பைபிள் மாந்தர்கள் 79 (தினத்தந்தி) யூதித்து

சர்வாதிகாரி நெபுகத்நேசரின் படைத்தளபதி ஒலோபெரின். இலட்சக்கணக்கான வீரர்களையும், பல்லாயிரக்கணக்கான குதிரைகள் தேர்கள் போன்றவற்றையும் அவர்களுடைய படை கொண்டிருந்தது.  எனவே செல்லுமிடமெல்லாம் வெற்றி அவனுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது.

அடுத்ததாக யூதேயாவின் மீது ஒலோபெரின் தனது பார்வையைச் செலுத்தினான். அதைக் கேள்விப்பட்ட யூதேயாவிலுள்ள இஸ்ரயேலர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எல்லோரும் கோணி உடுத்தி, சாம்பலில் அமர்ந்து கடவுளை நோக்கி கதறி மன்றாடினார்கள்.

யூதேயாவுக்கு உள்ளே நுழையும் மலைப்பாதைகள் எல்லாம் குறுகலானவை. அந்த மலைப்பாதைகளை எல்லாம் இஸ்ரயேலர்கள் வீரர்களைக் கொண்டு காவல் புரிந்தனர். எதிரிகள் வந்தால் மறைந்திருந்து தாக்க வசதியாக வியூகம் வகுத்தனர்.

த‌ன்னை எதிர்த்து நிற்க‌ இஸ்ர‌யேல‌ர்க‌ள் திட்ட‌மிடுகிறார்க‌ள் என்ப‌தைக் கேள்விப்ப‌ட்ட‌ ஒலோப‌ரின் எக‌த்தாள‌மாய்ச் சிரித்தான். அப்போது அக்கியோர் என்ப‌வ‌ர் அவ‌ரிட‌ம், இஸ்ர‌யேல‌ர்க‌ள் க‌ட‌வுளின் ம‌க்க‌ள். அவ‌ர்க‌ளை அழிப்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்றார். ஒலோபெரின் கோப‌ம‌டைந்தார். அக்கியோரை இஸ்ர‌யேல‌ரின் நாட்டுக்குள் விர‌ட்டி விட்டார்.

அக்கியோர் த‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வாய்ப் பேசிய‌தால் அவ‌ரை இஸ்ர‌யேல‌ர்க‌ள் மிக‌வும் அன்பு செய்தார்க‌ள். ஒலோபெரின் ப‌டைக‌ளைத் திர‌ட்டினான். நாட்டில் நுழைந்து எல்லோரையும் வெட்டி வீழ்த்த‌வேண்டும் எனும் க‌ற்கால‌ சிந்த‌னையோடு க‌ள‌மிற‌ங்கினான்.

ஆனால் அவ‌னுடைய‌ ப‌டைத்த‌லைவ‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் வ‌ந்து, “இது ச‌ரிவ‌ராது. நாம் ஒரு புதிய‌ திட்ட‌ம் போடுவோம். இஸ்ர‌யேல‌ரின் நாட்டுக்குள் செல்லும் எல்லா நீர்நிலைக‌ளையும் கைப்ப‌ற்றுவோம். ந‌க‌ரில் த‌ண்ணீர் இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் நம‌க்குப் ப‌ணிந்து தானே ஆக‌வேண்டும் ?

ஒலோபெரினுக்கு அந்த‌த் திட்ட‌ம் பிடித்துப் போன‌து. அப்ப‌டியே செய்தான். இஸ்ர‌யேல‌ர்க‌ள் இப்ப‌டி ஒரு விஷ‌ய‌த்தை யோசிக்க‌வில்லை. என‌வே அதிர்ச்சிய‌டைந்தார்க‌ள். ச‌ர‌ண‌டைவ‌தைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை. க‌ட‌வுளிட‌ம் வேண்டுவோம். ஐந்து நாட்க‌ள் பார்ப்போம். நில‌மை ச‌ரியாக‌வில்லையேல் ச‌ர‌ண‌டைவோம். என‌ முடிவெடுத்த‌ன‌ர்.

அப்போது யூதித்து த‌லைவ‌ர்க‌ள் முன்னால் வ‌ந்து நின்றாள். அறிவும், ஞான‌மும், அழ‌கும் க‌ல‌ந்த கைம்பெண் அவ‌ள். “க‌ட‌வுளுக்கே நாள் குறித்து பாவ‌ம் செய்யாதீர்க‌ள். நாம் தொட‌ர்ந்து க‌ட‌வுளிட‌ம் வேண்டுவோம்” என்றாள்.

