ஆகதன் : விமர்சனம் ! நாணமில்லே சத்யராஜ் ?

சத்தியராஜின் முதல் மலையாளப் படமான ஆகதன் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மலையாள இயக்குனர்களில் எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான கமல் இயக்கியிருக்கும் படம் இது. பல அற்புதமான படங்களை மலையாள உலகுக்கு நல்கியவர் இவர். சரி, இவருடைய ஆகதன் கதை என்ன ?

காஷ்மீரின் ஒரு துயர இரவு. ஆனந்தமான அம்மா, அப்பா, அக்கா என வாழ்ந்த சிறுவனுடைய கண் முன்னாலேயே தீவிரவாதிகள் பெற்றோரைக் கொன்று விடுகிறார்கள். சகோதரியையும், சிறுவனையும் காப்பாற்றும் இராணுவ அதிகாரி சகோதரியைக் கெடுத்து கோமா நிலைக்குத் தள்ளி விடுகிறார். பல ஆண்டுகள் நினைவு திரும்பாமலேயே மருத்துவமனையில் கிடந்து அப்படியே இறந்து விடுகிறாள் சகோதரி. சிறுவன் வளர்ந்து பெரியவனானபின் அந்த இராணுவ அதிகாரியைத் தேடிப் பிடித்து பழி தீர்ப்பது தான் கதை ! ( நெசமாவே இதான் கதை ! )

மஞ்ஞு மழக்காட்டில் எனத் தொடக்கும் மனதை உருக்கும் பாடலுடன் தொடங்குகிறது படம். ஒரு இனிமையான குடும்பத்தின் அழகிய நினைவுகளுடன் அஜயன் வின்செண்டின் ஒளிப்பதிவில் ஸ்தம்பிக்க வைக்கும் அழகிய காட்சிகளுமாய் படம் நகர்கிறது. படம் முழுக்க ஒளிப்பதிவும், அவ்ஸேப்பச்சனின் இசையும் இதமாகப் பயணிக்கின்றன.

திலீப் ஹீரோ. அவருடைய அக்மார்க் நகைச்சுவைகள் ஏதும் படத்தில் இல்லை என்பது பெரும் குறை. அவருக்கு சீரியஸ் கதாபாத்திரம். அவ்வப்போது லேப்டாப்பை திறந்து குடும்ப போட்டோவைப் பார்த்துக் கொள்கிறார். (முன்பெல்லாம் பர்சிலிருந்து ஒரு நைந்து போன படத்தை எடுத்துப் பார்ப்பார்கள். இது ஹை பட்ஜெட் படமாம் அதனால ஒரு லேப்டாப் ! ) ஹீரோயின் சார்மி. திலீப்புடன் நெருக்கமாகவும், டி ஷர்ட்களுடன் இறுக்கமாகவும் வந்து கொடுத்த காசுக்கு நடித்துவிட்டுப் போயிருக்கிறார்.

சரி, அப்போ சத்தியராஜ் ! அவர் தான் ஆர்மி ஜெனரல். ஹீரோவின் டீன் ஏஜ் சகோதரியை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கற்பழித்துக் கொன்ற ஆர்மி ஜெனரல். பெற்றோரின் பிணங்களுக்கு இடையே, சிறுவனின் கண் முன்னாலேயே ஒரு பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றியவர். இப்படி ஒரு நச் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காகத் தான் ரஜினியின் சிவாஜியில் கூட நடிக்கமாட்டேன் என்று சொன்னீங்களா சத்யராஜ் சார் ?

ரிட்டையர்ட் இராணுவ ஜெனரலுக்குரிய கம்பீரம் சத்தியராஜிடம் இருக்கிறது. ஆனால் அவருக்குக் கொடுத்திருக்கும் டப்பிங், ஐயோ… ஒட்டாமல் உரசாமல் எங்கோ தொங்குகிறது. குறிப்பாக சத்தியராஜின் குரலைக் கேட்டவர்களுக்கு டப்பிங் குரல் கொஞ்சமும் ரசிக்கப் போவதில்லை. என்ன பண்ண சத்தியராஜுக்கு தான் மலையாளம் வராதே. “ஞானும் திலீபும் பிரண்டாச்சி” எனுமளவுக்கு தான் அவருடைய மலையாளம் என்பதை அவருடைய ஒரு பேட்டியிலேயே சொல்லி விட்டார்.

