இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு டிஜிடல் புற்று நோய் போல விரைந்து பரவுகிறது. ஸ்மார்ட் போன்கள் செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன. தனது செல்ஃபிகளுக்குக் கிடைக்கும் லைக்களும், பார்வைகளும் இளசுகளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்றன.
பொது இடங்களில், சுற்றுலாத் தளங்களில், நண்பர் சந்திப்புகளில் என தொடங்கி இந்த செல்ஃபி தனியறைகள் வரை நீள்கிறது. போனைக் கையில் எடுத்து விதவிதமான முகபாவங்களுடன் தங்களைக் கிளிக்கிக் கொள்ளும் கலாச்சாரம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
“கேமரால தன்னைத் தானே போட்டோ எடுக்கிறதுல என்ன பிரச்சினை” என்பது தான் பெரும்பாலானவர்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கும். ஆனால் அது அத்தனை எளிதில் கடந்து போகக் கூடிய விஷயம் அல்ல என்கிறார் உளவியலார் டேவிட் வேல். அதற்கு அவர் “பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர் (Body dysmorphic disordeர்) நோயை சுட்டிக் காட்டுகிறார்.
பி.டி.டி என்பது “தான் அழகாய் இல்லை, தனக்கு ஏதோ ஒரு குறை இருக்கிறது என ஒருவர் நம்புவது. தன்னுடைய முகம் சரியாக இல்லை, தலை முடி சரியாக இல்லை, மூக்கு கொஞ்சம் சப்பை, காது கொஞ்சம் பெரிசு என்றெல்லாம் தன்னைப் பற்றி தாழ்வாய்க் கருதிக் கொள்வது. இந்த பாதிப்பு செல்போனின் செல்ஃபி எடுத்துக் குவிப்பவர்களிடம் தான் அதிகமாய் இருக்கிறது என்கிறார் அவர்.
இந்த குறைபாடு இருப்பவர்கள் தொடர்ந்து தங்களை செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்புறம் அதை எடிட்டரில் போட்டு சரி செய்து பார்ப்பார்கள், மீண்டும் எடுப்பார்கள், மீண்டும் டச் அப் செய்வார்கள். இப்படியே அவர்களுடைய வாழ்க்கை ஓடும். இது நாளொன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்பவர்கள் எனும் நிலையிலிருந்து தொடர்ந்து மணிக்கணக்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்பவர்கள் எனும் நிலை வரைக்கும் நீள்கிறது.
“டானி பௌமேன்” எனும் பதின் வயது மாணவர் இந்த பாதிப்பின் உச்சத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தினமும் பத்து மணி நேரம் செல்ஃபி எடுக்கவே செலவழிப்பாராம். ஒரு பக்கா போட்டோ எடுத்தே தீருவேன் என தொடர்ந்து படம் பிடித்துப் பிடித்து பள்ளிக்கூடத்துக்கே போவதை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் இருநாள் அல்ல, ஆறு மாத காலங்கள் இப்படியே போயிருக்கிறது. இப்படியே 12 கிலோ எடையும் குறைந்திருக்கிறது. ஆனாலும் அவருக்கு “கட்சிதமான செல்ஃபி” சிக்கவில்லை !
கடைசியில் ஒருநாள் “ஒரு மிகச் சரியான செல்ஃபி கிடைக்கவே கிடைக்காது” எனும் முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த முடிவு அவரை தற்கொலை முயற்சிக்கு இட்டுச் செல்ல, பதறிப்போன பெற்றோர் அவரை உளவியலார் டேவிட் வேலிடம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் “பி.டி.டி” நோயாளிகளில், 66% பேர் செல்ஃபி பாதிப்புடன் இருக்கிறார்கள் என்கிறார் அவர். செல்ஃபி எடுக்க வேண்டும் என உள்ளுக்குள் பரபரவென மனம் அடித்துக் கொள்வது உளவியல் பாதிப்பு என அடித்துச் சொல்கிறார் அவர்.
செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களிடம் உறவுச் சிக்கல்களும் எழுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. “டேகர்ஸ் டிலைட்” எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிறது. அதிகமாய் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவோர்கள் சக மனித உறவுகளில் பலவீனமாய் இருப்பார்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.
அதிகமாக செல்ஃபி எடுக்கும் மனநிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.(APA). இதை அவர்கள் செல்ஃபிட்டீஸ் என பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த செல்ஃபிட்டிஸ் கள் மூன்று வகைப்படுகின்றனர்.
சிலஒரு நாள் குறைந்த பட்சம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, அவர்கள் ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் பார்டர்லைன் செல்ஃபிட்டிஸ் !
சிலர் குறைந்த பட்சம் மூன்று செல்ஃபிக்களை எடுத்து, மூன்றையுமே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து எத்தனை லைக் வருகிறது, யார் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு அக்யூட் செல்ஃபிட்ஸ் என பெயர்.
சீரியஸ் வகை செஃபிட்டிஸ் க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் ! இவர்கள் எப்போதும் செல்ஃபி எடுத்து அதை அப்படியே சமூக வலைத்தளங்கள், குழுக்களில் பதிவு செய்து கொண்டே இருப்பார்கள்.
இதையெல்லாம் படித்து விட்டு செல்ஃபி எடுப்பதே நோய் என்று பதட்டப்படத் தேவையில்லை. அளவுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் நஞ்சு என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்த செல்ஃபி பழக்கம் ஏதோ கடந்த சில ஆண்டுகளில் தோன்றியது என்று தான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த செல்பி ஆரம்பித்து 175 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தான் வியப்பூட்டும் விஷயம். !
ஆச்சரியமாக இருக்கிறதா !! அது தான் உண்மை. முதன் முதலாக செல்ஃபி எடுக்கப்பட்ட ஆண்டு 1839. எடுத்தவர் பெயர் ராபர்ட் கர்னேலியஸ்
Week 2
உலகின் முதல் செல்ஃபி எடுத்தவர் எனும் பெருமை இப்போதைக்கு ராபர்ட் கர்னேலியஸிடம் தான் இருக்கிறது. 1839ம் ஆண்டு அவர் முதல் செல்ஃபியை எடுத்தார். கேமராவை ஸ்டான்டில் நிற்க வைத்துவிட்டு அதன் முன்பக்க லென்ஸ் மூடியைத் திறந்தார். பிறகு ஓடிப் போய் கேமராவின் முன்னால் அசையாமல் ஒரு நிமிடம் நின்றார். பிறகு மீண்டும் போய் கேமராவின் கதவை மூடினார். பின்னர் அந்த பிலிமை டெவலப் செய்து பார்த்தபோது கிடைத்தது தான் உலகின் முதல் செல்ஃபி !
ஆனால் முதன் முதலில் செல்ஃபி எனும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் எனும் பெருமை அவருக்குக் கிடைக்கவில்லை. அது நாதன் ஹோப் என்பவருக்குக் கிடைத்தது. 2002ம் ஆண்டு அவருக்கு ஒரு சின்ன விபத்து. விபத்தில் அடிபட்ட உதடுகளோடு கட்டிலில் படுத்திருந்த அவர் தனது அடிபட்ட உதடைப் படம்பிடித்தார். அதை இணையத்தில் போட்டார். “ஃபோகஸ் சரியா இல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க, இது ஒரு செல்ஃபி, அதான் காரணம்” என்று ஒரு வாசகமும் எழுதினார். ஆனால் சத்தியமாக அந்த வார்த்தை இவ்வளவு தூரம் பிரபலமாகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வார்த்தை பிரபலமாக ஆரம்பித்ததும் அதை ஆங்கில அகராதியிலும் சேர்த்தார்கள். “ஒருவர் டிஜிடல் கேமரா மூலமாகவோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்பக்க கேமரா போன்ற எதன் மூலமாகவோ, தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்” என இதற்கு ஒரு விளக்கத்தையும் அகராதி கொண்டிருக்கிறது.
