வசீகர உளவாளிகள்.

 

“ஏய்… நெசமாவா சொல்றே ? அவளா ? இருக்காதேப்பா”

உளவாளிகளின் உண்மை முகம் வெளியே வந்ததும் பதட்டத்துடன் ஓடி வரும் முதல் கேள்வி பெரும்பாலும் இது தான். காரணம் உளவாளிகள் ரொம்ப ரொம்ப கெட்டிக்காரர்கள். ஒருத்தர் உளவு வேலை செய்கிறார் என்பதைக் கண்டு பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும்.

“இந்தப் பூனையும் பால் குடிக்குமா” ரேஞ்சுக்கு அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். உளவு பார்க்கச் சென்ற இடத்தின் நம்பிக்கையைப் பெறும் வரை எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வெகு சாதாரணமாய் வலம் வருவார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் தெரியாது. சரவண பவனில் சாப்பிடுவார்கள், ரங்கநாதன் தெருவில் புடவை எடுப்பார்கள்.

அவர்களுடைய முதல் திட்டம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது தான். அந்த நம்பிக்கையைப் பெற சில வருடங்கள் ஆனால் கூட பொறுத்திருப்பார்கள். “பொறுத்தார் உளவு பார்ப்பார்” என்று புது பழமொழியே போடலாம் ! இவர்களை சாதாரணமாய் எடை போடக் கூடாது. ரொம்ப கூர்மையான அறிவு, அலர்ட் எல்லாம் இவர்களிடம் இருக்கும்.

இந்த உளவு வேலையில் எக்கச் சக்கமான பெண்கள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக உலகப் போர் காலத்தில் பெண் உளவாளிகளின் மோக வலையில் விழுந்து மோட்சம் போனவர்கள் எக்கச் சக்கம். ஒரு நாட்டுக்கு விசுவாசமாய் இருந்து கொண்டு, எதிரி நாட்டைக் கவிழ்ப்பது இவர்களுடைய வேலை.

அழகினாலும், வசீகரத்தினாலும் ஒரு பெண் நினைத்தால் ஆணை எளிதில் வீழ்த்தலாம் எனும் ஆதாம் கால தந்திரம் தான் இது. எதிரியின் கோட்டைக்குள் ரகசியமாய் புகுவார்கள். அங்குள்ள உயர் அதிகாரியின் பார்வையில் படுவார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாய் அவரை நெருங்கி, அவர் அன்புக்குப் பாத்திரமாகி, தேவைப்பட்டால் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளையும் பெறுவார்கள்.

இந்த நபரால் நமக்கு ஆபத்தே இல்லை. நம்பி கஜானா சாவியைக் கொடுக்கலாம் எனுமளவுக்கு நம்பிக்கை வளர்த்ததும் சுயரூபம் காட்டுவார்கள். ஆளைப் போட்டுத் தள்ளுவதோ. தகவல்களை அப்படியே கப்பலேற்றுவதோ என இவர்களுடைய பங்களிப்பை நம்பித் தான் நாடே காத்திருக்கும். நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்துவது, நம்ப வெச்சு கழுத்தறுப்பது இப்படியெல்லாம் வர்ணிக்கலாம் இந்தப் பணியை !

மாடா ஹரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இவருடைய இயற்பெயர் மார்கரீதா கீர்துரிடா, நெதலாந்து நாட்டுக்காரி. இவர் ஒரு செக்ஸ் சிம்பல். வசீகர வளைவுகளால் எவரையும் துவம்சம் செய்யும் அழகி. மேடைகளில் அரைகுறையாய் ஆடி புகழ் பெற்றவர். ஆடைகளை அவிழ்த்து வெறும் ஆபரணங்களுடன் இவர் ஆடும் ஆட்டம் அப்போது ஜிலீர் ரகம். அழகிய பெண் என்றால் எந்த ஆணுடனும் எளிதில் நெருங்கலாம் எனும் ஹார்மோன் விதி இவருக்கும் உதவியது. உளவு வேலைகளில் இறங்கினார்.

முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவருக்கு நிறைய ரசிகர்கள். யுத்தக் களத்தில் பலர் புரள, இவருடைய முத்தக் குளத்தில் சிலர் புரண்டனர். அந்த பட்டியலில் இராணுவத்தினர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுடன் என பலரும் உண்டு. எல்லோரிடமும் கப்ளிங்ஸ் விளையாடி விஷயத்தைக் கறந்தார். அதை அப்படியே பிரான்ஸ்க்கு அனுப்பினார்.

கடைசியில் 1917 பிப்ரவரி 13ம் நாள் பாரீஸில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். “நான் பிரான்ஸ் உளவாளிதான்” என மாடா சொன்னார். ஆனால் பிரான்ஸ் அதை மறுத்து “இவர் ஜெர்மன் உளவாளி” என பிளேட்டைத் திருப்பிப் போட்டது. ஜெர்மனிக்கு உளவு வேலை பார்த்ததாகவும், 50,000 படை வீரர்களின் சாவுக்குக் காரணமாய் இருந்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுட்டும் விழிச் சுடர் கடைசியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எடித் கிராவெல் என்றொரு உளவாளி இருந்தார். ஜெர்மன் நாட்டுக்காரியான இவர் இங்கிலாந்துக்கு உளவு வேலை பார்த்ததாகச் சொல்லி இவர் கைதானார். அவர் பார்த்து வந்ததோ யாரும் சந்தேகப்பட முடியாத நர்ஸ் வேலை. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இவர் 1915 அக்டோபர் 15ம் தியதி மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

