பைபிள் மாந்தர்கள் 57 (தினத்தந்தி) எஸ்ரா

எஸ்ரா ஒரு குரு. இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், ஆன்மீகத் தரத்தையும் உயர்த்தப் பாடுபட்டவர். இவருடைய காலத்தில் தான் இறையாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்கள் நடைபெற்றன. குருக்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. அவர்களுக்கான சட்டதிட்டங்களை வகுத்து அரசியல், ஆன்மீகப் பொறுப்புகளை குருக்களிடமே ஒப்படைத்தவர் அவர்.

பாரசீக மன்னன் சைரஸ் பாபிலோனியாவைக் கைப்பற்றிய ஆண்டு கி.மு.538. வந்ததும் முதல் வேலையாக இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை கொடுத்து, யூதாவுக்குச் செல்லுங்கள் என அனுப்பியும் வைத்தார்.

அவர்களை வெறும‌னே அனுப்ப‌வில்லை. அனுப்பும்போது “இஸ்ர‌யேல‌ர்க‌ளின் க‌ட‌வுளே உண்மைக் க‌ட‌வுள். அவ‌ர்க‌ள் இஸ்ர‌யேலுக்குத் திரும்பிச் சென்று க‌ட‌வுளின் ஆல‌ய‌த்தைக் க‌ட்டி எழுப்ப‌ட்டும். அத‌ற்கு ம‌க்க‌ள் அனைவ‌ரும் த‌ன்னார்வ‌க் காணிக்கைக‌ளை அளிக்க‌ட்டும் என‌ அறிக்கையும் விட்டார்’

ம‌ன்ன‌னின் வேண்டுகோளை ஏற்று, ம‌க்க‌ள் வெள்ளி, பொன், கால்ந‌டைக‌ள், பொருட்க‌ள், விலையுய‌ர்ந்த‌ பாத்திர‌ங்க‌ள் என‌ எல்லாவ‌ற்றையும் கொடுத்து உத‌வின‌ர். பெரும் பொக்கிஷ‌ங்க‌ளோடு இஸ்ரயேல் மக்களின் ஒரு பகுதியினர் அப்போது நாடு திரும்பினார். அவர்களுக்கு செருபாவேல் தலைமை தாங்கினார்.

எருசலேம் தேவாலயம் அப்போது அழிந்த நிலையில் இருந்தது. திரும்பி வந்தவர்கள் எருசலேம் தேவாலயத்தைக் கட்டியெழுப்பி புதிதாக்கத் துவங்கினார்கள். ஆனால் அந்த‌ ப‌ணி முழுமைய‌டைய‌வில்லை. ஆண்ட‌வ‌ரின் கோயில் க‌ட்டி எழுப்ப‌ முடியாத‌ப‌டி எதிர்ப்பாள‌ர்க‌ள் எழுந்தார்க‌ள். சைர‌சு ஆட்சிகால‌ம் முதல் தாரிபு ம‌ன்ன‌னின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு  வ‌ரைக்கும் இந்த‌ ஆல‌ய‌ம் க‌ட்டும் ப‌ணி த‌டைப‌ட்டுக் கொண்டே இருந்த‌து.

செரூபாவேலும் தலைவர்களும் மீண்டும் ஒரு முறை கூடி ஆலயம் கட்டும் வேலையை ஆரம்பிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். ஆலயம் கட்டும் வேலை மீண்டும் தொடங்கியது. எதிர்ப்பவர்கள் அமைதி காக்கவில்லை. விஷயம் மன்னன் தாரிபு காதுகளுக்கு எட்டியது.

தாரிபு விசாரித்தான்.

இஸ்ரவேலர்கள் அவர்களுடைய ஆண்டவருக்கு ஆலயம் கட்டுகிறார்கள். இது ஆண்டவரின் வாக்கு என்கின்றனர். சைரஸ் மன்னன் இதற்கான அனுமதியைக் கொடுத்ததாகவும் சொல்கின்றனர். அனுமதியோடு சேர்த்து செல்வங்களையும் கொடுத்ததாக அவர்கள் கூறித் திரிகின்றனர். எனும் செய்தி  மன்னனிடம் கூறப்பட்டது.

