத்தகைய தூய உள்ளத்தோர் விண்ணரசின் சொந்தக்காரர்கள் என்பதை இயேசு தனது மலைப்பொழிவில் உறுதிப்படுத்துகிறார்.

குழந்தையாய் மாறுவதும், குழந்தைகளை ஏற்றுக் கொள்வதும் நமக்கு தரப்பட்டிருக்கும் ஆன்மீகக் கட்டளைகள். குழந்தைகளுக்கு இடறல் உண்டாக்குபவர்களுக்கோ மிகப்பெரிய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” எனும் இயேசுவின் வார்த்தைகளின் வீரியம் அச்சமூட்டுகிறது. சிறியவர்களுக்கு எந்த விதத்திலும் இடஞ்சலாக இருக்கக் கூடாது என்பதே இயேசு சொல்லும் அழுத்தமான பாடம்.

சிறுவர்கள் நமது வாழ்வின் மிக முக்கியமானவர்கள். அவர்களை சிறந்த ஆன்மீக வெளிச்சத்தில் வளர்த்த வேண்டியது நமது கடமையாகும். நமது சமூகத்தில் இருக்கின்ற சிறுவர்களை நேசிப்போம், வழிகாட்டுவோம், ஏற்றுக் கொள்வோம். அவர்களை எந்த விதத்திலும் தவறான வழிக்கு அழைத்துச் செல்லாதிருப்போம்.

சிறு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கத் தானே இதுவரை அவசரம் காட்டினோம், இனிமேல் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் துவங்குவோம்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

ஆன்மீகம் : கிறிஸ்மஸ் – வார்த்தை மனிதனானார்.

christmas

1952ம் ஆண்டு. கொரியா சிவில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்த நேரம். ஒரு கிறிஸ்மஸ் இரவில் அமெரிக்கக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி உதவிக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அசரடிக்கும் குளிர், விறைக்கும் தேகம், உதவிக்கு யாரும் வரவில்லை. வழியே சென்றவர்களும், “எங்கே உன் அமெரிக்கப் புருஷன் ?” என ஏளனமாய் விரட்டி விட்டனர்.

பக்கத்து ஊரில் ஒரு மிஷனரி உண்டு என்பதை அறிந்திருந்த அந்தப் பெண் அந்த ஊரை நோக்கி நகரத் துவங்கினாள். முடியவில்லை பிரசவ நேரம். ஒரு பாலத்தின் அடியில் சென்று ஒதுங்கினாள். அங்கே அவளுக்குப் பிரசவம் நடந்தது. குழந்தையைத் தன்னந் தனியனாய்ப் பெற்றெடுத்த அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பனி பொழிந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் தனது துணிகளையெல்லாம் கழற்றி அந்தக் குழந்தையைப் பொதிந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

மறு நாள் காலையில் அந்த வழியாக மிஷனரிகள் வந்தபோது ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டனர். குரல் வந்த திசையில் சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி. உறைந்து போன நிலையில் இறந்து கிடந்த தாயின் கரங்களில் ஒரு ஆண் குழந்தை. குழந்தை காப்பாற்றப்பட்டான். பையன் காப்பகத்தில் வளர்ந்தான். தனது பத்தாவது வயதில் அவனிடம் அந்த உண்மையை காப்பகத்தினர் சொன்னார்கள்.

அதற்கு அடுத்தநாள் காலையில் படுக்கையில் அந்தப் பையனைக் காணவில்லை. அவனை அவர்கள் தேடினார்கள். அதே பாலத்தின் அடியில் அவனைக் கண்டார்கள். கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். தனது ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, விறைக்கும் குளிரில் இருந்த அந்தப் பையன் அழுது கொண்டே “இந்தக் குளிரையெல்லாம் நீ எனக்காகத் தாங்கினாயாம்மா” என நடுங்கிக் கொண்டே அழுதான். பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

தாயின் அன்பு அளவிட முடியாதது. அந்தத் தாய் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என சொன்ன இயேசுவின் அன்பு அனைத்திலும் உயர்ந்தது. இதே போன்ற நிராகரிப்பு, இதே போன்ற குளிர், ஒரு தாயின் தவிப்பு, ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு, எல்லாம் நாம் அறிந்தது தானே !

