ஆண்பாவம் பொசொல்லாதது ! (ஆண்கள் ஸ்பெஷல்)

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது. பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை.

பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக் குலுங்குகையில் மகிழ்கின்றனர்.

ஆண்களை வேர்கள் என்று சொல்ல வேண்டும். அவை பூமிக்குள் மறைந்திருக்கும். எப்போதும் வெளியே வந்து, ‘நான் தான் வேர்’ என அது விளம்பரப் படுத்துவதில்லை. ஆனால் அந்த குடும்பம் எனும் மரம் சாய்ந்து விடாதபடி எப்போதும் பூமியை இறுகப் பற்றிக் கொண்டே இருக்கும். பூக்களின் வசீகரம் குறைந்தால் உடனடியாக நீரை உறிஞ்சி கிளைகளுக்கு அனுப்பி வைக்கும்.

கிளைகள் பூக்கிரீடம் சூட்டிக்கொள்ளும் போது வேர்களில் விழா நடக்கும். ஆனால் அந்த விழாவை யாரும் காண்பதில்லை. அது ஆழ்கடலில் குதித்து விளையாடும் ஒரு மீனைப் போல வெளிப்பார்வைக்கு மறைவாகவே இருக்கிறது.

கிளைகளின் வசீகரமும், இலைகளின் வசீகரமும் வேர்களைப் பற்றிய நினைவுகளையே மறக்கடிக்கச் செய்து விடுகின்றன. அதற்காக வேர்கள் கவலைப்படுவதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என அமைதியாய் இருக்கின்றன.

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

ஒரு சுவாரஸ்யமான‌ கதை உண்டு. ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.

கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.

“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”

“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”

“அப்போ பெரிய விஷயங்கள் ?”

“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ?  இந்த மாதிரி ! ”

அதாவது குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். காரணம் வேறொன்றுமில்லை குடும்பம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பது தான்.

அதனால் தான் சீரியல் பார்த்து ரொம்பவே துயரத்தில் இருக்கும் பெண்களிடம் தங்களுடைய பிரச்சினைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அதற்காக, “எதுவும் பேசமாட்டாரு” எனும் பட்டத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.

ஆண்கள் பேசாமலிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், “பேசப் போய் வீணா எதுக்கு பிரச்சினை” என்பது தான். பெண்களால் பேசாமலிருக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் பேசுவதற்காகப் படைக்கப் பட்டவர்கள்.அவர்களால் பேசாமல் இருக்க முடிவதில்லை. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் ஏவாளைப் படைக்கும் முன் ஆதாமைப் படைத்து வைத்தாரோ கடவுள் எனும் சந்தேகம் எனக்கு உண்டு.

பெண்கள் உணர்ச்சிகளை கொட்டோ கொட்டெனக் கொட்டுவார்கள். அதைக் காயப்படுத்தாமலும், ஈரப்படுத்தாமலும் காதில் போட்டுக்கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கு உண்டு. திடீரென “நீங்க என்ன சொல்றீங்க ?” என மனைவி கேட்டால் கணவனுக்கு இரண்டு பதட்டங்கள் வரும். ஒன்று, “நான் என்ன சொன்னா பிரச்சினை இல்லாமல் இருக்கும்”. இரண்டாவது, “இதுவரை மனைவி என்ன தான் பேசிட்டிருந்தா ?”. மனைவியர் அந்த கேள்வியைக் கேட்காமல் இருப்பது என்பது என்ன ஒரு பாக்கியம் என்பது கணவர்களுக்கு மட்டுமே தெரியும் !!!.

மனைவியின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். உடன்பாடு இருந்தால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். மறுபடி வாசிக்க வேண்டாம். சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். “வாயை மூடிட்டு பேசறதைக் கேளு” எனும் ஒரு வரி தான் பெரும்பாலும் ஆண்களுக்கான உரையாடலின் பங்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் மறதி ! . மறதி என்பது ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம். பெண்களின் அதீத ஞாபகசக்தி ஆண்களுக்கு இறைவன் கொடுத்த சாபம். எல்லாவற்றுக்கும் ஒரு சமநிலை வைப்பவர் இறைவன் என்பதன் இன்னொரு வெளிப்பாடு இது. கல்யாணம் ஆன புதுசுல நீங்கள் சொன்னது முதல், நேற்று நீங்கள் வாங்க மறந்த விஷயங்கள் வரை மனைவியின் நினைவுப் பேழையில் இருக்கும். மறதிக்கு மனைவி தரும் பெயர், “உங்களுக்கு அக்கறையில்லை !!!”. அப்படி மனைவி திட்டியதையே அரைமணி நேரத்தில் ஆண்கள் மறந்துவிடுவது தான் வரத்தின் அழகு.

வாரம் ஆறு நாட்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஏழாவது நாள் மாலையில் அரைமணி நேரம் வெளியே கிளம்பும் போது பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்கும், “எப்பவும் பிரண்ட்ஸ் கூட சுத்தினா போதும்… நாளைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு.. வீட்ல அவ்ளோ வேலை இருக்கு…!!!”. அந்த நேரத்தில் உள்ளுக்குள் எழுகின்ற எரிமலைக் குழம்பை, ஆலகால விஷத்தைப் போல தொண்டைக்குழியில் தேக்கி, “ஒன் அவர்ல வந்திடுவேன்” என சிரித்துக் கொண்டே சொல்லும் கலை அவ்ளோ ஈசியா என்ன ?

தான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ஒரு நன்றி, ஒரு பாராட்டு வேண்டுமென எதிர்பார்ப்பவர் மனைவி என்பது கணவர்களுக்குத் தெரியும். மறக்காமல் அதைச் செய்து விடுவார்கள். ஆனால் கணவன் செய்யும் செயல்களெல்லாம் ‘அது அவரோட கடமை’ ரேஞ்சுக்குத் தான் பெரும்பாலும் மனைவியரால் எடுத்துக் கொள்ளப்படும். “மனைவி திட்டாம இருந்தா, பாராட்டினதுக்கு சமம்பா” என்பதே ஆண்களின் ஆழ்மன சிந்தனை.

“இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் குரல் கேட்காத வீடுகள் உண்டா ? மனைவியை திருப்திப்படுத்த அடுத்த முறை ஏதாவது தாமாகவே செய்தால், “ஏன் இதையெல்லாம் செஞ்சிட்டு திரியறீங்க?” எனும் பதில் வரும். அமைதியாய் ,”அப்போ என்ன செய்யணும்” என்று கேட்டால் “இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் பதில் வரும். உலகம் மட்டுமல்ல உருண்டை எனும் அறிவியல் உண்மை உணர்ந்த களைப்பில் ஆண்கள் சிரிக்கும் சிரிப்பு அவர்களுக்கே புரியாதது.

“மன்னிச்சிடும்மா” எனும் ஆண்களின் வார்த்தையில் “ஆள விடு சாமி… ” எனும் பொருள் உண்டு. அந்தப் பொருள் வெளியே தெரியாத அளவுக்கு பேசும் வலிமையில்லாத கணவர்கள் வாட்ஸ்ஸப் பயன்படுத்துவதே நல்லது. நடிப்பை விட ஐகான் ஈசி !! “ஆமா செய்றதையெல்லாம் செஞ்சுட்டு.. மன்னிப்பு வேற” என இரட்டையாய் எகிறும் மனைவியரை சமாளிப்பது கலிங்கப்போரை விடக் கடினமானது.

என்ன பரிசு கிடைத்தாலும், “வாவ்.. சூப்பர்” என்பது கணவர்களின் வழக்கம். மனைவியோ “சேலை..நல்லா ‘தான்’ இருக்கு, பட் பார்டர் கொஞ்சம் சரியில்லை.. எவ்ளோ ஆச்சு… மாத்த முடியுமா ?” என பல கேள்விகளுக்கு நடுவே ஏண்டா கிஃப்ட் வாங்கினோம் என கலங்கும் கணவர்கள் அப்பாவிகளா இல்லையா ?

வெளியே போக தயாராகி ஒருமணி நேரம் காத்திருப்பார் கணவன். மேக்கப் முடித்த மனைவி சொல்வார், “சீக்கிரம் வாங்க, காரை வெளியே எடுத்திருக்கலாம்ல, ஷூ போடுங்க, கார் சாவி எங்கே? எல்லா இடத்துக்கும் லேட்டாவே போக வேண்டியது”. “இதப்பார்ரா…” என கவுண்டமணி கணக்காய் மனசுக்குள் ஒலிக்கும் குரலை வெளிக்காட்ட முடியுமா என்ன ?

“இதெல்லாம் என்கிட்டே சொல்லவேயில்லை” எனும் மிரட்டல் கேள்வி தவறாமல் வரும் ஆண்கள் எதையாவது தெரியாத்தனமா மறந்து தொலைத்தால். அதே விஷயத்தை மனைவி சொல்லாமல் இருந்தால், “ஆமா.. நீங்க எப்போ வீட்டுக்கு வரீங்க, எங்கே பேசறீங்க… இதையெல்லாம் சொல்ல ?”எனும் பதில் தானே வழக்கம் !

இப்படியெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தாலும், இணைந்தே வாழ்வதில் தான் குடும்ப வாழ்க்கை அர்த்தமடைகிறது. ஆண் எனும் பாத்திரத்தில் ஊற்றி நிரப்பும் பானமாக பெண் இருப்பதும், பெண் எனும் பாத்திரத்தில் நிரம்பித் தளும்பும் பானமாக ஆண் இருப்பதுமே வாழ்வின் அழகு.

ஒருவருடைய தவறை அடுத்தவர் எளிதாக எடுத்துக் கொள்வதும், வெற்றிகளை இணைந்தே ரசிப்பதும், ரசனைகளை மதிப்பதும், தனிப்பட்ட நேரங்களை ஒதுக்குவதும், விவாதங்களில் தோற்பதை வெற்றியாய் நினைப்பதும் குடும்ப வாழ்க்கையின் தேவைகள்.

ஒரு குழந்தை சமூகத்தில் சரியான இடத்தை அடைய ஒரு தந்தையின் அருகாமையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள். தாயின் அன்பை விட தந்தையின் அன்பு இதில் அதிக முக்கியம் என்கின்றன சில ஆய்வுகள். கணவன் மனைவி உறவு இறுக்கமாய் இருந்தால் தான்,  தாய் தந்தை பொறுப்புகளும் செவ்வனே நடக்கும்.