படத்தில் உறுத்தலாய் எழுந்த இன்னொரு சம்பவம், படத்தின் துவக்கக் காட்சிகளில் ஒன்று. காட்சியில் வண்டியில் அடிபட்ட மூதாட்டி ஒருத்தியை ஹீரோவும் ஹீரோயினும் காப்பாற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார்கள். உடனே ஒரு காட்டுவாசிக் கூட்டம் ஓடி வருகிறது “அம்மா…” என்று கத்தியபடி. “அது தமிழர் கூட்டம். கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல், காப்பாற்றிக் கொண்டு வந்த ஹீரோவிடம் இருந்த பணத்தையெல்லாம் பிடுங்கிவிட்டு, ஹீரோயினை தரக்குறைவாய் நடத்தி விட்டுப் போய் விடுகிறார்கள்.

“இப்படியும் மனுஷங்க, உதவி செய்யப் போனா…” என ஹீரோ சலித்துக் கொள்கிறார். வழக்கமாகவே ஒரு தமிழனை வில்லனாக்கி அவனை செமையாக உதைத்து தமிழ் சமூகத்தையே உதைத்துத் தள்ளி விட்டது போல பெருமிதப்படுபவை தான் பெரும்பாலான மலையாள சினிமாக்கள். இந்தப் படம் ஒரு படி மேலே போய், வில்லன்கள் மட்டுமல்ல, தமிழர்கள் எல்லோருமே படிப்பறிவும், நன்றியும் இல்லாத காட்டுவாசிகள் என்றும் பறைசாற்றியிருக்கிறது. சாதாரண ஒரு மலையாளப் படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்திருந்தால் மலையாளிகளுடைய வெவரமில்லாத்தனம் என ஜஸ்ட் லைக் தேட் போயிருக்க முடியும். ஆனால் தன்மானத் தமிழன் சத்யராஜ் நடித்திருக்கும் முதல் மலையாளப் படத்திலேயே இப்படியென்றால் ?

சத்யராஜ் இந்தக் காட்சியைப் பார்க்கவில்லையா ? அல்லது “ஐயா கமல், தமிழர்கள் இப்படி கிடையாது. படிப்பறிவு உள்ளவங்க தான். நன்றிக்குப் பெயர் போனவங்க தான்” ன்னு சொல்றதுக்கு ஆர்மி ஆபீசருக்கு தெம்பு வரவில்லையா ? அதை விட்டு விட்டு “கமல் சாரே.. நிங்ங்அள் சூப்பர் சீன் வெச்சாச்சி ” என்று கைதட்டிப் பாராட்டி விட்டு வரத் தான் முடிந்திருக்கிறதா ? அப்பவே மைல்டா டவுட் ஆனேன்யா..

தனது மலையாளப் படத்தின் கதாபாத்திரத்தைப் பற்றி ஏகத்துக்குச் சிலாகித்துப் பேசினார் சத்தியராஜ் ! என்ன ? இதுவா சூப்பர் கதாபாத்திரம் ? தமிழ் சினிமாவில் பார்க்காத சத்தியராஜ் இங்கே எங்கே ? ! மலையாளிகள் பாராட்டும் கடைசிக் காட்சி கூட வால்டர் வெற்றிவேலில் பார்த்ததை விட கம்மி தான் !

இன்னொரு காட்சியில் லயோலா கல்லூரியில் படித்த ஒரு தமிழர் வருவார். அவரை “சாப்பாட்டு ராமன்” என கிண்டலடிப்பார்கள் ! இப்படி படம் முழுக்க தமிழ் சார்ந்த விஷயங்கள் எல்லாமே கொச்சைப்படுத்தப்பட்டிருக்கின்றன, சத்யராஜ் உட்பட ! ஆகதன் சத்யராஜின் முதல் மலையாளப் படம் என்பது எல்லோருக்கும் தெரியும். கடைசி மலையாளப் படமா என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் !

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

கமல் வெளியிட்ட வண்ணங்களின் வாழ்க்கை

வண்ணங்களின் வாழ்க்கை : சுந்தரபுத்தன்

ஓவியம் என்பது நடந்து செல்லும் புள்ளி – என்பார்கள். ஓவியங்கள் இல்லாத வாழ்க்கை நினைவுகளின் ஏழ்கடல் தாண்டியது. இயற்கை அனைத்தையுமே தூரிகையாகவும் வண்ணங்களாகவும் பாவிக்கிறது. வானத்தின் மேலும், பூமியின் கீழும் கூட ஓவியங்கள் நிரம்பி வழிகின்றன.

இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஓவியங்களுக்கென எப்போதுமே சிறப்பு இடம் ஒன்று உண்டு. மேற்குலகில் கோலோச்சிய ஓவியர்களில் சட்டென ரபேல், டிசியன், ரூபன்ஸ், லியானார்டோ போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். வான்கோவை மறக்க முடியுமா ? எனினும் எல்லா ஓவியர்களுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையில் நிராகரிக்கப்பட்டிருந்தவர்கள் எனும் வரலாறு வலியூட்டுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஓவியர்கள் வீர சந்தானம், புகழேந்தி, கதவு சந்தானம், விஸ்வம்,  வித்யாசங்கர், ஜெயராமன், மனோகர் என சமகாலப் பட்டியல் நீள்கிறது. பலருக்கும் தமிழக ஓவியர்கள் பற்றிய சரியான அறிமுகம் இல்லை. காரணம், காலம் காலமாக ஓவியம் என்பது பிற இலக்கியங்களைத் தாங்கிப் பிடிக்கத் தான் தமிழில் பயன்படுகிறதே தவிர, பிற இலக்கியங்கள் ஓவியத்தைத் தாங்கிப் பிடிப்பது குதிரைக் கொம்பு.

சுந்தரபுத்தன் அவர்களுடைய “வண்ணங்களின் வாழ்க்கை” நூல் ஓவியர்களைக் கௌரவப் படுத்த தமிழில் வந்திருக்கும் ஒரு அத்தி பூத்த நிகழ்ச்சி. இந்த அத்தி சட்டென பூத்து விடவில்லை. அவர் புதிய பார்வையில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வோர் இதழிலிலும் ஒவ்வோர் பூவாகப் பூத்தது. வீர சந்தானம் முதல், மார்கு ரத்தினராஜ் வரையிலான ஐம்பதுக்கு மேற்பட்ட ஓவியர்களை இவர் சந்தித்து உரையாடி அவர்களுடைய அனுபவ செழுமைகளையும், ஓவியப் பார்வைகளையும் இலக்கியமாக்கியிருக்கிறார்.

ஓவியர்களின் வாழ்க்கை, அவர்களுடைய ஆனந்தத்தின் துலாக்கோல், வண்ணங்களின் ஸ்பரிசங்களால் அவர்கள் அடையும் பரவசம், ஓவியத்தின் உள்முக தரிசனம் என அவர்களுடைய் பார்வைகள் கவிதைகளாய் நீள்கின்றன.

தோழமை பூபதி இதை ஒரு முழு தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். பூபதி அவர்கள் இந்த நூலைக் கொண்டு வந்திருப்பதற்கு இன்னொரு காரணம், அவருக்கும் ஓவியத்துக்கும் இருக்கும் ஆத்மார்த்த பிணைப்பு. இன்னும் விளக்க, ஓவியர் புகழேந்தியின் தம்பி தான் இவர் எனும் சுருக்க அறிமுகம் தரலாம்.

அமெரிக்காவில் பணியிடங்களில் தங்கள் குழந்தைகளின் கிறுக்கல் ஓவியங்களை அதிகபட்ச அன்போது சுவரில் தொங்கவிட்டு அழகுபார்க்கும் பெற்றோர்கள் அதிகம். ஓவியத்தின் மீதான ஈடுபாடு அல்ல அதன் காரணம். ஓவியர்களின் மீதான அபரிமிதமான பாசமே. அத்தகைய ஒரு பாசமும், கரிசனையும், அங்கீகாரமும் நமது ஓவியர்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனும் ஒரு சிந்தனை கீற்றை இந்த வண்ணங்களின் வாழ்க்கை நூல் பற்ற வைக்கிறது

தோழமை வெளியீடு, 94443-02967

விலை : 150/-

ஆகதன் : சத்தியராஜின் முதல் மலையாளப் படம் !

மலையாளக் கடலில் குதித்திருக்கிறார் சத்யராஜ். படத்தின் பெயர் ஆகதன். ஹீரோ திலீப். மலையாளத்தின் வசூல் ஹீரோவான திலீப்பிற்கு இந்த ஆண்டு வெளியாகப் போகும் முதல் படம் இது என்பதால் கேரளாவில் இந்த படத்துக்கு தனி அடையாளமே கிடைத்திருக்கிறது. சத்தியராஜுக்கு இதில் வெயிட்டான வேடமாம். ஹரேந்திர நாத வர்மா எனும் ரிட்டயர்ட் மிலிட்டரி ஆபீசர் அவர்.  சாப்ட்வேர் காரரான கவுதம் மேனன் (திலீப்) குடும்பம் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்து விடுகிறது. அப்போது டியூட்டியில் இருந்தவர் நம்ம சத்யராஜ். அப்புறம் என்ன கதையை அப்படியே பில்டப் பண்ணிக்கோங்க. பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிவரப்போகும் இந்தப் படத்திற்குப் பின் சத்யராஜின் நக்கலை மலையாளத்திலும் அடிக்கடிக் கேட்கலாம் போலிருக்கிறது.

இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல், சார்மியின் மறு பிரவேசம். வினயனின் காட்டுசெம்பாக்கம் படத்தில் நடித்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் ( அதுதான் எப்பவுமே காணோமே ) என்று ஓடியவர் இப்போது மீண்டு(ம்) வந்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு மலையாள சேனலில் மலபார் போலீஸ் தமிழில் பேட்டிக் கொண்டிருந்தார் சத்தியராஜ். “ஏன் ரஜினி கூட சிவாஜி படத்தில் நடிக்கவில்லை” எனும் கேள்விக்கு (இன்னுமாடா இந்தக் கேள்வியை விடவில்லை  ? ), “அது என்ன வில்லன் ? ரொம்ப சாதாரண வில்லன். எனக்கு வெயிட் இல்லாத கேரக்டர் ஆனதால் தான் சிவாஜியில் நடிக்கவில்லை.” என்று மலையாளத்தில் சொல்வதாக நினைத்து தமிழில் பேசிக்கொண்டிருந்தார் ஐயா. ஏற்கனவே எக்கச் சக்க மலையாளப் படங்களை டப் செய்து வெற்றியும் தோல்வியும் கொடுத்தவர் தான் சத்தியராஜ். அதிலும் சித்ரம் படத்தை எங்கிருந்தோ வந்தான் என ந(க)டித்ததை சித்ரம் ரசிகர்கள் வாழ்நாளில் மற்ற்ற்ற்றக்கவே மாட்டார்கள்.

என்னுடைய நடிப்பின் அதிகபட்ச சாதனை பெரியார் வேடத்தில் நடித்தது தான் என்றவர், கூடவே, இலக்கணம் மாறாமல் திலீப் ஒரு சூப்பர் ஹீரோ. அவருடைய பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது. அவரு சினிமாலே எப்படி நடிக்குதோ அப்படியே இருந்தாச்சி. ரொம்ப ஜாலியா இருந்தாச்சி. 25 வருஷம் பழகின பிரண்ட் மாதிரி பேசியாச்சி. என்றெல்லாம் ஆச்சிக் கொண்டிருந்தார்.

பொதுவாகவே மலையாளப் படம் என்றால் அதில் ஒரு தமிழன் கேரக்டர் வரும். ஹீரோவின் கையால் அடிபட்டு “பாண்டி” என அழைக்கப்பட்டு, “இது ஸ்தலம் வேறயா…’ என அவமானப்படுத்தப்பட்டு மல்லூக்களின் கரகோஷத்தைப் பெறும். இப்படியாவது தமிழனை அவமானப்படுத்தி விடுவோமே எனும் மலையாளியின் ஆழ்மன காழ்ப்புணர்ச்சி என அதை உளவியல் பூர்வமாகச் சொல்லலாம். அப்படி ஏதும் இந்தப் படத்தில் நிகழாது என சத்திய(ராஜ்)மாய் நம்புவோம் !

ஆகதம் படத்தின் கிளைமேக்ஸ் போல இதுவரை நான் ஒரு கிளைமேக்ஸைப் பார்த்ததே இல்லை என்று ஏகத்துக்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சத்யராஜ். இந்தப் படத்தை இயக்குவது மலையாள இயக்குனர் கமல் என்பதால் சத்யராஜின் பேச்சை கொஞ்சமாச்சும் நம்பலாம் என நினைக்கிறேன். கமலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? உள்ளடக்கம் போன்ற பல கலக்கல் படங்களைத் தந்தவர் தானே.

ஆகதன் வரட்டும், புரட்சித் தமிழன்,  “புரட்சி மலையாளி” ஆவாரா பாக்கலாம்.

வாக்களிக்கலாமே….

டைரியில் எழுதாதவை : கமல், கந்தசாமி & அறிவுஜீவிகள் !

 Mohan_Kamal 

அறிவு ஜீவிகள் துவைத்துக் காயப்போட்ட உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கடந்த வாரம் தான் கிடைத்தது. நல்ல வேளை ! படத்தில் ஊடாடும் பார்ப்பனீயத் தன்மைகளையும், தார்மீகக் கோபங்களுக்குள் புதைக்கப்பட்ட வரலாற்று வன்மங்களையும் பிரித்தறியும் வல்லமை எனக்கு இல்லை. எனவே படத்தை ரொம்பவே ரசித்தேன் !! என்ன பண்ண, நானும் ஒரு காமன் (அட ! அந்த காமன் இல்லை) மேன் தானே !