2012ம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகை, “2012ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று செல்ஃபி என்றது”. 2013ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அகராதி “செல்ஃபியே இந்த ஆண்டின் புகழ்பெற்ற வார்த்தை” என அறிவித்தது.
ஆஸ்திரேலிய நபர் ஒருவர் முதன் முதலில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதால் இந்த வார்த்தையின் மூலம் ஆஸ்திரேலியா என்று பதிவானது. 10 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எடுக்கும் புகைப்படங்களில் 30 சதவீதம் புகைப்படங்கள் செல்ஃபி வகையறாவில் சேர்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.
செல்ஃபியின் புகழ் பரவுவதைக் கேள்விப்பட்டதும் செல்ஃபி என்றொரு ஆப் பயன்பாட்டுக்கு வந்தது. முன்பக்க கேமரா மூலமாக எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமே பகிர முடியும் என்பது இதன் சிறப்பம்சம். ஒரு செல்ஃபிக்கு கமென்ட் கொடுக்க விரும்புபவர்கள், இன்னொரு செல்ஃபியைத் தான் கொடுக்க முடியும். வேறு எதையும் எழுத முடியாது. இந்த ஆப்ளிகேஷன் பதின் வயதினரிடையே தீயாய்ப் பரவியது !
செல்ஃபி இப்படி இளசுகளின் இதயங்களில் பற்றி எரிந்து கொண்டிருந்த போது குரங்கு எடுத்த செல்ஃபி ஒன்று கடந்த ஆண்டு மிகப்பெரிய பேசுபொருளாய் இருந்தது. புகைப்படக்காரர் டேவிட் ஸ்லேட்டருக்குச் சொந்தமான கேமராவில் பதிவான அந்த படத்தை, இணைய தளங்கள் பதிவு செய்திருந்தன. இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இதனால் தனக்கு பத்தாயிரம் பவுண்ட் நஷ்டம் என வழக்குப் பதிவு செய்தார் ஸ்லேட்டர்.
நீதிமன்றமோ இந்த வழக்கை விசித்திரமாய்ப் பார்த்தது. கடைசியில் அலசி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்கள். “விலங்குகள் எடுக்கும் புகைப்படத்துக்கு மனிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது”. அப்படி விலங்கு செல்ஃபியும் உலகப் புகழ் பெற்றது சுவாரஸ்யமான கதை.
எது எப்படியோ சமூக வலைத்தளங்களுக்குச் சரியான தீனி போட்டுக்கொண்டிருப்பவை இந்த செல்ஃபிக்கள் தான். இன்ஸ்டாக்ராம் எனும் சமூக வலைத்தளம் புகைப்படங்களை மையமாகக் கொண்டு இயங்குவது. அதில் 5.3 கோடி புகைப்படங்கள் செல்ஃபி வகையறாவில் குவிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களிலும் செல்ஃபி படங்களும், குறிப்புகளும் எக்கச்சக்கம்.
86 வது ஆஸ்கர் விருது விழாவில் கலைஞர்களுடன் எலன் டிஜெனர்ஸ் எடுத்த செல்ஃபி ஒன்று உலகிலேயே அதிக முறை ரீடுவிட் செய்யப்பட்ட புகைப்படம் எனும் பெயரைப் பெற்றது. 3.3 மில்லியன் முறை அது ரீடுவிட் செய்யப்பட்டது !
இளசுகளின் பிரியத்துக்குரிய விஷயம் எனும் நிலையிலிருந்து செல்ஃபி மற்ற நிலைகளுக்கும் வெகு விரைவில் பரவியிருப்பதையே இது காட்டுகிறது. நெல்சன் மண்டேலாவின் நினைவிடத்தில் உலகத் தலைவர்களுடன் ஒபாமா எடுத்த புகைப்படம், தனது அலுவலக அதிகாரிகளுடன் சுவிஸ் அரசு எடுத்த புகைப்படம் என செல்ஃபியின் தளங்கள் பல இடங்களுக்கும் பரவிவிட்டன. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் சமீபத்தில் போப் ஆண்டவரும் செல்ஃபிக்குள் சிக்கிக் கொண்டது வியப்புச் செய்தியாய்ப் பேசப்பட்டது !