அன்று இர‌வு யூதித்து அழ‌கிய‌ ஆடைக‌ளை உடுத்தி, ந‌றும‌ண‌ம் பூசி த‌ன‌து ப‌ணிப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு எதிரிக‌ளின் கூடார‌ம் நோக்கிப் போனாள். இஸ்ர‌யேல‌ர்க‌ள் குழ‌ம்பினார்க‌ள்.

த‌ங்க‌ள் கூடார‌த்தை நோக்கி இர‌ண்டு பெண்க‌ள் வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ எதிரிக‌ள் அவ‌ர்க‌ளை வ‌ழிம‌றித்த‌ன‌ர்.

“நீங்க‌ள் யார் ?”

“நாங்க‌ள் இஸ்ர‌யேல‌ர்க‌ள், அவ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ப்பி ஓடுகிறோம்”

“த‌ப்பி ஓடுகிறீர்க‌ளா ? உள‌வு பார்க்க‌ வ‌ந்திருக்கிறீர்க‌ளா ?”

“எந்த‌ நாட்டில் பெண்க‌ள் உள‌வு பார்க்கிறார்க‌ள் ? எங்க‌ளை உங்க‌ள் ப‌டைத்த‌ள‌ப‌தியிட‌ம் கூட்டிச் செல்லுங்க‌ள். அவ‌ரிட‌ம் பேசுகிறோம்” யூதித்து சொன்னாள்.

அவர்களை ஒலோபரினிடம் அழைத்துச் சென்றார்கள். ஒலோபெரின் அவளுடைய‌ அழகில் மயங்கினான்.

“ம்ம்… சொல்”

“இஸரயேல் மக்கள் பாவம் செய்கிறார்கள். எனவே கடவுளின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார்கள். அழிவது உறுதி” யூதித்து சொல்ல ஒலோபெரின் மகிழ்ந்தான்.

“ஓ.. அப்ப‌டியானால் போரைத் துவ‌ங்க‌லாமா ?”

“வேண்டாம். நான் தின‌மும் அதிகாலையில் க‌ட‌வுளிட‌ம் வேண்டும் வ‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ள். க‌ட‌வுளிட‌ம் கேட்டு ச‌ரியான‌ நேர‌த்தைச் சொல்கிறேன்”.

யூதித்தின் அழ‌கில் ம‌ய‌ங்கிய‌ ஓலோபெரின் அவ‌ளை எப்ப‌டியாவ‌து அடைய‌வேண்டும் என‌ க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக்கொண்டான். அத‌ற்காக‌ ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அதில் யூதித்தையும் அழைத்தான்.

ஓலோபெரினுக்கு மோக‌த்தின் சிணுங்க‌ல்க‌ளையும், ம‌துவையும் ஊற்றிக் கொண்டே இருந்தாள் யூதித்து. விருந்து முடிந்து எல்லோரும் போய்விட்ட‌ன‌ர். ஓலோபெரினுக்கு ம‌து வார்ப்ப‌தை யூதித்து நிறுத்த‌வில்லை. ஓலோபெரின் த‌ன்னிலை ம‌றந்தான். யூதித்தை இழுத்துக்கொண்டு ம‌ஞ்ச‌த்தில் ச‌ரிந்தான்.

இந்த‌ ச‌ம‌ய‌த்துக்காக‌க் காத்திருந்த‌ யூதித்து, தூணில் தொங்கிய அவ‌னுடைய‌ வாளை எடுத்தாள். இர‌ண்டு கைக‌ளாலும் அதைத் தூக்கி ஓலோபெரினின் க‌ழுத்தில் வேக‌மாக‌ இற‌க்கினாள். ஓலோபெரின் எனும் வீர‌னின் த‌லை உருண்டோடிய‌து. அதை எடுத்து பையில் போட்டுக்கொண்டு அதிகாலையிலேயே இட‌த்தைக் காலி செய்த‌ன‌ர்.

யூதித்து திரும்பி வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ இஸ்ர‌யேல‌ர்க‌ள் ம‌கிழ்ந்த‌ன‌ர். ஓடிச்சென்று அவ‌ளிட‌ம் விஷ‌ய‌த்தைக் கேட்ட‌ன‌ர்.

“நாம் வெற்றி பெறுவ‌து உறுதி.”

“ஏன் ? ஒலோபெரின் ஊரை விட்டு ஓடிவிட்டானா ?”

“அவ‌ன் த‌லையை விட்டு விட்டே ஓடிவிட்டான்” சொன்ன‌ யூதித்து பைக்குள் இருந்த‌ ஒலோபெரினின் த‌லையை எடுத்துக் காட்டினாள். எல்லோரும் விய‌ந்து போனார்க‌ள்.

