உங்களால் முடியும் அசாதாரண வெற்றி !

 girl-755857_960_720

அசாதாரண வெற்றிக்கான சூழல்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால் அந்த வெற்றி கிடைக்காது. கிடைக்கும் சூழல்களை சரிவரப் பயன்படுத்தினால் அசாதாரண வெற்றி சாத்தியமாகும் –

ஜீன் பால்

உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ரொம்பவே சாதாரண மனிதர்கள் பலர் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.

“அவனுக்குப் பேசவே தெரியாதுடா.. அவனைப் பாரு டிவில புரோக்ராம் பண்றானாம்” என்று வியப்போம் ! “ஒழுங்கா தமிழே எழுதத் தெரியாது, சினிமால பாட்டு எழுதுறான் பாரு. நல்ல திறமை இருக்கிற நாம இங்கே கெடக்கிறோம்” என புலம்புவோம். ஒன்றும் இல்லாவிட்டால் ‘அட அங்கே பாருடா.. அந்த நோஞ்சான் பயலுக்கு சூப்பரா ஒரு லவ்டா..” என பெருமூச்சாவது விடுவோம் !

அந்த சலிப்புக்கோ, எரிச்சலுக்கோ, புகைக்கோ காரணம் நம்மைச் சுற்றியிருக்கும் சாதாரண மனிதர்கள். சொல்லப் போனால் நம்மை விடத் திறமைகள் குறைவாகவே இருக்கும் வெகு சாதாரண மனிதர்கள் நம்மை விட உயர்ந்த இடத்தில் இருப்பது தான்.

அவர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அவர்களிடம் சில குணாதிசயங்கள் இருக்கும். ஒன்று மற்றவர்கள் செய்யத் தயங்குகிற, அல்லது செய்ய முடியாது என நினைக்கின்ற சில விஷயங்களைத் துணிந்து செய்திருப்பார்கள். உதாரணமாக ஒரு அழகான பெண்ணிடம் போய் காதலைச் சொல்ல பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். ஆனால் ஒருவன் போய் சட்டென சொல்லுவான். அவன் அவள் பார்வையை இழுக்க என்னென்ன வலை விரிக்க வேண்டுமோ எல்லாவற்றையும் செய்வான்.

அதன் காரணம் என்ன ? அதில் இருக்கிறது இரண்டாவது பாயின்ட். தோற்றுவிடுவோமோ எனும் பயத்தைக் களைதல். காதலைச் சொல்லி நிராகரிக்கப்படுவோமோ எனும் பயத்தினால் காதலைச் சொல்லாதவர்கள் எக்கச்சக்கம். தோல்வி அடைந்தால் பரவாயில்லை என தைரியமாக ஒரு செயலை முன் வைப்பவர்களே வெற்றிக்கான அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள்.

அலுவலை எடுத்துக் கொண்டால் ஒரு சின்ன மாற்றம் வருகிறது என்றாலே நடுங்கி, பயந்து போய் விடுபவர்கள் உண்டு. அந்த மாற்றத்தை இயல்பாய் எடுத்துக் கொண்டு தங்களுடைய வேலையைச் சரிவர செய்து பெயரை நிலைநாட்டுபவர்களும் உண்டு. அப்படி தங்கள் பணியைச் செய்பவர்கள் கவனிக்கப்படுவார்கள். வெற்றியடைவார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கு கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தபோது பல்பின் உள்ளே பயன்படுத்த வேண்டிய இழையை உருவாக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்தார். முடியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை வைத்து அந்த இழையை முயன்றார். தோல்வியே மிஞ்சியது. அருகில் இருந்த உதவியாளர் நிக்கோலா டெஸ்லா சொன்னார், “சே… எல்லாமே வேஸ்டாகிப் போச்சு. ஒண்ணுமே உருப்படியா அமையவில்லை”.

எடிசன் அவனை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னார், ”பத்தாயிரம் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு தோல்வியடைந்த முயற்சியும், சரியான பாதையில் ஒரு அடி முன்னே வைக்க நமக்கு உதவுகிறது”

இது தான் வெற்றியாளர்களுடைய பார்வை. எந்தத் தோல்வியும் தன்னம்பிக்கையுடைய மனிதனுக்கு எதிரே அணை கட்ட முடியாது. ஆறாம் வகுப்பில் படுதோல்வி அடைந்தவர் தானே உலகப் புகழ்பெற்ற சர் வின்ஸ்டன் சர்ச்சில் ! தோல்வி அவரை தன்னம்பிக்கையின் தேசத்திலிருந்து கடத்திச் சென்று விடவில்லை. அவருடைய தன்னம்பிக்கை அவரை வெற்றிகளின் சாம்ராஜ்யத்தில் உச்சத்தில் வைத்தது !

வெற்றியடைந்தபின் பிரமிப்பூட்டும் வகையில் நம் முன்னால் தெரிபவர்களெல்லாம் வெறும் சாமான்யர்களே ! ஆனால் நம்மிடம் இல்லாத சில குணாதிசயங்கள் அவர்களிடம் இருக்கின்றன என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அந்த எக்ஸ்ட்ரா விஷயங்கள் நம்மிடம் இருந்தால் நாமும் அதே போன்ற சாதனையாளர்களாய் மாற முடியும்.

“இதுக்கு மேல என்னால முடியாதுப்பா…” என பின்வாங்குபவர்கள் சாதனை வெற்றிகளைச் செய்ய முடியாது. பல வேளைகளில் அவர்கள் சாதாரண வெற்றிகளைக் கூட பெற முடியாது !

“வாய்ப்பு கிடையாது” என நூறு முறை விரட்டப்பட்டவர்கள் தான் பிற்காலத்தில் நடிகர்களாக உலகை உலுக்கியிருக்கிறார்கள். “உன் மூஞ்சி சதுரமா இருக்கு… நீயெல்லாம் ஏன்பா நடிக்கணும்ன்னு கிளம்பறே’ என கிண்டலடிக்கப் பட்டவர் தான் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ஜான் ட்ரவால்டோ. பிற்காலத்தில் அவருடைய கால்ஷீட்டுக்காகக் காத்திருந்த கூட்டம் கணக்கில்லாதது ! பின் வாங்காத மனசு அவரிடம் இருந்தது தான் அவரை வெற்றியாளராய் மாற்றியிருக்கிறது.

தொடர்ந்த முயற்சியே வெற்றியைத் தரும். எப்போது முயற்சி செய்வதை நிறுத்தி விடுகிறோமோ அப்போது தோல்வி நம்மை அமுக்கிப் பிடிக்கிறது. நான் அதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் வெற்றியை அடையாமல் போனதேயில்லை” என்கிறார் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஹாரிசன் ஃபோர்ட்.

துவக்க காலத்தில் யாரும் இவரை சிவப்புக் கம்பளம் வைத்து வரவேற்கவில்லை. உதாசீனம், நிராகரிப்பு, அவமானம் இவையெல்லாம் இவருடைய வாசலில் குவிந்து கிடந்தன. இவரிடம் இருந்ததோ முயற்சியும், அதை முன்னெடுத்துச் சென்லும் தன்னம்பிக்கையும் தான். முயன்று கொண்டே இருந்தார். காற்றுக்கு முன்னேறிச் செல்லும் பட்டம் போல ஹாலிவுட் வானில் உயரப் பறக்கிறார்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி தான் உண்டு. அதே போல வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் இடையே இருப்பதும் ஒரு குட்டி இடைவெளிதான். அந்த இடைவெளியை நிரப்பினால் உங்களால் சாதிக்க முடியும்.

ஒலிம்பிக்கில் முதலில் வருபவருக்கும் கடைசியில் வருகிறவருக்கும் இடையே இருப்பது சில வினாடிகள் தான். ஆனால் முதலில் வருபவரே சாதனையாளராகிறார் இல்லையா ?

உங்கள் மீதான நம்பிக்கை. தொடர்ந்த முயற்சி. தோல்வியடைதல் குறித்த பயமின்மை. புதியவற்றை பாசிடிவ் மனநிலையில் ஏற்றும் கொள்தல் போன்ற சில விஷயங்களை மனதில் கொண்டாலே போதும். சாதாரண மனிதர்கள் சாதனை மாமனிதர்களாய் மாற முடியும் !

ஆரோக்கியமாய் வாழ்வது கடினமல்ல

health and beauty concept - smiling little girl with glass of water

ஆரோக்கியம் மட்டும் விடைபெறுமானால், 
ஞானம் தானாக வெளிப்பட மறுக்கும், கலைஉருவாகாது, 
வலிமை போரிடாது, செல்வம் பயனிலியாகும், புத்திசாலித்தனம் 
செயல்படமுடியாமல் போகும் – ஹெரோபிலஸ்.

ஆரோக்கியமான வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதில், ஆரோக்கியமான உடல் ரொம்பவே பயன் செய்யும். ஒரு மனிதனுடைய உடல் வலுவாக இருக்கும் போது தான் மனமும், சிந்தனையும் வலுவடையும். ஆரோக்கியமாக இருக்கும். வெற்றியாளராய்ப் பரிமளிக்கவும் ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் ரொம்ப அவசியம்.

ஒரு கவிஞன் பாடி பில்டராய் இருக்கத் தேவையில்லை என்றொரு வாதம்  உண்டு., உண்மை தான் ஆனால் யாராய் இருந்தாலும் ஆரோக்கியம் தேவை எனும் கருத்து மட்டும் எப்போதுமே நீர்த்துப் போவதில்லை !

வாழ்க்கை அவசரங்களின் பைகளில் மனிதர்களைத் திணித்து விட்டது. யாரும் ஆர அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.

இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம்.

இதோ, இந்த பத்து செய்திகளையும் மனதில் கொள்ளுங்கள்.