பக்கத்து வீட்டுப் பையன் முதல், போப் ஆண்டவர் வரை பாரபட்சமில்லாமல் செல்ஃபி முகங்களை கேமராக்கள் பதிவு செய்திருக்கின்றன. 47 சதவீதம் பெரியவர்கள் தங்களை செல்ஃபி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்கிறது புள்ளி விவரம் ஒன்று ! அதிலும் ஆண்களை விட செல்ஃபி மோகம் பெண்களைத் தான் அதிகம் பிடித்திருக்கிறதாம்.
பிலிப்பைன்ஸ் நகரம் தான் செல்ஃபி எடுப்பவர்களால் நிரம்பி வழிகிறதாம். உலகிலேயே நம்பர் 1 செல்ஃபி சிட்டி எனும் பெயர் அதற்குக் கிடைத்திருக்கிறது.
செல்ஃபியின் பயன்பாடும், சுவாரஸ்யங்களும் உலகெங்கும் பரவியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள் என்பது பதறடிக்கும் செய்தியாகும்.
Week 3
செல்ஃபி என்றாலே சுவாரஸ்யம் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதில் உயிரைப் பறிக்கும் ஆபத்தும் நிரம்பியிருக்கிறது என்பது தான் பதறடிக்கும் செய்தி.
செல்ஃபிக்கு ரசிகர்களாக மாறியிருப்பவர்கள் பெரும்பாலும் இள வயதினர் தான். அவர்களுடைய இள இரத்தம் துடிப்பானது. அதனால் தங்கள் செல்ஃபியில் அதிரடியான விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் துடிக்கிறார்கள். பல வேளைகளில் அது ஆபத்தானதாக முடிந்து விடுகிறது.
ஸெனியா பதினேழு வயதான பதின்பருவப் பெண். செல்ஃபி மோகம் பிடித்து இழுக்க 30 அடி உயர ரெயில்வே பாலத்தில் ஏறினாள். ஒரு அழகான செல்ஃபி எடுத்தாள். துரதிர்ஷ்டம் அவளுடைய காலை வழுக்கி விட கீழே விழுந்தவளுக்கு 1500 வாட்ஸ் மின்சார வயர் எமனாய் மாறியது. ஆபத்தான செல்ஃபி அவளுடைய ஆயுளை முடித்து வைத்தது ! செல்ஃபிக்குப் பலியான பலரில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே.
காட்டுக்குள்ளே ஆபத்தான விலங்குகளைப் பார்க்கும்போது அதைப் பின்னணியில் விட்டு செல்ஃபி எடுப்பது, டொர்னாடோ சுழற்காற்று சுழற்றியடிக்கும் போது அதன் முன்னால் நின்று செல்ஃபி எடுப்பது, வேகமாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று படம் எடுப்பது, உயரமான இடங்களில் கரணம் தப்பினால் மரணம் எனும் சூழலில் படம் புடிப்பது, எரிமலைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டே கிளிக்குவது என செல்ஃபியை வைத்து ஆபத்தை அழைப்பது இன்றைக்குப் பரவி வருகிறது.