அமெரிக்க உளவாளிகள் விர்ஜினியா ஹால், மரியா குளோ விச், இங்கிலாந்து உளவாளிகள் பிரின்சஸ் நூர், வயலட் ரெனி எலிசபெத் புஷ்ஷெல், இத்தாலிய உளவாளி பார்பெரா லாவெர்ஸ், பிரான்ஸ் உளவாளி ஏமி எலிசபெத் தோர்பே போன்றவர்கள் இந்த உளவு வேலைப் பிரபலங்கள். உளவாளிகள் பட்டியல் இத்துடன் தீர்ந்து விடவில்லை ஜூலியா மெக்வில்லியம்ஸ், மர்லேன், மெக்கிண்டோஷ், மேரி லூயிஸ், நான்சி கிரேஸ் என நீளும் இந்தப் பட்டியல் ரொம்பவே பெருசு. உலகப் போர் வரலாற்றில் பெண் உளவாளிகள் எந்த அளவுக்கு பரவியிருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறிய அறிமுகமாக இதைக் கொள்ளலாம்.

அதெல்லாம் அந்தக் காலம், இப்போ அப்படியெல்லாம் இல்லை என்று நினைக்கிறீர்களா ? இப்போதும் பெண் உளவாளிகள் தங்கள் வேலையைக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சமீபத்தில் அப்படி ஒரு வேலையைச் செய்து வசமாக மாட்டியிருக்கிறார் மாதுரி குப்தா எனும் 53 வயதான பெண். இஸ்லாமாபாத்தில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரக அதிகாரி. ஐ.பி.எஸ் படித்தவர். இவர் இந்தியாவின் ரகசியங்களை விற்றிருப்பதோ பரம்பரைப் பகை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு !

பாகிஸ்தானில் உள்நாட்டு உளவுப் பிரிவு அதிகாரியான முடாசர் ராணாவுடன் “நெருக்கமானார்”. எல்லாம் பிஸினஸ் நெருக்கம் தான். நெருக்கத்தை வேண்டுமென்றே உருவாக்கி, ரகசியங்களை விற்று கல்லாவை நிரப்பியிருக்கிறார் மாதுரி. இந்திய உளவுப் பிரிவுகளுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகளைப் பிரதியெடுத்து ‘ஜஸ்ட் லைக் தேட்’ ராணாவிடம் கொடுத்து வந்திருக்கிறார்.

இந்த உளவு வேலைக்காக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ  இவருக்கு இறைத்ததோ கோடிக்கணக்கான ரூபாய்கள். எல்லாம் பாகிஸ்தான் வங்கிகளில் பத்திரமாய் இருக்கின்றன. அவ்வப்போது தனது இந்திய வங்கிகளுக்கும் அந்தப் பணத்தை அனுப்பி தேசப்பற்றைக் காப்பாற்றுகிறார் ! 

உளவாளிகள் பொறுமை சாலிகள். எல்லாவற்றிலும் கட்சிதமாக சந்தேகம் வராதபடி நடந்து கொள்வார்கள். அப்படின்னா அவர்களைப் பிடிக்கச் செல்பவர்கள் அதைவிட புத்திசாலிகளாக, பொறுமை சாலிகளாக இருக்கணும் இல்லையா ?

அப்படித்தான் நடந்து கொண்டது இந்திய அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்தேக வலையில் விழுந்தது பட்சி. ஆனால் சந்தேகத்தைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் வெகு இயல்பாய் கண்காணித்து வந்தனர். இரண்டு ஆண்டுகள் நிழல் போல் தொடர்ந்து, அவர் உளவாளி என்பதை உறுதிப்படுத்தினார்கள். அதன்பின் “வேலை விஷயமாக” என்று சொல்லி டெல்லி அலுவலகம் வர வைத்தனர். அங்கே வந்த பின்பு தான் அவருக்குத் தான் மாட்டிக் கொண்டோம் எனும் விஷயமே புரிந்தது.

“என்னைப் போயி உளவாளின்னு சொல்றீங்களே, இஸ்லாமாபாத் ரா பிரிவு தலைவர் ஷர்மாவே ஒரு பாகிஸ்தான் உளவாளி தான்பா” எனக் கூறி ஒரு நியூக்ளியர் திடுக்கிடலையும் உருவாக்கினார் இவர். அப்புறமென்ன அவர் மீதும் விசாரணை நடக்கிறது.

இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலான உளவு வேலைகளை இயந்திரங்களே கவனித்துக் கொள்கின்றன. ஒரு சின்ன உதாரணம் சொல்றேனே, டிராகன் பிளை எக்ஸ்.6 ஒரு உளவுக் கருவி. சின்ன தும்பி போல இருக்கும். எதிரியின் கோட்டைக்குள் பறந்து திரிந்து அங்கே நடப்பதைப் படம் பிடித்து அனுப்பும். அங்கே நடக்கும் உரையாடல்களையும் அட்சர சுத்தமாய் காது கடத்தும். இதே போல எக்கச் சக்க உளவு டெக்னாலஜி சமாச்சாரங்களும் இன்று நாடுகளிடம் இருக்கின்றன.

இந்த நவீனங்களையெல்லாம் தாண்டியும் உளவு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள். அவர்களுடைய பொறுமையும், அழகும், வசீகரமும் ஆண்களுடைய அறிவுச் சிந்தனைக்கு இடையே ஒரு தற்காலிகத் திரையையாவது விரித்து விடுகிறது. அதில் ஆண்கள் ஏமாந்து விடும் வினாடியில் உளவு வேலை சக்சஸ் !

என்ன தான் ராஜதந்திரம் என வர்ணித்தாலும், இந்த வேலை செய்தெல்லாம் வாழ்க்கையை ஓட்டுவது பெண்மையைப் பெருமைப்படுத்துவது ஆகுமா ? என்பதை பெண்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க….