ஆண்கள் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்று உளவியல் சொல்வதுண்டு. உண்மையில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் எதிர்பார்ப்பதும் அன்பு மட்டுமே. அன்பு அடுத்தவரை மரியாதை குறைவாய் நடத்தாது என்பது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் அன்பும் பகிர்தலும் தொடர்ந்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அங்கே ஏதேனும் இடைவெளி விழும்போது தான் வேறு ஏதேனும் ஒரு உறவு வந்து நுழைந்து விடுகிறது. அது குடும்ப வாழ்க்கைக்கு கண்ணிவெடியாய் மாறிவிடுகிறது.

பெண்பாவம் பொல்லாததாய் இருக்கலாம்

ஆண்பாவம் சொல்லாததாய் இருக்கலாம் ‍

ஆனால் இதயத்தில்

அன்பு இல்லாததாய் மட்டும் இருக்க வேண்டாம்.

 

வாழ்த்துகள்.

இன்றே கடைசி நாள் !

 6592617

இதுவே உங்கள் வாழ்வின் கடைசி நாள் போல வாழுங்கள். கடந்த நாட்கள் கடந்து போய்விட்டன. எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை. –

வேய்ன் டையர்

காலை முதல் மாலை வரை அரக்கப் பரக்க ஓடிக் கொண்டே இருக்கிறோம் இல்லையா ? வழக்கமான உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால் பேட்டரி போட்ட கடிகாரம் போல என்று சொல்லலாம். பரபரப்பாய் எழுந்து, குளித்து, சட்டென விழுங்கி, அவசரமாய் பேப்பரைப் புரட்டி, அல்லது சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி செய்தியைக் கேட்டு, பாலிஷ் போட மறந்த ஷூவைச் சபித்துக் கொண்டே, கையாட்டும் குழந்தைக்கு ஒன்றரை வினாடி செலவு செய்து டாட்டா காட்டியபடி காரைக் கிளப்பி அலுவலகம் போனால் வேலை வேலை வேலை ! அப்புறம் ‘அடடா இருட்டிடுச்சே’ என்றோ ‘ மிட்நைட் ஆயிடுச்சா’ என்றோ பரபரத்து ஒரு ரிட்டன் டிரைவ் !

கேட்டால், ‘ரொம்ப பிஸி’. ‘இல்லேன்னா முடியாதுங்க’. ‘எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியம்’. என்று ஏகப்பட்ட பதில்கள் ரெடிமேடாய் இருக்கும்.

எது முக்கியம் ? எது முக்கியமில்லை ? வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு வேலையில் முழுமையாய் ஈடுபடுவதே வாழ்க்கை. சிலருக்கு வாழ்க்கையை அனுபவிப்பதே வேலை. சிலருக்கு பணம் சம்பாதிப்பது ! இன்னும் சிலருக்கு மனங்களைச் சம்பாதிப்பது. சிலருக்கு வெளிநாடுகள் போய் கிளையன்ட் மீட்டிங் கலந்து கொள்வது, வேறு சிலருக்கு சேரிகளுக்குப் போய் ஏழைக் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது. சிலருக்கு நண்பர்களோடு அரட்டை அடிப்பது. சிலருக்கு நெஞ்சுருக பிரார்த்திப்பது. ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவன். எனவே தான் அவனுடைய செயல்களும் வித்தியாசமானவையாய் இருக்கின்றன.

ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்று, “இன்னிக்கு தான்பா உன்னோட கடைசி நாள். என்ன வேணும்ன்னாலும் பண்ணிக்கோ, நாளைக்கு நீ காலி” என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள். நீங்கள் நாத்திகர் என்றால் கடவுள் என்பதை டாக்டர் என்று நினைத்துக் கொள்ளுங்கள் !

உங்களுக்கு எழும் அச்சமும், மிரட்சியும், இன்ன பிற உணர்ச்சிகளைத் தவிர்த்து விட்டு பாருங்கள். உங்களுடைய அன்றைய தினமும் இதே பரபரப்பாய் தான் இயங்குமா ? காலையில் எழுந்து மாலை வரை ஓடிக் கொண்டே இருப்பீர்களா ? அல்லது கடைசியாய்ப் பார்க்கும் அலாதிப் பிரியத்துடன் சூரிய ஒளியைத் தொட்டுப் பார்ப்பீர்களா ? மனைவியைப் பிரியமாய் பார்த்துக் கொண்டே காபியை சுவைப்பீர்களா ? சாப்பிடும் போதும் மழலையை அணைத்துக் கொண்டே ஊட்டி விடுவீர்களா ? அலுவலகம் கிளம்பும் போது குழந்தையைக் கட்டியணைத்து, மனைவிக்கு டாட்டா காட்டி கிளம்புவீர்களா ? வேலையை விட முக்கியமான விஷயம் உறவு என்பதை உணர்ந்து நேரத்தோடு வீடு திரும்புவீர்களா ?

அதெப்படி நேற்றுவரை முதல் இடம் பிடித்தவையெல்லாம் இன்று சட்டென கடைசி இடத்துக்கு ஓடிவிட்டன ? நேற்று வரை உதாசீனப்படுத்தப்பட்டவையெல்லாம் இன்று முதல் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டன ? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் !

உண்மையில் இந்தக் கடைசி நாளில் நீங்கள் எவற்றையெல்லாம் முக்கியம் என கருதுகிறீர்களோ அவையே மிக முக்கியமானவை. எனவே தான் தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள், “இன்றே கடைசி தினம்” என்பது போல வாழுங்கள் என்று !

இது உங்களுடைய கடைசி தினமாக இருந்தால் நீங்கள் யார் மீதும் கோபமோ, விரோதமோ எதிர்ப்போ கொண்டிருக்க வாய்ப்பில்லை. வழியே போகும் பூனைக் குட்டியைக் கூட நேசத்தோடு தான் பார்ப்பீர்கள். யாரையாவது ஏமாற்றி, பணம் பிடுங்கி, வாழ்க்கையைக் கெடுக்கும் சிந்தனைகள் ஏதும் வராது.

சாகக் கிடக்கும் மனிதர்கள் சொல்வதைக் கவனித்திருக்கிறீர்களா ? “சாகப் போற நேரத்துல எதுக்கு அவன் கூட சண்டை போட்டுகிட்டு… அதை விட்டுடு” என்பார்கள். சமாதானத்தோடு சாவதா, சமாதானத்தோடு வாழ்வதா ? எது நல்லது ? எது தேவையானது ? வாழ்க்கையை விட மரணம் முக்கியமானதா ? சாகும் போது அன்பு செலுத்த மனம் சொல்கிறதெனில், ஏன் வாழும் போது அதைச் சொல்ல மனம் தயங்குகிறது. மன்னிப்பும், அரவணைப்பும் சாவுக்கு முன் எழுதப்பட வேண்டிய முடிவுரைகளா ? இல்லை வாழ்க்கையில் எழுதவேண்டிய முன்னுரைகளா என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் இல்லையா ?

வாழ்க்கை வாழ்வதற்கானது. அதில் நின்று நிதானித்து நமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? நாம் சரியான பாதையில் செல்கிறோமா ? என்பதை அடிக்கடி பரிசீலனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் !

நிதானிப்போம், வாழ்வோம்

ஆரோக்கியமாய் வாழ்வது கடினமல்ல

health and beauty concept - smiling little girl with glass of water

ஆரோக்கியம் மட்டும் விடைபெறுமானால், 
ஞானம் தானாக வெளிப்பட மறுக்கும், கலைஉருவாகாது, 
வலிமை போரிடாது, செல்வம் பயனிலியாகும், புத்திசாலித்தனம் 
செயல்படமுடியாமல் போகும் – ஹெரோபிலஸ்.

ஆரோக்கியமான வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதில், ஆரோக்கியமான உடல் ரொம்பவே பயன் செய்யும். ஒரு மனிதனுடைய உடல் வலுவாக இருக்கும் போது தான் மனமும், சிந்தனையும் வலுவடையும். ஆரோக்கியமாக இருக்கும். வெற்றியாளராய்ப் பரிமளிக்கவும் ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் ரொம்ப அவசியம்.

ஒரு கவிஞன் பாடி பில்டராய் இருக்கத் தேவையில்லை என்றொரு வாதம்  உண்டு., உண்மை தான் ஆனால் யாராய் இருந்தாலும் ஆரோக்கியம் தேவை எனும் கருத்து மட்டும் எப்போதுமே நீர்த்துப் போவதில்லை !

வாழ்க்கை அவசரங்களின் பைகளில் மனிதர்களைத் திணித்து விட்டது. யாரும் ஆர அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.

இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம்.

இதோ, இந்த பத்து செய்திகளையும் மனதில் கொள்ளுங்கள்.

  1. தினமும் காலையில் தவறாமல் காலை உணவு உண்ணுங்கள். காலையில் உணவு உண்பது அதிக வைட்டமின்களையும் தேவையான சத்துகளையும் உடல் பெற்றுக் கொள்ள உதவுகிறது. குறைந்த அளவு கொழுப்பே உடலில் சேர்கிறது.

அமெரிக்காவிலுள்ள இதயம் தொடர்பான ஆராய்ச்சி ஒன்று “காலை உணவை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில், காலை உணவை தவறாமல் உண்பவர்கள் பிற்காலத்தில் நீரிழிவு, அதிக எடை போன்ற சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவு” என்று முடிவு வெளியிட்டிருந்தது.

நேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் அலுவலகத்திற்கு காலை உணவை கையோடு எடுத்துக் கொண்டு வந்தேனும் உண்பதே நல்லது.

  1. நன்றாகத் தூங்க வேண்டும். இன்றைய அவசர உலகம் பல்வேறு காரணங்களைக் கூறி தூக்கத்தின் நீளத்தைக் குறைக்கிறது.

தேவையான அளவு (ஏழு முதல் எட்டு மணி நேரம் ) தூக்கம் கிடைக்காதவர்களின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. அலுவலகப் பணிகளிலும், தனிப்பட்ட பணிகளிலும் கவன சிதைவுக்கு இது காரணமாகி விடுகிறது. பல்வேறு நோய்களுக்கும் இது விண்ணப்பம் விடுகிறது.