 

சில சினிமாப்பாடல்களைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. ஒருவரி எழுதி விட்டு ஒரு கட்டிங் போட்டு வந்து அடுத்த வரி எழுதுவார்களோ என யோசிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு முரண் படுகிறார்கள் கவிஞர்கள். கவிதைக்கு முரண் அழகுங்கறதை தப்பா புரிஞ்சுகிட்டாங்களான்னே தெரியலை

முன்னாடியெல்லாம் ஒரு படத்தில எழுதும் பாடலுக்கும், இன்னொரு படத்தில் எழுதும் பாடலுக்கும் இடையே தான் முரண்படுவார்கள் கவிஞர்கள். அப்புறம் ஒரு படத்துல இருக்கும் இரண்டு பாடல்களுக்கிடையே முரண்படுவார்கள். சினிமா பாடலில் கூட ஏதாச்சும் கவிதை தேடும் மோசமான புத்தியுள்ள கூட்டத்தில் நானும் ஒருத்தன். “ஆட்டுப் பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு .. “ என்று கிழக்குச் சீமையில் எழுதிவிட்டு “அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் அன்பு வளக்கும் ஆட்டுப்பாலுங்க” என்று அண்ணாமலையில் எழுதிய கவிப்பேரரசு தான் இன்றும் என் பேவரிட் பாடலாசிரியர் 🙂

லேட்டஸ்ட் படங்களையே லேட்டா கேக்கற நிலமையில் இப்போ நான். ஓடிப் போய் கேசட் ரிலீசாகற முதல் நாளே பாட்டு கேக்கற வயசெல்லாம் ஓடிப்போச்சு. வளரும் கவிஞர் விவேகா கந்தசாமில லிரிக்ஸ்ல கலக்கியிருக்காருல்ல என்று என் நண்பன் சொன்னான் சில மாசத்துக்கு முன்னாடி. அப்படியா என்று ஒரு சந்தோஷ உற்சாகத்தில் பாட்டு கேட்டேன்…

ஒரு வரி, “கடவுள் இல்லேன்னு சொன்னார் ராமசாமி, காதல் இல்லேன்னு சொல்றான் இந்த கந்த சாமி” அடடே ! என பார்த்திபன் கவிதை போல வியந்தால் அடுத்த வரியில் ஐயா சொல்கிறார் “ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே… காதலொன்னும் யூதனில்லை கொல்லாதே..” அய்யோ போடா !

 

“கமல் 50  நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சைக் கேட்டு அசந்து விட்டேன். ரஜினியைப் பற்றி நான் கொண்டிருந்த பிம்பத்தையெல்லாம் உடைத்தெறிந்தேன். தீவிர கமல் ரசிகரான நான் நேற்று முதல் முறையாக நெகிழ்ந்தேன். ரஜினி உண்மையிலேயே கிரேட் தான்.” என்றார் பத்திரிகைத் துறையில் மிக உயரிய இடத்தில் இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர். அடடா கேட்காமல் போயிட்டோமேன்னு கொஞ்சம் பீல் பண்ணினேன். வேறென்ன பண்ண முடியும் ?

 

ஒரு முறை அமெரிக்காவில் ஓய்வாக ஒரு பிரபல நடிகருடன் அமர்ந்து “வைன்” பேச்சில் லயித்திருந்தேன். ஆள் தான் வில்லன்னு இல்லை, அவரோட நக்கல் எல்லாமே வில்லத்தனமாய் தான் இருந்தது.

“என்னய்யா விஜய்.. இளைய தளபதியாம் ? எந்த போருக்கு போனான்.. ஹா…ஹா..ஹா” என்று ஆரம்பித்து எல்லா இளம் நடிகர்களையும் ஒரு புரட்டு புரட்டி எடுத்தார் ஐயா. கடைசியில் கமலைப் பற்றியே பேச ஆரம்பித்தார்.

என்னய்யா உலக நாயகன் ? உலகத்துல எல்லாருக்கும் அவனை தெரியுமா ? அப்படின்னா உகாண்டாவுக்கும் அவன் தான் நாயகனா என சகட்டு மேனிக்கு பேசிக் கொண்டிருந்த அவர் கமலுடன் சரிக்கு சமமாக ஒரு படத்தில் நடித்தவர்.

ரொம்ப மப்பு தலைக்கு ஏற, “கமலுக்கு நடிக்கவே தெரியாது. ஏதோ மலச்சிக்கல் வந்தவன் மாதிரி முகத்தை வெச்சிருப்பான்” என கடைசியில் போட்டாரே ஒரு போடு. கையிலிருந்த பானத்தை ஒரே மூச்சில் லபக்கி விட்டு எஸ்கேப் ஆனேன்.