தாரிபு யோசித்தார். இந்த செய்திகளெல்லாம் உண்மையா என்பதைக் கண்டறிய வேண்டும் என ஆணையிட்டான். பாபிலோனின் கருவூலம் சோதனையிடப் பட்டது. ஏட்டுச் சுருள்கள் இருந்த அறை புரட்டப்பட்டது. கடைசியில் அந்த முக்கியமான ஏட்டுச் சுருள் அவர்களுடைய கண்களுக்குத் தட்டுப்பட்டது.

உண்மை தான் ! மன்னன் கட்டளையிட்டிருக்கிறான். ஆலயத்தைக் கட்டுவதற்கான ஐடியாக்களையும் வழங்கியிருக்கிறான். செல்வங்களையும் கொடுத்திருக்கிறான் எனும் செய்திகளெல்லாம் தாரிபு மன்னனுக்குத் தெரிய வந்தது.

ஆலயம் கட்டும் வேலையைத் தடைசெய்ய வேண்டாம், அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கட்டளையிட்டான் மன்னன். இஸ்ரயேல் மக்கள் மகிழ்ந்தனர். தாரியு மன்னனின் ஆறாவது ஆட்சியாண்டில் ஆலயம் கட்டும் வேலை முடிவடைந்தது. நுறு காளைகள்,இருநூறு செம்மரிக் கடாக்கள், நானூறு குட்டிகள் என பெரும் பலி நிகழ்ந்து, ஆலயம் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. பாஸ்கா விழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பாபிலோனிலிருந்து இஸ்ரயேல் மக்களில் இன்னொரு பகுதியினர் திரும்பி யூதாவுக்கு வந்தனர். அப்போது பாபிலோனை அர்த்தசஸ்தா ஆட்சி செய்து வந்தார். அவர்களுக்குத் தலைமையேறு வந்தவர் தான் எஸ்ரா. மன்னர் அர்த்தசஸ்தா எஸ்ராவுக்கு வாழ்த்து கூறி அவருக்கு ஏராளமான செல்வங்களைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்தது.  எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

அக்கால‌த்தில் இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் வேற்று இன‌ப் பெண்ணை ம‌ண‌ப்ப‌து இறைவ‌னுக்கு எதிரான‌ செய‌லாக‌ப் பார்க்க‌ப் ப‌ட்ட‌து. அது க‌ட‌வுளின் நேர‌டிக் கோப‌த்துக்கு ஆளாவ‌தைப் போன்ற‌து. எஸ்ராவின் கால‌த்தில் இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் அந்த‌ப் பாவ‌த்தைச் செய்து வ‌ந்த‌ன‌ர். எஸ்ரா ம‌ன‌ம் க‌ல‌ங்கினார். ம‌க்க‌ளிட‌ம் வ‌ந்து க‌ட‌வுளின் வார்த்தைக‌ளைச் சொல்லி எச்ச‌ரிக்கையும் விடுத்தார். ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வ‌ழியை விட்டு வில‌குவ‌தாக‌ எஸ்ராவிட‌ம் உறுதிமொழி கொடுத்தன‌ர்.

எஸ்ராவின் நூல் சில முக்கியமான விஷயங்களை சொல்லித் தருகிறது. !

எரேமியா இறைவாக்கின‌ர் எருச‌லேமின் அழிவை மிக‌ துல்லிய‌மாக‌ இத‌ற்கு முன்பே இறைவாக்கு உரைத்திருந்தார். எழுப‌து ஆண்டுக‌ளுக்குப் பின்ன‌ர் அது மீண்டும் க‌ட்டு எழுப்ப‌ப்ப‌டும் என்றும் அவ‌ர் உரைத்திருந்தார். அந்த‌ இறைவாக்கு நிறைவேறிய‌து. அந்த காலத்திலேயே, ஆல‌ய‌ம் க‌ட்ட‌ ம‌க்க‌ள் உத‌வினார்க‌ள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.

எஸ்ராவின் இறை நேச‌மும், ம‌க்க‌ளை வழிநடத்தும் திற‌மையும், க‌ட‌வுளுக்கு முன்னால் க‌சிந்துருகித் த‌ன்னைத் தாழ்த்தும் பாங்கும், ம‌க்க‌ளை ஒன்றிணைக்கும் வ‌ல்ல‌மையும் நாம் க‌ற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ சில‌ உய‌ர்ந்த‌  விஷ‌ய‌ங்க‌ளாகும்.