  1. தினமும் காலையில் தவறாமல் காலை உணவு உண்ணுங்கள். காலையில் உணவு உண்பது அதிக வைட்டமின்களையும் தேவையான சத்துகளையும் உடல் பெற்றுக் கொள்ள உதவுகிறது. குறைந்த அளவு கொழுப்பே உடலில் சேர்கிறது.

அமெரிக்காவிலுள்ள இதயம் தொடர்பான ஆராய்ச்சி ஒன்று “காலை உணவை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில், காலை உணவை தவறாமல் உண்பவர்கள் பிற்காலத்தில் நீரிழிவு, அதிக எடை போன்ற சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவு” என்று முடிவு வெளியிட்டிருந்தது.

நேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் அலுவலகத்திற்கு காலை உணவை கையோடு எடுத்துக் கொண்டு வந்தேனும் உண்பதே நல்லது.

  1. நன்றாகத் தூங்க வேண்டும். இன்றைய அவசர உலகம் பல்வேறு காரணங்களைக் கூறி தூக்கத்தின் நீளத்தைக் குறைக்கிறது.

தேவையான அளவு (ஏழு முதல் எட்டு மணி நேரம் ) தூக்கம் கிடைக்காதவர்களின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. அலுவலகப் பணிகளிலும், தனிப்பட்ட பணிகளிலும் கவன சிதைவுக்கு இது காரணமாகி விடுகிறது. பல்வேறு நோய்களுக்கும் இது விண்ணப்பம் விடுகிறது.

  1. உடற்பயிற்சி செய்யுங்கள். உலகில் முக்கால் வாசி பேர் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

உடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருப்பது மனதை உற்சாகத்துடன் வைத்திருக்கவும், தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் உதவும்.

செய்யும் வேலையிலேயே உடற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடக்க வேண்டும். அலுவலகத்திலும், வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் நடந்து கொண்டே இருப்பது நம்மை அறியாமலேயே நமக்கு உடற்பயிற்சியாய் அமைந்து விடுகிறது.

லிப்ட்டை புறக்கணித்து படிகளில் ஏறி இறங்குவது, கடைகளின் உள்ளே நடந்து திரிவது, பக்கத்து தெருவுக்கு நடந்தே போய் வருவது என சிறு சிறு செயல்கள் மூலமாகவே உடலுக்கு சற்று ஆரோக்கியம் வழங்க முடியும்.

ஆரோக்கியமான உடலே நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பரிசு.

  1. பற்களைக் கவனியுங்கள். உடலைப் பாதுகாக்க நாம் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பல்லைப் பாதுகாக்க நாம் செலவிடுவதில்லை.

பல் வலி வருவதற்கு முன்பாக பல் மருத்துவரிடம் செல்லும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மையைச் சொல்வதெனில் பற்களை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்வதன் மூலம் ஆயுளில் 6.4 ஆண்டுகளைக் கூட்ட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

  1. உணவில் மீன் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் சிறந்தது. மீனிலுள்ள ஒமேகா – 3 எனும் அமிலம் அலர்ஜி, ஆஸ்த்மா, தலைவலி, இதயம் தொடர்பான நோய்கள் போன்றவற்றைத் தடை செய்வதில் உதவுகின்றன.
  1. கொறித்தலை வகைப்படுத்துங்கள். தேனீர் இடைவேளைகள் போன்ற நேரங்களில் வறுத்த, பொரித்த வகையறாக்களை கட்டுவதை விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறி சாலட்களை உண்ணுங்கள்.

தேனீருக்கு டீ குடியுங்கள். பால் இல்லாமல் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது.

  1. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிதான ஆனால் பலரும் செய்யாத செயல் இது தான். தண்ணீர் குடிக்க மறந்து விடுதல் பல நோய்களை இழுத்து வரும்.

உடலின் உறுப்புக்களை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் ஒரு எளிய வழி நிறைய சுத்தமான தண்ணீர் குடிப்பதே என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

இது இதய நோய், சிறுநீரகக் கற்கள், உயர் குருதி அழுத்தம் உட்பட பல நோய்களை தடுக்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.

  1. சமூகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு குழுவில் இணைந்தோ, அல்லது சமூக நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டோ சமூக நிகழ்வுகளில் பங்கு பெறுங்கள்.

மனிதன் குழுவாக வாழ படைக்கப்பட்டவன், தனிமைத் தீவுகளுக்குள் அடைபடுவதை விட சமூக வனத்துக்குள் சுற்றி வருவது மனம், உடல் என இரண்டையுமே சுறுசுறுப்பாக்கும். பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும்.

  1. தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிருங்கள். வாழ்வில் எட்ட முடியாத இலட்சியங்களையும், தேவையற்ற எதிர் மறை சிந்தனைகளளயும் ஒதுக்கி விடுங்கள்.

குடும்ப உறவுகளை பலப்படுத்தி வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான கோடு கிழியுங்கள்.

திட்டமிடுங்கள். உணவு, வேலை, குடும்பம் என அனைத்து செயல்களையும் சரியான முறையில் திட்டமிடுங்கள்.

  1. ஒரு நல்ல பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். உங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்வதாகவும், மனதை இலகுவாக்குவதாகவும் இருக்கவேண்டும் அது.

எழுதுவது, வாசிப்பது, இசை கேட்பது, தோட்டம் வைப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என எதுவானாலும் உங்களை மிகவும் வசீகரிக்கும் ஒன்றை பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துதலை அவை தரும்.

இந்த எளிய வழிகளைக் கடைபிடிப்பது தேவையற்ற நோய்களை நம் வாசலோடு அனுப்பி விடவும், உடல் நலத்தை வீட்டுக்குள் வரவேற்கவும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை

உடலைப் பாதுகாப்பதும், மனதைப் பாதுகாப்பதும் இரண்டு வேறுபட்ட நிலை என பலரும் நினைக்கிறார்கள். அது ரொம்பத் தப்பு ! உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் ஆரோக்கியமாய் இருக்கும் !

மனம் ஆரோக்கியமாய் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாய் இருக்கும். ஒன்றைப் புறக்கணித்து இன்னொன்றைப் பற்றிக் கொள்வது நம்மை நாமே ஊனப்படுத்திக் கொள்வது போன்றது என்பதை நினைவில் கொள்வோம் !

செவிலியர் பணி : ஒரு கிறிஸ்தவப் பார்வை

nurse_1
மனிதம் கலப்போம்.

நர்ஸ் ! எனும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள் என ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூட உண்டு.

மருத்துவப் பணி என்பது ஒரு மகத்தான பணி என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் இவர்களுடைய பணி இருக்கிறது. நர்ஸ் என்றாலே மருத்துவமனை தான் நமது மனதில் வரும். உண்மையில் சுமார் 40 சதவீதம் நர்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே, பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், சமூக பணிகள், ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களில் தான் பணிபுரிகின்றனர்.

நர்ஸ் எனும் பணியை யோசிக்கும் போது “ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. நவீன கால மருத்துவம் அவருடைய சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. போர்களினால் பாதிக்கப்பட்டவர்களிடையே தான் அவருடைய பணி பெருமளவில் இருந்தது.

1820 க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அவர் முழுநேர மருத்துவப் பணி செய்தது வெறும் மூன்று ஆண்டுகள் தான் என்பது வியப்பூட்டுகிறது. “எவ்வளவு காலம் பணி செய்கிறாய் என்பதல்ல, எப்படி பணி செய்கிறாய் என்பதே முக்கியம் என்பதே முக்கியம்” என்பதையே இவருடைய வாழ்க்கை சொல்கிறது. “நீ செய்யும் செயல் எவ்வளவு பெரியதென்பதல்ல முக்கியம், அதில் எவ்வளவு அன்பை நீ செலுத்துகிறாய் என்பதே முக்கியம்” என்கிறார் அன்னை தெரேசா.

வேலைகள் எல்லாமே வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதற்கு தாதியர் பணி ஒரு சிறந்த உதாரணம். வெறும் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தப் பணியில் சேர்பவர்கள் பணியின் அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள். நீடிய பொறுமை, இரக்கம், சுயநலமின்மை என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களே நல்ல நர்ஸாக பணிபுரிய முடியும் என்கிறார் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்.

ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

1. செவிலியர் பரிவுகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்போருக்கு அந்த நேரத்தில் தேவைப்படுவதெல்லாம் நகையோ, பணமோ, வீடோ, காரோ அல்ல. பரிவு காட்டும் இதயம் தான். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” எனும் இறைவாக்கு ( கலாத் 6:2 ) நம்மிடம் எதிர்பார்ப்பது இதைத் தான்.

2. செவிலியர்கள் இதயத்தின் ஆழத்தில் இரக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். இரக்கத்தின் வேர்கள் இதயத்தில் தான் மையம் கொள்ளும். வேரற்ற இரக்கம் வெயிலில் காய்ந்து விடும். “இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” எனும் இறைவார்த்தை நினைவுக்கு வருகிறதா ?

3. மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது செவிலியர்களின் பண்புகளில் ஒன்று. நோயாளிகள் ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து திரிபவர்கள். அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் காரணிகளாக செவிலியர் இருக்க வேண்டும். ஒரு புன்னகை, ஒரு உற்சாகமான பார்வை, ஒரு மலர்ச்சியான முகம் இது நோயாளிக்கும் பரவி அவர்களுடைய சுமையைத் தணிக்க உதவும் என்பது உளவியல் உண்மை.

” ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” எனும் பிலிப்பியர் 4:4 ம் வசனமும், ” மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து: வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” எனும் நீதிமொழிகள் 14:22ம் வசனமும் செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளோடு இணைந்து பயணிக்கிறது.

4. பதட்டப்படாமல் வேகமான முடிவெடுக்கும் திறமை செவிலியர்க்கு அவசியம். நோயாளிகளோடான வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போல ரம்மியமானதல்ல, அது பாறைமீது காரோட்டுவது போன்றது. கவனம் சிதையாமல் இருக்க வேண்டியதும், தேவையான நேரத்தில் சரியான முடிவை வேகமாய் எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்கு கடவுளின் ஞானம் தேவை.

“உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்திடல் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” எனும் இறை வார்த்தைகள் ( யாக்கோபு 1 : 5 ) செவிலியருக்கு ஊக்கம் ஊட்டட்டும்.

5. வார்த்தைகளில் இனிமையும், எளிமையும் இருக்க வேண்டியது இன்னொரு முக்கியமான தேவை. நோயாளிகளின் துயரக் கதைகளைச் சலிக்காமல் கேட்கும் காதுகளும், அவற்றுக்கு எரிச்சல் படாமல் பொறுமையாய் பதிலளிக்கும் மனமும் செவிலியருக்குத் தேவை. ஒரு குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சலடையாமல் பதில் சொல்லும் அன்னையைப் போல அவர்கள் செயல்பட வேண்டும்.

” உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்” எனும் கொலோசேயர் 4 : 6 , செவிலியருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கின்றன.

6. கடின உழைப்பு தேவை. அதை அற்பண உணர்வோடு செய்தலும் வேண்டும். அலுவலக வேலை போல காலை முதல் மாலை வரை எனும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் செவிலியர் பணி முடிவதில்லை. அது தொடர்ச்சியான ஒரு பணி. அலுவலக எல்லைக்கு வெளியேயும் அதே மனநிலையை நீடித்துக் கொள்ளும் தேவை ஏற்படலாம். உழைக்கச் சலிக்காத இதயம் அவர்களுக்கு வேண்டும்.

“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்” ( கொலோ 3 :23 ) எனும் இறைவார்த்தை செவிலியருக்கு ஊக்கமளிக்கும் மருந்து.

7. தன்னலமின்றி பணி செய்ய வேண்டியது செவிலியரின் மிக முக்கியமான பண்பு. பணத்துக்காகவோ, தனது இலாபத்துக்காகவோ இந்தப் பணியைப் பயன்படுத்தும் போது மிகப்பெரிய பாவத்தை அவர்கள் செய்கின்றனர். ஏனெனில் இயலாதோரை வதைப்பவர்களை இறைவன் எதிர்க்கிறார்.” எவரும் தன்னலம் நாடக்கூடாது: மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” (1 கொரி 10:24) எனும் இறை வார்த்தைகள் செவிலியர் மனதில் எழுத வேண்டிய வார்த்தைகள்.

8. செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இன்னொரு குணாதிசயம் பணிவு. கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு இது. பணிவை விலக்கும்போது மனிதன் இறை பிரசன்னத்தை விட்டு சாத்தானில் எல்லைக்குள் நுழைந்து விடுகிறான். “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள்” எனும் எபேசியர் 4:2, செவிலியருக்கும் மிகப் பொருத்தமே.

9. நீடிய பொறுமை செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் பதட்டத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு கேட்கும் கேள்விகளை பொறுமையுடன் எதிர்கொள்வதானாலும் சரி, நோயாளிகளின் உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு பொறுமையுடன் கையாள்வதானாலும் சரி, பொறுமை மிக மிக அவசியம். “பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்” எனும் நீதிமொழிகள் ஒரு அறிவுறுத்தல்.

10. செபத்தில் நிலைத்திருப்பவராக இருக்க வேண்டும். இறைவனை விட்டு விட்டுச் செய்யும் செயல்கள் எல்லாம் செத்த செயல்களே. செய்கின்ற செயலை இறைவனின் அருளோடு செய்வதில் தான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. பிறருக்காக மனம் உருகி செபிப்பதும், யாரையும் காயப்படுத்தாத தினங்களுக்காக செபிப்பதும் செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலி 4 :6 ) என்கிறது வேதாகமம்.

ஏற்கனவே சொன்னது போல, ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

செவிலியர் அனைவரும் தங்கள் பணி ஒருவகையில் இறையழைத்தல் என்பது போல ஆத்மார்த்தமாய் செய்தால் மனுக்குலத்தின் மகத்துவங்களாக அவர்கள் நிலைபெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

( Thanks : Desopakari Magazine )

மன்னிக்காதவன் ஆன்மீக ஏழை !

forgive

 

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்’ என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளை ‘அல் கபிர்’ என்கிறது, “முழுமையாய் மன்னிப்பவர்” என்பது அதன் அர்த்தம். ‘மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்லவே முடியாது’ என்கிறது கிறிஸ்தவம். மதங்கள் எல்லாம் இப்படி மன்னிப்பைக் குறித்து விலாவரியாகச் சொன்னாலும் மனிதனுடைய மனதில் மட்டும் மன்னிப்பு குதிரைக் கொம்பாகத் தான் முளைக்கிறது.

மன்னிப்பது கோழைகளின் செயல் என்றே பலரும் நினைக்கிறார்கள். ‘எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்’ என மீசை முறுக்குகிறார்கள். உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத்தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு மனதையே வெற்றி கொள்ளும். இதைத்தான் மகாத்மா சொன்னார், ‘மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது.

கைகுலுக்கிக் கொள்வது நாம் நட்புடன் இருக்கிறோம் என்பதன் வெளி அடையாளம் மட்டும் தான். மன்னிப்புடன் மனங்களைக் குலுக்கிக் கொள்வது தான் உண்மையான நட்பின் அடையாளம். அடையாளங்கள் வாழ்க்கையை அழகாக்குவதில்லை, அவை காகிதப் பூக்களை ஒட்டி வைத்த முல்லைக் கொடி போல செயற்கையின் பிள்ளையாய் அர்த்தமிழக்கும்.

மன்னிக்கத் தெரிந்த மனிதர்கள் ஈகோ எனும் எல்லைக்கு வெளியே நின்று வாழ்க்கையை அதன் அழகியலில் லயிப்பவர்கள். மனிதத்தின் புனிதமான பாதைகளில் பயணிக்கும் பாதங்கள் அவர்களுடையவை.

வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட். இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம். 2003-ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இரு க்கும்போதுதான் அந்தத் துயரம் நடந்தது.

ஒரு நாள் கேய் தனது சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தபோது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. உற்சாகப் பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது. நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வாரன். நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என தீர்ப்பிட்டது.

சிறுமி கேய் அவனருகில் சென்றாள். திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். பார்த்தவர்களெல்லாம் கலங்கினார்கள். பின் சிறுமி அவனிடம் சொன்னாள், ‘நீங்கள் செய்தது தவறு. ஆனாலும் உங்களை நான் மன்னிக்கிறேன்.’ ஐந்து வயதுச் சிறுமியின் அச்செயல் அந்த நீதிமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் நெகிழ்ந்தார்கள். அதுவரை சுட்டவன் மீது கொடும் பகையுடன் இருந்த அவளுடைய தாயும் உடனடியாக அந்த நபரை மன்னித்தார்! தவறிழைத்தவன் கதறினான்.

இந்த நிகழ்வு அமெரிக்காவின் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பலரையும் தொட்டது.

மன்னிப்பு எனும் செயல் மனிதகுலத்துக்கே உரிய மகத்துவமானது. மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்வதில்தான் இன்று பலருக்கும் உலக மகா தயக்கம். அதனால்தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் தெருக்களில் நொண்டியடிக்கிறது.

ஒருவர் உங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் மீது நீங்கள் கோபம் கொள்ளும் போது உங்களுடைய மனதில் ஒரு கல்லை வைக்கிறீர்கள். அது கனக்கிறது. அந்தக் கோபத்தை மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க ஒவ்வொரு கல்லாய் அடுக்குகிறீர்கள். பாரம் கூடுகிறது, உடல் நிலை பாதிக்கிறது. ரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது. ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்துவிட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடுகின்றன

நீங்கள் ஒரு நபரைப் பார்த்துக் கத்தியால் குத்தினால் அவருக்குக் காயம் ஏற்படும். ஆனால் ஒரு நபர் மீது கோபமாய் இருக்கிறீர்களென்றால் அவருக்கு எதுவும் நேராது. மாறாக அந்தக் கோபம் உங்களுக்குத்தான் கெடுதல் உண்டாக்கும். நீங்கள் யார் மீது கோபமாய் இருக்கிறீர்களோ அவர் இதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே மன்னிப்பு என்பது முதலில் உங்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல செயல் என்பதை உணருங்கள்.

இன்றைய மனித உறவின் பலவீனங்கள் பலவேளைகளில் திடுக்கிட வைக்கின்றன. பெற்றோரை மன்னிக்க மறுக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் மீது வெறுப்பு வளர்க்கும் பெற்றோர், அரிவாளுடன் அலையும் சகோதரர்கள், வன்மத்துடன் திரியும் தம்பதியர்! இவை எல்லாவற்றுக்குமான சர்வ ரோக நிவாரணி மன்னிப்பு என்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா ?

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது கதிகலங்க வைக்கிறது. ‘நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்’ என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

‘மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்’ என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

‘கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்’ சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும். மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள். மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்பது உறவின் உயர் நிலை. கேட்கும் முன்னாலேயே மன்னிப்பது இறையின் முதல் நிலை !

மன்னிப்பு மனிதனின் வெகுமதி
மனதில் அதையே அனுமதி !

சேவியர்

நன்றி. சிவத் தமிழ், ஜெர்மனி.

குழந்தைகளைப் பாதுகாப்போம் !

 ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது ! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது ! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.

வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது  மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம் ! குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? 

 

வீட்டுக்கு வெளியே

 

வெளியே போகும் முன்

குழந்தைகளுடன் வெளியே போகிறீர்களா ? ஒரு நிமிடம் நில்லுங்கள். அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். திருடர்களும், அசம்பாவிதங்களும் நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே வீட்டை விட்டுக் கிளம்பும் போதே உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் மொபைல் கேமராவை எடுத்து உங்கள் குழந்தைகளைப் போட்டோ எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை எங்கேனும் தவறிப் போனால் கண்டுபிடிக்க பேருதவியாய் இருக்கும். “ஒரு மாதிரி பிங்க் கலந்த வயலெட் கலர்ல ஒரு பிராக் மாதிரி கவுன்.. “ என்றெல்லாம் பதட்டத்தில் உளறுவதை இந்த படம் தடுக்கும்.