வரும் வழியில் : தசாவதாரம் படும் பாடு !


போஸ்டர்

தசாவதாரத்தின் அலை சற்று ஓய்ந்தது போலிருக்கிறது. உபயம் குசேலன். மாயாஜாலிலும் தினசரி நாற்பத்தைந்து காட்சிகள் என கலக்கிக் கொண்டிருந்த தசாவதாரம் நான்கைந்து காட்சிகள் என இறங்கிவிட்டது. படம் வந்து ஏறக் குறைய ஐம்பது நாளாகிவிட்டது எனவே அலை ஓய்வது ஆச்சரியமில்லை, ஆனால் நான் சொல்ல வந்தது அதைப் பற்றியல்ல.

இன்று அலுவலகம் வரும் வழியில் ஒரு வித்தியாசமான போஸ்டரைப் பார்த்தேன். “தசாவதாரம் திரைப்படத்தில் நாடார் சமூகத்தை இழிவு படுத்துவது போல வசனம் பேசி நடித்த கமலஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்பது தான் அந்த போஸ்டர். ஏதோ நாடார் சமூக தலை, உப தலை, உப உப உப தலை என்றெல்லாம் சில பெயர்கள் அதில் தெரிந்தன. சில பெண்களின் பெயர்கள் கூட !! அடடா !!!!

ஆஹா.. இதென்ன புதுக் கரடி ? முதலில் சைவம், வைணவம் என்றார்கள். வழக்கு, இழுக்கு என இழுத்து பரபரப்பைக் கூட்டி விட்டு அப்புறம் நைசாப் பேசி அப்படியெல்லாம் இல்லீங்கன்னா.. நீங்க பேசாம படத்தைப் பாருங்க என வழக்குப் போட்டவர்களை வழிக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

அதுக்கு அப்புறம், கமல் ஆத்திகராகியிருக்கிறார், மறைமுகமாக விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் தனது கதாபாத்திரமாக்கி, கடலில் கிடந்த கடவுள் சிலையை  கரைக்கு இழுத்து வந்து ஆத்திகர் பக்கம் அடிபணிந்திருக்கிறார் என ஸ்லோகங்கள் சொன்னார்கள். விட்டால் கமலையே கமல சுவாமிகள் ஆக்கியிருப்பார்கள். கமலும் நான் சுவாமிஜிகள் இல்லேன்னா சொன்னேன், சுவாமிஜிகளா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தான் சொன்னேன் என வசனம் பேசியிருப்பார்.

இப்போது நாடார் சமூகத்தினரை கமல் இழிவு படுத்தியிருப்பதாக குட்டையைக் குழப்புகிறார்கள். அதென்ன இழிவோ எழவோ எனக்குப் புரியல. யாராவது புரிந்தால் சொல்லுங்கள் புண்ணியமாப் போவும்.

படம் வெளியாகி ஐம்பது நாளுக்கு அப்புறம் தான் இப்படி ஒரு போஸ்டர் வந்திருக்கிறது. அப்படின்னா நாடார் சமூகம் இதுக்கு முன் படத்தைப் பாக்கலையா ? அல்லது ஒருவேளை
தசாவதாரத்தின் அலை சற்று ஓய்கிறதே என கமல் ரசிகர்களோ, தயாரிப்பாளரோ நாடார் சமூகம் என போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்களா என்பதும் புரியவில்லை.

எப்படியோ என்னதான் அப்படி சொல்லியிருக்கான்னு போய் பாக்கணும் மக்களே – ன்னு நாடார் சமூகம் தியேட்டர்களை முற்றுகையிடும் ஒரு சிறு வாய்ப்பு இதனால் உருவாகியிருக்கிறது.

அடுத்தது எந்தப் பேரவைப்பா ?

சிக்னல் சந்திப்பு

மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே இருக்கும் சிக்னலில் புதிதாக ஒரு டிஜிடல் போர்ட் வைத்திருக்கிறார்கள். நிறுத்தத்தில் நிற்பவர்களை சற்று யோசிக்கச் செய்கின்றன அந்த போட்டில் ஓடிக் கொண்டிருக்கும் வாசகங்கள்.

உதாரணமாக : எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினால் முப்பத்து விழுக்காடு எரிபொருள் அதிகம் தேவைப்படும். உங்கள் வண்டியின் சக்கரங்களில் காற்று சரியான அளவில் இல்லையெனில் பத்து விழுக்காடு எரிபொருள் அதிகம் செலவாகும்… என வாசகங்கள் வலமிருந்து இடமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

எப்படா சிகப்பு போயி பச்சை வரும் பாஞ்சுடலாம் என காத்திருந்த சில இருசக்கர வாகனவாசிகள் இரண்டொரு வினாடிகள் வாசகங்களைப் பார்த்து விட்டு, தங்கள் சக்கரங்களில் காற்று இருக்கிறதா என பார்த்ததையும் கவனிக்க முடிந்தது.