காரணம் அதற்குக் கிடைக்கும் ஆதரவு. சமூக வலைத்தளங்களில் பகிரும்போது ஆயிரக்கணக்கான லைக் வாங்க வேண்டும் என்பதற்காகவே உயிரைப் பணயம் வைத்து இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
இப்படி எடுக்கப்படும் செல்ஃபிக்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்படுவதும் உண்டு என்பது இன்னும் ஊக்கம் ஊட்டுகிறது. ரியோடி ஜெனீரே இயேசு சிலையின் தலையின் நின்று லீ தாம்சன் எடுத்த புகைப்படம், போர்விமானத்திலிருந்து விமானி ஒருவர் எடுத்த செல்ஃபி, சர்வதேச வான்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் எடுத்த செல்ஃபி, சவுத் வங்கி உச்சியில் தொங்கியபடி கிங்ஸ்டன் எடுத்த செல்பி என பதறடிக்கும் செல்ஃபிக்களின் பட்டியல் மிகப் பெரிது.
மொபைல்களில் எடுக்கப்படும் புகைப்படங்களால் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என எச்சரிக்கின்றது அமெரிக்க காவல்துறை. உங்களுடைய ஒரு செல்ஃபியை வைத்துக் கொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை ஒருவர் துல்லியமாய்க் கண்டுபிடித்துவிடும் ஆபத்து உண்டு.
உதாரணமாக நீங்கள் உங்கள் நான்கு தோழியருடன் கண்காணாத காட்டுப் பகுதியில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து தோழியரும் சேர்ந்து ஒரு செல்ஃபி கிளிக்குகிறீர்கள். பின்னணியில் எதுவுமே இல்லை. அதை முகநூலில் போடுகிறீர்கள். அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஒருவர் உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட முடியுமாம். அதெப்படி ?
ஸ்மார்ட் போன்களில் ஜி.பி.எஸ் பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும். அது உங்களுடைய இருப்பிடத்தை உங்கள் புகைப்படங்களில் ரகசியக் குறியீடுகளாகப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளும். இதை ஜியோ டேக் என்பார்கள். அந்தப் புகைப்படத்தை ஒருவர் டவுன்லோட் செய்து அதற்கென்றே இருக்கும் சில மென்பொருட்களில் இயக்கும் போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட விலாசம் கிடைத்து விடுகிறது. சில இணைய தளங்கள் கூட இந்த டீகோடிங் வேலையைச் செய்து தருகின்றன.
“வீட்ல தனியா போரடிக்குது” என நீங்கள் ஒரு செல்ஃபி போட்டால் உங்கள் விலாசத்தைக் கண்டுபிடித்து ஒருவர் உங்களை தொந்தரவு செய்யும் சாத்தியம் உண்டு என்பது புரிகிறதல்லவா? சமூக விரோத செயல்களைச் செய்பவர்களுக்கு இத்தகைய தகவல்கள் வசீகர அழைப்புகளல்லவா. இனிமேல் அவர்கள் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை ஃபாலோ செய்யத் தேவையில்லை, உங்கள் சமூக வலைத்தள புகைப்படங்களை கவனித்து வந்தாலே போதும், உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும். எனவே ஜி.பி.எஸ் “ஆஃப்” செய்து வைத்து விட்டு மட்டுமே புகைப்படங்கள் எடுங்கள் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தகைய ஆபத்துகளைப் பட்டியலிட்டாலும், மருத்துவத்துறையில் இதை ஒரு பாசிடிவ் விஷயமாகப் பார்ப்பவர்களும் உண்டு. குறிப்பாக “செல்ஃபி வீடியோ” வை மருத்துவத்துக்காகப் பயன்படுத்தலாம் என்கின்றனர். உதாரணமாக ஒருவருடைய பேச்சு, அசைவு போன்றவற்றைப் பதிவு செய்து அதை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி அதன்மூலம் ஒருவருடைய குறைபாடுகளைக் கண்டுபிடித்துச் சரிசெய்யும் முறை இப்போது வளர்ந்து வருகிறது.