  1. உடற்பயிற்சி செய்யுங்கள். உலகில் முக்கால் வாசி பேர் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

உடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருப்பது மனதை உற்சாகத்துடன் வைத்திருக்கவும், தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் உதவும்.

செய்யும் வேலையிலேயே உடற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடக்க வேண்டும். அலுவலகத்திலும், வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் நடந்து கொண்டே இருப்பது நம்மை அறியாமலேயே நமக்கு உடற்பயிற்சியாய் அமைந்து விடுகிறது.

லிப்ட்டை புறக்கணித்து படிகளில் ஏறி இறங்குவது, கடைகளின் உள்ளே நடந்து திரிவது, பக்கத்து தெருவுக்கு நடந்தே போய் வருவது என சிறு சிறு செயல்கள் மூலமாகவே உடலுக்கு சற்று ஆரோக்கியம் வழங்க முடியும்.

ஆரோக்கியமான உடலே நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பரிசு.

  1. பற்களைக் கவனியுங்கள். உடலைப் பாதுகாக்க நாம் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பல்லைப் பாதுகாக்க நாம் செலவிடுவதில்லை.

பல் வலி வருவதற்கு முன்பாக பல் மருத்துவரிடம் செல்லும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மையைச் சொல்வதெனில் பற்களை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்வதன் மூலம் ஆயுளில் 6.4 ஆண்டுகளைக் கூட்ட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

  1. உணவில் மீன் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் சிறந்தது. மீனிலுள்ள ஒமேகா – 3 எனும் அமிலம் அலர்ஜி, ஆஸ்த்மா, தலைவலி, இதயம் தொடர்பான நோய்கள் போன்றவற்றைத் தடை செய்வதில் உதவுகின்றன.
  1. கொறித்தலை வகைப்படுத்துங்கள். தேனீர் இடைவேளைகள் போன்ற நேரங்களில் வறுத்த, பொரித்த வகையறாக்களை கட்டுவதை விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறி சாலட்களை உண்ணுங்கள்.

தேனீருக்கு டீ குடியுங்கள். பால் இல்லாமல் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது.

  1. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிதான ஆனால் பலரும் செய்யாத செயல் இது தான். தண்ணீர் குடிக்க மறந்து விடுதல் பல நோய்களை இழுத்து வரும்.

உடலின் உறுப்புக்களை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் ஒரு எளிய வழி நிறைய சுத்தமான தண்ணீர் குடிப்பதே என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

இது இதய நோய், சிறுநீரகக் கற்கள், உயர் குருதி அழுத்தம் உட்பட பல நோய்களை தடுக்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.

  1. சமூகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு குழுவில் இணைந்தோ, அல்லது சமூக நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டோ சமூக நிகழ்வுகளில் பங்கு பெறுங்கள்.

மனிதன் குழுவாக வாழ படைக்கப்பட்டவன், தனிமைத் தீவுகளுக்குள் அடைபடுவதை விட சமூக வனத்துக்குள் சுற்றி வருவது மனம், உடல் என இரண்டையுமே சுறுசுறுப்பாக்கும். பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும்.

  1. தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிருங்கள். வாழ்வில் எட்ட முடியாத இலட்சியங்களையும், தேவையற்ற எதிர் மறை சிந்தனைகளளயும் ஒதுக்கி விடுங்கள்.

குடும்ப உறவுகளை பலப்படுத்தி வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான கோடு கிழியுங்கள்.

திட்டமிடுங்கள். உணவு, வேலை, குடும்பம் என அனைத்து செயல்களையும் சரியான முறையில் திட்டமிடுங்கள்.

  1. ஒரு நல்ல பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். உங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்வதாகவும், மனதை இலகுவாக்குவதாகவும் இருக்கவேண்டும் அது.

எழுதுவது, வாசிப்பது, இசை கேட்பது, தோட்டம் வைப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என எதுவானாலும் உங்களை மிகவும் வசீகரிக்கும் ஒன்றை பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துதலை அவை தரும்.

இந்த எளிய வழிகளைக் கடைபிடிப்பது தேவையற்ற நோய்களை நம் வாசலோடு அனுப்பி விடவும், உடல் நலத்தை வீட்டுக்குள் வரவேற்கவும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை

உடலைப் பாதுகாப்பதும், மனதைப் பாதுகாப்பதும் இரண்டு வேறுபட்ட நிலை என பலரும் நினைக்கிறார்கள். அது ரொம்பத் தப்பு ! உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் ஆரோக்கியமாய் இருக்கும் !

மனம் ஆரோக்கியமாய் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாய் இருக்கும். ஒன்றைப் புறக்கணித்து இன்னொன்றைப் பற்றிக் கொள்வது நம்மை நாமே ஊனப்படுத்திக் கொள்வது போன்றது என்பதை நினைவில் கொள்வோம் !

மனைவியிடம் கணவன் என்னதான் எதிர்பார்க்கிறான் ?

kvr1


ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார்.

“ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?”

” அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்” சீடர்கள் சொன்னார்கள்.

“ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே ” குரு கேட்டார்.

சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார்.

” இருவர் கோபம் கொள்ளும் போது அவர்களுடைய இதயம் தூரமாய்ச் சென்று விடுகிறது. தூரத்தில் இருப்பவர்களுடன் கத்தி தானே பேசவேண்டும், அதனால் தான் கத்துகிறார்கள். அதே போல இரண்டு பேர் நேசத்தில் இருக்கும் போது ரொம்பவே நெருங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் மென்மையாய்ப் பேசினால் போதுமென்றாகி விடுகிறது. இன்னும் நெருங்கி உறவில் இறுக்கமாய் இருக்கும் போது இடைவெளியே இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் பேசவே தேவையில்லை. மௌனமே பாஷையாகி அவர்களுக்குள் உலவும்” குரு சொல்லச் சொல்ல சீடர்கள் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குரு கடைசியாகச் சொன்னார்,

“எனவே… விவாதிக்கும் போதோ, சண்டையிடும் போதோ உங்கள் இதயம் தூரமாய்ப் போய்விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.இதயங்களைத் தூரமாய் அனுப்பி வைக்கும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். இல்லாவிட்டால் இந்த தூரம் மிக அதிகமாகி திரும்பி இணையும் பாதையையே மறந்து விடும்”

குரு தன் சீடர்களிடம் சொன்னதை சண்டையிட்ட தம்பதியர் கேட்டனர். அவர்களுடைய மனதுக்குள் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. அமைதியானார்கள்.

குரு அவர்களை நெருங்கிச் சொன்னார். ‘நெருப்பு நல்லது தான். நீங்கள் பற்ற வைப்பதை, நீங்களே அணைக்க முடிந்தால் நெருப்பு நல்லது தான். அணைக்க முடியாதபடி எரிய விட்டாலோ அது பேரழிவைத் தராமல் அழியாது”.

தம்பதியர் தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தினர், இணைந்து நடந்தனர்.

அன்பின்றி அமையாது உலகு. அன்பின்றி அமையாது குடும்பம். ஒரு க‌ண‌வ‌னின் க‌ன‌வு அன்பு என்ப‌தைத் த‌விர‌ வேறு என்ன‌வாக‌ இருக்க‌ முடியும் ? வீட்டுக்கு வெளியே வெறுப்புக‌ளைக் கூட‌ அவ‌ன் விருப்போடு பெற்றுக் கொள்வான், வீட்டில் அன்பு க‌ரை புர‌ண்டு ஓடினால் போதும்.

பறவைகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிகின்றன. கிளைகளை விட்டுக் கிளைகளுக்குத் தாவுகின்றன. மரங்களை விட்டு மரங்களுக்குத் தாவுகின்றன. கானகத்தை விட்டுக் கானகத்துக்குத் தாவுகின்றன. மாலையில் அவை தனது கூடுகளில் குஞ்சுகளோடு அமர்ந்து நிம்மதி நித்திரையை அடைகின்றன.

விழிப்போம் எனும் நம்பிக்கை நம்மை நிம்மதியாய் உறங்க வைக்கிறது. கூடடைவோம் எனும் நம்பிக்கை சிறகுகளை நில்லாமல் பறக்க வைக்கிறது. குடும்பமும் அப்படியே. வீடடைதல் என்பது மீட்படைதல் போல. அத்தகைய நிம்மதியே கணவன் காணும் முதல் கனவு. தனது சோர்வுகளை, கவலைகளை, இயலாமைகளை, நிராகரிப்புகளை மறந்து நிம்மதியாய் இருக்க நினைக்கும் இடம் வீடு. அத்தகைய நிம்மதியான குடும்பம் அமையும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆணின் கனவுகள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தையே கண்களில் வைத்திருக்கும். அங்கே மனைவி ஒதுக்கப்படுவதாய் பெண்கள் மனம் வெதும்புவதுண்டு. உண்மையில், திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்குகிறது. ஆணும் பெண்ணும் இரு உடல் ஓரு உயிராய் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி கணவனின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் ம‌னைவி வேண்டும் என்ப‌து ஆண்க‌ளின் க‌ன‌வுக‌ளில் முக்கிய‌மான‌து.

ஆணும் பெண்ணும் இர‌ண்டு சிற‌குக‌ளாக‌ மாறி குடும்ப‌ம் உட‌லைச் சும‌ந்து செல்ல‌ வேண்டும். ஆணும் பெண்ணும் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளாக‌ மாறி நாண‌ய‌த்துக்கு ம‌திப்பு கூட்ட‌ வேண்டும். ப‌க‌லின் வெப்ப‌மாய் ஆண் மாறும் போது, இர‌வின் த‌ண்மையாய் பெண் மாற‌ வேண்டும். வெப்ப‌மாய் பெண் மாறினால் நில‌வாய் ஆண் மாற‌ வேண்டும். இப்ப‌டி இணைந்து ப‌ய‌ணிக்கும் த‌ண்ட‌வாள‌ங்க‌ள் போல‌ இணைந்தே திரியும் ஒரு அற்புத‌ வாழ்க்கை க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் சிற‌ப்பிட‌ம் பிடிக்கும்.

பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஒரு பத்து கனவைப் பொறுக்கி எடுத்தால் இவை இடம் பெறலாம்.

