வேட்பாளர்களை கதிகலங்க வைக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட்கள் !

7karunanidhi1அந்தக் கட்சி இந்தக் கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர் தேர்வுக் குளறுபடி உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் இன்னும் யாரை எங்கே நிறுத்தலாம் எனும் முடிவுக்கே வராமல் குய்யோ முய்யோ என கூச்சல் போட்டு கட்சியின் மானத்தையே வாங்கிக் கொண்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலை விட வேட்பாளர் தேர்வே அவர்களுக்கு பெரும் சவாலாகிக் கொண்டிருக்கிறது !

மதிமுக, பாமக, போன்ற “வேறு வழியில்லா” கட்சிகள் ஏற்கனவே நினைத்து வைத்திருந்தவர்களை நிறுத்தி விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

தனிக் கட்சிகளால் அப்படி ஒதுங்க முடியவில்லை. திருவள்ளூர், பெரம்பலூர் வேட்பாளர்களை அதிமுக அதிரடியாக மாற்றி பரபரப்பை ஏற்படுத்த, தே.மு.தி.க தனது மதுரை வேட்பாளரை மாற்ற அடுத்த மாற்றத்துக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க!

மூன்று நான்கு வேட்பாளர்களை தி.மு.க மாற்றலாம் எனும் செய்தி திமுக வட்டாரத்தில் பரபரப்பாக அலசப்படுகிறது.

அதில் முக்கியமானவர், தன் படத்துக்கு, தானே போஸ்டர் ஒட்டி, தானே டிக்கெட் எடுத்துக் கொடுத்து, படம் பார்க்க வருபவர்களுக்கு தன் செலவில் பிரியாணியும் வாங்கிக் கொடுக்கும் “நாயகன்” ரித்தீஷ் !  “அவருக்கெல்லாம் சீட் கொடுத்து தலைமை எங்களை  அவமானப்படுத்தும் என நினைக்கவில்லை” என கொதித்துப் போய் திரிகின்றனர் காலம் காலமாய் திமுகவுக்கு விசுவாசமாய் உழைத்து வந்த ராமநாதபுரம் பகுதி தொண்டர்கள்.

தூத்துக்குடி வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை மீது மக்களிடையே ஆதரவே இல்லை. ஒரு செக்ஸ் டாக்டர்ப்பா அவரு என கிண்டலடிப்பதிலேயே மக்கள் குறியாக இருக்கிறார்களாம். சி.ஐ.டி ரிப்போர்ட் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது திமுக தலைமை.

இன்னொன்று கள்ளக்குறிச்சி, அங்கே ஆதிசங்கரருக்கு மவுசு இல்லையாம்.

நான்காவது குமரி !

குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் நின்றால் நிச்சயம் தோல்வி என்பது தான் இன்றைய நிலமை. அங்குள்ள காங்கிரஸ் மக்கள் அவ்வளவு தூரம் கொதித்துப் போயிருக்கின்றனர். எனவே ஹெலன் டேவிட்சனை மாற்றிவிட்டு வைகோ போட்டியிடப் போகும் விருதுநகருக்கு திமுக தனது இடத்தை மாற்றலாமா எனவும் யோசிக்கிறது.

இந்த மாற்றங்களையெல்லாம் கொளுத்திப் போடுவது சி.ஐ.டி ரிப்போர்ட்கள். மதுரையையே பெரும்பாலும் மையமாக வைத்து இயங்கும் இந்த சிஐடி குழுக்கள் தொகுதிகளில் சென்று கண்டறிந்து வரும் செய்திகள் பலவும் அரசியல் தலைமை இடங்களைக் கதி கலங்க வைக்கிறதாம்.

எப்படித் தான் இவர்களெல்லாம் பல அடுக்கு கண்களில் மண்ணைத் தூவி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்கள் என்பதே தலைமைகளின் தலையை உலுக்கும் பிரச்சனையாகியிருக்கிறது.

ஆங்காங்கே மாறிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றவர்களைக் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் தில்லு முல்லு செய்து போலி ரிப்போர்ட்களைத் தயாரித்து தலைமையின் கண்ணில் மண்ணைத் தூவியவர்கள் அதிர்ந்து தான் போயிருக்கிறார்களாம்.

இந்த மாற்றங்கள் மீது கலைஞருக்கு உடன்பாடில்லையாம். ஆனால் அழகிரியும், ஸ்டாலினும் இந்த மாற்றங்கள் வராவிடில் தேவையில்லாமல் தோல்வியை விரும்பி அழைப்பது போல் ஆகிவிடும் என அழுத்தம் கொடுக்கின்றனராம். விஷயம் ரொம்ப நாள் உள்ளுக்குள்ளேயே இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

எங்க ஊருல ஒரு பழமொழி உண்டு !

மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !

எது தமிழர் புத்தாண்டு ? : குழப்பத்தில் கலைஞர் டிவி.