இதையே பேச்சுக்கலையை வளர்க்க விரும்புபவர்களும் பயன்படுத்தலாம். குறிப்பாக ஒருவருடைய மொழி உச்சரிப்பு, சத்தம், தொனி, தெளிவு போன்ற அனைத்தையும் செல்ஃபி வீடியோவில் பதிவு செய்து அதன் மூலம் ஒருவர் தனது பேச்சை எந்த விதத்தில் மாற்ற வேண்டும் என்பதைக் கண்டு பிடித்து சரி செய்ய முடியும்.
இப்போதெல்லாம் வசதியாக செல்ஃபி எடுக்க “செல்ஃபி ஸ்டிக்” கிடைக்கிறது. நீளமான குச்சி போன்ற கருவியில் போனை மாட்டி விட்டு செல்ஃபி எடுக்கலாம். அந்த குச்சியின் முனையில் இருக்கும் ரிமோட் பட்டனை அமுக்கினால் செல்ஃபி ரெடி. இதன் மூலம் குழுவினராக செல்ஃபி எடுப்பது எளிதாகிவிடுகிறது. 2000 ரஃபிக்கள் நியூயார்க் நகரில் குழுமியிருந்தபோது எடுக்கப்பட்ட மாபெரும் செல்ஃபி மிகப்பிரபலம். அதற்காக அவர்கள் உபயோகப்படுத்திய செல்ஃபி குச்சியின் நீளம் முப்பது அடி !!!
செல்ஃபியின் மூலம் பெரிய ஒரு கொலை வழக்கு கூட கண்டுபிடிக்கப்பட்டது ! தனது நண்பனையே கொலை செய்து, அந்த உடலுடனே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட ஒரு சைக்கோ கொலையாளி சிக்கினான். அவன் அந்த செல்ஃபி எடுக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை சிக்காமலேயே போயிருப்பான்.
இப்படி குற்றம் செய்து விட்டு செல்ஃபி எடுத்துச் சிக்கிய பலரின் சுவாரஸ்யக் கதைகள் காவல்துறை அறிக்கைகளில் இருக்கின்றன.
Week :4
செல்ஃபி எடுப்பது முன் காலத்தில் மிகப்பெரிய சவாலான விஷயமாய் இருந்தது. புகைப்படக் கலைக்கு முன்பு தன்னைத் தானே படம் வரைந்து கொள்வதை வான்கோ உட்பட பல ஓவியர்கள் செய்திருந்தனர். இவற்றை ஒருவகையில் செல்ஃபி ஓவியம் என வகைப்படுத்தலாம்.
காலங்கள் கடந்து, கேமராக்களின் அறிமுகம் வந்தபின் அவை அவ்வப்போது ஆங்காங்கே நிகழ ஆரம்பித்தன. உடனடி பிரிண்ட் போட்டுத் தரும் போலராய்ட் கேமராக்கள் வந்தபின் செல்ஃபிகள் எடுப்பது கொஞ்சம் எளிதாக மாறிப் போனது.
இன்றைய மொபைல் போன் கேமராக்கள் இந்த செல்ஃபி எடுப்பதை மிகவும் எளிதாக்கியதோடு மட்டுமல்லாமல், சகட்டு மேனிக்கு செல்ஃபி எடுத்துத் தள்ளுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. அதுவும் செல்போனில் முன்பக்கக் கேமரா வந்தபின் செல்ஃபிக்கள் சிறகுகட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கின்றன.
செல்ஃபிக்களின் அதிகரிப்பு அதை அதிகமாய்ப் பயன்படுத்துபவர்களிடையே அதீத தற்பெருமை, தன்னைப் பற்றி மிக உயர்வாய் நினைத்தல், அடுத்தவர்களை விட தான் உயர்ந்தவன் எனும் நினைப்பு போன்றவை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் தெரிவிக்கிறார். இதை ஆங்கிலத்தில் நர்ஸிசிசம் (Narcissism) என்கின்றனர்.