1

நேர‌டியாக‌ எதையும் பேசுவ‌து ஆண்க‌ளின் இய‌ல்பு. பாத்திர‌த்தின் ச‌த்த‌த்திலோ, க‌த‌வை சாத்தும் வேக‌த்திலோ, பிள்ளைக‌ளைத் திட்டும் வார்த்தைக‌ளிலோ கோப‌த்தைக் காட்டுவ‌து பெண்க‌ளின் இய‌ல்பு. எதையும் நேர‌டியாக‌ப் பேசும் நிலைக்கு த‌ன‌து ம‌னைவி வ‌ர‌வேண்டும். அதுவும் க‌ண்க‌ளில் அன‌லோடு வ‌ராம‌ல் நிழலோடு வ‌ர‌வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் நிச்ச‌ய‌ம் உண்டு.

2

ப‌க்க‌த்து வீட்டுக் க‌தைக‌ளிலிருந்தோ, சீரிய‌லில் வ‌ரும் குடும்ப‌ங்க‌ளிலிருந்தோ, தூர‌த்துச் சொந்த‌க்கார‌னின் ப‌ஜ்ஜி உரையாட‌ல்க‌ளிலிருந்தோ, அம்மாக்க‌ளின் உர‌ச‌ல்க‌ளில் இருந்தோ அடுத்த‌ ச‌ண்டைக்கான‌ நெருப்பை ம‌னைவி பெற்று விட‌க் கூடாது எனும் எதிர்பார்ப்பு இல்லாத‌ ம‌னித‌ன் இருக்க‌ முடியுமா ?

3

” ப‌திலை ந‌ம்ப‌ப் போவ‌தில்லை” எனும் முடிவுட‌ன், “ஏங்க‌ லேட்டு…” என‌க் கேட்கும் ம‌னைவிக்குப் ப‌தில் சொல்லும் உல‌க‌ ம‌கா ச‌ங்க‌ட‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ வேண்டும் எனும் க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் இருக்க‌ முடியுமா ?

4

ந‌ம‌க்கு ம‌ட்டும் ஏன் ம‌ற‌தியை ஆண்ட‌வ‌ன் கொடுத்தான். பெண்க‌ளுக்கு ம‌ட்டும் ஏன் ஞாப‌க‌ ச‌க்தியை அள‌வுக்கு அதிக‌மாக‌ கொடுத்தார். “கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை உட‌னே ம‌ற‌ந்து ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் ம‌ன‌சுல‌ வெச்சுக்க‌ மாட்டாளா” என் ம‌னைவி ? எனும் க‌ன‌வில்லாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

5

வீட்டுக்காக‌, ம‌னைவிக்காக‌ என்ன‌ செய்தாலும் ஒரு சின்ன‌ பாராட்டு கூட‌ கிடைக்க‌ மாட்டேங்குது. ஆனா ஒரு சின்ன‌ த‌ப்பு ப‌ண்ணினா கூட‌ போஸ்ட‌ர் அடிச்சு ஒட்டாத‌ குறையா ச‌ண்டை ந‌ட‌க்குது. எப்போ ந‌ம்ம‌ ம‌னைவி நாம‌ ப‌ண்ற‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பாராட்ட‌ப் போறாங்க‌ ? எனும் க‌ன‌வு வ‌ராம‌ல் போகுமா என்ன ?

6

பிள்ளைங்க‌ள‌ பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா அம்மாவைப் பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா தோழிக‌ளைப் பாக்க‌ வேண்டிய‌து. ஒண்ணும் இல்லேன்னா சீரிய‌லைப் பாக்க‌ வேண்டிய‌து. எப்போ தான் ந‌ம்ம‌ ம‌னைவி ந‌ம்மைப் பார்ப்பாங்க‌ எனும் எதிர்பார்ப்பு க‌ல‌ந்த‌ க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் யார் ?7

தாம்ப‌த்ய‌ம் என்ப‌து ஆன‌ந்த‌த்தின் ப‌கிர்த‌ல். அது வ‌லுக்க‌ட்டாய‌மாய் எழுதி வாங்கும் உயில்ப்ப‌த்திர‌ம் அல்ல‌. அதில் உட‌ல்க‌ளை விட‌ அதிக‌ம் உண‌ர்வுக‌ள் பேச‌ வேண்டும். அதை ஒரு ஆயுத‌மாக‌வோ, ப‌ழி வாங்கும் யுத்தியாக‌வோ ம‌னைவி ப‌ய‌ன்ப‌டுத்த‌க் கூடாது எனும் க‌ன‌வு க‌ண‌வ‌னுக்கு இல்லாமல் போகுமா.

8

என்னை புரிஞ்சுக்க‌வே மாட்டீங்க‌” என‌ ம‌னைவியின் குர‌ல் ஒலிக்காத‌ வீடுக‌ள் இருக்க‌ முடியாது. புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள‌வில்லை என்றே ம‌னைவிக‌ள் சொல்வார்க‌ள். புரிந்து கொள்வ‌து என்ப‌து அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை, சொல்வ‌த‌ற்கெல்லாம் ஆமாம் போடுவ‌து. இந்த‌ நிலை மாற‌ வேண்டுமென‌ ப‌க‌ல் க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டோ ?

9

ந‌ன்றி என்ப‌து ரொம்ப‌ காஸ்ட்லி விஷ‌ய‌மா என்ன‌ ? ஒரு சின்ன‌ ந‌ன்றி கூட‌ சொல்ல‌ மாட்டாங்க‌ளா ந‌ம்ம‌ மனைவி என‌ புல‌ம்பாத( ம‌ன‌துக்குள் தான் ) க‌ண‌வ‌ன் யார் ? ம‌னைவி ந‌ம் செய‌லுக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டுமென‌ க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

10

நாம் எடுக்கின்ற‌ முய‌ற்சிக‌ளுக்கு ஊக்க‌மும், ஆத‌ர‌வும் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌ன்க‌ளின் க‌ன‌வுக‌ளில் ஒன்று. அப்ப‌டி முழு ஆத‌ர‌வு கிடைக்காவிட்டால் கூட‌ குத‌ர்க்க‌மாய்ப் பேசி எரிச்ச‌ல‌டைய‌ச் செய்யாம‌ல் இருக்க‌ வேண்டும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌க் க‌ன‌வு தானே !

இப்படி எல்லா க‌ண்க‌ளிலும் க‌ன‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌, அந்த‌க் க‌ன‌வுக‌ள் ப‌லிப்ப‌தும் ப‌லிக்காத‌தும் ம‌னைவிய‌ரின் க‌டிவாள‌த்தில் அட‌ங்கியிருக்கின்ற‌ன. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதை விட கணவனே கனவு கண்ட தெய்வம் என்பது தானே பொருத்தம் ?

ச‌ரி, ம‌னைவிய‌ரின் க‌ன‌வுக‌ள் என்ன‌வாய் இருக்கும் ? அதெல்லாம் நான் சொல்லாம‌லேயே உங்க‌ளுக்குத் தெரியும். அப்புற‌மென்ன‌ ? க‌ன‌வுக‌ள் தொட‌ர‌ வாழ்த்துக‌ள்.

 

ஏமாற்றும் காதலனா ?

kvr3

“அவன் இப்படிச் செய்வான்னு கொஞ்சம் கூட நினைச்சே பாக்கலடி” ர‌ம்யாவின் விசும்பல் பிரியாவையும் கலங்க வைத்தது.

கடந்த ஒரு வாரமா இந்தப் புலம்பல் தான். ர‌ம்யாவை எப்படி சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் பிரியா ரொம்பவே குழம்பிப் போனாள். இருக்காதா பின்னே ? அவன் செய்த காரியம் அப்படி !

அந்த அவன் மிஸ்டர். விஜ‌ய் ! விஜ‌யும், ர‌ம்யாவும் உயிருக்கு உயிராய் பழகினார்கள். அதிலும் ர‌ம்யாவுக்கு விஜ‌ய் தான் எல்லாமே. விஜ‌ய் இல்லாத ஒரு வாழ்க்கையையெல்லாம் அவள் நெனச்சுக் கூட பாத்ததில்லை. நின்னா, பேசினா, சாப்பிட்டா என எப்பவுமே புராணம் தான். அப்படி இறுக்கமாய் இருந்த ர‌ம்யா-விஜ‌ய் காதலில் கொஞ்ச நாளாகவே சின்னச் சின்ன விரிசல்கள். காரணம் விஜ‌யின் வாழ்க்கையில் புதிதாய் நுழைந்திருந்த பெண். சுடர் !

இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து வனப்புடன் வந்த சுடருக்கு நெடுநெடுவென வளர்ந்திருந்த விஜ‌யின் மீது ஒரு சபலம். உரசல்களில் பற்றிக் கொண்டான் விஜ‌ய். விஜ‌ய்க்கு ர‌ம்யாவின் அன்பையும் மீறி சுடரின் மேனியின் மீது மோகம் முளை விட்டது. அடிக்கடி இருவரும் தனியே சந்தித்துக் கொள்வதெல்லாம் சகஜமாய் இருந்தது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கடுகளவு கூட ர‌ம்யா சந்தேகப் பட்டதே இல்லை. கடந்த வாரம் விஜ‌யின் பையிலிருந்து கிடைத்த ஒரு கடிதம் தான் அவளைப் புரட்டிப் போட்டது. நான்கைந்து டன் மலையை தலையில் போட்டதுபோல இருந்தது அந்த மெல்லிய காகிதம்.

சுடர் தான் காதலை காகிதத்தில் பொழிந்திருந்தாள். “ஓனி மோனிக் கண்ணா” என்றெல்லாம் அவள் எழுதியிருந்த கடிதம் ஏதோ சுடரும் விஜ‌யும் நான்கு ஜென்மமாகக் காதலித்து வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டது. போதாக்குறைக்கு சமீபகாலமாக நடந்த அவர்களுடைய காதல் சில்மிஷங்களையெல்லாம் வேறு கடிதத்தில் கிறுக்கியிருக்க ர‌ம்யாவுக்கு வாழ்க்கையே இருட்டியது.

“விட்டுருடி.. கல்யாணத்துக்கு முன்னாடியே விஷயம் தெரிஞ்சுதேன்னு சந்தோசப்படு. கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி அடுத்தவ வாலைப் புடிச்சு சுத்தியிருந்தான்னா என்ன பண்றது?” பிரியாவின் நிஜமான அக்கறையைக் கேட்கும் நிலையில் ர‌ம்யா இல்லை.