படத்தைக் காமித்து “இதான் குழந்தை… “ என விசாரிக்க உதவியாய் இருக்கும். தொழில் நுட்பம் இன்றைக்கு வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவற்றை குழந்தைகள் பாதுகாப்புக்காய் பயன்படுத்துவதற்கு இது ஒரு சின்ன உதாரணம் !

அதே போல ஒரு வேளை தவறினால் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்வது ? என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பெரிய பார்க்கள், விழாக்கள், ஷாப்பிங் மால்களில் இது உதவும்.

ஒருவேளை தவறினால் உதவி கேட்பது யாரிடம் என்பதைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக காவலரிடம் உதவி கேட்கவேண்டுமெனில், உடையை மட்டும் சொல்லாமல் “பேட்ஜ்” அணிந்திருப்பார், இந்த “லோகோ” உடையில் இருக்கும் என்பன போன்ற விஷயங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுங்கள் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?

உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

உதாரணமாக, “படத்துக்கு போறேன்” என்று உங்கள் பையன் சொன்னால், யாருடன் செல்கிறான். எங்கே செல்கிறான். எப்போ காட்சி துவங்கும், எப்போ முடியும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.


கடைவீதிகளில்..

கடைவீதிக்குப் போகும் போது குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனால் முதல் கவனம் குழந்தையின் மீது இருக்கட்டும். அழகான புடவையைப் பார்த்து குழந்தையை விட்டு விடாதீர்கள். பெற்றோரின் கவனம் சிதறும் நேரம் பார்த்து குழந்தையை யாரேனும் கடத்தில் செல்லும் வாய்ப்பு உண்டு.

யாரேனும் உங்கள் குழந்தையை உற்றுக் கவனிப்பதாய் தோன்றினால், அவர்களிடம் போய் சும்மா பேசுங்கள். முடிந்தால் உங்கள் செல்போன் கேமராவில் அவரை படம் எடுங்கள். நீங்கள் அவரைக் கவனித்தீர்கள், அவருடன் பேசினீர்கள் என்றாலே ‘அடையாளம் தெரிந்து விட்டது’ என அந்த நபர் விலகி விடுவார்.

“குழந்தை ரொம்ப கியூட் அதான் பாத்தேன்” என யாரேனும் சொன்னால், “நன்றி” என ஸ்நேகமாய் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டுங்கள். அவருடன் அமர்ந்து உங்கள் குழந்தையின் சாதனைகளையெல்லாம் பட்டியல் போடவேண்டாம் !

உங்கள் குழந்தையை யாராவது நெருங்குகிறார்கள், பேசுகிறார்களெனில் உடனே அந்த இடத்திற்குச் செல்லுங்கள். அந்த நபரைப் பற்றிய விவரங்களை கேளுங்கள்.


காரில் போகும்போது

“காரில் ஏறினதும் நீ பண்ண வேண்டிய முதல் வேலை என்ன ?”

“சீட் பெல்ட் போடறது மம்மி…”

நாலு நாள் இந்த உரையாடல் நீங்கள் காரில் ஏறியதும் நடந்தால், ஐந்தாவது நாளில் இருந்து குழந்தை தானாகவே சீட் பெல்ட் போடப் பழகிவிடும். அப்புறம் ஒருவேளை நீங்கள் சீட் பெல்ட் போடாவிட்டால் உங்களிடம் அதே கேள்வியை குழந்தையே கேட்கும் !

சீட் பெல்ட் போடுவது கார் பயணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போனாலும் சரி, தூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்குப் போனாலும் சரி. அலட்சியம் வேண்டாம்.

என்னதான் காரில் ஏர்பேக் போன்ற வசதிகள் இருந்தாலும் சீட் பெல்ட் போடாமல் பயணித்தால் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தை மீது அக்கறை இருக்கிறதா, சீட் பெல்ட் போடப் பழக்குங்கள். 

 

குழந்தையோடு பேசுகிறீர்களா ?

உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ? உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் அம்மா பாத்துப்பாங்க, அப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“ஐயோ இதெல்லாம் நான் எப்படி அம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் மம்மி கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது !…

பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் பஸ் ஸ்டான்ட் க்கு போய் குழந்தைக்கு எந்த பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.

வாகனங்கள் எச்சரிக்கை !

வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து. நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல் ! குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?

உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

பலரும் செய்யும் தப்புகளில் ஒன்று தங்கள் முழுப் பெயரைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்காதது தான். உன்னோட அப்பா பேரென்ன என கேட்டால் “ராஜூ” என்று குழந்தை சொல்வதை விட “சுப்ரமணிய ராஜூ” என சொல்வது அதிக பயன் தரும். அப்பா, அம்மாவின் முழுப் பெயரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கையில் நம்பர்

குழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஹோட்டலில் தங்குகிறீர்களெனில் அந்த ஹோட்டலின் பிஸினஸ் கார்ட்/விசிடிங் கார்ட் நான்கைந்து எடுத்து குழந்தையின் பாக்கெட்களில் போட்டு வைப்பது நல்லது. தவறிப்போனால் ஹோட்டல் பெயரும், தொடர்பு எண்களும் அவர்களிடம் இருக்கும் !

கைகளில் அழகிய அகலமான ரப்பர் பேன்ட் ஒன்றைப் போட்டு அதில் பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதி வைப்பது கூட நல்ல யோசனையே.

ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை ! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் அம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்

பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை  நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.

குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !

 

 வீட்டுக்கு உள்ளே

 

குழந்தை தனியாய் இருக்கிறதா ?

வீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.

முக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும் ? தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.

வீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது ! . “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.

வீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் !

பக்கத்து வீடுகள்

உங்கள் பக்கத்து வீட்டு நபர்களின் வீடுகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எந்தெந்த வீடுகள் பாதுகாப்பானவை. எவையெல்லாம் உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் செல்லலாம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

தெரியாத வீடுகளுக்கு குழந்தைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம். தெரிந்த நபர்களின் வீடுகளுக்குக் கூட நீங்கள் கூடவே சென்று பழக்கப் படுத்துவதே நல்லது. நபர்கள் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்காக வீடு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கே கவனிக்கப் படாத கிணறு இருக்கலாம், ஆபத்தான மாடி இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஒளிந்திருக்கலாம். எனவே நீங்கள் அந்த வீடுகளைப் பார்த்திருப்பது நல்லது ! 

பக்கத்து வீடுகளுக்குச் சென்றால் கூட, குழந்தை அந்த வீட்டை அடைந்து விட்டதா என்பதை போனில் விசாரித்து அறியுங்கள். அந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லுங்கள்.

நெருப்போடு கவனம் தேவை

தீ தொடர்பான ஆபத்துகள் குழந்தைகளுக்கு வருவதை பத்திரிகைகள் அவ்வப்போது துயரத்துடன் பதிவு செய்கின்றன. குழந்தைகளுக்கு நெருப்பு குறித்த ஆபத்துகளும், எச்சரிக்கை உணர்வுகளும் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

தீப்பெட்டி, லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் !

உடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது ! தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும் ! எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுன்கள்.

சுவாரஸ்யமாய் சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது !

கொசு, பூச்சி மருந்துகள் !

வீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள், அவை குழந்தைகளுக்கு ரொம்பவே டேஞ்சர் என்பது தெரியுமா ? பலருக்கும் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று !

இத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.

எனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள்.  அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் !

விளையாட்டுப் பொருட்களில் கவனம்

குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் !

அதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.

விளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.

குழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

மின் உபகரணங்களில் கவனம்

குழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது ? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி  மாட்டுங்கள் !

வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.

மின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.

 

வீட்டுப் பொருட்களில் கவனம்

நமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

ஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.

டிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது !

கத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் !

சின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.

 

மருந்துகளில் கவனம்

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள்.  அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.

“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் !

மருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது !.

“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது ! எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் !

பழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க !

 

தண்ணீரில் பாதுகாப்பு

தண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள்.  உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.

வீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.

குழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.

இணையத்தில் கவனம்

இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.

இணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு !

 

பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்க !

 

நல்ல தொடுதல் எது ?

சின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் !

குழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.

வளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் ! மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் ! ஆபத்து இருவருக்குமே உண்டு !

நோ சொல்வது நல்லது !

யாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி !

குழந்தைகளை நம்புங்க !

குழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் வரை இடை மறிக்காதீர்கள்.  

“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.

 

குழந்தைகளிடம் கேளுங்க !

குழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.

ஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.

நம்பிக்கையை வளருங்க

எதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.

“மம்மி எனக்கு இந்த அங்கிளைப் புடிக்காது” என்று குழந்தை சொன்னால் அரவணைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வு கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கல் நடந்திருக்கலாம். எனவே குழந்தையின் விருப்பத்தை மதியுங்கள். அந்த நபரைக் கொஞ்சம் கவனியுங்கள் !

குழந்தையை மிரட்டினாங்களா ?

“மம்மி கிட்டே சொல்லாதே..” என்று யாராவது எதையாவது சொன்னார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தப்பான விஷயங்கள் தான் பெற்றோரின் காதுகளுக்குப் போகக் கூடாது என சில்மிஷவாதிகள் நினைப்பார்கள். அத்தகைய விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும். அது தான் உங்களை எச்சரிக்கையாய் வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும் அது ரொம்ப அவசியம்.

“உன்னைப் பத்தி அம்மா கிட்டே சொல்லி அடி வாங்கி தருவேன்”  போன்ற மிரட்டல்களில் ரொம்ப கவனம் தேவை. தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடக் கூடும் !