கிறிஸ்மஸ் விழாவை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் “அன்பு” எனலாம். மனுக்குலத்தின் மேல் கடவுள் கொண்ட அன்பு !

“மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” ( மத் 4.4  ) என்கிறது விவிலியம். அத்தகைய வார்த்தை மனிதனாக அவதாரம் எடுத்த நாளைத் தான் கிறிஸ்தவம் கிறிஸ்து பிறப்பு என்கிறது !

கிறிஸ்மஸ் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் பத்து விஷயங்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள் ? வண்ண வண்ண நட்சத்திரங்கள், கிறிஸ்மஸ் மரம், குடில், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் வாழ்த்து, புத்தாடை, நல்ல சாப்பாடு, அலங்காரம், அப்புறம் ஆலய திருப்பலி, இயேசுவின் பிறப்பு ! அவ்வளவு தானே ?

விழாக்கள் எல்லாமே இப்போது ஒரு வியாபார தளங்களாகி விட்டன. எந்த விழாவை எடுத்துக்கொண்டாலும் சரி, எப்படிடா ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்றே புதுப் புது விஷயங்களுடன் கடை விரிக்கும். தீபாவளி போன்ற விழாக்களுக்கு எரிந்து தீரும் பட்டாசுகள் பல கோடி ரூபாய்களை அழித்து முடிக்கும். கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள் சாக்லேட், ஆடைகள், அலங்காரங்கள் என பல விஷயங்களைக் காட்டி பொருளாதாரத்தின் பல்லைப் பிடுங்கும்.

உஷாராகிக் கொள்வது ரொம்ப நல்லது, ரொம்ப முக்கியமானது !

அலங்காரங்களே தேவையில்லையா ? மகிழ்ச்சியாய் எல்லோரும் இருக்க வேண்டாமா என மனசு குரல் கொடுக்கிறதா ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மகிழ்ச்சிக்கும், நீங்கள் தேவையில்லாமல் செலவிடும் பல்வேறு விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது !

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாய் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல் என்றால் நான் இதைத் தான் சொல்வேன். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், “இயேசு என் இடத்தில் இருந்தால் என்ன செய்வார் ?” எனும் கேள்வியைக் கொண்டே தீர்மானியுங்கள். வாழ்க்கை ரொம்பவே அர்த்தமுள்ளதாகி விடும்.

சரி, இயேசுவின் பிறப்பையே கொஞ்சம் பார்க்கலாமே ! இந்த பிரபஞ்சத்திலேயே ‘தான் எங்கே எப்படிப் பிறக்க வேண்டும்’ என தீர்மானித்துப் பிறந்த ஒரே ஒரு நபர் இயேசு மட்டுமே ! அப்படிப்பட்ட இயேசு எப்படி அவதரித்தார் ? அவருடைய வம்சாவழிப் பட்டியலில் பாவிகளுக்கு இடம். அவர் நினைத்திருந்தால் குற்றமே இல்லாத ஒரு பரம்பரையில் வந்திருக்க முடியாதா ?

அவருடைய பிறப்பு விலங்குகளுடைய கொட்டிலில். ஏன், அவர் நினைத்திருந்தால் மாளிகையில் அரசனின் மகனாய் அவதரித்திருக்க முடியாதா ?

அவர் பிறப்பு அறிவிக்கப் பட்டது சமூக அமைப்பின் கடைநிலையில் இருக்கும் இடையர்களுக்கு ! ஏன் மாளிகையில் பட்டாடைவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்க முடியாதா ?
அவர் பிறந்த இடத்தில் அலங்காரம் இருந்ததா ? அலங்கோலம் தானே இருந்தது ! அவரைச் சுற்றிப் புத்தாடை இருந்ததா கந்தல் இருந்ததா ? அவருக்கு சாக்லேட் பந்தி நடந்ததா ?

இப்படி இயேசுவின் உண்மையான பிறப்பு நிகழ்வு எப்படி நடந்தது என்பதையும், ஏன் நடந்தது என்பதையும் மனதில் அசைபோடாமல் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை.

இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நமது மையமாக இருக்க வேண்டிய முதல் நபர் இயேசு என்பதை முதல் தீர்மானமாகக் கொள்வோம். அந்தத் தீர்மானம் தான் நமது அடுத்தடுத்த செயல்களைத் தீர்மானிக்கச் செய்யும். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டிவற்றின் ஒரு டாப் 10 லிஸ்ட் போட்டுப் பார்க்கலாமா ?