ஏதோ.. நல்லது நடந்தா சரி..

ஏதோ.. நல்லது நடந்தா சரி..

ஏதோ நல்லது நடந்தா சரி என சொல்லும்போ தான் ஞாபகத்துக்கு வருகிறது. வேளச்சேரி ஏரியை ஒட்டியிருக்கும் கால்வாய் குப்பைகளால் நிரம்பியிருக்கிறது, ஒரு கொசு கடலே அங்கே குடி இருக்கிறது என கடந்த வாரம் தினகரன் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. கூடவே அந்த அசிங்கத்தின் அரைப் பக்க கலர் படமும்.

அந்தப் பக்கம் வழியாகத் தான் நான் தினமும் அலுவலகம் வரவேண்டிய சூழல். அன்றைக்கு காலை ஒன்பது மணிக்கு நான் அந்தப் பக்கம் வழியாக வந்த போது சில வாகனங்களும், பல அரசு அதிகாரிகளும் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஆஹா.. இவ்ளோ ஸ்பீடா இருக்காங்களே என்று ஒரு நிமிடம் அசந்து தான் போயிட்டேன்.

இன்னிக்கு செய்தித் தாளில் இன்னொரு செய்தி படித்தேன் “தினகரன் செய்தியைப் பார்த்து விட்டு காமராஜரின் பேத்தியின் குறைகளை அரசு நிவர்த்தி செய்தது”.

அரசு அதிகாரிகள் பேப்பர் எல்லாம் படிக்கிறாங்களே !!! இது நல்ல விஷயமாச்சே !!! அதனால இன்னொரு வாட்டி அதையே சொல்லிக்கறேன். ஏதோ நல்லது நடந்தா சரி.

தசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் !

உலக வரலாற்றில் பத்து வேடங்களில் முதன் முறையாக நமது கமலஹாசன் நடித்திருக்கும் தசாவதாரம் திரைப்படம் கமலின் கலை உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வரம் என்றே கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனும் கணீர் குரலுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். எனினும், முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் புனித தோமையார் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதே கிறிஸ்தவ வரலாறுகள் கூறும் உண்மை. எப்படியோ… அதற்கும் தசாவதாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களிலேயே கதாபாத்திரங்களைக் காட்டி சட்டென பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குள் தாவி, அங்கிருந்து அமெரிக்கா, தமிழகம் என கதை பயணிக்கும்  போது குழப்பாமல் சம்பவங்களின் அழுத்தம் கெடாமல், வீரியம் கெடாமல், தனது தியரிகளைக் கலைக்காமல், புதுப் புதுக் கதாபாத்திரங்களைக் கதையில் நுழைத்துக் கொண்டே வரும் கமலில் திரைக்கதை வியக்க வைக்கிறது.

தசாவதாரம் குறித்து எல்லோருமே எழுதி சலித்து விட்டாலும் என் பங்குக்கு நானும் என்னைக் கவர்ந்த அம்சங்களைச் சொல்லிவிடுகிறேன்.

முதலாவது, கமலின் சிரத்தை. எப்போதுமே தனது அசைவுகளின் மூலம் முக்கால் வாசி பேசிவிட்டு, வார்த்தைகளின் மூலம் கால்வாசி பேசுவதே கமலில் வழக்கம். அதையே இதிலும் செய்திருக்கிறார். குறிப்பாக அமெரிக்கக் கமலின் ஆங்கில உச்சரிப்பும், ஹாலிவுட் நடிகர்களின் அலட்சியப் பார்வையும், அவர்கள் பயன்படுத்தும் வாக்கியங்களும் ஒருபுறம் மிகுந்த கவனத்துடன் அடுக்கப்பட்டிருக்க,

இன்னொரு புறம் வின்செண்ட் பூவராகன் நடை, உடை, நிறம், உச்சரிப்பு என வியக்க வைக்கிறார். சற்றே மிகைப்படுத்தப்பட்ட “மக்களே” வசன உச்சரிப்பே அவருடையது எனினும் “தீட்டத்தில் நெழியும் புழுக்கள்” என்பன போன்ற வசனங்கள் பூவராகனின் உழைப்பில் தினமும் ஒலிக்கும் குரல். எந்தத் திரைப்படமும் பதிவு செய்யாத, செய்ய விரும்பாத வசனங்கள்.