இதன் நேர் எதிராக, செல்ஃபிகளை எடுத்து எடுத்து தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்ளும் ‘செல்ஃப் அப்ஜக்டிஃபிகேஷன்’ பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. தான் அழகாக இல்லை எனும் எண்ணம் பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்பது தான் பொதுப்படையான சிந்தனை. ஆனால் அந்த எண்ணம் ஆண்களுக்குள்ளும் குறைவின்றி இருக்கிறது என்பதை இவருடைய ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. இது பால் வேறுபாடின்றி அனைவரையும் மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.
செல்ஃபி பழக்கம் பெண்களிடம் அதிகமாய் இருந்தாலும் ஆண்கள் இதில் சற்றும் விதிவிலக்கல்ல என நிரூபிப்பதற்காக அவர் ஆண்களை மட்டுமே வைத்து இந்த ஆய்வை நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
கையில் கேமரா வைத்திருக்கும் பதின் வயதுப் இளம் பெண்களில் 91% பேர் ஏற்கனவே ஒரு செல்ஃபியாவது எடுத்திருப்பார்கள் என்கிறது பி.இ.டபிள்யூ ஆய்வு ஒன்று. தாங்கள் எடுக்கும் தங்களுடைய செல்ஃபியை ரசிக்கும் பெண்களில் 53% பேர் பிறர் தங்களை எடுக்கும் செல்ஃபிகளை அவ்வளவாய் ரசிப்பதில்லையாம்.
தாங்கள் அழகாய் இல்லை என செல்ஃபியின் மூலம் முடிவுகட்டிவிடும் வெளிநாட்டுப் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் சரணடைகிறார்கள். தங்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் செல்ஃபியைக் காரணம் காட்டுவதாகவும் 30% அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜரி பதிவு செய்திருக்கிறது.
இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ, இணைய தளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும் போது அகப்படும் உங்களுடைய புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முடிவாக ஒரு சில விஷயங்களை மனதில் கொண்டால் செல்ஃபி அனுபவம் இனிமையாய் அமையும்.
சமூக வலைத்தளங்களில் செல்ஃபி போடுவதொன்றும் சாவான பாவமில்லை, ஆனால் அந்தப் புகைப்படங்களோ, அதற்கு வருகின்ற விமர்சனங்களோ தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது. அந்த மன உறுதி இல்லை என தோன்றும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியே இருப்பது பாதுகாப்பானது !
சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவை, நம் நண்பர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள் எனும் தவறான எண்ணம் வேண்டவே வேண்டாம். ரகசியம் காத்தல் நம் கடமை. எனவே தேவையற்ற செல்ஃபிகளைத் தவிர்ப்பது வெகு அவசியம்.
ஜிபிஎஸ்/லொக்கேஷன் ஆப்ஷனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஆஃப் பண்ணியே வைத்திருங்கள்.
ஃபேஸ் புக் லைக்குகளோ, டுவிட்டர் ரீடுவிட்களோ நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அதற்கு ஆசைப்பட்டு விபரீதமான செல்ஃபிகளுக்குள் நுழையாதீர்கள்.
எதுவும் அளவோடு இருந்தால் தான் அழகானது. செல்ஃபியும் விதிவிலக்கல்ல. எனவே அதிக நேரத்தை செல்ஃபிக்காய் செலவழிக்க வேண்டாம்.
நம்முடைய குணாதிசயங்களையும், நம்முடைய வெற்றிகளையும் நிர்ணயிக்கும் காரணிகளில் ‘செல்ஃபியும் இருக்கிறது’ என்பது மட்டுமே நாம் கவனமுடன் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம். அதற்காக செல்ஃபி எடுப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்கள் என தீர்ப்பிடுவதோ, குறைத்து மதிப்பிடுவதோ தவறானது ! நம் கையில் இருக்கும் தொழில்நுட்பத்தின் ஆயிரக்கணக்கான சாவிகளில் செல்ஃபியும் ஒன்று, அதை வைத்துக் கொண்டு சரியான பூட்டைத் திறந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை !
ஃ
( Thanks Daily thanthi, Computer Jaalam )
You must be logged in to post a comment.