யாராகவும் இருக்கலாம் !

பாலியல் தொந்தரவுகளைத் தருபவர்கள் இளைஞர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயசு வித்தியாசம், சாதி, மத, பண வித்தியாசம் இல்லாமல் யாருக்குள்ளும் இந்த நரி ஒளிந்திருக்கலாம். எனவே ஆள் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

குழந்தைக்கு யாராவது கிஃப்ட் வாங்கி குடுத்தாங்களா ? சாக்லேட் வாங்கி குடுத்தாங்களா ? அல்லது ஏதேனும் வாங்கித் தரேன்னு ஆசை காட்டினாங்களா என அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சிக்கல்கலுக்கான முன்னுரையாகக் கூட இருக்கலாம்.

குழந்தையின் உடல் மொழி !

குழந்தைக்கு விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால் குழந்தையின் முகமே சட்டென காட்டிக் கொடுத்துவிடும். அதைக் கவனித்து விசாரிக்க வேண்டியது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய விஷயம். குழந்தை சோகமாய் இருந்தாலோ, பேசாமல் இருந்தாலோ கவனியுங்க ! குழந்தையின் உடலில் காயம் இருந்தல் உடனே கவனியுங்கள்.

குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தியோ, அதட்டியோ விஷயத்தைக் கேட்காதீர்கள். ரொம்ப ரொம்பப் பொறுமையாய் கேளுங்கள் !

திடீர்ப் பாசம் வருதா ?

குழந்தையிடம் உறவினர்கள் யாராச்சும் திடீரென பாசம் காட்டுகிறார்களா என கவனியுங்கள். குழந்தையை அடிக்கடி கொஞ்சுவது, தனியே மாடிக்கோ, பால்கனிக்கோ, தனிமையான அறைகளுக்கோ கூட்டிப் போவது போன்ற விஷயங்களில் கவனமாய் இருங்கள். குழந்தையைக் கூட்டிக் கொன்டு சினிமா போகிறேன் என்றெல்லாம் சொன்னால் மறுத்து விடுங்கள். பிறர் குழந்தையோடு பழகுவதெல்லாம் உங்கள் பார்வையில் படும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

நோ போட்டோ !

குழந்தையை யாராச்சும் புகைபடம் எடுக்க வந்தால் “வேண்டாம்” என சொல்லப் பழக்குங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். குழந்தையை யாரேனும் ஆபாசமாய்ப் படம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.

அதே போல குழந்தையிடம் ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகங்கள் யாராச்சும் காட்டுகிறார்களா போன்றவையும் கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளின் மனதைக் கறையாக்கி அதில் குளிர்காயும் குறை மனசுக்காரர்களும் உண்டு !

கிராமத்திலும் உண்டு !

இதெல்லாம் நகரத்துச் சமாச்சாரங்கள். கிராமத்துல எதுவுமே கிடையாது என தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கிராமங்களோ நகரமோ எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நிச்சயம் உண்டு.

அதே போல குழந்தை கிட்டே ஒரு தடவை எல்லா எச்சரிகை உணர்வையும் சொல்லியாச்சுன்னும் விட்டுடாதீங்க. அடிக்கடி சொல்லிட்டே இருங்க. குழந்தைகள் மெல்லிய மனசுக்காரர்கள் அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

 

நன்றி : தேவதை, மாத இதழ்.

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

 அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.  

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6  சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் !  8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது !  எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட். 

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் ! 

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6 சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் ! 8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது ! எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட்.

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் !

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

முதுகு வலிக்குதா ? இது உதவலாம் !

முன்பெல்லாம் வழுக்கை விழும் பருவத்தில் தான் முதுகு வலி மெல்லமாய் எட்டிப் பார்க்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. அரும்பு மீசை எட்டிப்பார்க்கும் வயதிலேயே முதுகில் வலியும் ஒட்டிக் கொண்டு விடுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையே அதற்குரிய பெருமையைப் பெற்றுக் கொள்கிறது. முன்பெல்லாம் பனையேறினாலும் தடுமாறாத தலைமுறை நிமிர்ந்து நின்றது. இன்றோ, படியேறினாலே தடுமாறும் தலைமுறையே கண்ணுக்கு முன்னால் நிற்கிறது.

நடக்க விரும்பாத மனநிலையும், உடற்பயிற்சி செய்ய நேரம் கண்டு பிடிக்கத் திணறும் அலுவல் சூழலும் வலிகளை முதுகில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது. உலக அளவில் 80 விழுக்காடு மக்களுக்கு வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில் முதுகு வலி வந்துவிடுகிறது என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

சரி, இந்த முதுகு வலி வராமல் இருக்க என்ன செய்யலாம் ?

  1.  உட்காரும்போதும் நடக்கும் போதும் சரியான நிமிர்ந்த நிலையில் இருந்தால் முதுகு வலியை பெருமளவு தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர். அதிலும் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய அலுவலில் இருப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லையேல் முதுகு வலி வெகு நிச்சயம். 

  2. உடற்பயிற்சி கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்கு மட்டுமல்ல, வலுவான உடலுக்கும், வலியில்லாத முதுகுக்கும் உத்தரவாதம். நடப்பது, ஓடுவது போன்ற எளிய உடற்பயிற்சிகளும், யோகா போன்றவையும் முதுகு வலியை விரட்டும் நிரூபிக்கப்பட்ட பயிற்சிகள். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுங்கள், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். 

  3.  தொப்பையை விரட்டுங்கள். தொப்பை முதுகு வலியின் நெருங்கிய நண்பன். உடலில் எடை அதிகரிக்க அதிகரிக்க அது முதுகை அழுத்தி அதிக வலியை முதுகுக்கு வழங்குகிறது. உடல் எடை கட்டுக்குள் இருந்தாலே முதுகு வலி கொஞ்சம் அச்சத்துடன் தான் உங்களை நெருங்கும். 

  4. நீச்சல் பழகுங்கள். முதுகு வலியை ஓட ஓட விரட்டும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கும், உடற்பயிற்சியும் நீச்சலே. நீச்சல் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும், புத்துணர்ச்சிக்கும் ஏற்ற மிகச் சிறப்பான உடற்பயிற்சி. 

  5. அருகிலுள்ள இடங்களுக்கும், கடைகளுக்கும் நடந்து செல்ல முனையுங்கள். அல்லது மிதி வண்டி ஓட்டுங்கள். இவை உங்களை ஆரோக்கியமாய் வைத்திருக்கும். வீட்டில் செல்லப் பிராணி வைத்திருக்கிறீர்களா ? அதனுடன் ஓடியாடி விளையாடுங்கள். அதுவும் உங்களுக்குப் பயனளிக்கும். 

  6. நீண்டநேரம் நிற்பதைத் தவிருங்கள். நீண்ட நேரம் நின்றேயாக வேண்டிய கட்டாயமெனில் சரியான வகையில் நில்லுங்கள். வளைந்து நெளிந்து நின்றால் முதுகு வலி விரைந்தோடி வரும். 

  7. உங்கள் வீடுகளிலுள்ள இருக்கைகள் முதுகுக்கு கேடயமாக இருக்க வேண்டும். அதிக சாய்வாகவோ, முதுகு பக்கமே இல்லாததாகவோ இருந்தால் சிக்கல் தேடி வரும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள். 

  8. இருக்கைகளின் மிக ஓரமாகவோ, மிகவும் உள்வாங்கியோ அமராதீர்கள். கால்களை சரியானபடி தரையில் வையுங்கள். உங்கள் பாதங்களுக்கு இடையே உள்ள தூரம் உங்கள் தோளின் அளவாய் இருப்பதே சிறந்தது. 

  9. அவ்வப்போது உங்கள் முதுகை பின்னோக்கி வளைத்து பயிற்சி செய்யுங்கள். எப்போதும் முன்னோக்கியே வளையும் முதுகுக்கு அது மிகவும் தேவையானது. 

  10. படுக்கை இன்னொரு முக்கியமான விஷயம். மிகவும் அதிக சொகுசு வேண்டும் என நீங்கள் படுக்கைகளைத் தேர்ந்தெடுத்தால் இடுக்கண்ணையும் சேர்ந்தே தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது பொருள். முதுகை நேராகப் பிடிக்கக் கூடிய படுக்கைகளே பாதுகாப்பானவை. படுக்கையை விட்டு எழும்பும் போதும் ஒருக்களித்து கைகளை ஊன்றியே எழும்புங்கள். முதுகை வளைத்து எழும்பாதீர்கள். 

  11. உங்கள் தலையணையைப் பாருங்கள். அளவாய் இருக்கட்டும் உங்கள் தலையணை அதிக உயரமாகவோ, ஒழுங்கற்றதாகவோ இருந்தால் முதுகு வலி வரலாம். 

  12. அதிக எடையுள்ள பொருட்களை தூக்கிச் சுமப்பதைத் தவிர்ப்பது முதுகுக்கு நல்லது. எடையுள்ள பொருட்களைத் தூக்கும் போது அமர்ந்த நிலையில், முதுகு நேராக இருக்கும் படி தூக்க வேண்டும். 

  13. புகைப்பதை நிறுத்துங்கள். புகை பிடிப்பதால் உடலிலுள்ள உயிர்வழியின் அளவு குறைகிறது. அது முதுகு வலியையும் தந்து விடும்.

இவை தவிர உடலிலுள்ள குறைபாடுகளின் காரணமாகக் கூட முதுகு வலி வரக் கூடும்.

அதிலும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடலிலுள்ள கால்சியம் குறைபாடு தன் வேலையைக் காட்டி மூட்டு வலிகளுக்கும், முதுகு வலிகளுக்கும் காரணமாகி விடுகிறது.