“த‌லைவ‌ன் இல்லாத‌ ப‌டை வெல்லாது. என‌வே நாம் அவ‌ர்க‌ளுக்கு எதிராய் போரிட்டுச் செல்வோம். அவ‌ர்க‌ளுடைய‌ கூடார‌த்துக்கு தொலைவில் நிற்போம். ந‌ம்மைக் காணும் அவ‌ர்க‌ள் போருக்கு ஆய‌த்த‌மாவார்க‌ள். ஓலோபெரினின் உத்த‌ர‌வு கேட்டு அவ‌ன் கூடார‌த்துக்குச் செல்ப‌வ‌ர்க‌ள் அவ‌ன் இற‌ந்து கிட‌ப்ப‌தைக் க‌ண்டு சித‌றிப் போவார்க‌ள். சித‌றும் அவ‌ர்க‌ளை நாம் வெல்வோம்”

யூதித்தின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இஸ்ரயேலர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.

இஸ்ரயேலர்களை காப்பாற்றிய கடவுளை யூதித்தும், மக்களும் தொழுதனர். புகழ்ப் பாக்களைப் பாடினர்.

பைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து

இஸ்ரயேலரான தோபித்து அசீரியர்களின் காலத்தில் நாடுகடத்தப்பட்டு நினிவேயில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தன்னுடைய செல்வத்தை 400 வெள்ளிக்காசாய் மாற்றி தூர தேசமான மேதியாவிலுள்ள கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

தோபித்துவுக்கு ஒரு மகன். பெயர் தோபியா. அந்தக் காலகட்டத்தில் மன்னன் இஸ்ரயேலர்களைக் கொன்று நினிவே நகருக்கு வெளியே எறிவதை பெருமையாய் செய்து கொண்டிருந்தான். அந்த இஸ்ரயேலரின் பிணங்களை எடுத்து நல்லடக்கம் செய்வது தோபித்தின் வழக்கமாய் இருந்தது.

ஒருநாள் தான் கொன்ற இஸ்ரயேலரின் பிணங்களைப் பார்க்க வந்தான் மன்னன். ஆனால் எந்த பிணத்தையும் காணாமல் கடும் கோபமடைந்தான். மக்கள் தோபித்து செய்யும் காரியங்களைப் பற்றி மன்னனிடம் தெரிவித்தனர்.

கோபமடைந்த மன்னன் தோபித்தின் மகனையும், மனைவியையும் சிறைப்பிடிக்க, தோபித்து தப்பி ஓடினார். அந்த மன்னனின் ஆட்சி முடிந்தபின் தோபித்தின் குடும்பம் விடுதலையானது.

அதே நேரத்தில் மேதியா நாட்டில் சாரா என்றொரு எழில் மங்கை இருந்தாள். பேரழகியான அவளை சாத்தானான அசுமதேயு பிடித்திருந்தான். அவளை மணக்கும் ஆண்களை முதலிரவிலேயே அவன் கொன்று விடுவான். இப்படி ஏழு பேர் அவளை மணந்து ஏழுபேரும் முதலிரவிலேயே இறந்து விட்டனர். இவர்கள் தோபித்துவின் உறவினர்கள். சாராவும் தந்தையும் கடவுளிடம் உருக்கமாய் மன்றாடினர்.

தோபித்துவின் கஷ்டகாலம் அதிகரித்தது. ஒரு பறவை அவரது கண்ணில் எச்சமிட கண்ணின் பார்வை முழுமையாய் போய்விட்டது. வீட்டில் வறுமை வந்தது. திடீரென அவருக்கு மேதியா நாட்டில் கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்த நானூறு கிலோ வெள்ளி நினைவுக்கு வந்தது. தோபியாவை அனுப்பி அதை கொண்டு வர முடிவு செய்தார்.

கடவுள் தோபியாவின் மன்றாட்டையும், சாராவின் மன்றாட்டையும் கேட்டார். இருவரின் சிக்கலையும் தீர்க்க தனது தூதரான இரபேலை அனுப்பினார்.

“தோபியா, நான் பணத்தை கபேலிடம் கொடுத்தபோது ஒரு ஆவணம் தயாரித்து அதை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை அவரும், இன்னொரு பாதியை நானும் எடுத்துக் கொண்டோம். அது தான் அடையாளம்” என்று சொல்லி ஒரு ஆவணத்தின் பாகத்தைக் கொடுத்தார் தோபித்து.