“விஜ‌ய் கூட ஏமாற்றுவானா ? பச்சைப் புள்ளை மாதிரி இருப்பானே ! அப்போ இவ்ளோ நாள் பொழிஞ்ச அன்பெல்லாம் சும்மாவா ? என்னை விட அவ இப்போ அவனுக்கு பெட்டரா தெரியுதா ? “   ர‌ம்யாவின் மனதில் கேள்விகளுக்குப் பதிலாய் கேள்விகளே முளைத்தன.

பிரியாவும் ர‌ம்யாவும் நீண்டகால தோழிகள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு அவர்களைத் தவிர வேறு தோழிகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய தோழிகள். பிரியா கொஞ்சம் ஸ்மார்ட் பேர்வழி. அவளே இந்த இந்த சூழ்நிலையைச் சமாளிக்க ரொம்பவே திணறிவிட்டாள்.

வாரம் ஒன்று ஓடியது.

ர‌ம்யாவிடம் கடந்த வாரத்தில் இருந்த படபடப்பும், வெறுப்பும் கொஞ்சம் தணிந்திருந்தது. எதிரே நீளமாய், நீலமாய் தெரிந்த கடலைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்தாள். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று பேச ஆரம்பித்தாள் பிரியா.

“ர‌ம்யா…. விஜ‌ய் பத்தி நீ என்ன நினைக்கிறே ?”

“நினைக்கிறதுக்கு என்ன இருக்கு ? லாஸ்ட் ஒன் வீக் நான் அவன் கூட பேசலை. அவன் கூட பேசாம ஒரு வாரம் இருக்கிறது இதான் பஸ்ட் டைம். எப்படியோ சமாளிச்சுட்டேன்.”

“வெரி குட்… இத பாரு… உன்னோட வெல் விஷரா சொல்றேன். இனிமே இந்த விஜ‌ய் உனக்கு வேண்டாம்..”

“நானும் அப்படித் தான் நினைக்கிறேன்… பட்…”

“என்ன இழுக்கறே…”

“இல்லே… பழைய விஷயங்களையெல்லாம் நினைக்கும்போ ரொம்ப கஷ்டமா இருக்கு”

“ஸீ… கஷ்டப்படவேண்டியது அவன். நீயில்லை. நீ எந்தத் தப்பும் பண்ணல. அதனால தான் சொல்றேன். இனி அவனோட உன் வாழ்க்கை சந்தோசமா இருக்காது” பிரியா சொல்ல ஆரம்பித்தாள்.

உன்னோட நம்பிக்கையை அவன் எப்போ உடைச்சானோ அந்த வினாடியே இந்த பந்தம் முடிஞ்சு போச்சு. கையும் களவுமா பிடிபட்டுட்டான். அதனால தான் உன் கிட்டே ஒரு விளக்கம் சொல்லக் கூட ஆளைக் காணோம். இப்போதைக்கு சுடரோட பிடியில அவன் கிடக்கட்டும். பட், என்னிக்காவது அவன் ரியலைஸ் பண்ணுவான்.

பஸ்ட் ஆஃப் ஆல், நீ இந்த முடிவை மிக மிகத் தெளிவா எடுத்தே ஆகணும். நோ மோர் விஜ‌ய் இன் யுவர் லைஃப். இது தான் ரொம்ப முக்கியம். இந்த முடிவைப் பொறுத்து தான் உன்னோட அடுத்தடுத்த முன்னேற்றமே இருக்கும். சோ, மறுபடியும் சொல்றேன். அவன் வேண்டாம்ங்கற முடிவை கல்வெட்டு மாதிரி மனசுல எழுதிக்கோ.

இந்த விஷயம் இதோட முடிஞ்சு போகாது. என்னிக்கு அவனுக்கு சுடர் சுடுதோ அல்லது போரடிக்குதோ உடனே உன்னைத் தேடுவான். உன்னோட அருமை அவனுக்கு அப்போ தான் தெரியும். இல்லேன்னா, உன்னோட தேவை அவனுக்கு அப்போ வரும். மே பி, அவன் உன்னை தொந்தரவு பண்ணுவான். ரொம்ப செண்டிமெண்டா பேசி குழப்பப் பாப்பான். இல்லேன்னா பழைய எவிடன்ஸ் எதையாச்சும் வெச்சு மிரட்டப் பாப்பான். அதனால ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். நீ வேற யாரையாச்சும் லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ அவன் சைக்கோத் தனமா கூட செயல்படக் சேன்ஸ் இருக்கு. நான் உன்னை பயப்படுத்தறதுக்காக சொல்லல, தட்ஸ் லைஃப் !

பிரியா சொல்லச் சொல்ல ர‌ம்யாவுக்கு பயமும், குழப்பமும் ஒருசேர வந்து தொற்றிக் கொண்டது. “கை ரேகை பாக்கறீங்களாம்மா” என்று நெருங்கிய பாட்டியை நிராகரித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள் பிரியா. ர‌ம்யா மணலில் கிறுக்கத் தொடங்கினாள்.

ஒருவேளை அவன் போன் பண்ணினா நல்லது. இல்லேன்னா நீயே ஒரு போன் பண்ணி, “சாரி.. இனிமே நமக்குள்ள எந்த விதமான உறவும் கிடையாது” ன்னு தெளிவா சொல்லிடு. உன்னோட குரல்ல ஏமாற்றம், அழுகைம், ஏக்கம், கோபம் ன்னு எதுவும் காட்டாதே. ரொம்ப நார்மலா பேசு. நீ என்ன மனநிலைல பேசறேன்னு அவனுக்கு தெரியக் கூடாது. பட், நீ இனிமே அவனை லவ் பண்ணப் போறதில்லேங்கற மெசேஜ் அவனுக்குப் போய் சேரணும் அது முக்கியம். காரணம் கேட்டான்னா, சுடரோட “கொஞ்சல் லெட்டர்” மேட்டரை கிளியரா சொல்லிடு.

நிறைய பேர் பண்ற ஒரு பெரிய தப்பு என்னண்ணா, “சரி, லவ் தான் பண்ணலே.. ஃபைன்… பிரண்ட்ஸா இருப்போமே ?” ன்னு ஒரு படி இறங்கிடறது தான். இந்த விஷயத்துல ஆம்பளைங்க ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க. தேவையில்லாம உன்னோட டென்ஷனும், மன அழுத்தமும் அதிகமாகும். ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ, ஒரு தடவை சின்சியரா லவ் பண்ணின ஒருத்தனை ஒரு நல்ல நண்பனா உன்னால பாக்கவே முடியாது. உன்னால என்ன, யாராலயுமே பாக்க முடியாது. இது தான் உண்மை ! மற்ற டயலாக்ஸ் எல்லாமே வெறும் சால்ஜாப்பு தான்.

உன்னைப் பாக்கணும், உன் கிட்டே கொஞ்சம் பேசணும்ன்னு இறங்கி வந்தான்னா அவாய்ட் பண்ணு. “இப்போ முடியாது வேணும்ன்னா ஒரு ஆறு மாசம் கழிச்சு மீட் பண்ணுவோமே” ன்னு சொல்லு. சந்திக்கிறது ரொம்ப டேஞ்சர். உன்னோட உறுதி உடையவும் கூடாது, உன் வாழ்க்கை சிதையவும் கூடாது. சோ, அவனைப் பாக்கறதை அவாய்ட் பண்ணியே ஆகணும்.

அவனை ஞாபகப் படுத்தற பொருள் எதையும் வீட்லயோ, கையிலயோ வெச்சுக்காதே. அவனோட லவ் லெட்டர்ஸை எல்லாம் கிழிச்சுப் போடு. போட்டோ கீட்டோ ஏதாச்சும் இருந்தா எரிச்சுப் போடு. அவன் தந்த கிஃப்ட் ஏதாச்சும் இருந்தா ஒண்ணு அவன் கிட்டேயே குடுத்துடு. இல்லேன்னா டிஸ்போஸ் பண்ணிடு. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவனை ஞாபகப் படுத்தும். இது ரொம்ப கஷ்டம். எவ்வளவுக்கு எவ்வளவு அவனோட நினைவையும், அவனை ஞாபகப் படுத்தற பொருட்களையும் விட்டு தூரமா போறியோ அந்த அளவுக்கு நீ சீக்கிரமா நார்மல் ஆயிடுவே. இது தான் நிறைய கவுன்சிலிங்ல சொல்ற பாலபாடம்.

அதே போல அவனோட பேவரிட் பிளேஸஸ், ஹோட்டல்ஸ், அவனோட பிரண்ட்ஸ் எல்லாரையும் கொஞ்ச நாளைக்கு அவாய்ட் பண்ணு. அவனோட பிரண்ட்ஸ் மூலமா அவனுக்கு தேவையில்லாத இன்பர்மேஷன் போறதுக்கு அது காரணமாயிடும். அவனை நேரில பாக்க வேண்டிய சேன்ஸ் கூட வந்துடும். தட்ஸ் நாட் குட். உன்னோட மனசும் ரொம்ப காயப்படும். சோ, அதையெல்லாம் கொஞ்சம் அவாய்ட் பண்ணு.

அவனோட எஸ்.எம்.எஸ், இ-மெயில் எதுக்குமே நீ ரிப்ளை பண்ணாதே. அது கெஞ்சலா இருக்கலாம், கொஞ்சலா இருக்கலாம், மிரட்டலா இருக்கலாம். நீ அதை வாசித்தது போலவே காட்டிக்க வேண்டாம். ஜஸ்ட் இக்னோர் ! அவ்ளோ தான். அவனுக்கு நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நாலு வரி அனுப்பத் தோணும், பட்.. வேண்டாம். சொல்லாம இருக்கிற வார்த்தைக்குத் தான் மரியாதை அதிகம். வலிமையும் அதிகம் ! சோ, ஜஸ்ட் இக்னோர் !

இந்த பிரிவை ஒரு துக்கம் மாதிரி அனுசரிக்காதே. ஒரு புதிய தொடக்கம் மாதிரி கொண்டாடு. தேவையில்லாம ரொமாண்டிக் சாங் கேக்கறது. குப்புறப் படுத்து சொகப் பாட்டு கேக்கறது. புலம்பறது. அவன் இல்லேன்னா லைஃப்பே இல்லேன்னு பெனாத்தறது எல்லாமே சுத்த வேஸ்ட். நல்ல எனர்ஜட்டிக் விஷயங்கள்ல மனசை ஈடுபடுத்தணும். அது தான் ரொம்ப முக்கியம்.

