பைபிள் கதைகள் 62 (தினத்தந்தி) : எசேக்கியேல்

“பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும்” எசேக்கியேல் 18: 20

இறைவாக்கினர்களில் மிகவும் முக்கியமானவர் எசேக்கியேல். எசேக்கியேல் என்றால், “ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்” என்பது பொருள். கடவுள் அருளிய ஞானத்தினால் எசேக்கியேல் உரைத்த தீர்க்கத் தரிசனங்களும், கண்ட காட்சிகளும் வாளின் கூர்மையுடன் சீறிப்பாய்ந்தன. ஆலயங்களின் தூய்மை, இதயத்தின் தூய்மை, மனம் திரும்புதலின் தேவை, கடின மனதின் விளைவு என பல செய்திகள் இவரிடமிருந்து இறைவாக்காய் வெளிவந்தன.

தனது முப்பதாவது வயதில் குருவாக பயிற்சி பெற்றவர் எசேக்கியேல்., இறைவனின் அழைப்பினால் தீர்க்கத் தரிசியாக உருமாறுகிறார். கிமு 593 முதல் கிமு 571 வரை இவர் இறைவாக்கு உரைத்திருக்கிறார் என்கிறது வரலாறு.

எசேக்கியேல் தனது தீர்க்கத்தரிசன வாழ்க்கையின் துவக்கத்திலேயே விண்ணகத்தையும், கடவுளின் மாட்சியையும் காட்சியாய்க் கண்டார். கடவுள் அவரை இஸ்ரவேல் மக்களிடையே இறைவாக்கு உரைக்க அனுப்பினார். ஒரு  ஏட்டுச் சுருளை எசேக்கியேலிடம் கொடுத்து கடவுள் சாப்பிடச் சொன்னார். அதை அவர் உண்டார். இறைவனின் வார்த்தையை உள்வாங்கி, ஜீரணித்து, அதை நாவால் பிரகடனம் செய்வதையே இது குறிப்பிடுகிறது.

வழிவிலகிப் போன இஸ்ரயேல் மக்களை மீண்டும் தன்னிடம் கொண்டு வரவேண்டும் எனும் பேராவல் கடவுளிடம் இருப்பதை இவரது வார்த்தைகள் நெகிழ்ச்சியோடு பதிவு செய்கின்றன.

இன்னொரு முறை இஸ்ர‌வேலுக்கு எதிரான‌ இறைவாக்குக்காக‌ வித்தியாச‌மான‌ ஒரு க‌ட்ட‌ளையைக் க‌ட‌வுள் கொடுக்கிறார்.

“மழிக்கும் கத்தியைப் போன்று கருக்கலான ஒரு வாளை எடுத்து, அதைக்கொண்டு உன் தலையையும் தாடியையும் மழித்துக்கொள். ஒரு தராசை எடுத்து அந்த முடியைப் பங்கிடு. அதில் மூன்றிலொரு பங்கை  நகரின் நடுவில் நெருப்பினால் சுட்டெரி: மூன்றிலொரு பங்கை நகரைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போடு: மூன்றில் ஒரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு. ஏனெனில் நான் அவர்களை உருவிய வாளுடன் பின்தொடர்வேன். அதில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனைகளில் முடிந்து வை. பிறகு அதில் இன்னும் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயிலிட்டுச் சுட்டெரி. அதனினின்று இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் எதிராகத் தீ புறப்படும்.” என்றார் க‌ட‌வுள்.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் க‌ட‌வுளின் வ‌ழியை விட்டு வில‌கி, சிலை வ‌ழிபாடு, அருவ‌ருப்பான‌ ந‌ட‌த்தை என‌ திரிந்த‌தால் க‌ட‌வுள் இப்ப‌டி எச்ச‌ரிக்கை விடுக்கிறார்.

“நெருப்புப் போன்ற ஒருவரின் சாயலைக் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும், அவரது இடைக்கு மேற்புறம் பளபளக்கும் வெண்கலம் போன்றும் ஒளிர்வதைக் கண்டேன். அவர் கைபோன்று தெரிந்த ஒன்றை நீட்டி என் தலை முடியைப் பிடித்தார்.” என தொடங்கி ஒரு காட்சியை எசேக்கியேல் விவரிக்கிறார். க‌ட‌வுளின் ம‌க்க‌ளிடையே ப‌லுகியிருக்கும் சிலை வ‌ழிபாட்டைக் க‌ட‌வுள் எசேக்கியேலுக்கு இப்ப‌டி காண்பிக்கிறார்.

இன்னொரு காட்சி மிக‌வும் சுவார‌ஸ்ய‌மான‌து.

“ஆண்டவர் எசேக்கியேலைத் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.

” மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா? ”

” ஆண்டவரே! உமக்குத் தெரியுமே”

“நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.” கடவுள் சொல்ல, எசேக்கியேல் அப்படியே செய்தார்.

அப்போது எலும்புகள் உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது.அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. எசேக்கியேல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை. நான்கு காற்றுகளிலிருந்தும் உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர். என சொல் ” கடவுள் சொன்னார். எசேக்கியேல் அப்படியே செய்தார். அப்போது அந்த எலும்புக் கூடுகளின் கூட்டம் மாபெரும் படைத்திரள் போல உயிர் பெற்று, காலூன்றி நின்றன.

இந்த காட்சி இஸ்ரயேல் மக்களைக் குறிக்கும். அவர்கள் எலும்புகளாகிப் போனார்கள். நாங்கள் உலர்ந்து விட்டோம், நம்பிக்கை இழந்தோம் என்கின்றனர். கல்லறைகளிலில் இருந்தும் வாழ்வைக் கொடுக்கவும், இழந்த அவர்கள் நாட்டைக் கொடுக்கவும் என்னால் இயலும். என்றார் கடவுள்.

“தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்” இன்றைய சூழலில், நாம் நமது பாவ‌ வ‌ழிக‌ளை விட்டு வில‌கி இறைவ‌னிட‌ம் திரும்ப‌ வேண்டும் என்ப‌தையே எசேக்கியேலின் வாழ்க்கையும், வார்த்தைக‌ளும் போதிக்கின்ற‌ன‌.