எனவே எல்லா பயிற்சிகளையும் தவறாமல் கடைபிடித்தும் முதுகு வலி வருகிறதே என நினைப்பவர்கள் யாரேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

 

ஓவரா ஷாப்பிங் பண்றீங்களா ? ஒரு டேஞ்சர் ரிப்போர்ட் !

 திவாகர் நகம் கடித்துக் காத்திருந்தான். அந்த காபி ஷாப்பில் அவன் மட்டும் தான் தனியே இருந்தான். மற்ற எல்லாருமே ஆளாளுக்கு ஒரு துணையுடன் சில்மிஷக் கதைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஓரமாய் அமர்ந்திருந்த சிலர் இவனை ஒரு வேற்றுக் கிரக வாசியைப் போல பார்க்க, திவாகர் தனது நகம் கடிக்கும் வேலையை துரிதப்படுத்தினான்.

இன்னும் ரெண்டு வாரத்தில் கல்யாணம். நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்திருந்தது . வழக்கமாய் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கும் திவ்யாவின் குரலில் நேற்று ஏகப்பட்ட குழப்பமும் பதட்டமும்.

“திவாகர், நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்” திவ்யாவின் குரலில் கொஞ்சம் பதட்டம் இருந்தது.

“என்னாச்சு திவ்யா ? எனி பிராப்ளம் ? “

“எப்படி சொல்றதுன்னு தெரியல, ஆனா முக்கியமான விஷயம் தான். நேர்ல சொல்றேனே”

“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம். இனிமே என்ன தயக்கம் ? விஷயத்தைச் சொல்லு” திவாகரின் குரல் கொஞ்சம் பிசிறடித்தது.

“கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த விஷயத்தை உங்க கிட்டே சொல்லணும். அதனால தான் நாளைக்கு காபி ஷாப் வர சொல்றேன். வேற எதுவும் கேக்காதீங்க பிளீஸ்.” திவ்யா போனை வைத்து விட்டார்.

திவாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை. காபி ஷாப்பில் அரை மணி நேரம் முன்னாடியே வந்தவனுக்கு கடிக்கக் கூட போதுமான நகம் இல்லை. என்னவாயிருக்கும் ? திடீரென கல்யாணத்தை நிறுத்தப் போகிறாளா ? ஏதாச்சும் பழைய காதல், கீதல் ன்னு ஏதாச்சும் பூதம் கிளப்பப் போறாளா ? இல்லே வீட்ல ஏதாச்சும் பிரச்சினையா ? இந்தக் கல்யாணம் நடக்குமா ? திவாகரின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் நெல்லை எக்ஸ்பிரஸ் போல தடதடத்த போது திவ்யா வந்தாள்.

எதுவும் பேசாமல் திவாகரின் முன்னால் அமர்ந்த திவ்யாவிடம் கொஞ்சம் பதட்டம் இருந்தது. சென்னை வெயில் ஊற்றியிருந்த நெற்றி வியர்வையை கர்ச்சீப்புக்கு வலிக்காமல் துடைத்துக் கொண்டிருந்தவளை ஏறிட்டான்.

“என்ன திவ்யா ? நீ பாட்டுக்கு என்னென்னவோ சொல்லிட்டு போனை வெச்சுட்டே, இங்க மனுஷன் டென்ஷன்ல தூங்கவே இல்லை தெரியுமா ? சரி, இப்பவாச்சும் சொல்லு என்னாச்சு ?” திவாகர் கேட்டான்.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். பட், நீங்க அதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியாது. நாளைக்கு நமக்குள்ள இதனால எதுவும் பிரச்சினை வரக்கூடாதில்லையா ? அதான் …” திவ்யா இழுத்தாள்.

“எதுன்னாலும் தயங்காம சொல்லு திவ்யா… “

“எனக்கு ஒரு பிராப்ளம் இருக்கு..”

“பிராப்ளம் மீன்ஸ் ? வீட்லயா ? வெளியே யாராவது ?..”

“வீட்லயும் இல்ல, வெளியேயும் இல்ல… பிராப்ளத்துக்குக் காரணமும் நான் தான்”

“ஹே… திவ்யா, போதும். டைரக்டா விஷயத்துக்கு வா. உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையா ?” திவாகர் நேரடியாகவே கேட்டான்.

“என்ன திவாகர் இப்படி கேக்கறே…” அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவளுடைய கண்களின் சட்டென கண்ணீர் எட்டிப் பார்த்தது. கேட்கக் கூடாத எதையோ கேட்டுவிட்டோம் என திவாகர் சட்டென உதட்டைக் கடித்தான்.

‘ஐ ஆம் சாரி.. டென்ஷன்ல கேட்டுட்டேன்…. விஷயத்தைச் சொல்லு”

“எப்படி சொல்றதுன்னு தெரியல. ஐ ஆம் எ ஷாப்பஹாலிக் திவாகர்” திவ்யா சொல்லி விட்டு டேபிளையே பார்த்தாள்.

“அப்படின்னா ?…”

“எப்பவும் ஷாப்பிங்னு கிளம்பிப் போய் எதையாச்சும் வாங்கிட்டே இருப்பேன் திவாகர்” திவ்யா சீரியசாகச் சொல்ல திவாகர் சத்தமாய்ச் சிரித்தான்.

“ஹேய்… இதச் சொல்லவா இவ்ளோ பீடிகை போட்டே ? எல்லா பொண்ணுங்களுமே அப்படித் தான். தி நகர்ல போய் பாரு. ஷாப்பிங் பார்ட்டிங்க கைலயும், தலைலயும் மூட்டை முடிச்சோட போறதை.” திவாகர் சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தான்.

“திவாகர், பிளீஸ் பி சீரியஸ். “

“ஓ.கே. ஒகே…. நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோன்னு பயந்துட்டே இருந்தேன். நல்ல வேளை ….. ” திவாகர் சேரில் சாய்ந்து உட்கார்ந்தான், அவனுடைய முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“நான் ஏதாச்சும் நல்ல ஒரு டாக்டரைப் பாக்கலாம்ன்னு இருக்கேன்” திவ்யா சொன்னாள்.

” பாக்கலாமே ! நம்ம பூபதி அங்கிள் டாக்டர் தானே. அவர் கவுன்சிலிங் எல்லாம் பண்ணிட்டு இருக்காரு. அவர் கிட்டே பேசலாம்….. இதெல்லாம் சப்ப மேட்டர்மா…” திவாகர் உற்சாகமாய்ச் சொல்லிக் கொண்டே காபி ஆர்டர் செய்தான். திவ்யா இன்னும் பதட்டம் தணியாதவளாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாளே திவாகர் திவ்யாவையும் அழைத்துக் கொண்டு டாக்டர் பூபதியின் அறைக் கதவைத் தட்டினார்.

“வாப்பா திவாகர். கமின் திவ்யா. ஐ யாம் வெயிட்டிங் பார் யூ …” பூபதி சொல்லிக் கொண்டே எதிரே இருந்த இருக்கைகளைக் காட்டினார். அவர்களுக்குப் பின்னால் கண்ணாடிக் கதவு பெண்ணின் நாணம் போல மென்மையாய் மூடிக் கொண்டது.

“அங்கிள் நாங்க உங்களோட பிஸி டைமை வேஸ்ட் பண்ண விரும்பல. நேத்திக்கே நான் உங்க கிட்டே எல்லா மேட்டரையும் சொல்லிட்டேன். திவ்யாவோட குழப்பத்தை கிளியர் பண்ண வேண்டியது இனி உங்க பொறுப்பு.. ” திவாகர் சிரித்துக் கொண்டே சொல்ல திவ்யா வெட்கமாய் புன்னகைத்தாள். பூபதி பேச ஆரம்பித்தார்.

திவாகர், நீ நினைக்கிற மாதிரி இது ரொம்ப சின்ன விஷயமும் கிடையாது. அதே போல திவ்யா நினைக்கிற அளவுக்கு உலக மஹா பிரச்சினையும் கிடையாது. இது ஒரு வகையான அடிக்ஷன் அவ்வளவு தான். இதை ஓனியோ மேனியா ன்னு கூட சொல்லுவாங்க. உலகத்துல நூறு பேரை எடுத்துப் பாத்தா அதுல ஐந்து முதல் எட்டு பேருக்கு இந்த பிரச்சினை இருக்கு. ஷாப்பிங் பண்ணிட்டே இருக்கிற மைண்ட் செட்.

வீட்ல போய் பாத்தா அலமாரா முழுக்க எக்கச் சக்கம் புதிய புதிய துணி இருக்கும். ஒரு தடவை கூட போட்டிருக்க மாட்டாங்க. ஏன் அதுல தொங்கிட்டு இருக்கிற விலையைக் கூட கிழிச்சிருக்க மாட்டாங்க. நிறைய செருப்பு வாங்கி வெச்சிருப்பாங்க. கவரை கூட பிரிச்சுப் பாத்திருக்க மாட்டாங்க. சிலரு மேக்கப் பொருட்களா வாங்கிக் குவிப்பாங்க. இன்னும் சிலர் நகைகளா வாங்கி அடுக்குவாங்க. இதெல்லாம் இந்த சிக்கலோட அறிகுறிகள் தான்.

திவ்யா பயப்படறதில அர்த்தமிருக்கு. நாளைக்கு வீட்ல இதனால எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதில்லையா. இந்த சிக்கல் வந்தா பணமெல்லாம் கரஞ்சு போயிடும். அது வீட்ல சண்டையைக் கூட உண்டாக்கிடும் இல்லையா ?

திவ்யா ஆமோதிப்பது போல தலையாட்ட, பூபதி தொடர்ந்தார்.