ஏதாச்சும் இருந்தா என் கிட்டே கொட்டு. சும்மா மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்காதே. தேவையில்லாம மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டுப் பூட்டினா இல்லாத நோயெல்லாம் வந்து சேரும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துட்டு ஜாலியா இருக்கப் பாரு. உனக்குப் பிடிச்ச விஷயங்களை நிறைய செய். படம் பாரு. டூர் போ. பிரண்ட்ஸைப் போய் பாரு. பட், ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ. விஜ‌யை வெறுப்பேத்தணும்ன்னு நினைச்சு எதையும் செய்யாதே. அது நீ அவனை மறக்கலேங்கறதுக்கு அடையாளம். சோ, எதைச் செஞ்சாலும் உனக்காக, உன் சந்தோசத்துக்காக செய் !

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. நாளைக்கு அவன் வீட்டுக்கு வந்து கெஞ்சினான், மன்னிச்சுடுன்னு சொன்னான், தப்பு பண்ணிட்டேன்னு அழுதான்னு சொல்லிட்டு வராதே. அடிச்சே கொன்னுடுவேன். ஸ்டாப் ஈஸ் ஸ்டாப் ! அவ்ளோ தான். புல் ஸ்டாப் போட்டதை மாத்தாதே. இன்னிக்கு சுடரைத் தேடி போனவன், நாளைக்கு இன்னொரு பொண்ணைத் தேடிப் போகமாட்டான்னு என்ன நிச்சயம் ?

ஒருவேளை உனக்குள்ள ரொம்ப ஆத்திரம் இருந்தா, நீ ஒருதடவை விஜ‌யைப் பார்த்து பேசிடு. பட், பேசும்போ “இது தான் லாஸ்ட் டைம். இனிமே பேச மாட்டேன். நீ இப்படி என்னை ஏமாத்துவேன்னு நினைச்சுப் பாக்கலேன்னு” பேசலாம் தப்பில்லை. இது உன்னோட சாய்ஸ். அவன்கிட்டே நேரடியா பேசி இந்த ரிலேஷனை முடிக்கணும்ன்னு உனக்கு கட்டாயமா தோணினா மட்டும் இதைப் பண்ணு.

டைம் ஈஸ் த பெஸ்ட் ஹீலர் ன்னு சொல்லுவாங்க. அது இந்த விஷயத்துல ரொம்ப ரொம்ப உண்மை. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும். வாழ்க்கைல நடக்கிறது எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கொ. அது தான் உண்மையும் கூட ! உன்னோட எமோஷன்ஸ், கோபம், எரிச்சல் எல்லாத்தையும் எழுது. எழுதறது ஒரு வடிகால். ஆனா அதை அப்படியே அவனுக்கு அனுப்பி மட்டும் வெச்சுடாதே !

மைண்டை டைவர்ட் பண்ணனும். அது தான் முக்கியம். ஏதாச்சும் புது ஹாபி ஆரம்பிக்கலாம். யோகா கிளாஸ் போலாம். டு சம்திங். அவன் உன்னைப்பற்றி ஏதாச்சும் கதை கட்டி வுட்டா உடட்டும். அவன் எப்படிப்பட்டவன் ன்னு நீ அதை வெச்சு புரிஞ்சுக்கலாம். அடிக்கிற காத்துக்கெல்லாம் வேலி கட்ட முடியாது.

“என்ன சொல்றதெல்லாம் புரியுதா ? இல்லை கனவுலகத்துல இருக்கியா ?”

“கேட்டுட்டு தான் இருக்கேன் பிரியா … நீ சொல்றதெல்லாம் சரி தான்… பட் அவன் சைட்ல இருந்து என்ன ரியாக்ஷன் வரும்னு தெரியலயே”

“என்ன பண்ணுவான்னு நினைக்கிறே ? “

“ஒண்ணும் தெரியல. பட், அவனை நான் கழற்றி வுட்டதுல நிச்சயம் கடுப்பாவான்.”

“அவனோட கேரக்டரை வெச்சு அவன் எப்படி பிகேவ் பண்ணுவான்னு நீ புரிஞ்சுக்கலாமேடி”

“ஊஹூம்.. அவன் ஒரு கல்லுளி மங்கன். விஜ‌யைப் பொறுத்தவரை அவன் என்ன பண்ணுவான்னு சொல்லவே முடியாதுடி….”

அவன் கூட இவ்ளோ நாள் பழகியிருக்கே ! அவனைப் பற்றி தெரியாம இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு இண்டரஸ்டிங் மேட்டர் சொல்றேன்.

இந்த கழற்றி விட்ட கேஸ்களை ஐந்து டைப்பா பிரிக்கலாம். ஒண்ணு புரிந்து கொள்ளக் கூடியவர். சென்ஸிபிள் டைப் ன்னு சொல்லுவாங்க. நேருக்கு நேரா பேசி, என்ன பிரச்சினை, ஏன் பிரியறேன்னு சொன்னா போதும். புரிஞ்சுப்பாங்க. ரொம்ப ஈஸி டைப் இவங்க தான். “என்னன்னு சொல்லத் தெரியல, பட் இந்த ரிலேஷன் வேண்டாம்ன்னு தோணுது” ன்னு சொன்னா கூட ஓகே சொல்லிட்டு கிளம்பிடுவாங்க.

இரண்டாவது டைப் கம்ப்ளையிண்ட் டைப். வைனிங் பீப்பிள் ன்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க. உன்னோட பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் போய் புலம்பித் தள்ளுவாங்க. அவங்க கிட்டே உன்னோட பெயர் டேமேஜ் ஆகறமாதிரி நடந்துப்பாங்க. எப்படியாவது உன்னை மோசமானவளா காட்ட டிரை பண்ணுவாங்க. இந்த மாதிரி ஆட்கள் கிட்டே எதிர்த்துப் பேசக் கூடாது. உன் கிட்டே கேட்கிறவங்க கிட்டேயெல்லாம் டென்ஷன் ஆகாம, “இனிமே இந்த காதல்ல நம்பிக்கை இல்லை” ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.

மூணாவது டைப் ஆதிக்க டைப். எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வெச்சுக்கப் பாப்பாங்க. ரொம்ப கடுமையா நடந்துக்கவோ, வீட்டுல வந்து நேரடியா பேசவோ டிரை பண்ணுவாங்க. தன்னோட வலிமையால இந்த பிரச்சினையைக் கையாள நினைப்பாங்க. முரண்டு பிடிக்காம ஆனா அதே நேரம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.

நாலாவது டைப் சுய பச்சாதாப டைப் ன்னு சொல்லலாம். ரொம்ப பரிதாபமா, எளிமையா, மென்மையா உன்னோட மனசை மாத்தப் பாப்பாங்க. ரொம்ப செண்டிமெண்ட் கதை பேசி, மெல்ல சில்மிஷ வேலை காட்டி இழுக்கப் பாப்பாங்க. சமயத்துல குடம் குடமா கண்ணீர் கூட வடிப்பாங்க. சோ, இந்த மாதிரி ஆட்களை அவங்க போக்கிலேயே போய் புரிய வைக்கணும்.

கடைசி டைப் தற்கொலை கேஸ். இது ரொம்ப டேஞ்சர் கேஸ். திடீர்ன்னு கையை வெட்டிகிட்டு செத்துப் போவாங்க. சிலர் தற்கொலை பண்ணமாட்டாங்க, ஆனா செத்துடுவேன்னு பேசிப் பேசியே உன்னை குழப்புவாங்க. பயமுறுத்துவாங்க. உன்னை ஒரு பிளாக் மெயில் வட்டத்துக்குள்ள கொண்டு போய் விட்டுடுவாங்க. இவங்க கிட்டேயும் கொஞ்சம் கவனமா பேசணும்.

சொல்லி நிறுத்திய பிரியா வித்தியாவைப் பார்த்தாள்.

“இப்போ சொல்லுடி, உன்னோட பழைய ஆள் எந்த டைப் ?”

“கண்டிப்பா சூயிசைட் கேஸ் இல்லை ! அந்த அளவுக்கு அவன் தைரியசாலியும் இல்லை, கோழையும் இல்லை, அரைவேக்காடு ” சொல்லிவிட்டுச் சிரித்த ர‌ம்யாவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பிரியா.

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 3

மரியாதை கலந்த அங்கீகாரம்

 

kvr3

 

மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.

அதற்காக ஏதோ ஐயா, அம்மா என்று அழைத்து மரியாதை செய்ய வேணுமா என டென்ஷனாகாதீர்கள். பொதுவாகவே திருமணம் முடிந்தவுடன் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்க்கையைத் துவங்குவார்கள். அப்புறம் இவர் தனக்கானவர்,, இவள் தனக்கானவள் எனும் எண்ணம் மனதுக்குள் ஆழமாகப் பதிந்து விடும். இது நல்ல விஷயம் தான். ஒரே ஒரு சிக்கலைத் தவிர. அதாவது கணவனோ மனைவியோ என்னதான் செய்தாலும், “இது அவருடைய கடமை”, “இது அவளுடைய கடமை” என மனம் நினைக்கத் துவங்கி விடுவது தான்.

அந்த சிந்தனை மனதில் இருக்கும்போ ஒரு செயலுக்கான மரியாதையைக் கொடுக்க நினைக்க மாட்டோம். அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். ஒரு பாராட்டோ, அங்கீகாரமோ, செயலுக்கான மரியாதையோ கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் ? மரியாதை தெரியாத மனுஷங்க கூட மாரடிக்க வேண்டியிருக்கு என புலம்புவீர்கள் தானே ! ஒரு ஆராய்ச்சி முடிவு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஏன் மக்கள் அடிக்கடி தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்கிறார்கள் ? என்பது தான் ஆய்வுத் தலைப்பு. நல்ல பணம் கிடைக்கிறதனால வேலையை மாற்றுவது தான் நமக்குத் தோன்றும் பதில். உண்மை அப்படியில்லையாம். “செய்ற வேலைக்கான மரியாதை கிடைக்கல” என்பது தான் முக்கியமான காரணமாம் !