தெரியாத ஊருக்கு மிகப்பெரிய வேலைக்காகப் புறப்பட்ட தோபியா, வழித்துணைக்காக அவர் ஒருவரை அழைத்துக் கொண்டார். அவர் இரபேல் !

தோபியாவும், இரபேலும் பயணம் செய்தனர். தீக்ரிசு எனும் ஆற்றங்கரையில் வந்தபோது காலைக் கழுவுவதற்காக தோபியா ஆற்றில் கால் வைத்தார். அப்போது ஒரு பெரிய மீன் வந்து அவருடைய காலைக் கவ்வியது.

“அந்த‌ மீனை பிடி. அத‌ன் இத‌ய‌ம், ஈர‌ல், பித்த‌ப்பை மூன்றையும் த‌னியே பாதுகாப்பாய் வை. ப‌ய‌ன்ப‌டும்” என்றார் இர‌பேல். தோபியா அப்ப‌டியே செய்தார்.

இர‌பேல் தோபியாவை இர‌குவேலின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். அவ‌ருடைய‌ ம‌க‌ள் தான் சாரா.

“நாம் இன்று இங்கே த‌ங்குவோம். இது இர‌குவேலின் வீடு. அவ‌ருக்கு ஒரு அழ‌கிய‌ ம‌க‌ள் உண்டு. அவ‌ள் பெய‌ர் சாரா. உன‌து முறைப்பெண்.” இர‌பேல் சொன்னார்.

“ஓ.. சாராவை என‌க்குத் தெரியும். அவ‌ளை ஏழுபேர் ம‌ண‌த்து ஏழுபேரும் இற‌ந்து போனார்க‌ளே” தோபியா ப‌த‌ட்ட‌மாய்ச் சொன்னார்.

“க‌வ‌லைப்ப‌டாதே.. உன‌க்கு ஒன்றும் ஆகாது” இர‌பேல் சொன்னார்.

இர‌குவேல் அவ‌ர்க‌ளை வ‌ர‌வேற்றார். தோபியாவைப் பார்த்த‌தும் அவ‌ர் முக‌த்தில் ஒரு குழ‌ப்ப‌ம்.

“உன்னை மாதிரி ஒரு சொந்த‌க்கார‌ர் என‌க்கு உண்டு… அவ‌ரோட‌ பேர் தோபித்து”

“ஓ… நான் அவ‌ரோட‌ பைய‌ன் தான் நான்” தோபியா சிரித்தார். இர‌குவேல் வியந்து போய் அவ‌ர்க‌ளை ஆன‌ந்த‌மாய் வீட்டுக்குள் அழைத்தார்.

சாராவைப் பார்த்த‌தும் தோபியாவுக்கு ரொம்ப‌ பிடித்துப் போய்விட்ட‌து. அன்று இர‌வே அவ‌ளை அவ‌ர் ம‌ண‌முடித்தார்.

“இரவு நீ சாராவை நெருங்கும்போது அந்த மீனின் ஈரலின் ஒரு பகுதியையும், இதயத்தின் ஒரு பகுதியையும் தீயில் போடு. பேய் ஓடிவிடும்” இரபேல் சொன்னார்.

தோபியா அப்படியே செய்ய, பேய் ஓடியது.

மறுநாள் தோபியாவின் மரணச் செய்தியை எதிர்பார்த்து, அடக்கத்துக்கான ஆயத்தம் செய்து கொண்டிருந்த இரகுவேல் தோபியா உயிருடன் இருப்பதைப் பார்த்து பரவசமடைந்தார். அவருடைய மனபாரம் முழுமையாய் நீங்கியது.பின்னர் தோபியா கபேலைச் சந்தித்து பணத்தை வாங்கிக் கொண்டு, மனைவியுடனும், இரபேலுடனும் தன் வீடு திரும்பினார்.

மகன் திரும்பியதை அறிந்து மகிழ்ந்த தோபித்து, நடந்த கதைகளைக் கேட்டு வியந்தார்.

“உன் கையிலிருக்கும் மீனின் பித்தப்பையை அவருடைய கண்ணில் தேய்” இரபேல் சொல்ல அப்படியே செய்தார் தோபியா. என்ன ஆச்சரியம், தோபித்து பார்வை பெற்றார்.

தோபித்து இர‌பேலைப் பார்த்து” உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்” என ஆனந்தமாய்ச் சொன்னார்.

“கொடுப்பதே என் வழக்கம். நான் க‌ட‌வுளின் தூத‌ன்”. இரபேல் புன்னகையுடன் சொல்லி விட்டு மறைந்தார்.

க‌ட‌வுளின் விய‌த்த‌கு செய‌லை அனைவ‌ரும் போற்றின‌ர்.