இதுல அப்செட் ஆக ஒண்ணுமே இல்லை. இங்கிலாந்து இளவரசி டயானாவுக்கே இந்த நோய் உண்டு. எப்பவும் துணிமணிகளா வாங்கி அடுக்குவாங்க. அவங்களுக்குப் பணத்துக்குத் தான் பிரச்சினையே இல்லையே ! கேக்கணுமா ?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படைல கொஞ்சம் வித்தியாசம் உண்டு. ஆண்கள் மூட் அவுட் ஆகுதுன்னா போய் ஒரு தம் பத்த வைப்பாங்க. ரொம்ப டென்ஷனா இருந்தா ஒரு தம் அடிப்பாங்க. ரொம்ப சோகமா இருந்தா கொஞ்சம் தண்ணி அடிப்பாங்க. இந்த ஷாப்பஹாலிக்ஸ் விஷயமும் கிட்டத் தட்ட அது மாதிரி தான். இந்த பிரச்சினை உள்ளவங்க என்ன பண்ணுவாங்கன்னா, ஷாப்பிங் கிளம்பிடுவாங்க ! மூடு சரியில்லை, போரடிக்குது, மனசுக்கு கஷ்டமா இருக்கு இப்படி என்ன காரணம்னாலும் கடைக்கு ஓடிடுவாங்க.

பெண்களுக்கு மட்டுமில்ல, ஆண்களுக்கும் கூட இந்த நோய் உண்டு. அவங்க கடைல போய் எலக்ட்ரானிக் பொருட்களா வாங்கிக் குவிப்பாங்க. ஆனா 80 முதல் 90 சதவீதம் ஷாப்பஹாலிக்ஸும் பெண்கள் தான்.

“ஏப்ரல் பென்சன்” ன்னு ஒரு உளவியலார் அமெரிக்கால இருக்காரு. அவரு இதைப் பற்றி அருமையா ஒரு புக் எழுதியிருக்காரு. வாய்ப்புக் கிடைச்சா படிச்சுப் பாருங்க. அவர் இந்த பிரச்சினைக்கு எக்கச் சக்க உளவியல் காரணங்களைச் சொல்லியிருக்காரு. தனிமை, மன அழுத்தம், சின்ன வயது ஏக்கம், சின்ன வயது வெறுப்பு இப்படி காரணங்களோட லிஸ்ட் ரொம்பப் பெரிசு.

பூபதி சொல்லிக் கொண்டே போக திவாகர் இடைமறித்தான்.

அங்கிள், நான் கூட அடிக்கடி மொபைல் போன் மாத்துவேன். நிறைய டிவிடி வாங்கிப் போடுவேன். இதெல்லாம் ஷாப்பஹாலிக் அறிகுறிகளா ?

வாங்கறதையும், வாங்காம இருக்கிறதையும் நாமே தீர்மானிச்சா பிரச்சினையே இல்லை. அது நம்ம கட்டுப்பாட்டில இல்லேன்னா தான் சிக்கலே. நான் கொஞ்சம் கேள்வி கேக்கறேன். இதுக்கெல்லாம் ஆமான்னு பதில் சொன்னா, இந்த நோய் இருக்குன்னு அர்த்தம்.

மனசுக்கு ரொம்ப அழுத்தமா இருக்கு, டென்ஷனா இருக்குன்னு ஷாப்பிங் போவீங்களா ?

கடைக்குப் போய் கிடைச்சதையெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து, ஐயோ தெரியாம வாங்கிட்டேனே ன்னு புலம்புவீங்களா ?

கடைக்குப் போறீங்க, ஏதாச்சும் ஒரு பொருளைப் பாத்தா அதோட விலை என்னவா இருந்தாலும் வாங்கிட்டு வருவீங்களா ? முக்கியமா அந்தப் பொருள் நமக்குத் தேவையே இல்லேன்னா கூட !

வாங்கவே மாட்டேன்னு தீர்மானம் பண்ணிட்டு போற பொருளைக் கூட மனசைக் கட்டுப் படுத்த முடியாம வாங்கிட்டு வந்துடுவீங்களா ?

அலமாரா நிறைய நீங்க போடவே போடாத துணிங்க நிறைஞ்சு இருக்கா ? கணக்கு வழக்கே பாக்காம செலவு பண்ணி தீக்கறீங்களா ?

என்னால ஷாப்பிங் பண்றதை கண்ட்ரோல் பண்ண முடியலேன்னு நீங்களே நினைக்கிறீங்களா ?

இந்த கேள்விக்கெல்லாம் நீங்க “ஆமா” ன்னு பதில் சொன்னீங்கன்னா உங்களை அறியாமலேயே நீங்க ஒரு ஷாப்பஹாலிக் ஆ இருக்கீங்கன்னு அர்த்தம். இல்லேன்னா நோ பிராப்ளம்.

பூபதி சொல்லிவிட்டு திவ்யாவைப் பார்த்தாள். திவ்யாவின் குரல் மெலிதாய் ஒலித்தது

“நீங்க சொல்றது கரெக்ட் டாக்டர். ஏறக்குறைய எல்லாம் எனக்கு இருக்கு…” திவ்யா சொல்லி விட்டு திவாகரைப் பார்த்தாள். திவாகர் அமைதியாய் இருந்தான். திவாகரின் அந்த அமைதி திவ்யாவை கலங்க வைத்தது.

கவலையே படாதே திவ்யா. இதெல்லாம் மனசோட எண்ணம் தான். மனசை நாம கண்ட்ரோல் பண்ண முடியும். இதுல இருந்து வெளியே வரது பெரிய விஷயம் இல்லை. சில வழிகள் இருக்கு அதை நான் சொல்லித் தரேன்.

பர்ஸ்ல டெபிக் கார்ட், கிரடிட் கார்ட், செக் புக் எதுவும் இருக்கக் கூடாது. பொதுவா ஷாப்பிங் போகும்போ என்னென்ன வாங்கப் போறோமோ அதுக்குத் தேவையான பணம் மட்டும் தான் எடுத்திட்டு போகணும். அப்போ நாம நம்ம மனசைக் கட்டுப் படுத்த முடியாட்டா கூட நம்ம பர்ஸ் நம்மைக் கட்டுப் படுத்திடும்.

ஒரு பொருள் வாங்கணும்னு நினைச்சா உடனே வாங்கக் கூடாது. கடைக்காரர் கிட்டே வெச்சுக்கோங்க நாளைக்கு வந்து வாங்கிக்கறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பணும். ரெண்டு நாள் கழிச்சும் உங்களுக்கு அந்த பொருள் முக்கியம்ன்னு தோணினா, போய் வாங்கலாம்.

இந்த மாசம் இவ்ளோ தான் செலவு பண்ணுவேன்னு எழுதி வைக்கணும். அந்த பட்ஜெட்டைத் தாண்டி எதையுமே வாங்கக் கூடாது. அதுக்கு நீங்க உங்க ஹஸ்பெண்ட் டோட ஹெல்ப்பைக் கேக்கலாம்.

அதே போல நீங்க என்ன வாங்கினாலும் அதை உடனே ஒரு பேப்பர்ல எழுதி வைக்கணும். ஒரு கடலை மிட்டாய் வாங்கினா கூட எழுதுங்க. மாசக் கடைசில நீங்க என்னென்ன வாங்கியிருக்கீங்க, எவ்ளோ செலவு பண்ணியிருக்கீங்க, அதுல எவ்வளவு யூஸ் ஆகியிருக்கு ன்னு திரும்பிப் பாருங்க. உங்க மனசைக் கட்டுப்படுத்த இது ஒரு நல்ல வழி.

என்னென்ன மன நிலையில உங்களுக்கு ஷாப்பிங் போக தோணுதுன்னு கண்டு பிடிங்க. சோகமா, தனிமையா, குழப்பமா, வலியா, ஆனந்தமா, நிராகரிப்பா, கோபமா என்னன்னு கண்டு பிடிங்க. அந்த மனநிலை வரும்போ வேறு ஏதாவது அதை விட சுவாரஸ்யமான விஷயத்துல கவனத்தைச் செலுத்தலாம். உதாரணமா சினிமா பாக்கறது, நண்பர்களைப் போய் பாக்கறது, நாய்க்குட்டி கூட விளையாடறது இப்படி.

ஷாப்பிங் போகும்போ தனியா போறதை விட்டுடுங்க. யாரையாச்சும் கூட்டிட்டு ஷாப்பிங் போங்க. அது நீங்க வாங்கற வேகத்தைக் குறைக்கும்.

பூபதி சொல்லிக் கொண்டே போக, மிகவும் கவனமாய் மனதுக்குள் அனைத்தையும் குறித்துக் கொண்டாள் திவ்யா

எதுவுமே கவலைப் படாதீங்க. இப்படி ஒரு சிக்கல் இருக்கிங்கறதை நீங்க ரெண்டு பேரும் தெரிஞ்சுக்கிறது தான் முக்கியம். இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மனசை வேற விஷயங்களை ஈடுபடுத்தி குறைச்சுக்கலாம். பூபதி சொல்லி முடிக்க திவாகர் புன்னகைத்தான்.

திவாகரின் புன்னகையைப் பார்த்ததும் திவ்யாவின் மனசுக்குள்ளும் உற்சாகம் முளை விட்டது.

“ரொம்ப நன்றி அங்கிள்…. கிளம்பறோம்” சொல்லி விட்டு பூபதியைப் பார்த்தான் திவாகர்.

“கிளம்பறீங்களா ? ஏதாவது அவசர வேலை இருக்கா ? “

“ஆமா அங்கிள் ஷாப்பிங் போணும்” திவ்யா சொல்ல பூபதி திடுக்கிட்டார்.

“என்ன மறுபடியும் ஷாப்பிங்கா ?”

“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் இருக்குல்லயா, இன்னும் கல்யாண டிரஸ் கூட வாங்கல” திவாகர் சிரித்தான்.

“சிரிக்கிறதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு செலவாக்கற கணக்கையும் மறக்காம எழுதி வையுங்க” பூபதி சீரியஸாய் ஜோக்கடிக்க, சிரித்துக் கொண்டே கிளம்பினார்கள் திவாகரும், திவ்யாவும்

Thanks : Pennae Nee

TO VOTE…..