அத்தகைய சிந்தனை உறவுகளிடையேயும் நிச்சயம் எழத் தான் செய்யும். மென்மையாக ! உங்களுடைய சட்டையை ஒரு நாள் உங்கள் நண்பனோ, சகோதரனோ அயர்ண் பண்ணிக் கொடுத்தால் ரொம்ப நன்றி சொல்கிறீர்கள். அதே வேலையைத் தினமும் உங்கள் மனைவி செய்தாலும் நீங்கள் நன்றி சொல்லாமல், அல்லது அதை “மனைவி செய்ய வேண்டிய கடமை” போல நினைத்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே தான் இந்த சிக்கலின் முதல் சுவடு பதிகிறது. அதற்காக அலுவலகத்தில் சொல்வது போல “டியர் மனைவி” என ஆரம்பித்து ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு புன்னகை, ஒரு அரவணைப்பு, ஒரு நன்றி வார்த்தை, ஒரு பாராட்டு.. இப்படி சின்னச் சின்ன விஷயம் தான் ! அதைக் கவனமுடன் செய்ய ஆரம்பிப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி !

வார்த்தைகளை விட, நமது செயல்களில், நமது நடவடிக்கைகளில் அந்த மரியாதை வெளிப்படுவது இன்னும் அதிக பயன் தரும். உதாரணமாக, மனைவி சமையல் செய்து வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமையலுக்கான மரியாதை என்ன தெரியுமா ? ஆர்வத்துடனும், பொறுமையுடனும் அதை ருசித்துச் சாப்பிடுவது தான். ஹோட்டலுக்குச் செல்லும் போது உணவுகளின் ருசியைப் பாருங்கள். விலையைப் பாருங்கள். இல்லங்களில் சாப்பிடும்போது சாப்பாடு தயாரித்தவரின் மனதையும், உழைப்பையும், அன்பையும் பாருங்கள். அதுவே முக்கியமானது ! உப்பு இல்லை, காரம் இல்லை என்று சொல்லி உணவை நிராகரிப்பவர்களும், விலக்கி வைப்பவர்களும் அதிகபட்ச அவமரியாதையைச் செய்கிறார்கள் !

இன்னொரு முக்கியமான விஷயம் பேச்சு ! மரியாதை இல்லாத பேச்சு ரொம்ப ரொம்பத் தப்பு. குறிப்பாக பிறர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது ஒருமையில் அழைத்துப் பேசுவது, அதிகாரத் தொனியில் பேசுவது, எரிச்சலுடன் பேசுவது, இளக்காரமாய்ப் பேசுவது, மரியாதை குறைவாய் பேசுவது போன்றவையெல்லாம் ரொம்பவே தவறான விஷயங்கள். கணவன் தானே, மனைவி தானே என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களும் இந்தச் சமூகத்தில் ஒரு தனி மனிதர், அவருக்கும் உணர்வுகள், சுயமரியாதை உண்டு என்பதை மனதில் கொண்டிருங்கள்.

ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டு உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்வதற்கும், வாழ்க்கைத் துணையுடன் இணைந்து பேசி ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ‘ஆமா, எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்ல வந்துட்டாங்க” எனும் சலிப்பு உறவுக்கு நல்லதல்ல. வெறும் தகவல் சொல்லும் ஒரு மனிதராகவோ, உங்கள் கட்டளைகளை ஏற்று நடக்கும் ஒரு மனிதராகவோ மட்டும் அவரைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது அவரை அவமரியாதை செய்வதற்குச் சமம். இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பேசி முடிவெடுப்பதே நல்லது.

கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியும். ராத்திரி முழுக்க குடித்து விட்டுச் சண்டை போடும் கணவனைக் கூட விட்டுக் கொடுக்காமல் பேசுவாள் மனைவி. வீட்டில் எப்போதுமே அடங்காப் பிடாரியாய் பிடரி சிலிர்க்கும் மனைவியைக் கூட பொது இடத்தில் அன்பானவள் என பறைசாற்றுவான் கணவன். வேறு யாரேனும் தனது வாழ்க்கைத் துணையை தரக்குறைவாய் பேச அனுமதிக்க மாட்டார்கள். இது ஒருவகையில் கணவன் மனைவியிடையே இருக்கின்ற மனவருத்தங்களைத் தாண்டி ஒருவரை மற்றவர் மதிக்கும் மனப்பான்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.

கணவன் மனைவியராய் இருந்தால் கூட ஒவ்வொருவருக்குமான சில தனித் தனி விருப்பங்கள் இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பெரும்பாலான தம்பதியர் சண்டையிட்டுக்கொள்ளும் விஷயம் இது தான். அல்லது இது தான் மன வருத்தங்களை தோற்றுவிக்கும் ஒரு மிகப்பெரிய காரணியாய் இருக்கிறது. உதாரணமாக, உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பிடிக்கலாம், நடிகரைப் பிடிக்கலாம், ஆன்மீக வழிகாட்டியைப் பிடிக்கலாம், அல்லது ஒரு ஸ்பெஷல் ஹாபி இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என அதற்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் விஷயம் தான் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ பிடிக்க வேண்டும் என முரண்டு பிடிக்காதீர்கள். இருவருக்குமான தனிப்பட்ட சில விஷயங்கள் இருப்பதில் தவறில்லை. அது ஒட்டு மொத்த குடும்ப உறவைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

கண்ணை மூடிக்கொண்டு “இதெல்லாம் தப்புப்பா” என சொல்லும் ஒரு விஷயம் கை நீட்டி அடிப்பது, அல்லது மனம் காயப்படுத்தும் படி பேசுவது. ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் இல்லாமல் இதில் சமத்துவம் வீசுகிறது. கையால் அடிக்கும் அடி வலிப்பதில்ல்லை, ஆனால் அடித்துவிட்டாரே எனும் நினைப்பு தான் வலிகொடுக்கிறது. சொல்லும் சொல்லும் அப்படியே. என்னைப் புரிந்து கொண்ட இந்த மனுஷி இப்படிச் சொல்லிட்டாளே என்பது தான் வலிகொடுக்கும். அது உங்கள் வாழ்க்கைத் துணைக்கான மரியாதையை நீங்கள் தர மறுக்கின்ற தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். நம்பிக்கை ! உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரமுடிந்த அதிகபட்ச மரியாதை அவரை முழுமையாய் நம்புவது. அதே போல, அந்த நம்பிக்கைக்கு உரியவராய் நீங்கள் இருப்பது பதில் மரியாதை ! இது மட்டும் அழுத்தமாய் இருந்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாய் ஓடும். நள்ளிரவில் வாழ்க்கைத் துணையின் செல்போனை நோண்டுவது, டைரியை புரட்டுவது, கணினியை ஆராய்வது போன்ற இத்யாதிகளெல்லாம் நீர்த்துப் போன நம்பிக்கையின் அடையாளங்கள்.

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்வது அடுத்தவர் செய்யும் விஷயங்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளம். அது எலக்ட்ரிக் பில் கட்டுவதாக இருக்கலாம், உங்கள் துணியை அயர்ன் பண்ணுவதாக இருக்கலாம், ஒரு கப் காபி கொண்டு தருவதாகக் கூட இருக்கலாம். புன்னகையுடன் கூடின மனமார்ந்த நன்றி அந்தச் செயலை அர்த்தப்படுத்தும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன நன்றியெல்லாம் சொல்லிகிட்டு என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். நீங்கள் முயன்று பாருங்கள், மாற்றம் நிச்சயம் உங்களுக்கே தெரியும்.

விட்டுக் கொடுத்தல் கூட அடுத்த நபரையோ, அல்லது அந்த உறவையோ நீங்கள் மரியாதை செலுத்துகிறீர்கள் என்பதன் வெளிப்பாடு தான். ஒருவேளை உங்கள் மனைவி அவருடைய அம்மாவிடம் ரெண்டு மணி நேரம் போனில் பேசுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்னதான் பேசறீங்க ? என கேட்காமல் இருப்பது நல்லது. ஒருவேளை கேட்டு, உங்கள் மனைவி சொல்லத் தயங்கினால் அதை அப்படியே விட்டு விடுங்கள். துருவித் துருவி கேட்பதோ, வீணான அனுமானங்களுக்குள் இறங்கி உங்கள் தலையைக் குழப்பிக் கொள்வதோ தேவையற்ற விஷயம் !

“உங்கள் மனைவி ஏதாச்சும் ஒரு நல்ல முடிவெடுத்தா பாராட்டுங்க. தப்பான முடிவெடுத்தா சைலன்டா இருங்க” என்கிறார் ஒரு வல்லுநர். நல்ல முடிவுகளுக்குப் பாராட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால், தப்பான முடிவு எடுக்கும்போ அவங்களுக்கே புரியும். ‘இந்த விஷயத்துக்குப் பாராட்டு வரல, அப்படின்னா இது சரியில்லை’ என அவருடைய உள்மனசே காட்டிக் கொடுக்கும். பாராட்டு என்பது மரியாதையின் ஒரு பகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை !

மரியாதை பரிமாறப்படாத இடங்களில் உறவுகள் நிலைப்பதில்லை. அலுவலகத்தில் போய் மரியாதை குறைவாய் ஒரு மாதம் நடந்து பாருங்கள். உங்களுடைய வேலையே போய் விடலாம். நண்பர் கூட்டத்தில் போய் மரியாதை வழங்காமல் ஒரு சில மாதங்கள் இருந்து பாருங்கள். நட்புகளெல்லாம் காணாமல் போய்விடும். உங்கள் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் மரியாதை இல்லாமல் சில நாட்கள் தங்கிப் பாருங்கள், அந்த உறவு அதோடு முறிந்து போய்விடும். இப்படி எல்லா இடங்களிலும் மரியாதை கொடுப்பதும், வாங்குவதும் தேவைப்படும் போது, ஏன் குடும்பத்தில் மட்டும் அது தேவையற்ற ஒன்று என நினைக்கிறீர்கள் ?

இருக்கும் போது வாழ்க்கைத் துணையின் அருமை பெருமைகள் பலருக்கும் புரிவதில்லை. இழந்தபின் புலம்புவதில் பயனும் இல்லை. ” நீ இல்லேன்னா என்னால இதெல்லாம் சாதிச்சிருக்கவே முடியாது”, ” நீ இல்லேன்னா லைஃபே வெறுத்துப் போயிருக்கும்”, ” நீ எனக்குக் கிடைச்சது கடவுள் வரம்” என்றெல்லாம் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் என்றேனும் சொல்லியிருக்கிறீர்களா ? மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா ? ஏன் என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? அன்பாகப் பேசுங்கள். அன்பான பேச்சு வாழ்க்கையை ஆழப்படுத்தும் ! உங்கள் வாழ்க்கைத் துணைவருக்காக பிரார்த்தியுங்கள். அது உங்களுடைய அன்பின் வெளிப்பாடு.

கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் உங்களிடமிருந்து தான் துவங்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து துவங்கவேண்டும் என நினைப்பது நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதன் அடையாளமே !

சிறுகதை : ஒரு குரலின் கதை

Nina Davuluri

 

கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு. தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….” மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை” விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ” :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

– மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?” விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான் குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

 

 

சேவியர்

இறைவன் படைப்பில் தாய்.

qw

ஆண் ஒருவரின் உடலில் இருந்து உயிரைத் தனியே எடுத்தால் அவன் பிணமாவான். பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரைப் பிரித்து எடுத்தால் அவள் தாயாவாள் !

தாய் எனும் உறவு, எந்த விதமான மகத்துவத்தோடும் ஒப்பிட முடியாத உறவு. தன்னலத்தின் ஒரு சிறு துரும்பு கூட இல்லாத தூய்மையைச் சொல்ல வேண்டுமெனில் தாயன்பைத் தான் சொல்ல வேண்டும். எல்லோருடைய மனதிலும் அம்மாவைப் பற்றிய பிம்பங்களும், பிரமிப்புகளும், நினைவுகளில் நீங்காமல் இருக்கும். பெரும்பாலான நினைவுகளை புரட்டிப் பார்த்தால் அவை பால்ய காலத்து நினைவுகளாகவே இருக்கும்.

மழலைக் காலம் தான் அன்னைக்கும், குழந்தைக்கும் இடையேயான தூய்மையான உறவின் முகவுரையை எழுதுகிறது. இறைவனின் படைப்பில் குறை என்று எதுவுமே இல்லை. பச்சைக் குழந்தை பால்குடிக்கத் துவங்கும் போது அந்தக் குழந்தையால் சுமார் 15 இன்ச் தூரம் தான் பார்க்க முடியுமாம். அது ஒரு தாயின் மார்புக்கும், முகத்துக்கும் இடைப்பட்ட தூரம். பாலும், பாசமும் ஒரே நேரத்தில் குழந்தை அருந்த இறைவன் செய்த விந்தை இது என்றால் மிகையில்லை.

“தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” என்கிறது பைபிள். இறைவனின் அன்பை ஒப்பீடு செய்ய ஒரு தாயின் அன்பை இறைவனே தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவர் தாயன்பை உலகின் உன்னத அன்பாய் நிலைநாட்டியிருக்கிறார் என்பது தானே பொருள்.

அன்னையைப் பற்றிப் பேசும்போது ஒரு பிரபலமான யூதப் பழமொழியைச் சொல்வார்கள். “கடவுளால் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருக்க முடியாது என்பதனால் தான் அன்னையைப் படைத்தார்” என்று ! கடவுளின் பிரதிபலிப்பாகவும், பிம்பமாகவுமே அன்னை நமக்கெல்லாம் தரப்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இந்த உலகம் தொழில்நுட்பத்தினாலோ, அழகினாலோ, வளங்களினாலோ கட்டி எழுப்பப்படவில்லை. அது அன்பினால் கட்டி எழுப்பப் படுகிறது. அன்பை நீக்கி விட்டுப் பார்த்தால் உலகம் வெறுமையின் கூடாரமே ! ஒரு மனிதனின் வாழ்நாளை அலசி ஆராய்ந்து பாருங்கள். அவன் நல்ல மனிதனாய் வாழ்கிறானா இல்லையா என்பதை அவன் தனது தாயை நேசிக்கிறானா இல்லையா என்பதை வைத்து அளவிடலாம். தாயை நேசிக்காத மனிதனால் மற்ற எதையும் ஆத்மார்த்தமாய் நேசிக்க முடியாது. தாயின் நேசத்தைப் பெறாதவர்களே பிற்காலத்தின் நிம்மதியற்ற, வரையறயற்ற, ஒழுங்கீனமான வாழ்க்கைக்குள் செல்கின்றனர். அன்னை தான் ஒரு குழந்தைக்கு சரியான வழியையும், வாழ்வையும் காட்ட முடியும்.

உங்கள் பெற்றோர் மீது அன்பும், மரியாதையும் வையுங்கள். அவர்களை முதிர் வயதிலும் பாதுகாத்து நேசியுங்கள். என்கிறது இஸ்லாமிய புனித நூல் குரான். ஒரு தாய் குழந்தையை நேசிக்கும் அதே நேசத்தில் தேசத்தையும் நேசியுங்கள் என்கிறார் புத்தர். கணக்கற்ற தெய்வங்களை அன்னையாய் பாவித்து அன்னைக்கு அதிகபட்ச மரியாதை செலுத்துகிறது இந்து மதம். தாயை நேசிக்க வேண்டாமெனச் சொல்லும் மதங்கள் இல்லை ! தாயின்றிப் பிறந்த மனிதர்களும் இல்லை.

உலகையெல்லாம் உருக உருக நேசித்து விட்டு, தனது தாயை முதியோர் இல்லம் அனுப்புபவர்கள் போலித்தனத்தின் பிம்பங்கள். அவர்கள் வெள்ளியடிக்கப்பட கல்லறைகள். வெறும் பெருமைக்காகத் திரிபவர்கள். அவர்கள் அன்பின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள். இன்று உலகெங்கும் முதியோர் இல்லங்கள் புற்றீசல் போலக் கிளம்பி விட்டன. மாதம் தோறும் பணத்தைக் கட்டி கால்நடைகளைப் பராமரிக்க குத்தகைக்கு விடுவதைப் போல மனிதர்கள் செயல்படுகிறார்கள்.

தன் குழந்தையை அரை நொடி கூட இடுப்பை விட்டு இறக்கிவிட மனமில்லாமல் சுமந்து சுமந்து மகிழ்வார்கள் அன்னையர். நிலவைக் காட்டியும், நிலத்தைக் காட்டியும் சோறூட்டுவார்கள். இடுப்பில் சுமந்து கொண்டு மைல்கணக்காய் நடந்து திரிவார்கள். வினாடி நேரமும் விடாமல் நெஞ்சில் சுமந்து திரிவார்கள். அத்தகைய அன்னையரைக் கடைசியில் மகன் முதியோர் இல்லங்களில் தள்ளி விடுகிறான்.

முதியோர் இல்லங்களின் மூலைகளில் தன் மகனின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத மகனின் நினைவுகளுடன் ஏக்கத்தில் இறந்து போகும் அன்னையர் ஏராளம் ஏராளம். முதுமை என்பது இறைவனின் ஆசீர்வாதத்தின் அடையாளம். முதுமை வரை வாழ்கின்ற பெற்றோரைக் கொண்டிருப்போர் வாழ்க்கையில் அதீத அன்பை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். அத்தகைய முதுமைப் பெற்றோரை ஒரு குழந்தையைப் போல பாதுகாப்பதில் இருக்கிறது மனிதத்தின் அழகிய வெளிப்பாடு.

இறைவனின் பிம்பங்களான அன்னையர், தாங்கள் உயிராய் நேசித்த பிள்ளைகளாலே உடைபடும் நிலையைக் காண்கையில் விழிகள் மட்டுமல்ல விரல்களும் கூட கண்ணீர் விட்டுக் கதறும். அன்னையைத் தனது இறுதி மூச்சு வரை அன்பில் சுமக்காத மனிதன், வாழ்வதில் அர்த்தமே இல்லை. ஒரு மனிதனால் உணரக் கூடிய அதிகபட்ச வலியைத் தாங்கி குழந்தையைப் பெறுகிறாள் அன்னை. அந்த வலியைத் தாங்கிய அன்னை அதை விட அதிக வலியை அனுபவிப்பது குழந்தைகள் அவர்களை உதாசீனப்படுத்தும் போது தான்.

கண்டதும் காதல் என்பார்கள், காணாமலேயே வருகின்ற அளவற்ற காதல் அன்னையிடம் தான் உருவாகும். தனது வயிற்றில் சுமக்கும் கருவின் உருவம் தெரியாமலேயே அதில் உயிரை வைத்து உருவாக்க அன்னையால் மட்டுமே முடியும். அதனால் தான் தாய் இரண்டாம் இறைவனாகிறாள். குழந்தையின் முதல் அழுகையில் மட்டும் ஆனந்தமடைந்து, அடுத்தடுத்த அழுகைகளில் கூடவே அழும் அதிசய உள்ளமாகிறாள்.

வாழ்வின் உன்னதத் தருணங்களை இரண்டு இடங்களில் தான் அனுபவிக்க முடியும். ஒன்று உங்கள் அன்னையின் அருகாமையில், இரண்டு, உங்கள் குழந்தைகளின் அருகாமையில். இரண்டுமே தாயன்பு தவழும் இடங்கள்.

தாயன்புக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும் ? கவிஞர் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள் கவிதையாய் விழுகின்றன. ” அன்னை தான் எல்லாமே ! கவலைகளின் ஆறுதல். துயர நேரத்தின் நம்பிக்கை. பலவீனத்தை நிரப்பும் பலம். அன்பின் துவக்கம், இரக்கமும் மன்னிப்பும் உறையுமிடம். அன்னையை இழப்பவர்கள் ‘ஆசீர்வதிக்கும், பாதுகாக்கும்’ தூய ஆன்மாவை இழந்து விடுகிறார்கள்.”

தாய் இறைவனின் பிம்பம். சின்ன சொர்க்கத்தை வீடுகளில் இறக்கி வைக்கும் கடவுளின் பிரதிநிதி. அன்னையை நேசிக்கத் தெரியாதவர்கள் வாழ்க்கையை வாசிக்கத் தெரியாதவர்கள். மனிதர் என்று அவர்களை அழைக்க மறுதலித்து விடுங்கள்.

அன்னையை நேசிப்போம். நிஜத்தில் வாழ்த்தாலும், நினைவில் வாழ்ந்தாலும்.

சேவியர்

 Thanks : Vettimani, Germany

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

 cricket-girls-beer-gallery7

 

 

 

 

திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள். 

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

“மணமகளே மருமகளே வா” எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். “லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. ” !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

– சேவியர்

காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்