சித்திரை தினத்தில் எல்லா தொலைக்காட்சி சானல்களும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது எது தமிழ்ப் புத்தாண்டு எனும் கேள்வி தலையை சுக்குநூறாய் வெடிக்கச் செய்வேன் என்று சவால் விட்டுக் கொண்டு வேதாளமாகி முருங்கை மரம் ஏறிவிட்டது.

தமிழக அரசின் அறிவிப்பான தை முதல் நாளே தமிழ் வருடப் பிறப்பு எனும் அறிவிப்பை எதிரே அமர்ந்திருக்கும் எதிர்கட்சி முதல், கனடாவின் பிரதம மந்திரி வரை யாருமே கண்டு கொண்டதாகத் தெரியவில்லை என்பதை அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி” அறிவித்துக் கொண்டதில் தெரிந்தது.

போதாக்குறைக்கு அடி மடியிலேயே கை வைக்கும் நிலையாக கலைஞர் தொலைக்காட்சியில் வந்த விளம்பரங்களே “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என பல்லிளித்து நிலமையை இன்னும் கேடாக்கி விட்டன.

எது தமிழ்ப் புத்தாண்டு என்பதை அறிவித்த தமிழக அரசு அதன் தொடர்ச்சியாக அதை நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்பதையே இந்த நிகழ்ச்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

தமிழகத்தில் பறந்து திரிந்த எஸ்.எம்.எஸ் களுக்குக் அளவில்லை! நிறைய பேரிடம் பேசியதில் பலரும் சொன்ன பதில் “அப்படியா ? அப்போ அது இப்போ இல்லையா ?” என்பது தான் !

சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி விட்டால் உடனே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்தச் செய்தி பரவி உடனே மக்கள் அதை பின்பற்றத் துவங்கிவிடுவார்கள் என கருதிக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இந்த நிகழ்வு மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டியிருக்கிறது.

குளித்து புத்தாடை உடுத்தி கோயில்களில் அதிகாலையில் குவிந்த அனைத்து பக்தர்களுமே தமிழ் புத்தாண்டு வளங்களைத் தரட்டும் என்றே பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

1921ம் ஆண்டு மறை மலை அடிகளார் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என தமிழறிஞர் குழுவுடன் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பின் எண்பத்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது தான் சட்ட வடிவம் பெற்றுள்ளது. சட்ட வடிவம் பெற்று விட்ட உடனே அது செயல் வடிவம் பெற்று விடும் என்று வெறுமனே இருந்தால் “திருவள்ளுவர் ஆண்டு” க்கு ஏற்பட்ட நிலமையே தமிழ் புத்தாண்டிற்கும் ஏற்படும்.

1921ல் இதே போல் விடுக்கப்பட்ட இன்னோர் வேண்டுகோள் திருவள்ளுவர் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பது ( திருவள்ளுவர் ஆண்டு கி.பி 31ல் துவங்குகிறது). 50 ஆண்டுகள் விடாமல் தட்டியபின் 1971 – 1972 களில் அரசிதழில் திருவள்ளுவர் ஆண்டு செயல்படுத்தப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

ஆனால் இன்றைய நிலை என்ன ? திருவள்ளுவர் ஆண்டு என்றால் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?

அதே நிலமை தமிழர் புத்தாண்டுக்கும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.

தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டால் அதை சட்டமாக்கி மீறுவோர் சட்டத்தை மீறியவர்களாகக் கருதப்பட வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக “அதே விலை அதிக பக்கங்கள் : தமிழ் புத்தாண்டு சிறப்பிதழ்” என்று வணிக இதழ்கள் கொப்பளிக்கும் விஷம் தடுக்கப்பட வேண்டும்.

ஊடகங்கள் வரையறை, சட்டம், அரசின் விதிகள் இவற்றை மீறிச் செயல்படாமல் அரசு கவனித்துக் கொள்ளல் அவசியம்.

முக்கியமாக எதிர்கட்சிகள் தமிழ் விரோதிகள் போலச் செயல்படாமல் இருக்க வேண்டும்.

சட்டம் இயற்றப் பட்டு விட்டால் யாரெல்லாம் வாழ்த்துச் செய்தி சொல்வார்களோ, கனடா பிரதமர் உட்பட, அனைவருக்கும் அந்த புது சட்டம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் அடுக்கடுக்கான விண்ணப்பங்களும், விருப்பங்களும் தமிழ் ஆர்வலர்களின் இதயங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

இவையேதும் இல்லாமல் வெறுமனே சட்டம் இயற்றிவிட்டு கடமை முடிந்தது என கடந்து போனால், ஒற்றைத் தமிழ் அன்னை இரட்டை பிறந்த நாள் கொண்டாடி இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழர் ஒற்றுமையையும் அழித்து ஒழிப்பாள் என்பதே மிச்சமிருக்கும் அச்சமாகும்.