அமெரிக்க ஜார்ஜ் புஷ் கதாபாத்திரத்தை அவருடைய குணாதிசயங்களோடே எடுத்திருப்பது நகைச்சுவையோடு சேர்ந்து கமலில் பார்வையை தெளிவாக்கியிருக்கிறது. குறிப்பாக மேடையில் நடக்கும் புஷ் ( சமீபத்தில் வீரர் ஒருவருடன் நெஞ்சோடு நெஞ்சு குதித்து மோதி வேடிக்கை காட்டிய நிகழ்ச்சியை நினைவூட்டுகிறார் ) , என்ன அது என்.ஏ.சி.எல், அது மேல அணுகுண்டு போடலாமா போன்ற நிகழ்ச்சிகள்.

பாட்டியின் கதாபாத்திரத்தில் மனநிலை பாதித்தும், பாதிக்காமலும் இருக்கும் கமலின் நடிப்பு அவருக்கு மட்டுமே உரித்தானது.

நாயுடு அசத்துகிறார். நாயுடு மட்டும் இல்லையென்றால் சாமான்ய கமல் ரசிகர்களுக்கு விருந்து இல்லாமலேயே போயிருக்கக் கூடும். தெலுங்கனைக் கண்டுவிட்டால் பார்வையில் நுழைக்கும் பரிவும், “அப்பாராவா “ எனக் கேட்கும் போது ஒலிக்கும் தெலுங்கு தனமும், “மடத்திலே தப்பு நடக்காதா” எனக் கேட்கும்போது அவருடைய உடலசைவும் என வியக்க வைக்கிறார் நாயுடு.

கடவுளுக்காக உறவுகளை துச்சமென தூக்கி எறிந்து இறந்து போகும் கமல் சிலிர்ப்பூட்டுகையில், உறவுகளுக்காக தனக்குக் கடவுள் போல இருக்கும் இசையை தூக்கி எறிய முன்வரும் சர்தார் கமல் விழியோரங்களைத் துளிர்க்க வைக்கிறார்.

இந்தத் திரைக்கதையை இன்னும் சிக்கலாக கடைசிப் புள்ளியில் இணைவது போல ( அதாவது பாபேல் எனும் ஆங்கிலப்படம் போல ) உருவாக்கியிருக்க முடியும். எனினும் இந்த அளவுக்கு நேர்கோட்டில் அவர் திரைக்கதையை உருவாக்கியிருப்பதற்கு கே.எஸ்.ரவிகுமார் ஒரு காரணகர்த்தாவாக இருக்கக் கூடும் எனும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

கமலுடன் இணைந்து வியக்க வைக்கும் நடிப்பு அசினுடையது. பிசின் போல சிலையுடனும், கமலுடனும் ஒட்டிக் கொண்டே இருக்கும் அசின் கமலுடன் இணைந்ததாலோ என்னவோ நடிப்பின் இன்னோர் அத்தியாயத்துக்குள் நுழைந்திருக்கிறார். இனிமேல் விஜயுடன் டூயட் பாடும்போது சற்றே உறுத்தக் கூடும் அவருக்கு, நடிக்காமல் காசு வாங்குகிறோமே என்று.

கடைசிக் காட்சிகளில் சுனாமி பீறிட்டெழும்போது கிராபிக்ஸும், இசையும், ஒளிப்பதிவும் போட்டி போட துயரங்களை மீண்டும் ஒருமுறை அள்ளிக்கொண்டு வந்து மனதுக்குள் கொட்டுகிறது திரைப்படம்.

தசாவதாரம் படத்தில் முதல் பத்து நிமிடங்கள் கமல் விரைவில் மருதநாயகம் எடுப்பார் எனும் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. அப்போதேனும் அவர் நெப்போலியனை தமிழ் பேச அழைக்காதிருப்பாராக.

கமலுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. தன்னுடைய முகத்தின் ஒவ்வோர் அணுக்களையும் நடிக்க வைக்கும் திறமை அவருக்குக் கைவந்த கலை. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டு நடிப்பதால் முகத்தில் கண்கள் மட்டுமே நடிக்க முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

கண்களில் மட்டுமே மின்னி மறையும் பர்தாப் பெண்ணின் வெட்கம் போல, கமலில் நடிப்பையும் பல வேளைகளில் கண்களை மட்டுமே வைத்து கண்டு கொள்ள வேண்டியிருப்பதே குறையெனப் படுகிறது.

விறுவிறுப்பான படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு வேகமான திரைப்படம். அறிவு ஜீவி ரசிகர்களுக்கு கேயாஸ் தியரி மற்றும் பட்டர்ஃபிளை தியரி.