1.        கிறிஸ்மஸ் ஒரு பகிர்வின் நாளாக மலரட்டும். உங்கள் குடும்பத்தில், நட்பு வட்டாரத்தில், உறவு வட்டாரத்தில் நீங்கள் வெறுக்கும் நபர் இருக்கிறாரா என்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நபருடன் நிச்சயமாகப் பேசுங்கள். தொலைபேசுங்கள், கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுங்கள். முடிந்தால் அவருடைய வீட்டுக்கே சென்று பேசுங்கள். ‘நான் ஏன் அவன் கிட்டே பேசணும் ?” எனும் ஈகோவைக் கழற்றாமல் இயேசுவை அணியவே முடியாது ! ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் மன்னிப்பு, உங்களையே விடுதலையாக்கும்.

2.        மகிழ்ச்சியை இறைவனை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளால் உருவாக்குங்கள். குழுவாக அமர்ந்து பாடல்கள் பாடுவது, உரையாடுவது என எந்த நிகழ்ச்சியாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். குழந்தைகள் இருக்கும் வீடெனில் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் விழாவையும், அதன் அர்த்தத்தையும் விளக்குங்கள். அவர்களுக்குக் கதைகள் சொல்லி கிறிஸ்மஸைச் சிறப்பானதாக்குங்கள்.

3.        உங்களுக்குச் சொந்தமல்லாத, பக்கத்து வீட்டு நபர் யாரோ ஒருவரை இந்த விழாநாள் மகிழ்வில் இணைத்துக் கொள்ளுங்கள். அவருடன் ஒரு புதிய உறவை உருவாக்குங்கள். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகப் படுத்தி வையுங்கள். அந்த நபருக்கு ஏதேனும் முக்கியமான தேவைகள் இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை அர்த்தப் படுத்துங்கள்.

4.        ஏதோ ஒரு நல்ல விஷயத்தை இந்த நாளில் நிச்சயம் செய்யுங்கள். ஒரு முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் கிறிஸ்துப் பிறப்பு மகிழ்ச்சியைப் பகிர்வதாகவோ, ஒரு மருத்துவமனை சென்று நோயாளியை சந்திப்பதாகவோ, ஒரு அனாதை இல்லத்துக்கு உணவு கொடுப்பதாகவோ, உங்கள் மனதில் எழும் இது போன்ற ஏதோ ஒரு நிகழ்வை நிச்சயம் செய்யுங்கள். உங்கள் பெயரை எந்த இடத்திலும் முன்னிலைப் படுத்தாமல் இயேசுவை முன்னிலைப்படுத்தியே அவற்றைச் செய்யுங்கள்.

5.         குடும்ப உறவை வலுவாக்கும் ஒரு நாளாக இதைக் கொண்டாடுங்கள். பார்க், சினிமா, பூங்கா, இத்யாதிகளைத் தவிர்த்து வீட்டில் அனைவரும் ஒன்றாய் இருந்து கொண்டாடுவதே சிறந்தது. தேவையற்ற பார்ட்டி அழைப்புகள், கொண்டாட்ட அழைப்புகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். குடும்ப உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்களிடையே வாழ்த்துக் கடிதங்கள் எழுதிப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

6.         பரிசுகள் கொடுக்கிறீர்களெனில் அது ஆத்மார்த்தமானதாய் இருக்கட்டும். அதிக விலையுள்ள பொருட்கள் தான் நல்லது என்பதெல்லாம் மாயை. உங்கள் கைப்பட எழுதப்படும் ஒரு வாழ்த்து மடலை விட உயர்ந்த வாழ்த்து அட்டைகள் கிடையாது. ஒரு நபரைச் சென்று பார்த்து ஒரு அன்பான புன்னகையைக் கொடுப்பது எவ்வளவு உயர்ந்த பரிசு என்பதை உணர்கிறோமா ? விதவையின் காணிக்கை இரண்டு காசு தான், ஆனால் கொடுத்த மனநிலை தானே கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது !

7.          கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழிகிறவர். தீர்ப்பும், முடிவும் அவர் கையில். எல்லோரிலும் இறைவனின் பிம்பத்தைக் காண்பதே ஆன்மீக வளர் நிலை. விழா நாட்கள் மதச் சண்டைகள், சச்சரவுகள், சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் கிறிஸ்மஸ் கொண்டாடுவது மாபெரும் பரிசேயத் தனம் ஆகிவிடும்.

8.         உங்களை அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்வதில் பயன் இல்லை. உங்களை அன்பு செய்யாதவர்கள், உங்களை அறியாதவர்கள், உங்கள் விரோதிகள் என எல்லோருக்காகவும் ஜெபியுங்கள்.

9.        அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நிறைவு எனும் நல்ல விஷயங்களே கிறிஸ்மஸ் விழாவில் நிரம்பியிருக்க வேண்டியவை. அவற்றை மனதில் நிரப்புங்கள். கோபம், எரிச்சல் போன்றவற்றை அழித்து விட இந்த ஆண்டு தூய ஆவியின் துணையை நாடுங்கள்.

10.  “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” எனும் வாசகங்களை உள்வாங்கி கிறிஸ்மஸ் தினத்தை வீணடிக்காதிருக்க வேண்டியது மிக முக்கியம். உங்கள் கிறிஸ்மஸ் விழா பொழிவிழக்க அது ஒன்றே போதும், எனவே அதை விட்டு ஒதுங்கியே இருங்கள்.

கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா. அன்பைப் பகிர்தல் மூலம் இயேசுவைப் பிரதிபலிக்கும் விழா. அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் கெவின் கோல்மென் எனும் பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூளையில் புற்று நோய். கடந்த அக்டோபர் மாதம் அவனைச் சோதித்த டாக்டர்கள் அவன் இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பான் என்றார்கள்.

பெற்றோர் மௌனமாய்க் கதறினார்கள். பையனோ, தனக்கு கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும், அதற்காகவே காத்திருக்கிறேன் என்று பெற்றோரிடம் சொன்னான். ஊரில் உள்ள மக்கள் அதை கேள்விப்பட்டார்கள். எல்லோரும் ஒன்று பட்டார்கள். பையனுடைய ஆசையை நிறைவேற்ற ஒட்டு மொத்த ஊருமே ஒன்று சேர்ந்தது. அக்டோபர் மாதத்திலேயே ஊரை முழுதும் அலங்கரித்து, பஜனை பாடல்கள் பாடி, கிறிஸ்மஸ் மரங்கள் வைத்து, கிறிஸ்மஸ் தாத்தாவை வரவைத்து ஒரு நிஜ கிறிஸ்மஸ் சீசனையே உருவாக்கி விட்டார்கள்.

பையனின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகள் கூறி, கேரல் பாடல்கள் பாட அவன் மகிழ்ந்தான். பெற்றோர் நெகிழ்ந்தனர். தனது பையனின் ஆசையை நிறைவேற்ற ஊரே ஓன்று திரண்டதில் கண்ணீர் விட்டனர். அந்தப் பையன் நிம்மதியாய் உணர்ந்தான். இரண்டு வாரங்களுக்குப் பின் கடந்த மாதம் அந்தப் பையன் இறந்தான். அன்பின் இன்னொரு பரிமாணத்தை அறிந்தவனாக. கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா என்பதன் செயல் வடிவம் அங்கே நிகழ்ந்தது.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இயேசு பிறக்கும் அனுபவம் எழ வேண்டும், அதுவே உண்மையான கிறிஸ்மஸ். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கட்டாயமான ஆன்மீக நிகழ்வல்ல. பைபிளில் எங்கும் இயேசுவின் பிறந்த நாள் பற்றிய குறிப்பு இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடிய வரலாறு இல்லை. இயேசுவின் அன்னை மரியாள் அந்த பிறந்த தினத்தைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் பேசியதாகவும் குறிப்புகள் இல்லை. இயேசு அதை நமக்கு ஒரு கடமையாகத் தரவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.

எனவே, இயேசு பிறப்பு விழாவை ஒரு கட்டாயத்துக்காகக் கொண்டாடாமல் இயேசுவின் அன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு இனிய அனுபவமாகக் கொண்டாடுவதே சாலச் சிறந்தது. அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.