பெண்கள் ஸ்பெஷல் : குடும்பம், குழந்தை, வேலை…

தனது கைக்குழந்தையைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் தாய். குழந்தை எப்படியோ குப்புறப் படுத்துக் கொண்டது. தலையை நிமிர்த்த வலுவற்ற பச்சைக் குழந்தை அது. மூக்கு கட்டிலோடு ஒட்டிக் கொள்ள மூச்சுத் திணறி தவித்து, கடைசியில் தாய் வரும் முன் இறந்தே போனது அந்தக் குழந்தை. இது குவைத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

தனியே குழந்தையுடன் வாழும் தாயின் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பு எனலாம். எப்போதும் குழந்தையின் மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் தனியே செய்ய வேண்டும். சம்பாதிக்க வேண்டும். இப்படி நாலா பக்கமும் ஓடும் தாய்மார்களின் கஷ்டம் சொல்லி மாளாது.

வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிப்பதென்றால் பரவாயில்லை. எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையை ஓட்ட பணத்துக்கு எங்கே போவது ? “ஒருத்தர் மட்டும் வேலைக்கு போனா வாழ்க்கையை ஓட்ட முடியாது. ரெண்டு பேருமே வேலைக்கு போனா தான் சமாளிக்க முடியும்”. என மக்கள் குடும்பம் குடும்பமாக ஓடும் காலமல்லவா இது.

இத்தகைய அன்னையரின் முதல் சவால் இரண்டு குதிரைகளில் பயணிப்பது. இரண்டு வேறு திசைகளில் பயணிக்கும் குதிரைகளென்றால் என்ன செய்வது ? வாழ்க்கையை ஓட்ட வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம். குழந்தையை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் எனும் கவலை மறு புறம்.

குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குப் போவதே அன்னைக்கு மிகவும் கடினம். வீட்டிலும் விட முடியாதபடி சிறிய குழந்தையெனில் சொல்லவே வேண்டாம். ஒரு நல்ல “டே கேர்” செண்டரைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்கள் கேட்கும் மாதக் கட்டணம் இப்போதெல்லாம் இதயத்தை இரண்டு வினாடி நிறுத்திவிட்டுத் தான் துடிக்க வைக்கிறது. டே கேர் செண்டர்களின் கவனிப்புக்கும், அன்னையின் கவனிப்புக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது வேறு விஷயம்.

பாட்டி, தாத்தா, அப்பா என சந்தோசமான சூழலில் வளர வேண்டிய குழந்தை “காப்பகங்களில்” தனியே இருக்கும் போது ரொம்பவே சோர்ந்து விடுகிறது. இந்த மன மாற்றம் குழந்தையாய் இருக்கும் போது அதிகம் தெரிய வராது. வளர வளர குழந்தையின் குணாதிசயங்களில் வித்தியாசம் பளிச் என புலப்படும்.

அன்னையின் நிலமை சொல்லவே வேண்டாம். “மழலையின் விரல் விலக்கி அலுவலகம் விரையும் பொழுதுகள்” ரொம்பவே வருத்தமானது. அது வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு மட்டுமே புரிந்த சங்கதி. பெண்களின் மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணமே இது தான்.

அத்துடன் சிக்கல் முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. டேகேர் செண்டர்களும் இத்தனை மணி முதல், இத்தனை மணி வரை என இயங்குகின்றன. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் செய்யக்கூடிய வேலையைத் தான் தேட வேண்டும் எனும் கட்டாயம் பெண்ணுக்கு ! பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில், அருகிலேயே உள்ள ஏதோ ஒரு அலுவலகத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே வழக்கமாகி விடும்.

பாலூட்டும் அன்னையருக்கு பிரச்சினை இன்னும் அதிகம். குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே அலுவலகம் செல்லவேண்டுமென பெரும்பாலான நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கும். சிறிய குழந்தையை சரியாகப் பராமரிக்க அன்னையையோ, பாட்டியையோ தவிர யாரால் முடியும் ? ஆனால் என்ன செய்வது ? பராமரிப்பு நிலையங்களைத் தான் நாடவேண்டும். பாலூட்டாமல் அன்னையும், குடிக்காமல் குழந்தையும் உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றனர்.

நிறுவனங்களும் உஷாராக நிலமையைக் கவனிக்கும். இந்த வேலை உங்களுக்கு மிக முக்கியம், “வேலையை விட்டு நீங்கள் நிற்கப் போவதில்லை” என தெரிந்தால் அவ்வளவு தான். ஒரு அடிமை போல நடத்த ஆரம்பித்துவிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியது தான். கிடைக்கும் சம்பளமாவது கிடைக்கட்டும் எனும் மன நிலைக்குப் பெண்களைத் தள்ளி விட்டு நிறுவனங்கள் அமைதியாய் இருந்து விடும்.

இத்தனை சவால்களுக்கு மத்தியில் வாழும் பெண்களை சீண்டிப் பார்ப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் பலர் உண்டு. பெரும்பாலும் அலுவலக சக ஊழியர்களோ, தெரிந்தவர்களோ நண்பர்கள் எனும் போர்வையில் நெருங்குவார்கள். பாச பேச்சுகளோ, ஜெண்டில் மேன் தோரணையோ இவர்கள் உரையாடல்களில் தெறிக்கும். கடைசியில் எல்லாம் பாலியல் தேடல்களாய் முடிந்து விடும்.

வெளியூர் பயணங்கள் போன்றவையெல்லாம் தனியே குழந்தையைக் கவனிக்கும் பெண்களால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இதனால் மற்றவர்களை விட அதிக திறமை இருந்தாலும் கூட வேலையில் பிரகாசிக்க முடியாமல் போய்விடுகிறது. பெரும்பான்மையான இலட்சியங்களும், கனவுகளும் முடங்கி விடுகின்றன. இதனால் வேலையில் திருப்தியின்மையே பெரும்பாலும் இத்தகைய அன்னையரை ஆட்டிப் படைக்கிறது.

கூட்டுக் குடும்பமாக இல்லாமல் தன்னந்தனியாய் தாயிடம் குழந்தை வளரும் போது வேறு பல சிக்கல்களும் வந்து சேர்கின்றன. மன அழுத்தமும், தன்னம்பிக்கைக் குறைபாடும் குழந்தைகளிடம் வர இது காரணமாகிவிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதோ, தோல்விகளை அதிகமாய் சந்திப்பதோ சகஜம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வீட்டு வேலை, அலுவலக வேலை, கூடுதல் பொறுப்புணர்வு, ஆதரவு இன்மை இவையெல்லாம் அன்னையரை பிடிக்கும் சிக்கல்களில் சில என்கிறது அந்த ஆய்வு.

இங்கிலாந்தின் சில்ட்ரன்ஸ் சொசைடி வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதையே பிரதிபலிக்கிறது. தனியே வாழ்பவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி, மன அழுத்தம், நல்ல பழக்கமின்மை என தடுமாறுகிறார்களாம்.

அலுவலக நேரத்தில் வீட்டின் தேவைகள் நினைவில் புரள்வதும், வீட்டு நேரத்தில் அலுவலக பயம் வருவதும் என இந்த தனிமைப் பெண்களின் மன அழுத்தம் அளவிட முடியாதது. என்கிறது இன்னொரு ஆய்வு.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த சிக்கல் மிகவும் அதிகம். மண முறிவு, குடும்ப வாழ்வில் நம்பிக்கையின்மை இவையெல்லாம் பெண்களை தனியே வாழ வைத்து விடுகின்றன. சுமார் 27 விழுக்காடு குழந்தைகள் தாயிடம் வசிப்பவர்கள் தானாம். இந்த குடும்பங்களில் 40 சதவீதம் வறுமையில் வாடுவதாய் சொல்கிறது அந்த ஆய்வு.

பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் பெரும்பாலும் சிக்கல் எழுவதில்லை. வசதி படைத்த வீடுகளில் வளரும் பிள்ளைகள் நல்ல உயர் நிலையை அடைவார்கள் என்கிறார் இங்கிலாந்தின் மனநல பேராசிரியர் மைக்கேல் லேம்ப். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு இதை நிரூபித்திருக்கிறது.

வசதி இல்லாதவர்களுக்குத் தான் அதிக சிக்கல். குறைந்த வாடகையில் வீடு, குறைந்த விலையில் பொருட்கள் என பணமே இவர்களுடைய வாழ்க்கையின் பயணத்தை முடிவு செய்கிறது. இந்த போராட்டங்களின் விளைவாக, சுமார் 76 விழுக்காடு தாய்மார்கள் தேவையான 8 மணி நேர தூக்கத்தைப் பெறுவதேயில்லை என்கிறது மருத்துவக் கல்லூரி ஆய்வு ஒன்று.

இப்படியெல்லாம் கஷ்டத்தில் அல்லாடும் பெண்களுக்கு சமூகம் கை கொடுக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு மரியாதையும், பாதுகாப்பும், அங்கீகாரங்களும் மற்றவர்களை விட குறைவாகவே இருக்கிறது.

பெண்களால் குழந்தைகளைத் தனியே வளர்க்க முடியாது என்பதெல்லாம் சும்மா என்கிறது அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வு. தனியே வாழ்க்கையை நடத்தும் பெண்கள் குழந்தைகளை வெற்றிகரமான வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லமுடியும் என அடித்துச் சொல்கிறது இது. ஆனால் அதற்காக அவள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை !

அலுவலக மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் ஆள் இல்லாதது. அந்த அழுத்தங்களை குழந்தையிடம் காட்டாமல் இயல்பாய் இருப்பது. பொறுமையுடன் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது. நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் அனைத்தையும் எதிர்கொள்வது. என தனியே வாழும் அன்னையரின் ஒற்றை வாழ்க்கை ஓராயிரம் வித்தியாசமான பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது !

சேவியர்

நன்றி : பெண்ணே நீ